நேற்று காலை (13.05.2013 திங்கள்) நான் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். திங்கள் கிழமையன்று வழக்கமாக மனுநீதி நாள் நடைபெறும். பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளையும், தேவைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக எழுதி கொடுப்பார்கள்.
அந்த மனுக்கள் முதலில், மனுக்கள் பெறும் இடங்களில் பெறப்பட்டு அலுவலர்களால் வாசிக்கப்பட்டு கணினியில் பதியப்பட்டு பிறகு நமக்கு ஒரு ஒப்புகை சீட்டு (Acknowledgment) கொடுக்கப்படும்.
அப்பொழுது அங்கு கணினியில் நடந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் காரணம், அந்த கணினியில் உபுண்டு 10.04 LTS இயங்குதளம் பயன்படுத்தப்பட்டது.
நெருப்புநரி உலாவி (Online மூலம்தான் கோரிக்கைகள் பதியப்படுகின்றன) மூலம் பொதுமக்களின் மனுக்களில் உள்ள கோரிக்கைகள்,
மனுதாரரின் பெயர்,
தந்தை பெயர்,
முகவரி,
வட்டம்,
பிரச்சனையின பிரிவு,
தொடர்பு அலுவலர்,
கோரிக்கை எண்,
என பலசெய்திகள் விவரங்களோடு பதிவு செய்யப்பட்டு பிறகு மனுதாரருக்கு ஒப்புகைச்சீட்டு கொடுக்கப்படுகிறது. விவரங்களை உள்ளிட ibus பயன்படுத்தப்படுகிறது.
ஒப்புகைச் சீட்டிற்காக பிரிண்ட் கொடுக்கும் பொழுது அது ஒரு PDF கோப்பாக வருகிறது. அதன்பிறகு அந்த PDF கோப்பு பிரிண்ட் செய்யப்படுகிறது.
அங்கு பயன்படுத்தப்பட்ட பிரிண்டர் HP Printer. எந்த பிரச்சனையும் இல்லாமல் பிரிண்ட் வருகிறது.
HP நிறுவன Printer கள் லினக்ஸ் இயங்குதளத்துடன் நன்றாக ஒத்துழைப்பதாக தெரிகிறது. குறிப்பாக உபுண்டு லினக்ஸுடன் நன்றாக ஒத்துழைக்கிறது.
எனது அருமை தோழர் ம.பாண்டியராஜன் அவர்களுக்கு ஒரு HP Officejet பிரிண்டர் வாங்கினோம். தோழரும் லினக்ஸ் பயனாளர்தான். அவருடைய மடிக்கணினியில் உபுண்டு 12.04 LTS நிறுவியிருந்தோம். மிகவும் நன்றாகவே அந்த பிரிண்டர் உபுண்டுவுடன் வேலை செய்கிறது.
தமிழக அரசினுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இவ்வளவு பெரிய புரட்சி நடந்ததே மகிழ்ச்சியான விஷயம்தான்.
இதென்ன பெரிய புரட்சி என்கிறீர்களா வேறென்ன செய்வது இந்தியாவைப் பொறுத்தமட்டில் மனிதகுலத்தில் இயல்பாக நடக்க வேண்டிய விஷயங்களெல்லாம் எப்பொழுதும் புரட்சியாகவும் , புரட்சி செய்தும்தான் பெற வேண்டியுள்ளது.
இதுபோன்று தமிழக அரசின் அத்தனை நடவடிக்கைகளும் லினக்ஸு மூலமும் , Open Source தொழில்நுட்பம் மூலமும் மேற்கொள்ளப்பட்டால் மிகவும் மகிழ்ச்சிதான்.
இதைத்தவிர,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டண பெறுவத்தற்காக இருக்கும் கணினிகளில் Redhat Linux பயன்படுத்தப்பட்டு வருகிறது. (5-நாட்கள் மட்டும் நண்பருக்காக Data Entry செய்தேன்)