Mar 9, 2016

PinguyBuilder எனும் அற்புத கருவி

முதலில் தம்பி மேற்பனைக்காடு தெய்வாவிற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். தம்பி தெய்வாதான் PinguyBuilder கட்டளையை சோதித்துப்பார்த்துவிட்டு என்னிடம் கூறினார். அதன்பிறகுதான் நான் PinguyBuilder பற்றிய தேடலில் இறங்கினேன்.

PinguyBuilder என்பது remastersys -இன் மறுஉருவாக்கம். remastersys திட்டம் தொடர்ந்து மேம்படுத்தப்படாததால் அதை மேம்படுத்தி PinguyBuilder வெளியிடப்பட்டுள்ளது. PinguyBuilder ஐப் பற்றி தனியாக ஒரு அறிமுகம் தேவையில்லையென நினைக்கின்றேன். remastersys என்ன செய்கிறதோ அதையேத்தான் PinguyBuilder -உம் செய்கிறது. PinguyBuilder என்றால் என்ன? அதன் பயன் என்ன? ஏன் PinguyBuilder-ஐ பயன்படுத்த வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு remastersys பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த கட்டுரையில் எந்தெந்த இடத்திலெல்லாம் remastersys என்று வருகிறதோ அங்கெல்லாம் PinguyBuilder என போட்டு படித்துக்கொள்ளுங்கள் அவ்வளவுதான். அந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் PinguyBuilder -க்கும் பொருந்தும். நாம் அடுத்ததாக, PinguyBuilder-ஐ தரவிறக்கம் செய்வது, நிறுவுவது, பயன்படுத்துவது எப்படி? என்று பார்ப்போம்.


PinguyBuilder -ஐ நிறுவுவதற்கு முன்பு ubiquity, ubiquity-frontend-gtk, ubiquity-slideshow-ubuntu ஆகிய பொதிகளை நிறுவிக்கொள்ளவேண்டும். இந்த பொதிகளை நிறுவாமல் இருந்தால் உபுண்டுவை live ஆக மட்டும்தான் பயன்படுத்த முடியும். நிறுவிக்கொள்ளதக்க(installable) வகையில் பயன்படுத்த முடியாது. ஆகையால் இவைகளை நிறுவ sudo apt-get install ubiquity ubiquity-frontend-gtk ubiquity-slideshow-ubuntu எனும் கட்டளையை முனையத்தில் இயக்கவும்.



அடுத்து PinguyBuilder, நீங்கள் PinguyBuilder -ஐ தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும். உபுண்டு 14.04 LTS பதிப்பு என்றால் PinguyBuilder_3.* பதிப்பையும், உபுண்டு 15.04+ பதிப்பு என்றால் PinguyBuilder_4.* பதிப்பையும் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் ஆகும் கோப்பு .deb வடிவில் இருக்கும். .deb வடிவில் இருக்கம் கோப்பை நிறுவுவது மிகவும் எளிதான ஒன்று. முனையத்தை(Terminal) திறந்து கொள்ளுங்கள். cd கட்டளை மூலமாக தரவிறக்கம் ஆன .deb கோப்பு எங்கு சேமிக்கப்பட்டதோ அங்கு செல்லுங்கள். அதன்பின் ls *.deb எனும் கட்டளையை இயக்கினால் தரவிறக்கம் ஆகியிருக்கும் .deb கோப்பு பட்டியலிடப்படும். அப்படி எந்தவித பட்டியலும் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால், கோப்பு தரவிறக்கம் ஆகியிருக்கும் இடத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும். அதற்கு cd கட்டையைப் பயன்படுத்திக்கொள்ளவும்.






sudo dpkg -i download-filename.deb என்ற கட்டளையை தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்துங்கள்(குறிப்பு: download-filename என்கிற இடத்தில் தரவிறக்கம் pinguybuilder இன் கோப்பு பெயரை அப்படியே கொடுக்கவும்). .deb பொதியை நிறுவும் பணி ஆரம்பிக்கப்படும். PinguyBuilder பொதிக்கான ஆதரவு பொதிகள் இல்லையென்றால், Errors were encountered while processing: pinguybuilder எனும் செய்தி உங்களுக்கு கிடைக்கும். இந்த பிழைச்செய்தியை சரிசெய்யவேண்டுமென்றால், கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். இணையத்தினை கணினியில் இணைத்த பின்பு sudo apt-get -f install எனும் கட்டளை வரியை இயக்குங்கள். அந்தப் பிழை சரிசெய்யப்பட்டு pinguybuilder முழுமையாக நிறுவப்பட்டு விடும்.




அதன்பின் முனையத்தில் sudo PinguyBuilder கொடுத்தால் PinguyBuilder -ஐ இயக்குவதற்கான கட்டளைவரிகள் என்னென்ன என்ற பட்டியல் கிடைக்கும். அவ்வாறு கிடைத்தால் உங்கள் கணினியில் PinguyBuilder முழுமையாக நிறுவப்பட்டுவிட்டது என்று அர்த்தம். home அடைவில் 5GB அளவுக்கு காலியிடம் அவசியம் இருக்க வேண்டும். இதை உறுதிசெய்து கொண்டு PinguyBuilder கட்டளையை இயக்குங்கள்.

ஏற்கனவே PinguyBuilder இயக்கி பாதியில் நிறுத்தியிருந்தால், sudo PinguyBuilder clean எனும் கட்டளையைக் கொடுத்து clean செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு sudo PinguyBuilder dist cdfs கட்டளையை இயக்குங்கள். இப்போது உங்களது உபுண்டு இயங்குதளத்தை backup எடுக்கும் பணி ஆரம்பிக்கப்படும். இந்த கட்டளை ஓடி முடிந்த பின்பு    sudo PinguyBuilder dist iso custom.iso எனும் கட்டளையைக் இயக்குங்கள். custom.iso எனும் இடத்தில் நீங்கள் விரும்பியபெயரை கொடுத்துக்கொள்ளலாம். கட்டாயமாக .iso என்று பெயர் முடியவேண்டும். உதாரணமாக myubuntu என்று கொடுக்கக்கூடாது, myubuntu.iso என்றுதான் கொடுக்க வேண்டும்.

இந்த கட்டளை ஓடி முடிந்த பின்பு /home/PinguyBuilder/PinguyBuilder/ சென்று பார்த்தீர்களேயானால் உங்கள் உபுண்டு இயங்குதளம், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத்தக்க, நிறுவக்கூடிய வடிவில் ISO கோப்பாக உருவாகி இருக்கும். இந்த அடைவிற்குள் இருக்கும் ISO கோப்புதான் உங்களின் உபுண்டு இயங்குதளம்.

PinguyBuilder, remastersys இரண்டையும் பொறுத்தமட்டிலே sudo PinguyBuilder dist cdfs கட்டளை மூலமாக உருவாக்கப்படும் கோப்புகளின் அளவு 4GB-க்கு அதிகமாக இருந்தால் ISO கோப்பு உருவாகாது. காரணம் 4GB மேல் இருந்தால் squashfs கோப்பினை உருவாக்க முடியாது. இந்த squashfs கோப்பில் தான் நாம் backup எடுக்கப்போகும் உபுண்டுவின் மொத்த root கோப்புமுறைமையும் இருக்கும். மேலும் தெரிந்துகொள்ள remastersys கட்டுரையைப் படிக்கவும்.

References:

1. http://pinguyos.com/2015/09/pinguy-builder-an-app-to-backupremix-buntu/
2. https://sourceforge.net/projects/pinguy-os/files/ISO_Builder/
3. http://gnutamil.blogspot.in/2014/01/remastersys.html

No comments: