Jan 27, 2016

Open Source For You(OSFY) நிர்வாகத்திடமிருந்து கிடைத்த பதில்

பழைய CD/DVD-க்களை என்ன செய்யலாம்? என்பது தொடர்பாக இதற்கு முன் ஒரு பதிவை எழுதியிருந்தேன். நான் 2008-லிருந்து Open Source For You Magazine ஐ சந்தாதாரராக இணைந்து வாங்கிகொண்டிருக்கிறேன். CD/DVD-க்களை ஒழிக்கும் நடவடிக்கையாக 'இனிமேல் எனக்கு DVD யை OSFY இதழுடன் இணைத்து அனுப்ப வேண்டாம்' என்று OSFY நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் செய்து வைத்திருந்தேன். அதற்கு OSFY நிர்வாகத்திடமிருந்து கிடைத்த பதிலை நீங்கள் கீழே காணலாம்.


OSFY இதழ்கள் மொத்தமாக அனுப்பி வைக்கப்படுவதால், எனக்கு அனுப்பி வைக்கும் ஒரே ஒரு இதழிலிருந்து மட்டும் DVD யை நீக்கிவிடுவதற்கு வாய்ப்பில்லை என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள். என்ன செய்வது? வாங்கி வைத்திருந்து மறுபடியும் எடைக்குப் போட வேண்டியதுதான். வேறு என்ன செய்ய முடியும்?

Jan 23, 2016

பழைய குறுவட்டு மற்றும் இறுவட்டுக்களை(CD/DVD) என்ன செய்யலாம்?நான் பல்தொழில்நுட்பக் கல்லூரியில்(Polytechnic college) படித்துக்கொண்டிருந்த காலங்களில்(2004-2007) மடிக்கணினி அவ்வளவாக புழக்கத்தில் கிடையாது, மேசைக்கணினியையே அதிசயமாக பார்த்த காலம் அன்று. எங்கள் கல்லூரியின் கணினி ஆய்வகத்தில் இருக்கும் தகவல்கள் எதையாவது பிரதியெடுக்க வேண்டுமென்றால் Floppy-யைப் பயன்படுத்திதான் எடுப்போம். பென்டிரைவ் கூட அப்போது புழக்கத்தில் கிடையாது. அறந்தாங்கி பேருந்து நிலையத்தின் அருகில் வெளிநாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் வரிசையாக இருக்கும். அந்த கடைகளில்தான் Floppy வாங்குவோம். அன்றைக்கு Floppy வைத்திருந்ததையே பெருமையாக நினைத்துக்கொண்டோம். அதில் 1.44MB அளவுக்குத் தான்  தகவல்களை சேமிக்கலாம். அதற்கு மேல் சேமிக்க வேண்டுமானால் CD/DVD தான் ஒரே வழி. அதிகமாக புழக்கத்தில் இருந்ததும் இவைகள்தான்.

அன்றைய காலக்கட்டத்தில் எல்லா கணினிகளிலும் CD/DVD டிரைவ் இருக்காது. அப்படியே இருந்தாலும் அதைப் பயன்படுத்தி வட்டுக்களில் தகவல்களை எழுத முடியாது. CD-R, CD-RW, DVD-R, DVD-RW(R-Read, W-Write) என தனித்தனியே டிரைவ்கள் இருந்த காலம். கணினி வைத்திருப்பவர்களிடையே CD/DVD கள் அப்போது அதிகமாக பகிர்ந்து கொள்ளப்பட்டது. கல்லூரிகளில் இருக்கும் ஆய்வகங்களில் பெரும்பாலும் எந்த கணினியிலும் CD/DVD டிரைவ் இருக்காது. ஒரே ஒரு டிரைவை IDE ரிப்பன் கேபிள் மூலமாக தேவைப்படும் கணினியில் இணைத்து பயன்படுத்துவோம். Jumper settings, master, slave, primary, secondary, BIOS settings என்று ஆயிரெத்தெட்டு அமைப்புகளை அதற்குச் செய்ய வேண்டும். இன்றைக்கு இருக்கும் SATA தொழில்நுட்பத்தில் இந்தப் பேச்சுக்கே இடமில்லை. இணைத்தவுடன் வேலை செய்கிறது. இயங்குதளங்கள், மென்பொருள்கள், கோப்புகள் என அனைத்தும் CD/DVD களிலேயே சேமிக்கப்பட்டு வந்தது அப்போது.

எங்கள் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் CD/DVD-க்களை பாதுகாத்து வைப்பதற்கென்றே ஒரு கண்ணாடி பொட்டியும், சாவியும் உண்டு. எங்கள் துறைத்தலைவர் இரவிக்குமார் சார்தான் அதன் சாவியை வைத்திருப்பார். அறந்தாங்கி பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒரு அரசாங்க கல்லூரி என்பதால் விண்டோஸ் 98, விண்டோஸ் XP, Redhat Linux, RHEL என அனைத்து இயங்குதளங்களும் ஒரிஜினலாகவே CD/DVD யாகவே இருக்கும். அதைப்பார்க்கவே ஒரே ஆர்வமாக இருக்கும்.

தமிழ் கம்யூட்டர், DIGIT, கம்பயூட்டர் உலகம், CHIP, PC QUEST, Linux For You(Open Source For You now), Electronics For You என கணினி சார்ந்து வெளிவந்த அனைத்து மாத இதழ்களுமே இணைப்பாக CD/DVD கொடுத்து வந்தனர். இதில் ஒரு சில இதழகளுடன் இன்னும் CD/DVD-க்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் DIGIT இதழ்தான் அப்போதே இரண்டு DVD-க்களை இணைப்பாக கொடுத்து வந்தனர். அதில் நிறைய மென்பொருள்கள், ஹாலிவுட் படத்தின் டிரைலர், Games, லினக்ஸ் இயங்குதளங்கள் என எக்கச்சக்கமாக இருக்கும். இந்த இதழ்களோடு வரும் CD/DVD-க்கள் நூலகத்திலிருந்து எங்கள் துறைத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

நான் படிக்கும் காலத்தில் எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர் சந்திரசேகர், அண்ணன் மணக்காடு சுரேஷ், பேராவூரணி செங்கொல்லை தமிழரசன் போன்றோர்களிடம் அனைத்து மென்பொருள்கள் மற்றும் இயங்குதளங்களும் கிடைக்கும். இவர்கள்தான் தேடித்தேடி CD/DVD-க்களை சேமித்து வைத்திருந்தனர். இவர்களைப் பார்த்து எனக்கும் CD/DVD-க்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் தொற்றிக்கொண்டது நானும் CD/DVD-க்களை சேமிக்கத் தொடங்கினேன்.

தமிழ் கம்யூட்டர், DIGIT, கம்பயூட்டர் உலகம், Linux For You(Open Source For You now) என இதழ்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அதனுடன் வந்த CD/DVD களை பத்திரமாக சேமித்து வைத்திருந்தேன். இதுவரை நான் சேகரித்து வைத்திருந்த CD/DVD-க்களின் எண்ணிக்கை 500 ஐத் தாண்டும். இடையிடையே நிறைய வட்டுகளை தூக்கி வீசிவிட்டேன். நான் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போது பேராவூரணி மற்றும் அறந்தாங்கியில் உள்ள CSC கணினி பயிற்சி மையங்களில் நடத்தப்படும் சில கோர்ஸ்களைப் படித்தேன். Visual Basic, Oracle, MS-OFFICE, Hardware and Networking இப்படி சில கோர்ஸ்களைப் படித்தேன்.

இதை எதுக்குச் சொல்லவருகிறேன் என்றால் அங்கு படிக்கும் போது CD/DVD-க்கள் வைத்திருக்கும் பைகளை மட்டும் மாணவர்களிடம் காட்டவே மாட்டார்கள். காரணம் அனைத்து மென்பொருள்கள், இயங்குதளங்களும் அதில்தான் இருக்கும் யாராவது திருடிச்சென்றுவிட்டால் அப்புறம் அவற்றை தேடிச் சேகரிப்பது என்பது கடினமான ஒன்றாக ஆகி விடும். இதுபோல கணினி உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக, உயிர்நாடியாக, ஆதிக்கம் செலுத்தி, ஆண்ட பெருமை CD/DVD-க்களுக்கு உண்டு. ஆனால் இவைகளின் இன்றைய நிலைமை என்ன?

கட்டைவிரலில் பாதி அளவு இருக்கும் மெமரி கார்டில் 128GB அளவு வரை சேமிக்க முடிகிறது. பென்டிரைவ்வும் அதே போலாதன். External Hard Disk 1TB அளவுக்கு வந்துவிட்டது. என்னிடம் மட்டும் இரண்டு External Hard Disk இருக்கிறது. ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினிக்கு தகவல்களை எடுத்துச் செல்வது என்பது இன்றைக்கு மிக மிக எளிமையான ஒன்றாக ஆகிவிட்டது. இன்றைக்கு ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு  16GB பென்டிரைவ் உள்ளது. கணினியில் பயன்படுத்தாவிட்டாலும் பாட்டுக்கேட்பதற்காகவாவது பயன்படுத்தப்படுகிறது.

வெளிநாட்டிற்குச் சென்று ஊர் திரும்புபவர்கள் சாக்லெட், தலைவலி தைலம், வாசனை திரவியம், பெல்ட் ஆகியவற்றை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக வாங்கி வருவார்கள் அந்த பொருட்களின் வரிசையில் இப்போது பென்டிரைவ்வும் சேர்ந்து விட்டது. எங்கள் ஊரில் உள்ள ஒரு அண்ணன் பத்து பென்டிரைவ்கள் வாங்கி வந்து(ஒவ்வொன்றும் 16GB அளவுகொண்டது), கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் இருக்கும் உறவினர்கள் வீடாக பார்த்து அவைகளைக் கொடுத்தார். அப்படி வாங்கியதுதான் நான் வைத்திருக்கும் 16GB பென்டிரைவ்.

தமிழக அரசின் மடிக்கணினி திட்டத்தால் இன்றைக்கு கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மடிக்கணினி உள்ளது. எங்கள் வீட்டில் மட்டும் நான்கு மடிக்கணினி உள்ளது. என்னிடம் இரண்டு, என் தங்கையிடம் ஒன்று, என தம்பியிடம் ஒன்று. இதுபோல எங்கள் கிராமத்தில் வீட்டிற்கு இரண்டு மடிக்கணினிகள் உள்ள வீடுகள் ஏராளம். ஏனென்றால் கிராம்பபுறங்களில் படிக்கும் மாணவர்கள்தானே பெரும்பாலும் அரசு பள்ளியில் படிக்கின்றனர். உலகத்திலேயே எந்த நாட்டினுடைய மாநில அரசாங்கமும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி கொடுப்பது கிடையாது. தமிழக அரசு அதை செய்துள்ளது. இதைப் பற்றி நான் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். தகவலை சேமிக்க வேண்டுமானால் பக்கத்து வீட்டு மடிக்கணினியில் கூட நீங்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம். தகவல்களை சேமித்து வைப்பதற்கான இடம் என்பது இன்றைக்கு ஒரு பிரச்சனையே இல்லை.

கணினி பயன்படுத்த தெரியாதவர்கள், தொலைக்காட்சியில் மட்டுமே திரைப்படத்தை பார்க்க விரும்புபவர்கள் வேண்டுமானால் CD/DVD யைப் பயன்படுத்தி பார்க்கலாம். ஊரில் மைக்செட் ஓட்டுபவர்களே பாடல்களை பென்டிரைவில் கொண்டுவந்துதான் ஒலிக்க விடுகின்றனர். நாடைவை கக்கிவிடுமோ என்பதற்காகவே மைக்செட் அருகிலேயே உட்கார்ந்து மைக்செட்டை இயக்கிய காலம் ஒன்று இருந்தது. நான் பார்த்திருக்கிறேன். பின்பு அது CD/DVD யாக மாறி இப்போது பென்டிரைவ், நினைவக அட்டை(memory card) என்றளவில் வந்து விட்டது. பாட்டை போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று மற்ற வேலைகளைப் பார்த்து விட்டு, மைக்செட்டை நிறுத்த மட்டும்தான் மைக்செட்காரர் வருகிறார். மைக்செட் ஓட்டுபவர்களிடமும் CD/DVD தனது செல்வாக்கை இழந்து வருகிறது. வருங்காலத்தில் இணைத்தின் மூலமாக அவற்றையும் செய்துவிட முடியம் என்ற நிலை வரலாம்.


இப்படி அசுரவேகத்தில் சென்றுகொண்டிருக்கும் தொழில்நுட்ப வளரச்சியில் CD/DVD க்கள் தன்னுடைய இருப்பை முற்றிலுமாக இழந்துவிட்டன. இன்னும் கொஞ்சகாலத்தில் Floppy யைப் போல முற்றிலுமாக புழக்கத்தில் இருந்து அகற்றப்படலாம். Android TV வரைக்கும் வந்தாச்சு, வீடியோ எந்த format இல் இருந்தாலும் இனிமேல் ஓடும் என்ற நிலைமை வந்துவிட்டது. வருங்காலம் CD/DVD க்கு மரணகாலம்தான். 

சரி தலைப்புக்கு வர்றேன். யோவ் நீ இப்பதான் தலைப்புக்கே வர்றீயாயானு நீங்க கேட்கிறது எனக்கும் கேட்குது. கோபம் வேண்டாம். பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குச் சென்றிருந்தேன். விடுமுறையெல்லாம் முடிந்து சென்னைக்கு புறப்படும் அன்றைக்கு காலையில் வீட்டின் அலமாரியை சுத்தம் செய்யலாம் என நினைத்து வேலையில் இறங்கினேன். அதில்  முக்கால்வாசி இடங்களை ஆக்கிரமித்து இருந்தது இந்த குறு(CD) மற்றும் இறுவட்டுக்கள்(DVD) தான். இவைகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என திட்டமிட்டேன்.என்னிடம் இருந்த CD/DVD க்கள் மொத்தம் 314. இவைகளனைத்துமே இயங்குதளங்கள், மென்பொருள்கள் என முழுக்க முழுக்க கணினி சம்பந்தமானது. அந்த கால W-98 லிருந்து அண்மையில் வெளிவந்த உபுண்டு 15.10 வரை அதில் அடக்கம். 314 CD/DVD க்களில் ஒன்று கூட எனக்கு பயன்படும் என்று தோன்றவில்லை. ஆசை ஆசையாக சேர்த்து வைத்ததெல்லாம் வீணாகிவிட்டதே என்பதை நினைத்த போது மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. 

திரைப்படம், பாடல்கள் உள்ள CD/DVD க்கள் தனியாக ஒரு பையில் இருக்கிறது. அது என் தம்பி நிர்வாகம் என்பதால், அதில் நான் கைவைக்கவில்லை. அவனும் இப்போது பென்டிரைவில்தான் திரைப்படம், பாடல்கள் எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறான். இப்போதுதான் மடிக்கணினி வாங்கினான் அதனால் இனிமேல் அவனும் CD/DVD-யைப் பயன்படுத்த வாய்ப்பில்லை.

நான் இந்த CD/DVD-க்களையெல்லாம் அள்ளி பையில் போட்டுக்கொண்டிருக்கும் போது என் அம்மா வந்தார். ஏன்டா தம்பி இதெயெல்லாம் பையில அள்ளிக்கிட்டு இருக்கே? னு கேட்டாங்க. இந்த CD/DVD யெல்லாம் இனிமே பயன்படாதும்மா அதான் எல்லாத்தையும் கொண்டுபோய் குப்பையில் போட்டுட்டு வந்தர்லாம்னு இருக்கேனு சொன்னப்ப, எங்க அம்மா ரொம்பவே வருத்தப்பட்டாங்க. ஏன்டா தம்பி இதையெல்லாம் எவ்வளவு காசு கொடுத்து வாங்கியிருப்பே, இப்ப கொண்டே போயி குப்பையில் கொட்ட போறியேடானு சொன்னாங்க. இன்னும் சொல்லப்போனால் அதில் ஒரு CD/DVD யைக் கூட நான் என்னுடைய சொந்தகாசில் வாங்கவில்லை. எல்லாமே என் பெற்றோர் கொடுத்த பணம்தான். அதை நினைத்த போது எனக்கும் கொஞ்சம் மனசு வலித்தது.

ஒரு empty CD/DVD யின் விலை 20 ரூபாய் என வைத்துக்கொண்டாலும் 314 x 20 = 6280 ரூபாய். 6280 ரூபாயை குப்பையில் வீச நான் தயாராகிக்கொண்டிருந்தேன் என்றே சொல்ல வேண்டும். அனைத்தையும் ஒரு பையில் அள்ளிக்கட்டிக்கொண்டு, கூட கொஞ்சம் பழைய புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு புத்தகங்களை பழைய புத்தகக் கடையில் எடைக்கு போட்டுவிட்டு, இந்த 314 CD/DVD க்களையும் பேராவூரணி பேரூராட்சியின் குப்பைக் கிடங்கில் வீசிவிட்டு வர வேண்டும் என்ற திட்டத்தோடு பேராவூரணிக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

பேராவூரணி அண்ணா சிலை இருக்கும் இடத்தில் பழைய புத்தகங்கள் மற்றும் இரும்புகள் வாங்கும் கடையில் புத்தகங்களை எடைக்குப் போட்டேன். 12-கிலோ இருந்தது ரூ.80 கொடுத்தார். கிலோ எவ்வளவு அண்ணே? என்று கேட்டேன். 7 ரூபாய் தம்பி என்று கடைக்காரர் சொன்னார். அப்போது கடைக்காரரிடம் அன்ணே பழைய CD/DVD லாம் இருக்கு எடுத்துக்குவீங்களானு கேட்டேன். ம், எடுத்துக்குவோம்பா ஆனால் இரும்பு ரேட்டுக்குத்தான் எடுத்துக்குவோம் எனச் சொன்னார். அவர் பழைய CD/DVD player கொண்டு வந்திருக்கிறேன் என நினைத்துக்கொண்டு அப்படிச் சொல்லியிருக்கிறார். என்ன இரும்பு ரேட்டுக்குனுச் சொல்றாரேனு நினைத்துக்கொண்டு, CD/DVD வைத்திருந்த பையைக் காண்பித்தேன். கேசட்டுகளாப்பா?

எடுத்துக்குவோம் எடையவையுங்கனுச் சொன்னார். எனக்கு மகிழச்சித் தாங்கவில்லை ஏன் என்றால், வீணாக குப்பைக்குச் செல்ல வேண்டிய பொருளுக்கு பணம் கிடைத்தால் மகிழச்சி தாங்காமல் இருக்குமா என்ன?

314 CD/DVD களும் 5.5 கிலோ இருந்தது. தம்பி கிலோ 10ரூபாய், 50 ரூபாய்க்கு இருக்குப்பா எனச்சொன்னார். 80 + 50 = 130 ரூபாயை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு வந்தேன். அம்மா மாட்டுக்கு கோதுமைத் தவிடு வாங்கிவரச்சொன்னார். CD/DVD யை வித்த காசில் 10கிலோ கோதுமைத் தவிட்டை வாங்கிக்கொண்டு பேராவூரணியிலிருந்து எனது கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றேன்.

இது போல தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் எத்தனை டன் CD/DVD-க்கள் தேவையில்லாமல் குப்பையாக கிடக்கின்றனவோ? யோசித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இவைகளெல்லாம் எப்படியும் குப்பைக்கு வந்துதான் ஆக வேண்டும் அதில் எந்த மாற்றமும் இல்லை.

CD/DVD பயன்பாடு மற்றும் மின்னணு கழிவுகளை குறைக்க என்ன செய்யலாம்?

1. வீட்டில் கணினி(மேசைக்கணினி/மடிக்கணினி) இருந்தால் அதில் திரைப்படங்கள் மற்றும் பாடல்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதன் மூலமாக பெரும்பான்மையான CD/DVD-க்களை ஒழித்துக்கட்ட முடியும்.

2. எனக்குத் தெரிந்து Windows-98, Windows-XP ஆகிய இரண்டு இயங்குதளங்களைத் தவிர்த்து லினக்ஸ் இயங்குதளங்கள் உட்பட அனைத்து இயங்குதளங்களையுமே பென்டிரைவ் மூலமாகவே நிறுவிவிட முடியும் என நினைக்கிறேன். Windows-98, Windows-XP இயங்குதளங்கள் பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை. ஒரு சில இடங்களில் Windows-XP விரும்பி பயன்படுத்தப்படுகிறது. CD/DVD Drive இருந்தால்தான் இயங்குதளங்களை நிறுவ முடியும் என்ற கட்டாயம் இப்போது இல்லை. ஆகையால் இயங்குதளங்களை ISO கோப்பு வடிவில் மாற்றி கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு இயங்குதளத்தையும் தனித்தனியாக ஒரு CD/DVD யில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

3. மதர்போர்டு, Branded மேசைக்கணினிகள், மடிக்கணினிகள் வாங்கும் போது Driver CD களைத் தருகிறார்கள். அவைகள் எந்தளவுக்கு, எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது? என்பது கேள்விக்குறியே. இப்போது வரும் இயங்குதளங்கள் Driver-கள் நிறுவும் வேலைகளை வெகுவாக குறைத்து விட்டன என்றேச் சொல்லலாம். Windows-7 இயங்குதளம் பெரும்பாலும் sound card drivers, network card drivers களை தானாகவே நிறுவிக்கொள்கிறது. அதுபோக மீதமுள்ள device களுக்கான drivers களை வேண்டுமானால் அவர்கள் கொடுக்கும் CD/DVD யிலிருந்து நிறுவிக்கொள்ளலாம். அந்த CD/DVD ஒருமுறை பிரதியெடுத்து கணினியில் வைத்து விட்டால் போதும் அதன்பிறகு அது பயன்படுத்தப்போவதில்லை. அப்படியே Drivers கிடைக்கவிட்டாலும் அனைத்து Device driver களும் இப்போது இணையத்திலேயே கிடைக்கின்றது. அங்கிருந்து தரவிறக்கம் செய்து,  கணினியில் சேமித்து வைத்துக்கொண்டு நிறுவிக்கொள்ளலாம்.

4. பயன்பாட்டு மென்பொருள்களை பென்டிரைவ் மூலமாக எளிமையாக பகிர்ந்துகொண்டு, நிறுவி விடலாம். திரைப்படம், பாடல்கள் என அனைத்தையும் இணையத்தில் இருந்துதான் தரவிறக்கம் செய்கின்றனர். அதனால் அவைகளை எளிமையாக பென்டிரைவ் மூலமாக பகிர்ந்து கொள்ள முடியும். திரைப்படம், பாடல்கள் போன்றவற்றை கணினி மற்றும் திறன்பேசி மூலமாகத்தான் 99% பேர் பார்க்கின்றனர். திரைப்படம், பாடல்கள் கேட்பதற்கான CD/DVD பயன்பாடு இதன்மூலம் பெருமளவு குறைந்திருக்கிறது.

5. பழைய மேசைக்கணினி/மடிக்கணினி, செயல்படாத மடிக்கணினி ஆகியவைகளை என்றைக்காவது பயன்படுமே என நினைத்து வீட்டிலேயே வைத்திருக்க வேண்டாம். Hard Disk, RAM போன்று தேவைப்படும் வன்பொருள்களைக் கழட்டிக்கொண்டு அவற்றை விற்று விடலாம். அதுபோலவே செல்போன் பேட்டரிகள், சார்ஜர்கள் ஆகியவைகளை குப்பையாக வீட்டிலேயே வைத்திருக்காமல் அருகில் இருக்கும் பழைய இரும்பு கடைகளில் யோசிக்காமல் போட்டுவிடுங்கள். எதிர்காலத்துக்கு பயன்படுமே என நினைத்ததன் விளைவுதான் ஒரு பக்கம் வறுமையும், ஒரு பக்கம் செல்வமும் குவிந்துள்ளது.

6. பழைய மாடல் செல்போன் வைத்திருந்தால் அதிலுள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள் மற்றும் இதர தகவல்களை புதிய செல்போனில் பதிவு செய்து கொண்டு, பழைய செல்போனில் இருக்கும் தகவல்களை அழித்து விட்டு, ஊரில் செல்போன் இல்லாமல் இருப்பவர்களிடம் குறைந்த விலைக்கு கொடுக்கலாம் அல்லது இலவசமாகவே கொடுக்கலாம். எங்கள் கிராமத்தில் நிறைய பேர் இன்னும் செல்போன் இல்லாமல் இருக்கின்றனர்.

7. வானொலி, தொலைக்காட்சி, கணினி, செல்போன், திறன்பேசி(smart phone), குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், சார்ஜர்கள், card reader, மாவு அரைக்கும் இயந்திரம், மிக்சி, மின் விசிறி, Emergency Light, சுவர் கடிகாரம், கைக்கடிகாரம், துணி தேய்க்கும் பெட்டி மற்றும் இதில் ஏதாவது விடுபட்டு இருந்தால் அதையும் சேர்த்து கொள்ளுங்கள். இவகளையெல்லாம் சரி செய்து பயன்படுத்த முடியுமென்றால் பயன்படுத்துங்கள் இல்லையென்றால் யோசிக்கவே வேண்டாம் பழைய இரும்புக்கடையில் தூக்கி போட்டுவிட்டு புதிதாக ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள். அதவிட்டுட்டு இது எங்க அம்மா வீட்டிலேயிருந்து கொடுத்தது, ஆசைஆசையா வாங்குனது, இத்தனை ஆயிரம் கொடுத்து வாங்குனதுனு சொல்லிக்கிட்டு வீட்டிற்குள் குப்பைகளை சேர்த்துக்கொண்டு இருக்காதீர்கள்.

8. பழைய இரும்பு கடைகளில் இவைகளை போடுவதினால் என்னவொரு நன்மையென்றால் அவர்கள் நாம் கொடுக்கும் மின்னணு கருவிகளை சரியாக பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பி விடுவார்கள்.

உங்களிடம் ஏதாவது ஐடியா இருந்தால் பின்னூட்டம், மின்னஞ்சல் மூலமாக எனக்குச் சொல்லுங்க இந்த கட்டுரையில் அதையும் சேர்த்து விடலாம். நம்மோட அடுத்த திட்டம்? அடுத்த முறை விடுமுறைக்குச் செல்லும் போது வீட்டில் உள்ள மின்னணு கழிவுகளை முழுமையாக அகற்றுவதுதான். சபதம் எடுப்போம்.

Jan 20, 2016

இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா?

இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா? கட்டுரையைப் படிக்க இங்கு செல்லவும்

ஐடி துறையைத் தேர்வு செய்யலாமா?

கட்டுரையைப் படிக்க இங்கு செல்லவும்.

Jan 13, 2016

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இணையதளத்தில் பிழை


பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குச் செல்வதற்காக பேருந்து முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. இருக்கைகள் ஏதேனும் காலியாக இருக்கின்றதா என்று பார்ப்போம்? என்பதற்காக  http://tnstc.in/ தளத்தில் பயனர் பெயரையும்(login name), கடவுச்சொல்லையும்(password) உள்ளிட்டேன். பயனர் பெயர் அல்லது கடவுச்சொல் தவறாக இருக்கலாம் எனச்சொல்லிவிட்டது. ஏதாவது விழாக்காலங்களில்தான் முன்பதிவு செய்து ஊருக்குச் செல்வேன். மற்ற நாட்களில் கோயம்பேடு சென்றால் நேராக பேராவூரணிக்கு செல்லும் பேருந்து இருக்கும் அதிலேயே சென்றுவிடுவேன். இதை எதுக்குச் சொல்ல வருகிறேன் என்றால் எப்போதாவது விழாக்காலங்களில்தான் நாம http://tnstc.in/ இணையதளத்துக்குச் செல்கிறோம். நீண்ட நாட்களுக்கு ஒருமுறைதான் பயன்படுத்துவதால் என்ன கடவுச்சொல் கொடுத்தோம் என்று நமக்கு ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது அதான் பிரச்சனை. அப்புறம் வேற வழி இல்லேயே. எப்போதும் போல Forgot Password தேர்வினை பயன்படுத்தி கடவுச்சொல்லை reset செய்தேன். புதிய கடவுச்சொல் எனக்கு மின்னஞ்சலில் வந்து சேர்ந்தது மகிழ்ச்சியடைந்தேன். புதியக் கடவுச்சொல்லைப் பயனபடுத்தி உள்நுழைந்தேன். கடவுச்சொல்லை அடிக்கடி மறந்து விடுகிறோம், இனிமேலாவது நன்கு நினைவில் இருப்பது போன்ற ஒரு கடவுச்சொல்லை அமைத்து விடுவோம் என நினைத்து change password தேர்வினைச் சொடுக்கி. பழைய மற்றும் புதிய கடவுச்சொல் ஆகியவைகளை உள்ளிட்டேன்.


இங்கேதான் பிரச்சனையும், பிழையும் ஆரம்பமானது. Current Password, New Password, Confirm New Password இவைகளை உள்ளீடு செய்து Change Password கொடுத்தால், "New Password and Confirm-New Password are not matching" என்ற பிழைச்செய்திதான் கிடைத்தது.காரணம் என்னவென்றால், New Password மற்றும் Confirm New Password இல் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும் போது, New Password க்கான textbox இல் 25 character வரை உள்ளீடு செய்ய முடிகிறது. ஆனால் Confirm New Password க்கான textbox இல் 12 character வரை மட்டுமே  உள்ளீடு செய்ய முடிகிறது. நான் கொடுத்த கடவுச்சொல் 13 எழுத்துக்களை கொண்டிருந்ததால் Confirm New Password Textbox 12 எழுத்துக்களை மட்டுமே எடுத்துக்கொண்டது. New Password Textbox இல் 13 எழுத்தக்களையும்(இதில்தான் 25 எழுத்துக்கள் வரை கொடுக்க முடியுமே அதனால் பிரச்சனையில்லை), Confirm New Password Textbox இல் 12 எழுத்துக்களையும் மட்டுமே எடுத்துக்கொண்டது. இரண்டு Textbox களுக்கிடையில் ஒரு எழுத்து வித்தியாசப்பட்டதால் "New Password and Confirm-New Password are not matching" என்ற பிழைச்செய்தி கிடைத்துக்கொண்டிருந்தது.

இதை சரிசெய்வது எப்படி?


எனது நண்பர் பிரபாகரனிடம் இதைப் பற்றி சொன்னபோது அவர், Mozilla Firefox உலாவியில் F12 பொத்தானை அழுத்தி Inspect Element தேர்வின் மூலமாக சரிசெய்யலாம் எனக்கூறினார். நான் உடனே Change Password பக்கத்திற்குச் சென்ற பிறகு Inspect Element கொடுத்து Confirm New Password Textbox களை கண்டுபிடித்து அதனுடைய maxlength property யில் 25 எனக்கொடுத்து Enter key யை அழுத்தினேன் இப்போது Confirm New Password Textbox 25 எழுத்துக்கள் வரை அனுமதித்தது. அதன்பின் என்னுடைய 13 எழுத்துக்களைக் கொண்ட புதிய கடவுச்சொலைக் கொடுத்து, கடவுச்சொல்லை மாற்றினேன். இந்த பிழை குறித்து commercial@tnstc.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பாரக்கவேண்டும்.

பிழையை சரிசெய்ய உதவிய நண்பர் ச.பிரபாகரனுக்கு நன்றி.

Jan 12, 2016

உபுண்டுவில் initramfs பிழையை சரிசெய்வது எப்படி?

அலுவலகத்தில் திடீரென்று மின் இணைப்பு தடைப்பட்டு உடனே மின்சாரம் வந்தது. ஆனால் கணினியை தொடங்கியபோது உபுண்டுவிற்குள் செல்லவில்லை. GRUB எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வந்தது. அதில் உபுண்டுவைத் தேர்வு செய்து இயக்கியபோது initramfs என்பதுடன் வந்து நின்றுகொண்டது. கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.


பிரச்சனைக்கான காரணம் என்னவென்றால் மின்சாரம் திடீரென்று நின்றதால் உபுண்டு இயங்குதளத்தின் root partition corrupt ஆகியிருக்கிறது. fsck கட்டளையைப் பயன்படுத்தி இந்த பிழையை சரிசெய்தேன். fsck கட்டளையானது corrupt ஆன block க்குகளை சரிசெய்து மீட்டுத்தந்தது.


கணினியில் இருந்த உபுண்டுவிற்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால், வெளியிலிருந்து ஏதாவது ஒரு இயங்குதளத்தின் மூலமாகத்தான் அதை அணுக முடியும். அதனால், உபுண்டுவை பென்டிரைவில் live bootable ஆக மாற்றிக்கொண்டேன். பென்டிரைவைக் கொண்டு கணினியை தொடக்கம் செய்து, Gpartition Editor மூலமாக hard disk இல் இருந்த உபுண்டுவின் corrupt ஆன root partition இன் device number ஐக் கண்டுபிடித்தேன். அதன்பிறகு fsck கட்டளையை இயக்கி பிழையை சரிசெய்து உபுண்டுவை மீட்டெடுத்தேன்.


புகைப்படம் மற்றும் பென்டிரைவ் உதவி தோழியர் புஷ்பா கந்தசாமி அவர்கள். தோழியருக்கு நன்றி.

Jan 7, 2016

எந்த வேலைக்குப் போனாலும் தட்டச்சுப் பயிற்சி அவசியம்


கணினிகளின் பயன்பாடு மிக அதிகமாக, எல்லா பகுதிகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிட்டது. ஆனால் கணினியில் வேலை பார்ப்பவர்களுள் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தட்டச்சுப் பயிற்சி என்பது அடிப்படை அளவில்கூட இல்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

முன்பெல்லாம் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் 10வது முடித்துவிட்டாலே தட்டச்சு பயிற்சிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். ஆனால் இன்று கணினி என்பது அடிப்படை என்பதை அறிந்த பிறகும் தட்டச்சுப் பயிற்சியைக் கொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் தெரியவில்லை.

ஆண்டுதோறும் எட்டரை இலட்சத்திற்கும் அதிகமானோர் +2 தேர்வு எழுதினாலும், அவர்களில் 10 சதவீதம் பேர்கள் கூட ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படும் இந்தத் தொழில்நுட்பத் தேர்வுகளில் கலந்து கொள்ளுவதில்லை என்பது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

கோவையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் வணிகவியல் முதலாமாண்டு சேர்ந்துள்ள 1200-க்கும் அதிகமான மாணவ,மாணவியரில் வெறும் 7 பேர் மட்டுமே தட்டச்சுப் பயிற்சியில் குறைந்தபட்சமாக ஆங்கிலத்தில் கீழ்நிலையையாவது முடித்துள்ளனர் என்பது கவலைக்குரிய ஒன்றாகும். அந்தக் கல்லூரியில் 3 ஆண்டுகளுக்குள் தட்டச்சு தேர்ச்சி பெறுவோர் மட்டுமே பட்டம்பெற தகுதி பெற்றவர் ஆவர் என்று அறிவித்துவிட்டனர். அதனால் தற்போது மாணவ, மாணவியர் தட்டச்சுப் பயிற்சிக்கு சேர்ந்து வருகின்றனர்.

9ஆம் வகுப்பு படிக்கும்போதே மாணவ, மாணவியர் ஆங்கில தட்டச்சு கீழ் நிலையில் பயிற்சி எடுக்கலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்குச் செல்லலாம். இதனால் 9ஆம் வகுப்பு முடிக்கும்போதே ஆங்கில தட்டச்சில் கீழ் நிலை மற்றும் மேல் நிலை பயிற்சியை முடித்துவிடலாம். பத்தாம் வகுப்பில் மதிப்பெண்களை நோக்கியே செல்ல வேண்டியிருப்பதால் அந்த ஆண்டைத் தவிர்த்துவிட்டு, அடுத்த ஆண்டான +2 முதலாம் ஆண்டில் தமிழ் தட்டச்சில் கீழ் நிலை, மேல் நிலைப் பயிற்சியை முடித்து விடலாம். இதனால் +2 முடிக்கும்போது தட்டச்சில் இரு மொழிகளிலும் மேல்நிலைப் பயிற்சியை முடித்துவிடலாம்.

+2 முடித்து அந்தத் தேர்ச்சியுடன் தொழில்நுட்பத் தேர்வு தேர்ச்சியையும் இணைத்து வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து வைக்கலாம். இதனால் கூடுதல் தகுதியுடன் +2 கல்வி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் குரூப் 4 பகுதிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னிலையில் இருக்கலாம். அல்லது + 2விற்குப் பிறகு பட்டப் படிப்பைத் தொடர்ந்து முடித்தாலும் இந்தத் தொழில்நுட்பப் பயிற்சித் தேர்வு என்பது கூடுதல் தகுதியாக அவர்களுடன் என்றென்றும் இணைந்திருக்கும். ஏதேனும் ஒரு நிலையில் கணினியில் அமர்ந்து வேலை செய்யத் துவங்கும்போது இந்தத் தட்டச்சுப்பயிற்சி அப்போது பெரும் உதவியாக இருக்கும்.

தட்டச்சுத் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். எளிமையாக ஒரு கணினியை நிறுவி தரவுகளைப் பதிவு செய்து கொடுக்கும் வேலையைச் செய்து கொடுக்கும் சுயவேலைவாய்ப்பிற்கும் இது அடிப்படையாக அமையும். ஆங்கில தட்டச்சில் தேர்ச்சிப் பெற்றிருந்தாலே போதும், கணினியில் நேரடியாக தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மிக எளிதாகத் தட்டச்சு செய்து பழகும் வழிமுறைகள் தற்போது வந்துவிட்டன. அவற்றையும் பழகினால் கணினி வரைகலையில் பல்வேறு வேலை வாய்ப்புகளும், சுயதொழில் வாய்ப்புகளும் கிடைக்கின்றன.