Nov 30, 2016

புதிய தோற்றத்தில் Skype



லினக்ஸிற்கான Skype புதிய தோற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. என்னுடைய உபுண்டு 14.04 LTS இயங்குதளத்தில் நிறுவி பயன்படுத்திப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. விண்டோஸ் பயனாளர்களுக்கு இந்த தோற்றம் முன்னரே வழங்கப்பட்டுவிட்டது. இப்போது லினக்ஸிற்கு வந்துள்ளது. Alpha பதிப்பாக வெளியிட்டுள்ளனர். 32-bit ஆதரவு கிடையாது. 64-bit வகையிலான லினக்ஸ் இயங்குதளத்தில் மட்டுமே நிறுவி பயன்படுத்த முடியும்.

Skype -ஐ உபுண்டுவில் நிறுவுவது எப்படி? எனத் தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.

புதிய பதிப்பை நிறுவுவதற்கு Skype-ஐ தரவிறக்கம் செய்து விட்டு. கீழ்காணும் கட்டளைகளை இயக்கவும்.

sudo dpkg -i /home/kathirvel/Downloads/skypeforlinux-64-alpha.deb


Nov 23, 2016

500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் - பிரச்சனை தீர்ந்தபாடில்லை

பழைய 500, 1000 ரூபாய் நோட்டு பிரச்சனையைப் பற்றி ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். எனது நண்பர் பிரபாகரனிடம் 2000 ரூபாய் பணம் கேட்டிருந்தேன். அவர் என்னுடைய வங்கி கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாக அனுப்பி வைத்திருந்தார். அதை எடுப்பதற்காக இன்று மதியம் மறுபடியும் வங்கிக்குச் சென்றிருந்தேன். வங்கிக்குள் நுழைந்தவுடனையே ஆச்சரியம் காத்திருந்தது. வங்கியில் மொத்தமே 5-வாடிக்கையாளர்கள்தான் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். ஒருவேளை பணத்தட்டுப்பாடு தீர்ந்துவிட்டதோ என நினைத்தேன்.

வங்கி ஊழியரிடம் சென்று சார் பணம் எடுக்கனும் எனக்கு இங்குதான் வங்கி கணக்கு இருக்கிறது என்று கூறினேன். அவர் உடனே அதெல்லாம் இருக்கட்டும் முதலில் கவுண்டருக்குச் சென்று பணம் கொடுப்பவரிடம்  எனக்கு 2,000 ரூபாய் பணம் தேவை பணம் இருக்கிறதா என கேட்டு வாருங்கள். அவர் இருக்கிறது என்று கூறினால் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என கூறினார்.

சார் பணம் இருக்கிறதாம் என்று கூறினேன். அதன்பிறகு அவர் 'சார் 100 ரூபாய் நோட்டு கிடைக்காது. 2000 ரூபாய் நோட்டு மட்டும்தான் இருக்கிறது. சம்மதம் என்றால் செக் எழுதி எடுத்துக்கொள்ளுங்கள்' எனக்கூறினார். வேறு என்ன செய்வது அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் என் கையில் புதிய 2,000 ரூபாய் நோட்டு இருந்தது.

அப்படினா ப.சிதம்பரம் கூறியது போல பணம் அச்சடித்து முடிக்க இன்னும் 7-மாதங்கள் ஆகும்னு சொன்னது உண்மைதான். கடல்லையே இல்லையாம்ங்கிற மாதிரி பேங்குலேயே பணம் இல்லையாம்.

நான் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னாடி நின்றுக்கொண்டிருந்தவர் பழைய 500 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து வங்கி கணக்கில் செலுத்தச்சொன்னார். உடனே கவுண்டரில் இருக்கும் ஊழியர் இது யாரோட கணக்கு உங்களுடையதா? அல்லது வேறு யாரோ ஒருவருடையதா எனக்கேட்டார். அவர் அதற்கு என் மருமகனுடையது என்று பதில் கூறினார். உடனே வங்கி ஊழியர் நீங்கள் பணம் செலுத்த முடியாது. ஏன் என்பதற்கான விளக்கத்தை அதோ அங்கு நிற்பவரிடம் சென்று கேளுங்கள் என்று வங்கி மேலாளரிடம் அனுப்பி வைத்தார். வங்கி மேலாளர் அவரிடம் 'ஐயா பழைய 500, 1000 ரூபாய் நோட்டை மற்றவர்கள் கணக்கில் செலுத்துவதற்கு வங்கி கணக்கு வைத்திருப்பவரிடம் அனுமதி கடிதம் வாங்கி வர வேண்டும் இல்லையென்றால் செலுத்த முடியாது. புதிய 2000 ரூபாய் நோட்டு, பழைய 100 ரூபாய் நோட்டுக்கு அனுமதி கடிதம் தேவையில்லை' என்று கூறினார்.

நான் மாத இறுதியில் பணம் பற்றாக்குறை ஏற்பட்டால் அம்மாவிடம் சொல்லி 1000 ரூபாய் பணம் அனுப்பி வைக்கச் சொல்லுவேன். தம்பிதான் அனுப்பி வைப்பான். ஆனால் இப்போது இருக்கும் நிலைமையில் என்னுடைய அனுமதி கடிதம் தம்பிக்குச் சென்று, அதன்பிறகு அவன் என்னுடைய கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்க வேண்டும். அப்பாவும், சித்தப்பாவும் வட மாநிலங்களில் இருக்கிறார்கள் அவர்கள் எப்படி எங்களுக்கு பணம் அனுப்புவார்கள்? இங்கு இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் எப்படி அவர்களுடைய குடும்பத்திற்கு பணம் அனுப்பி வைப்பார்கள்? அரசாங்கம் இதைப்பற்றியெல்லாம் யோசித்ததா?

நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமாகிக்கொண்டே செல்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு 56-இஞ்ச் அகலம் நெஞ்சை கொண்ட பிரதமர் பதில் சொல்ல மறுக்கிறார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி கேட்டு பிரதமர் பதில் கூறியதாக இது நாள் வரை நான் அறியவில்லை. ஆனால் வானொலியில் வாய்கிழிய பேசுகிறார். அவருக்கு ஒன்வே கம்யூனிகேசன்தான் பிடிக்கும் போல.

புதிய இந்தியா பிறக்கும், பெட்ரோல் விலை குறையும், பொருளாதாரம் உயரும், மைக்ரோசாப்ட் லினக்ஸ் இயங்குதளம் வெளியிடும்னு பி.ஜே.பி  காரர்களும், ஆர்.எஸ்.எஸ் காரர்களும் உளறிக்கொண்டே இருக்கின்றனர். அதற்கு இந்த இருவரின் சிலீப்பர் செல்லுகளும் ஆமா போடுகிறார்கள். இல்லையென்றால் 'எல்லையில் இராணுவ வீரர்கள்.... JIO SIM-ற்காக வரிசையில்.... கபாலி டிக்கெட்டிற்காக வரிசையில்.....' என பீலா விடுகிறார்கள். என்னதான் ஆகிறதுனு பொறுத்திருந்து பார்க்கலாம் ?

இதுக்குத்தான் மோடி வரணும்னு சொன்னவனுங்களையெல்லாம் நல்லா வச்சு செய்யுறாப்புல பிரதமரு! சாவுங்கடா! மீதம் இருக்கும் 30-மாதங்களிலும் இதைப்போன்ற அடாவடிகள் பி.ஜே.பி ஆட்சியில் தொடரும் என்பது மட்டும் உறுதி!

சரி வாங்க தேசத்துரோகி பட்டத்தையும் அப்படியே பின்னூட்டத்தில் வந்து கொடுத்துவிட்டு போங்க!

Nov 14, 2016

500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்


நிறுவனத்தில் சம்பளம் போட்டவுடன் எனது செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மீதி பணத்தை அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். ஏதாவது பணம் தேவையென்றால் ஊரிலிருந்து அனுப்பிவிடச்செல்லுவேன். காலையில் ஒரு தேநீர், தி இந்து(தமிழ்) நாளிதழ், நக்கீரன், ஆனந்த விகடன், ஒரு நாள் பயணச்சீட்டு, மாலையில் ஒரு தேநீர், எப்போதாவது காலையில் சிற்றுண்டி இவைதான் என்னுடைய செலவுகள். ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்குள் எனது செலவு அடங்கிவிடும்.

இணைய பரிமாற்றத்திற்காக 500 ரூபாயை வைத்துக்கொண்டு மீத பணத்தையெல்லாம் ATM -லிருந்து மொத்தமாக எடுத்து வைத்துக்கொள்வேன். அதிலிருந்து தினமும் 100 ரூபாயை செலவுக்கு எடுத்துக்கொள்வேன் அவ்வளவுதான்.

ஒருநாள் மாலை எனது நண்பர் பிரசன்னா அவர்கள் 'கதிர் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களெல்லாம் செல்லாதாம் மோடி அறிவித்திருக்கிறார்' என்று கூறினார். முதலில் நான் நம்பவில்லை அதன்பிறகு இணையத்தில் நாளிதழ்களை பார்த்த போது மோடி அறிவித்த செய்தி பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போது என்னிடம் நான்கு 100ரூபாய் நோட்டுக்கள் இருந்தது. அடுத்தடுத்த நாட்கள்தான் பிரச்சனை சூடுபிடித்தது. வெள்ளிக்கிழமை காலையில் என்னிடம் ஒரே ஒரு 100 ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. அலுவலகத்திற்குள் நுழையும் போது என் சட்டைப்பையில் 40 ரூபாய் இருந்தது.

எனது அலுவலகத்தின் அருகிலேயே HDFC வங்கி உள்ளது. எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அந்த வங்கியில்தான் கணக்கு தொடங்கி தரப்படும். ஆகையால் என்னுடைய வங்கி கணக்கும் அந்த வங்கியிலேயே இருந்தது. வெள்ளிக்கிழமை காலையிலேயே வங்கி கணக்குப் புத்தகம், செக் புத்தகம், PAN அட்டை போன்றவைகளை எடுத்து வைத்துக்கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டேன்.

மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டு முடித்தப் பிறகு அருகிலிருக்கும் HDFC வங்கிக்குச் சென்றேன். உள்ளே நுழைந்ததும் வங்கி ஊழியர் ஒருவர் அழைத்து 'சொல்லுங்க சார் உங்களுக்கு என்ன வேணும்?' என்று கேட்டார். எனது கணக்கில் பணம் இருக்கிறது அதை எடுக்க வேண்டும் செக் புத்தகமும் வைத்திருக்கிறேன் என்று கூறினேன். ஏதாவது ஒரு அடையாள அட்டை இருக்கிறதா சார் என்று கேட்டார் நான் கொண்டுச் சென்ற PAN அட்டையைக் காண்பித்தேன். ஓகே சார் இதில் ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு வாங்க, அதன்பிறகு உங்களது செக்கில் Self என குறிப்பிட்டு பக்கத்தில் இருக்கும் கவுண்டரில் கொடுங்க சார் என்று கூறினார்.

இரண்டையும் பக்கத்தில் இருக்கும் கவுண்டரில் கொண்டுபோய் கொடுத்தேன் அங்கிருக்கும் பெண்மணி ஒரிஜனல் கொடுங்க சார் என்று கேட்டார். காண்பித்தேன். சீல் வைத்து கையெப்பமிட்டு இரண்டாவது வரிசையில் நில்லுங்க சார் என்று சொல்லி அனுப்பி வைத்தார். செல்லாத 500, 1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்கு ஒரு வரிசையும், வங்கி கணக்கில் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் என இரண்டு வரிசையாக நிற்க வைத்திருந்தார்கள். நான் பணம் எடுப்பதற்காண வரிசையில் நின்றுகொண்டேன்.

அலுவலகத்திற்கு காலையில் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும் போதே வங்கி வாசல்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்ததை பார்த்தேன். சென்னை முகப்பேர் கிழக்கிலிருந்து - கோயேம்பேடு வழியாக - வேளச்சேரி - பள்ளிக்கரனை வரையிலும் அத்தனை வங்கிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில்தான் நின்றுகொண்டிருந்தனர். நாமும் இன்றைக்கு இது போன்ற நீண்ட வரிசையில்தான் நின்று பணம் பெற முடியும் என நினைத்துக்கொண்டே வந்தேன்.

நான் சென்ற HDFC வங்கி முதல் தளத்தில் இருக்கிறது. வங்கிக்கு வெளியிலெல்லாம் மக்கள் வரிசையில் நிற்கவில்லை. நான் காலையில் மற்ற இடங்களில் பார்த்த அளவிற்கெல்லாம் இங்கு கூட்டம் இல்லை. வங்கி அறை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. வரிசையில் நின்றாலும் குளு குளு வசதியோடு வரிசையில் நிற்க முடிந்தது. உண்மையிலேயே வங்கி ஊழியர்களை எவ்வளவ பாராட்டினாலும் தகும். அந்தளவிற்கு மக்களுக்கு உதவிக்கொண்டிருந்தார்கள். வருகை தந்த அனைவருக்கும் அவர்கள் கேட்ட சந்தேகங்களை பொறுமையாக விளக்கினார்கள். விண்ணப்பத்தை நிரப்பிக்கொடுத்தார்கள். மூத்த குடிமக்களை அழைத்துச்சென்று வேலையை முடித்து உடனே அனுப்பி வைத்தார்கள். வங்கியிலேயே ஜெராக்ஸ் எடுத்து கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். நான் சென்ற போது சார் ஜெராக்ஸ் மெசின் வேலை செய்யல அதனால வெளியி போயி ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு வாங்க சார் என்று கூறினார்கள். வங்கி மேலாளர் வரிசைகளை ஒழுங்குப்படுத்தி மக்களுக்கு நிலைமையை விளக்கி கூறிக்கொண்டிருந்தார். தோராயமாக 10-ஊழியர்கள் இருந்திருப்பார்கள் அனைவருமே பணம் வழங்கும் பணியில் முழு உற்சாகத்துடன், அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. மற்ற வங்கிகளில் நடந்த சம்பவங்களை நாளிதழ்களில் படிக்கிற போது உண்மையிலேயே எங்கள் அலுவலகத்தின் அருகில் இருக்கும் HDFC வங்கிக்கு மிகப்பெரிய பாரட்டு விழாவே நடத்த வேண்டும். நாளிதழ்களில் குறிப்பிட்டிருந்தது போன்ற கசப்பான அனுபவங்களை நான் பெறவில்லை.

நான் வரிசையில் நின்றுகொண்டிருந்த போது ஒரு பெண் என்னிடம் பேனாவை வாங்கி மற்ற பெண்களுக்கு விண்ணப்பங்களை  நிரப்பிக்கொடுத்தார். இளைஞர்கள், வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் என அனைத்து தரப்பினரையும் வரிசையில் காண முடிந்தது. ஒரு தம்பதியினர் விடுமுறை போட்டுவிட்டு வங்கிக்கு வந்திருப்பதாக பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறிக்கொண்டிருந்தனர். அவர்களில் கணவர் ஒரு வரிசையிலும், மனைவி ஒரு வரிசையிலும் நின்று கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தை வங்கிக்குள் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தது. எனக்கு முன்பு நின்று கொண்டிருந்தவர் காக்கி காலர் சட்டை பேண்டு அணிந்திருந்தார். நிச்சயமாக அடித்தட்டு தொழிலாளியாகத்தான் இருப்பார். கொஞ்ச நேரம் கழித்து தரையில் உட்கார்ந்து விட்டார். அப்போதுதான் தெரிந்தது அவரது கையில் குளுக்கோஸ் ஏற்றியிருப்பார்கள் போலிருக்கு அதற்கான பேண்டேஜ் ஒட்டியிருந்தார். அனைத்து தரப்பு மக்களையும் தவிக்கவிட்ட பெருமை இந்திய பிரதமர் மோடியையே சாரும். அரசியலுக்கு பிறுகு வருகிறேன்.

அம்மாவிடம் கொடுத்தது போக மீதம் 3000 ரூபாயை கணக்கில் வைத்திருந்தேன். அதில் 500 ரூபாயை வைத்துக்கொண்டு 2500 ரூபாய்க்கு செக் எழுதியிருந்தேன். 2000 ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கிறார்கள் ஆகையால் நமக்கு 2500 ரூபாய்க்கும் 100 ரூபாய் நோட்டுக்கள் தந்துவிடுவார்கள் என நினைத்துச் சென்றேன். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. புதிய 500 ரூபாய் நோட்டு வங்கிக்கே வரவில்லையாம். நான் கவுண்டரில் செக்கை நீட்டியபோது மதியம் 2.30 மணி கவுண்டரில் இருந்த பெண் சாப்பிடவில்லை என நினைக்கிறேன். Frooti juice packet வைத்திருந்தார். சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதை குடிச்சிக்கிறேன். எனக்கூறிவிட்டு என்னுடைய செக்கிற்கு 2000 ரூபாய் நோட் ஒன்றும் மீதமுள்ள 500 ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டுக்களையும் கொடுத்தார். மேடம் எல்லாமே நூறு ரூபாய் நோட்டாக தாங்க மேடம் எனக் கேட்டேன் மறுத்துவிட்டார். பாவம் அவர் என்ன செய்வார்?

ஒருவழியாக 2000 ரூபாய் நோட்டு ஒன்றும், ஐந்து 100 நோட்டையும் பெற்றுக்கொண்டு அலுவலகம் திரும்பினேன். வங்கிக்குள் நுழையும் போது மதியம் 1.30மணி, திரும்பிய போது  2.45 மணி. கிட்டதட்ட ஒன்னேகால் மணிநேரத்திற்குப் பிறகு புதிய நோட்டுக்கள் கிடைத்தது.

இதோடு முடிந்துவிடவில்லை என்னுடைய பிரச்சனை. அந்த 2000 ரூபாய் நோட்டுக்கு எப்படி சில்லரை மாற்றுவது என எனது மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. வங்கியிலேயே திருப்பி மாற்றிவிடுவோமா என நினைத்தேன். மாலையில் அலுவலகத்திலிருந்து அறைக்குத் திரும்பியபோது, சாலையோரத்தில் இருக்கும் ஒரு கடையில் இரவு உணவு சாப்பிட்டேன். சாப்பிடுவதற்கு முன் அவரிடம் அண்ணே பழைய 500 ரூபாய் நோட்டு இருக்கிறது வாங்கிக்குவீங்களானு கேட்டேன். வாங்குவதில்லை என சொல்லிவிட்டார். சாப்பிட்டு முடித்தபின் புதிய 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். வாங்கி பார்த்து சிரித்துவிட்டு. சில்லரை வேணுமேனு கேட்டார். பாருங்கண்ணே சில்லரை இருந்தா கொடுங்கன்னுச் சொன்னேன். அந்த மகான் புன்னகைத்துவிட்டு 2000 ரூபாய்க்கும் 100 ரூபாய் தாள்களாகவே கொடுத்துவிட்டார். அவருக்கு பெரிய மனசுங்க.

100 ரூபாய் தாள்களை சில்லரை மாற்றிய மகிழச்சியில் அறைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இரவு 11.15 மணிக்கு என்னுடைய நண்பன் ஆலங்குடி தினேஷ் அழைத்தான். நாங்கள் இருவரும் அறந்தாங்கியில் பட்டயப்படிப்பை ஒன்றாக படித்தோம். கதிர் எனக்கிட்ட பணம் இல்லே 100 ரூபாய் தர்றேனு சொன்னவர் என்னிடம் சொல்லாமல் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டார். இப்போது என்னிடம் சுத்தமாக பணம் இல்லை. அதனால் எனக்கு 100 ரூபாய் கொடு நான் உன்னைச் சந்திக்க நடந்து வந்துக்கொண்டிருக்கிறேனு சொன்னான். அவனுடைய அலுவலகம் என்னுடைய அறையிலிருந்து 3-கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது.

அவனை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு நான் உடனே பேருந்தைப் பிடித்து அவனிடம் 200-ரூபாயை கொடுத்துவிட்டு திரும்பினேன். அறைக்கு வந்து சேர இரவு 1 மணி ஆகிவிட்டது.

மிகவும் கொடூரமான அனுபவமாகவே இருந்தது. ஏதோ கொஞ்ச நஞ்சம் விபரம் தெரிந்த நமக்கே இவ்வளவு திண்டாட்டமா இருக்கே நம்ம கிராமத்துல இருக்குறவங்க நிலைமை என்னவாக இருக்கும்னு நினைத்து வருந்தினேன். என் அம்மாவிடம் கேட்டபோது ஆமாடா தம்பி என்ன பண்ணுறதுனு தெரியலைடானு சொன்னாங்க.

மறுநாள் சனிக்கிழமை புதிய சட்டமன்ற அலுவலகம் அருகில் இருக்கும் ரிச்சி தெருவிற்கு ஒரு வேலையாகச் சென்றேன். அப்போது முகப்பேர் கிழக்கிலிருந்து - அண்ணா நகர் - புரசைவாக்கம் - வேப்பேரி - எழும்பூர் - சென்ட்ரல் வழியாக இருக்கும் பகுதிகளில் உள்ள வங்கிகள், ATM வாசல்களில் வரிசையில் நின்ற மக்களை நினைத்தபோது மிகவும் மனம் வேதனையடைந்தது.

அரசியல்:
மோடி செய்திருப்பது அப்பட்டமான அரசியல். இதில் அரசியல் ஆதாயம் இல்லை நல்ல நோக்கத்தோடுதான் செய்திருக்கிறார் என்று சொல்பவர்கள் ஒன்று பி.ஜே.பி, RSS ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் அல்லது விபரம் தெரியாதவர்களாக இருக்க வேண்டும். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த நாட்டில் ஏற்படுத்திய பிரச்சனைகள் அனைத்துமே பாரக்க சகித்துக்கொள்ள முடியாததாகவே இருந்து வருகிறது. மோடியின் இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியும் என்று இதுவரை எந்த பொருளாதார வல்லுனர்களும் கூறவில்லை. ஓரளவு கள்ள நோட்டை குறைக்கலாம் என்று கூறுகிறார்கள். நேற்று வந்த செய்தியைப் பார்த்தால் அதுவும் சாத்தியப்படாது போலிருக்கிறது. 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்துக்கொடுத்து டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி சென்றிருக்கிறார்கள். நாம்மாளுங்களுக்கே இவ்வளவு மூளை வேலை செய்யுதுனா, உண்மையிலேயே கள்ள நோட்டு அடிப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது.

மக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்று அரசியல் தலைவர்கள் பி.ஜே.பி அரசை கண்டித்தால் அவர்கள் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் என்று முத்திரை குத்துவதெல்லாம் அரசியல் சாக்கடை. தேசத்துரோகிகள் என்ற வார்த்தையை பி.ஜே.பியினர் அதிகம் பயன்படுத்துவார்கள். இதை எழுதியதால் என்னைக்கூட தேசத்துரோகி, கறுப்புபணம் வைத்திருப்பவன் என்று கூறுவார்கள். எனக்கு RSS நண்பர்களும் உண்டு அவர்களின் பேச்சுத்தொனியை நான் நன்கு அறிந்திருக்கிறேன். ஆனால் நான் RSS அல்ல.

எங்கள் ஊரில் இருக்கும் வங்கிகளுக்கு இன்னும் புதிய நோட்டுக்கள் சென்று சேரவில்லை போலிருக்கிறது. வெறும் 100 ரூபாய் நோட்டுக்களை மட்டும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்களாம். புதிய நோட்டுக்களை ATM இயந்திரம் ஏற்றுக்கொள்ளாதாம். அதற்கு இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமாம். 80 லட்சம் கோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக புழக்கத்தில் இருக்கிறதாக கூறுகிறார்கள். அந்தளவிற்கு பணம் அச்சடிக்கப்பட்டுவிட்டதா? என்பதே பெரிய கேள்விக்குறி.

நேற்று Reserve வங்கி வெளியிட்ட அறிக்கையை பார்க்கும் போது இன்னும் அச்சடிக்கபடவில்லை என்றே தோன்றுகிறது. பிரதமர் ஆவதற்கு முன் வார்த்தைகளை அள்ளி வீசி விட்டு இரண்டு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் உருப்படையாக எதையும் மோடி இந்த நாட்டிற்கு செய்யமுடியவில்லை. மோடியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பது நன்கு தெரிகிறது. இதுவரையிலும் பாராளுமன்ற விவாதங்களில் பங்கேற்று உரையாடியதில்லை, பத்திரிக்கையாளர்களை சந்தித்தது இல்லை. எப்போதுமே மோடி பேசுவதற்கும் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பே இருக்காது. அல்லது அந்த சம்பவத்திற்கு பிரதமரிடமிருந்து எந்த கருத்தும் வெளிப்படாது. இப்படி ஒரு பிரதமரை இந்தியா சந்திப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். கடைசியாகவும் இருக்கட்டும். கல்லுளி மங்கன் ஞாபகம் வேறு இந்த நேரத்தில் வந்து தொலைக்கிறது.

இன்னும் இரண்டரை வருடங்களில் நாடு என்னாகுமோ என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் - கறுப்பு பணம் மீட்பதில் கையாளாகாத தனம் - ஆட்சியின் மீதான அதிருப்தி - நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சனைகளின் மீதான கவனத்தை திசை திருப்புதல் என மோடியின் அரசியல் வேலைகளுக்கு பலிகடாவாக அடித்தட்டு மக்கள் மாட்டியிருக்கிறார்கள். நல்ல வச்சு செய்யுறாப்புல தல!


எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல் மக்களை தவிக்கவிட்டுவிட்டு, இரகசியம் காப்பதற்காக இப்படிச் செய்தோம் என மோடியும், அவரின் சகாக்களும் கூறிவதைப் பார்த்தால், மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதைப் போல 'மோடியின் பொருளாதார அறிவை ஒரு அஞ்சல் தலையின் பின்னால் எழுதிவிடலாம்' போலிருக்கிறது. அந்தளவிற்காவது எழுத முடியுமா எனக்கு தோன்றுகிறது.

சரி நமக்கு எதுக்குப்பா இந்த அரசியலெல்லாம், நாளைக்கு அலுவலகம் போகணும் சிக்கீரமாக பதிவு செய்துவிட்டு தூங்குவோம்.

தேசத்துரோகி பட்டத்தை பின்னூட்டங்களில் கொடுக்கலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

Oct 4, 2016

ஆங்கிலத்தில் மட்டுமே உள்ள 90% அரசு இணையதளங்கள்: தமிழில் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்பு


தமிழக அரசு இணையதளங்களில் 90 சதவீதத்துக்கும் மேலான இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்களை அளிக் கின்றன. அவை தமிழில் இல்லாததால் சாதாரண மக்கள் புரிந்துகொள்ள முடியாத அவலநிலை உள்ளது.

ஆட்சி, நிர்வாகம், சட்டம், கல்வி, மக்கள் நல்வாழ்வு, செய்தித் தொடர்பு என நாள்தோறும் அரசு இணையதளங்களின் தேவை பெருகி வருகிறது. அதே வேளையில், எந்தவொரு அரசும் தன் மக்களின் மொழியில் செய்தித்தொடர்பை மேற்கொள் வது காலத்தின் தேவையாகும். தமிழக அரசைப் பொருத்தவரை 37-க்கும் மேற்பட்ட அரசுத் துறை கள், அதன் சார்பு நிறுவனங்கள், 20 அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட அரசு இணைய தளங்கள் உள்ளன. இவற்றில் மிகக்குறைந்த இணையதளங்கள் மட்டுமே தமிழில் தகவல்களை அளிக்கின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி கூறியதாவது:

தமிழக அரசு இணையதளங் களை ஆய்வு செய்ததில் அவற்றில் தமிழின் பயன்பாடு 8.97 சதவீதம் மட்டுமே உள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு இணையதளங்களில் ஆங்கி லத்தில்தான் தகவல்கள் இடம்பெற் றுள்ளன. உதாரணமாக, தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழக சட்டப் பேரவை, பதிவுத்துறை உள்ளிட்ட இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. தமிழக அரசின் சுகாதாரத்துறை இணையதளம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.

அரசு பல்கலைக்கழகங்களில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கலைக்கழக இணையதளம் தவிர வேறு எந்தவொரு பல்கலைக்கழக இணையதளமும் தமிழில் இல்லை. மேலும், தமிழில் தகவல் உள்ள சில இணையதளங்களிலும் முகப்புப் பக்கம் ஆங்கிலத்தில் தான் உள்ளது. தமிழில் தகவல்கள் இல்லாததால் மக்கள் தகவல் பெறுவது தடுக்கப்படுவதோடு, ஒவ்வொரு துறையின் வெளிப்படைத் தன் மையும், பொறுப்புத்தன்மையும் மறைக்கப்படுகிறது.

மத்திய அரசின் 90 சதவீத இணையதளங்களில் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழி களிலும் தகவல்கள் உள்ளன. இலங்கையில்கூட எல்லா அரசு இணையதளங்களும் தமிழில் தகவல்களை அளித்து வரு கின்றன.

ஆனால், தமிழக அரசின் இணையதளங்கள் தமிழில் இல்லை என்பது பெரும் குறை யாக உள்ளது. எனவே, 1956-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில் ‘தமிழக அரசின் இணைய தளங்கள் நிச்சயம் தமிழில் இருக்க வேண்டும்’ என்று சிறு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். அரசு இணையதளங்களில் தமிழில் தகவல்கள் இடம்பெறுவதை தகவல் தொழில்நுட்பத்துறை அல்லது தமிழ் வளர்ச்சித்துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் கணிப்பொறியியல் ஆய்வாளர் துரைப்பாண்டி இது பற்றி கூறும்போது, “இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் செல்போன் உள்ளிட்ட கையடக்க சாதனங்களில்தான் அதிக அளவில் இணையத்தை பயன் படுத்துகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான தமிழக அரசு இணையதளங்கள் ‘டேப்லெட்’, ‘ஐ-பேட்’, செல்போன் உள்ளிட்ட சாதனங்களின் திரைக்கு ஏற்ப வடிவமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அரசு இணையதள தகவல்களை கணினியில் மட்டும் தான் சரிவர பார்க்க முடியும் என்ற அவல நிலை உள்ளது.

‘ரெஸ்பான்சிவ் வெப் டிசைன்’

எனவே, அனைத்து சாதனங்க ளுக்கும் ஏற்றவாறு ‘ரெஸ்பான்சிவ் வெப் டிசைன்’ வடிவமைப்பில் இணைய தளங்களை வடிவமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களும் தகவல்களை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். மேலும், எந்தவொரு இணையதளத்தையும், அது செல்போனுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதை கூகுளின் www.google.com/webmasters/tools/mobile-friendly/ என்ற இணையதளத்துக்கு சென்று, தொடர்புடைய இணைய தள முகவரியை பதிவிட்டு அறிந்து கொள்ள முடியும்” என்றார்.

நன்றி: தி இந்து(தமிழ்)

Sep 25, 2016

Totem Media Player -இல் வழு


உபுண்டு பயன்படுத்தும் அனைவரும் Totem Player -ஐத்தான் பாடல், திரைப்படங்கள் பார்ப்பதற்கு பயன்படுத்தி வருகின்றோம். அண்மையில் வெளியிடப்பட்ட உபுண்டு 16.04 LTS உடன் வந்துள்ள Totem Player -இல் ஒரு சிறிய வழு உள்ளது. அது என்னவென்றால் ஒன்றிற்கு மேற்பட்ட பாடல்களையோ, திரைப்படங்களையோ தேர்வு செய்து இயக்கினால், நமக்கு தேவையான பாடல்களையோ, திரைப்படத்தையோ தேர்வு செய்து இயக்க முடியவில்லை. காரணம் Sidebar(F9 பொத்தானை அழுத்தினால் கிடைப்பது) நீக்கப்பட்டுள்ளது. ஆகையால் நான் இப்போது Totem Player பயன்படுத்தாமல் Rhythmbox -ஐ பாடல்கள் கேட்பதற்கு பயன்படுத்திவருகிறேன்.





பாடல்களை இயல்பிருப்பாகவே Rhythmbox -இல் திறப்பதற்கு ஏதாவது ஒரு .mp3 கோப்பினை தேர்வு செய்து வலது சொடுக்கி, Properties தேர்வு செய்து, Open With என்பதில் Rhythmbox என்பதை தேர்வு செய்து Set as default பொத்தான அழுத்தவும். இதன்பிறகு mp3 பாடல்கள் Rhythmbox -இல் மூலமாக ஒலிக்கும்.

Sep 24, 2016

உபுண்டு 16.04 LTS உண்மையிலேயே அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்கிறதா? - ஓர் அலசல்

நான் ஏற்கனவே பயன்படுத்தி வந்த உபுண்டு 14.04 LTS -ஐ நீக்கிவிட்டு 16.04 LTS நிறுவியதையும், 16.04 LTS அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்வதால் Xubuntu 16.04 -க்கு மாறலாமா? என யோசித்துக்கொண்டிருப்பதாக முன்பே இங்கு பதிவு செய்திருந்தேன். உபுண்டு அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்கிறது என்கிற கோபத்தில், Xubuntu -வை நிறுவி பயன்படுத்த ஆரம்பித்தேன். தனிப்பட்ட முறையில் உபுண்டு மீது எனக்கு ஒரு காதல் உண்டு. ஆகையால் ஏன் உபுண்டு அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்கிறது? அவ்வாறு நினைவகத்தை எடுத்துக்கொள்வதை தடுக்க முடியுமா? என்கிற தகவல்களை இணையத்தில் தேட ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் உபுண்டு அதிக நினைவகம் எடுத்துக்கொள்வதாக நான் நினைத்தது தவறு என்கின்ற உண்மை விளங்கிற்று. அந்த உண்மை என்னவென்றால்,


System Monitor மூலமாகத்தான் நாம் உபுண்டு இயங்குதளம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் Processor, RAM, Swap மற்றும் Internet -இன் வேகம் போன்ற விபரங்களைப் பெறுகிறோம்.


System Monitor -இல் காட்டப்படும் Memory அளவானது உண்மையிலேயே இயங்குதளம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நினைவகைத்தின் அளவு அல்ல. இதைப் பார்த்துதான் நான் உபுண்டு அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்வதாக நினைத்துக்கொண்டேன்.

System Monitor -இல் காட்டப்படும் Memory அளவானது Used Memory + Cache Memory இரண்டினுடைய கூட்டுத்தொகை. Used Memory என்பது இயங்குதளம் எடுத்துக்கொண்ட Memory. Cache Memory என்பது பயனர் அடிக்கடி பயன்படுத்தும் Application -களை வைத்திருக்கும் Memory. உதாரணமாக நாம் Firefox, Chrome, Tamil Typing, LibreOffice Writer போன்ற பயன்பாடுகளை அடிக்கடி பயன்படுத்தினோம் என்றால் அந்த பயன்பாடுகளை Cache Memory -யில் உபுண்டு வைத்துக்கொள்ளும். அடுத்தமுறை நாம் அந்த பயன்பாட்டினை இயக்கும் போது அந்த வன்வட்டிலிருந்து எடுக்காமல் Cache Memory -யிலேயிருந்தே எடுத்துக்கொள்ளும். கணினியில் Hard Disk -இன் நினைவகத்தை விட, RAM நினைவகமானது பன்மடங்கு வேகமானது. அதைவிட வேகமானது Processor -க்குள் இருக்கும் நினைவகம். Cache -யிலிருந்து பயன்பாட்டினை இயக்குவதால், ஒரு பயன்பாட்டினை நாம் மிகவும் வேகமாக இயக்க முடிவதோடு, பயன்பாட்டினைத் திறப்பதற்கான நேரமும், ஆரம்பிப்பதற்காக காத்திருக்கும் நேரம் குறையும். இது ஒரு மிகவும் அற்புதமான திட்டம். இதை நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

கீழே இருக்கும் கணக்கு உங்களுக்கு தெளிவாக விளக்கும்.



free -m கட்டளை நினைவக விபரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் அதிகமான நினைவகத்தை உபுண்டு 16.04 LTS எடுத்துக்கொள்கிறது என்கிற குற்றச்சாட்டு உண்மையல்ல. அப்படி நான் கூறியதை திரும்ப பெறுகிறேன். அதோடு மட்டுமில்லாமல் இது தொடர்பான விபரங்களை சேகரித்து உண்மையை விளங்கிக்கொண்டதால், ஏற்கனவே நிறுவியிருந்த Xubuntu 16.04 LTS -ஐ நீக்கிவிட்டு, உபுண்டு 16.04 LTS 64-bit இயங்குதளத்தையே நிறுவிவிட்டேன்.

உபுண்டுடா!

References:

Unity Desktop's Launcher -ஐ கீழே நகர்த்துதல்

உபுண்டு 16.04 LTS -இல் Unity Desktop's Launcher -ஐ இடது புறத்திலிருந்து கீழே நகர்த்திக்கொள்ளலாம். 16.04-க்கு முந்தைய பதிப்புகளில் இந்த வசதியை ஏற்படுத்திக்கொள்ள முடியாது. விண்டோஸ் பயனர்கள் உபுண்டுவை பயன்படுத்த ஆரம்பிக்கும் போது எதிர்கொள்ளும் சிறு சிறு அசௌகரியங்களில் இடதுபுறமாக இருக்கும் Unity Desktop's Launcher -ம் ஒன்று.

இவ்வாறு கீழ்பக்கமாக நகர்த்திவிட்டால் உபுண்டு, ஆப்பிள் இயங்குத்தளத்தினைப் போன்று தோற்றமளிக்கிறது. சரி எப்படி கீழ் பக்கமாக நகர்த்துவது என்று பார்ப்போமா? முனையத்தை(Terminal) திறந்து கொள்ளுங்கள். அதில் கீழ்காணும் வரியை உள்ளிட்டு Enter Key-ஐ அழுத்துங்கள். இப்போது நீங்கள் Unity Dektop's Launcher -ஐ கீழ் பக்கமாக காணலாம்.

gsettings set com.canonical.Unity.Launcher launcher-position Bottom


மறுபடியும் இடதுபுறமாக மாற்றிக்கொள்ள விரும்பினால் கீழ்காணும் கட்டளைவரியை முனையத்தில் உள்ளிட்டு Enter Key -ஐ அழுத்தவும்.

gsettings set com.canonical.Unity.Launcher launcher-position Left

Sep 15, 2016

32-bit இயங்குதளம், 64-bit இயங்குதளம் என்ன வித்தியாசம்?


32-bit இயங்குதளத்தால் அதிகபட்சமாக 4GB RAM -ஐத்தான் பயன்படுத்த முடியும். 64-bit இயங்குதளத்தால் 4GB-க்கு அதிகமான RAM -ஐயும் பயன்படுத்த முடியும். உங்களது இயங்குதளம் 32-bit ஆக இருந்து, உங்களது கணினியில் 4GB -க்கு அதிகமான RAM இருந்தால் அது வீண்தான் காரணம் 32-bit இயங்குதளத்தால் 4GB -க்கு அதிகமான நினைவகத்தை பயன்படுத்த முடியாது. நீங்கள் 4GB க்கு அதிகமான நினைவகத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் 64-bit இயங்குதளம் தேவை. ஆகையால் உங்களது கணினியில் 4GB-க்கு அதிகமான நினைவகம் இருந்தால், உங்களது இயங்குதளம் 64-bit இயங்குதளம்தானா என்பதை சோதித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் உடனே 64-bit இயங்குதளத்தை நிறுவுங்கள். அது லினக்ஸாக இருந்தாலும் சரி, விண்டோஸாக இருந்தாலும் சரி இரண்டிற்கும் இது பொருந்தும்.

64-bit இயங்குதளம் வேகமாக இயங்கும், 32-bit இயங்குதளம் மெதுவாக இயங்கும் என்று சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பி விடாதீர்கள். கணினி வேகமாக இயங்குவதற்கு நல்ல Processor-உம், போதுமான அளவிற்கு RAM-மும் தேவையே தவிர 64-bit இயங்குதளம் அல்ல.

உபுண்டு பயன்படுத்துபவர்கள் Details செயலியை இயக்கி Processor, RAM மற்றும் OS Type ஆகிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். விண்டோஸ் பயனர்கள் எப்போதும் போல My Computer => Properties செல்லவும்.

குறிப்பு: இந்த கட்டுரை 32-bit processor, 64-bit processor இரண்டிற்குமான வித்தியாசம் கிடையாது.

Sep 12, 2016

Ubuntu - Xubuntu - Lubuntu - குறைந்தபட்ச நினைவகம்

நான் தற்போது பயன்படுத்திக்கொண்டிருப்பது உபுண்டு 14.04 LTS பதிப்பு. நேற்று இரவு உபுண்டுவின் அண்மைய பதிப்பான 16.04 LTS -ஐ நிறுவினேன். அதிர்ச்சி என்னவென்றால் எந்த பயன்பாட்டையும் தொடங்காமலேயே உபுண்டு 950MB RAM ஐ எடுத்துக்கொண்டது.

என்னுடைய மடிக்கணினியின் RAM -இன் அளவு 2GB. இதில் 1GB அளவிற்கு இயங்குதளமே எடுத்துக்கொண்டால் மற்ற பயன்பாடுகளுக்கு மீதமிருக்கும் 1GB அளவு போதாது. RAM -ஐ Upgrade செய்யும் திட்டமெல்லாம் என்னிடம் இல்லை. என்னுடைய கேள்வி என்னவென்றால் இயங்குதளத்திற்காக இவ்வளவு RAM செலவு செய்ய வேண்டுமா? என்பதுதான்.

மடிக்கணினியில் என்னுடைய பயன்பாடு என்னவென்றால்?

இணையத்தில் உலாவுதல், பாடல் கேட்பது, திரைப்படம் பார்ப்பது, வலைப்பூவிற்கு கட்டுரை எழுதுவது, PDF, Libre Office, Text Editor, Python Programming இவ்வளவுதான். இந்த பயன்பாட்டிற்காக இயங்குதளத்திற்கே 1GB ஐ கொடுத்துவிட்டு மீதமிருக்கும் 1GB வைத்துக்கொண்டு என்னால் குடும்பம் நடத்த இயலாது. ஆகையால் Xubuntu அல்லது Lubuntu ஆகியவற்றினை முயற்சித்துப் பார்க்கலாமே என திட்டமிட்டு அதற்கான குறைந்தபட்ச நினைவகம் எவ்வளவு என ஆராய்ந்தேன். இரண்டு இயங்குதளத்திற்கும் குறைந்தபட்ச நினைவகம் 512 MB தான் என்ற விபரம் கிடைத்தது. கீழே உள்ள படங்களைப் பார்க்கவும்.



Ubuntu 16.04.1 LTS


Lubuntu 16.04.1 LTS


Xubuntu 16.04.1 LTS

Lubuntu பழைய கணினிகளுக்கானது அதோடு தோற்றம் கொஞ்சம் வறட்சியாக இருக்கும். ஆகையால் Xubuntu பயன்படுத்தலாம் என முடிவெடுத்துள்ளேன். இதன் தோற்றமும் அழகாகவும், நேர்த்தியாகவும், எளிமையாகவும் இருக்கும். நான் எற்கனவே கொஞ்ச காலம் இதை பயன்படுத்தியும் உள்ளேன். ஆகையால் அதிகமான நினைவக ஆக்கிரமிப்பு காரணமாக Ubuntu வை விட்டுவிட்டு Xubuntu -விற்கு மாறலாம் என இருக்கிறேன்.

என்னங்க கதிர் Ubuntu, Lubuntu, Xubuntu னு என்னென்னமோ சொல்லுறீங்க ஒன்னுமே புரியலையே அப்படினு கேட்கிறீங்களா. சொல்கிறேன் இந்த மூன்றுக்கும் வித்தியாசம் என்னவென்றால் இடைமுகப்புதான்.

Unity + Ubuntu = Ubuntu
XFCE + Ubuntu = Xubuntu
LXDE + Ubuntu = Lubuntu

உபுண்டு 14.04 LTS பயன்பாட்டிற்கு அருமையாக உள்ளது எந்த பிரச்சனையும் இல்லை. 2019 -வரை பயன்படுத்தலாம். இருந்தாலும் புதிய பதிப்பை பயன்படுத்தி பார்ப்போமே என நினைத்துதான் 16.04 LTS - நிறுவினேன். ஆனால் 1GB நினைவக ஆகிரமிப்பு எனக்கு பிடிக்கவில்லை ஒத்துவரவில்லை. மற்றபடி 16.04 LTS பதிப்பு பயன்படுத்த மிகவும் அருமையாக உள்ளது. நினைவகம் எனக்கு ஒரு பிரச்சனை இல்லை என்பவர்களுக்கு மிகவும் அற்புதமான அனுபவத்தை உபுண்டு 16.04 LTS கொடுக்கும்.

Jul 30, 2016

Skype-இல் தமிழில் தட்டச்சு செய்தல்

உபுண்டுவில் ஸ்கைப்பை நிறுவுவது எப்படி எனத் தெரிந்துகொள்ள முந்தைய பதிவிற்குச் செல்லவும். ஸ்கைப்பை நிறுவிய பிறகு தமிழில் தட்டச்சு செய்யும் வசதியினை உபுண்டுவில் ஏற்படுத்த வேண்டும். உபுண்டுவில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? என்று தெரிந்து கொள்ள இங்கு செல்லவும். தமிழ் தட்டச்சு வேலை செய்கிறதா என்று ஒருமுறை சோதித்துக்கொள்ளுங்கள்.


இப்போது ஸ்கைப்பில் தமிழில் தட்டச்சு செய்யும் வசதியினை கொண்டுவருவது எப்படி என்று பார்ப்போம். ஸ்கைப் Qt அடிப்படையிலானது ஆகையால் நாம் ibus-qt4 பொதியினை நிறுவ வேண்டும். இதை நிறுவுவதற்கு முனையத்தில் sudo apt-get install ibus-qt4 கட்டளை வரியினை இயக்கவும்.
 
 
 
அடுத்ததாக /etc/environment கோப்பில் கீழ்காணும் வரிகளைச் சேர்க்கவும்.
 
LANG="en_US.UTF-8"
LC_ALL="en_US.UTF-8"
GTK_IM_MODULE=ibus
XMODIFIERS=@im=ibus
QT_IM_MODULE=ibus
 
கோப்பினை சேமித்துவிட்டு வெளியேறவும். உபுண்டுவை ஒருமுறை Logout செய்துவிட்டு Login செய்யவும். இப்போது ஸ்கைப்பில் தமிழ் தட்டச்சு வேலை செய்யும்.
 


References:

உபுண்டுவில் Skype நிறுவுதல்

ஸ்கைப் என்பது இணையம் மூலமாக அழைப்புகளையும், அரட்டைகளையும் செய்வதற்கான மென்பொருளாகும். ஸ்கைப்பில் ஒரு கணக்கும், கணினியில் ஸ்கைப் மென்பொருளும் இருந்தால் போதும். ஸ்கைப்பில் கணக்கு வைத்திருக்கும் வேறு யாருடன் வேண்டுமானாலும் ஒலி(Audio), ஒளி(Video), எழுத்து(Text) வடிவிலான உரையடல்களை மேற்கொள்ளலாம்,  கோப்புகளையும் பகிர்ந்துகொள்ளலாம்.

ஸ்கைப்பை உபுண்டுவில் நிறுவுவது எப்படி?
 

இந்த தளத்தில் இருந்து ஸ்கைப்பை தரவிறக்கம் செய்து கொள்ளவும். 32-bit உபுண்டு என்றால் Ubuntu 10.04 32-bit என்பதையும், 64-bit என்றால் Ubuntu 12.04 (multiarch) என்பதையும் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தரவிறக்கம் ஆன பிறகு முனையத்தை(Terminal) திறந்து கீழ்காணும் கட்டளைவரியை இயக்கினால் ஸ்கைப் நிறுவப்பட்டு விடும். .deb வடிவிலான மென்பொருள்களை நிறுவ dpkg கட்டளையைப் பயன்படுத்த வேண்டும். cd கட்டளையின் உதவியுடன் ஸ்கைப் எந்த அடைவிற்குள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதோ அங்கு செல்லவும். அதன்பிறகு கீழ்காணும் கட்டளையை இயக்கவும்.

32-bit என்றால்
sudo dpkg -i sudo dpkg -i skype-ubuntu-lucid_4.3.0.37-1_i386.deb

64-bit என்றால்
sudo dpkg -i skype-ubuntu-precise_4.3.0.37-1_i386.deb


ஸ்கைப்பிற்கு தேவையான சில பொதிகள் உபுண்டுவில் இல்லையென்றால் பிழைச்செய்தி காண்பிக்கும். அவைகளை நிறுவ sudo apt-get -f install கட்டளையை இயக்கவும். அவ்வளவுதான் இப்பொழுது உபுண்டு இயங்குதளத்தில் ஸ்கைப் நிறுவப்பட்டிருக்கும். நீங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

Jul 19, 2016

பிராய்லர் பண்ணைகளும் திறமை இல்லா திண்டாட்டமும் - விநாயக முருகன்

உயிர்மை மாத இதழில் "பிராய்லர் பண்ணைகளும் திறமை இல்லா திண்டாட்டமும்" எனும் தலைப்பில் விநாயக முருகன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை இது. இந்த கட்டுரை இன்றைக்கு பொறியியல் படிக்கும் மாணவர்களின் நிலைமையையும், பொறியியல் கல்லூரிகளின் நிலைமையையும் விரிவாக அலசுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

விநாயக முருகன் அவர்கள் CTS நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். தமிழ் கம்ப்யூட்டர் இதழில் துணை ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். அவர் முகநூலில் பொறியியல் மாணவர்களை நேர்முகத் தேர்வு செய்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருந்ததை நான் இங்கு வெளியிட்டிருந்தேன். இப்போது அந்த பதிவு அவருடைய முகநூல் பக்கத்தில் இல்லை. அவராகவே நீக்கி விட்டாரம். முக்கியமான அந்த பதிவை இங்கு பதிவு செய்ததன் மூலமாக அதை காப்பாற்றிவிட்டதாகவே நினைக்கிறேன்.

பொறியியல் படிக்கும் மாணவர்கள் இந்த கட்டுரையை முழுமையாக படித்து நன்கு உள்வாங்கி கொள்ளவும்.






படத்தினை தரவிறக்கம் செய்து பெரிதுபடுத்தி படிக்கவும். நன்றி உயிர்மை. நன்றி விநாயக முருகன்.

May 28, 2016

பொறியியல் பட்டதாரிகள் கவனத்திற்கு

நன்றி: https://www.facebook.com/vinayaga.murugan.7/about
மிகுந்த மனவருத்தத்துடன் இதை பதிவு செய்கிறேன்.

இன்று ஒரு மெகா நேர்முகத்தேர்வு நடந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வந்திருந்தார்கள். எல்லாரும் கடந்த ஆண்டு பொறியியல் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள். பிஈ மின்னணுத்துறை, ,கணிப்பொறி, பிடெக் ஐடி என்று படித்தவர்கள். இருநூறு பேரில் பத்துபேர் கூட தேறவில்லை. பொது அறிவு சுத்தமாக இல்லை. துறைசார்ந்த அறிவும் இல்லை. கம்யூனிகேஷன் எனப்படும் தகவல் பரிமாற்றத்திலும் தேறவில்லை. ஆனால் இவர்கள் எல்லாரும் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளில் எண்பது சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள். இளங்கலை படிப்பில் எழுபது அல்லது எண்பது சதவீதம் மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள். எப்படி இவர்கள் இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. நாங்கள் படிக்கும் போதெல்லாம் நூற்றுக்கு பத்து சதவீத மாணவர்களே இதுபோன்ற உயர் மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆனால் மதிப்பெண்கள் குறைந்தாலும் துறை சார்ந்த அறிவை அதிகம் வளர்த்துக்கொள்வார்கள். இன்று வந்திருந்தவர்களில் ஒருவர் கூட கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

ரெஸியூமில் பொழுதுபோக்கு என்று சினிமா பார்ப்பது, பாட்டுக்கேட்பது , சமையல் செய்வது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஒரேயொரு பெண் மட்டும் புத்தகங்கள் படிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். என்னமாதிரி புத்தகங்கள் படிப்பீங்க என்று கேட்டேன். ஆன்மிக புத்தகங்கள் என்று சொன்னார். சரி அது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று விட்டுவிட்டேன். துறைசார்ந்த கேள்வி என்பதால் கல்லூரி இறுதியாண்டிலேயே அவர் செய்த பிராஜக்ட் பற்றி கேள்வி கேட்டோம். தொடர்பே இல்லாமல் பதில் வந்தது. இன்னொருத்தர் கேள்வி கேட்ட என்னை பார்த்தே குட் கொஸ்டீன் என்று பதில் சொன்னார். அவர் என்னை கலாய்க்கிறாரா என்று கூட சந்தேகமாக இருந்தது. ஒரு பெண் எனக்கு பிஇ படிக்க விருப்பமில்லை. எங்க பெற்றோர் சொன்னதால் சேர்ந்தேன் என்று சொன்னார். அவர் மீது மிகுந்த கோபம் வந்தது. இன்னொரு பெண் எனக்கு வீணை வாசிக்க வரும் என்றார். சரி அவர்கள் கல்லூரியில் படித்த பாடங்களில் கேள்வி கேட்போம் என்று மிக மிக எளிமையாக ஸ்டாக்குக்கும், கியூவுக்கும் என்ன வித்தியாசம் என்று அடிப்படை கேட்டால் மாற்றி மாற்றி குழப்பமான பதிலை சொன்னார்கள்.

கல்லூரி முடித்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நாட்களில் என்ன செஞ்சீங்க? ஏதாவது கோர்ஸ் படிச்சீங்களா? துறைசார்ந்த அறிவை வளர்த்து கொண்டீர்களா? தனியார் பயிற்சி மையங்களில் சான்றிதழ்கள் வாங்குனீங்களா என்று கேட்டால் எல்லாரும் சொல்லி வைத்தது போல இந்த பத்து மாதங்களில் எதுவும் செய்யவில்லை என்று சொன்னார்கள். ஒரு பெண் அவரது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் மேற்கொண்டு எதுவும் படிக்கவில்லை என்று சொன்னார். இளைஞர்களிடம் கேட்டால் பத்து மாதங்களாக வேலை தேடுகிறேன். எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். இவர்களின் பொறுப்பற்றத்தனம் மிகுந்த எரிச்சலையும். ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

உண்மையில் வேலை இல்லா திண்டாட்டம் இப்போது இல்லை. திறமை இல்லாத் திண்டாட்டத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். முன்பு போல இந்தக்காலம் இல்லை. ஒருவருடம் நீங்கள் நின்றுவிட்டால் கூட உங்கள் பின்னால் பெருங்கூட்டம் வந்துவிடும். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடவேண்டும். ஒவ்வொருவரும் லட்சணக்கணக்கில் பணம் கட்டி பொறியியல் படிப்பை படித்தவர்கள். பணம் இல்லாத காரணத்தால் என்னால் பொறியியல் கல்லூரியில், மருத்துவத்துறையில் சேர முடியவில்லை. சென்னை வந்து வேலை பார்த்துக்கொண்டே படித்தேன். எனது நண்பர்கள் பலர் அப்படித்தான். வெறும் ஐநூறு ரூபாய்க்காக ஒரு தனியார் பயிற்சி மையத்துக்கு சென்று வகுப்பெடுத்துள்ளோம். எடுத்தவுடன் பெரிய பதவிகள் வராது. பெரிய சம்பளமும் கிடைக்காது. எந்தத்துறை எடுத்துக்கொண்டாலும் சில ஆண்டுகள் அந்தத்துறையை பற்றி நாம் கற்பதில் அறிவதில் காலத்தை செலவழிக்க வேண்டும். முதலில் நாம் வாங்கும் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும். பிறகு சில ஆண்டுகள் கழித்து நமது அறிவும், சம்பளமும்,உழைப்பும் சமமாக இருக்கும். இறுதியில் நமது திறமைக்கு, அறிவுக்கு, உழைப்புக்கு அதிகமான சம்பளம் கிடைக்கும்.

லட்சக்கணக்கில் செலவழிப்பவர்கள் சில ஆயிரம் செலவழித்து ஏதாவது தனியார் நிறுவனங்களில் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்தை கற்றிருக்கலாம். அதைக்கூட நாங்கள் எதிர்பார்க்கவில்லை. குறைந்தது நீங்கள் படித்த பாடத்திலேயே தெளிவு இருக்கிறதா என்று பார்க்கிறோம். அதுவும் இல்லை. எல்லாரும் சென்னையை சுற்றியுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள். நான்கு வார்த்தை சேர்ந்தாற்போல ஆங்கிலத்தில் கோர்வையாக பேசவரவில்லை. ஷேக்ஸ்பியர்போல கவிதை எழுத வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சொல்ல வந்ததை தெளிவாக சொன்னால் போதும்.

கல்விக்கும், அறிவுக்கும் தொடர்பு இல்லை என்று இன்று மீண்டும் தெரிந்துக்கொண்டேன். அறிவு என்பது பாடத்திட்டத்துக்கு வெளியே இருக்கிறது. நேர்முகத்தேர்வில் ஒருவரது கல்வியை விட அவரது அவரது Attitude – ஐத்தான் நாங்கள் பார்ப்போம். அவர் எந்தளவு அக்கறை கொண்டவராக (அந்தக்கால ஆசாமிகள் வார்த்தையில் சொன்னால் தொழில்பக்தி) இருக்கிறார் என்று பார்ப்போம். இப்போது எல்லார் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. பதினாறு ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்துவிட்டு இறுதியில் எல்லைக்கோட்டை தொடும்நேரத்தில் ஏன் இப்படி அலட்சியம்? பொறுப்பற்றத்தனம்? சில இளைஞர்கள் தலைமுடியை ஸ்பைக் எல்லாம் வைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். ஒரு நேர்முகத்தேர்வுக்கு எப்படி வரவேண்டுமென்று கூடவா இங்கிதம் தெரியாது? காலமெல்லாம் சினிமா பார்த்துக்கொண்டும், பேஸ்புக்கில் கும்மியடித்துக் கொண்டும், பல்சரில் சுற்றுவதும், இருபது வயதுக்கு பிறகும் பெற்றோர் பணத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதும் எல்லாம் ஒரு பிழைப்பா?

Apr 30, 2016

தமிழுக்குத் தலைவணங்குவோம்


கற்போம் கற்பிப்போம் என்றும் தமிழ் மொழியில்; நாம் தமிழ் மகனாவோம், தமிழ் மகளாவோம்!

Apr 29, 2016

ஏன் க்னூ லினக்ஸைப் பயன்படுத்த வேண்டும்?

ஏன் மாணவர்கள், கல்வி நிலையங்கள், பொதுமக்கள் ஆகியோர் க்னூ லினக்ஸைப் பயன்படுத்த வேண்டும்? அதன் பின் உள்ள அரசியல், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் அடாவடித்தனம் ஆகியவற்றைப் பற்றி மயூரன் முரளிதரன் அவர்கள் மிக தெளிவாக இந்த[1] கட்டுரையில் விளக்கியுள்ளார்.



கட்டுரையில் இடம்பெற்றுள்ள முக்கியமான செய்திகளில் சில...

===============
இலங்கையிலிருக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடனும் தன் கையாட்களுடனும் நேரடியாகவே விவாதித்திருக்கிறேன். ஒரு கேள்வியில் அவர்கள் திணறுவார்கள். அதுதான் திருட்டு வட்டு விவகாரம்.
ஏன் மூன்றாம் உலக நாடுகளில் மைக்ரோசொப்ட் உற்பத்திகள் தாராளமாக கள்ள சந்தையில் கிடைக்கின்றன? தத்தமது நாடுகளின் மக்கள் போராட்டங்களை எல்லாம் ஏகாதிபத்திய உதவியோடு நசுக்கி அழிக்கும் நாட்டு அரசுகள் எல்லாம் ஏன் திருட்டுவட்டுக்களை ஆசீர்வதித்து வளர்க்கின்றன?

இதுதான் சூட்சுமம்.

நீங்கள் எப்போதும் எமது உற்பதிகளுக்கே அடிமைகளாக இருக்கவேண்டும். நீங்கள் எமது உற்பத்திகளை மட்டுமே கற்கவேண்டும். எமது உற்பத்திகளை பயன்படுத்துவதைத்தவிர உங்களுக்கு வேறு எதுவும் தெரிந்துவிடக்கூடாது. எமது உற்பத்திகளை வைத்தேதான் நீங்கள் பணம் பண்ண வேண்டும். பணம் பண்ணுங்கள். தொழில் பண்ணுங்கள். தடையில்லை. ஆனால் எமக்கு கட்டவேண்டிய கப்பத்தை மட்டும் எக்காலத்திலும் நீங்கள் கட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஆம் நவீன கப்பம்.

தகவற் தொழிநுட்பத்தில் எந்த உச்சிக்கு நீங்கள் சென்றாலும், அடிப்படையான மென்பொருட்களை நீங்கள் அவர்களிடமே வாங்கவேண்டும். லைசென்ஸ் என்ற பெயரில் அவர்களுக்கு கப்பம் கட்டிக்கொண்டிருக்கவேண்டும். அவர்களைத்தாண்டி தொழிநுட்பம் இல்லை. அவர்களைத்தாண்டி எதுவும் இல்லை.

உங்கள் இராணுவப்புலனாய்வு அலுவலகத்தின் அதியுயர் ரகசியம் காக்கும் கணினி, அவர்களது மென்பொருட்கள் மீதுதான் இயங்கும். அந்த மென்பொருட்கள் எந்த தகவலை யாருக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது என்பதை நீன்கள் கண்டுபிடிக்க வழியில்லை. எல்லாம் மூடிய தொழிநுட்பம்.

===============

க்னூ லினக்ஸைப் பயன்படுத்துவோம், திறந்த மூல மென்பொருள்களுக்கு ஆதரவு அளிப்போம், சுதந்திர மென்பொருள்களை மட்டுமே பயன்படுத்துவோம். உலகின் மிகப்பெரிய புரட்சியெல்லாம் ஒரு தனிமனிதனிடமிருந்தே தொடங்கியிருக்கின்றன.

வாருங்கள் லினக்ஸ் உலகத்திற்கு!


Apr 21, 2016

உபுண்டு 16.04 LTS இன்று வெளியிடப்படுகிறது


உபுண்டு 16.04 LTS பதிப்பு இன்று(ஏப்ரல் 21, 2016) வெளியிடப்பட இருக்கின்றது. தரவிறக்கம் செய்து பார்த்து விட்டு ஒரு விரிவான பதிவை விரைவில் எழுதுகிறேன். இந்திய நேரப்படி நாளை வெள்ளிக்கிழமை விடியற்காலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என நினைக்கிறேன்.

Mar 9, 2016

உபுண்டுவில் USB bootable disk உருவாக்குவது எப்படி?

"தரவிறக்கம் செய்த ISO கோப்பினை extract செய்து அதை CD/DVD அல்லது Pendrive இல் பிரதி(copy)யெடுத்துவிட்டு, அவற்றின் மூலமாக கணினியை பூட் செய்தால் இயங்குதளத்தை நிறுவ முடியாதா?" என என்னிடம் நிறைய நண்பர்கள் கேட்பதுண்டு, அதற்கான பதில் "முடியாது" என்பதே. கணினியை பூட் செய்ய வேண்டுமென்றால், bootable -ஆக இருக்கும் ஒரு கருவியைக் கொண்டுதான் பூட் செய்ய முடியுமே தவிர மற்ற எவற்றாலும் முடியாது. அதுபோல, உபுண்டு இயங்குதளத்தை தரவிறக்கம் செய்தபின், அதை கணினியில் நிறுவ வேண்டுமானால், முதலில் உபுண்டு ISO கோப்பினை CD/DVD யிலோ அல்லது Pendrive-லோ பூட்டபிளாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதன்பின்தான் live ஆக பயன்படுத்துவதையோ, நிறுவுதலையோ தொடங்க வேண்டும்.

உபுண்டுவை கணினியில் நிறுவுபவர்கள் இரண்டு வகையினர். ஏற்கனவே உபுண்டு இயங்குதளமோ அல்லது வேறு ஏதாவது ஒரு லினக்ஸ் இயங்குதளமோ வைத்திருந்து அதில் உபுண்டுவை நிறுவுபவர்கள், இவர்கள் முதல் வகையினர். இரண்டவாது வகையினர், விண்டோஸ் இயங்குதளம் மட்டும்தான் வைத்திருப்பார்கள், அதோடு உபுண்டுவை நிறுவ வேண்டும் என நினைப்பவர்கள்.

இப்போது நாம் பார்க்கப்போவது முதல் வகையினருக்கானது. அதாவது உபுண்டு வைத்திருப்பவர்களுக்கானது. நீங்கள் ஏற்கனவே உபுண்டு வைத்திருந்தால் மிக எளிமையாக Pendrive -இல் உபுண்டுவை bootable மாற்றிக்கொள்ள முடியும். இதற்கென தனியாக எந்தவொரு Application -ஐயும் நீங்கள் நிறுவ வேண்டியதில்லை. Startup Disk Creator எனும் Application உபுண்டுவுடன் இணைந்தே வருகிறது.

இதைக் கொண்டு Pendrive-இல் உபுண்டுவை bootable ஆக மாற்றுவது எப்படி? என்றுதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

தேவையானவை:

1.Ubuntu ISO image
2.Pendrive(குறைந்தது 2GB அளவு இருக்கவேண்டும், அதிகபட்சமாக எத்தனை GB வேண்டுமானாலும் இருந்துகொள்ளலாம். அந்த Pendrive இல் உள்ள அனைத்து கோப்புகளையும் backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். bootable ஆக மாற்றும் போது Pendrive-இல் உள்ள தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடும்.)

படி சுழியம்:
முதலில் உங்களுக்குத் தேவையான உபுண்டுவை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உபுண்டுவில் எந்த பதிப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும்? என தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.

படி ஒன்று:
Pendrive-ஐ கணினியில் இணைத்துவிட்டு, Dash Home சென்று startup disk creator என தட்டச்சு செய்து Startup Disk Creator Application ஐ திறந்து கொள்ளுங்கள்.


படி இரண்டு:
தரவிறக்கம் செய்த ISO கோப்பினை தேர்வு செய்ய 'Other' எனும் பொத்தானை அழுத்துங்கள். தரவிறக்கம் செய்த ISO கோப்பினை தேர்வு செய்து 'Open' எனும் பொத்தானை அழுத்துங்கள்.



படி மூன்று:
Disk to use எனும் பெட்டியில், தேவையான பென்டிரைவை தேர்வுசெய்து கொள்ளுங்கள்(ஒரே ஒரு பென்டிரைவ்தான் என்றால் பிரச்சனையில்லை)




படி நான்கு:
இறுதியாக 'Make Startup Disk' எனும் பொத்தானை அழுத்துங்கள். இப்போது உபுண்டு ISO பென்டிரைவில் bootable மாறத்தொடங்கும். இடையில் ஒரு இடத்தில் கடவுச்சொல் கேட்கும் அப்போது உங்கள் உபுண்டுவின் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து 'Authenticate' எனும் பொத்தானை அழுத்துங்கள்.



படி ஐந்து:
Bootable Installation முடிந்த பிறகு 'Installation Complete' எனும் செய்திபெட்டி(information box) கிடைக்கும். Quit எனும் பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் வெற்றிகரமாக Ubuntu USB bootable disk -ஐ உருவாக்கிவிட்டீர்கள்.



படி ஆறு:
கணினியை மறுதொடக்கம் செய்து, BIOS திரை வரும்போது boot device options -க்கான key யை அழுத்தி Pendrive தேர்வுசெய்து Enter key ஐ அழுத்துங்கள்.(பெரும்பாலும் F2, F12, F10 key-கள் boot device option-க்கு கொடுக்கப்பட்டிருக்கும். கணினியில் இருக்கும் BIOS-ஐப் பொருத்து இது மாறுபடும்.) இப்போது உபுண்டு Pendrive -இல் இருந்து தொடங்க ஆரம்பிக்கும். Live, Install உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வுசெய்துவிட்டு, அதற்கான வேலைகளைப் பார்க்க வேண்டியதுதான்.


References:

நன்றி: எனது நண்பர் கிருஷ்ணன் அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது.
 

PinguyBuilder எனும் அற்புத கருவி

முதலில் தம்பி மேற்பனைக்காடு தெய்வாவிற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். தம்பி தெய்வாதான் PinguyBuilder கட்டளையை சோதித்துப்பார்த்துவிட்டு என்னிடம் கூறினார். அதன்பிறகுதான் நான் PinguyBuilder பற்றிய தேடலில் இறங்கினேன்.

PinguyBuilder என்பது remastersys -இன் மறுஉருவாக்கம். remastersys திட்டம் தொடர்ந்து மேம்படுத்தப்படாததால் அதை மேம்படுத்தி PinguyBuilder வெளியிடப்பட்டுள்ளது. PinguyBuilder ஐப் பற்றி தனியாக ஒரு அறிமுகம் தேவையில்லையென நினைக்கின்றேன். remastersys என்ன செய்கிறதோ அதையேத்தான் PinguyBuilder -உம் செய்கிறது. PinguyBuilder என்றால் என்ன? அதன் பயன் என்ன? ஏன் PinguyBuilder-ஐ பயன்படுத்த வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு remastersys பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த கட்டுரையில் எந்தெந்த இடத்திலெல்லாம் remastersys என்று வருகிறதோ அங்கெல்லாம் PinguyBuilder என போட்டு படித்துக்கொள்ளுங்கள் அவ்வளவுதான். அந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் PinguyBuilder -க்கும் பொருந்தும். நாம் அடுத்ததாக, PinguyBuilder-ஐ தரவிறக்கம் செய்வது, நிறுவுவது, பயன்படுத்துவது எப்படி? என்று பார்ப்போம்.


PinguyBuilder -ஐ நிறுவுவதற்கு முன்பு ubiquity, ubiquity-frontend-gtk, ubiquity-slideshow-ubuntu ஆகிய பொதிகளை நிறுவிக்கொள்ளவேண்டும். இந்த பொதிகளை நிறுவாமல் இருந்தால் உபுண்டுவை live ஆக மட்டும்தான் பயன்படுத்த முடியும். நிறுவிக்கொள்ளதக்க(installable) வகையில் பயன்படுத்த முடியாது. ஆகையால் இவைகளை நிறுவ sudo apt-get install ubiquity ubiquity-frontend-gtk ubiquity-slideshow-ubuntu எனும் கட்டளையை முனையத்தில் இயக்கவும்.



அடுத்து PinguyBuilder, நீங்கள் PinguyBuilder -ஐ தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும். உபுண்டு 14.04 LTS பதிப்பு என்றால் PinguyBuilder_3.* பதிப்பையும், உபுண்டு 15.04+ பதிப்பு என்றால் PinguyBuilder_4.* பதிப்பையும் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் ஆகும் கோப்பு .deb வடிவில் இருக்கும். .deb வடிவில் இருக்கம் கோப்பை நிறுவுவது மிகவும் எளிதான ஒன்று. முனையத்தை(Terminal) திறந்து கொள்ளுங்கள். cd கட்டளை மூலமாக தரவிறக்கம் ஆன .deb கோப்பு எங்கு சேமிக்கப்பட்டதோ அங்கு செல்லுங்கள். அதன்பின் ls *.deb எனும் கட்டளையை இயக்கினால் தரவிறக்கம் ஆகியிருக்கும் .deb கோப்பு பட்டியலிடப்படும். அப்படி எந்தவித பட்டியலும் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால், கோப்பு தரவிறக்கம் ஆகியிருக்கும் இடத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும். அதற்கு cd கட்டையைப் பயன்படுத்திக்கொள்ளவும்.






sudo dpkg -i download-filename.deb என்ற கட்டளையை தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்துங்கள்(குறிப்பு: download-filename என்கிற இடத்தில் தரவிறக்கம் pinguybuilder இன் கோப்பு பெயரை அப்படியே கொடுக்கவும்). .deb பொதியை நிறுவும் பணி ஆரம்பிக்கப்படும். PinguyBuilder பொதிக்கான ஆதரவு பொதிகள் இல்லையென்றால், Errors were encountered while processing: pinguybuilder எனும் செய்தி உங்களுக்கு கிடைக்கும். இந்த பிழைச்செய்தியை சரிசெய்யவேண்டுமென்றால், கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். இணையத்தினை கணினியில் இணைத்த பின்பு sudo apt-get -f install எனும் கட்டளை வரியை இயக்குங்கள். அந்தப் பிழை சரிசெய்யப்பட்டு pinguybuilder முழுமையாக நிறுவப்பட்டு விடும்.




அதன்பின் முனையத்தில் sudo PinguyBuilder கொடுத்தால் PinguyBuilder -ஐ இயக்குவதற்கான கட்டளைவரிகள் என்னென்ன என்ற பட்டியல் கிடைக்கும். அவ்வாறு கிடைத்தால் உங்கள் கணினியில் PinguyBuilder முழுமையாக நிறுவப்பட்டுவிட்டது என்று அர்த்தம். home அடைவில் 5GB அளவுக்கு காலியிடம் அவசியம் இருக்க வேண்டும். இதை உறுதிசெய்து கொண்டு PinguyBuilder கட்டளையை இயக்குங்கள்.

ஏற்கனவே PinguyBuilder இயக்கி பாதியில் நிறுத்தியிருந்தால், sudo PinguyBuilder clean எனும் கட்டளையைக் கொடுத்து clean செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு sudo PinguyBuilder dist cdfs கட்டளையை இயக்குங்கள். இப்போது உங்களது உபுண்டு இயங்குதளத்தை backup எடுக்கும் பணி ஆரம்பிக்கப்படும். இந்த கட்டளை ஓடி முடிந்த பின்பு    sudo PinguyBuilder dist iso custom.iso எனும் கட்டளையைக் இயக்குங்கள். custom.iso எனும் இடத்தில் நீங்கள் விரும்பியபெயரை கொடுத்துக்கொள்ளலாம். கட்டாயமாக .iso என்று பெயர் முடியவேண்டும். உதாரணமாக myubuntu என்று கொடுக்கக்கூடாது, myubuntu.iso என்றுதான் கொடுக்க வேண்டும்.

இந்த கட்டளை ஓடி முடிந்த பின்பு /home/PinguyBuilder/PinguyBuilder/ சென்று பார்த்தீர்களேயானால் உங்கள் உபுண்டு இயங்குதளம், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத்தக்க, நிறுவக்கூடிய வடிவில் ISO கோப்பாக உருவாகி இருக்கும். இந்த அடைவிற்குள் இருக்கும் ISO கோப்புதான் உங்களின் உபுண்டு இயங்குதளம்.

PinguyBuilder, remastersys இரண்டையும் பொறுத்தமட்டிலே sudo PinguyBuilder dist cdfs கட்டளை மூலமாக உருவாக்கப்படும் கோப்புகளின் அளவு 4GB-க்கு அதிகமாக இருந்தால் ISO கோப்பு உருவாகாது. காரணம் 4GB மேல் இருந்தால் squashfs கோப்பினை உருவாக்க முடியாது. இந்த squashfs கோப்பில் தான் நாம் backup எடுக்கப்போகும் உபுண்டுவின் மொத்த root கோப்புமுறைமையும் இருக்கும். மேலும் தெரிந்துகொள்ள remastersys கட்டுரையைப் படிக்கவும்.

References:

1. http://pinguyos.com/2015/09/pinguy-builder-an-app-to-backupremix-buntu/
2. https://sourceforge.net/projects/pinguy-os/files/ISO_Builder/
3. http://gnutamil.blogspot.in/2014/01/remastersys.html