Sunday, October 1, 2017

கிண்டில்சின்ன கற்பனை செய்வோம். "புத்தகம் படிப்பதற்காக ஒரு கருவி இருக்கிறது. அந்த கருவி ஒரு சிறிய புத்தகம் அளவில்தான்  இருக்கும். எடை மிகவும் குறைவாக இருக்கும். அந்த கருவியில் நம்முடைய புத்தகங்களையெல்லாம் மின் புத்தக வடிவில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். மேலும் ஏதேனும் ஒரு புத்தகம் வேண்டுமென்றால் இணையம் மூலமாக பணம் செலுத்தி புத்தகக்கடையில் இருந்து  புத்தகம் வாங்கி அந்தக் கருவியில் சேமித்துக்கொள்ளலாம்.

அந்த கருவியின் திரை கண்ணை உறுத்தாமல் தாளில் அச்சிடப்பட்ட எழுத்துக்களை படிப்பது போன்றே இருக்கும். இரவு நேரத்தில் படிப்பதற்காக ஒளியுடன் கூடிய திரை இருக்கும். புத்தங்களை படித்துக்கொண்டிருக்கும் போது ஏதேனும் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லையென்றால் அந்த வார்த்தையை தேர்வு செய்தால் அந்த வார்த்தையை அகராதியில் தேடி அதன் அர்த்தத்தை காண்பிக்கும், விக்கிப்பீடியாவிலிருந்து வேண்டுமென்றால் விக்கிப்பீடியாவிலிருந்து காண்பிக்கும். மொழிபெயர்க்கவேண்டுமென்றால் வேறுமொழியில் மொழிபெயர்த்து காண்ப்பிக்கும்.

நமக்குப் பிடித்தமான வரிகளை குறிப்பெடுத்து சேமித்து வைத்துக்கொள்ள முடியும். அந்தக்குறிப்பில் புத்தகத்தின் பெயர், பக்க எண் போன்ற விவரங்களையும் அந்தக் கருவி சேமித்து வைக்கும். உங்களுக்கு தேவையான அளவிற்கு எழுத்துக்களின் அளவினை கூட்டி குறைத்துக்கொள்ள முடியும். அந்த கருவியில் புத்தங்களை படிப்பதோடு மட்டுமில்லாமல் உங்களுடைய .doc, .docx, .txt, .pdf கோப்புகளையும் படிக்க முடியும். இன்னும் பல வசதிகளும் இருக்கின்றன."

இப்படி ஒரு கருவி நிஜத்தில் இருந்தால் புத்தகங்கள் படிப்பவர்களுக்கு எவ்வளவு வசதியாக இருக்கும். அருமையாக இருக்குமல்லாவா? நிச்சயமாக. மேலே நாம் பார்த்த அந்த கருவி நிஜத்தில் இருக்கிறது. அப்படியா? ஆம். அந்த அற்புதமான கருவிதான் கிண்டில். கிண்டில். கிண்டில்.

கடந்த திங்கள் கிழமை(25.09.2017) அன்று கிண்டில்(Kindle Paperwhite) எனக்கு கிடைத்தது. கிண்டிலைப் பற்றி உங்களுக்கு முழுமையாக தெரிய வேண்டுமென்றால் பா.ராகவன் அவர்களின் கட்டுரையையும், கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி மின் பதிப்பித்தலின் தாக்கம் என்ற தலைப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சியில் பேசிய உரையினையும் கேட்கவும். கிண்டிலைப் பற்றிய அறிமுகத்தை அவர்களைவிட நான் சிறப்பாக தந்து விட முடியாது. கிண்டில் பற்றி Free Tamil Ebooks தளத்தின் கட்டுரை

ஆகையால், கிண்டிலுடனான என்னுடைய அனுபவத்தை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி மின் பதிப்பித்தலின் தாக்கம் என்ற தலைப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சியில் பேசிய காணொளி Free Tamil Ebooks தளத்திலிருந்து கிடைத்து.

பத்ரியின் உரையினை கேட்ட பிறகு கிண்டில் மீதான ஆர்வம் எனக்கு மேலும் அதிகரித்தது. எப்படியாவது கிண்டிலை வாங்கிவிட வேண்டும் என ஆர்வம் அதிகரித்தது.

எனது மதிப்பிற்குரிய கணியம் ஶ்ரீனிவாசன் சார் அவர்களிடம். சார் கிண்டில் வாங்கலாமா? அது பயனுள்ளதாக இருக்குமா? என கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தேன். அதற்கு அவர், "Buying a kindle is a best investment you will be doing in your life." என பதில் அனுப்பியிருந்தார். எனக்கு மேலும் ஆர்வம் அதிகமானது.

ஆர்வம் இருந்தது ஆனால் பணம்தான் கிடைக்கவில்லை.நான்கு வகையான கிண்டில் கிடைக்கிறது. அவைகள்

All-New Kindle - Rs. 5,999
Kindle Paperwhite - Rs. 10,999
Kindle Voyage - Rs. 16,499
Kindle Oasis - Out of stock

All-New Kindle - இது அடிப்படை வசதிகளை மட்டும் கொண்டது. இரவில் படிப்பதற்கான back light வசதி இதில் கிடையாது. Screen resolution 167 ppi. 3G வசதி கிடையாது. WiFi வசதி மட்டும் உண்டு. இதன் விலை 5,999 ரூபாய்.

Kindle Paperwhite - இது All-New Kindle ஐ விட மேம்பட்டது. இரவில் படிப்பதற்கான Back light வசதி இதில் உண்டு. Screen resolution 300 ppi. WiFi, 3G என இரண்டு வகையாக கிடைக்கிறது. இரண்டும் சேர்த்து கிடைக்காது. WiFi அல்லது 3G இவற்றில் ஏதாவது ஒரு வசதியுடன் வாங்கிக்கொள்ளலாம். 300 ppi திரைகொண்டுள்ளதால் எழுத்துக்கள் துல்லியமாக இருக்கும். இதன் விலை 10,999 ரூபாய்

Kindle Voyage - இது All-New Kindle, Kindle Paperwhite இவையிரண்டையும் விட மேம்பட்டது. Pagepress, Adaptive light sensor, WiFi அல்லது WiFi+ Free 3G வசதிகளைக் கொண்டது. இதன் விலை 16, 499 ரூபாய்

சம்பள பணம் வந்தவுடன் எனக்கான அறை வாடகை, அலுவலகம் செல்வதற்கான பேருந்து பயண செலவு, உணவு போன்றவற்றிக்கான பணத்தை எடுத்துக்கொண்டு மீத பணத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவேன். அடிப்படைச் செலவு போக வேறு ஏதாவது செலவிற்கு கூடுதலாக பணம் வேண்டுமென்றால் வீட்டிலிருந்து வாங்கி கொள்வேன். கூடுதலான தொகை என்றால் வீட்டில் முன்கூட்டியே சொல்லிவிடுவேன். வீட்டிற்கென்று மாதம் மாதம் அனுப்பி வைக்கும் பணத்தில் ஒரு ரூபாய்கூட எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிற கொள்கையோடு இருப்பவன். மாத இறுதியில் பணத் தட்டுப்பாடு 500, 1000 ஏற்பட்டால் கூட நண்பர் ஜெகனிடம் வாங்கிக்கொள்வேன். வீட்டில் உள்ளவர்களை சிரமப்படுத்த மாட்டேன்.

நான் Kindle Paperwhite வாங்க திட்டமிட்டிருந்தேன். அதனுடைய திரையின் துல்லியம், இரவு நேரத்தில் படிப்பதற்கான screen back light  வசதி என்னை கவர்ந்தது. Kindle Paperwhite இன் விலை 10, 999 ரூபாய். அந்த தொகையினைப் பற்றி அம்மாவிடம் இந்த மாதம் தெரிவித்து விட்டு அடுத்த மாதச் சம்பளத்தில்  எடுத்து வைத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தேன். அடுத்த முறை கிண்டில் Offer இல் வரும்போது இந்த தொகையினை வைத்து அதை வாங்கி விட வேண்டும் என்பதுதான் திட்டம்.

ஆனால், திடீரென்று கடந்த வாரம் Amazon festival big deal offer இல் amazon prime customer க்கு Kindle Paperwhite 3000 ரூபாய் offer என போட்டிருந்தார்கள். 10,999 ரூபாய் கொண்ட Kindle Paperwhite இன் விலை 8,000 ரூபாய் என போட்டிருந்தார்கள். இந்த Offer முடிவதற்குள் எப்படியாவது கிண்டிலை வாங்கி விட வேண்டும் என நினைத்து என்னுடைய நண்பர்களிடம் பணம் கேட்டேன். மாத இறுதி என்பதால் நண்பர்களிடமிருந்து 8,000 ரூபாய் பணத்தை திரட்ட முடியவில்லை. நண்பர் ரெங்கராஜ்,  "நான் 2,000 ரூபாய் பணம் தருகிறேன் கதிர்  மீதப் பணத்தை திரட்டுங்கள்." என முதலில் பச்சைக்கொடி காட்டினார். நன்றி ரெங்கராஜ். மீதப் பணத்தை திரட்டுவதற்காக இரண்டு மூன்று நண்பர்களிடம் கேட்டுப்பார்த்தேன். யாரிடமிருந்தும் பணம் கிடைக்கவில்லை.

எப்போதுமே என்னிடம் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டால் நான் உரிமையுடன் பணம் கேட்பது பிரபாகரன், தினேஷ், பிரசன்னா, ஜெகன் ஆகியோரிடம்  மட்டும்தான். தினேஷும், பிரபாகரனும் வேறு அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். பிரசன்னா, ஜெகன் இரண்டுபேரும் ஒரே அலுவலகத்தில்.

நண்பர் ஜெகனிடம்  கிண்டில் Offer போட்டிருப்பதையும், அதை வாங்க முடிவு செய்திருப்பதையும், பணம் கிடைக்கவில்லை என்பதைப் பற்றியும் கூறினேன். அவர் மிகவும் கூலாக, சிம்பிள்ளாக கூறினார். "என்னிடம் Credit Card இருக்கு கதிர் மூன்று அல்லது நான்கு EMI போட்டு வாங்கிக்கோ. மாதம் இரண்டாயிரம் ரூபாய்தான் வரும் EMI. மாதம் மாதம் சம்பளம் வந்தவுடன் EMI கட்டிக்கொள்ளலாம்." எனக்கூறினார். எனக்கு மகிழச்சி தாங்கவில்லை. மதிய உணவு சாப்பிட்டு முடித்த உடனே. ஜெகனும், நானும் சேர்ந்தே Kindle Paperwhite -ஐ Order செய்தோம். 3 EMI(No Cost EMI) இல். மாதம் 2,666 ரூபாய். என்னுடைய கிண்டில் கனவை நிறைவேற்றிய ஜெகனுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். நன்றி ஜெகன்.

கிண்டில்(Kindle Paperwhite) அறிமுகம்கிண்டில் கருவியுடன் ஒரு USB cable தருகிறார்கள். மடிக்கணினி/கணினியின் மூலமாக charge செய்து கொள்ளலாம். ஒரு தடவை முழுமயாக charge செய்து விட்டால் ஒரு வாரத்திற்கு battery charge நீடிக்கிறது.

கருப்பு-வெள்ளையில் மட்டும்தான் புத்தகங்களை படிக்க முடியும். வண்ணங்களில் படிக்க முடியாது. 200 கிராம் எடை கொண்டது கிண்டில். மிகவும் இலேசாக இருக்கிறது. தாளில் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. E-Ink தொழில்நுட்பம் கொண்டு கிண்டில் திரையை தயாரித்து இருக்கிறார்கள். நல்ல சூரிய ஒளியின் வெளிச்சத்தில் கூட நீங்கள் படிக்க முடியும். No glare in bright sunlight. ஒரு கையில் கிண்டிலை வைத்துக்கொண்டு புத்தகங்களை படிக்கலாம். கை வலிக்காது. அந்தளவிற்கு எடை குறைவானது. இலேசானது.

Kindle Unlimited வசதி

Amazon நிறுவனம் Kindle Unlimited எனும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு Rs. 199, 6-மாதத்திற்கு Rs. 999, ஒரு வருடத்திற்கு Rs. 1799. இதில் நீங்கள் உறுப்பினராக சேர்ந்து கொண்டால். லட்சக்கணக்கான புத்தங்களை இலவசமாக படிக்கலாம். எந்தெந்த புத்தகங்களெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் வருகிறதோ அவையனைத்தையும் நீங்கள் இலவசமாக படிக்கலாம். ஒரு ரூபாய்கூட கட்டணம் சொலுத்தவேண்டியதில்லை. Amazon -இல் உள்ள அனைத்து புத்தகங்களும் இந்த திட்டத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட புத்தகங்கள் விதிவிலக்கு. நீங்கள் Kindle Unlimited உறுப்பினர் என்றால் கிண்டில் பதிப்பு புத்தகத்தை இன்னும் விலை குறைவாக தருகிறார்கள்.

நம்முடைய கிண்டில் கருவியில் அதிகப்பட்சமாக 10-புத்தகங்களை இந்த திட்டத்தின் மூலமாக வைத்துக்கொள்ளலாம். கூடுதலாக ஒரு புத்தகம் வேண்டுமென்றால்.  ஏற்கனவே இருக்கும் 10 புத்தகங்களிலிருந்து ஏதாவது ஒன்றை Retrun செய்ய வேண்டும். தேவைப்படும் போது அந்த புத்தகத்தை நீங்கள் மறுபடியும் எடுத்துக்கொள்ளாலம். எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் படிக்கலாம். அதிகப்பட்சமாக Kindle Unlimited திட்டத்தின் கீழ் 10 புத்தங்களை கிண்டில் கருவியில் வைத்துக்கொள்ளலாம்.

தமிழில் நிறைய புத்தகங்களை இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கிறது. கிழக்குப் பதிப்பகத்தின் பெரும்பாலான கிண்டில் பதிப்பு புத்தகங்கள் இந்த திட்டத்தின் கீழ் நிறையவே கிடைக்கிறது. மற்ற பதிப்பகங்கள் கிண்டிலில் இன்னும் கவனம் செலுத்தவில்லை என நினைக்கிறேன். விகடனிலிருந்து ஒரு சில புத்தகங்கள் கிண்டிலில் கிடைக்கின்றன. சுஜாதாவின் 'சுஜாதாட்ஸ்', எஸ்.ராமகிருஷ்ணனின் 'மறைக்கப்பட்ட இந்தியா', டாகடர். ஷாலினியின் புத்தகங்கள் என இன்னும் சில புத்தகங்கள்.

கிண்டிலில் ஆங்கில புத்தகங்கள்

கிண்டிலில் ஆங்கில புத்தகங்கள் கடல்போல குவிந்து கிடக்கிறது. இப்போது புதிதாக வெளிவரும் புத்தகங்கள் அனைத்தும் கிண்டிலுக்கும் சேர்த்தே வெளியிடப்படுகிறது. 2000 ரூபாய் மதிப்புள்ள ஆங்கில புத்தகங்கள் Kindle Unlimited சந்தாதாரருக்கு ரூ.0 விலையில் இலவசமாக படிக்க கிடைக்கிறது.

கிண்டிலில் தமிழ் புத்தங்கள்கிண்டிலில் தமிழ் எழுத்துக்கள் அவ்வளவு அழகாக, தெளிவாக, துல்லியமாக தெரிகின்றன. நிறைய தமிழ் புத்தகங்களை கிண்டிலுக்கு ஏற்ப வெளிவரும் பட்சத்தில் தமிழில் குறிப்பிட்ட புத்தகங்கள் Out of  stock என்ற நிலைமையை ஒழித்து விடலாம். கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள்தான் அதிகமாக கிடைக்கின்றன. ஆனந்த விகடனின் ஒரு சில புத்தகங்கள் கிடைக்கின்றன.

கிண்டில் வாங்கலாமா?

நிச்சயமாக வாங்கலாம். நீங்கள் அதிகமாக புத்தகங்கள் வாசிப்பவர் என்றால் உங்களுக்கான கருவிதான் கிண்டில். Amazon தளத்தில் மூன்று விதமாக புத்தகங்கள் கிடைக்கிறது. Paperback, Kindle edition, Kindle Unlimited. உதாரணமாக தமிழில் கிழக்குப் பதிப்பகத்தின் பா.ராகவன் எழுதிய அச்சிடப்பட்ட 'மாயவலை' புத்தகத்தின் விலை ரூ.1000. இந்த புத்தகத்தின் கிண்டில் பதிப்பு ரூ. 500. Kindle Unlimited -இன் கீழ் ரூ.0. இதுபோல ஆங்கில புத்தகங்களின் விலையும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. பாதிக்குப் பாதி உங்களுக்கு பணம் மிச்சம். எத்தனை புத்தகங்கள் வாங்கினாலும் அத்தனை புத்தகங்களையும் ஒரு 169 x 117 x 9.1 mm அளவுள்ள சிறிய கருவியில் வைத்துக்கொள்ள முடியும். வீட்டில் உள்ள இடங்களை அடைத்துக்கொள்ளாது. நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடன் கிண்டில் கருவியில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை எடுத்துச்செல்ல முடியும்.கிண்டிலில் புத்தங்கள் மட்டும்தான் படிக்க முடியுமா?

கிண்டில் என்பது படிப்பதற்கான கருவி. .doc, docx, .txt, .pdf, .jpeg, .jpg, .png கோப்புகளை கிண்டில் ஆதரிக்கிறது. கிண்டிலில் நீ்ங்கள் Audio, Video கோப்புகளை பயன்படுத்த முடியாது. புத்தகங்கள் தவிர நீங்கள் படிக்க வேண்டிய கோப்புகளை(கிண்டில் ஆதரிக்கும் கோப்பு வடிவங்கள் மட்டும்) உங்களுடைய கிண்டில் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால். கிண்டிலை இணையத்துடன் இணைக்கும் போது தானாகவே உங்களுடைய கிண்டில் கருவிக்குள் அந்த கோப்புகள் தரவிறக்கம் ஆகிவிடும். அதன்பிறகு இணையத்தின் உதவியில்லாமல் நீங்கள் அந்த கோப்புகளை படித்துக்கொள்ளலாம்.

கிண்டிலில் இணையம் பயன்படுத்த முடியுமா?

கிண்டில் கருவியில் Experimental Browser என்ற ஒன்று இருக்கிறது. அது இணையம் பயன்படுத்துவதற்கானது அல்ல. விக்கிப்பீடியா போன்ற தளங்களை பார்ப்பதற்கும், கிண்டிலில் புத்தகங்கள் வாங்கும் போது பணம் செலுத்துவதற்குமானது.

கிண்டிலில் புத்தகங்கள் படிக்க இணைய வசதி அவசியமா?

அவசியமில்லை. உங்களுக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தையும் ஒரு முறை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் அதன்பிறகு கிண்டிலில் இணையம் இல்லாமலையே(Offline) புத்தகங்களைப் படிக்கலாம்.

கிண்டில் கருவி தொலைந்துவிட்டாலோ அல்லது பழுதாகிவிட்டாலோ என்ன செய்வது?

கிண்டில் கருவி தொலைந்துவிட்டால் புதிய கிண்டில் கருவி வாங்கி உங்களுடைய புத்தகங்களை மறுபடியும் புதிய கிண்டிலில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கிண்டில் தொலைந்து விட்டால் உங்கள் புத்தகங்களும் அதனுடன் சேர்ந்து தொலைந்துவிட்டது என அர்த்தமாகாது. உங்களுடைய புத்தகங்கள் அனைத்தும் கிண்டில்  Cloud இல் பத்திரமாக இருக்கும். கிண்டில் பழுதாகிவிட்டால் Amazon -க்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அவர்கள் சரி செய்து தருவார்கள்.

கிண்டிலில் வாங்கிய புத்தகங்களை நண்பர்களுக்கு கடன் கொடுக்க முடியுமா?

முடியாது. உங்கள் நண்பர் புத்தகங்கள் படிக்க விரும்பினால் உங்களுடைய கிண்டில் கருவியைத்தான் அவருக்கு கொடுக்க வேண்டும். இரண்டு கிண்டில் கருவிகளுக்கிடையில் புத்தகங்களை பரிமாறிக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இந்த வசதி வரலாம்.

கிண்டிலுக்கான தமிழ் புத்தகங்கள் இலவசமாக கிடைக்கும் தளங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?

ஆம் இருக்கிறது. Free Tamil Ebooks. நீங்களாகவே கிண்டிலுக்கான புத்தகங்களையும் உருவாக்கி கொள்ள முடியும்.