Dec 27, 2017

ராஜீவ் காந்தி சாலை - நாவல்

கடந்த இரண்டு வருடமாக தேடியும் கிடைக்காத எழுத்தாளர் விநாயக முருகனின் ராஜீவ் காந்தி சாலை நாவல் சென்னை புத்தகக் கண்காட்சி 2018 -இல் வெளிவருகிறது. இந்நாவல் தகவல் தொழில்நுட்பத்துறையைப் பற்றியது என்பதால் மிகவும் ஆவலாக இருக்கிறேன். உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வெளிவருகிறது.


Dec 26, 2017

மின்னணு வெளியில் மிதக்கிற மனிதர்கள்

இம்மாத(டிசம்பர்-2017) உயிர்மை இதழில் வெளிவந்துள்ள ந.முருகேசபாண்டியனின் கட்டுரை. முகநூல், வாட்ஸ்அப், திறன்பேசி ஆகியவைகள் மனிதனின் அன்றாட நடவடிக்கையின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பற்றி இந்தக் கட்டுரை விவாதிக்கிறது.

கட்டுரையை மொத்தமாக தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

நன்றி: உயிர்மை










Dec 10, 2017

உபுண்டு 17.10 -இல் இணைய இணைப்பு பிரச்சனையும் - தீர்வும்

உபுண்டு 17.10 -இல் WiFi மூலமாகத்தான் நான் இணையம் பயன்படுத்தி வருகிறேன். ஒரு நாள் திடீரென்று இணைய இணைப்பு கிடைக்கவில்லை. Connection Established ஆகும் ஆனால் இணையம் வராது. WiFi, LAN, Mobile USB tethering என்று எதன் மூலமாக முயற்சித்தாலும் இணையம் கிடைக்கவில்லை.

அப்புறம் என்ன வழக்கம்போல கூகுளில் தேட ஆரம்பித்தேன். தீர்வு கிடைத்தது. தீர்வு இதுதான்.

முனையத்தை(Terminal) திறந்து கொண்டேன். கீழ்காணும் கட்டளைவரிகளை ஒன்றன் பின் ஒன்றாக இயக்கினேன்.



sudo systemctl disable systemd-resolved.service
sudo service systemd-resolved stop

அதன்பின் /etc/NetworkManager/NetworkManager.conf கோப்பினைத் திறந்து அதில் [main] பகுதியில் dns=default எனும் வரியை சேர்த்து கோப்பினை சேமித்தேன்.

sudo vim /etc/NetworkManager/NetworkManager.conf



அதன்பின் கீழ்காணும் கட்டளைவரி மூலமாக /etc/resolv.conf கோப்பினை நீக்கினேன்.

sudo rm /etc/resolv.conf

அடுத்ததாக கீழ்காணும் கட்டளைவரி மூலமாக network-manager சேவையை மறுதொடக்கம் செய்தேன்.

sudo service network-manager restart

இப்போது இணையம் என்னுடைய மடிக்கணினியில் கிடைத்தது. மகிழ்ச்சி!


Oct 1, 2017

கிண்டில்



சின்ன கற்பனை செய்வோம். "புத்தகம் படிப்பதற்காக ஒரு கருவி இருக்கிறது. அந்த கருவி ஒரு சிறிய புத்தகம் அளவில்தான்  இருக்கும். எடை மிகவும் குறைவாக இருக்கும். அந்த கருவியில் நம்முடைய புத்தகங்களையெல்லாம் மின் புத்தக வடிவில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். மேலும் ஏதேனும் ஒரு புத்தகம் வேண்டுமென்றால் இணையம் மூலமாக பணம் செலுத்தி புத்தகக்கடையில் இருந்து  புத்தகம் வாங்கி அந்தக் கருவியில் சேமித்துக்கொள்ளலாம்.

அந்த கருவியின் திரை கண்ணை உறுத்தாமல் தாளில் அச்சிடப்பட்ட எழுத்துக்களை படிப்பது போன்றே இருக்கும். இரவு நேரத்தில் படிப்பதற்காக ஒளியுடன் கூடிய திரை இருக்கும். புத்தங்களை படித்துக்கொண்டிருக்கும் போது ஏதேனும் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லையென்றால் அந்த வார்த்தையை தேர்வு செய்தால் அந்த வார்த்தையை அகராதியில் தேடி அதன் அர்த்தத்தை காண்பிக்கும், விக்கிப்பீடியாவிலிருந்து வேண்டுமென்றால் விக்கிப்பீடியாவிலிருந்து காண்பிக்கும். மொழிபெயர்க்கவேண்டுமென்றால் வேறுமொழியில் மொழிபெயர்த்து காண்ப்பிக்கும்.

நமக்குப் பிடித்தமான வரிகளை குறிப்பெடுத்து சேமித்து வைத்துக்கொள்ள முடியும். அந்தக்குறிப்பில் புத்தகத்தின் பெயர், பக்க எண் போன்ற விவரங்களையும் அந்தக் கருவி சேமித்து வைக்கும். உங்களுக்கு தேவையான அளவிற்கு எழுத்துக்களின் அளவினை கூட்டி குறைத்துக்கொள்ள முடியும். அந்த கருவியில் புத்தங்களை படிப்பதோடு மட்டுமில்லாமல் உங்களுடைய .doc, .docx, .txt, .pdf கோப்புகளையும் படிக்க முடியும். இன்னும் பல வசதிகளும் இருக்கின்றன."

இப்படி ஒரு கருவி நிஜத்தில் இருந்தால் புத்தகங்கள் படிப்பவர்களுக்கு எவ்வளவு வசதியாக இருக்கும். அருமையாக இருக்குமல்லாவா? நிச்சயமாக. மேலே நாம் பார்த்த அந்த கருவி நிஜத்தில் இருக்கிறது. அப்படியா? ஆம். அந்த அற்புதமான கருவிதான் கிண்டில். கிண்டில். கிண்டில்.

கடந்த திங்கள் கிழமை(25.09.2017) அன்று கிண்டில்(Kindle Paperwhite) எனக்கு கிடைத்தது. கிண்டிலைப் பற்றி உங்களுக்கு முழுமையாக தெரிய வேண்டுமென்றால் பா.ராகவன் அவர்களின் கட்டுரையையும், கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி மின் பதிப்பித்தலின் தாக்கம் என்ற தலைப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சியில் பேசிய உரையினையும் கேட்கவும். கிண்டிலைப் பற்றிய அறிமுகத்தை அவர்களைவிட நான் சிறப்பாக தந்து விட முடியாது. கிண்டில் பற்றி Free Tamil Ebooks தளத்தின் கட்டுரை

ஆகையால், கிண்டிலுடனான என்னுடைய அனுபவத்தை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி மின் பதிப்பித்தலின் தாக்கம் என்ற தலைப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சியில் பேசிய காணொளி Free Tamil Ebooks தளத்திலிருந்து கிடைத்து.

பத்ரியின் உரையினை கேட்ட பிறகு கிண்டில் மீதான ஆர்வம் எனக்கு மேலும் அதிகரித்தது. எப்படியாவது கிண்டிலை வாங்கிவிட வேண்டும் என ஆர்வம் அதிகரித்தது.

எனது மதிப்பிற்குரிய கணியம் ஶ்ரீனிவாசன் சார் அவர்களிடம். சார் கிண்டில் வாங்கலாமா? அது பயனுள்ளதாக இருக்குமா? என கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தேன். அதற்கு அவர், "Buying a kindle is a best investment you will be doing in your life." என பதில் அனுப்பியிருந்தார். எனக்கு மேலும் ஆர்வம் அதிகமானது.

ஆர்வம் இருந்தது ஆனால் பணம்தான் கிடைக்கவில்லை.



நான்கு வகையான கிண்டில் கிடைக்கிறது. அவைகள்

All-New Kindle - Rs. 5,999
Kindle Paperwhite - Rs. 10,999
Kindle Voyage - Rs. 16,499
Kindle Oasis - Out of stock

All-New Kindle - இது அடிப்படை வசதிகளை மட்டும் கொண்டது. இரவில் படிப்பதற்கான back light வசதி இதில் கிடையாது. Screen resolution 167 ppi. 3G வசதி கிடையாது. WiFi வசதி மட்டும் உண்டு. இதன் விலை 5,999 ரூபாய்.

Kindle Paperwhite - இது All-New Kindle ஐ விட மேம்பட்டது. இரவில் படிப்பதற்கான Back light வசதி இதில் உண்டு. Screen resolution 300 ppi. WiFi, 3G என இரண்டு வகையாக கிடைக்கிறது. இரண்டும் சேர்த்து கிடைக்காது. WiFi அல்லது 3G இவற்றில் ஏதாவது ஒரு வசதியுடன் வாங்கிக்கொள்ளலாம். 300 ppi திரைகொண்டுள்ளதால் எழுத்துக்கள் துல்லியமாக இருக்கும். இதன் விலை 10,999 ரூபாய்

Kindle Voyage - இது All-New Kindle, Kindle Paperwhite இவையிரண்டையும் விட மேம்பட்டது. Pagepress, Adaptive light sensor, WiFi அல்லது WiFi+ Free 3G வசதிகளைக் கொண்டது. இதன் விலை 16, 499 ரூபாய்

சம்பள பணம் வந்தவுடன் எனக்கான அறை வாடகை, அலுவலகம் செல்வதற்கான பேருந்து பயண செலவு, உணவு போன்றவற்றிக்கான பணத்தை எடுத்துக்கொண்டு மீத பணத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவேன். அடிப்படைச் செலவு போக வேறு ஏதாவது செலவிற்கு கூடுதலாக பணம் வேண்டுமென்றால் வீட்டிலிருந்து வாங்கி கொள்வேன். கூடுதலான தொகை என்றால் வீட்டில் முன்கூட்டியே சொல்லிவிடுவேன். வீட்டிற்கென்று மாதம் மாதம் அனுப்பி வைக்கும் பணத்தில் ஒரு ரூபாய்கூட எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிற கொள்கையோடு இருப்பவன். மாத இறுதியில் பணத் தட்டுப்பாடு 500, 1000 ஏற்பட்டால் கூட நண்பர் ஜெகனிடம் வாங்கிக்கொள்வேன். வீட்டில் உள்ளவர்களை சிரமப்படுத்த மாட்டேன்.

நான் Kindle Paperwhite வாங்க திட்டமிட்டிருந்தேன். அதனுடைய திரையின் துல்லியம், இரவு நேரத்தில் படிப்பதற்கான screen back light  வசதி என்னை கவர்ந்தது. Kindle Paperwhite இன் விலை 10, 999 ரூபாய். அந்த தொகையினைப் பற்றி அம்மாவிடம் இந்த மாதம் தெரிவித்து விட்டு அடுத்த மாதச் சம்பளத்தில்  எடுத்து வைத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தேன். அடுத்த முறை கிண்டில் Offer இல் வரும்போது இந்த தொகையினை வைத்து அதை வாங்கி விட வேண்டும் என்பதுதான் திட்டம்.

ஆனால், திடீரென்று கடந்த வாரம் Amazon festival big deal offer இல் amazon prime customer க்கு Kindle Paperwhite 3000 ரூபாய் offer என போட்டிருந்தார்கள். 10,999 ரூபாய் கொண்ட Kindle Paperwhite இன் விலை 8,000 ரூபாய் என போட்டிருந்தார்கள். இந்த Offer முடிவதற்குள் எப்படியாவது கிண்டிலை வாங்கி விட வேண்டும் என நினைத்து என்னுடைய நண்பர்களிடம் பணம் கேட்டேன். மாத இறுதி என்பதால் நண்பர்களிடமிருந்து 8,000 ரூபாய் பணத்தை திரட்ட முடியவில்லை. நண்பர் ரெங்கராஜ்,  "நான் 2,000 ரூபாய் பணம் தருகிறேன் கதிர்  மீதப் பணத்தை திரட்டுங்கள்." என முதலில் பச்சைக்கொடி காட்டினார். நன்றி ரெங்கராஜ். மீதப் பணத்தை திரட்டுவதற்காக இரண்டு மூன்று நண்பர்களிடம் கேட்டுப்பார்த்தேன். யாரிடமிருந்தும் பணம் கிடைக்கவில்லை.

எப்போதுமே என்னிடம் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டால் நான் உரிமையுடன் பணம் கேட்பது பிரபாகரன், தினேஷ், பிரசன்னா, ஜெகன் ஆகியோரிடம்  மட்டும்தான். தினேஷும், பிரபாகரனும் வேறு அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். பிரசன்னா, ஜெகன் இரண்டுபேரும் ஒரே அலுவலகத்தில்.

நண்பர் ஜெகனிடம்  கிண்டில் Offer போட்டிருப்பதையும், அதை வாங்க முடிவு செய்திருப்பதையும், பணம் கிடைக்கவில்லை என்பதைப் பற்றியும் கூறினேன். அவர் மிகவும் கூலாக, சிம்பிள்ளாக கூறினார். "என்னிடம் Credit Card இருக்கு கதிர் மூன்று அல்லது நான்கு EMI போட்டு வாங்கிக்கோ. மாதம் இரண்டாயிரம் ரூபாய்தான் வரும் EMI. மாதம் மாதம் சம்பளம் வந்தவுடன் EMI கட்டிக்கொள்ளலாம்." எனக்கூறினார். எனக்கு மகிழச்சி தாங்கவில்லை. மதிய உணவு சாப்பிட்டு முடித்த உடனே. ஜெகனும், நானும் சேர்ந்தே Kindle Paperwhite -ஐ Order செய்தோம். 3 EMI(No Cost EMI) இல். மாதம் 2,666 ரூபாய். என்னுடைய கிண்டில் கனவை நிறைவேற்றிய ஜெகனுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். நன்றி ஜெகன்.

கிண்டில்(Kindle Paperwhite) அறிமுகம்



கிண்டில் கருவியுடன் ஒரு USB cable தருகிறார்கள். மடிக்கணினி/கணினியின் மூலமாக charge செய்து கொள்ளலாம். ஒரு தடவை முழுமயாக charge செய்து விட்டால் ஒரு வாரத்திற்கு battery charge நீடிக்கிறது.

கருப்பு-வெள்ளையில் மட்டும்தான் புத்தகங்களை படிக்க முடியும். வண்ணங்களில் படிக்க முடியாது. 200 கிராம் எடை கொண்டது கிண்டில். மிகவும் இலேசாக இருக்கிறது. தாளில் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. E-Ink தொழில்நுட்பம் கொண்டு கிண்டில் திரையை தயாரித்து இருக்கிறார்கள். நல்ல சூரிய ஒளியின் வெளிச்சத்தில் கூட நீங்கள் படிக்க முடியும். No glare in bright sunlight. ஒரு கையில் கிண்டிலை வைத்துக்கொண்டு புத்தகங்களை படிக்கலாம். கை வலிக்காது. அந்தளவிற்கு எடை குறைவானது. இலேசானது.

Kindle Unlimited வசதி





Amazon நிறுவனம் Kindle Unlimited எனும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு Rs. 199, 6-மாதத்திற்கு Rs. 999, ஒரு வருடத்திற்கு Rs. 1799. இதில் நீங்கள் உறுப்பினராக சேர்ந்து கொண்டால். லட்சக்கணக்கான புத்தங்களை இலவசமாக படிக்கலாம். எந்தெந்த புத்தகங்களெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் வருகிறதோ அவையனைத்தையும் நீங்கள் இலவசமாக படிக்கலாம். ஒரு ரூபாய்கூட கட்டணம் சொலுத்தவேண்டியதில்லை. Amazon -இல் உள்ள அனைத்து புத்தகங்களும் இந்த திட்டத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட புத்தகங்கள் விதிவிலக்கு. நீங்கள் Kindle Unlimited உறுப்பினர் என்றால் கிண்டில் பதிப்பு புத்தகத்தை இன்னும் விலை குறைவாக தருகிறார்கள்.

நம்முடைய கிண்டில் கருவியில் அதிகப்பட்சமாக 10-புத்தகங்களை இந்த திட்டத்தின் மூலமாக வைத்துக்கொள்ளலாம். கூடுதலாக ஒரு புத்தகம் வேண்டுமென்றால்.  ஏற்கனவே இருக்கும் 10 புத்தகங்களிலிருந்து ஏதாவது ஒன்றை Retrun செய்ய வேண்டும். தேவைப்படும் போது அந்த புத்தகத்தை நீங்கள் மறுபடியும் எடுத்துக்கொள்ளாலம். எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் படிக்கலாம். அதிகப்பட்சமாக Kindle Unlimited திட்டத்தின் கீழ் 10 புத்தங்களை கிண்டில் கருவியில் வைத்துக்கொள்ளலாம்.

தமிழில் நிறைய புத்தகங்களை இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கிறது. கிழக்குப் பதிப்பகத்தின் பெரும்பாலான கிண்டில் பதிப்பு புத்தகங்கள் இந்த திட்டத்தின் கீழ் நிறையவே கிடைக்கிறது. மற்ற பதிப்பகங்கள் கிண்டிலில் இன்னும் கவனம் செலுத்தவில்லை என நினைக்கிறேன். விகடனிலிருந்து ஒரு சில புத்தகங்கள் கிண்டிலில் கிடைக்கின்றன. சுஜாதாவின் 'சுஜாதாட்ஸ்', எஸ்.ராமகிருஷ்ணனின் 'மறைக்கப்பட்ட இந்தியா', டாகடர். ஷாலினியின் புத்தகங்கள் என இன்னும் சில புத்தகங்கள்.

கிண்டிலில் ஆங்கில புத்தகங்கள்

கிண்டிலில் ஆங்கில புத்தகங்கள் கடல்போல குவிந்து கிடக்கிறது. இப்போது புதிதாக வெளிவரும் புத்தகங்கள் அனைத்தும் கிண்டிலுக்கும் சேர்த்தே வெளியிடப்படுகிறது. 2000 ரூபாய் மதிப்புள்ள ஆங்கில புத்தகங்கள் Kindle Unlimited சந்தாதாரருக்கு ரூ.0 விலையில் இலவசமாக படிக்க கிடைக்கிறது.

கிண்டிலில் தமிழ் புத்தங்கள்



கிண்டிலில் தமிழ் எழுத்துக்கள் அவ்வளவு அழகாக, தெளிவாக, துல்லியமாக தெரிகின்றன. நிறைய தமிழ் புத்தகங்களை கிண்டிலுக்கு ஏற்ப வெளிவரும் பட்சத்தில் தமிழில் குறிப்பிட்ட புத்தகங்கள் Out of  stock என்ற நிலைமையை ஒழித்து விடலாம். கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள்தான் அதிகமாக கிடைக்கின்றன. ஆனந்த விகடனின் ஒரு சில புத்தகங்கள் கிடைக்கின்றன.

கிண்டில் வாங்கலாமா?

நிச்சயமாக வாங்கலாம். நீங்கள் அதிகமாக புத்தகங்கள் வாசிப்பவர் என்றால் உங்களுக்கான கருவிதான் கிண்டில். Amazon தளத்தில் மூன்று விதமாக புத்தகங்கள் கிடைக்கிறது. Paperback, Kindle edition, Kindle Unlimited. உதாரணமாக தமிழில் கிழக்குப் பதிப்பகத்தின் பா.ராகவன் எழுதிய அச்சிடப்பட்ட 'மாயவலை' புத்தகத்தின் விலை ரூ.1000. இந்த புத்தகத்தின் கிண்டில் பதிப்பு ரூ. 500. Kindle Unlimited -இன் கீழ் ரூ.0. இதுபோல ஆங்கில புத்தகங்களின் விலையும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. பாதிக்குப் பாதி உங்களுக்கு பணம் மிச்சம். எத்தனை புத்தகங்கள் வாங்கினாலும் அத்தனை புத்தகங்களையும் ஒரு 169 x 117 x 9.1 mm அளவுள்ள சிறிய கருவியில் வைத்துக்கொள்ள முடியும். வீட்டில் உள்ள இடங்களை அடைத்துக்கொள்ளாது. நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடன் கிண்டில் கருவியில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை எடுத்துச்செல்ல முடியும்.



கிண்டிலில் புத்தங்கள் மட்டும்தான் படிக்க முடியுமா?

கிண்டில் என்பது படிப்பதற்கான கருவி. .doc, docx, .txt, .pdf, .jpeg, .jpg, .png கோப்புகளை கிண்டில் ஆதரிக்கிறது. கிண்டிலில் நீ்ங்கள் Audio, Video கோப்புகளை பயன்படுத்த முடியாது. புத்தகங்கள் தவிர நீங்கள் படிக்க வேண்டிய கோப்புகளை(கிண்டில் ஆதரிக்கும் கோப்பு வடிவங்கள் மட்டும்) உங்களுடைய கிண்டில் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால். கிண்டிலை இணையத்துடன் இணைக்கும் போது தானாகவே உங்களுடைய கிண்டில் கருவிக்குள் அந்த கோப்புகள் தரவிறக்கம் ஆகிவிடும். அதன்பிறகு இணையத்தின் உதவியில்லாமல் நீங்கள் அந்த கோப்புகளை படித்துக்கொள்ளலாம்.

கிண்டிலில் இணையம் பயன்படுத்த முடியுமா?

கிண்டில் கருவியில் Experimental Browser என்ற ஒன்று இருக்கிறது. அது இணையம் பயன்படுத்துவதற்கானது அல்ல. விக்கிப்பீடியா போன்ற தளங்களை பார்ப்பதற்கும், கிண்டிலில் புத்தகங்கள் வாங்கும் போது பணம் செலுத்துவதற்குமானது.

கிண்டிலில் புத்தகங்கள் படிக்க இணைய வசதி அவசியமா?

அவசியமில்லை. உங்களுக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தையும் ஒரு முறை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் அதன்பிறகு கிண்டிலில் இணையம் இல்லாமலையே(Offline) புத்தகங்களைப் படிக்கலாம்.

கிண்டில் கருவி தொலைந்துவிட்டாலோ அல்லது பழுதாகிவிட்டாலோ என்ன செய்வது?

கிண்டில் கருவி தொலைந்துவிட்டால் புதிய கிண்டில் கருவி வாங்கி உங்களுடைய புத்தகங்களை மறுபடியும் புதிய கிண்டிலில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கிண்டில் தொலைந்து விட்டால் உங்கள் புத்தகங்களும் அதனுடன் சேர்ந்து தொலைந்துவிட்டது என அர்த்தமாகாது. உங்களுடைய புத்தகங்கள் அனைத்தும் கிண்டில்  Cloud இல் பத்திரமாக இருக்கும். கிண்டில் பழுதாகிவிட்டால் Amazon -க்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அவர்கள் சரி செய்து தருவார்கள்.

கிண்டிலில் வாங்கிய புத்தகங்களை நண்பர்களுக்கு கடன் கொடுக்க முடியுமா?

முடியாது. உங்கள் நண்பர் புத்தகங்கள் படிக்க விரும்பினால் உங்களுடைய கிண்டில் கருவியைத்தான் அவருக்கு கொடுக்க வேண்டும். இரண்டு கிண்டில் கருவிகளுக்கிடையில் புத்தகங்களை பரிமாறிக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இந்த வசதி வரலாம்.

கிண்டிலுக்கான தமிழ் புத்தகங்கள் இலவசமாக கிடைக்கும் தளங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?

ஆம் இருக்கிறது. Free Tamil Ebooks. நீங்களாகவே கிண்டிலுக்கான புத்தகங்களையும் உருவாக்கி கொள்ள முடியும்.

Sep 29, 2017

Python programming language கற்றுக்கொள்ள

பைத்தான் மொழியை கற்றுக்கொடுக்கும் சிறந்த தளங்கள், புத்தகங்கள் போன்றைவைகளை இங்கு தொகுத்து கொடுத்திருக்கிறார் நண்பர் Karthikeyan A K (77minds@gmail.com) அவர்கள். பைத்தான் மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் புதியவர்களுக்கும், கற்றுக்கொண்டவர்கள் தங்களை மெருகேற்றிக்கொள்வதற்குமான செய்திகள் இந்த தொகுப்பில் இருக்கிறது. பைத்தான் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

http://knospot.com/topics/python-programming-language/resources/latest

Sep 20, 2017

Aug 31, 2017

ஜாதியை அழித்தொழிக்கும் வழி



அண்மையில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 'நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்', 'ஜாதியை அழித்தொழிக்கும் வழி' இரண்டு புத்தகங்களையும் படித்து முடித்தேன். 'ஜாதியை அழித்தொழிக்கும் வழி' புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளை அடிக்கோடிட்டு வைத்திருந்தேன். அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வரிகள் கீழே உள்ளன.



* தங்கள் பரம்பரை தொழில் அல்லாத வேறு எந்தத் தொழிலுக்கும் ஆட்கள் தேவைப்படும்போதுகூட - இந்துக்கள் அத்தொழிலைச் செய்வதற்கு செல்வதை சாதி அமைப்ப அனுமதிப்பது இல்லை. தன் சாதிக்கு என்று ஒதுக்கப்பட்ட தொழிலைத் தவிர வேறு புதிய தொழில்களை மேற்கொள்வதை விட, பட்டினி கிடப்பதே மேல் என்று ஓர் இந்து சும்மா இருக்க காரணம் என்ன? சாதி அமைப்புதான் காரணம்.

* தொழில்களை மாற்றிக்கொள்ள சாதி அனுமதிப்பதில்லை. ஆகையால், நம் நாட்டில் நிலவுகிற வேலை இல்லா திண்டாட்டத்துக்கு ஒரு நேரடிக் காரணமாக சாதி இருக்கிறது.

* உண்மையில், இந்து சமூகம் என்ற ஒன்று இல்லைந இருப்பதெல்லால் சாதிகளின் தொகுப்பே.

* இந்து சமூகம் என்பதே ஒரு கட்டுக்கதை என்பதைத்தான். 'இந்து' என்கிற பெயரே ஒரு அந்நிய பெயர்தான். உள்ளூர் மக்களிடம் இருந்து தம்மை இனம் பிரித்துக் காட்ட முகமதியரால் அளிக்கப்பட்ட பெயரே இந்துக்கள் என்பது. முகமதியரின் படையெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் 'இந்து' என்ற சொல்லே காணப்படவில்லை. இந்துக்களுக்கு தாங்கள் பொதுவானதொரு சமூகம் என்ற சிந்தனையே இல்லாத இருந்த காரணத்தால், தங்களுக்குப் பொதுவானதொரு பெயர் தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. 

* முகமதியர்கள் குரூரமானவர்கள் என்றால், இந்துக்கள் அற்பர்கள். அற்பத்தனம் குரூரத்தைவிட கேவலமானது என்று கூறுவதில் எனக்கு தயக்கமே இல்லை.

* இந்துக்களிடையே சாதி அமைப்பு வளர்ந்ததால்தான், இந்து மதம் ஒரு பரப்புரை மதமாக நீடிக்க முடியவில்லை என்பதே என் கருத்து. சாதி, மதமாற்றத்துக்குப் பொருந்தி வராத ஒன்று. நம்பிக்கைகளையும், மதக்கோட்பாடுகளையும் புகுத்துவது மட்டும் மதமாற்றத்துக்குப் போதுமானது அல்ல. மதம் மாறியவர்களுக்கு சமூக வாழ்வில் ஓர் இடத்தை உறுதி செய்வது என்பது, அதைவிட முக்கியமான பிரச்சனை. மற்ற மதத்தவர்களை தம் மதத்துக்கு மாற்ற விரும்புகிற எந்த ஒரு இந்துவையும் குழப்புகிற பிரச்சனை இதுதான்.

* மன்றங்களில் எவர் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆவது போல, சாதிகளில் யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது. சாதி சட்டப்படி, எந்த ஒரு சாதியிலும் உறுப்பினர் ஆகும் உரிமை, அந்த சாதியில் பிறந்தவருக்கு மட்டுமே உரியது. சாதிகள் சுயேச்சையானவை.  புதியவர்களை சமூக வாழ்க்கையில் குறிப்பிட்ட சாதியில் சேர்த்துக்கொள்ளுமாறு - எந்த சாதியையும் நிர்பந்திக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. இந்து சமூகம் சாதிகளின் சேர்க்கையாக இருப்பதாலும், ஒவ்வொரு சாதியும் மூடப்பட்ட அமைப்பாக இருப்பதாலும் - மதம் மாறியவர்களுக்கு இந்து சமூகத்தில் இடம் இல்லை. ஆக, இந்து மதம் விரிவடையவும் மற்ற மதத்தினரை இந்து மதத்துக்குள் இழுத்துக்கொள்ளவும் தடையாக இருப்பது சாதியே. சாதிகள் இருக்கும் வரை இந்து மதத்தை பரப்புரை மதமாக்க முடியாது.

* இந்துக்கள் தங்களை மிகவும் சகிப்புத் தன்மை உடையவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இது பொய் என்றே நான் கருதுகிறேன். பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் சகிப்புத்தன்மை இல்லாமல்தான் இருக்கிறார்கள். சிற்சில சமயங்களில் அவர்கள் சகிப்புத் தன்மையோடு இருக்கக் காரணம், எதிர்ப்பதற்கான பலம் அல்லது அக்கறை இல்லாதுதான். தமக்கு இழைக்கப்படும் அவமரியாதையையும் அநீதியையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் தன்மை, இந்துக்களின் ரத்தத்திலேயே ஊறிவிட்டது.

* சூத்திரன் சொத்தைத் தேடி அலைய அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால், அதற்கு அனுமதித்தால் அவன் மற்ற மூன்று வர்ணத்தாரையும் சார்ந்து இல்லாமல் போவான். சூத்திரன் கல்வி அறிவு பெறாமல் தடுக்கப்பட்டான். ஏனென்றால், கல்வி, அறிவு பெற்று விட்டால் தன் நலன்களைப் பற்றி அவன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவான். சூத்திரன் ஆயுதந்தரித்துவிட்டால், தன்னை ஆளுகின்ற மூன்று வர்ணத்தாரின் அதிகாரத்துக்கும் எதிராக அவன் கிளர்ந்தெழுவான்.

* 'நான் ஓர் இந்து' என்று எவராவது சொன்னால், நீங்கள் அந்தப் பதிலால் திருப்தியடையந்து விடுவதில்லை.  அவருடைய சாதி என்னவென்று விளக்கமாகத் தெரிந்து கொள்வது அவசியம் என்று உணர்கிறீர்கள் ஏன்? ஓர் இ்ந்துவைப் பொருத்தமட்டில், அவருடைய சாதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் - அவர் எத்தகைய ஒரு மனிதன் என்பதை உங்களால் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியாது என்கிற அளவுக்கு, சாதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

* தாக்குதலுக்கோ, தற்காப்புக்கோ சமூகத்தை ஒன்றுதிரட்ட உங்களால் முடியாது. சாதி என்கிற அஸ்திவாரத்தின் மீது எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும். முழுமை அடையாது.

* அரசாங்கத்தை எதிர்க்கிற அரசியல்வாதியைவிட, சமூகத்தை எதிர்க்கிற சீர்திருத்தவாதியே மிகவும் துணிச்சல் உள்ளவன்.

* கலப்புத் திருமணமே சாதியை ஒழிப்பதற்கான உண்மையான வழி என நான் நம்புகிறேன். ரத்தக் கலப்பு மட்டுமே 'எல்லாரும் நம்மவரே' என்கிற உணர்வை உருவாக்கும். இந்த உணர்வு ஒவ்வொருவரையும் ஆட்கொள்ளாத வரை, தன்னுடைய சாதிக்காரனைத் தவிர்த்த மற்ற எல்லோருமே அயலர்தான், அந்நியர்தான் என்கிற பிரிவினை உணர்வு - அந்நிய உணர்வு மறையாது. சாதியை தகர்த்தெறிவதற்கான வழி கலப்புத் திருமணமே. வேறு எந்த சக்தியாலும் சாதியை அழிக்க முடியாது.

* பார்ப்பனராகப் பிறந்தவன் புரட்சிக்காரன் ஆக நினைக்க மாட்டான். சமூக சீர்திருத்த விஷயங்களில் பார்ப்பனர்கள் புரட்சிகரமானவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றதே ஆகும்.

* ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கமாக இல்லை என்றாலும் கூட, அந்த நாட்டை ஆட்டிப் படைக்கும் அளவுக்கு செல்வாக்குடன் இருப்பது அறிவாளிகள்வர்க்கமே என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்கின்ற ஆற்றல், அந்த வர்க்கத்துக்கு உண்டு. அந்த வர்க்கமே மக்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழி நடத்திச் செல்லும் ஆற்றல் உள்ள வர்க்கம். எந்த நாட்டிலும் பரந்துபட்ட மக்கள் அறிவாளிகளைப் போன்ற சிந்தனையோடும் செயல்களோடும் வாழ்க்கை நடத்துவதில்லை.

* சாதிக்கோட்டையில் பிளவு ஏற்படுத்த வேண்டுமென்றால், பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் ஒரு சிறிதும் இடம் கொடுக்காத வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் வெடி வைத்தே தீர  வேண்டும். ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளாலான மதத்தை அழித்தொழிக்க வேண்டும். வேறு எந்த செயலும் பயன் தராது. இதுவே என முடிவான கருத்தாகும்.

* இந்தியாவில் எல்லா தொழில்களுமே ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டவையாகத்தான் உள்ளன. பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய எல்லாருமே தத்தம் தொழிலில் திறமை உடையவர்கள் என்று நிரூபித்துக் காட்டிய பிறகே - தங்களுடைய தொழிலைச் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். தங்கள் தொழிலை நடத்தி வருகிற காலம் முழுவதும் இந்த நாட்டின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கு மட்டுமல்லாமல், தத்தம் தொழிலில் அமைந்துள்ள சிறப்புச் சட்டங்களுக்கும் கீழ்படிந்து நடக்கிறார்கள்.

* திறமை எள்ளளவும் தேவை இல்லாத ஒரே தொழில் அர்ச்சகர் தொழில் ஒன்றுதான். இந்து அர்ச்சகனி தொழிலே சட்டத்துக்கு உட்படாத ஒரே தொழிலாக இருந்து வருகிறது. அறிவு நிலையில் அர்ச்சகர் மூடனாக இருக்கலாம். உடல்நிலையில் பால்வினை நோய்களாகிய மேக நோய், வெட்ட நோய் உடையவனாக இருக்கலாம். ஒழுக்கத்தில் சீரழிந்தவனாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் அர்ச்சகன், தூய்மையான சடங்குகளை நடத்தும் இந்துக் கோயிலில் உள்ள மிகப் புனிதமான மூலஸ்தனங்களில் நுழையவும், இந்துக் கடவுள்களை வணங்கவும் தகுதி படைத்தவனாக இருக்கிறான். இந்துக்களுக்கு இடைய இது சாத்தியமாக இருப்பது எப்படி?

* அனைவருக்கும் பொதுவான ஒரு தொழிலாக அர்ச்சகர் தொழிலை ஆக்கும் நடவடிக்கை பார்ப்பனியத்தை ஒழிக்கவும், பார்ப்பனியத்தின் மறுவடிவமான சாதியை ஒழிக்கவும் துணை புரியும். இந்து மதத்தை நாசப்படுத்திய கொடிய நஞ்சு பார்ப்பனியமே. நீங்கள் பார்ப்பனியத்தை ஒழித்து விட்டால், இந்து மதத்தைக் காப்பாற்றுகிற முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

* ஒழுக்கக் குறைவானது என்று கருதப்படுகிற ஒரு தொழிலை, பரம்பரைத் தொழில் என்பதற்காக மேற்கொள்ள வேண்டுமா? பரம்பரைத் தொழிலைத்தான் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்றால், ஒருவனுடைய தாத்தா விபச்சாரத் தரகராக இருந்தால், பேரனும் அப்படியே இருக்க வேண்டும் என்றாகிறது. ஒரு பெண்ணின் பாட்டி விபச்சாரத் தொழில் ஈடுபட்டார் என்பதற்காக, அந்தப் பெண்ணும் அதையே மேற்கொள்ள வேண்டும் என்றாகிறது. என்னைப் பொறுத்த மட்டிலும், பரம்பரைத் தொழிலையே ஒருவர் மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது லட்சியம், நடைமுறைப்படுத்த முடியாத லட்சியமாகும். தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள லட்சியமும் ஆகும்.

* அப்படியே மகாத்மா சிந்தித்தாலும் உளுத்துப்போன இந்து சமூக அமைப்புக்கு முட்டுக் கொடுக்கும் வேலையில் தன் மூளையை ஈடுபடுத்துவதன் மூலம் - அவர் அறிவு விபச்சாரம் செய்பவரே ஆகிறார். ஏறக்குறைய எல்லா பார்ப்பனருமே சாதிக்கட்டுப்பாடுகளை மீறுபவர்களாக இருக்கிறார்கள். புரோகிதம் செய்யும் பார்ப்பனரை விட, செருப்பு விற்கும் பார்ப்பனர் அதிகமாகி வருகிறார்கள்.

Aug 6, 2017

பேருந்து பயணமும் புத்தக வாசிப்பும்

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் பேருந்தில்தான் தினமும் அலுவலகம் சென்றுகொண்டிருக்கிறேன். என்னுடைய அலுவலகம் பள்ளிக்கரனையில் உள்ளது. நான் தங்கியிருப்பது முகப்பேரில். முகப்பேரிலிருந்து கலெக்டர் நகர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, பிறகு அங்கிருந்து கிண்டி அல்லது வேளச்சேரி செல்லும் பேருந்தில் பயணித்து, பிறகு வேளச்சேரியிலிருந்து பள்ளிக்கரனையில் இருக்கும் என் அலுவலகத்திற்குச் செல்வேன்.

என்னுடைய வாசிப்பு என்பது தீவிரமான வாசிப்பு என்று கூறமுடியாது. சாதரணமான வாசிப்பு பழக்கம் உள்ளவன்தான்  நான். கட்டுரை, பெரியாரியல், திராவிடம், அரசியல், அறிவியல், வரலாறு தொடர்பான புத்தகங்களைத்தான் நான் விரும்பி படிப்பேன். சிறுகதை, நாவல் போன்றவற்றில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை.



என்னுடைய முதல் நாவல் வாசிப்பு எதுவென்று கேட்டால் நிசப்தம் வா.மணிகண்டன் எழுதிய மூன்றாம் நதி நாவல். நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பவன் நான். மூன்றாம் நதி நாவல் எழுதியிருப்பதைப் பற்றி மணிகண்டன் நிசப்தம் தளத்தில் பதிவு செய்திருந்தார். ஆகையால், அந்த நாவலை படித்துப்பார்க்கலாம் என ஆர்வம் வந்தது. சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். நாவல்கள் வாசிப்பதில் எனக்கு  அவ்வளவாக ஆர்வம் இல்லாததால் நீண்ட நாட்களாக அந்த புத்தகத்தை படிக்காமலேயே வைத்திருந்தேன்.

புத்தகங்களைத் தாண்டி நான் வாசிப்பது தி இந்து தமிழ் நாளிதழ், நக்கீரன், உயிர்மை, ஆனந்த விகடன், எப்போதாவது தடம் இதழ்.

கலெக்டர் நகர் பேருந்து நிறுத்தத்திலிருந்து வேளச்சேரி செல்வதற்கு குறைந்தது ஒன்னேகால் மணி நேரம் ஆகும். வேளச்சேரியிலிருந்து பள்ளிக்கரனை செல்வதற்கு பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் வரை ஆகலாம். ஆக மொத்தம் எனக்கு அலுவலகம் சென்று, அறைக்குத் திரும்புவதற்கான பயண நேரம் என்பது மூன்று மணி நேரம் ஆகும்.

என்னுடைய அறையிலிருந்து கலெக்டர் நகர் செல்வதற்கான பேருந்தைப் பிடிக்க அருகிலிருக்கும் முகப்பேர் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். பதினைந்து நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும். முகப்பேர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் தேநீர் கடையில் ஒரு தேநீர் அருந்திவிட்டு, அருகிலிருக்கும் புத்தகக்கடையில் தமிழ் இந்து நாளிதழும், அன்றைய தினத்தில் புதிதாக நக்கீரன் இதழ் வந்திருந்தால் நக்கீரனையும் வாங்கிக்கொள்வேன். ஆனந்த விகடன் வியாழன் தோறும் வெளிவருவதால் வியாழக்கிழமை கூடுதலாக ஆனந்த விகடனை வாங்கிக்கொள்வேன். உயிர்மை மாதத்தின் முதல்வாரம் அந்த கடையில் கிடைக்கும். அன்றைக்கு உயிர்மை வாங்கிக்கொள்வேன்.

பொதுவாக பேருந்தில் பயணிக்கும் போது படிக்கக்கூடாது  கண் கெட்டுவிடும் என்று கூறுவார்கள். அந்த பயம் எனக்கு என்றைக்கும் வந்தது கிடையாது. தினமும் பேருந்தில் பயணிக்கும் அந்த மூன்று மணிநேரம் என்பது என்னுடைய வாசிப்பிற்கான நேரம். அதை இழக்க நான் தயாராக இல்லை.

இப்போது எனக்கு அலுவலக நேரம் காலை 11.30 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரைக்கும். இரவு பத்து மணிக்கு மேல் பெரும்பாலும் சென்னை மாநகர பேருந்துகளில் கூட்டம் இருக்காது. அமர்ந்து செல்லும் அளவிற்கு இருக்கைகள் காலியாகத்தான் இருக்கும். பள்ளிக்கரனையிலிருந்து முகப்பேர் வரையிலும் அமரந்து கொண்டே பயணிக்கலாம். காலையில் முகப்பேரிலிருந்து பள்ளிக்கரனைக்கு செல்வதற்காக கலெக்டர் நகர் பேருந்து நிறுத்தத்தில் ஏறும் போது பெரும்பாலும் இருக்கைகள் காலியாக இருக்கும் இல்லையென்றால் வடபழனி அல்லது அசோக் பில்லர் நிறுத்தத்தில் இருக்கைகள் கிடைத்து விடும். சில நாட்கள் ஏமாற்றம்தான் மிஞ்சும் வேளச்சேரியை அடையும் வரை நின்றுகொண்டே பயணிக்க வேண்டியதுதான். இருக்கைகள் கிடைக்காது.

இருக்கை கிடைத்த உடன் எனது வாசிப்பு தொடங்கி விடும். முதலில் தி இந்து நாளிதழைப் படித்து முடித்து விடுவேன். அன்றைக்கு நக்கீரன் வாங்கியிருந்தால் அடுத்ததாக நக்கீரனைப் படிப்பேன். வியாழனாக இருந்தால் அடுத்தது ஆனந்த விகடன். இவைகளை படித்து முடிக்கும் போது கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் வந்து விடும்.

மேற்கண்டவைகளை படித்து முடிந்த பிறகு புத்தகங்களைப் படிக்க ஆரம்பிப்பேன். அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் நான்கு அல்லது ஐந்து புத்தகங்கள் இருக்கும். என்னுடைய விரும்பம், ஆர்வத்திற்கு ஏற்றாற்போல் அதிலிருந்து புத்தகங்களை எடுத்துப் படிப்பேன்.

பேருந்தில் நான் புத்தகங்களை படிக்கத் தொடங்கியது எப்போது என்றால் என் அலுவலகத்தோழி சிவசங்கரி எனக்கு புத்தகங்கள் அளிக்க தொடங்கிய பின்புதான். என்னுடைய அலுவலக நட்பு வட்டத்தில் நண்பர் பிரசன்னாவும், சிவசங்கரியும் தீவிரமான புத்தக வாசிப்பாளர்கள். பிரசன்னா தீவிர  திராவிடர் இயக்க பற்றாளர். அரசியல் மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஆகையால் அவர் அது தொடர்பான புத்தகங்களை அதிகம் வாசிப்பார். என்னுடன் புத்தகங்களை பகிர்ந்து கொள்வார். தோழி சிவசங்கரி நாவல்கள், கதைகள் போன்றவைகளை விரும்பி படிப்பவர். சிவசங்கரியின்  அம்மாவும், அப்பாவும் அவருடைய வாசிப்பிற்கு காரணம் என்று கூறினார். சிவசங்கரி பயணங்களின் போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர். தீவிரமான வாசிப்பாளர்.

ஒருநாள் நான் புத்தகம் வாசிப்பதை தெரிந்து கொண்டு, கதிர் புத்தகம் வைத்திருந்தால் கொடுங்கள் வாசித்துவிட்டு தருகிறேன் என்று கேட்டார். என்ன மாதிரியான புத்தகங்களை விரும்பி படிப்பீர்கள் எனக்கேட்டேன். நாவல்கள், கதைகளை விரும்பி வாசிப்பேன் என்று கூறினார். என்னிடம் அரசியல், பெரியார், அறிவியல் தொடர்பான புத்தகங்கள்தான் இருக்கின்றன. நாவல்கள், கதை தொடர்பான புத்தகங்கள் இல்லை. இருந்தாலும் ஒரே ஒரு நாவல் வைத்திருக்கிறேன் அதை கொண்டு வந்து தருகிறேன் என்று கூறி, வா.மணிகண்டன் எழுதிய மூன்றாம் நதி நாவலை அளித்தேன். அந்த புத்தகத்திற்கு பதிலாக சிவசங்கரி வைரமுத்து எழுதிய கருவாச்சி காவியம் நாவலை எனக்கு கொடுத்தார். கருவாச்சி காவியம் படிக்க ஆரம்பித்த பின்புதான் நாவல்களை படிக்க எனக்கு ஆர்வம் வந்தது.



நான் நாவல்களைப்  விரும்பி படிக்க காரணமாக இருந்த தோழி  சிவசங்கரி அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி கூற வேண்டும். சிவசங்கரி கொடுத்த கருவாச்சி காவியம்தான் என்னை பேருந்தில் புத்தகங்கள் படிக்க தூண்டியது. கருவாச்சி காவியம் முழுவதையும் பேருந்து பயணத்திலேயே படித்து முடித்தேன். அருமையான நாவல் அது. அந்த நாவலில் வரும் கருவாச்சியைப் போல பல பெண்கள் எங்கள் கிராமத்தில் உண்டு. அவர்களின் கதையில் வேறுபாடு இருக்கும் அவ்வளவுதான். ஆனால் கருவாச்சியின் துயரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.



கருவாச்சி காவியம் படித்த முடித்த பிறகு படிப்பதற்காக வாங்கிய நாவல்களின் பட்டியல் கீழே.

சென்னைக்கு மிக அருகில் - விநாயக முருகன்
ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்
அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா
மூன்றாம் உலகப்போர் - வைரமுத்து



மூன்றாம் உலகப்போரைத் தவிர மேலே உள்ள மற்ற புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன். மூன்றாம் உலகப்போர் பாதி படித்துவிட்டேன். படித்ததெல்லாம் சென்னை மாநகர பேருந்து பயணத்திலேயே. மேற்கண்ட புத்தகங்கள் தவிர பல புத்தகங்களை பேருந்து பயணத்திலேயே படித்து முடித்திருக்கிறேன். இப்போதும் படித்துக்கொண்டிருக்கிறேன். அலுவலகம் செல்வதற்கான பேருந்து பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

நான் விரும்பி வாசிக்க நினைத்த நாவல்களில் விநாயக முருகனின் ராஜீவ் காந்தி சாலையும், சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதையும் இன்னும் வாங்க முடியவில்லை. Out of stock என்று கூறுகிறார்கள். இந்த இரண்டு நாவல்களும் அடுத்த பதிப்புக்கு வரும்போது நிச்சயம் வாங்கிவிட வேண்டும் என திட்டம் வைத்திருக்கிறேன்.



என் வாசிப்பை அடுத்த தளத்திற்கு கொஞ்சம் நகர்த்தும் விதமாக தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள், புத்தகங்களை வாங்கலாம் என திட்டமிட்டுள்ளேன். 



அலுவலகத்திற்கு செல்லும் போது பையினுள் நான்கு, ஐந்து புத்தகங்களை எடுத்துச்செல்வது என்பது கொஞ்சம் சுமையாக  இருக்கிறது. பொன்மாலைப் பொழுதில் மின்பதிப்பித்தலின் தாக்கம் பற்றி பத்ரி பேசிய காணொளியைப் பார்த்த பின்பு புத்தகச்சுமையை குறைப்பதற்கு தீர்வு கிடைத்து விட்டது. ஆமாம் கிண்டில் வாங்கலாம் என திட்டமிட்டு இருக்கிறேன். பணம் கிடைத்தவுடன் வாங்கிவிடுவேன். கிண்டிலில் ஆங்கில புத்தகங்கள் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கின்றது. பைக்குள் வைத்து எடுத்துச்செல்வதும் எளிது. எடையும் குறைவு. கிண்டிலில் தமிழின் முக்கியமான புத்தகங்கள் இன்றைக்கு கிடைக்காவிட்டாலும் நாளைக்கு நிச்சயமாக கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. கிண்டில் வாங்கிய பிறகு வாசிப்பு இன்னும் எளிதாக, இனிமையாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி: சிவசங்கரி

Jun 3, 2017

தமிழ்நாட்டைப் பார்!

ஜூன் 1, 2017 அன்று தமிழ் இந்து நாளிதழில் ஆழி.செந்தில்நாதன் எழுதியுள்ள கட்டுரை. இந்தி படிக்கனும், இந்தி படிக்கனும்னு சொல்பவர்கள் இந்த செய்தியைப் படியுங்கள். செய்தி பின்வருமாறு...



உங்களில் சிலர் இந்தச் செய்தியைச் சாதாரணமாகக் கடந்துசென்றிருக்கலாம். விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ தொலைக்காட்சி இப்போது தமிழில் ஒரு புதிய அலைவரிசையைத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் அந்த சேதி.



ஏற்கனவே டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியோகிரபி உள்ளிட்ட பல சேனல்கள் தமிழில் வெளிவந்து கொண்டிருப்பதால், இந்தச் செய்தி நமக்கு பெரிதும் ஆச்சரியமாக இருந்திருக்காது. ஆனால் மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கர்நாடகாவில் இந்தச் செய்தி சமூக ஊடங்களில் குறிப்பாக பேசப்பட்டிருக்கிறது. ‘தமிழ்நாட்டைப் பார்!’ என்கிறார்கள் அம்மாநிலத்தவர்கள்.

“தமிழ்நாடு இந்திக்கு அடிமையாகவில்லை என்பதால் அத்தனை சேனல்காரர்களும் தமிழ்நாட்டில் தமிழில் கடைவிரிக்கிறார்கள். நாம் இந்திக்கு அடிமைப்பட்டதால் நமது மொழிகளில் இதுபோன்ற சர்வதேச சேனல்கள் வருவதில்லை” இதுதான் அவர்களின் உரையாடலின் சாரம்சம். தமிழ்நாட்டுக்குத் தமிழ். ஆனால், மேற்கு வங்கம், மகாராஷ்ட்டிரம், கர்நாடகத்துக்கு என்றால் இந்தியாம்!

இதனால்தான் இந்த மாநிலங்களில் இப்போது மொழிப் பிரச்சினை வெடிக்கிறது. இங்கே என்னடாவென்றால் சரவணபவனில் தோசை வாங்க இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டுத் திரிகிறார்கள் சிலர்.

நன்றி: ஆழி.செந்தில்நாதன்

May 28, 2017

மாட்டுக்கறி


மாற்று அரசியல் என்று சொல்லி வந்த மோடியின் பிஜேபி அரசு மாட்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறது. மாட்டை வைத்து நாட்டையே கலவரபூமியாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மணலை கயிறாக திரிப்பேன், வானத்தை பூமியாக சுருட்டுவேன் என வாய்கிழிய பேசிய மோடி நாட்டை வளர்ப்பதைவிட, தன்னுடைய பிஜேபியையும், ஆர்எஸ்எஸ்ஸையும் நான்றாக வளர்த்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவிற்கு இதுவரை இருந்த  பிரதமர்களிலேயே மோடியைப்போல மோசமான பிரதமராக யாராவது இருந்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. இருந்திருந்தால் யாராவது கூறுங்கள்.

இந்திய சமூகத்தில் ஜாதி முக்கிய பங்காற்றுகிறது. அரசியலிலிருந்து, அரசாங்க உத்தியோகம் வரை ஜாதிதான்.  சைவம் சாப்பிடுவர்கள் உயர்ந்த ஜாதி, ஆட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிடுபவர்கள் அதைவிட கீழே, மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் அதைவிட கீழே என மூன்றுவகையான மக்கள் இருக்கிறார்கள். சாப்பிடும் உணவை வைத்து ஒருவரை மதிப்பிடும் கொடுமை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடையாது. சைவம் சாப்பிட்டால் மூளை வளரும் அறிவு வளரும் என புளுகிக்கொண்டேயிருக்கிறாரகள். மாட்டுக்கறி திங்கும் வெளிநாட்டுக்காரன்தான் விஞ்ஞானத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறான். அத்தனை கண்டுபிடிப்புகளையும் கண்டு பிடித்தான். இன்னும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறான். சைவம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் நாம் மாட்டுச்சாணியை கடவுளாக கண்டுபிடித்ததைத் தவிர வேறு என்ன செய்தோம்? ஒரு குண்டூசியைக் கண்டுபிடித்தோமா?

நான் அசைவப் பிரியன். காரணம் என் தாத்தா. சாகும் முதல் நாள் இரவு வரை அசைவம் சாப்பிட்டவர் அவர். தஞ்சாவூரில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது விடுதியில் தங்கியிருந்த இரண்டாண்டு காலம் சைவம் மட்டுமே சாப்பிட்டுவந்தேன். அதற்கு பெரிதான காரணமெல்லாம் ஒன்றுமில்லை. என் தாத்தாதான் என்னை வளர்த்தார். அசைவம் இல்லாவிட்டால் நானும் என் தாத்தாவும் ஒழுங்காக சாப்பிடமாட்டோம். உனக்கும் உன் தாத்தனுக்கும் ஒரு நாக்குடா. கவுச்சி இல்லாம சாப்பாடு தொண்டைக்குள்ளே இறங்காதே என்று என் ஆத்தா திட்டிக்கொண்டேயிருக்கும். குறைந்தப்பட்சம் கருவாட்டையாவது நெருப்பில் சுட்டுக்கொடுக்கும்.

அசைவத்தால் ஆத்தாவிற்கு கஷ்டத்தைக் கொடுக்கிறோம் என்ற குற்ற உணர்வு பால்யகாலத்தில் எனக்கு வந்தது. தீவிரமாக அசைவம் சாப்பிடுகிறோம் அதை நிறுத்தித்தான் பார்ப்போமே என்கிற உணர்விலே சைவம் சாப்பிட முன்னெடுத்தேன். இதை நினைத்து என் தாத்தா மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். விடுதியில் இருந்து விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போதெல்லாம் என்னை அழைத்து சைவம் உடம்பைக் கெடுத்துவிடும் அசைவம் சாப்பிட்டால்தான் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் என கூறிக்கொண்டே இருந்தார்.

பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டின் தொடக்கத்தில் பெரியாரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளைப் பற்றியும் பெரியார் பேசிவிட்டுத்தான் இறந்தார். உணவைப்பற்றியும் பெரியார் பேசியிருக்கிறார். அரிச்சோறு மனிதனைப் பலவீனப்படுத்தும், அசைவம் மனிதனைஆரோக்கிய வைத்திருக்கும் என்பது பெரியாரின் கருத்து. இன்றைக்கும் பேசப்படும் பேலியோ உணவு முறையைப் பற்றி அன்றைக்கே பேசியவர் அந்த வெண்தாடி கிழவன். நெல், கரும்பு விவசாயம் செய்வதை விட்டு விட்டு விவசாயிகள் ஆடு, கோழி வளரக்கவேண்டும். சைவத்தை விட்டுவிட்டு அசைவ உணவிற்கு மக்கள் மாறினால் ஆடு, கோழி வளர்ப்பில் விவசாயிகள் நிறைய இலாபம் அடையலாம் அறிவுரை என்று கூறினார் பெரியார். பெரும்பாலன் மக்களின் உணவாக இருக்கும் அசைவத்திற்கான வழியை விவசாயிகள் மேற்கொள்ளாமல் வெறும் 3% மக்களின் உணவான அரிசிச் சோறுக்கான வழியை விவசாயிகள் கடைபிடிக்கிறார்கள் என்று விவசாயிகளை கடுமையாக விமர்சனம் செய்தார் பெரியார். வெளிநாட்டினரைப் போல அசைவத்திற்காக மட்டும் மாடுகளை வளர்க்க வேண்டும், அனைவரும் மாட்டுக்கறி சாப்பிடவேண்டும் என பெரியார் கூறினார்.

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நாட்டில் வாழை இலையில் சாப்பிடுவது மிகப்பெரிய குற்றம் என கூறியவர் பெரியார். அதிகமாக தண்ணீர் தேவைப்படும் நாட்டில் கரும்பு, நெல் போன்றவைகளை விளைவிக்கக்கூடாது எனக்கூறியவர் பெரியார்.

இதுபோன்ற பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கியபோது நான் சைவம் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை நினைத்து வெட்கப்பட்டேன். இறுதியாண்டு படிப்பின் தொடக்கத்தில் விடுதியில் அசைவம் சாப்பிட ஆரம்பித்தேன். சிறுவயதில் இருந்ததைப் போன்று அசைவப் பிரியனாக மாறினேன். இன்றைக்கும் எனக்கு பிடித்த உணவு அசைவம்தான்.

சென்னைக்கு வருவதற்கு முன்பு நான் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை.  நான் முதன்முதலில் பணியாற்றிய நிறுவனம் ஒரு சிறிய நிறுவனம். மொத்தமாக  9-பேர் இருந்தோம். எங்கள் மூன்றுபேரைத்தவிர வேறு யாரும் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை. 2015-ஆம் ஆண்டு இறுதி என நினைக்கிறேன். அப்போதுதான் பிஜேபி அரசு மாட்டுக்கறி பிரச்சனையைக் கிளப்பிய நேரம்.

கடுமையான எதிர்ப்புகள் நாடு முழுவதும் பிஜேபி அரசுக்கு எதிராக கிளம்பியது. அதோடு சேர்த்து சமூக வலைதளங்களில் மாட்டுக்கறிக்கான ஆதரவு தீவிரமாகியது. அப்போதுதான் மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் கிளம்பியது. அலுவலகத்தில் இதுபற்றி நண்பர் பிரபாகரனிடமும், கிருஷணனிடமும் நான் கூறிய போது. இதுவரை நீங்க சாப்பிட்டதில்லையா கதிர் நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம் சாப்பிடவதற்கு அவ்வளவு சுவையாக இருக்கும் வாங்க இந்த வார இறுதியில் சாப்பிடுவோம் என கூறினார்.

நான் முதலில் பணியாற்றிய நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. சனிக்கிழமைதான் வார இறுதிநாள். சனிக்கிழமை மதியம் மாட்டுக்கறி சாப்பிட்டுவிடலாம் என திட்டமிட்டோம்.

எங்கள் அலுவலகத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் இஸ்லாமிய தோழர் ஒருவர் பிரியாணி கடை வைத்திருந்தார். அங்கு மாட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி சுக்கா, மாட்டுக்கறி குழம்பு, மாட்டுக்கறி ரசம், மாட்டு மூளை வறுவல், மாட்டு குடல் கறி என மாட்டுகறிக்கான அத்துனை வகையாறாக்களும் கிடைக்கும்.

இந்த கடைக்குச் சென்று பிரபாகரன், கிருஷ்ணன், எனக்கு என்று மூன்று பேருக்கும் மூன்று மாட்டுக்கறி பிரியாணி, மூன்று மாட்டுக்கறி சுக்கா(மாட்டுக்கறி வருவல்) வாங்கினோம். அலுவலகத்தில் வைத்து சாப்பிடுவோம் என முடிவு செய்து அலுவலகத்தில் கொண்டு வந்து சாப்பிட்டோம்.

மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு எப்படி இருக்கும் என எனக்கு ஆர்வம் கிளம்பியது. முதல் முதலில் மாட்டுக்கறியை சுவைத்தபோது அதிசயத்துப்போனேன். அவ்வளவு சுவையாக இருந்தது மாட்டுக்கறி. அதைவிட சுவையாக இருந்தது மாட்டுக்கறி வருவல். 

உண்மையிலேயே மாட்டுக்கறியின் சுவைக்கு முன்னால் ஆட்டுக்கறியெல்லாம் நிற்கவே முடியாது. கோமாதாவோட கறி அவ்வளவு சுவையாக இருக்கும். இன்றைக்கு ஆட்டுகறியின் விலையோடு ஒப்பிட்டால் மாட்டுக்கறியின் விலை மிகவும் குறைவு. விலையோ குறைவு, சுவையோ அதிகம் அதுதான் மாட்டுக்கறி. ஆனாலும் நம்மவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை காரணம் ஜாதி.

மாட்டுக்கறியில் அதிகமாக சத்துக்கள் இருக்கின்றன, உடலுக்கு நல்லது, உடலுக்கு ஊக்கமளிக்கும் என பல காரணங்கள் இருந்தாலும், அதற்காகவெல்லாம் சாப்பிடாமல் பிஜேபிக்கு எதிரான மனோபாவத்தில் அன்றைக்கு மாட்டுக்கறி சாப்பிட ஆரம்பித்தேன். பிறகு அதைப்பற்றிய செய்திகளையும், மாட்டுக்கறியில் இருக்கும் அரசியல் பற்றியும் படிக்க ஆரம்பித்த பின்பு, இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடுவது ஒரு புரட்சியாகவே தெரிந்தது. அன்றிலிருந்து இன்றுவரை வாரம் ஒருமுறை தவறாமல் மாட்டுக்கறி சாப்பிட்டுவிடுவேன்.  சென்னையில் மாட்டுக்கறி எளிமையாக கிடைக்கும். காரணம் பெரியார் மண்.

ஒருவருடைய உணவுப்பழக்கத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அரசாங்கம், பிரதமர் உட்பட. அவனவன் விருப்பப்பட்டதை அவனவன் சாப்பிட்டுக்கொள்வான். நீ இதைச் சாப்பிடக்கூடாது, இதைத்தான் சாப்பிடவேண்டும் என்பது சர்வாதிகாரம்.



மற்ற நாடுகளிலெல்லாம் Meat, Non-Meat என்றுதான் கூறுவார்கள். இந்த பாழாய்ப்போன இந்தியாவில்தான் Veg, Non-Veg என்கிற வார்த்தைகள் உண்டு. இதில் pure veg வேற.

பெரும்பான்மையை வைத்து சிறுபான்மையை வரையறுப்பார்கள் ஆனால் இங்குதான் எல்லாமே தலைகீழ். இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்கள் 97% பேர், சாப்பிடாதவர்கள் 3% பேர். அப்படியென்றால் அசைவம், அசைவம் அல்லாத என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆனாலும் சைவம், சைவம் அல்லாத என்றுதான் கூறுவார்கள்.

மாட்டுக்கறி தொடர்பாக மத்திய அரசு அறிவித்திருப்பது விவசாயிகளுக்கும், கிராமத்தில் ஆடு, மாடு வளர்ப்பவர்களுக்கும்தான் மிகப்பெரிய பாதிப்பை உண்டு பண்ணும். நான் கிராமத்துக்காரன் என்பதால் மாட்டு வளர்ப்பைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்.

கிராமங்களில் கன்று ஈன்ற முடியாத தொத்தை மாடுகளை வியாபாரிகளிடம் விற்றுவிட்டு அந்த காசைக்கொண்டு புதிதாக பசுங்கன்று ஒன்றை வாங்கி வளர்ப்பார்கள். அது கன்று ஈன்றவுடன் அதிலிருந்து பால் கறந்து வருமானம் பார்ப்பார்கள். காளை கன்றுக்குட்டி போட்டால் ஓரளவிற்கு பெரிதாக வளர்ந்த பின்பு வியாபாரியிடம் விற்று விடுவார்கள். பசுங்கன்று போட்டால் அதை வளர்த்து பால் கறந்து விற்பார்கள். இது ஒரு சுழற்சி. உணவு சங்கில போல. அரைடவுசர்களின் மோடி அரசாங்கம் இந்த சங்கிலியை இப்போது வெட்டிவிட்டது. விளைவு விபரீதமாகத்தான் இருக்கும்.

எங்கள் வீட்டில் இப்போது இரண்டு மாடுகள் இருக்கிறது. என் அம்மாவும், சித்தியும் அதைக்கவனித்துக்கொள்கிறார்கள். அதை மேய்ப்பது, அதற்கு புல் கொண்டுவந்து போடுவது, காலை மாலை பால் கறந்து விற்பது என்பது எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு முக்கியமான வேலை. கிராமத்தில் இருப்பவர்களிடம் கேளுங்கள் மாட்டை பராமரிப்பது எவ்வளவு கஷ்டம் என்று கூறுவார்கள். எங்கள் ஊரில் மாட்டுக்கு புல் அறுக்கச்சென்று விரியன் பாம்பு கடித்தவர்களே 10-க்கு அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அதில் என் அம்மாவும் ஒரு ஆள். விரியன் பாம்பு கடித்ததால் செத்துப் பிழைத்தவர். தஞ்சை மருத்துவக்கல்லூரிக்குச் சென்று காப்பாற்றினோம். மாட்டிற்காக மரணத்தையே எட்டிப்பார்த்தவர்.

நான் பாலிடெக்னிக் படித்த போது(2004-2007) எங்கள் வீட்டில் 20 மாடுகள் இருந்தது. விடுமுறை நாட்களில் காலை 9-மணிக்கு சாப்பிட்டுவிட்டு 20 மாடுகளையும் மேய்க்க ஓட்டிச்செல்வேன். மாலை 3.30 மணி வரைக்கும் மேய்த்து விட்டு திரும்பி வீட்டிற்கு ஓட்டி வருவேன். ஆனால் இப்போது 2-மாடுகள்தான் இருக்கிறது. காரணம் என் ஆத்தாவுக்கு வயதாகிவிட்டது. நான் சென்னைக்கு வேலக்கு வந்துவிட்டேன். மாடுமேய்க்க ஆள் கிடையாது. மாடு வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று சிறுவயதிலிருந்தே மாடு மேய்த எனக்கு நன்றாக தெரியும். ஜல்லிக்கட்டு நடந்தால் நாட்டு மாடு காப்பற்றப்படும் என உருப்படாத ஒரு வாதத்தை வைத்தார்கள். நாட்டு மாடு மட்டுமல்ல, எந்த மாட்டை பாதுகாக்க வேண்டுமானாலும் அந்த மாட்டால் பலன் ஏற்படும் அளவிற்கு ஏற்பாட்டை செய்தால்தான் பாதுகாக்க முடியும்.

எங்கள் ஊரில் உழவுக்கான காளை மாடுகள் யார்வீட்டிலும் இப்போது இல்லை. காரணம் டிராக்டர்களை வைத்து நடவு நட்டுக்கொள்ளலாம். கடலை விதைப்பதற்குத்தான் ஏர் கிடைக்கவில்லை. பக்கத்து ஊரிலிருந்துதான் ஏர் பிடித்துவருகிறோம். பசுமாட்டைவிட காளை மாட்டை வளர்ப்பது மிகவும் கடினம். வைக்கோல் போர் வேண்டும், ஒரு நாளைக்கு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு என்று 400ரூபாய் வேண்டும். ஒரு நாளைக்கு 400ரூபாய் வருமானம் வரும் அளவிற்கு விவசாயிக்கு என்ன வழி இருக்கிறது கிராமத்தில். மாதம் பண்ணிரெண்டாயிரம் ரூபாய் வேண்டும் மாட்டுக்கு. டிராக்டர்கள் வந்தது விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது. உழுகும் போதும், மாட்டுவண்டியில் பூட்டும்போது சில மாடுகள் விழுந்து படுத்துக்கொள்ளும். அந்த காளை மாட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது? பசு மாடென்றால் பால் கறக்கலாம், காளை மாட்டில் பால் கறக்க முடியுமா? பாலும் கறக்க முடியாது, ஏறும் உழுவு முடியாது, மாட்டு வண்டியிலும் பூட்ட முடியாது. அந்த மாட்டை வைத்துக்கொண்டு மாதம் 12000 ரூபாய் நட்டபட்டுக்கொண்டிருந்தால் விவசாயி எப்படி பிழைக்க முடியும். தற்கொலைதான் பண்ணிக்கொள்ள வேண்டும்.

விவசாயி மாடு வைத்திருப்பது இலாபத்திற்குத்தான். பால்கறந்து விற்றால் பணம் கிடைக்கும் என்பதால்தான். கோமாதாவை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கமெல்லாம் அவர்களுக்கு கிடையாது. வேண்டுமென்றால் பசுபாதுகாவலர்கள் அதைச் செய்யட்டும். தன்னைக் காப்பாற்றும் மாட்டை தன்னுடைய குடும்பத்தில் ஒருவரைப்போல கவனித்துக்கொள்வான் விவசாயி. மாட்டைக் கவனித்துக்கொள்வதில் விவசாயியைவிட அக்கறையானவர்களா அரைடவுசர்கள்? பால்கறந்த மாடு நோய் வாய்ப்பாட்டு இறக்கும் போது குடும்பத்தில் ஒருவர் இறந்ததைப்போல நினைத்து கதறி அழுத விவசாயிகளைப், பெண்களைப் பார்த்ததுண்டா? என் கிராமத்தில் அந்த கொடுமையை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அரைடவுசர்களுக்கு தெரியுமா இதெல்லாம். அவர்களுக்கு மாட்டு மூத்திரத்தில் தங்கம் கிடைக்குமா என ஆராய்ச்சி பண்ணத்தெரியும். பாம்பு கடியெல்லாம் பட்டு பால் கறந்து தயிர், மோர், நெய்,  வெண்ணை கடைந்து கொடுத்தால் விரல் சொட்டச்சொட்ட சாப்பிடுவார்கள்.

தான் வளர்க்கும் மாட்டால் பலனில்லை என்றால் அது விவசாயிக்கு மேலும் சுமையைக்கொடுக்கும். மாட்டிற்கு வைக்கோல் வாங்க வேண்டும், அதை மேய்க்க வேண்டும், மருத்துவம் பார்க்க வேண்டும். இவ்வளவும் செய்து பலனொன்றுமில்லையென்றால் ஏற்கனவே வறுமையில் வாடும் விவசாயிக்கு சுமையாக அமையும். ஏற்கனவே தொல்லையில் இருக்கும் விவசாயிக்கு இன்னொரு தொல்லையாக எதற்கு தொத்தை மாடு? கன்று ஈன்ற முடியாத மாட்டை கறிக்குத்தான் விற்க வேண்டும். வேறு என்ன வழி இருக்கிறது? அரசாங்கம் விளக்க வேண்டும். வயதான மாடுகளை இறைச்சிக்காக விற்காமல் மெரினாவில் சமாதியா அமைக்க முடியும்? மாட்டை என்ன செய்ய வேண்டுமென்று முடிவெடுக்க வேண்டியது அதை வளப்பவன்தான். அரசாங்கம் அல்ல.



மூன்று வருடங்களில் மோடி என்ன செய்து கிழித்தார்? என்ற கோள்வியை திசைதிருப்ப மாட்டுக்கறி பிரச்சனையை கிளப்பிவிட்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஒவ்வோரு ஆண்டின் முடிவிலும் மாடு தொடர்பான பிரச்சனையைக் அரைடவுசர்கள் கிளப்புகிறார்கள். காரணம் ஒவ்வொரு ஆண்டு முடியும் போது மோடி என்ன செய்தார்? என்று கேள்வி எழும். அதற்கு பதில் கூற முடியாது.

உழவுத்தொழில் செய்வது பாவம் என்று கூறுபவர்கள் வேறு யாருமல்ல பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்தான். அப்படி கூறுபவர்கள் விவசாயிகளின் மீது அக்கறை கொள்வார்களா? அவர்களிடம் எதிர்ப்பார்ப்பது போன்ற பைத்தியக்காரத்தனம் வேறு ஏது?

மாட்டுக்கறி தின்பது இனிமேல் புரட்சிக்கான குறியீடாக இருக்க வேண்டும்.



பசுமாட்டை மட்டும் ஏன் புனிதமாக கருத வேண்டும்? பசுமாட்டை விட எருமை மாடுதான் அதிகம் பால் கறக்கிறது அப்படிப்பார்த்தால் எருமை மாடுதான்  பசுமாட்டைவிட போற்றி பாதுகாக்க வேண்டியது. மாட்டை மேய்த்துக்கொண்டு இந்தியாவிற்குள் வந்தவர்கள் இன்றைக்கு அனைத்து பதவி சுகத்தையும் அனுபவிக்கிறார்கள். அந்த நன்றிக்கடனுக்காக மாட்டின் மீது பாசம் இருக்கத்தான் செய்யும். என்னதான் இருந்தாலும் மாடுமேய்ப்பது அவர்களது குலத்தொழில் அல்லவா? மாட்டின் தலையை வெட்டி யாகம் செய்தவர்கள் யார்? மாட்டின் ஊனை ரசித்து சுவைத்தவர்கள் யார்? என்பதெல்லாம் மக்கள் அறிவார்கள். விடை தெரியவில்லையா? இந்த புத்தகத்தைப் படித்துப்பாருங்கள்.



மாட்டுக்கறி விஷயத்தில் கேரளா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. சரியான முதல்வரைத்தான் கேரள மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். சிறுதெய்வ வழிபாட்டில் ஆடு, மாடு, பன்றி, எருமை, கோழி பலியிடுவது இயல்பான ஒன்று. அதற்கு தடை விதித்த ஜெயலலிதாவின் வழித்தோன்றல்கள் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இப்போது அதிமுக எனும் குதிரையை ஓட்டிக்கொண்டிருப்பதே அரைடவுசர்கள்தானே. தமிழ்நாட்டை ஆளும் அதிமுக இதை எதிர்க்காது.



எதிர்கட்சி தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் இந்த அறிவிப்பு வந்த உடனையே கடுமையாக கண்டித்திருக்கிறார். அதிமுக, தமிழ்த்தேசியவாதிகளைத் தவிர அனைவரும் இந்த அறிவிப்பை எதிர்த்திருக்கிறார்கள். ஒரு வேளை தமிழ்த்தேசியவாதிகளுக்கு தன்னுடைய எஜமானர்களிடமிருந்து உத்தரவு வந்தால் எதிர்த்து அறிக்கை விடுவார்கள்.




முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெரியாரும், அம்பேத்கரும் இந்த நாட்டிற்கு தேவைப்படுகிறார்கள். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல பெரியாரும், அம்பேத்கரும். இந்தியாவின் அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வு பெரியாரிடமும், அம்பேதகரிடமும்தான் இருக்கிறது. அதை மோடி போன்றவர்கிடமும் தேடியது, தேடுவது பைத்தியக்காரத்தனம்.

என்னப்பா கதிர்வேலு தெழில்நுட்பம் பேச வேண்டிய இடத்துல, அரசியல் பேசுறேனு யாராவது கேட்பீங்க. இங்கு எல்லாமே அரசியல்தான். லினக்ஸ் பயன்படுத்துவதும், அதைப் பரப்புவதுமே அரசியல்தான். யார் மனதும் புண்படாமல் பேச வேண்டுமென்றால், ஆமை வடை சுடுவது எப்படி என்றுதான் பேச முடியும். அப்போது கூட ஆமை வடை எனக்கு பிடிக்காது என்று ஒருத்தர் இருப்பார் அவர் மனது புண்படும். அப்புறம் கதிர்வேல் நடுநிலைவாதியா? இல்லை ஏதாவது அரசியல் கட்சி சார்ந்தவரானு யோசிக்காதீங்க. நானே சொல்லிவிடுகிறேன்.

நான் பெரியார் கொள்கைக்காரன்! அவரின் தொண்டன்!
நான் திராவிடன் என்பதில் பெருமைகொள்பவன்!
நான் திராவிடர் இயக்க ஆதாரவாளன்!
நான் அம்பேத்கரின் தொண்டன்!
நான் இந்து மதத்தைப் எதிர்ப்பவன்!
நான் மாட்டுக்கறி சாப்பிடுபவன்!

சரி ரொம்ப யோசித்து, யோசித்து கட்டுரை எழுதியதால கொஞ்சம் களைப்பா இருக்கு. அதோடு தேசத்துரோகினு திட்டி பின்னூட்டம் வேற வரும் அதையெல்லாம் தாங்கும் அளவிற்கு தெம்பு வேணும்ல அதனால ஒரு மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுவிட்டு வார்றேன். அப்பத்தான் full energy யோட இருக்கலாம்.

அட அரைடவுசர்களா பால்கறக்க முடியாத, உழவுக்கு பயன்படாத, மாட்டு வண்டி ஓட்ட முடியாத மாட்டை கறிக்கு விற்கக் கூடாதுன்னா வேற என்னாங்கடா பண்ணுறது? ஒன்னு பண்ணலாம்ங்கோ. வேளா வேளைக்கு மாட்டு மூத்திரைத்தைப் பிடித்து குடிக்கலாம் இல்லைனா உங்கள மாதிரி மாட்டு மூத்திரத்தில் தங்கம், வைரம் கிடைக்குதானு ஆராய்ச்சி பண்ணலாம். போங்கடா வெங்காயங்களா!

May 1, 2017

மறந்து போன Windows 7 கடவுச்சொல்லை reset செய்வது எப்படி?

தொடர்ந்து பயன்படுத்தாத எதுவுமே மறந்து போகும் என்பது இயற்கை விதி. என்னுடைய மடிக்கணினியில் விண்டோஸ் 7 இயங்குதளத்தை நிறுவி வைத்திருந்தாலும் அதைப் பயன்படுத்தி நீண்ட நாட்களாக ஆகிறது. ஒரு சிறிய வேலைக்காக விண்டோஸ் 7 இயங்குதளம் பக்கம் போக வேண்டியிருந்தது. எப்போதும் போல் கடவுச்சொல் ஞாபகத்தில் இல்லை.

உபுண்டுவை வைத்து விண்டோஸ் 7 இயங்குதளத்தின் கடவுச்சொல்லை மாற்ற முடியுமா என இணையத்தில் தேடிப்பார்த்தேன். விடை கிடைத்தது. மூன்று கட்டளைவரிகளில் விண்டோஸ் 7 இயங்குதளத்தின் கடவுச்சொல்லை மாற்றி விட்டேன். எப்படி மாற்றினேன் என்று பார்ப்போமா?

உபுண்டுவை லைவ்வாக பூட் செய்து விண்டோஸ் 7 இயங்குதளம் நிறுவியிருக்கும் Partition -ஐ திறந்தேன். முனையத்தைத் திறந்து கீழ்காணும் கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக இயக்கினேன்.

cd /media/ubuntu/WINDOWS7/Windows/System32/

Volume label கொடுக்கப்பட்டிருக்காதபட்சத்தில் UUID -ஐ கொடுக்க வேண்டும். நான் WINDOWS7 எனும் volume label கொடுத்திருந்தேன்.

 mv sethc.exe sethc.old

 cp cmd.exe sethc.exe

 sync





முனையத்தை மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம்(restart) செய்து விண்டோஸ் 7 இயங்குதளத்திற்குள் நுழைந்தேன். Login screen வந்த பின்பு Shift key-யை 5 முறை அழுத்தினேன்.



MS-DOS command prompt திறந்தது. அதில் net user kathirvel * கட்டளைவரியை இயக்கினேன். இப்போது new password and retype-new password ஐ உள்ளிட்டேன். kathirvel என்பது என்னுடைய பயனர் பெயர். உங்களுடைய பயனர் பெயர் என்னவோ அதை நீங்கள் கொடுங்கள்.  Administrator password -ஐ மாற்ற வேண்டுமென்றால் net user administrator * என கொடுக்க வேண் டும்.


முடிந்தது இப்போது kathirvel எனும் பயனரை தேர்வு செய்து புதிதாக மாற்றிய கடவுச்சொல்லைக் கொடுத்தேன். வெற்றி! விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு நுழைந்தாகிவிட்டது! செய்ய வேண்டிய வேலையை முடித்தேன். திரும்பினேன்.

விண்டோஸ் 7 இயங்குதளத்தின் கடவுச்சொல் மறந்துவிட்டதா? கவலை வேண்டாம். உபுண்டு இருக்கிறது கடவுச்சொல்லை மீட்க!


dd கட்டளையும் - பென்டிரைவை format செய்தலும்

லினக்ஸ் ISO கோப்புகளை bootable ஆக மாற்றுவதற்கு dd கட்டளை பயன்படுகிறது. CD/DVD-யில் இயங்குதளங்களை எழுதி அவைகளைக்கொண்டு கணினியில் இயங்குதளங்களை நிறுவுவது பழைய உத்தி. இன்றைக்கு இருக்கக்கூடிய பெரும்பாலான இயங்குதளங்களும் சரி, கணினிகளும் சரி பென்டிரைவில் இருந்து இயங்குதளங்களை நிறுவுவதற்கு ஒத்துழைக்கிறது.

மிக எளிதாக இன்றைக்கு கணினியில் இயங்குதளங்களை நிறுவிவிடலாம். ஒருகாலத்தில் கணினியில் இயங்குதளம் நிறுவுவது விண்ணில் ராக்கெட் விடுவதைப் போல இருந்தது.

இயங்குதளத்தின் ISO கோப்பு, ஒரு பென்டிரைவ், ISO கோப்பை பென்டிரைவில் bootable ஆக மாற்றுவதற்கு ஒரு மென்பொருள் இவை மூன்றும் இருந்தால் போதும் நிறுவத்தக்க வகையிலான பென்டிரைவை தயார் செய்துவிடலாம். அந்தவகையில் லினக்ஸ் இயங்குதளங்களில் ISO கோப்புகளை பென்டிரைவில் bootable ஆக மாற்றுவதற்கு பயன்படும் கட்டளைதான் dd. dd கட்டளை அதற்கு மட்டும்  பயன்படுவதில்லை. அதன் பயன்பாடு பலவகைகளில் இருக்கிறது அதில் bootable ஆக மாற்றுவதும் ஒன்று.

சரி விஷயத்திற்கு வருவோம். dd கட்டளையைக் கொண்டு பென்டிரைவை bootable ஆக மாற்றுவது எப்படி? என்பதைப் பற்றி இங்கு ஏற்கனவே எழுதியுள்ளேன். அவ்வாறு bootable ஆக மாற்றிய பிறகு அந்த பென்டிரைவைக் கொண்டு இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளலாம். ஆனால் எந்த தகவலையும் அந்த பென்டிரைவில் பதிய முடியாது அதில் இருப்பதை நீக்கவும் முடியாது. ஏன் என்றால் dd கட்டளையானது ISO கோப்பின் அளவிற்கு ஏற்ப பென்டிரைவை பார்ட்டிசியன் செய்துவிடும். மீதமிருக்கும் இடங்களை பார்ட்டிசியன் பிரிக்காமல் free space ஆக வைத்துவிடும்.

உதாரணமாக, உபுண்டு 16.04.2 LTS ISO கோப்பினை dd கட்டளைக் கொண்டு 8GB அளவுள்ள பென்டிரைவில் bootable ஆக மாற்றுகிறோம் என்றால். உபுண்டுவின் 16.04.2 LTS ISO கோப்பின் அளவு 1.4GB. 8GB யில் 1.4GB க்கு உபுண்டு 16.04.2 ISO கோப்பை எழுதிவிட்டு மீதமிருக்கும் இடங்களை free space ஆக விட்டுவிடும். நம்மால் 1.4GB அளவுள்ள இடத்தை format செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும் ஆனால் மீதமிருக்கும் இடங்களை பயன்படுத்த முடியாது. இந்த பிரச்சனையை தீர்ப்பது எப்படி என்றுதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால் dd கட்டளையைப் பயன்படுத்திய பிறகு pendrive-வை partition மற்றும் format செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம்.

லினக்ஸில் பார்ட்டிசியன்களை கையாள்வதற்கு fdisk கட்டளைப் பயன்படுத்தப்படுகிறது. fdisk கட்டளையை கவனமாக கையாள வேண்டும். இதில் சொல்லியிருக்கும் வழிமுறைகள் புதியவர்களுக்கு புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமாக இருக்கலாம். பென்டிரைவை கணினியில் சொருகிவிட்டு lsblk கட்டளையை இயக்கினால் பென்டிரைவின் partition number ஐ தெரிந்து கொள்ளலாம். கணிணியில் இருக்கும் hard disk -ஐ /dev/sda என்று லினக்ஸ் அடையளப்படுத்தியிருக்கும். வேறு எந்த storage device -உம் இணைக்கப்படாதபட்சத்தில், பென்டிரைவ் /dev/sdb என அடையளப்படுத்தப்படும். இது ஒரு உத்தேசமான கணிப்புதான். உறுதிப்படுத்திக்கொள்ள lsblk கட்டளையை இயக்கினால் தெரிந்து கொள்ளலாம்.

fdisk கட்டளையை இயக்குவதற்கு முன்பு bootable pendrive -இல் திறந்திருக்கும் partition களை unmount செய்யவேண்டும். Partition களை unmount செய்வதற்கு umount கட்டளை பயன்படுகிறது. கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.



பென்டிரைவ் /dev/sdb என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் fdisk கட்டளை கீழ்கண்டவாறு இருக்கும்

sudo fdisk /dev/sdb

fdisk கட்டளையின் உள்ளீட்டு விபரங்கள்

p - பார்ட்டிசியன் விபரங்களை பட்டியலிடுதல்(print)
d - பார்ட்டிசியனை நீக்குதல்(delete)
n - பார்ட்டிசியனை உருவாக்குதல்(new)
w - பார்ட்டிசியன் தொடர்பான மாற்றங்களை எழுதுதல்(write)
q - வெளியேறுவதற்கு

'w'  இயக்காதவரையில் நாம் fdisk மூலமாக செய்த மாற்றங்கள் disk -இல் எழுதப்படாது. ஏதாவது தவறுதலாக செய்திருந்தால் வெளியேறிவிடலாம் எந்த பிரச்சனையுமில்லை. 'w' இயக்கிவிட்டால் மாற்றங்களை திரும்ப பெற முடியாது.





பென்டிரைவில் பார்ட்டிசியனை உருவாக்கியபிறகு அதை FAT32 கோப்பு முறைமையில் format செய்ய இந்த கட்டளையை இயக்கவும் sudo mkfs.vfat -n "KATHIRVEL" /dev/sdb1


format செய்த பின்பு முழுஅளவுடன் பென்டிரைவ்