Aug 18, 2019

பெடோரா லினக்ஸ் - Fedora Linux



குனு லினக்ஸ் வழங்கல்களில் இரண்டு வகைகள் உள்ளன. 1. RPM based 2. DEB based
  • Fedora, Redhat, CentOS, openSUSE, SUSE Enterprise Linux ஆகியவைகள் RPM based வழங்கல்கள்
  • Debian, Ubuntu, Linux Mint, KDE neon ஆகியவைகள் DEB based வழங்கல்கள்
நான் லினக்ஸ் பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து RPM அடிப்படையிலான வழங்கல்கள்(Distributions) பக்கம் தலை வைத்துக்கூட படுத்ததில்லை. நான் பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி அறிவியல் பட்டயப் படித்த போது கணினி ஆய்வகத்தில் Redhat ஐ நிறுவி பயன்படுத்தியதோடு சரி.

பாலிடெக்னிக் படித்து முடித்த பிறகு LINUX For You magazine ஐ வாங்கிக்கொண்டிருந்தேன். மாதம் மாதம் LINUX For You magazine உடன் ஒரு GNU/Linux distribution DVD இலவச இணைப்பாக வரும். 2008 ஆம் வருடம் ஏதோ ஒருமாதம் Fedora Linux DVD வந்தது. பேராவூரணி செங்கொல்லை தமிழரசன் அவர்கள், நண்பருடைய கணினியில் பொடோரா லினக்ஸ் நிறுவ வேண்டும் என அழைத்தார். அப்போது அதை நிறுவிப் பார்த்ததோடு சரி அதன்பிறகு இப்போதுதான் பொடோரா லினக்ஸை நிறுவ ஆரம்பித்தேன்.

என்னுடைய மடிக்கணினியிலும், அலுவலகத்திலும் உபுண்டுதான் பயன்படுத்தி வந்தேன். உபுண்டு பயன்படுத்தி பயன்படுத்தி போரடித்துவிட்டது. ஆகையால், உபுண்டு அல்லாத வழங்கல்களின் பக்கமாக எனது கவனத்தைத் திருப்பினேன். உபுண்டுவிலிருந்து, KDE Neon பக்கம்  திரும்பி, அப்படியே ஓப்பன் சுசீ க்குப் போயி, அதன்பிறகு டெபியானுடன் கொஞ்ச காலம் வாழ்ந்து விட்டு. இறுதியாக பெடோராவிற்கு வந்து சேர்ந்தேன்.

நான் ஏன் பெடோரா லினக்ஸைத் தேர்ந்தெடுத்தேன்?

  • முதலில் எனக்கு உபுண்டு பயன்படுத்தி போரடித்துவிட்டது. பாம்பு தோலுரிப்பதைப் போல முழுவதுமாக உபுண்டுவிலிருந்து முற்றிலும் விலகி வேறு ஒரு சரியான வழங்கலைத் தேடினேன். அதற்காக பெடோராவைத் தேர்ந்தெடுத்தேன்.
  • முழுக்க முழுக்க ஓப்பர் சோர்ஸ், சுதந்திர மென்பொருள் அடிப்படையிலானது
  • 6-மாதங்களுக்கு ஒருமுறை புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது
  • GNOME சூழலின் அண்மைய பதிப்புடன் பெடோராவின் புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது
  • நிறுவனங்களில், தொழில்முறைப் பயன்பாட்டிற்கு Redhat Linux அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Redhat Linux பொடோராவை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் Fedora வைப் பயன்படுத்தினால் அது Redhat ஐ பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
பெடோராவின் அண்மைய பதிப்பு Fedora 30. Fedora 30 ஐத்தான் நான் தற்போது மடிக்கணினியில்(DELL Latitude 3490) பயன்படுத்தி வருகிறேன். பயன்படுத்த அற்புதமாக இருக்கிறது.

பெடோராவின் default Desktop Environment GNOME 3. நீங்கள் KDE, XFCE, LXDE, LxQT, MATE, CINNAMON போன்ற Desktop Environment களை பயன்படுத்த விரும்பினால் Fedora Spins தளத்திலிருந்து தரவிறக்கி கொள்ளலாம்.

Fedora Magazine தளத்தில் கட்டுரைகள் வெளியிடுகிறார்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Fedora 30 யில் Python 3 default நிறுவப்பட்டுள்ளது. Python 2 வேண்டுமென்றால் 'sudo dnf install python' கட்டளை வரிக்கொடுத்து நிறுவிக்கொள்ளலாம்.

Fedora வைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.


Jul 7, 2019

Debian 10 Buster - ஒரு பார்வை

டெபியான் 10 இயங்குதளம் நேற்று(ஜூலை-7-2019, சனி மாலை 6.30 மணிக்கு இந்திய நேரப்படி) வெளியிடப்பட்டது. டெபியான் 10 இயங்குதளத்தை என்னுடைய மடிக்கணினியில் முதன்மை இயங்குதளமாக நிறுவ வேண்டும் என திட்டடமிட்டமிட்டு, அதிகாரப்பூர்வமான வெளியீட்டிற்கு முன்பிருந்தே டெபியான் 10 பதிப்பின் சோதனைப் பதிப்பை நிறுவி பயன்படுத்தி வந்தேன்.

டெபியான் இயங்குதளம் சர்வர் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் டெஸ்க்டாப், மடிக்கணினி பயன்பாட்டிற்கும் மிகவும் ஏற்றது.

* தமிழ் எழுத்துருக்கள் அற்புதமாக தெரிகிறது
* தமிழ் தட்டச்சு செய்ய முடிகிறது
* மொசில்லா பயர்பாக்ஸ் மூலமா இணையத்தில் உலவ முடிகிறது
* பாதுகாப்பு குறைபாட்டின் காரணமாக Shutter Screenshot கருவிக்கான ஆதரவை டெபியான் 10 பதிப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அதற்கு இணையான Flameshot எனும் கருவியை நிறுவிக்கொள்ளலாம். அற்புதமாக வேலை செய்கிறது

டெபியான் இயங்குதளம் நிலைத்தன்மை அதிகமுள்ள இயங்குதளம். தாரளமாக நீங்கள் தரவிறக்கி பயன்படுத்தலாம். தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.

Jun 19, 2019

டெபியான் லினக்ஸில்(Debian 9) தமிழ் தட்டச்சு செய்வது எப்படி?

டெபியான் லினக்ஸ் Gnome 3 சூழலி்ல் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கீழ்காணும் கட்டளை வரியை உள்ளிட்டு தமிழ் தட்டச்சுக்குத் தேவையான பொதிகளை நிறுவிக்கொள்ளவும்.

sudo apt-get update; sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n ibus-gtk ibus-gtk3

விண்டோஸ் பொத்தானை அழுத்தி 'language' என்று தேடவும். Region & Language என்பதை திறந்து "+" பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக கிடைக்கும் சாளரத்தில் tamil என தட்டச்சு செய்து Tamil99 என்பதை தேர்வு செய்யவும். நான் தமிழ்99 தட்டச்சு முறையைப் பின்பற்றுவதால் Tamil99 ஐ தேர்வு செய்திருக்கிறேன். உங்களுடைய தட்டச்சு முறை எதுவோ அதை நீங்கள் தேர்வு செய்யவும். தேர்வு செய்த பிறகு "Add" பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான்.

Windows + Space பொத்தான்களை அழுத்தி நீங்கள் தமிழ் தட்டச்சை செய்யலாம்.


May 30, 2019

OpenSUSE Leap 15.1 இயங்குதளத்தில் தமிழ் எழுத்துருக்கள்

நான் தற்போது OpenSUSE Leap 15.1 இயங்குதளத்தை என்னுடைய மடிக்கணினியில் பயன்படுத்தி வருகிறேன். மொசில்லா(Mozilla Firefox) உலாவியில் Youtube தளத்தில் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரியவில்லை.

KDE Neon பயன்படுத்திய போது தமிழ் எழுத்துருக்களுக்கு Noto வகை எழுத்துருக்கள் பயன்படுத்தி இருந்ததை பார்த்திருக்கிறேன். ஆகையால் அந்த எழுத்துருக்களை இணையத்தில் இருந்து தரவிறக்கி /usr/share/fonts/truetype/ எனும் இடத்தில் சேமித்தேன். சேமித்துவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்த போது தமிழ் எழுத்துருக்கள் நன்றாகத் தெரிந்தது.

NotoSans Tamil எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.

NotoSans Tamil எழுத்துருக்களை நிறுவும் முன்

NotoSans Tamil எழுத்துருக்களை நிறுவிய பின்

Apr 21, 2019

UEFI முறையில் உபுண்டு நிறுவுவது எப்படி?

சாதாரண மேசைக்கணினி, மடிக்கணினிகளிலிருந்து, உயர்தர வழங்கிகள்(server) வரை இப்போது வெளிவரும் அனைத்து கணினிகளும் UEFI வசதியுடன்தான் வருகின்றன.

உபுண்டு இயங்குதளம் மட்டுமல்ல, அனைத்து லினக்ஸ் இயங்குதளத்தையுமே நீங்கள் விரும்பிய வகையில் Partition செய்து நிறுவிக் கொள்ளலாம். அதற்கு 'Customized Partition' என்று பெயர். இந்த வசதி உபுண்டுவில் 'Something Else' என்ற தெரிவுடன் இருக்கும்.

இப்போது வெளிவரும் கணினிகளின் BIOS-ஐ பொறுத்தமட்டில்  இரண்டுவிதமான mode கள்  இருக்கிறது. ஒன்று Legacy mode, இன்னொன்று UEFI mode.

Legacy mode -இல் கணினி இயங்க தனியாக எந்த Partition னும் Hard Disk இல் தேவையில்லை. ஆனால் UEFI mode -இல் கணினி இயங்குவதற்கு EFI எனும் Partition தனியாக Hard Disk இல் தேவைப்படுகிறது. அந்த EFI partition FAT32 கோப்பு முறைமையையில் இருக்க வேண்டும். முக்கியமாக Hard Disk இன் Partition Table GPT வடிவில் இருக்க வேண்டும்.

உங்களுடைய கணினியில் முக்கியமான கோப்புகள் இருந்தால் அதை backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கீழே நாம் பார்க்க போகும் வழிமுறைகள் Hard Disk இல் இருக்கும் மொத்த தகவல்களையுமே அழித்துவிட்டு புதிதாக உபுண்டுவை நிறுவும். 

உபுண்டுவை UEFI முறையில் நிறுவுவது எப்படி?

இரண்டு விதமாக நீங்கள் உபுண்டுவை UEFI mode இல் நிறுவலாம்.
  1. ஏற்கனவே UEFI mode இல் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்துடன் உபுண்டுவை நிறுவுவது. இதற்காக தனியாக EFI Partition ஐ உருவாக்க வேண்டியதில்லை. ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள இயங்குதளம் அதனை உருவாக்கி வைத்திருக்கும்.
  2. புதிதாக உபுண்டுவை UEFI mode இல் நிறுவுவது. இதற்காக EFI Partition ஐ நாம் தனியாக உருவாக்க வேண்டும். நாம் பார்க்க போவது இதைதான்.
தேவையானவை:

UEFI mode இல் தயார் செய்யப்பட்ட உபுண்டு bootable pendrive.

செயல்முறை:

  1. Hard Disk Partition Table GPT வடிவில் இருக்க வேண்டும்.
  2. Hard Disk இன் முதல் Partition EFI Partition ஆக இருக்க வேண்டும். அது FAT32 கோப்பு முறைமையில் இருக்க வேண்டும்.
  3. esp, boot ஆகிய flag கள் அந்த EFI Partition -இல் enable ஆகி இருக்க வேண்டும்.
Hard Disk Partition Table ஐ GPT வடிவில் உருவாக்குதல்:

கணினியை உபுண்டு Live Mode இல் இயக்குங்கள். Gpartition application ஐக் திறந்து கொள்ளுங்கள். Device -> Create Partition Table -> gpt -> Apply




Hard Disk இன் முதல் Partition ஐ EFI Partition ஆக உருவாக்குவதல்:


Unallocated என்பதன் மீது வைத்து Right Click செய்து New என்பதை Click செய்து.

New size(MiB) : 512
Create as: Primary Partition
File System: fat32

என்று உள்ளிட்டு Add பொத்தானை அழுத்துங்கள். அதன்பிறகு Toolbar பகுதியில் இருக்கும் பச்சை நிற டிக் குறியீட்டை அழுத்தி Apply செய்து கொள்ளுங்கள்.



esp, boot flag-களை enable செய்தல்:


புதிதாக உருவாக்கிய அந்த பார்ட்டிசியன் மீது வைத்து Right Click செய்து Manage Flags என்பதை Click செய்யுங்கள்.


'esp' என்பதை click செய்யுங்கள். அது தானாகவே 'boot' என்பதை தேர்வு செய்து கொள்ளும்.

அவ்வளவுதான். இதன்பிறகு எப்போதும் போல Install Ubuntu கொடுத்து /, /home, swap ஆகிய மூன்று Partition கள் உருவாக்கி நீங்கள் உபுண்டுவை நிறுவிக்கொள்ளலாம். /boot Partition ஐ தனியாக உருவாக்க வேண்டியதில்லை.

பொதுவாக Desktop, Laptop கணினி பயன்பாட்டிற்காக லினக்ஸ் நிறுவ வேண்டுமானால் /, /home, swap ஆகிய மூன்று Partition கள் போதுமானது.

Mar 30, 2019

கேடீஇ(KDE) சூழலில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான IBus வசதியை தொடக்க நிலையில்(startup) கொண்டுவருவது எப்படி?

லினக்ஸில் தமிழில் தட்டச்சு செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்று. Gnome, KDE இவையிரண்டும் மிகவும் பிரபலமான Desktop Environments. Ubuntu வின் default Desktop Environment ஆக Gnome இருந்து வருகிறது.

Gnome -இல் தமிழ் தட்டச்சு வசதியை கொண்டு வருவது எப்படி? என்று நான் ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். 

Ubuntu வை KDE சூழலில் இயக்க வேண்டுமானால் நீங்கள் Kubuntu-வை நிறுவ வேண்டும்.

இப்போது நாம் KDE சூழலில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதியை startup -இல் கொண்டு வருவது எப்படி? என்று பார்ப்போம். KDE இல் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இங்கு செல்லவும்.




System Settings -> Startup and Shutdown -> Autostart பகுதிக்குச் செல்லுங்கள். அதில் 'Add script' பொத்தானை அழுத்துங்கள். அதன்பிறகு கிடைக்கும் 'Shell script path' என்பது /usr/bin/ibus-daemon என்பதை உள்ளீடு செய்து 'OK' பொத்தானை அழுத்துங்கள். கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்துவிட்டீர்களேயானால் தமிழ் தட்டச்சு வசதி Enable ஆகி இருக்கும். நீங்கள் அமைத்த குறுக்கு விசையைக்(shortcut key) கொண்டு தமிழில் தட்டச்சு செய்யலாம்.


Mar 3, 2019

நிம்மதி தரும் நிதித் திட்டம்


என்னுடைய அப்பாவும், அம்மாவும் 5-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள். கூலி வேலைப் பார்த்துதான் என்னை Diploma, Engineering, MBA என படிக்க வைத்தார்கள். என் தம்பியை M.Com., M.Phil என படிக்க வைத்தார்கள். அதுபோக குடும்பத்தையும் நடத்தினார்கள்.

இன்றைக்கு நான் வாங்கும் மாதச் சம்பளத்தை விட குறைவாகவே என் பெற்றோர்கள் இருவருடைய சம்பளமும் இருந்தது. இருந்தும் எப்படி குடும்பத்தை திறமையாக நடத்தினார்கள்? என்னையும் என் தம்பியையும் இவ்வளவு படிக்க வைத்தார்கள்?

சேமிப்பு, சிக்கனம்,  தாங்கள் சம்பாதித்த குறைவான தொகையைக்கூட  வருங்காலத் தேவைக்காக திட்டமிட்டு சிறுகச்சிறுக சேமித்து வைத்தது இவைகள்தான் காரணம். இந்தப் பழக்கம் இன்றைய தலைமுறையினராகிய நமக்கு இருக்கிறதா? என்றால், இல்லை என்பதுதான் பெரும்பான்மையாக இருக்கிறது.

எனக்கு திருமணம் ஆகுவதற்கு முன்பு சேமிப்பு, ஆயுள் காப்பீடு, வரி தொடர்பானவற்றில் பெரிதாக ஆர்வம் இல்லை.

திருமணம் ஆன பின்பு என் மனைவியுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று, இதுவரை தாங்கள் சம்பாதித்ததில் எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறீர்கள்? மாதம் மாதம் எவ்வளவு சேமித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். ரஜினிகாந்திடம் "உங்க கொள்கை என்ன?" என்று கேட்டதற்கு "எனக்கு தலையே சுத்திவிட்டது" என்று கூறினார் அல்லவா அதுபோல ஆகிவிட்டது என்னுடைய நிலைமையும்.

அப்படியெல்லாம் எதுவும் சேமிக்கிற பழக்கம் கிடையாது ரம்யா என்று கூறினேன். அப்படியெல்லாம் இருக்கக்கூடாதுங்க நம்முடைய செலவுகளை குறைத்து, மாதம் ஆயிரம் ரூபாயாவது சேமிக்கனும்ங்க என்று கூறினார். எனக்கும் அந்த அக்கறையுடன் கூடிய அறிவுரை சரியென்று பட்டது.

அன்றைய தேதியிலிருந்து சேமிப்பு, முதலீடு, காப்பீடு, நிதித் திட்டமிடல் போன்றவை தொடர்பான புத்தகங்கள், இதழ்கள், இணையதளங்கள் ஆகியவைகளை ஒரு மாத காலம் தொடர்ந்து படித்து வந்தேன், வருகிறேன்.

நிதி திட்டமிடல் தொடர்பாக நான் படித்த புத்தகங்களின் பட்டியல் கீழே உள்ளது. என்னிடம் கிண்டில் கருவி இருக்கிறது. கீழே உள்ள புத்தகங்களில் பெரும்பான்மையானவை கிண்டிலில் படித்ததுதான்.
  1. அறம் பொருள் இன்பம் - வ.நாகப்பன்
  2. பணம் செய்ய விரும்பு - நாகப்பன் புகழேந்தி
  3. வீட்டுக் கணக்கு - சோம.வள்ளியப்பன்
  4. பணமே ஓடி வா - சோம.வள்ளியப்பன்
  5. பணவளக்கலை - டாக்டர் எஸ்.கார்த்திகேயன்
  6. சேமிப்பு - முதலீடு தகவல் களஞ்சியம் - சி.சரவணன்
  7. முதலீட்டு மந்திரம் 108 - சி.சரவணன்
  8. மணி மணி மணி! - அனிதா பட்
  9. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.: ஒரு சிறு அறிமுகம் - சுரேஷ் பரதன்
  10. பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - ராபர்ட் கியோஸாகி
  11. ஷேர் மார்க்கெட்  A-Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
  12. நாணயம் விகடன் - வார இதழ்.(ஆன்லைன் சந்தா வசதி உள்ளது. ஓராண்டுச் சந்தா ரூ.1,500 மட்டுமே. 2006-ஆம் ஆண்டிலிருந்து உள்ள பழைய இதழ்களையும் படித்துக்கொள்ளலாம். விகடன் குழுமத்தில் இருந்து வரும் 11-இதழ்களுக்கும் சேர்த்து ஆன்லைனில் படிப்பதற்கு ஆண்டுச்சந்தா ரூ.1,500 மட்டுமே)
  13. Mutual Funds: The Money Multiplier - Lalitha Thamaraipandy
  14. Let's Talk Money: You've Worked Hard for It, Now Make It Work for You - Monika Halan
  15. 108 Questions & Answers on Mutual Funds & SIP - Yadnya Investments
  16. 16 Personal Finance Principles Every Investor Should Know (Master Your Financial Life Book 1) - Manish Chauhan
  17. 3 Pillars of Financial Security - Manish Chauhan

மேற்கண்ட புத்தகங்களை படித்ததில் இருந்த நான் தெரிந்து கொண்டது இவைகள்தான்

  • காப்பீடு என்பது முதலீடு கிடையாது.
  • டேர்ம் இன்ஷூரன்ஸைத் தவிர வேறு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியும்  எடுக்கக் கூடாது.
  • சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய வருமானத்தை உங்கள் மனைவியோ, பெற்றோரோ, அல்லது உறவினர்களோ யாராவது நம்பியிருந்தால் உங்களுடைய ஆண்டு வருமானத்தைப் போல் 10 அல்லது 15 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.
  • நீங்கள் வாங்கும் சம்பளத்தில் உங்களுடைய வயதின் சதவீதத்திற்கு மேல் சேமிக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் வயது 30 என்றால் உங்கள் சம்பளத்தில் 30% தொகையை சேமிக்க வேண்டும். அதற்கு மேலும் சேமித்தால். அது அற்புதம்.
  • தங்கம், ரியல் எஸ்டேட் என்பது முதலீட்டிற்கு ஏற்றதல்ல. அது ஒரு நல்ல முதலீடும் கிடையாது.
  • உங்களுடைய முதலீடு, சேமிப்பு, காப்பீடு, கடன் விபரங்களை உங்கள் மனைவியுடன் அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும்
  • கிரெடிட் கார்டு தேவையில்லை.
  • ஒவ்வொரு நாளும் ஆகும் செலவை தனியாக ஒரு நோட்டுப்போட்டு குறித்து வைக்க வேண்டும். மாத இறுதியில் அன்றைய மாதத்திற்கான மொத்த செலவை கணவன், மனைவி இருவரும் அமர்ந்து கணக்கீட்டுப் பார்க்க வேண்டும்.
  • பிள்ளைகளின் படிப்பு, உயர்கல்வி, திருமணம் போன்றவைகளுக்கு இப்போதிலிருந்தே சேமிக்க வேண்டும்.
  • ஓய்வு காலத்திற்கான சேமிப்பை முதல்மாத சம்பளம் வாங்கிய தேதியிலிருந்தே தொடங்க வேண்டும்.
  • பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யாமல், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மாதச் சம்பளதாரர்கள் SIP முறையில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாம்
  • வரிச்சேமிப்பிற்கு ஏப்ரல் முதல் தேதியிலிருந்தே திட்டமிட வேண்டும்.
  • வரிச்சேமிப்பிற்காக தேவையில்லாத இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கக்கூடாது.
  • இது போன்ற இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? மேற்கண்ட புத்தகங்களை படித்துப்பாருங்கள். எல்லா புத்தகங்களும் சேர்த்து ரூ.3,000 க்குள்தான் வரும். மூவாயிரம் ரூபாயா??? ஆமாம். நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனின் விலையில் கால்பங்கு.

Feb 23, 2019

KDE neon



ஓராண்டு காலமாக நான் Kubuntu இயங்குதளத்தை பயன்படுத்தி வருகிறேன். Gnome சூழலை விட KDE சூழலே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று customization. கேடீஇ சூழலை நாம் எப்படி விரும்புகிறோமோ அப்படி customize(தனிப்பயனாக்கலாம்) செய்து கொள்ளலாம்.

லினக்ஸ் இயங்குதளங்களில் குறிப்பிடத்தக்க சூழல்கள் Gnome, KDE, XFCE, LXDE. இந்த நான்கு சூழல்களிலும் நான் லினக்ஸை பயன்படுத்தியிருக்கிறேன். இறுதியில் என்னை கவர்ந்துள்ளது KDE தான்.
உபுண்டு இயங்குதளத்திற்கான KDE சூழல் KUbuntu(KDE + Ubuntu) எனும் பெயரில் கிடைக்கிறது. நன்றாக இருக்கிறது. அண்மையில் இணையத்தில் உலாவியபோது KDE குழுவினர் தனியாக KDE neon எனும் பெயரில் இயங்குதளம் வெளியிட்டு இருப்பதாக அறிந்தேன். KDE குழுவினரின் மேம்படுத்துதல் உடனுக்குடன் அதில் கிடைக்கிறது. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் அது Ubuntu வை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

KDE neon வெளியீடுகளை உபுண்டுவின் LTS பதிப்பை அடிப்படையாக வைத்து வெளியிடுகிறார்கள். KDE neon 2019 ஆண்டிற்கான வெளியீட்டை உபுண்டு 18.04 LTS பதிப்பை அடிப்படையாக வைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

லினக்ஸ் ஆரம்பநிலை பயனர்களைவிட, ஓரளவிற்கு லினக்ஸை பயன்படுத்தியவர்களுக்கு மிகவும் ஏற்ற இயங்குதளம் KDE neon. என்னுடைய தேவைகளை அனைத்தையும் KDE neon இல் செய்ய முடிகிறது.

  • தமிழ் எழுத்துருக்கள் மிகவும் அற்புதமாக தோற்றமளிக்கிறது.
  • IBus உதவியுடன் தமிழ்99 முறையில் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது.
  • பிழைச்செய்திகள் தோன்றுவதில்லை.
  • உறுதியாகவும், நிலையாகவும் இருக்கிறது.
  • KDE இன் மேம்படுத்துதல்கள் உடனுக்குடன் கிடைக்கின்றன.

தரவிறக்கம் செய்ய KDE neon தளத்திற்குச் செல்லவும். Developer Edition, User Edition என்று இரண்டு விதமாக கிடைக்கிறது. தொடர்ந்து பயன்படுத்த விரும்புவர்கள் User Edition ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

KDE neon பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு FAQ பகுதியில் பதில்சொல்லியிருக்கிறார்கள்.