Aug 6, 2017

பேருந்து பயணமும் புத்தக வாசிப்பும்

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் பேருந்தில்தான் தினமும் அலுவலகம் சென்றுகொண்டிருக்கிறேன். என்னுடைய அலுவலகம் பள்ளிக்கரனையில் உள்ளது. நான் தங்கியிருப்பது முகப்பேரில். முகப்பேரிலிருந்து கலெக்டர் நகர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, பிறகு அங்கிருந்து கிண்டி அல்லது வேளச்சேரி செல்லும் பேருந்தில் பயணித்து, பிறகு வேளச்சேரியிலிருந்து பள்ளிக்கரனையில் இருக்கும் என் அலுவலகத்திற்குச் செல்வேன்.

என்னுடைய வாசிப்பு என்பது தீவிரமான வாசிப்பு என்று கூறமுடியாது. சாதரணமான வாசிப்பு பழக்கம் உள்ளவன்தான்  நான். கட்டுரை, பெரியாரியல், திராவிடம், அரசியல், அறிவியல், வரலாறு தொடர்பான புத்தகங்களைத்தான் நான் விரும்பி படிப்பேன். சிறுகதை, நாவல் போன்றவற்றில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை.



என்னுடைய முதல் நாவல் வாசிப்பு எதுவென்று கேட்டால் நிசப்தம் வா.மணிகண்டன் எழுதிய மூன்றாம் நதி நாவல். நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பவன் நான். மூன்றாம் நதி நாவல் எழுதியிருப்பதைப் பற்றி மணிகண்டன் நிசப்தம் தளத்தில் பதிவு செய்திருந்தார். ஆகையால், அந்த நாவலை படித்துப்பார்க்கலாம் என ஆர்வம் வந்தது. சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். நாவல்கள் வாசிப்பதில் எனக்கு  அவ்வளவாக ஆர்வம் இல்லாததால் நீண்ட நாட்களாக அந்த புத்தகத்தை படிக்காமலேயே வைத்திருந்தேன்.

புத்தகங்களைத் தாண்டி நான் வாசிப்பது தி இந்து தமிழ் நாளிதழ், நக்கீரன், உயிர்மை, ஆனந்த விகடன், எப்போதாவது தடம் இதழ்.

கலெக்டர் நகர் பேருந்து நிறுத்தத்திலிருந்து வேளச்சேரி செல்வதற்கு குறைந்தது ஒன்னேகால் மணி நேரம் ஆகும். வேளச்சேரியிலிருந்து பள்ளிக்கரனை செல்வதற்கு பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் வரை ஆகலாம். ஆக மொத்தம் எனக்கு அலுவலகம் சென்று, அறைக்குத் திரும்புவதற்கான பயண நேரம் என்பது மூன்று மணி நேரம் ஆகும்.

என்னுடைய அறையிலிருந்து கலெக்டர் நகர் செல்வதற்கான பேருந்தைப் பிடிக்க அருகிலிருக்கும் முகப்பேர் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். பதினைந்து நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும். முகப்பேர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் தேநீர் கடையில் ஒரு தேநீர் அருந்திவிட்டு, அருகிலிருக்கும் புத்தகக்கடையில் தமிழ் இந்து நாளிதழும், அன்றைய தினத்தில் புதிதாக நக்கீரன் இதழ் வந்திருந்தால் நக்கீரனையும் வாங்கிக்கொள்வேன். ஆனந்த விகடன் வியாழன் தோறும் வெளிவருவதால் வியாழக்கிழமை கூடுதலாக ஆனந்த விகடனை வாங்கிக்கொள்வேன். உயிர்மை மாதத்தின் முதல்வாரம் அந்த கடையில் கிடைக்கும். அன்றைக்கு உயிர்மை வாங்கிக்கொள்வேன்.

பொதுவாக பேருந்தில் பயணிக்கும் போது படிக்கக்கூடாது  கண் கெட்டுவிடும் என்று கூறுவார்கள். அந்த பயம் எனக்கு என்றைக்கும் வந்தது கிடையாது. தினமும் பேருந்தில் பயணிக்கும் அந்த மூன்று மணிநேரம் என்பது என்னுடைய வாசிப்பிற்கான நேரம். அதை இழக்க நான் தயாராக இல்லை.

இப்போது எனக்கு அலுவலக நேரம் காலை 11.30 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரைக்கும். இரவு பத்து மணிக்கு மேல் பெரும்பாலும் சென்னை மாநகர பேருந்துகளில் கூட்டம் இருக்காது. அமர்ந்து செல்லும் அளவிற்கு இருக்கைகள் காலியாகத்தான் இருக்கும். பள்ளிக்கரனையிலிருந்து முகப்பேர் வரையிலும் அமரந்து கொண்டே பயணிக்கலாம். காலையில் முகப்பேரிலிருந்து பள்ளிக்கரனைக்கு செல்வதற்காக கலெக்டர் நகர் பேருந்து நிறுத்தத்தில் ஏறும் போது பெரும்பாலும் இருக்கைகள் காலியாக இருக்கும் இல்லையென்றால் வடபழனி அல்லது அசோக் பில்லர் நிறுத்தத்தில் இருக்கைகள் கிடைத்து விடும். சில நாட்கள் ஏமாற்றம்தான் மிஞ்சும் வேளச்சேரியை அடையும் வரை நின்றுகொண்டே பயணிக்க வேண்டியதுதான். இருக்கைகள் கிடைக்காது.

இருக்கை கிடைத்த உடன் எனது வாசிப்பு தொடங்கி விடும். முதலில் தி இந்து நாளிதழைப் படித்து முடித்து விடுவேன். அன்றைக்கு நக்கீரன் வாங்கியிருந்தால் அடுத்ததாக நக்கீரனைப் படிப்பேன். வியாழனாக இருந்தால் அடுத்தது ஆனந்த விகடன். இவைகளை படித்து முடிக்கும் போது கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் வந்து விடும்.

மேற்கண்டவைகளை படித்து முடிந்த பிறகு புத்தகங்களைப் படிக்க ஆரம்பிப்பேன். அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் நான்கு அல்லது ஐந்து புத்தகங்கள் இருக்கும். என்னுடைய விரும்பம், ஆர்வத்திற்கு ஏற்றாற்போல் அதிலிருந்து புத்தகங்களை எடுத்துப் படிப்பேன்.

பேருந்தில் நான் புத்தகங்களை படிக்கத் தொடங்கியது எப்போது என்றால் என் அலுவலகத்தோழி சிவசங்கரி எனக்கு புத்தகங்கள் அளிக்க தொடங்கிய பின்புதான். என்னுடைய அலுவலக நட்பு வட்டத்தில் நண்பர் பிரசன்னாவும், சிவசங்கரியும் தீவிரமான புத்தக வாசிப்பாளர்கள். பிரசன்னா தீவிர  திராவிடர் இயக்க பற்றாளர். அரசியல் மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஆகையால் அவர் அது தொடர்பான புத்தகங்களை அதிகம் வாசிப்பார். என்னுடன் புத்தகங்களை பகிர்ந்து கொள்வார். தோழி சிவசங்கரி நாவல்கள், கதைகள் போன்றவைகளை விரும்பி படிப்பவர். சிவசங்கரியின்  அம்மாவும், அப்பாவும் அவருடைய வாசிப்பிற்கு காரணம் என்று கூறினார். சிவசங்கரி பயணங்களின் போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர். தீவிரமான வாசிப்பாளர்.

ஒருநாள் நான் புத்தகம் வாசிப்பதை தெரிந்து கொண்டு, கதிர் புத்தகம் வைத்திருந்தால் கொடுங்கள் வாசித்துவிட்டு தருகிறேன் என்று கேட்டார். என்ன மாதிரியான புத்தகங்களை விரும்பி படிப்பீர்கள் எனக்கேட்டேன். நாவல்கள், கதைகளை விரும்பி வாசிப்பேன் என்று கூறினார். என்னிடம் அரசியல், பெரியார், அறிவியல் தொடர்பான புத்தகங்கள்தான் இருக்கின்றன. நாவல்கள், கதை தொடர்பான புத்தகங்கள் இல்லை. இருந்தாலும் ஒரே ஒரு நாவல் வைத்திருக்கிறேன் அதை கொண்டு வந்து தருகிறேன் என்று கூறி, வா.மணிகண்டன் எழுதிய மூன்றாம் நதி நாவலை அளித்தேன். அந்த புத்தகத்திற்கு பதிலாக சிவசங்கரி வைரமுத்து எழுதிய கருவாச்சி காவியம் நாவலை எனக்கு கொடுத்தார். கருவாச்சி காவியம் படிக்க ஆரம்பித்த பின்புதான் நாவல்களை படிக்க எனக்கு ஆர்வம் வந்தது.



நான் நாவல்களைப்  விரும்பி படிக்க காரணமாக இருந்த தோழி  சிவசங்கரி அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி கூற வேண்டும். சிவசங்கரி கொடுத்த கருவாச்சி காவியம்தான் என்னை பேருந்தில் புத்தகங்கள் படிக்க தூண்டியது. கருவாச்சி காவியம் முழுவதையும் பேருந்து பயணத்திலேயே படித்து முடித்தேன். அருமையான நாவல் அது. அந்த நாவலில் வரும் கருவாச்சியைப் போல பல பெண்கள் எங்கள் கிராமத்தில் உண்டு. அவர்களின் கதையில் வேறுபாடு இருக்கும் அவ்வளவுதான். ஆனால் கருவாச்சியின் துயரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.



கருவாச்சி காவியம் படித்த முடித்த பிறகு படிப்பதற்காக வாங்கிய நாவல்களின் பட்டியல் கீழே.

சென்னைக்கு மிக அருகில் - விநாயக முருகன்
ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்
அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா
மூன்றாம் உலகப்போர் - வைரமுத்து



மூன்றாம் உலகப்போரைத் தவிர மேலே உள்ள மற்ற புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன். மூன்றாம் உலகப்போர் பாதி படித்துவிட்டேன். படித்ததெல்லாம் சென்னை மாநகர பேருந்து பயணத்திலேயே. மேற்கண்ட புத்தகங்கள் தவிர பல புத்தகங்களை பேருந்து பயணத்திலேயே படித்து முடித்திருக்கிறேன். இப்போதும் படித்துக்கொண்டிருக்கிறேன். அலுவலகம் செல்வதற்கான பேருந்து பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

நான் விரும்பி வாசிக்க நினைத்த நாவல்களில் விநாயக முருகனின் ராஜீவ் காந்தி சாலையும், சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதையும் இன்னும் வாங்க முடியவில்லை. Out of stock என்று கூறுகிறார்கள். இந்த இரண்டு நாவல்களும் அடுத்த பதிப்புக்கு வரும்போது நிச்சயம் வாங்கிவிட வேண்டும் என திட்டம் வைத்திருக்கிறேன்.



என் வாசிப்பை அடுத்த தளத்திற்கு கொஞ்சம் நகர்த்தும் விதமாக தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள், புத்தகங்களை வாங்கலாம் என திட்டமிட்டுள்ளேன். 



அலுவலகத்திற்கு செல்லும் போது பையினுள் நான்கு, ஐந்து புத்தகங்களை எடுத்துச்செல்வது என்பது கொஞ்சம் சுமையாக  இருக்கிறது. பொன்மாலைப் பொழுதில் மின்பதிப்பித்தலின் தாக்கம் பற்றி பத்ரி பேசிய காணொளியைப் பார்த்த பின்பு புத்தகச்சுமையை குறைப்பதற்கு தீர்வு கிடைத்து விட்டது. ஆமாம் கிண்டில் வாங்கலாம் என திட்டமிட்டு இருக்கிறேன். பணம் கிடைத்தவுடன் வாங்கிவிடுவேன். கிண்டிலில் ஆங்கில புத்தகங்கள் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கின்றது. பைக்குள் வைத்து எடுத்துச்செல்வதும் எளிது. எடையும் குறைவு. கிண்டிலில் தமிழின் முக்கியமான புத்தகங்கள் இன்றைக்கு கிடைக்காவிட்டாலும் நாளைக்கு நிச்சயமாக கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. கிண்டில் வாங்கிய பிறகு வாசிப்பு இன்னும் எளிதாக, இனிமையாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி: சிவசங்கரி

No comments: