Dec 5, 2014

தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டம் மக்கள் பணம் ரூ.120 கோடி வீண்

நன்றி: தினகரன்
தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தைப் பற்றி "தமிழக அரசின்  இலவச மடிக்கணினித் திட்டம்" எனும் தலைப்பில் எனது கருத்துக்களை ஏற்கனவே நான் இங்கு பதிவு செய்துள்ளேன். இந்த திட்டம் பற்றி  ilug-chennai (Indian Linux Users Group - Chennai) - யின் ஒருங்கிணைபாளர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் கூறிய கருத்துக்கள் LINUX For You Magazine  இல் வெளிவந்துள்ளது. இதைப்பற்றி Richard Stallman அவர்களும் விமர்சித்துள்ளனர்.

அதுபோல தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கும் இலவச மடிக்கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொடுப்பதால் மக்களின் பணம் எவ்வளவு வீணாகிறது என்பதைப்பற்றிய செய்தியை இன்றைய தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

தினகரனில் வெளிவந்த செய்தி பின்வருமாறு

சென்னை: மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப்களில்  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளம் பயன்படுத்துவது என்ற தமிழக  அரசின் முடிவால், மக்கள் பணம் ரூ.120 கோடி வீணாகிறது. அதோடு,  மாணவர்களுக்கு வழங்கப்படும்போது இந்த இயங்குதளம்  காலாவதியாகிவிடும் என்பதால், கையில் கிடைத்தும் அதன் பலனை  அனுபவிக்க முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு  மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2  மாணவ, மாணவிகள், அரசு மற்றும் உதவிபெறும் கலை அறிவியல்  கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்  கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கம்ப்யூட்டர் பயிற்சித்திறனை  அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும்  திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. 2011 செப்டம்பர் 15ம் தேதி அண்ணா  பிறந்தநாளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ்,  2011-12ம் ஆண்டில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 790 லேப்டாப்களும், 2012-13ம்  ஆண்டில் 7 லட்சத்து 56 ஆயிரம் லேப்டாப்களும், 2013-14ம்  கல்வியாண்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் லேப்டாப்களும் வழங்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை மூன்று கட்டங்களில் 17 லட்சம்  லேப்டாப்கள் மாணவ, மாணவியருக்கு வினியோகிக்கப்பட்டுள்ளதாகவும்,  இதன் மொத்த மதிப்பு ரூ.2,500 கோடி எனவும் அரசு தெரிவித்துள்ளது. 

தற்போது, 2014-15ம் கல்வியாண்டில் 5.50 லட்சம் லேப்டாப்கள் மாணவ,  மாணவியருக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக,  ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச லேப்டாப்  கொள்முதல் செய்யும் பொறுப்பு அரசு நிறுவனமான எல்காட்  நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் டெண்டர் அறிவிப்பில்  இடம்பெற்ற நிபந்தனைகள், டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள்  உட்பட பல தரப்பினரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதில்,  ‘‘விண்டோஸ் 7 ஸ்டார்ட்டர் அல்லது அதற்கு மேம்பட்ட இயங்கு தளம்,  ஓராண்டுக்கான உரிமத்துடன் கூடிய ஆன்டிவைரஸ் மென்பொருள் நிறுவ  வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது‘‘ இதன்படி, ஒரு லேப்டாப்பின்  மதிப்பு ரூ.20,000. டெண்டரின் மொத்த மதிப்பு ரூ.2,200 கோடி. இதுகுறித்து,  யுனைடெட் டெலிகாம் நிறுவனத்தின் துணை தலைவர் (மார்க்கெட்டிங்)  திபேஷிஸ் சவுத்ரி கூறியதாவது: டெண்டர் அறிவிப்பில் விண்டோஸ் 7  என்ற மைக்ரோசாப்ட் நிறுவன இயங்குதளத்தை குறிப்பிட்டிருப்பதன் மூலம்  தமிழ்நாடு அரசின் வெளிப்படைத்தன்மை விதிமுறை மீறப்பட்டுள்ளது. 

இப்படி, விண்டோஸ் 7 இயங்குதளம் கண்டிப்பாக வேண்டும் என்று  வலிந்து சேர்க்கப்பட்டிருப்பதால், ஒரு லேப்டாப்புக்கு குறைந்தபட்சம்  ரூ.1,200 அதிகரிக்கும். இலவசமாக கிடைக்கும் மென்பொருளை  விட்டுவிட்டு விண்டோஸ் பயன்படுத்துவது செலவு அதிகரிப்பதோடு,  மாணவர்களுக்கு விண்டோஸ் மற்றும் ஆன்டிவைரஸ் அப்டேட் செய்ய  கூடுதலாக செலவு செய்வதை தவிர வேறுவழியே இல்லை என்ற நிலை  ஏற்படும். ஒப்பந்தப்புள்ளிக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தின்போது  ‘இலவசமாக லினக்ஸ் இயங்குதளம் இருக்க, பணம் கொடுத்து வாங்க  வேண்டிய விண்டோஸ் 7 பயன்படுத்துவதற்கு அவசியம் என்ன?  இதன்மூலம், இலவசமாக லேப்டாப் பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில்  சாப்ட்வேர் அப்டேட் செய்ய கூடுதலாக செலவு செய்யவேண்டி வரும்‘  என்று கேள்வி எழுப்பினோம். ஆனால், அரசு தரப்பில் இருந்து  திருப்திகரமான எந்த பதிலும் வரவில்லை. அதுமட்டுமின்றி, விண்டோஸ் 7  இயங்குதளத்துக்கான சேவையை ஜனவரி 2015ம் தேதியுடன்  மைக்ரோசாப்ட் நிறுத்திக்கொள்கிறது. இவ்வாறு திபேஷிஸ் சவுத்ரி  தெரிவித்தார்.

இலவச இயங்குதளம் வழங்கும் மைக்ரோசாப்ட்டுக்கு நேரடி போட்டி  நிறுவனமாக விளங்கும் ‘உபுன்டு‘வின் இந்தியா மற்றும்  தெற்காசியாவுக்கான மண்டல இயக்குநர் பிரகாஷ் அத்வானி கூறுகையில்,  ‘‘தமிழக அரசின் இலவச லேப்டாப்களின் பலனையும் சிறந்த  அனுபவத்தையும் மாணவர்கள் முழுமையாக பெறுவதற்கு ஏற்ப அதில்  இடம்பெறவேண்டிய இயங்குதளத்தை அரசு முடிவு செய்யவேண்டும்‘‘  என்றார். விண்டோஸ் 7 இயங்குதளத்துக்கான ஆதரவை மைக்ரோசாப்ட்  நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதியுடன் நிறுத்தி விடும். இந்த  டெண்டரில் முடிவு செய்யப்பட்டு பெறப்படும் லேப்டாப்கள் எப்படியும் மார்ச்  அல்லது ஏப்ரல் மாதத்துக்கு பிறகுதான் வழங்கப்படும். எனவே,  மாணவர்கள் கையில் லேப்டாப் கிடைக்கும்போது அதன் இயங்குதளம்  காலாவதியானதாக இருக்கும். அதற்கு சில ஆயிரங்களை செலவு  செய்தால்தான் கணினியை அவர்களால் முழுமையாக பயன்படுத்த  முடியும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு தமிழக அரசின் ஐ.டி. செயலாளர் சில  மாதங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் முடிவுக்கு எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். இவர், எழுதிய 2014 மார்ச் 12ம் தேதியிட்ட கடிதத்தில்,  இலவசமாக கிடைக்கும் இயங்குதளம் பெரும்பாலும் வைரஸ்  தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதில்லை. இத்தகைய இயங்குதளத்தை  பயன்படுத்தினால் கணினியில் சேமித்து வைத்த தகவல்களை சைபர்  கிரிமினல்கள் திருடுவது போன்றவை தடுக்கப்படும் என்று
குறிப்பிட்டுள்ளார். ஆனால், மக்கள் பணம் பாழாகாமல் தடுக்கவும்,  திட்டச்செலவை குறைக்கவும் அளிக்கப்பட்ட இந்த நியாயமான பரிந்துரை  அரசால் பரிசீலிக்கப்படாதது ஏன் என்பது மர்மமாக உள்ளது. மாணவர்களின்  நலனுக்காக இலவச லேப்டாப்களை வழங்கும் அரசு இலவச  மென்பொருளை ஏற்காதது, முறைகேடு நடத்துவதற்காகவே திட்டமிட்டு  செயல்படுத்தப்படுகிறதா என்பது உட்பட பல்வேறு சந்தேகங்களை  எழுப்பியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் வணிக நோக்கத்தை பிரதானமாக கொண்டு  தனது சாப்ட்வேர் சேவையை அவ்வப்போது நிறுத்திக்கொள்வதும்  புதிதல்ல. இந்த நிறுவனம் விண்டோஸ் எக்ஸ்பிக்கான சேவையை 14-4- 2009 அன்றும், விஸ்டாவுக்கான சேவையை 10-4-2012 அன்றும்  நிறுத்திவிட்டது. விண்டோஸ் 8 சேவை 2018 ஜனவரி 9ம் தேதியுடன்  நிறுத்தப்பட்டு விடும் என அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 13ம் தேதி  காலாவதியாகும் விண்டோஸ் 7 ஹோம் எடிஷன் விலை தற்போது சுமார்  ரூ.5,500 ஆக இருக்கிறது. இது காலாவதியான பிறகு விண்டோஸ் 8  நிறுவுவதற்கு ரூ.6,500 வரை செலவிடவேண்டி வரும். எனவே, இலவச  லேப்டாப் வாங்கிய ஏழை மாணவர்கள் அதை வெறும் காட்சிப்பொருளாக  வைக்க வேண்டிவரும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சிலர்  கருத்து தெரிவிக்கின்றனர்.

பிரச்னை இல்லாத இலவச இயங்குதளம்

லினக்ஸ் இயங்குதளம் கடந்த 1991ம் ஆண்டு வெளியிடப்பட்டது.  முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இது, காலத்துக்கேற்ப வடிவமைத்து  வழங்கப்படுகிறது. கடைசியாக, கடந்த மாதம் 21ம் தேதி லினக்ஸ் புதிய  அப்டேப் வெளியிடப்பட்டுள்ளது. இதை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதால்  எந்த சிக்கலும் இல்லை. முற்றிலும் இலவசம் என்பதால் இதற்கு  எதிராகவோ, இதை குறிவைத்தோ வைரஸ்கள் எதுவும்  ஏற்படுத்தப்படுவதில்லை. 

ஆனால், இதற்கு நேரெதிரானது மைக்ரோசாப்ட் விண்டோஸ். இதில்  இலவச சேவை என்பதே கிடையாது. அதோடு, வைரஸ் தாக்குதலுக்கு  அதிகம் ஆளாகும் இயங்குதளமாக இது உள்ளது. எனவே,  கம்ப்யூட்டரையும், அதிலுள்ள தகவல்களையும் பாதுகாக்க தனியாக  வைரஸ் சாப்ட்வேர் பயன்படுத்துவது கட்டாயமாகிவிடும்.

References:

Nov 17, 2014

பள்ளிகளில் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களை பயன்படுத்த மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை

இந்தியா முழுவதும் பள்ளிகளில் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களை பயன்படுத்த மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. இதை அமல்படுத்துவதில் மாநில பள்ளி கல்வி துறைக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேரள மாநில அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். கேரள பள்ளிகளில் ஒப்பன் சோர்ஸை் மென்பொருள்களை வெற்றிகரமாக பயன்படுத்து வருகின்றனர். 

மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை இங்கே.


தமிழகத்திலும் பல்வேறு அரசு துறைகளில் லினக்ஸ் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறுது. இனிமேல் கீழ்காணும் அலுவலகங்களுக்கு நீங்கள் சென்றால் அங்கு இருக்கும் கணினியின் திரையை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் அங்கு லினக்ஸ் ஒய்யாரமாக குந்தியிருக்கும்.

  • மின்சார அலுவலகங்கள்
  • அரசு மருத்துவமனைகள்
  • ஆரம்ப சுகாதார நிலையங்கள்
  • எல்.ஐ.சி அலுவலகம் (மத்திய நிறுவனம்)
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
  • எல்காட்
எதிர்காலம் எங்களின்(FOSS, GNU/Linux, Open Source) கட்டுப்பாட்டில்தான்.

Nov 15, 2014

MD5 (Message-Digest algorithm 5) உங்களுக்கு அவசியம் உதவும்

இந்த கட்டுரையின் அவசியத்தை நீங்கள்  கட்டுரையை படித்து முடித்த பிறகு உணர முடியும். எனக்கு ஏற்பட்ட இரண்டு மோசமான சம்பவங்களே இந்த கட்டுரையினை எழுத காரணமாக அமைந்தது.

சம்பவம் ஒன்று:

உபுண்டு 14.04 LTS வெளியிடப்பட்ட இரண்டு நாட்கள் கழித்துதான் அதை நான் தரவிறக்கம் செய்ய தொடங்கினேன். என்னுடைய மடிக்கணினியின் வாயிலாக தரவிறக்கம் செய்யாமல், அண்ணன் சோம.நீலகண்டன் அவர்களின் மேசைக்கணினியினைக்(Desktop PC) கொண்டு தரவிறக்கம் செய்தேன். torrent தொழில்நுட்பம் மூலமாக உபுண்டுவை தரவிறக்கம் செய்ய முடியும் என்பதால், உபுண்டுவை எப்பொழுது தரவிறக்கம் செய்தாலும் torrent கோப்பினைக் கொண்டே தரவிறக்கம் செய்வேன். காரணம் பாதுகாப்பாகவும் இருக்கும், நிறுத்தி வைத்த இடத்திலிருந்து நாம் எப்பொழுது வேண்டுமானாலும் தரவிறக்கத்தை தொடர்ந்து கொள்ளலாம். அவ்வாறே Vuze Torrent Client Application ஐக் கொண்டு அண்ணன் அவர்களின் மேசைக்கணினி வாயிலாக தரவிறக்கம் செய்தேன். ஏப்ரல் மாதத்தில் எங்கள் கிராமத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தது. திடீர் திடீரென்று ஒரு ஒழுங்கில்லாமல் மின்சாரம் நிறுத்தப்படும். அவருடைய மேசைக்கணினிக்கு  UPS வசதியெல்லாம் செய்து வைத்திருக்கவில்லை. மின்சாரம் நின்றால் கணினியும் அமர்ந்து விடும். கணினி அடிக்கடி Shutdown ஆனாலும், Torrent மூலமாக தரவிறக்கம் செய்வதால் நின்ற இடத்திலிருந்து மீண்டும் தரவிறக்கத்தை தொடர்ந்து கொள்ளலாம். மறுபடியும் ஆரம்பத்திலிருந்தே தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. மின்சாரம் நிற்பது, அதனால் கணினியும் நிற்பது, இடையிடையே இணைய இணைப்பது துண்டிக்கப்படுவது என பல நெருக்கடிகளுக்கு இடையில் சாராசரியாக 50KB/s வேகத்தில் கிட்டத்தட்ட 5- 6 மணி நேரம் கழித்து உபுண்டு 14.04 LTS பதிப்பு வெற்றிகரமாக தரவிறக்கம் செய்யப்பட்டது.

தரவிறக்கம் முடிந்த உடனே ஆர்வத்தில் Pendrive இல் உபுண்டுவை Bootable ஆக மாற்றி மடிக்கணினியில் Try Ubuntu கொடுத்து இயக்கினேன். இங்குதான் அதிர்ச்சி காத்திருந்தது. Try Ubuntu என கொடுத்து எப்பொழுது இயக்கினாலும் நேரடியாக நமக்கு Ubuntu Desktop கிடைத்துவிடும். இந்தமுறை அப்படி எனக்கு கிடைக்கவில்லை. Ubuntu Login Screen வந்து நின்றது. சரி பயனர் பெயரும், கடவுச்சொல்லும் கேட்கிறதே அதைக் கொடுத்துப் பார்ப்போம் என நினைத்து உபுண்டுவின் (Default Username: ubuntu, Default password: blank ) default username, password ஐ கொடுத்தேன். அப்படி கொடுத்தும் உள்ளே செல்லவில்லை. பல வழிகளில் என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். இறுதியில் தோல்விதான். கிட்டதட்ட 7 மணிநேரத்திற்கு மேல் வீணாகிவிட்டது. பிறகு முதலிலிருந்து தரவிறக்கம் செய்தேன். இதற்கென்று தனியாக 5-மணி நேரத்திற்கு மேல் ஆகியது. ஏன் இப்படி பிழை ஏற்பட்டது என்பதற்கான கேள்வி என் மனதிற்குள் சுழன்றுகொண்டே இருந்தது. இதுபோல் இன்னொரு சம்பவம் நடைபெற்றது அதையும் கேளுங்கள்.

சம்பவம் இரண்டு:

என் நண்பர் வெங்கட்ராமன்(பாலாஜி) அவருடைய தோழரின் கணினியில் இயங்குதளம் நிறுவ வேண்டும் என என்னை அழைத்து சென்றார். நான் இயங்குதளத்தை Pendrive வில் Bootable ஆக மாற்றி எடுத்துக்கொண்டுச் சென்றேன். அங்கும் மேலே சொன்னது போன்ற பிழை ஏற்பட்டது. சிறிய மாற்றம் என்னவென்றால், முதல் சம்பவத்தில் முழுவதுமாக நிறுவிய பிறகு பிரச்சனை வந்தது.  இங்கு நிறுவுதல் நடந்து கொண்டு இருக்கும் போதே பிரச்சனை வந்தது. அங்கும் என்னென்னவோவெல்லாம் செய்து பார்த்தேன் பிழையை சரி செய்ய முடியவில்லை. அடுத்த நாள் சென்றுதான் நிறுவுதலை முடித்தேன்.

இந்த இரண்டு சம்பவங்களிலுமே ISO கோப்புகளை Pendrive இல் bootable மாற்றும் போது எந்த பிழையும் காண்பிக்கவில்லை. நிறுவுதல் நடக்கும் போதுதான் பிழைகள் ஏற்பட்டது. bootable ஆக மாற்றும் போதே கோப்பில் பிழை இருக்கிறது என்று காண்பித்து இருந்திருந்தால் நான் சுதாரித்திருந்திருப்பேன். ஆனால் அது நடக்கவில்லை.

இவ்வளவு நேரம் என்னுடைய சொந்த கதையை பொறுமையாக படித்ததற்கு மிக்க நன்றி. சரி விஷயத்திற்கு வருகிறேன். 

உங்களுக்கு இவ்வளவு சங்கடம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் கதிர்? அப்படினுதானே கேட்கிறீங்க. சொல்றேங்க,

இணையத்தில் இது தொடர்பாக 2 மணிநேரத்திற்கு மேல் உதவிகளை சேகரித்து இறுதியாக காரணத்தை கண்டுபிடித்தேன். தரவிறக்கம்  செய்யப்பட்ட கோப்பில் பிழை இருந்திருக்கிறது. அந்த பிழை நமக்கு வெளிப்படையாக தெரியவில்லை, அதாவது அதை திறக்கும் போதோ அல்லது bootable ஆக மாற்றும் போதோ அது தெரியவில்லை. எல்லாம் உள்காயமாகவே இருந்திருக்கிறது.

கொஞ்சம் புரியற மாதிரி ஒரு உதாரணத்தோட சொல்றேன் கேளுங்க

உங்களிடம் உபுண்டு 14.04 இயங்குதளத்தின் ISO கோப்பு இருக்கிறது. உங்களை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்த உங்கள் நண்பர் நீங்கள் உபுண்டு பயன்படுத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஆசைப்பட்டு அவருடைய கணினியிலும் உபுண்டு 14.04 நிறுவுவ வேண்டும் என்பதற்காக, உங்களிடம் உபுண்டு 14.04 இயங்குதளத்தை கேட்கிறார். உடனே, நீங்களும் லினக்ஸை பரப்ப வேண்டும் என்ற நோக்கில், உங்கள் நண்பரினுடைய pendrive இல் உபுண்டு 14.04 ISO கோப்பை Copy செய்து கொடுத்து அனுப்புறீங்க. உங்கள் நண்பர் அவருடைய கணினியில் அந்த ISO கோப்பை ஒரிடத்தில்(C, D, D or ...) சேமித்து வைக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து உபுண்டுவை நிறுவ வேண்டும் என்ற ஆர்வத்தில் ISO கோப்பை CD/DVD யிலோ அல்லது pendrive விலோ  bootable ஆக மாற்றுகிறார். மாற்றிய பின் உபுண்டுவை நிறுவும் பணியை தொடங்குகிறார். எனக்கு ஏற்பட்டது போலவே அவருக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. உங்கள் நண்பர் என்ன செய்வார், இல்ல நீங்கதான் என்ன செய்ய முடியும். எவ்வளவு நேரம் வீணடிக்கப்பட்டு இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

சரி, கோப்பு சரியாக இருக்கிறதா அல்லது பிழையுடன் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? இருக்கிறது இதை கண்டுபிடிப்பதற்கு பயன்படும் கருவிதான்  MD5sum.

MD5 என்றால் என்ன?

உங்கள் கணினியில் இருக்கும் ஒவ்வொரு கோப்பிற்கும் ஒரு MD5 எண் உண்டு. நமக்கு தனித்த அடையாளமாக இருக்கும் கட்டைவிரல் ரேகையைப் போல. நீங்கள்தான் என்பதற்கு சட்டப்பூர்வமான ஒன்று கட்டைவிரல் ரேகை. அது போல உங்கள் கணினி இருக்கும் கோப்பு எந்த மாற்றமும் ஏற்படாமல் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் MD5 எண். மேலும் தெரிந்து கொள்ள விக்கிப்பீடியா பக்கத்திற்கு செல்லுங்கள்.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இதுதான் சரியான வழி

உங்கள் கணினியில் இருக்கும் உபுண்டு 14.04 ISO கோப்பினை கொடுக்கும் போது அதற்கான MD5 எண்ணையும் ஒரு txt கோப்பில் சேமித்து ISO கோப்புடன் சேர்த்து உங்கள் நண்பருக்கு கொடுங்க. அவருடைய கணினியில் அதை பிரதியெடுத்த பின்,  பிரதியெடுத்த உபுண்டு 14.04 ISO கோப்பிற்கான MD5 எண்ணை நீங்கள் வழங்கியுள்ள MD5 எண்ணுடன் ஒப்பிட்டு பார்க்கட்டும். நீங்கள் வழங்கிய எண்ணும், உங்கள் நண்பரின் கணினியில் கிடைத்த எண்ணும் ஒன்றாக இருந்தால் கோப்பு நீங்கள் வழங்கியது போலவே எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது என்று அர்த்தம். எண்களில் ஏதேனும் ஒரு இலக்கம் மாறியிருந்தாலும் கூட கோப்பில் பிழை இருக்கிறது என்று அர்த்தம்.

இதை உறுதி செய்து கொண்ட பின், கோப்பு சரியாக இருக்கிறது என்றால், உபுண்டு 14.04 ISO கோப்பை CD/DVD அல்லது Pendrive ஏதாவது ஒன்றில் bootable ஆக மாற்றி நிறுவுதலை தொடங்கலாம். பிழையாக இருக்கிறது என்றால் bootable ஆக மாற்றிக்கொண்டிருக்காமல் உங்களிடம் வந்து மறுபடியும் உபுண்டு 14.04 ISO கோப்பை பெற்றுச் சென்று அதன்பின் நிறுவுதலை ஆரம்பிக்கலாம்(அப்பொழுதும் ஒரு முறை MD5 எண்ணை சரிபார்த்துக் கொள்வது நல்லது).

கீழே இருக்கும் படத்தைப் பார்த்தால் உங்களுக்கு இன்னும் நன்றாக புரியும். கோப்பில் மாற்றம் செய்த பின் உள்ள விபரங்கள் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பச்சை நிறத்தில் இருப்பது கோப்பின் உண்மை நிலை. பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இட்டு காண்பிக்கப்பட்டிருக்கும் எண்கள்தான் MD5 எண்கள். கோப்பில் மாற்றம் ஏற்பட்டு விட்டதால், இரண்டும் வேறு வேறாக இருப்பதை நீங்கள்  காணலாம்.



இதை நீங்கள் எப்படி செய்ய வேண்டும் என்ற முழு விபரமும் உபுண்டுவின் தளத்திலேயே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. http://releases.ubuntu.com/ இந்த தளத்தில் உபுண்டுவின் ISO கோப்பிற்கான MD5 எண் கொடுக்கப்பட்டு இருக்கும். நீங்கள் கோப்பை தரவிறக்கம் செய்த பின் உங்கள் கணினியில் MD5 எண்ணை கண்டுபிடித்து அதை உபுண்டுவின் தளத்தில் இருக்கும் கோப்போடு ஒப்பிட்டுப் பாருங்கள். எனக்கு ஏற்பட்டது போன்ற மோசமான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கும்.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தெரியப்படுத்துங்கள். நான் பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.

References:

Nov 9, 2014

உபுண்டுவில்(14.04 LTS) இணைய வேகத்தினை கண்காணித்தல்

இன்றைக்கு கணினி வைத்திருக்கும் அனைவருமே இணையத்தினை பயன்படுத்தி வருகிறோம். இணையத்தின் வேகம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவருக்குமே ஆர்வமாக  இருக்கும். அந்த வகையில் உபுண்டுவில் இணையத்தின் வேகத்தினை தெரிந்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அவைகளில் System Monitor மற்றும் Conky போன்றவைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணைய வேகத்தினை தெரிந்து கொள்ள வேண்டுமானால் இணைய உலாவியினை(Browser) Minimize செய்து வைத்துவிட்டு. System Monitor ஐத் திறந்தோ அல்லது Desktop இல் இருக்கும் Conky Task Manager க்குச் சென்றோதான் பார்க்க வேண்டும். அடிக்கடி இணையத்தின் வேகத்தினை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது கொஞ்சம் நேரத்தினை வீணடிக்கும் செயலாகும்.



இந்த பிரச்சனையை Netspeed indicator applet தீர்த்து வைக்கிறது. நான் உபுண்டு 9.04 ஐ தொடக்க காலத்தில் பயன்படுத்திய போது இந்த Indicator ஐ பயன்படுத்தி வந்தேன். அதன்பின் இன்றுவரையிலும் Conky யின் மூலமாக இணைய வேகத்தினை தெரிந்து கொள்கிறேன். Nokia 6300 (2G) மொபைல் மூலமாக இணையத்தினை பயன்படுத்தி வருகிறேன். இதிலுள்ள சிரமமே என்னவென்றால் Connection Disconnect ஆகாமல் இருக்கும். ஆனால், எந்தவிதமான Transmission நடைபெறாது. இதற்காக உலாவியை Minimize செய்து வைத்து விட்டு Conky க்குச் சென்று Transmission இருக்கிறதா என பார்த்து வருவேன்.

Netspeed Inidicator இன் சிறப்பு



Netspeed Indicator ஐ நிறுவிய பிறகு ஒருமுறை Logout செய்து விட்டு மீண்டும் Login செய்தால் Top Panel இல் வந்து Netspeed Applet அமர்ந்து கொள்ளும். அதன்பின் உலாவியை பயன்படுத்திக் கொண்டே Top Panel இன் மேலே இருக்கும் Netspeed Indicator மூலமாக இணையத்தின் வேகத்தினை தெரிந்து கொள்ளலாம். Download and Upload இரண்டினுடைய வேகத்தின் கூட்டுத்தொகையைக்  காண்பிக்கும். அதை Click செய்தால் Download மற்றும் Upload இரண்டின் வேகத்தினையும் தனித்தனியாக தெரிந்து கொள்ளலாம்.



Netspeed Indicator ஐ நிறுவுதல்

முனையத்தில் கீழ்காணும் கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.

sudo add-apt-repository ppa:nilarimogard/webupd8
sudo apt-get update
sudo apt-get install indicator-netspeed

மேலும் தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.

Nov 7, 2014

wget - CLI Download Manager - துண்டிக்கப்பட்ட தரவிறக்கத்தை மீண்டும் தொடருதல்

லினைக்ஸைப் பொறுத்தமட்டிலே இணைய வேகம் என்பது எப்பொழுதும் வேகமாகவே இருக்கும். உங்களுடைய இணைய இணைப்பின் வேகம் என்னவே அதே வேகத்தை நீங்கள் பெறலாம். சிறிதளவு கூட வீணாகாமல். விண்டோஸில் தரவிறக்கம் செய்வதற்கென்றே தனியாக மென்பொருள்கள் நிறைய உள்ளன். உதாரணமாக: IDM என்று சொல்லக்கூடிய Internet Download Manager.

ஆனால், எந்தவொரு லினக்ஸ் வழங்கல்களிலும்(Distribution) தரவிறக்கம் செய்வதற்கென தனியாக  எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் பெரும்பாலும் இருப்பதில்லை. எந்த இயங்குதளமாக இருந்தாலும், எப்படிப்பட்ட தரவிறக்க மென்பொருள்களை பயன்படுத்தினாலும் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்திலெல்லாம் தரவிறக்கம் செய்து விட முடியாது.

உதாரணமாக: நான் என்னுடைய Nokia 6300 மொபைல் மூலமாகத்தான் இணையத்தை பயன்படுத்தி வருகிறேன். 2G யின் அதிகபட்ச வேகமாக நொடிக்கு 21KB இருக்கும் (21KB/s). IDM மென்பொருளை பயன்படுத்தி இந்த வேகத்தை 50KB/s ஆக மாற்றி விட முடியாது. விண்டோஸைப் பொருத்தமட்டிலே இணைய வேகம் என்பது சற்று குறைவாகத்தான் இருக்கும். அதை கொஞ்சம் அதிகப்படுத்தி நிலை நிறுத்திக்கொள்ள வேண்டுமானால் IDM போன்றவைகள் உதவலாம்.

இணைய இணைப்பிற்காக நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச வேகம் என்னவோ அந்த வேகத்திலேயே நாம் லினக்ஸில் இணையத்தைப் பயன்படுத்தலாம் எனும் போது, பிறகு எதற்காக தனியாக ஒரு தரவிறக்க மென்பொருள்? அது தேவையில்லை.

அதற்காக லினக்ஸில் Download Manager மென்பொருளே இல்லை என்று நினைத்து விட வேண்டாம். FatRat, KGet போன்றவைகள் அதில் புகழ்பெற்றது.


தேவையென்றால் நீங்கள் நிறுவி பயன்படுத்தலாம். அது உங்களின் விருப்பத்தை பொறுத்தது.

சரி தலைப்பிற்கு வருவோம். மேலே Ubuntu Software Center இல் காண்பிக்கப்பட்டுள்ளதெல்லாம் Graphical User Interface வகைகள்.

நாம் பார்க்கப்போவது wget எனும் Command Line Interface (CLI) வகையினைச் சார்ந்தது.

உபுண்டுவை பொறுத்தவரையில் wget கட்டளையை நீங்கள் தனியாக நிறுவ வேண்டியதில்லை. இயல்பாகவே நிறுவப்பட்டு இருக்கும்.

wget கட்டளையின் மூலம் தரவிறக்கம் செய்ய:

முனையத்தில் (Terminal)

wget [தரவிறக்கம் செய்ய வேண்டிய முகவரி] கொடுத்து Enter Key ஐ அழுத்தவும். கீழே இருக்கும் படத்தைப் பார்க்கவும். அழுத்தியவுடன் தரவிறக்கம் தொடங்கிவிடும். நான் விரும்பி பயன்படுத்துவதை இதைத்தன்.


wget கட்டளையின் தரவிறக்கம் துண்டிக்கப்பட்டுவிட்டால் தரவிறக்கம் செய்ததிலிருந்து மீண்டு தொடர:

wget -c [துண்டிக்கப்பட்ட தரவிறக்கத்தின் முகவரி]

Up Arrow Key ஐ பயன்படுத்தி முந்தைய வரியை பெற்றுக்கொள்ளலாம்.



என்ன மென்பொருள் இல்லை இந்த லினக்ஸ் இயங்குதளத்தில்
ஏன் கையை ஏந்த வேண்டும் மற்றவர்களிடத்தில்?
ஒழுங்காய் பயிற்சியெடு லினக்ஸ் இயங்குதளத்தில்
உயரும் உன் அறிவு மலை உயரத்தில்.

Nov 4, 2014

WordPress Installation - உபுண்டுவில் WordPress ஐ நிறுவுதல்



Content Management System என்று சொல்லக்கூடிய CMS இல் புகழ்பெற்ற ஒன்றான WordPress ஐ உபுண்டுவில் நிறுவுவது எப்படி? என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். WordPress ஐப் போலவே Joomla, Drupal போன்றவைகளும் CMS சூழலுக்கு புகழ்வாய்ந்த இயக்கசூழல்கள்தான். CMS இல் ஒன்றான Joomla  வை உபுண்டுவில் நிறுவுவது எப்படி? என்று ஏற்கனவே இங்கு பதிவு செய்துள்ளேன். வலைப்பதிவில்(Blogging) WordPress எப்படி புகழ்பெற்றதாக இருக்கிறதோ அதுபோல CMS லும் WordPress புகழ்பெற்றதாக உள்ளது. WordPress பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதால் மற்ற இரண்டு CMS சூழல்களுடன் ஒப்பிடும் போது WordPress முன்னனியில் இருக்கிறது. புதிய பயனர்கள் WordPress ஐ எளிமையகவும் கற்றுக்கொள்ளலாம்.

LAMP(Linux Apache MySQL PHP) மற்றும் WAMP (Windows Apache MySQL PHP)) ஆகிய இரண்டு சூழலிலும் WordPress ஐ  நிறுவிக்கொள்ளலாம். இருந்தாலும் Linux இயங்குதளத்தில் நிறுவுவதற்கே பரிந்துரைக்கப்படுகிறது. இங்கு நாம் LAMP  சூழலில் நிறுவுவதையே பார்க்க இருக்கிறோம். உபுண்டுவில் LAMP நிறுவுவது எப்படி என தெரிந்து கொள்ள நான் ஏற்கனவே எழுதியுள்ள இந்த பதிவுக்கு செல்லவும்.

நிறுவுதலை ஆரம்பிப்போமா?

WordPress இன் அண்மைய பதிப்பை தரவிறக்கம் செய்து கொள்ளவும். நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது உபுண்டுவில் இணைய இணைப்பு வைத்திருப்போர் முனையத்தின்(Terminal) wget கட்டளையின் மூலமாகவும் தரவிறக்கம் செய்யலாம்.



தரவிறக்கம் செய்த WordPress இன் சுருக்கப்பட்ட கோப்பை Extract செய்யவும். வலது சொடுக்கின்(Right Click) மூலம் Extract என கொடுத்து விரித்துக்கொள்ளலாம் அல்லது கட்டளை வரியின் மூலமும் செய்யலாம்.

LAMP இன் அடைவான /var/www/html  அடைவிற்குள்(Directory) உங்களது WordPress தளத்திற்காக ஒரு புதிய அடைவை உருவாக்கவும். உதாரணமாக. நான் gnutamil என உருவாக்கியுள்ளேன்.

Extract செய்யப்பட்ட WordPress அடைவிற்குள் இருக்கும் கோப்புகள் மற்றும் அடைவுகள் அனைத்தையும் புதிதாக உருவாக்கிய அடைவிற்குள் பிரதியெடுக்கவும்(Copy and Paste).



WordPress ற்கான தகவல்தளம்(Database) மற்றும் தகவல்தள பயனரை(Database User) உருவாக்குதல்:

கீழ்காணும் கட்டளைகள் மூலமாக MySQL இல் தேவையா வேலைகளை செய்யுவும். MySQL தகவல்தளத்திற்குள் நுழையவும். கொடுக்க வேண்டிய கட்டளைகள் கீழ்காணும் படத்தில் சிவப்பு அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.



MySQL கட்டளை விளக்கம்:

MySQL க்குள் உள்நுழைய

mysql -u root -p

WordPress ற்கென தனியாக ஒரு தகவல்தளத்தினை உருவாக்கவும்.

CREATE DATABASE wordpressdb;

புதிய பயனரை உருவாக்கவும்.

CREATE USER wpuser@localhost IDENTIFIED BY 'password';

இங்கு wpuser எனும் இடத்தில் உங்களுக்கு விருப்பமான பயனர் பெயரையும் password என்பதில் உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லையும் அமைத்துக்கொள்ளலாம். கடவுச்சொல்லின் முதலிலுன் இறுதியிலும் Single Quote கட்டாயம் இடம்பெற வேண்டும்.

புதிதாக உருவாக்கிய பயனருக்கு WordPress ற்கான தகவல்தளத்தினுள் அனைத்து வேலைகளையும் செய்யும் விதத்தில் அனுமதிகளை அளிக்கவும்.

GRANT ALL ON wordpressdb.* to wpuser@localhost;

அனுமதியை புதுப்பிக்கவும்.
FLUSH PRIVILEGES;

MySQL ஐ விட்டு வெளியேறவும்.

exit

WordPress அடைவிற்குள் மாற்றங்களைச் செய்தல்

/var/www/html/wordpres_directory_for_your_site சென்று wp-config-default.php எனும் கோப்பின் பெயரை  wp-config.php என பெயர் மாற்றம்(rename) செய்யவும்.




define(‘DB_NAME’, ‘wpdb‘);

database_name_here எனும் இடத்தில் நீங்கள் wordpress ற்கென புதிதாக உருவாக்கிய database பெயரை கொடுக்கவும்.

define(‘DB_USER’, ‘wpuser‘);

username_here எனும் இடத்தில் நீங்கள் MySQL இல் புதிதாக உருவாக்கிய பயனர் பெயரை கொடுக்கவும்.

define(‘DB_PASSWORD’, ‘password‘);

MySQL இல் உருவாக்கிய பயனருக்கு கொடுத்த கடவுச்சொல்லை password எனும் இடத்தில் ஒற்றை மேற்கோள் குறிக்குள் இடவும்.

மாற்றம் செய்யும் முன்

மாற்றம் செய்த பின்

கோப்பினை சேமிக்கவும். மூடவும்.

sudo chown -R www-data:www-data /var/www/html/

மேற்காணும் கட்டளையினை முனையத்தில் இட்டு apache யின் அடைவிற்கு அனுமதிகளை அளிக்கவும்.


sudo service apache2 restart

கட்டளை மூலம் apache server ஐ restart செய்யவும்.

WordPress Installation ஐ தொடங்குதல்

உங்களது இணைய உலாவியினை திறந்து localhost/your_wordpress_folder_name கொடுத்து இயக்கவும். நான் gnutamil என்று கொடுத்ததால் localhost/gnutamil என்று கொடுத்துள்ளேன். WordPress கேட்கும் தகவல்களை உள்ளிடவும். 







இனிதே WordPress நிறுவுதல் உபுண்டுவில் முடிந்தது.

Reference:



Nov 3, 2014

பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவர்களால் ஆங்கிலம் சரளமாக பேச முடியாதா?

ஆங்கிலம் பேசினால் அறிவாளியா? இந்த பதிவை படித்து விட்டு பிறகு தொடர்ந்து படிக்கவும்.

நம் எண்ணங்களையும், நாம சொல்ல நினைக்கிற அனைத்து விஷயங்களையும் மத்தவங்ககிட்ட கொண்டு போய் சேர்க்கற ஒரு கருவிதான் மொழி. குறிப்பா, நம்முடைய தாய்மொழில பேசுறதைக் காட்டிலும், கேக்குறவங்களோட  மொழியில பேசும்போது தனி மரியாதைக் கிடைக்கும். 'டிட் யூ ஹேவ் யுவர் லஞ்ச?' என்று கேட்டால் இந்திக்காரன் முறைப்பான். 'கானா காலியே?' என்று கேட்டால், குழைவான்.

அதேமாதிரிதான் நம்மவர்களும். சினிமா விழாக்களாகட்டும், இல்லை அரசியல் விழாக்களாகட்டும், யாராவது ஒருவர் தட்டுத்தடுமாறி, "வணக்கம். எல்லாரும் நல்லாருக்கீங்களா"ன்னு மழலைத் தமிழில் பேசினால், விசல் அடித்து, கைத்தட்டுகிறோம்.

வாழ்க்கை நடைமுறைகளில் ஆங்கிலம் தெரிந்தாக வேண்டிய கட்டாயம் எல்லா மக்களுக்கும் கண்டிப்பா இருக்கு. அந்த மொழியை நல்லா பேசியும், எழுதியும் நாம் கவிஞனாக வேண்டிய அவசியமில்லை. ஆனா, அடுத்தவங்களோடு பேசறதுக்கும், பழகறத்துக்கும், எழுதுறதுக்கும் ஆங்கிலம் என்பது அத்தியாவசியமாகிவிட்டது.

தமிழ் மீடியத்துல படிச்சவங்க, ஆங்கிலத்துல பெரிய ஆளா வரமுடியாதுன்னு நினைக்கிறாங்க. இது மகா தவறு. நான் சொல்ற விஷயத்தை நீங்க கடைப்பிடிச்சா, நீங்களும் ஆங்கிலத்துல நிச்சயமாக பேசலாம்.
  • தினமும், டிக் ஷனரியை வச்சுகிட்டு ஐந்து வார்த்தைகளை மனப்பாடம் பண்ணுங்க. அதோட 'ரிலேடட்' வார்த்தை என்னங்கறதையும் சேர்த்து மனப்பாடம் பண்ணுணீங்கன்னா, ஒரு நாளைக்கு 10 வார்த்தை சுலபமா தெரிஞ்சுக்கலாம். ஒரு வருஷத்துல 3,600 வார்த்தைகள் மனப்பாடம் ஆயிடும்.
  • தினமும ஆங்கில நாளிதழ் ஏதாவது ஒண்ணு படிக்கறதை வழக்கமா வச்சிக்குங்க. மொதல்ல சினிமா பக்கமும் ஸ்போர்டஸ் பேஜூம் படிங்க, தப்பில்லை!
  • ரொம்ப சிம்பிளான வார்த்தையா முதல்ல தெரிஞ்சுகிட்டு பேச ஆரம்பியுங்க. உதாரணத்துக்கு, 'ஸீ யூ', 'ஓகே ஐ வில் டூ இட்' ங்கிற மாதிரி குறைந்தபட்ச வார்த்தைகள்.
  • முடிந்தவரை முதல்ல நண்பர்கள்கிட்ட பேச ஆரம்பியுங்க. மத்தவங்க கிண்டல் செஞ்சாலும் பரவாயில்லை, முயற்சி பண்ணுங்க.
  • நல்ல ஆங்கிலத் திரைப்படங்கள் சப்டைட்டிலோட பாருங்க. அவங்க உச்சரிப்பு புரியும். படிப்படியா நீங்களே சப்டைட்டில் இல்லாம ஃபாலோ பண்ணக் கத்துக்குவீங்க.
  • தாய்மொழியில் யோசித்து, அதை மொழிமாற்றம் செய்து ஆங்கிலத்தில் பேசாதீங்க.
  • தனியா வீட்ல கண்ணாடி முன்னால நின்னு பேசி பழகுங்க. உங்க முகபாவத்தையும், நீங்க பேசற வார்த்தை உச்சரிப்பையும் அது சரி பண்ணிடும்.
  • உரக்க பேசுங்க. மொழிகள்ல ஓர் ஆபத்து என்னன்னா, ஒரு வார்த்தைக்கே இரண்டு அர்த்தங்கள் வரும். அதனால, உங்க உச்சரிப்பும் சரியா இருந்தாதான் கேட்கறவங்களுக்கு அது விளங்கும்.
எந்த மொழியா இருந்தாதான் என்ன, தைரியமாப் பேசி பழகினா நிச்சயம் வந்துவிடும். குதிரையைக் குளத்துகிட்ட கூட்டிகிட்டுதான் போக முடியும்; தண்ணி குடிக்க முயற்சிக்கறது அதோட வேலைதான். முடியாதது எதுவுமே நம்ம அகராதியில இருக்கக்கூடாது.

நம் கனவு பலிக்கணும்னா முதலில் நாம் எழுந்திருக்கணும். தாய்மொழியைத் தப்பா பேசினாதான் தப்பு. அடுத்த மொழியைத் தப்பா பேசினா தப்பே இல்லை. ஆங்கிலத்தைப் பேச்சில் வையுங்க. தமிழை மூச்சில் வையுங்க.

நன்றி: நாணயம் விகடன் 22-12-2013
(டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் அவர்கள் உனக்கும் மேலே நீ! எனும் தொடரில் எழுதியது)

Oct 30, 2014

PHP - உபுண்டு 14.04 LTS இல் Code Igniter Framework Installation

PHP க்கென நிறைய Frameworks கள் இருக்கின்றன.
  • Yii
  • CakePhp
  • Zend
  • Code Igniter
  • Symphony
ஆகியவைகள் குறிப்பிடத்தக்க Framework கள். நான் முதலில் Zend Framework ஐத்தான் முயற்சித்து பார்த்தேன். அது Advanced Users க்குத்தான் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். என்னை போன்ற கத்துக்குட்டிகளுக்கு Zend Framework ஐ பயன்படுத்த கொஞ்சம் காலம் பிடிக்கும். ஆகையால் இப்போது ஆரம்பநிலை பயனாளர்களுக்கு ஒத்து வரும் விதத்தில் Code Igniter Framework ஐ நிறுவுவதைப் பற்றி பார்ப்போம்.

மிகவும் எளிமையா வழிதான்



Extract செய்யவும். Extract ஆன பிறகு அந்த அடைவை(CodeIgniter-2.2-stable) Copy செய்யவும்.

Apache Server னுடைய /var/www/html  அடைவுக்குள் Extract செய்யப்பட்ட Code Igniter அடைவை Paste செய்யவும்.



CodeIgniter-2.2-stable எனும் அடைவை ci2 என பெயர் மாற்றம் செய்யவும்.

உங்களது இணைய உலாவியினை திறந்து http://localhost/ci2 என்ற முகவரியை இயக்கவும்.



அவ்வளவுதான் முடிந்தது வேலை

மேலும் தெரிந்து கொள்ள:

Oct 29, 2014

உபுண்டு லினக்ஸை நிறுவிய பிறகு செய்ய வேண்டியவை - பகுதி-2

உபுண்டுவை நிறுவிய பின் விண்டோஸ் இயங்குதளத்தில் செய்வது போன்று Device Drivers, Office Suite, Browsers போன்றவைகளை நிறுவி நம்முடைய நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. அனைத்து வன்பொருள்களுக்கும் தேவையான Drivers களை உபுண்டு தானகவே நிறுவிக் கொள்ளும். விண்டோஸில் MS-Office மென்பொருள் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒன்று அதேபோல உபுண்டுவில் Libre Office பயன்படுத்தப்படுகிறது இதுவும் உபுண்டுவில் தானாகவே நிறுவப்பட்டு இருக்கும்.

உபுண்டுவில் மென்பொருள்களை நிறுவுவதற்கு இணைய இணைப்பு(Internet Connection) அவசியம் தேவை. அது எந்த முறையில்(BSNL Broadband, USB Stick, Mobile Internet(2G & 3G)) வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படினா இணைய இணைப்பு இல்லாம உபுண்டுவில் மென்பொருள்களை நிறுவவே முடியாதானு? கேட்குறீங்க. முடியும் ஆனால் ஆரம்பநிலை பயனாளர்களுக்கு அந்த முறைகள் கொஞ்சம் கடினமாக இருக்கும். அவ்வளவுதான். நன்கு பயிற்சி பெற்ற பின் அந்த முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

விண்டோஸில் இல்லாத ஒரு சிறப்பு உபுண்டுவில் இருக்கிறது. அது என்னவென்றால்? உபுண்டுவில் நமக்கு தேவையான மென்பொருள்களை இணையத்தில் இருந்து Ubuntu Software Center மூலமாக நேரடியாக நிறுவிக்கொள்ளலாம். ஆனால் விண்டோஸில் நிறுவிக்கொள்ள முடியாது.

உபுண்டுவை நிறுவிய பின் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி பார்ப்போமா?

இங்கு நாம் காணப்போகும் அனைத்து வழிமுறைகளுமே இணையத்தின்(Internet Connection) உதவியுடன் செய்யப்போவதுதான். ஆகையால் நிறுவுதல்களை மேற்கொள்ளும் முன் உபுண்டுவில் இணைய இணைப்பு(Internet Connection) சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

உபுண்டுவில் Audio and Video வசதிகளை ஏற்படுத்துதல்

அதை உறுதி செய்த பிறகு நாம் செய்யப் போகும் முதல் வேலை உபுண்டுவில் Audio and Video வசதியினை முழுமையாக கொண்டு வருவதுதான். விண்டோஸ் இயங்குதளத்தில் இதற்காக Windows Media Player இயல்பாகவே நிறுவப்பட்டு இருக்கும். அதுபோல உபுண்டுவிலும் Totem Player நிறுவப்பட்டு இருக்கும். ஆனால் Ogg, Ogv, Wav போன்ற கோப்புகளைத்தான் அதில் இயக்க முடியுமே தவிர mp3, avi, 3gp, wmv, mp4, flv போன்ற கோப்புகளை இயக்க முடியாது. ஏனென்றால் இவைகளெல்லாம் இலவசம் கிடையாது. தனியுரிமம் கொண்டது. உபுண்டுவுடன் இந்த கோப்புகளை இயக்குவதற்கான பொதிகளை இணைத்துக் கொடுத்தால் சில, பல பிரச்சனைகள் வரும் என்பதால் இவைகள் உபுண்டுவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இது போன்று தடை செய்யப்பட்ட கோப்பு வகைகளை இயக்குவதற்கு தேவையான பொதிகளை நாம்தான் நிறுவிக்கொள்ள வேண்டும். 

இதற்கான பொதிகளை நிறுவ முனையத்தை(Terminal) திறந்து கீழ்காணும் கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக கொடுக்கவும்.

sudo apt-get update
இந்த கட்டளை முழுமையாக ஓடி முடிந்த பின்
sudo apt-get install ubuntu-restricted-extras

கட்டளையை இயக்கவும்.

உபுண்டுவிலேயே வேறு வகையினைச் சேர்ந்தது என்றால். நீங்களை நிறுவியிருக்கும் வகை எதுவோ அதற்கேற்ப கீழ்காணும் கட்டளைகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் கொடுக்கவும். கீழ்காணும் அனைத்தையுமே நிறுவிவிடக்கூடாது.

(Kubuntu வாக இருந்தால்)
sudo apt-get install kubuntu-restricted-extras

(xubuntu வாக இருந்தால்)
sudo apt-get install xubuntu-restricted-extras

(lubuntu வாக இருந்தால்)
sudo apt-get install lubuntu-restricted-extras

இந்த பொதிகளை நிறுவிவிட்டீர்களேயானால் அதன்பிறகு உபுண்டுவில் அனைத்து விதமான Audio மற்றும் Video Format களையும் இயக்க முடியும். Adobe-flash-Player ம் இந்த கட்டளைகள் மூலமாக நிறுவப்படும்.

Internet Browser களை நிறுவுதல்

அடுத்ததாக இணையத்தில் உலாவுவதற்கா உலாவிகளை நிறுவுதல். உபுண்டுவில் மூன்று உலாவிகள் பெரும்பாலும விரும்பி பயன்படுத்தப்படுகிறது. அவைகள் Mozilla Firefox, Google Chrome and Chromium Browser. இந்த மூன்றுமே உபுண்டுவில் சிறப்பாக இயங்கும். இதில் Mozill Firefox இயல்பாகவே நிறுவப்பட்டு இருக்கும். ஆகையால் Google Chrome, Chromium Browser இரண்டை மட்டும் நிறுவினால் போதும்.


Chromium Browser ஐ நிறுவதல்

முனையத்தில்
sudo apt-get update
sudo apt-get install chromium-browser என கொடுக்கவும்.

Mozill Firefox இன் புதிய வடிவத்தை நிறுவ விரும்பினால் sudo apt-get install firefox என கொடுக்கவும்.

VLC நிறுவுதல்
அதன்பின் vlc media player ஐ நிறுவுதல் அதற்கு
sudo apt-get update
sudo apt-get install vlc
என கொடுக்கவும்.


இவைகளெல்லாம் அவசியமான மென்பொருள்கள். இன்னும் உங்களுக்கு நிறைய மென்பொருள்களை தேவைப்பட்டால் Ubuntu Software Centre க்குச் சென்று நிறுவிக்கொள்ளலாம்.

--முடிந்தது--

உபுண்டு லினக்ஸை நிறுவிய பிறகு செய்ய வேண்டியவை - பகுதி-1

ஆரம்ப நிலை பயனாளர்களுக்கு மற்ற லினக்ஸ் வழங்கல்களை விட உபுண்டுதான் சரியான இயங்குதளமாக இருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. உபுண்டுவில் நன்கு பயிற்சி பெற்ற பிறகு ஓரளவு லினக்ஸைப் பற்றிய அடிப்படைகளை கற்றுத்தேர்ந்த பின் அவரவரின் பயன்பாட்டிற்கு ஏற்பவும், வேலைச்சூழலுக்கு ஏற்பவும் பொருத்தமான லினக்ஸ் வழங்கலை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். சரிங்க உபுண்டுவை பயன்படுத்துவதென்று முடிவுக்கு வந்தாச்சு, அப்படியென்றால் உபுண்டுவை நிறுவிய பின் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? வாங்க சொல்றேன் அதற்காகத்தானே இந்த கட்டுரையே.

Drivers, Office Suite, Antivirus and Internet Browsers ஆகியவைகளை நிறுவ வேண்டியதில்லை

உபுண்டுவை பொறுத்த வரையிலே Device Drivers, Office Suite(விண்டோஸில் MS Office), Antivirus(லினக்ஸிற்கு இது தேவையில்லை), Browsers போன்றவைகளை நாம் நிறுவ வேண்டியதில்லை. இவைகளெல்லாம் உபுண்டுவை நிறுவும் போதே நிறுவப்பட்டுவிடும். ஆனால் விண்டோஸ் இயங்குதளங்களில் மேற்கண்டவைகளையெல்லாம் தனித்தனியாக நிறுவி நம்முடைய நேரத்தில் பெரும்பகுதியை செலவழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கணினியில் எந்தெந்த மென்பொருள்கள் நிறுவப்பட வேண்டும் என்பதை கணினியைப் பயன்படுத்தப் போகும் பயனாளரினுடைய பயன்பாட்டைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும். ஒரு சில மென்பொருள்கள் அனைத்து வகையான பயனாளர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக Office Suite, Media Players, Browsers, Themes போன்றவைகளைக் கூறலாம். அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தும் வழிமுறைகளையே இங்கு காண்போம்.

சரி உபுண்டுவில் மென்பொருள்களை எந்தெந்த வகைகளில் நிறுவலாம்?

1. கணினியில் இணையம் வசதி இல்லாதவர்கள், இணையம் வசதியுள்ள வேறோரு கணினியிலிருந்து தேவையான மென்பொருள்களை தரவிறக்கம் செய்து, அதைபென்டிரைவ் போன்ற கருவிகளில் சேமித்து எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய கணினியில் நிறுவலாம்.
2.  Ubuntu Software Center மூலமாக நிறுவலாம்.
3. முனையம் மூலமாக நேரடியாக இணையத்திலிருந்து கட்டளை வரிக் கொண்டு நிறுவலாம்.

மேற்காணும் மூன்று முறைகளில் எது சிறந்தது?

உபுண்டு நிறுவியிருக்கும் தங்கள் கணினியில் இணைய இணைப்பை ஏற்படுத்தி தங்களுக்கு தேவையான மென்பொருள்களை Ubuntu Software Center அல்லது முனையம் மூலமாக நிறுவுவதுதான் சிறந்தது. ஆகையால் நான் மேலே கூறியவைகளில் கடைசியாக இருக்கும் இரண்டு முறைகள்தான் சிறந்தது.

ஏன் முதலாவதாக கூறியிருக்கும் முறை சிறந்ததில்லை?

உதரணமாக vlc media player ஐ இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொண்டு வந்து உங்களுடைய உபுண்டுவில் நிறுவுவதாக வைத்துக்கொள்வோம். அப்படி நிறுவும் போது vlc media player ஐ நிறுவ சில supporting packages கள் தேவைப்படும் அவைகள் இருந்தால்தான் vlc media player யே நிறுவ முடியும். அந்நிலையில் உங்களுடைய கணினியில் இணைய இணைப்பு இருந்தால் நேரடியாக இணையத்திலிருந்தே நிறுவிக்கொள்ளும். இணைப்பு இல்லாதபட்சத்தில் தேவைப்படும் supporting packages களை மறுபடியும் நீங்கள் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து எடுத்துக்கொண்டு வர வேண்டும். supporting packages களை நிறுவிய பின் vlc media player ஐ நிறுவ வேண்டும். இந்த வழிமுறைகள் அதிகமான நேரத்தை வீணடிப்பதோடு மன உளைச்சலையும் ஏற்படுத்தும். புதிதாக மென்பொருளை நிறுவும் போதெல்லாம் இதையே செய்தால் உங்களுக்கே அலுப்புத்தட்டி விடும். அதே நேரத்தில் உங்களுடைய கணினியில் இணைய இணைப்பு இருந்தால் மிகவும் எளிதாக மென்பொருள்களை நிறுவி விடலாம். இந்த அலைச்சல்கள் வேண்டியதில்லை.

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் .exe கோப்புகள் உபுண்டுவில் இயங்குமா?

இயங்காது. அவசியம் ஏற்படின் Wine Software இன் உதவியுடன் இயக்கிக்கொள்ளலாம்.

.exe போன்று உபுண்டுவிற்கு என்ன Extension?

உபுண்டு Debian குடும்பத்தைச் சேர்ந்ததென்பதால் .deb வடிவில் மென்பொருள்கள் இருக்கும்.

.deb வடிவ கோப்புகளை உபுண்டுவில் நிறுவுவது எப்படி?

sudo dpkg -i package_name.deb என முனையத்தில் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக Google Chrome உலாவியை இணையத்தில் இருந்து தரவிறக்கும் செய்யும் போது அது .deb வடிவில் இருக்கும். அதை நிறுவ முனையத்தில்

sudo dpkg -i google-chrome-i386.deb என கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்த பதிவை பார்க்கவும்.

--தொடரும்--

Oct 24, 2014

PHP - mail() function மூலம் மின்னஞ்சல் அனுப்புதல்

மின்-வணிகமயமாகி விட்ட இக்காலத்தில் வாடிக்கையாளர்களை கையாள்வது என்பதுதான் வணிக நிறுவனங்களின் முக்கியமான வேலையாக இருக்கிறது. காரணம் என்னவென்றால் போட்டி மிகுந்த வணிக சூழல், ஒவ்வொரு நிறுவனமும் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள அனைத்து விதமான உத்திகளையும் கையாளுகிறது. இன்றைய வணிக சூழலில் கிட்டதட்ட அனைத்து நிறுவனங்களுமே தங்களது நிறுவனத்திற்கென தனியாக ஒரு இணையதளத்தை வைத்திருக்கிறது. அந்த இணைய இணையதளத்தில் நிறுவனத்தினுடைய அனைத்து சேவைகளையும் நுகர்வோரும், வாடிக்கையாளரும் அனுபவிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் ஒவ்வொரு நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.


வாடிக்கையாளர்களை கையாளும் உத்திகளில் ஒன்றுதான், வாடிக்கையாளர்களிடமிருந்து Feedback பெறுதல் மற்றும் வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டு பெற்று அதற்கான தீர்வுகளை ஏற்படுத்துதல்.

உதாரணமாக நான் Open Source For You(OSFY) Magazine னுடைய சந்தாதாரராக கடந்து 7 வருடங்களாக்க இருந்து வருகிறேன். எனக்கு ஏதாவது ஒரு இதழ் தாமதமாகினாலோ அல்லது வர தவறினாலோ நான் OSFY இன் இணையதளத்திற்கு சென்று அதற்கென தனியாக கொடுத்துள்ள படிவத்தில் என்னுடைய குறைகளை பதிவு செய்வேன். நான் அனுப்பும் விபரங்கள் support@efy.in எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யப்படும். அவர்கள் உடனடியாக என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இதழை அனுப்பி வைப்பர்.

இதுபோன்று மின்னஞ்சல் அனுப்புவதற்கென PHP யில் உள்ள Function தான் mail() எனும் Fuction. இந்த Fuction மூலமாக நாம் தற்போது நடைமுறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மின்னஞ்சல் வசதிகளைப் போல் Bcc, Cc போன்றவற்றையும் செய்யலாம்.

இணையதளத்தினை வடிவமைத்தப் பின்னர் அது Web Server இல் Hosting செய்யப்படும். நாம் நிறுவனத்தினுடைய இணையதள முகவரியை Browser இல் இயக்கும் போது, இணையதளம் எந்த வழங்கியில்(server) உள்ளதோ அங்கிருந்து நம்முடைய கணினிக்கு இணைய இணைப்பு(Internet Connection) மூலமாக Browser இன் உதவியோடு காண்பிக்கப்படும். இணையதளத்தினை வடிவமைத்த தனிநபர் கணினியிலிந்து(PC or Laptop) இணையதளம் நமக்கு வழங்கப்பட மாட்டாது.

PHP இல் இந்த mail() function ஐ நான் என்னுடைய மடிக்கணினியில் தான் இயக்கி பார்த்தேன். அப்பொழுது எனக்கு எழுந்த சந்தேகம் என்னவென்றால் இவ்வளவு எளிமையாக php மூலமாக மின்னஞ்சல் அனுப்பி விட முடியுமா! பரவாயில்லையே எவ்வளவு எளிமையாக இருக்கிறது என்று எனக்கு தோன்றியது. ஆனால் இதை இயக்கிப் பார்த்து விட்டு என்னுடைய மின்னஞ்சலின் Inbox ஐப் பார்த்தால் நான் php mail() function  மூலமாக அனுப்பிய மின்னஞ்சல் வந்து சேரவில்லை.

நாம் Hosting செய்யும் Server இல் அனைத்து வழங்கிகளும்(Mail Server, File Server, Database Server) நிறுவப்பட்டு இருக்கும். ஆகையால் நாம் மற்றவைகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நிரலை மட்டும் கவனமாக எழுதி, Server இல் ஏற்றிவிட்டால் போதும். அது வேலை செய்ய தொடங்கும்.

ஏன் மின்னஞ்சல் வந்து சேரவில்லை என என்னுடைய தேடலை தொடங்கினேன். அந்த தேடல் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். அதில் வெற்றியும் பெற்றேன். அவ்வாறு ஒரு தனிநபர் கணினியிலிருந்து php mail() மூலம் எப்படி மின்னஞ்சல் அனுப்புவது என்பதைப்பற்றிதான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.

மின்னஞ்சல்களை கையாள்வதற்கு Mail Server என்ற ஒன்று கட்டாயம் தேவை. நாம் Browser மூலமாக சென்று அனுப்புவது என்பது வேறு அதையும் இதையும் போட்டு குழப்பிக்க வேண்டியதில்லை. Mail Server என்ற ஒன்று இருந்தால் தான் நாம் நம்முடைய மின்னஞ்சல்களை PHP அல்லது எந்தவொரு நிரலின் மூலமும் அனுப்ப மற்றும் பெற முடியும்.

நான் செய்து பார்த்தது என்னுடைய உபுண்டு 14.04.1 LTS இல், Mobile மூலமாக 2G இணைய இணைப்பு வைத்திருந்தேன். விண்டோஸ் இயங்குதளத்திற்கு இந்த வழிமுறைகள் சற்றே வித்தியாசமாக இருக்கும்.

முதலில் நாம் நம்முடைய கணினியில் Mail Server ஐ நிறுவ வேண்டும். Postfix ஐப் போன்று இதற்கென சில பிரத்தியோகமான Mail Server கள் இருக்கின்றன. ஆனால் நான் நிறுவியது sendmail மற்றும் msmtp எனும் எளிமையான Mail Server Agent களை. முனையத்தை(Terminal) திறந்து கீழ்காணும் கட்டளை வரிகளைக் கொடுத்து Mail Server ஐ நிறுவிக்கொள்ளவும்.

sudo apt-get update
sudo apt-get install msmtp sendmail

அதன்பின் முனையத்தில் sudo gedit /etc/php5/apache2/php.ini என கொடுத்து php.ini கோப்பில் [mail function] எனும் பகுதியில் கீழ்காணும் வரிகளை உள்ளீடு செய்யவும்.

SMTP = localhost
smtp_port = 25
sendmail_path = /usr/sbin/sendmail -t
mail.add_x_header = On


அடுத்ததாக sudo gedit /etc/ssmtp/ssmtp.conf என முனையத்தில் கொடுத்து ssmtp.conf கோப்பில் கீழ்காணும் வரிகளை உள்ளீடு செய்யவும்.

root=postmaster
hostname=Lenovo-B460e
mailhub=smtp.gmail.com:587
UseSTARTTLS=YES
AuthUser=linuxkathirvel.info@gmail.com
AuthPass=[your mail account password]

இங்கு hostname, mailhub, AuthUser, AuthPass போன்றவைகளின் மதிப்புகள் உங்களின் விருப்பம் மற்றும் தேவைக்கு ஏற்ப மாறுபடும். நான் Gmail பயன்படுத்துவதால் அதற்கேற்ப அமைத்துள்ளேன்.


அடுத்ததாக /etc/hosts எனும் கோப்பை கீழ்காணும் விதமாக அமைக்கவும்.


இறுதியில் Apache Web Server ஐ மறுதொடக்கம்(restart) செய்யவும்.


mail() function syntax:

mail($to, $subject, $message)

இங்கு to என்பதில் யாருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமோ அவர்களின் மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும். subject என்பதில் மின்னஞ்சலின் பொருள், message என்பதில் என்ன செய்தியோ அவற்றையும் கொடுக்க வேண்டும். கீழ்காணும் படத்தில் தெளிவாக காணலாம்.

நிரல்:

mail('linuxkathirvel.info@gmail.com','Hello, Welcome','FOSS - Free Open Source Software');


நிரலை இயக்கவும்.


mail() function மூலம் அனுப்பிய மின்னஞ்சல் என்னுடைய Gmail Inbox இல். நான் அனுப்பிய மின்னஞ்சல் Inbox தெரிவதற்கு பதிலாக Spam இல் கிடைத்தது.

மின்னஞ்சல் கிடைத்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி !!!

இந்த மின்னஞ்சலை அனுப்ப நான் பட்ட பாட்டை கீழே காணவும்.





Oct 16, 2014

MySQL இல் LOAD DATA INFILE பிழைக்கான தீர்வு

ஒரு Table னுடைய column க்கு தேவையான தகவல்கள் ஒரு Tab இடைவெளியிலும், ஒரு Row க்கு தேவையான தகவல்கள் ஒரு புதிய line னாலும் ஒழுங்குபடுத்தப்பட்டு ஒரு கோப்பில் சேமிக்கப்பட்டிருந்தால், அந்த தகவல்களை நாம் நேரடியாக ஒரு Table க்குள் செலுத்திக்கொள்ளலாம்.


இதற்கு பயன்படும் கட்டளைதான் LOAD DATA INFILE

LOAD DATA INFILE இன் Syntax பின்வருமாறு இருக்கும்

LOAD DATA INFILE '/full/path/of/file/name' INTO TABLE table name;

இந்த Query யை நான் இயக்கிய போது எனக்கு கீழ்காணும் பிழைச் செய்தி கிடைத்தது.


ஏதாவது எழுத்து பிழை இருக்கலாம் என நினைத்துக்கொண்டு ஒன்றிற்கு இரண்டு முறை கட்டளை வரியை சரிபார்த்து கொண்டேன் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அடுத்ததாக கோப்பிற்கு chmod 777 data.txt என கொடுத்து முழு அனுமதியையும் அளித்துப்பார்த்தேன் அப்படியும் வேலை செய்யவில்லை. அப்படியென்றால் பிழை வேறு எங்கோ இருக்கிறது என நினைத்து இணையத்தில் தேடினேன். இங்கு தீர்வு கிடைத்தது.

பணிபுரிந்து கொண்டிருந்த MySQL Terminal ஐ மூடிவிட்டு மறுபடியும் நுழையும் போது கீழ்காணும் கட்டளைகளை அமைத்து உள்நுழைந்தேன்.



myql -u root -p --local-infile=1

அதன்பின் LOAD DAT INFILE என்பதை LOAD DATA LOCAL INFILE என கட்டளையை மாற்றி அமைத்த போது கட்டளை வரி மிகவும் சரியாக வேலை செய்தது.


Sep 23, 2014

உபுண்டு 14.04 LTS இல் Joomla CMS ஐ நிறுவுதல்


Joomla என்பது ஒரு புகழ்வாய்ந்த Content Management System ஆகும். அதை எப்படி உபுண்டு இயங்குதளத்தில் நிறுவலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Joomla வை நிறுவுவதற்கு முன்பு உபுண்டுவில் LAMP முறைமை நிறுவியிருக்க வேண்டும். அடுத்ததாக உங்கள் உபுண்டு இயங்குதளத்தில் Joomla Package ஐ தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

Joomla வை நிறுவுவதற்கு முன்பு MySQL Database இல் Joomla விற்கென தனியாக ஒரு Database ஐ உருவாக்கிக் கொள்ளவும்.



joomladb, joomlauser ஆகிய இரண்டு பெயர்களுக்கு பதிலாக உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் கொடுத்துக்கொள்ளலாம்.

அடுத்ததாக தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் Joomla Package ஐ /var/www/ அடைவிற்குள் Extract செய்து கொள்ளவும்.



Extract செய்த அடைவின் பெயரை உங்களுக்கு விருப்பமான பெயரில் மாற்றிக் கொள்ளவும். நான் joomla என மாற்றிக்கொண்டேன்.

அதன்பின் உங்களுக்கு விருப்பமான இணைய உலாவியினை திறந்து http://localhost/xxxxx என கொடுக்கவும். இங்கு xxxxx என்பது நீங்கள் /var/www/ அடைவிற்குள் Extract செய்த அடைவிற்கு கொடுத்த பெயர். நான் http://localhost/joomla என கொடுத்துக்கொண்டேன்.




Site Name என்பதில் உங்கள் தளத்தின் பெயரை கொடுக்கவும்.
Descripition என்பதில் உங்கள் தளத்தின் விபரத்தை கொடுக்கவும்.
Admin Email என்பதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.
Admin Username என்பதில் Admin பயனருடைய பெயரைக் கொடுக்கவும்.
Admin Password என்பதில் Admin பயனருக்கான கடவுச்சொல்லை கொடுக்கவும்.
Confirm Admin Password என்பதில் Admin பயனருக்கான கடவுச்சொல்லை திரும்பவும் கொடுக்கவும்.
Site Offline என்பதில் Yes என கொடுக்கவும்.
இவையனைத்தையும் கொடுத்த பிறகு Next Button ஐ அழுத்தவும்.

அடுத்ததாக Database ஐ அமைத்தல்




Database Type: MySQLi
Host Name: localhost
Username : root இங்கு நீங்கள் Joomla விற்கென தனியாக பயனர் பெயரை உருவாக்கியிருந்தால் அந்த பெயரை கொடுத்துக்கொள்ளலாம்.
Password: password
Database name: joomladb
Table Prefix: jir43_
Old Database Process: Remove என கொடுக்கவும். இவையனைத்தையும் கொடுத்துவிட்டு Next Button ஐ அழுத்தவும்.

FTP Configuration தேவையிருந்தால் மாற்றங்களை செய்துகொள்ளுங்கள். அடுத்து Next Button ஐ அழுத்துங்கள்.

Install Sample Data: என்பதில் Blog English (GB) Sample Data  என கொடுத்து Install Button ஐ அழுத்தவும்.





Congratulations! Joomla! in Now Installed. என வாழ்த்துச் செய்தி வந்த பின்பு joomla வின் முதன்மை அடைவிற்குள் இருக்கும் installation folder அடைவினை நீக்கிவிடவும். அதன்பின்பு Notice என்பதற்கு கீழ் காணப்படும் Configuration தகவல்களை copy செய்து முதன்மை அடைவிற்குள் configuration.php எனும் கோப்பை உருவாக்கி அதில் Paste செய்யவும். கோப்பினை சேமிக்கவும்.




இறுதியாக Joomla வின் User Dashboard க்குச் செல்ல, உங்களது இணைய உலாவியில் http://localhost/xxxxx என கொடுக்கவும். இங்கு xxxxx என்பது நீங்கள் /var/www/ அடைவிற்குள் joomla package ஐ  Extract செய்த போது அந்த அடைவிற்கு கொடுத்த பெயர். கொடுத்தவுடன் உங்களுக்கு Joomla வின் முதன்மைப் பக்கம் கிடைக்கும்.

நான் http://localhost/joomla என கொடுத்துள்ளேன்.