ஆரம்ப நிலை பயனாளர்களுக்கு மற்ற லினக்ஸ் வழங்கல்களை விட உபுண்டுதான் சரியான இயங்குதளமாக இருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. உபுண்டுவில் நன்கு பயிற்சி பெற்ற பிறகு ஓரளவு லினக்ஸைப் பற்றிய அடிப்படைகளை கற்றுத்தேர்ந்த பின் அவரவரின் பயன்பாட்டிற்கு ஏற்பவும், வேலைச்சூழலுக்கு ஏற்பவும் பொருத்தமான லினக்ஸ் வழங்கலை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். சரிங்க உபுண்டுவை பயன்படுத்துவதென்று முடிவுக்கு வந்தாச்சு, அப்படியென்றால் உபுண்டுவை நிறுவிய பின் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? வாங்க சொல்றேன் அதற்காகத்தானே இந்த கட்டுரையே.
Drivers, Office Suite, Antivirus and Internet Browsers ஆகியவைகளை நிறுவ வேண்டியதில்லை
உபுண்டுவை பொறுத்த வரையிலே Device Drivers, Office Suite(விண்டோஸில் MS Office), Antivirus(லினக்ஸிற்கு இது தேவையில்லை), Browsers போன்றவைகளை நாம் நிறுவ வேண்டியதில்லை. இவைகளெல்லாம் உபுண்டுவை நிறுவும் போதே நிறுவப்பட்டுவிடும். ஆனால் விண்டோஸ் இயங்குதளங்களில் மேற்கண்டவைகளையெல்லாம் தனித்தனியாக நிறுவி நம்முடைய நேரத்தில் பெரும்பகுதியை செலவழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கணினியில் எந்தெந்த மென்பொருள்கள் நிறுவப்பட வேண்டும் என்பதை கணினியைப் பயன்படுத்தப் போகும் பயனாளரினுடைய பயன்பாட்டைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும். ஒரு சில மென்பொருள்கள் அனைத்து வகையான பயனாளர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக Office Suite, Media Players, Browsers, Themes போன்றவைகளைக் கூறலாம். அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தும் வழிமுறைகளையே இங்கு காண்போம்.
சரி உபுண்டுவில் மென்பொருள்களை எந்தெந்த வகைகளில் நிறுவலாம்?
1. கணினியில் இணையம் வசதி இல்லாதவர்கள், இணையம் வசதியுள்ள வேறோரு கணினியிலிருந்து தேவையான மென்பொருள்களை தரவிறக்கம் செய்து, அதைபென்டிரைவ் போன்ற கருவிகளில் சேமித்து எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய கணினியில் நிறுவலாம்.
2. Ubuntu Software Center மூலமாக நிறுவலாம்.
3. முனையம் மூலமாக நேரடியாக இணையத்திலிருந்து கட்டளை வரிக் கொண்டு நிறுவலாம்.
மேற்காணும் மூன்று முறைகளில் எது சிறந்தது?
உபுண்டு நிறுவியிருக்கும் தங்கள் கணினியில் இணைய இணைப்பை ஏற்படுத்தி தங்களுக்கு தேவையான மென்பொருள்களை Ubuntu Software Center அல்லது முனையம் மூலமாக நிறுவுவதுதான் சிறந்தது. ஆகையால் நான் மேலே கூறியவைகளில் கடைசியாக இருக்கும் இரண்டு முறைகள்தான் சிறந்தது.
ஏன் முதலாவதாக கூறியிருக்கும் முறை சிறந்ததில்லை?
உதரணமாக vlc media player ஐ இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொண்டு வந்து உங்களுடைய உபுண்டுவில் நிறுவுவதாக வைத்துக்கொள்வோம். அப்படி நிறுவும் போது vlc media player ஐ நிறுவ சில supporting packages கள் தேவைப்படும் அவைகள் இருந்தால்தான் vlc media player யே நிறுவ முடியும். அந்நிலையில் உங்களுடைய கணினியில் இணைய இணைப்பு இருந்தால் நேரடியாக இணையத்திலிருந்தே நிறுவிக்கொள்ளும். இணைப்பு இல்லாதபட்சத்தில் தேவைப்படும் supporting packages களை மறுபடியும் நீங்கள் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து எடுத்துக்கொண்டு வர வேண்டும். supporting packages களை நிறுவிய பின் vlc media player ஐ நிறுவ வேண்டும். இந்த வழிமுறைகள் அதிகமான நேரத்தை வீணடிப்பதோடு மன உளைச்சலையும் ஏற்படுத்தும். புதிதாக மென்பொருளை நிறுவும் போதெல்லாம் இதையே செய்தால் உங்களுக்கே அலுப்புத்தட்டி விடும். அதே நேரத்தில் உங்களுடைய கணினியில் இணைய இணைப்பு இருந்தால் மிகவும் எளிதாக மென்பொருள்களை நிறுவி விடலாம். இந்த அலைச்சல்கள் வேண்டியதில்லை.
விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் .exe கோப்புகள் உபுண்டுவில் இயங்குமா?
இயங்காது. அவசியம் ஏற்படின் Wine Software இன் உதவியுடன் இயக்கிக்கொள்ளலாம்.
.exe போன்று உபுண்டுவிற்கு என்ன Extension?
உபுண்டு Debian குடும்பத்தைச் சேர்ந்ததென்பதால் .deb வடிவில் மென்பொருள்கள் இருக்கும்.
.deb வடிவ கோப்புகளை உபுண்டுவில் நிறுவுவது எப்படி?
sudo dpkg -i package_name.deb என முனையத்தில் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக Google Chrome உலாவியை இணையத்தில் இருந்து தரவிறக்கும் செய்யும் போது அது .deb வடிவில் இருக்கும். அதை நிறுவ முனையத்தில்
sudo dpkg -i google-chrome-i386.deb என கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்த பதிவை பார்க்கவும்.
--தொடரும்--
No comments:
Post a Comment