May 16, 2014

குபுண்டுவில் Networking பிரச்சனை


BSNL வழங்கும் Broadband இணைய இணைப்பை மடிக்கணினியின் Network Adapter இல் இணைத்து பயன்படுத்தி வந்தேன். தேர்தல் முடிவுகளை பார்ப்போம் என நினைத்து இணையத்தை இணைத்த போது, என்ன காரணம் என்றே தெரியவில்லை திடீரென்று குபுண்டுவில் Internet Connection வேலை செய்யவில்லை. இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முன்னால் இணைய இணைப்பு ஒழுங்காகத்தான் வேலை செய்து கொண்டிருந்தது. சரி அப்புறம் என்ன எப்பொழுதும் போல இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தி ஒரு வழியாக தீர்வை கண்டுபிடித்தேன்.


முனையத்தை திறந்து அதில் sudo vi /etc/network/interfaces எனும் கோப்பை திறந்து அதில் கீழ்காணும் வரிகளை இணைத்தேன்.
#primary network
auto eth0
iface eth0 inet dhcp

இணைத்துவிட்டு கணினியினை மறுதொடக்கம் செய்து உள்நுழைந்த போது இணையம் வேலை செய்தது. ஆனால் Taskbar இல் அதற்கான எந்த அடையாளமும் காட்டப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே குபுண்டுவில் இணையம் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படுகிறது. KDE இல் Network Manager சரிவர செயல்படமாட்டேங்கிறது என்பது மட்டும் உண்மை. எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கான தீர்வுகள் இந்த உலகத்தில் எங்கோ ஓரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே நாம் செய்ய வேண்டியது தீர்வை இடைவிடாமல் தேடி அது இருக்கும் இடத்தை சென்றடைவதுதான். 

May 12, 2014

Kubuntu 14.04 இல் Automatic Update வசதியை நிறுத்துவது எப்படி?

குபுண்டுவில் இந்த Update வசதியானது அடிக்கடி வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தது. உபுண்டுவில் Update Manager என்று தனியாக இருக்கும் ஆகையால் எளிமையாக Update வசதியை நிறுத்த முடிந்தது. ஆனால் குபுண்டுவில் Muon Discover(Software Center) க்குச் சென்றுதான் நிறுத்த முடிகிறது.



Check for updates என்பதில் இருக்கும் Check குறியை நீக்கிவிடவும், புதிய வழங்கல்கள்களைப் பற்றிய அறிவிப்புகள் வேண்டாம் என்றால் Show new distribution releases என்பதில் Never என கொடுக்கவும்.

May 11, 2014

Kubuntu 14.04 LTS + Libreoffice Writer இல் தமிழ் தட்டச்சு


குபுண்டு 14.04 LTS இல் Libreoffice Writer 4.2.3.3 பதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Libreoffice Writer இல் தமிழை தட்டச்சு செய்வதில் இரண்டு பிரச்சனைகள். ஒன்று தமிழை தட்டச்சு செய்யமுடியவில்லை, இரண்டு தமிழ் எழுத்துகள் தெளிவாக தெரியவில்லை. குபுண்டுவில் தமிழை தட்டச்சு செய்வது தொடர்பாக ஏற்கனவே ஒரு பதிவை எழுதியிருந்தேன்.

நான் குபுண்டுவில் தமிழை தட்டச்சு செய்வதற்கு ibus ஐயும், தமிழ் 99 தட்டச்சு முறையினையும் கடைபிடிக்கிறேன். குபுண்டுவில் இந்த தமிழ் தட்டச்சு பிரச்சனை அவ்வளவாக என்னை தலைசுற்ற வைக்கவில்லை, காரணம் ஏற்கனவே இது தொடர்பாக எனக்கு இருந்த அனுபவம்தான். கூடுதலாக இந்தமுறை மகிழ்ச்சியே கிடைத்தது. அதற்கான காரணம் இங்கே.


முனையத்தில் sudo apt-get install libreoffice-gtk எனக் கொடுத்து libreoffice-gtk எனும் பொதியை நிறுவிபின் Home அடைவிற்குள் .bashrc கோப்புவில் கீழ்காணும் வரிகளை இணைத்த பின்

export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus
export OOO_FORCE_DESKTOP=gnome

கோப்புவை சேமித்துவிட்டு, Logout செய்துவிட்டு திரும்பி Login செய்யும் போது Libreoffice Writer இல் தமிழை தட்டச்சு செய்ய முடிந்தது.

ஏம்பா கதிர்வேலு இந்த மாதிரி சின்ன சின்ன பிரச்சனைகளுக்கான தீர்வையே எழுதிக்கிட்டு இருக்கிறீயே, பெரிய லெவல்ல எதுவும் எழுத மாட்டியாப்பானு கேட்கிறீங்க அப்படித்தானே? காரணம் விண்டோஸ் இயங்குதளத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல நம்ம லினக்ஸ் என்பதை நிரூபிப்பதற்காகத்தான் இதுபோன்ற பதிவுகள். அதோடு அடிப்படையான வேலைகளையே உபுண்டுவில் சரிவர செய்ய முடியாது என்கிற சிந்தனை வந்துவிட்டால், அப்புறம் எப்படிங்க லினக்ஸை பரப்புவது? ஆகவே விண்டோஸில் செய்கின்ற வேலைகளை எல்லாம் லினக்ஸிலும் செய்ய முடியும், அதற்கு மேலும் செய்ய முடியும். ஆனால் லினக்ஸில் செய்வதையெல்லாம் விண்டோஸில் செய்ய முடியாது. என்பதை நிரூபிப்பதற்காகவும்தான். இதுபோன்ற பதிவுகளை எழுதி வருகிறேன்.

May 10, 2014

குபுண்டுவில் KPPP மூலமாக Nokia 6300 + Bluetooth + Airtel GPRS பயன்படுத்தி இணைய இணைப்பை ஏற்படுத்துதல்


மடிக்கணினியில் நான் அடிக்கடி செய்யும் வேலைகள் என்னவென்றால், வலைப்பதிவிற்காக தமிழில் கட்டுரைகள் எழுதுவது, இணையத்தில் உலாவுவது மற்றும் நிரல்கள் எழுதிப்பார்ப்பது இவைகள்தான். இந்த வேலைகள் அனைத்தையும் உபுண்டு லினக்ஸ் மூலமாகத்தான் மேற்கொள்கிறேன். ஆகையால் உபுண்டுவை நிறுவியவுடன் மேற்கண்ட வேலைகளைச் செய்வதற்கு ஏற்ப இயங்குதளத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபடுவேன். அண்மையில் என்னுடைய மடிக்கணினியில் புதிதாக நிறுவிய குபுண்டு லினக்ஸில் தமிழ் தட்டச்சு தொடர்பான அமைப்புகளை சில பல போராட்டங்களுக்குப் பிறகு ஏற்படுத்தி விட்டேன். தமிழுக்காக போராடிய விபரங்களெல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக எழுதப்படும். ஆனால் இணைய இணைப்பை குபுண்டுவில் ஏற்படுத்துவதில்தான் பிரச்சனை விஸ்பரூபம் எடுத்தது. என்னிடம் இருப்பது ஒரு Nokia 6300 கைப்பேசி மற்றும் தோழர் பா.சக்திவேல் அவர்களினுடைய Bluetooth Stick இவை இரண்டையும் வைத்துதான் இணையத்தை பயன்படுத்தி வருகிறேன். அதாவது கைப்பேசியில் GPRS மூலம் கிடைக்கும் இணைய இணைப்பை Bluetooth Stick மூலமாக கைப்பேசியை மடிக்கணினியுடன் இணைத்து அந்த இணைய இணைப்பை மடிக்கணினியில் பயன்படுத்துதல். உபுண்டுவில் Mobile Broadband இணைப்பை ஏற்படுத்தியது போல, குபுண்டுவில் அவ்வளவு எளிதாக இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் குபுண்டுவில் Mobile Broadband வேலை செய்யவில்லை.

இந்த விஷயத்தில் குபுண்டுவானது இப்படி காலை வாரிவிடுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. சரி இனிமேல் இதைப்பத்தி கவலைப்பட்டுக்கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, அடுத்தகட்ட வேலையில் இறங்கிவிடுவோம் என முடிவு செய்து இணையத்தில் தேட ஆரம்பித்தேன். இணையத்தில் இது தொடர்பாக தேடிய போது 'குபுண்டுவில் Mobile Broadband வேலை செய்யாது' என தெளிவாக சொல்லிவிட்டார்கள். இன்னும் சில ஐடியாக்கள் கூறியிருந்தார்கள் அதெல்லாம் படித்துப்பார்த்து விட்டது எனக்கு தலைச்சுற்றல்தான் வந்தது. சரி அடுத்துகட்ட நடவடிக்கை என்ன? wvdial அல்லது KPPP இவைகள் மூலமாகத்தான் இணைக்க முடியும். wvdial மூலமாக இணைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது ஆனால் அதன்மூலமாகவும் இணைக்க முடியவில்லை. கடைசியாக இருப்பது KPPP ஒன்றுதான், wvdial மூலமாகவே இணைக்க முடியவில்லை KPPP யால் முடியுமா என்ற சந்தேகத்துடனே செய்துப்பார்த்தேன் கிடைத்தது வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

குபுண்டுவில் Nokia 6300 + Bluetooth + Airtel GPRS மூலமாக இணைப்பை ஏற்படுத்துதல்:


முனையத்தில் sudo apt-get install kppp wvdial bluez-utils bluez-tools எனக் கொடுத்து பொதிகளை நிறுவிக்கொண்டேன். அடுத்து Bluetooth Stick ஐ USB Port இல் இணைத்தேன். அதன்பின் முனையத்தில் hcitool scan கட்டளையை இயக்கினேன். இந்த கட்டளையை இயக்கியவுடன் Bluetooth Stick இன் MAC Address கிடைத்தது. அடுத்து sdptool search dun கட்டளையை இயக்கினேன். அதில் channel என்பதில் கிடைக்கும் மதிப்பை குறித்துக்கொண்டேன். எனக்கு 1 என கிடைத்தது.


அடுத்து முனையத்தில் sudo kate /etc/bluetooth/rfcomm.cfg எனக்கொடுத்து
bind yes;
device 00:1C:35:5F:60:5A;
channel 1;
ஆகியவைகளை சரியாக உள்ளீடு செய்தேன்.


அதன்பின் முனையத்தில் sudo rfcomm show 0 எனக்கொடுத்தேன் அதில் வெளியீடாக rfcomm0: 00:1C:35:5F:60:5A channel 1 clean என வெளியீடு கிடைத்து. அதன்பின் KPPP ஐத் திறந்து கீழ்காணும் முறையில் அமைத்தேன். படங்களைப் பார்க்கவும்.










உதவி:

May 8, 2014

Kubuntu 14.04 LTS இல் எழுத்துக்கள் அழகாக தோற்றமளிக்க

Kubuntu வைப் பற்றி ஏற்கனவே இரண்டு பதிவுகள் எழுதியிருந்தேன். அதனுடைய தொடர்ச்சியாகவும் இந்த பதிவை எடுத்துக்கொள்ளலாம். உபுண்டு லினக்ஸின் புதிய பதிப்பு 14.04 LTS அண்மையில்தான்(ஏப்ரல்-17 2014) வெளியிடப்பட்டது. உபுண்டு வழங்களின் கிளை வழங்களான குபுண்டுவும் அன்றைய தினமே வெளியிடப்பட்டது. என்னுடைய கிராமத்தில் கடுமையான மின்வெட்டு நிலவிய காரணத்தினால் 1GB அளவுள்ள குபுண்டுவை தரவிறக்கம் செய்வது என்பது இயலாத காரியமாக இருந்தது. ஆனால் நல்லதொரு வாய்ப்பாக இந்த மே மாத Open Source For You(LINUX For You) இதழுடன் இணைப்பாக வந்த DVD யில் Ubuntu(32, 64 bit), Kubuntu(32-bit) மற்றும் Lubuntu ஆகிய வழங்கல்கள் கொடுக்கப்பட்டன. ஆகையால் தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. குபுண்டுவை கணினியில் நிறுவிய பின் அதனுடைய எழுத்தின் தோற்றங்கள் எனக்கு திருப்தியாக இருக்கவில்லை. அதோடு மட்டுமில்லாமல் தமிழ் எழுத்துக்களும் கூர்மையாக(sharp) இல்லாமல் அசிங்கமாக தோற்றமளித்தது. இது தொடர்பாக இணையத்தில் தேடிக்கொண்டிருந்த போதுதான் கீழ்காணும் முறையில் எழுத்துக்களை அமைத்தால் அழகாக தோற்றமளிக்கும் என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி செய்து பார்த்தபோதுதான் குபுண்டு மட்டுமல்ல, தமிழ் எழுத்துக்களும் அழகாக தோற்றமளித்தது. குறிப்பாக Libreoffice Writer இல் தமிழ் எழுத்துக்கள் அற்புதமாகவும், தெளிவாகவும் தெரிந்தது.



படி 1:



Font Settings க்குச் சென்று Fixed widthUbuntu Mono 12, SmallUbuntu 9, Windows titleUbuntu 10 Bold எனவும், மற்ற அனைத்தையும் Ubuntu, Size 10, Regular என அமைக்கவும்.


படி 2:


Use Anti-aliasing என்பதை Enabled செய்யவும், configure எனும் பொத்தானை அழுத்தி Exclude Range என்பதை Uncheck செய்யவும், Sub-pixel renderingRGB க்குச் set செய்யவும். Hinting style என்பதை Slight என மாற்றம் செய்து OK கொடுக்கவும் அதன்பின் Apply பொத்தானை அழுத்தவும். இறுதியாக Logout செய்துவிட்டு Login செய்தால் குபுண்டு(Kubuntu) அழகாக தோற்றமளிக்கும்.

May 3, 2014

தமிழ் 99 விசைப்பலகை முறை - எனது அனுபவம்


நான் தமிழ் கம்ப்யூட்டர் இதழ் மூலமாகத்தான் கணினியில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது குறித்து தெரிந்து கொண்டேன். 2009 ஆம் ஆண்டு வல்லத்தில்(தஞ்சாவூர்) இருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி படித்த போதுதான் எனக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. மடிக்கணினி வந்த பின்புதான் நான் வலைப்பதிவை எழுதத் தொடங்கினேன். இதுநாள் வரையிலும் கணினி மற்றும் வலைப்பதிவு ஆகிய இரண்டிலும் தமிழை ஒலியியல்(Phonetic) முறையில்தான் தட்டச்சு செய்து வந்தேன். கணினியில் தமிழைப் பார்த்து பிரமித்துப் போன அந்த நேரத்தில் ஒலியியல் முறையில் தமிழை தட்டச்சு செய்வதென்பது மிகவும் எளிமையான காரியமாக தெரிந்தது. ஒலியியல் முறையில் தமிழை தட்டச்சு செய்வதைப் பார்த்த எனது வகுப்புத் தோழர்கள்,  உங்களுக்கு தமிழ் தட்டச்செல்லாம் தெரியுமா கதிர்வேல்? என ஆச்சர்யத்துடன் கேட்டனர். காரணம், 'கணினியில் தமிழை தட்டச்சு செய்ய வேண்டுமானால் அதற்கென தனியாக, தட்டச்சு பயிற்சி மையத்திற்குச் சென்று தமிழ் தட்டச்சு முறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.' என்கின்ற நினைப்புத்தான். ஆனால் உண்மை வேறு.

ரவி அவர்களின் வலைப்பதிவின் மூலமாகத்தான் தமிழ் 99 விசைப்பலகை முறையினைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றேன். தமிழ் 99 விசைப்பலகை முறை பற்றி 2011 ஆண்டே எனக்கு தெரிந்திருந்தாலும், பொறியியல் கல்வியில் இருந்த நேர அழுத்தத்தின் காரணமாக தமிழ் 99 விசைப்பலகை முறையில் பயிற்சி பெற முடியவில்லை. ஆனால் எப்படியாவது இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், இன்னும் தமிழை ஒலியியல் முறையிலேயே தட்டச்சு செய்து கொண்டிருக்கின்றோமே என்ற குற்ற உணர்வும் என்னிடம் இருந்து கொண்டிருந்தது. இந்த பதிவு முழுவதையும் தமிழ் 99 முறையிலேயே தட்டச்சு செய்ததினால் அந்த குற்ற உணர்விலிருந்து இன்று நான் விடுபடுகிறேன். நான் செய்த தவறு என்னவென்றால், ஒலியியல் முறையில் தமிழை தட்டச்சு செய்து பழகியதுதான். தமிழை தட்டச்சு செய்து பழகிய போதே தமிழ் 99 முறையில் பழகியிருக்க வேண்டும். அதனால் எனக்கு தமிழ் 99 முறையில் 4-வருட அனுபவம் கிடைத்திருக்கும்.

உபுண்டு லினக்ஸில் Ibus ஐயும், விண்டோஸில் NHM Writer ஐயும் தமிழ் 99 முறையில் தட்டச்சு செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே ஒலியியல் முறையில் தமிழை தட்டச்சு செய்து பழகியவர்களுக்கு, தமிழ் 99 முறையில் தமிழை தட்டச்சு செய்ய தயக்கம் இருக்கத்தான் செய்யும். அந்த தயக்கத்தை விட்டு வெளியே வாருங்கள். தமிழை ஒலியியல் முறையில் தட்டச்சு செய்வதை விட, தமிழ் 99 முறையில் தட்டச்சு செய்வது மிக மிக எளிமையானது.

ஏன் ஒலியியல் முறையில் இருந்து, தமிழ் 99 விசைப்பலகை முறைக்கு மாற வேண்டும்?

"தமிழ் 99 முறையில் Shift Key ஐ பயன்படுத்தாமலேயே உயிர், மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துக்களை தட்டச்சு செய்ய முடிகிறது. ஆகையால் விரைவாக தட்டச்சு செய்ய முடிவதுடன், 50% நேரமும் மிச்சமாகிறது." உதாரணமாக இந்த இரட்டை மேற்கோள் குறிக்குள் இருக்கும் வாக்கியத்தை தமிழ் 99 முறையில் தட்டச்சு செய்ய 157 விசையழுத்தங்களும், ஒலியியல் முறையில் தட்டச்சு செய்ய 191 விசையழுத்தங்களும் தேவைப்படுகிறது. தமிழ் 99 முறையில் 34 விசையழுத்தங்கள் மிச்சமாகிறது. உதாரணத்திற்கு, 20 வார்த்தைகளுக்கு 34 விசையழுத்தங்கள் மிச்சப்பட்டால், 200 வார்த்தைகளுக்கு 340 விசையழுத்தங்கள், 2000 வார்த்தைகளுக்கு 3400 விசையழுத்தங்கள், 20000 வார்த்தைகளுக்கு 34000 விசையழுத்தங்கள் மிச்சப்படுகிறது. இதனால் நேரம் மிச்சம், உழைப்பு மிச்சம் குறிப்பாக விரல்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது. ஒலியியல் முறையிலிருந்து, தமிழ் 99 முறைக்கு மாறும் போது இதை நீங்கள் நன்றாக உணர்வீர்கள்.

தமிழ் 99 முறையில் 'வணக்கம்' என்பது  'வணக்கம்' என்றே மனதில் பதியப்படுகிறது. ஆனால், ஒலியியல் முறையில் 'வணக்கம்' என்பதை தட்டச்சு செய்யும் போது 'vanakkam' என மனதில் பதிகிறது. இது நம் தாய் மொழித் தமிழை முற்றிலுமாக அழிக்கும் முயற்சியேயாகும்.

ச்ச, ட்ட, த்த, ப்ப, ன்ன, ம்ம, ய்ய, க்க, ஞ்ஞ போன்ற எழுத்துக்களுக்கு அந்தந்த விசைகளை இருமுறை அழுத்தினாலே போதும்.

தமிழ் 99 முறை, தமிழக மற்றும் சிங்கப்பூர் அரசுகளால் அங்கிகரிக்கப்பட்ட முறையாகும்.

மேலும் தெரிந்துகொள்ள :





எளிமையாக எப்படி கற்றுக்கொள்வது?

உயிரும்(அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - 12 எழுத்துக்கள்), மெய்யும்(க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் - 18 எழுத்துக்கள்) சேர்ந்தால் உயிர்மெய்(க்+அ=க, வ்+அ=வ, த்+ஐ=தை, க்+ஓ=கோ). இதை மனதில் வைத்துக்கொள்ளவும். பழகும் போது முதலில் இந்த 30 விசைகளையும் பழகுங்கள். நான் இரண்டே நாட்களில் தமிழ் 99 முறையை கற்றுக்கொண்டேன். உதவிக்கு இந்த கோப்பை தரவிறக்கம் செய்யவும்.

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும் நாம் அனைவரும் இங்கு நினைவு கூற வேண்டும். செம்மொழியான தமிழை தமிழில் சிந்தித்து தட்டச்சு செய்ய இன்றே அனைவரும் தமிழ் 99 தட்டச்சு முறைக்கு மாறுவோம்!

நடைமுறைச் செய்தி: இந்த கட்டுரையில் உள்ள மொத்த வார்த்தைகள் 535. மேலே உள்ள கணக்குப்படிப் பார்த்தால் தமிழ் 99 முறையினால் 884 விசையழுத்தங்கள் மிச்சமாகிறது.



References:

May 2, 2014

LINUX For You (LINUX For You is Now Open Source For You) Magazine இல் - எனது வேண்டுகோள்


CentOS 6.5 இயங்குதளம் எனக்கு தேவைப்பட்டது. ஆகையால் அதை Linux For You Magazine க்கு ஒரு வேண்டுகோளாக வைத்தேன். அந்த வேண்டுகோள் May-2014 Linux For You(Open Source For You) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Open Source For You குழுவினருக்கு நன்றி !