கணினிகளின் பயன்பாடு மிக அதிகமாக, எல்லா பகுதிகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிட்டது. ஆனால் கணினியில் வேலை பார்ப்பவர்களுள் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தட்டச்சுப் பயிற்சி என்பது அடிப்படை அளவில்கூட இல்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
முன்பெல்லாம் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் 10வது முடித்துவிட்டாலே தட்டச்சு பயிற்சிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். ஆனால் இன்று கணினி என்பது அடிப்படை என்பதை அறிந்த பிறகும் தட்டச்சுப் பயிற்சியைக் கொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் தெரியவில்லை.
ஆண்டுதோறும் எட்டரை இலட்சத்திற்கும் அதிகமானோர் +2 தேர்வு எழுதினாலும், அவர்களில் 10 சதவீதம் பேர்கள் கூட ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படும் இந்தத் தொழில்நுட்பத் தேர்வுகளில் கலந்து கொள்ளுவதில்லை என்பது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
கோவையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் வணிகவியல் முதலாமாண்டு சேர்ந்துள்ள 1200-க்கும் அதிகமான மாணவ,மாணவியரில் வெறும் 7 பேர் மட்டுமே தட்டச்சுப் பயிற்சியில் குறைந்தபட்சமாக ஆங்கிலத்தில் கீழ்நிலையையாவது முடித்துள்ளனர் என்பது கவலைக்குரிய ஒன்றாகும். அந்தக் கல்லூரியில் 3 ஆண்டுகளுக்குள் தட்டச்சு தேர்ச்சி பெறுவோர் மட்டுமே பட்டம்பெற தகுதி பெற்றவர் ஆவர் என்று அறிவித்துவிட்டனர். அதனால் தற்போது மாணவ, மாணவியர் தட்டச்சுப் பயிற்சிக்கு சேர்ந்து வருகின்றனர்.
9ஆம் வகுப்பு படிக்கும்போதே மாணவ, மாணவியர் ஆங்கில தட்டச்சு கீழ் நிலையில் பயிற்சி எடுக்கலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்குச் செல்லலாம். இதனால் 9ஆம் வகுப்பு முடிக்கும்போதே ஆங்கில தட்டச்சில் கீழ் நிலை மற்றும் மேல் நிலை பயிற்சியை முடித்துவிடலாம். பத்தாம் வகுப்பில் மதிப்பெண்களை நோக்கியே செல்ல வேண்டியிருப்பதால் அந்த ஆண்டைத் தவிர்த்துவிட்டு, அடுத்த ஆண்டான +2 முதலாம் ஆண்டில் தமிழ் தட்டச்சில் கீழ் நிலை, மேல் நிலைப் பயிற்சியை முடித்து விடலாம். இதனால் +2 முடிக்கும்போது தட்டச்சில் இரு மொழிகளிலும் மேல்நிலைப் பயிற்சியை முடித்துவிடலாம்.
+2 முடித்து அந்தத் தேர்ச்சியுடன் தொழில்நுட்பத் தேர்வு தேர்ச்சியையும் இணைத்து வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து வைக்கலாம். இதனால் கூடுதல் தகுதியுடன் +2 கல்வி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் குரூப் 4 பகுதிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னிலையில் இருக்கலாம். அல்லது + 2விற்குப் பிறகு பட்டப் படிப்பைத் தொடர்ந்து முடித்தாலும் இந்தத் தொழில்நுட்பப் பயிற்சித் தேர்வு என்பது கூடுதல் தகுதியாக அவர்களுடன் என்றென்றும் இணைந்திருக்கும். ஏதேனும் ஒரு நிலையில் கணினியில் அமர்ந்து வேலை செய்யத் துவங்கும்போது இந்தத் தட்டச்சுப்பயிற்சி அப்போது பெரும் உதவியாக இருக்கும்.
தட்டச்சுத் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். எளிமையாக ஒரு கணினியை நிறுவி தரவுகளைப் பதிவு செய்து கொடுக்கும் வேலையைச் செய்து கொடுக்கும் சுயவேலைவாய்ப்பிற்கும் இது அடிப்படையாக அமையும். ஆங்கில தட்டச்சில் தேர்ச்சிப் பெற்றிருந்தாலே போதும், கணினியில் நேரடியாக தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மிக எளிதாகத் தட்டச்சு செய்து பழகும் வழிமுறைகள் தற்போது வந்துவிட்டன. அவற்றையும் பழகினால் கணினி வரைகலையில் பல்வேறு வேலை வாய்ப்புகளும், சுயதொழில் வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
5 comments:
U had said good point sir
முற்றிலும் உண்மை ஐயா
நன்றி சிவா.
ஐயா எழுதுவதற்கு கால இடைவெளி விடாமல் எழுதினீர்கள் என்றால் மிக நன்று
பணியில் இருப்பதால் எழுத முடியவில்லை. இனிமேல் இடைவெளி விடாமல் எழுத முயற்சிக்கிறேன். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
Post a Comment