Mar 24, 2013

பைத்தான் - Operators and Expressions

அறிமுகம்:

நாம் எந்த மொழியில் நிரல் எழுதினாலும் அவைகளில் பெரும்பாலும் இருப்பவை Expressions.  உதாரணமாக 2+3 என்பது ஒரு Expression.  இதில் 2,3 ஆகிய இரண்டும் Operands, + என்பது Operator.  Operators and Operands இரண்டும் Expressions க்கு அவசியம் தேவை.

Operators களுக்கு Operands கள் கண்டிப்பாக தேவை.  தனக்கான வேலையை Operators கள் செய்ய வேண்டுமானால் , Operands கள் இல்லாமல் செய்ய முடியாது.

Operators:
மேலே கொடுத்திருக்கும் Expression ஐ நீங்கள் Python prompt -ல் செய்து பார்க்கலாம்.



Operators களும் அதன் பயன்பாடுகளும்:

பைத்தானில் மற்ற நிரல் மொழிகளில் பயன்படுத்தப்படுவதைப் போலவே Operators -களும் பயன்படுத்தப்படுகிறது.

கீழ்காணும் Operator-கள் பைத்தான் நிரலில் பயன்படுத்தப்படுகிறது.


Operator    : +
Name        : Plus - கூட்டல்
Explanation: இரண்டு மதிப்புக்களை கூட்டுகிறது.
Examples : 100+100, 200 என்ற மதிப்பைக் கொடுக்கும். 'a'+'b' 'ab'எனும் வெளியீட்டைக் கொடுக்கும்.



Operator : -
Name : Minus - கழித்தல்
Explanation : எதிர்மறை எண்களை கொடுக்கும் அல்லது ஒரு எண்ணை வெறொரு எண்ணிலிருந்து கழித்த மதிப்பைக் கொடுக்கும்.
Examples : -6.7 எதிர்மறையான மதிப்பைக் கொடுக்கும். 100-50 என்பது 50 ஐ வெளியீடாக கொடுக்கும்.



Operator : *
Name : Multiply - பெருக்கல்
Explanation : கொடுக்கப்படும் இரண்டு எண்களின் பெருக்கற்பலனை கொடுக்கும் அல்லது எழுத்துக்களை பல முறை வெளியிடும்.
Examples : 20*3 என்பது 60 என கொடுக்கும். gnu*3 என்பது 'gnugnugnu' என்பதை கொடுக்கும்.



Operator : **
Name : Power - அடுக்கு
Explanation : x -ன் அடுக்கு y என்றால் அதன் மதிப்பைக் கொடுக்கும்.
Examples : 2**4 என்பது 16 என்ற விடையினைக் கொடுக்கும். 2**4=2*2*2*2


Operator : /
Name : Divide - வகுத்தல்
Explanation : x ஐ y ஆல் வகுத்தால் என்ன விடையோ அதைக் கொடுக்கும்.
Examples : 4/3 என்பதை 1 என வெளியிடும் (இரண்டு முழு எண்களை வகுத்தால் விடையும் முழு எண்தான்).  4.0/3 அல்லது 4/3.0 ஆகியவைகள் 1.333333333333 என முழு வெளியீட்டையும் கொடுக்கும்.


Operator : //
Name : Floor Division
Explanation : Returns the floor of the quotient.
Examples : 4//3.0 என்பது 1.0 என வெளியீட்டைக் கொடுக்கும்.


Operator : %
Name : Modulo
Explanation : வகுத்தலில் மீதியினைக் கொடுக்கும்.
Examples : 8%3 என்பது 2 எனும் வெளியீட்டைக் கொடுக்கும். 25.5%2.25 என்பது 1.5 எனும் வெளியீட்டைக் கொடுக்கும்.


Operator : &
Name : Bit-wise AND - உம்மை
Explanation : Bitwise AND of the numbers
Examples : 5&3 என்பது 1 என வெளியீடு கொடுக்கும். (5,3 ஆகிய இரண்டையும் Binary Numbers ஆக மாற்றி அதற்கு AND Operation செய்தால் வெளியீடு 1 என கிடைக்கும்.)

Operator : |
Name : Bit-wise OR - அல்லது
Explanation : Bitwise OR of the numbers
Examples : 5|3 என்பது 7 என வெளியீடு கொடுக்கும்.  (5,3 ஆகிய இரண்டையும் Binary Numbers ஆக மாற்றி அதற்கு OR Operation செய்தால் வெளியீடு 1 என கிடைக்கும்.)

Operator : ~
Name : Bit-wise invert
Explanation : The Bitwise Inverstion of x is -(x+1)
Examples : ~5 என்பது -6 என வெளியீடு கொடுக்கும்.



Operator : ^
Name : Bit-wise XOR - விலக்கும் அல்லது
Explanation : 5^3 என்பது 6 என வெளியீடு கொடுக்கும்.



Operator : <
Name : Less Than - விடக்குறைவு



Operator : >
Name : Greater Than - விட மிகல்
Explanation : x>y என்பது சரியென்றால், True எனவும் இல்லையென்றால் False எனவும் வெளியீடு கொடுக்கும்.
Examples : 5>3 என்பது True எனவும். 3>5 என்பது False எனவும்.  5>10>3 என்பது False எனவும் வெளியீடு கொடுக்கும்.


Operator : <=
Name : Less Than or Equal - விடக்குறைவு சமம்
Explanation : x<=y என்பது சரியென்றால், True என வெளியீடு கொடுக்கும்.
Examples : 3<=6 என்பது True என வெளியீடு கொடுக்கும்.

Operator : >=
Name : Greater Than or Equal - விடமிகல் சமம்
Explanation : x>=y என்பது சரியென்றால் , True என வெளியீடு கொடுக்கும்.
Examples 100>=50 என்பது True என வெளியீடு கொடுக்கும்.

Operator : ==
Name : Equal To- சமம்
Explanation : இரண்டு மதிப்புக்கள் சமமாக இருக்கிறதா என பார்க்கிறது.
Examples : x=200; y=200; x==y எனபது True என வெளியீடு கொடுக்கும். a='linux'; b='liNux';  a==b என்பது False என வெளியீடு கொடுக்கும்.


Operator : !=
Name : Not Equal To - சமமில்லை
Explanation : இரண்டு பொருள்கள் சமமில்லையா என்பதை ஒப்பிட்டு பார்க்கிறது.
Examples : x=2; y=3; x!=y என்பது False என்ற வெளியீட்டைக் கொடுக்கும்.


Operator : not
Name : Boolean NOT - பூலியன் not
Explanation : x என்பது True என்றால் False எனவும், x என்பது False என்றால் True எனவும் வெளியீட்டைக் கொடுக்கும். நேர்மாறாக என்பதுதான் அர்த்தம்.


Operator : and
Name : Boolean AND - பூலியன் உம்மை
Explanation : இரண்டு மதிப்புகளும் சரியென்றால்தான் விடை True என கிடைக்கும். ஒன்று மாறுபட்ட மதிப்பென்றாலும் False எனதான் விடை கிடைக்கும்.


Operator : or
Name : Boolean OR -  பூலியன் அல்லது
Explanation : இருக்கும் மதிப்பில் ஒரு மதிப்பு Tru என்றாலும் விடை True எனக் கிடைக்கும்.

Mar 11, 2013

கணினி அறிவியல் தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு தட்டச்சுப் பயிற்சி அவசியம்



அறிமுகம்:

கணினி என்பது இன்று அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒரு கருவியாகிவிட்டது.  ஓரளவு வசதியான கிராமங்களில் கூட இன்றைக்கு இணையத்தை பயன்படுத்தி மக்களுக்கான இணையம் தொடர்பான சேவைகளை செய்து கொடுத்து வருகின்றனர்.  இணையம் என்பது அனைவரையும் அருகருகில் வைத்திருக்கிறது.  கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்தலாம் என்ற வசதி தகவல் தொழிநுட்பத்தில் அடுத்த மைல்கல் ஏன் புரட்சி என்று கூட சொல்லலாம்.

தமிழ அரசு தமிழக மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் மடிக்கணினி கொடுத்த பிறகு இன்று கணினியினை பயன்படுத்தும் மாணவர்களின் விகிதம் நேர்க்கோட்டு வித்தியாசத்தில் உயர்ந்திருக்கிறது.

கணினி அறிவியல் துறையினை பொறியியல் படிப்பிலும், கல்லூரிகளிலும் விரும்பி ஏற்று பல இலட்சம் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கணினி என்பது நாம் கொடுக்கும் உள்ளீடுகளைப் பெற்று அதற்குத் தகுந்த வெளியீட்டினை நமக்கு கொடுக்கிறது. கணினியினுடைய வேகம் உண்மையிலேயே அதிகம். நாம் எந்த அளவிற்கு உள்ளீட்டினைக் கொடுக்கிறோமோ அந்தளவிற்கு கணினி நமக்கு வெளியீட்டினைக் கொடுத்து நமது வேலைகளை விரைவாக முடித்து தரும்.

கணினி ஒரு நல்ல வேலைக்காரன், வேலை ஏவும் நம் கையில்தான் உள்ளது அதை நல்ல விதமாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்திக் கொள்வது. கணினிக்கு வேலையினை அதிகமாக ஏவ வேண்டுமென்றால் தட்டச்சு பயிற்சி அவசியம்.

மாணவர்களும் கணினியும்:


கணினி அறிவியல் தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணினி ஆய்வகம் என்பது பாடத்திட்டத்தில் அவசியமாக இருக்கக் கூடிய ஒன்று.

தோராயமாக ஆய்வகத்தில் மாணவர்கள் கணினியில் பயிற்சி எடுக்க 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் வரை கால அவகாசம் தினமும் கொடுக்கப்படும்.

ஏதாவது ஒரு பயிற்சியினைக் கொடுத்து அதை ஆசிரியர் இந்த 3-மணி நேரத்தில் செய்து முடிக்கச் சொல்வார்.  ஆனால் உண்மையில் நடப்பது என்ன?  அந்த நிரலையோ அல்லது அந்த பயிற்சிக்குண்டான  உள்ளீடை கணினியில் தட்டச்சு செய்து முடிக்கவே அதிக நேரம் எடுத்துக்கொள்வர். பிறகு அதில் வரும் பிழைகளைச் சரி செய்யவும்,  கொடுக்கப்பட்ட பயிற்சியினை மாதிரியாக வைத்து தாமாகவே ஒரு நிரலை எழுதவும் நேரம் போதாமல் ஆகி விடும்.   ஆகையால் தட்டச்சு தெரியாத காரணத்தினால் எந்த பயிற்சியினையும் முழுமையாக கற்க முடியாமல் போய் விடுகிறது.

தட்டச்சு செய்தல் என்பது கணினியினைப் பொறுத்தமட்டில் தவிர்க்க முடியாதது, அவசியமானது.

பெரும்பாலான மாணவர்கள் கணினியில் தட்டச்சு செய்யும் பொழுது இரண்டு கைகளிலும் இருக்கும் மொத்தமுள்ள பத்து விரல்களில் இரண்டு விரல்களை மட்டுமே பயன்படுத்தி தட்டச்சு செய்து  கொண்டிருக்கின்றனர்.  இது தவறான முறை.

தட்டச்சு செய்யும் போது ஒரு கட்டவிரலைத் தவிர மற்ற 9-விரல்களும் பயன்படுத்தியாக வேண்டும்.

இரண்டு வார்த்தைகளைக் கூட தட்டச்சு செய்யாமல் மறுமுறை தேவைப்படும் இடத்தில் அந்த இரண்டு வார்த்தைகளை cut செய்து paste செய்கின்றனர் மிகவும் சோம்பேறி தனத்துடன். இதற்காக நாம் Mouse ஐ இயக்கும் நேரத்தில் பாதிக்கு குறைவான நேரத்தில் அந்த வார்த்தைகளை தட்ட்ச்சு செய்து முடித்து விடலாம்.  ஆனால் பெரும்பாலவர்கள் அதை செய்வதில்லை காரணம் தட்டச்சு பலகையினை முறையாக இயக்கத்தெரியாமைதான் காரணம்.

கணினியினை Mouse ஐ பயன்படுத்தி இயக்குவதைவிட, தட்டச்சு பலகையினைப் பயன்படுத்திதான் அதிவேகமாக இயக்கமுடியும்.

தட்டச்சு பயிற்சி மாணவர்களுக்கு அவசியம்:


தட்டச்சு தெரிந்தால் கணினியினை இயக்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

நாம் தட்டச்சு செய்வதைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு நாமும் இதைப் போல தட்டச்சு செய்தால் நன்றாகயிருக்கும் என ஆசைப்படுவர்.  அதை அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது அது நமக்கு ஊக்கமாக அமையும்.

வலைப்பூ, இணையத்தில் கட்டுரை எழுதுவது, மின்-புத்தகம் வெளியிடுவது மற்றும் இறுதியாண்டு Project க்கு Document தயார் செய்வது, ஆய்வகத்தில் நிரல்களை விரைவாக தட்டச்சு செய்து முடித்து விட்டு பிழைகளை சரிசெய்ய நேரம் அதிகமாக கிடைக்கும், புதிது புதிதாக நிரல்களை எழுதி பார்க்கலாம் இது போன்று இன்னும் பல வேலைகளை மிகவும் எளிதாக செய்யலாம் அதற்கு தட்டச்சு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

ஆக மொத்தம் தட்டச்சு தெரிந்தால் கணினி என்பது மிகவும் எளிமையாகி விடும்.  இயக்குவதில் ஓர் ஆர்வம் ஏற்படும். உங்கள் துறைமீதே உங்களுக்கு ஓர் ஆர்வம் ஏற்பட தட்டச்சு பயிற்சியும் ஒரு காரணியாக அமையும்.

தட்டச்சு பயிற்சியில் சேர்தல்:



இப்பொழுது தியேட்டரில் வெளியாகும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு 150-200-300 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையினைக் கொடுத்துதான் நாம் திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கிறோம். ஆனால் இது வீண் செலவு எதற்கும் பயன்பட போவதில்லை. அதுவும் நமக்கு தெரியும்.

ஆனால், தட்டச்சு பயிற்சிக்கு ஒரு மாத கட்டணம் வெறும் 200ரூபாய் மட்டும்தான்.  நமது வாழ்நாள் முழுவதும் பயன்படும்படியான ஒரு செலவு. இடத்திற்கு தகுந்தாற்போல இந்த தொகை மாறலாம்.

குறைந்தது 3-மாதங்கள் பயிற்சி எடுத்தாலே போதும் தட்டச்சில் உங்களுக்கு நல்ல பரிச்சயம் ஏற்பட்டு விடும். நீங்கள் தட்டச்சு பயிலும்போதே கணினியிலும் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.  ஒரு சில கீகளைத் தவிர மற்றவையனைத்தும் கணினியின் தட்டச்சு பலகையின் அமைப்பை ஒத்தே இருக்கும்.

தட்டச்சு பயிற்சியில் இரண்டு நிலைகள் உள்ளன:

1.கீழ்நிலை (Lower)
2.மேல்நிலை (Higher)

இந்த இரண்டு நிலைகளில் கீழ்நிலையே கணினியினை இயக்கப் போதுமானது.

நீங்கள் விரும்பினால் அரசு நடத்தும் தட்டச்சு தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம்.  வெற்றி பெற்றவர்களுக்கு DEPARTMENT OF TECHNICAL EDUCATION - லிருந்து அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள தகுதியான சான்றிதழ்.  நான் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழை பதிவு செய்துள்ளேன்.

தேர்வு கட்டணம் : 600ரூபாய் என நினைக்கிறேன்.

முடிவாக:



கணினி அறிவியல் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் முதலமாண்டு படிப்பில் சேரும் பொழுதே தட்டச்சு பயிற்சியிலும் சேர்ந்து விட வேண்டும்.

தட்டச்சு பயிற்சியினைக் கற்றுக்கொண்டால் தான் கணினி எளிமையாகும்.

கணினியிலேயேதான் Type Writing Tutor Software இருக்கே அதைப் பயன்படுத்திக் கற்றுக்கொள்ளலாமே என கேட்கலாம். அந்த மென்பொருள்களின் மூலம் ஒருகாலும் நீங்கள் தட்டச்சு பயிற்சி பெற முடியாது. வேண்டுமானால் புதிப்பித்துக்கொள்ள உதவும் அவ்வளவுதான்.

இன்றே அருகில் இருக்கும் தட்டச்சு பயிற்சி மையத்திற்கு செல்லுங்கள். தட்டச்சு கற்றுக்கொள்ளுங்கள்.  கணினியில் வல்லூனராகுங்கள்.


***வாழ்த்துக்கள்***

தட்டச்சு தொடர்பான எந்த கருத்தானாலும் அதை வாசகர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய அனுபவத்தையும், ஆலோசனையையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.  நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம்.


Mar 6, 2013

ஓப்பன் சோர்ஸின் ஒப்பில்லா மொழி பைத்தான் - அடிப்படைகள் 2

Logical and Physical Lines

நாம் நிரல் எழுதும் போது ஒரு Single Line ஆக எதைப் பார்க்கிறமோ அது Physical Line எனப்படும்.

ஒரு Single Statement ஐ பைத்தான் எடுத்துக் கொள்வது Logical Line எனப்படும். ஒரு Physical Line -ல் எத்தனை Logical Line வேண்டுமானாலும் இருக்கலாம்.

print 'Hello World' - என்பது ஒரு Logical Line அதே நேரத்தில் இது ஒரு Physical Line -னும் ஆகும்.

ஒரு Single Physical Line -ல் ஒன்றுக்கு மேற்பட்ட Logical Lines களை கொடுக்க வேண்டுமானால் ; (semi colon) ஐ பயன்படுத்திக் கொடுக்கலாம். ;(semi colon) ஆனது ஒரு Logical Line முடிவடைவதைக் குறிக்கிறது.

உதாரணமாக:
i=45
print i
மேலே உள்ள இரண்டு statement களும் கீழ்காணும் விதமாகவும் இருக்கலாம்.
i=45;
print i;
அல்லது

i=45; print i;
அல்லது

i=45; print i

ஒரு வரியில் ஒரே ஒரு Logical Line எழுதுவதைதான் பைத்தான் மறைமுகமாக அதிகமாக பரிந்துரைக்கிறது.  ஏனென்றால் அவ்வாறு எழுதும் பொழுதுதான் நிரலானது படிக்கும் விதமாகவும், புரிந்து கொள்ளும் விதமாகவும் அமையும்.  பைத்தான் நிரலாளர்கள் யாரும் ; (Semi Colon) ஐ பைத்தானில் பயன்படுத்துவதில்லை.

Indentation

Whitespace என்பது பைத்தானில் மிகவும் முக்கியமான ஒன்று.  அதுவும் ஒரு line னினுடைய தொடக்கத்தில் whitespace என்பது மிகவும் முக்கியமானது.  இதுதான் Indentation என அழைக்கபடுகிறது.  இப்பொழுது இது தொடர்பான செய்திகளை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். Control Flow Staments (for, while) களைப் பற்றி படிக்கும் படிக்கும் பொழுது விரிவாக பார்ப்போம்.

பைத்தானில் ஒரே Level -லில் இருக்கும் அனைத்து Statement களும் Block எனப்படும்.

உதாரணமாக:

i=45
 print i
print 'Hello World'
இந்த நிரலை இயக்கிப் பார்த்தீர்களேயானால் கீழ்கண்ட பிழைச்செய்திகள் உங்களுக்கு கிடைக்கும்.

elcot@boss:~/Documents/pyex$ python indentation.py 
  File "indentation.py", line 2
    print i
    ^
IndentationError: unexpected indent

Indent ஐ பயன்படுத்துவது எப்படி?

Tabs மற்றும் spaces இரண்டையும் கலந்து பயன்படுத்த வேண்டாம்.  இந்த முறை அனைத்து இயங்குதளங்களிலும் வேலை செய்யாது. ஆகையால் Single Tab என்பது பொதுவாக பைத்தான் நிரலுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டு அல்லது நான்கு Spaces ஒவ்வொரு Indentation Level பயன்படுத்தலாம் என்ற போதிலும், Single Tab தான் பரிந்துரைக்கப்படுகிறது.

Mar 4, 2013

ஓப்பன் சோர்ஸின் ஒப்பில்லா மொழி பைத்தான் - அடிப்படைகள் 1



இந்த கட்டுரையில் நாம் பைத்தானைப் பற்றிய அடிப்படை செய்திகளைப் பார்க்க இருக்கிறோம். 'Hello World' என திரையில் Print செய்தால் மட்டும் போதுமா? போதாது , அதையும் தாண்டி நாம் நிறைய செய்ய வேண்டும். எதையாவது உள்ளீடாக பெறுதல், அதற்கான வெளியீட்டினை கொண்டு வருதல், ஒரு கால்குலேட்டர் நிரல் எழுதுதல் அல்லது நம்முடைய தேவைக்கான நிரல்களை எழுதுதல் என இன்னும் பல.  இவையனைத்தையும் நாம் பைத்தானில் constants மற்றும் variable களைப் பயன்படுத்துவதன் மூலமாகவே செய்ய முடியும் .

Literal Constants

literal constants க்கு உதாரணம் எண்கள் (Numbers)  மற்றும் எழுத்துக்கள் (Strings).  8, 9, 2.34, 6.7e-3, 'Use Linux', "It's a python!".  இவைகள் அனைத்தும் literal என அழைக்கப்படுகிறது ஏனென்றால் இவைகள் அதற்கன பொருளை நேரடியாகவே கொடுத்து விடுகின்றன. 8,9 ஆகிய இரண்டும் நேரடியாகவே தனக்கான மதிப்பை காட்டி விடுகிறது இதில் வேறெந்த மாற்றமும் இல்லை அதுபோலவே மற்ற எண்கள் அனைத்துமே. இவைகளனைத்தும் நிலையானவை ஏனென்றால் அதனுடைய மதிப்புகளில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது அத்துடன் மாறாமல் இருப்பது. ஆகையால் இவைகள் literal constants எனப்படும்.

எவையெல்லாம் literal constants?

Numbers
Strings

Numbers(எண்கள்):

பைத்தானில் எண்கள் நான்கு வகைப்படும் அவை:

Integers - முழு எண்கள் உதாரணமாக: 2, 200, 342, 3313
Long Integers - நீளமான முழு எண்கள் உதாரணமாக: 342342525335325335252
Floating Point - தசம எண்கள் உதாரணமாக: 3.4, 3543.4, 5464.12, 24.3E-4 E=10 ன் அடுக்கு. 24.3E-4=24.3*10 ன் அடுக்கு-4
Complex Numbers - சிக்கல் எண்கள் உதாரணமாக: 5+43j, 2.3-3.23j

Strings(எழுத்துக்கள்):


எழுத்துக்களினுடைய தொடர்ச்சியே Strings எனப்படும்.  கொத்துக் கொத்தாக இருக்கும் எழுத்துக்களே Strings. சரி, எழுத்துக்களை பைத்தானில் எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்?.

Single Quotes(') பயன்படுத்தி
'Welcome Linux'

Double Quotes(") பயன்படுத்தி
"What's your sweet name?"

Triple Quotes(""" அல்லது ''') பயன்படுத்தி
'," ஆகியவற்றை ஒற்றை வரிக்குத்தான் பயன்படுத்தாலாம்.  ஆனால் பல வரிகளை பயன்படுத்த Triple Quotes ஐப் பயன்படுத்தலாம்.

''' We can do anything in python. This is first line
""This is second line"""
this is third line'''



Escape Sequences(\) பயன்படுத்தி

what's your name? அப்படினு ஒற்றை வரியில் கொடுக்கணும் எப்படி கொடுப்பது? கொடுக்க முடியாது காரணம் 'what's is your name' என கொடுக்கும் பொழுது பைத்தான் குழம்பிவிடும். எந்த Single Quotes வரி முடிவதை குறிக்கிறது என பைத்தானுக்கு குழப்பம் வரும்.

இந்தக் குழப்பத்தை Escape Sequences (\-Back Slash) உதவியுடன் தவிர்க்க முடியும். அப்படியென்றால் நாம் எப்படி ஒற்றை வரியில் கொடுக்க வேண்டுமென்றால் 'what\' is your name?' என கொடுக்க வேண்டும். Double Quotes பயன்படுத்தும் பொழுதும் இந்த \ - Escape Sequences ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்து பயனுள்ள ஒரு Escape Sequences \n. இது ஒரு புதிய வரியை தொடங்கு என்பதை குறிக்கிறது. மற்றொன்று \t - Tab. இதுபோன்று பல Escape Sequences கள் உள்ளன இருந்தாலும் பெரும்பாலும் பயன்படுவதை இங்கு பார்க்கிறோம்.

ஒரு வரி யினுடைய இறுதியில் வெறும் \ மட்டும் கொடுத்தால், ஒரு வரி முடிந்து விட்டது இதன் தொடர்ச்சி அடுத்த வரியில் தொடங்குகிறது என்பதைக் குறிக்கிறது.

Raw Strings பயன்படுத்தி

எந்தவொரு குறிப்பிடத்தக்க செயல்பாடுகளும் ஒரு Strings க்கு இல்லையென்றால் இதைப் பயன்படுத்தலாம். r or R ஐ String ன் முன்னால் குறிப்பிட்டு விட்டால் அது Raw Strings. print r'hai' or print R'hai'.

Unicode Strings (ஒருங்குறி) பயன்படுத்தி

உலகளாவிய மொழிகளின் எழுத்துக்களை குறிப்பதற்கு unicode Strings பயன்படுகிறது.  ஒரு வரி அல்லது எழுத்தின் முன்னால் u or U வை சேர்த்து விட்டால் அது Unicode Strings.

Variables (மாறிலிகள்)

Variables என்பதன் மதிப்புகள் மாறிக்கொண்டே இருக்கும், நாம்மால் மதிப்புகளை மாற்றம் செய்யவும் முடியும்.  நாம் நிரலில் ஒரு variable ஐ உருவாக்கிவிட்டோம் என்றால், அதற்கான இடம் கணினியினுடைய முதன்மை நினைவகத்தில் (RAM) தனியே ஒதுக்கப்பட்டு விடும். நிரலில் ஒரு variable ஐ பயன்படுத்த வேண்டுமென்றால், literal constants ஐப் போல செய்ய முடியாது. அந்தெந்த variable -ன் பெயரினை தேவைப்படும் இடத்தில் கொடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Identifier Naming(அடையாளம் காண பெயரிடுதல்):

Identifier க்கான உதாரணம்தான் variables -கள்.  ஏதாவது ஒன்றை அடையாளம் கண்டுகொள்ள கொடுக்கப்படும் பெயர்தான் Identifiers.  Identifier களுக்கு பெயரிட சில விதிமுறைகள் உள்ளன அவைகள் என்னவென்று பார்ப்போம். சுருக்கமாக Variables = Identifiers

Identifier னுடைய முதல் எழுத்து அவசியமாக ஆங்கில எழுத்துக்களாகத்தான் இருக்க வேண்டும். Small letters or Caps letters இவைகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.  அல்லது _ (under-score) ஆக இருக்கலாம்.

முதல் எழுத்தை தவிர்த்து அதனை தொடர்ந்து வரும் மற்ற எழுத்துக்கள் '_' under-score ஆகவோ, upper or lowercase letters ஆகவோ அல்லது எண்களாகவோ (0-9)இருக்கலாம்.

Identifiers  ஆதாவது Variables களுக்கு கொடுக்கப்படும் பெயர்கள் Case Sensitive கொண்டவை. உதாரணமாக yourname and yourName இரண்டும் ஒன்றல்ல, வெவ்வேறானவையாக எடுத்துக்கொள்ளப்படும்.

உதாரணமாக:

ஏற்றுக்கொள்ளத்தக்க பெயர்கள் : x, y, _myvariable, __xyz, n23n, mxn__xxy போன்றவைகள்.

ஏற்றுக்கொள்ள முடியாத பெயார்கள் : 83xy, my name (இடைவெளி விட்டுக் கொடுப்பது), my-name போன்றவைகள்.

Data Types:

variables கள் வெவ்வேறு வகையான மதிப்புக்களை கொண்டிருக்க முடியும் அந்த வெவ்வேறு வகையான மதிப்புக்களைத்தான் நாம் data types என அழைக்கின்றோம்.  அடிப்படையான இரண்டு வகைகள் strings and numbers (எழுத்துக்களும், எண்களும்) .

Objects:

பைத்தான் நிரல்களில் பயன்படுத்தப்படும் எந்த ஒன்றுமே ஒரு Object தான். Python is Strongly Object Oriented ஆகையால் Numbers, Strings மற்றும் Functions கள் உட்பட அனைத்துமே Objects தான்.

உதாரணம்: variables and literal constants பயன்படுத்தி நிரல்

#Filename : var.py
i=10
print i
i=i+1
print i
s='''This is multi-line string.
This is second line.'''
print s

var.py என கோப்பிற்கு பெயரிட்டு சேமிக்கவும். முனையத்தில் python var.py என கொடுத்து இயக்கவும்.

வெளியீடு கீழ்கண்ட வாறு இருக்கும்.

elcot@boss:~/Documents/pyex$ python var.py
10
11
This is multi-line string.
This is second line.

நிரல் எப்படி வேலை செய்கிறது?

i எனும் variable க்கு = எனும் assignment operator ஐ பயன்படுத்தி 10 எனும் மதிப்பு கொடுக்கப்படுகிறது. 10 எனும் மதிப்புக்கு i எனும் variable ஐ இணைத்து வைக்கப்படுகிறது. அடுத்து print statement னினுடைய உதவியோடு i ன் மதிப்பு  10 என வெளியிடப்படுகிறது. அடுத்து மதிப்பு 1 ஐ i யோடு கூட்டி, கூட்டப்பட்ட மதிப்பு i லேயே சேமிக்கப்படுகிறது. i னுடைய மதிப்பு 11 என வெளியிடப்படுகிறது.

அதுபோல literal string , variable s க்கு assign செய்யப்பட்டு அது print செய்யப்படுகிறது.


Mar 2, 2013

ஓப்பன் சோர்ஸின் ஒப்பில்லா மொழி பைத்தான் - முதல் படிகள்

நாம் இப்பொழுது பைத்தானில் நிரல்களை எழுதுவது, சேமிப்பது மற்றும் அதை இயக்குவது எப்படி என பார்க்க போகிறோம். பைத்தான் மொழியினை நாம் இரண்டு வகைகளில் இயக்கலாம். ஒன்று Interactive Interpreter Prompt வழியாக மற்றொன்று Source File ஐ பயன்படுத்தி. இந்த இரண்டு வழிகளையும் பயன்படுத்துவது எப்படி என பார்ப்போம்.


Python ஒரு Interpreted Language என்று நாம் ஏற்கனவே பார்த்தோம்.  Python Interpreter ஐ ஆரம்பிக்க முனையத்தை திறந்து python என தட்டச்சு செய்து Enter Key யினை அழுத்துங்கள்.

Python Prompt ஐ விட்டு வெளியேறுதல்:

Python Prompt ஐ விட்டு வெளியேற Ctrl+Z கீக்களை ஒரு சேர அழுத்துங்கள்.

Editor னை தேர்வு செய்தல்:
Source File -னை உருவாக்க நமக்கு ஒரு நல்ல Editor தேவை. நல்ல Editor ஐ தேர்வு செய்வது என்பது ஒரு முக்கியமான வேலை. ஒரு நல்ல Editor ஆனது நமக்கு Python நிரலை எளிமையாக எழுதுவதற்கு  உதவி செய்யும்.

மிகவும் அடிப்படையான தேவை என்னவென்றால் Syntax Highlighting ஆகும்.நாம் தேர்வு செய்யும் Editor -க்கு Syntax Highlighting திறமை இருக்க வேண்டும்.  Python நிரலின் அனைத்து விதமான வித்தியாசங்களையும் வண்ணமிட்டு வேறுபடுத்தி காட்ட வேண்டும்.  அப்படி காட்டும் பொழுது நம்மால் நிரல்களை எளிதாக புரிந்து கொள்ள முடிவதோடு நிரல்களை எழுத  ஆர்வம் ஏற்படும் வகையிலும் இருக்கும்.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் விண்டோஸில் பைத்தானைப் பயன்படுத்துபவர்கள் Notepad -னை எந்த காரணத்தையும் கொண்டு பயன்படுத்த வேண்டாம்.

லினக்ஸ் பயனாளர்கள்  gEdit Editor -னை தாரளமாக பயன்படுத்தலாம்.  Vim, Emacs Editor களை கற்றுக்கொள்ளும் அளவிற்கு நேரமிருந்தால் அவைகளை பயன்படுத்தக் கற்றுக்கொண்டு பைத்தான் நிரல்களை எழுத ஆரம்பிக்கலாம். Vim or Emacs Editor களை பயன்படுத்தக் கற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக உங்களுக்கு அமையும்.

மீண்டும் அறிவுறுத்துவது என்னவென்றால், நாம் ஒரு நல்லவிதமான சரியான  Editor னை தேர்வு செய்ய வேண்டும்.  ஒரு நல்ல Editor நாம் பைத்தான் நிரலை மட்டுமல்ல வேறு எந்த நிரலையும் உருவாக்குவதற்கு ரொம்ப வேடிக்கையாகவும் மற்றும் எளிமையாகவும் இருக்கும் விதமாக உதவி செய்யும்.

Python Interpreter Prompt ஐ பயன்படுத்தி இயக்குதல்:


Source File -னைப் பயன்படுத்தி பைத்தான் நிரலை இயக்குதல்:





உங்களுக்கு பிடித்தமான நீங்கள் தேர்வு செய்த Editor -ல் கீழ்காணும் நிரலை தட்டச்சு செய்து helloworld.py என பெயரிட்டு Home Folder க்குள் சேமிக்கவும்.

# usr/bin/python
# Filename : helloworld.py
print 'Hello World'

இந்த நிரலை இயக்குவதற்கு, முனையத்தை திறந்து python helloword.py என தட்டச்சு செய்து Enter key னை அழுத்தவும்.  helloworld.py நிரலுக்கான வெளியீட்டினை Python Interpreter உடனே நமக்கு கொடுக்கும்.


வெளியீடானது கீழ்கண்டவாறு இருக்கும்.

$ python helloworld.py 
Hello World


மேலே காண்பிக்கப்பட்டுள்ளவாறு வெளியீடு இருந்தால், வாழ்த்துக்கள் நீங்கள் உங்களினுடைய முதல் பைத்தான் நிரலை வெற்றிக்கரமாக எழுதி இயக்கி விட்டீர்கள்.  அல்லது ஒருவேளை பிழை செய்திகளை காட்டினால், தட்டச்சு செய்த நிரலை சரிபார்க்கவும். பைத்தான் ஒரு Case-Sensitive Language.  print என்பதும் Print என்பதும் பைத்தானைப் பொறுத்த மட்டில் வேறு வேறு வார்த்தைகள். இரண்டும் ஒன்றல்ல.

நிரல் எப்படி வேலை செய்கிறது ?

நிரலினுடைய முதல் இரண்டு வரிகளை கவனித்தீர்களென்றால் தெரியும்.  அந்த வரிகள் Commenting line என அழைக்கப்படுகிறது.  பைத்தான் நிரலினுடைய எந்தவொரு வரிக்கும் முன்னால் # - குறியீட்டை சேர்த்து விட்டால் அவைகள் Commenting line, அத்தோடு அது நிரல்களை படிப்பவர்களுக்கு ஒரு Notes ஆகவும் உள்ளது.

print 'Hello World'

என்பதில் print என்பது நாம் கொடுப்பவைகளை print செய்வதற்கான ஒரு operator. 'Hello World' என்பது ஒரு String. 'Hello World' என்பதை உள்ளீடாக எடுத்துக் கொண்டு அதை திரையில் வெளியிடுகிறது. இதைப் பற்றியெல்லாம் நாம் பின்பு தெளிவாக பார்க்க உள்ளோம்.

உதவி பெறுதல்:



பைத்தானில் உள்ள ஒரு function -ஐப் பற்றியோ அல்லது statement பற்றியோ உங்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுகிறதென்றால் நாம் அதை பெற முடியும். அதற்கு help() எனும் inbuild function இருக்கிறது.

உதாரணமாக print னைப் பற்றிய உதவி வேண்டுமானால் python Interpreter -ல் help('print') எனக் கொடுத்து Enter key னை அழுத்த வேண்டியதுதான். உடனடியாக அதற்கான உதவிகள் திரையில் காண்பிக்கப்படும்.

q னை அழுத்தினால் உதவிப் பக்கத்தை விட்டு வெளியேறும்.


ஓப்பன் சோர்ஸின் ஒப்பில்லா மொழி பைத்தான் - பைத்தான் நிறுவுதல்


பைத்தான் மொழியானது விண்டோஸ், ஆப்பிள் மற்றும்  லினக்ஸ் என அனைத்து இயங்குதளங்களிலும் நன்றாக இயங்கக்கூடிய ஒரு அற்புதமான கணினி மொழி.

லினக்ஸ் இயங்குதளங்களில் பைத்தான் நிறுவுதல்:

நாம் ஏதாவது ஒரு லினக்ஸ் வழங்கலை பயன்படுத்திக் கொண்டிருந்தோமானால்(உதாரணமாக: உபுண்டு, பெடோரா, ரெட்ஹெட், மாண்ட்ரேக், சுசி லினக்ஸ் போன்றவைகள்.)

இந்த லினக்ஸ் இயங்குதளங்களில் ஏற்கனவே பைத்தான்    கண்டிப்பாக நிறுவப்பட்டு இருக்கும்.  லினக்ஸ் வழங்கல்களில் பைத்தான் நிறுவப்படாமல் இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை.

உங்களது  லினக்ஸ் இயங்குதளத்தில் பைத்தான் நிறுவப்பட்டுள்ளதா என சோதித்து பார்ப்பதற்கு கீழ்காணும் கட்டளையினை முனையத்தில் தட்டச்சு செய்து இயக்குங்கள்.

$python -V
Python 2.6.6


கவனிக்க:

$ - குறியீடானது முனையத்தின் Shell ஐ குறிப்பதாகும். V யினை பெரிய எழுத்தில் கொடுக்க வேண்டும். Small letter கிடையாது. $ குறியினையும் சேர்த்து தட்டச்சு செய்ய வேண்டாம். python -V என  தட்டச்சு செய்து இயக்கியவுடன், நிறுவப்பட்டிருக்கும் பைத்தான் பதிப்பினை வெளியீடாக கொடுக்கும். அப்படியென்றால் பைத்தான் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

அல்லது கீழ்காணும் வெளியீடு கிடைத்தால், பைத்தான் நிறுவப்படவில்லை என்று அர்த்தம்.

$python -V
bash: python: command not found

இந்த கட்டளையினை முனையத்தில் இயக்கி பிழை செய்தி கிடைப்பது அரிது. இருந்தாலும் ஒருவேளை பிழை செய்தி காட்ட வாய்ப்பிருக்கிறது.

பைத்தான் நிறுவியிருக்கப்படவில்லை எனில் நாம் நிறுவிக் கொள்ளலாம்.


முனையத்தை திறந்து,

sudo apt-get install python

எனக் கொடுத்து நிறுவிக்கொள்ளலாம்.

விண்டோஸ் இயங்குதளங்களில் பைத்தான் நிறுவுதல்:




விண்டோஸ் இயங்குதளங்களில் பைத்தான் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்காது. அட! பைத்தான் என்னங்க விண்டோஸ் இயங்குதளத்துடன் Internet Explorer இணைய உலாவியினை தவிர வேறு எதுவுமே நிறுவப்பட்டு வராது. ஆகையால் நாம்தான் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.

விண்டோஸ் இயங்குதளங்களுக்கான பைத்தான் பொதியினை தரவிறக்கம் செய்ய. இங்கு செல்லவும்.


தரவிறக்கம் செய்து மற்ற மென்பொருள்களை நிறுவுவதுப் போலவே பைத்தானையும் நிறவிக்கொள்ள வேண்டியதுதான்.

பைத்தான் மொழி கணினியில் இயங்குவதற்கு தயாராக இருக்கிறது. பிறகு என்ன வேலையினை ஆரம்பிக்க வேண்டியதுதானே !

ஓப்பன் சோர்ஸின் ஒப்பில்லா மொழி பைத்தான் - அறிமுகம்



பைத்தான் என்பது ஒரு சுதந்திர மற்றும் திறவூற்று கணினி மொழி ( Free and Open Source Computer Language). கற்றுக்கொள்வதற்கு மிகவும் எளிமையான  அதே நேரத்தில் சக்தி வாய்ந்த கணினி மொழியும் ஆகும்.

உபுண்டு லினக்ஸினுடைய பல்வேறு விதமான பயன்பாட்டு மென்பொருள்களும், இயங்குதளத்திற்குத் தேவையான பல நிரல்களும் பைத்தான் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 

பைத்தானினுடைய Syntax அதை கற்றுக்கொள்வதற்கும், செயல்படுத்துவதற்கும் நம்மை ஆர்வப்படுத்தும் விதத்தில் உள்ளது.

Guido van Rossum எனும் கணிப்பொறியாளர் தான் பைத்தான் மொழியினை உருவாக்கியவர்.  BBC யினுடைய "Monty Python's Flying Circus” எனும் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அவர் உருவாக்கிய மொழிக்கு 'பைத்தான்' என்று பெயரிட்டார்.

பைத்தான் என்றால் மலைப்பாம்பு என்று தமிழில் அர்த்தம். தனது இரைக்காக அது விலங்குகளைக் கொல்லும்.  தனது பலம் மிக்க நீளமான உடலமைப்பால் இரையினைச் சுற்றி நொறுக்கி அதன் பின்பு இரையினை விழுங்கி சாப்பிடும்.

பைத்தானின் சிறப்பம்சங்கள்:
  1. எளிமையானது
  2. கற்பதற்கும் எளிமையானது
  3. சுதந்திர மற்றும் திறவூற்று மொழி
  4. உயர்நிலை மொழி (High Level Language)
  5. எளிதில் எடுத்துச் செல்லக்கூடியது (Portability)
  6. இன்டர்பிரிட்டர் மொழி
  7. ஆப்ஜக்ட் ஓரியண்டட் மொழி
  8. நீட்டித்துக்கொள்ளக்கூடியது
  9. பொதிந்து கொள்ளக்கூடியது (Embedded)

ஒற்றை வரியில் பைத்தானைப் பற்றி சொல்ல வேண்டுமானால்:

பைத்தான் ஒரு எளிமையான, தெளிவான, நிரல்களை எழுதுவதற்கு எளிமையான, புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் நிர்வகிக்கக் கூடிய கணினி மொழி.


நிரலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

பைத்தான் என்னுடைய 'Favorite Programming Language'
--Eric S.Raymond--


பைத்தானைக் காட்டிலும் வேறொரு மொழியினை இன்னும் உருவாக்கவில்லை.
--Bruce Eckel--


கூகுள் நிறுவனத்தினுடைய ஒரு அங்கமாகவே பைத்தான் மொழி இருக்கிறது.  பைத்தானைப் பற்றிய அறிவு கூகுளில் வேலை செய்யும் நிரலாளர்களுக்கு அவசியமான ஒன்று.  இதை நாம் இந்த தளத்திற்கு சென்று உறுதிப் படுத்திக் கொள்ளலாம் [http://www.google.com/jobs/index.html].
--Peter Norvig--

மேலும் பைத்தானைப் பற்றி தமிழில் தெரிந்து கொள்ள:

பைத்தானைப் பற்றிய ஒரு சிறப்பான கட்டுரையினை நமது தோழர் ந.ர.செ.ராஜ்குமார் அவர்கள் தனது வலைப்பூவில் பதிவிட்டுள்ளார். 

நமது கணியம் இதழின் ஆசிரியர் ஸ்ரீனிவாசனின் பைத்தனைப் பற்றிய அறிமுக கட்டுரை.

மேலும்:

பைத்தானின் இணையதளம் : www.python.org

[பைத்தன் ஒரு முழு தொடராக  வெளிவரும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.]