Jun 8, 2014

EXT4 கோப்பு முறைமை Partition களை பயன்படுத்துதல்


எனக்கு தெரிந்த அண்ணன் ஓருவரின் பழைய மேசைக்கணினியில் இருந்த வன்வட்டு வேலை செய்யவில்லை. ஆகையால் அந்த கணினியில் 320GB(SATA வகை) அளவு கொண்ட புதிய வன்வட்டு ஒன்றினை வாங்கி இணைத்தேன். அவர் லினக்ஸைத்தான் விரும்பி பயன்படுத்துவார் ஆகையால் பார்ட்டிசியன் பிரிக்கும் போது முதல் பார்ட்டிசியனை மட்டும் NTFS கோப்பு முறைமையிலும் மற்ற பார்ட்டிசியன்கள் அனைத்தையும் EXT4 கோப்பு முறைமையிலும் பிரித்தேன். அதை கீழ்காணும் படத்தில் காணலாம். அதன்பின் அந்த வன்வட்டில் உபுண்டு 12.04.2 LTS பதிப்பை மட்டும் நிறுவினேன். விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவவில்லை.


Nautilus File Manager க்குள் சென்று EXT4 கோப்பு முறைமையில் பிரித்த பார்ட்டிசியன்கள் எதிலும் தகவல்களை சேமிக்க முடியவில்லை. காரணம் என்னவென்றால் root பயனாளர் மட்டும்தான் அதில் கோப்புகளை சேமிக்க முடியும் என்று அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆகையால் Read and Write அனுமதிகளை Partition க்கு  அளித்துவிட்டால் முடிந்தது பிரச்சனை.

முதலில் பார்ட்டிசியன்கள் அனைத்தையும் திறந்து(Mount செய்தேன்) கொண்டேன், அதன்பின் முனையத்திற்குச் சென்று sudo chmod 777 /media/volume label or UUID கொடுத்தேன். அதன்பின் அனைத்து பார்ட்டிசியன்களையுன் Unmount செய்து விட்டு திரும்ப Mount செய்த போது கோப்புகளை சேமிக்க முடிந்தது. நான் Volume Label கொடுத்திருந்திருந்ததால் sudo chmod 777 /media/PERIYAR_4 என கொடுத்திருக்கிறேன். Volume Label கொடுக்காமல் Partition ஆனது பிரிக்கப்பட்டிருந்தால் அதனுடைய UUID ஐ கொடுக்க வேண்டும். Partition இன் UUID ஐத் தெரிந்து கொள்ள முனையத்தில் sudo blkid என கொடுக்கவும்.



துணுக்கு:
விண்டோஸ் இயங்குதளம் FAT மற்றும் NTFS ஆகிய இரண்டு கோப்பு முறைமைகள்(File Systems) மட்டும்தான் ஆதரிக்கும். ஆனால் லினக்ஸ் இயங்குதளம் 100 க்கு மேற்பட்ட கோப்பு முறைமைகளை ஆதரிக்கும். பெரும்பாலும் Ext2, Ext3 மற்றும் Ext4 கோப்பு முறைமைகள் லினக்ஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படுகிறது. உபுண்டுவை பொறுத்த வரையில் இயல்பிருப்பாக Ext வகை(Ext2, Ext3, Ext4) கோப்பு முறைமைதான் பயன்பாட்டில் உள்ளது. அண்மைய உபுண்டு பதிப்புகளில்  Ext4 கோப்பு முறைமை பயன்படுத்தப்படுகிறது. FAT மற்றும் NTFS கோப்பு முறைமைகளையும் உபுண்டுவில்  கையாள முடியும். ஆனால் உபுண்டுவினுடைய Home மற்றும் Root Partition கள் Ext வகை கோப்பு முறைமைகளை பயன்படுத்துவதால்தான் விண்டோஸ் இயங்குதளத்தில் அவைகளை காண முடிவதில்லை. காரணம்  FAT, NTFS ஐத் தவிர்த்து வேறெந்த கோப்பு முறைமைகளையும் விண்டோஸ் ஆதரிக்காது. லினக்ஸ் இயங்குதளங்களை மட்டும் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு FAT மற்றும் NTFS கோப்பு முறைமைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் Ext4 கோப்பு முறைமையை பயன்படுத்துவதால் பயனாளர்களுக்கு பல நன்மைகள் உண்டு. லினக்ஸ் இயங்குதளங்களை மட்டும் பயன்படுத்துபவர்கள் தேவைப்பட்டால் ஒன்றிரண்டு பார்ட்டிசியன்களை NTFS கோப்பு முறைமையில் வைத்துக்கொள்ளலாம்.

No comments: