Oct 21, 2012

Xubuntu 12.04 LTS மூலம் பழைய கணினிக்கு உயிர் கொடுத்தேன்

என்னுடைய பாசமிகு தோழர் நீலகண்டன் அவர்கள் ஒரு பழைய மேசைக்கணினி வைத்திருக்கிறார்.  கணினியில் தோழருடைய அன்றாட வேலை என்னவென்றால் இணையத்தைப் பயன்படுத்தி நாளிதழ்கள் பார்ப்பது, Youtube - ல் அறிவுப்பூர்வமான, பயனுள்ள  வீடியோக்களைப்  பார்ப்பது தேவைப்பட்டால் அதை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது, பாடல் கேட்பது, திரைப்படங்கள் பார்ப்பது இவைகள்தான்.  MS-Office கூட பயன்படுத்துவதில்லை, கணினியில் இருக்கும் Windows XP இயங்குதளத்தில் நிறுவியும் வைத்திருக்க வில்லை.

512-MB RAM னை வைத்துக் கொண்டு விண்டோஸ் இயங்குதளத்துடன் அவர் மிகவும் போராடிதான் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.  நெருப்பு நரி உலாவியினைத்தான் இணையத்தில் உலாவா பயன்படுத்திக்கொண்டிருந்தார்  இரண்டு, மூன்று Tab களுக்கு மேல் திறந்து விட்டால் அப்படியே ஸ்தம்பித்து நின்று விடும். இது இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது உள்ள பிரச்சனை,

அடுத்த பிரச்சனை கோப்புகள் எதையாவது கணினிக்கு பிரதியெடுத்தாலோ அல்லது கணினியிலிருந்து வேறு கருவிகளுக்கு கோப்புகளை பிரதியெடுத்தாலோ காரணமே இல்லாமல் ஸ்தம்பித்து நின்று விடும்.

512-MB RAM, Pentium IV Processor,80GB Hard Disk, 14 Inch அளவு கொண்ட Samsung Monitor, மற்றவைகள் இவைதான் அந்தக் கணினியினுடைய அமைப்பு.

இந்தக் கணினியில் உபுண்டுவை நிறுவினால் என்ன? என்று யோசித்தேன்.  ஆனால் நினைவகம் குறைவாக இருக்கிறதே என்ன செய்யலாம் ஏதாவது ஒரு மெலிதான லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவலாம் என மனதில் நினைத்துக் கொண்டு இணையத்தில் ஒரு ஆலோசனைக் கேட்டு விடுவோம் என முடிவு செய்ததில் அகப்பட்டதுதான் xubuntu.

அனைவரும் விரும்பி பயன்படுத்தும் ஒரு இயங்குதளமாக உபுண்டு இயங்குதளம் இருந்து வருகிறது.  உபுண்டு இயங்குதளம்  பல்வேறு Desktop Environment -களுடன் வெளிவருகிறது.  பெடோரா போன்ற இயங்குதளங்களில் அனைத்து Desktop Environment -களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. DVD யாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். நிறவும் பொழுது  நமக்குத் தேவையானவற்றை நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் உபுண்டு லினக்ஸில் அப்படியில்லை, ஒவ்வொரு Desktop Environment க்கும்  தனித்தனிப்  பதிப்பாகவே உபுண்டுவை கனோனிக்கல் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.  பொதுவாக  வெறும் உபுண்டுவானது  Gnome  உடன் வெளிவருகிறது.  அதுபோல,

Kubuntu - KDE
Xubuntu - XFCE
Lubuntu - LXDE,  Desktop Environment உடன் வெளிவருகிறது.

GNOME -  Desktop Environment - ன்  தற்போதைய பதிப்பு நன்றாக செயல்பட அதிகமான முதன்மை நினைவகம்(RAM)   தேவை. குறைந்தபட்சம் 1-GB தேவை. அதுபோலவே Processor-ம் Pentium IV -க்கு பின் வெளிவந்த Processor ஆக இருக்க வேண்டும்.  காரணம் Unity, 3D மற்றும் பலவிதமான Desktop Effects  கள் Gnome Environment-ல் பயன்பாட்டில் உள்ளது.

பழைய மேசைக் கணினிகளில் உபுண்டுவை GNOME Desktop Environment  உடன்  நிறுவிப் பயன்படுத்துவது என்பது நடக்காத காரியம்.  ஆகையால் குறைவான நினைவகத்தில் சிறப்பாக செயல்படும் ஒரு லினக்ஸ் இயங்குதளம் தேவை அதாவது,  lightweight Linux.

Light Weight லினக்ஸில் முதன்மையானது Damm Small Linux (DSL). DSL இயங்குதளத்தினுடைய மொத்த அளவே 50-60MB தான். 128 MB RAM  இருந்தாலே மிகச்சிறப்பாக செயல்படும். மொத்த இயங்குதளமும் முதன்மை நினைவகத்தில் இருந்துக் கொண்டே இயங்கிக்கொண்டிருக்கும்.   ஆனால் நான் DSL ஐ தேர்வு செய்யவில்லை. 

அடுத்து  Lubuntu , Lubuntu க்கு 128 MB RAM , Pentium II Processor போதும்.  இதையும் நான் தேர்வு செய்யவில்லை காரணம்.  Application - கள் அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக பழக்கப்படாததாக இருந்தது.

அடுத்து Xubuntu, Zenwalk, Knoppix, என நிறைய இருந்தது.  இந்த வரிசையில் எனக்குப் பிடித்தது Xubuntu. காரணம் உபுண்டு இயங்குதளத்தினைப் போலவே பயன் படுத்திக் கொள்ளலாம்.  அதே நேரத்தில் Light Weight ஆகவும் இருக்கிறது.  Xubutnu - வின் தோற்றமும் எனக்குப் பிடித்துப் போய்விட்டது.

ஆகையால் Xubuntu வை நிறுவி விடுவது என ஒரு வழியாக முடிவு செய்தேன்.  சரி இயங்குதளத்திற்கு எங்கே போவது. 

Xubuntu - வை எங்கே தேடிப் பிடிப்பது. தரவிறக்கம் செய்வதுதான் ஒரே வழி.  இதற்கிடையில் எனக்கு ஒரு ஐடியா தோன்றியது, நான் கடந்த 5-வருடங்களுக்கு மேலாக LINUX For You Magazine னினுடைய சந்தா தாரராக இருந்து வருகிறேன்.  அதனுடன் இணைப்பாக வரும் DVD - யில் வந்திருக்கும் என நினைத்து தேடிப் பார்த்தேன்.  Xubutnu கிடைக்கவில்லை.

சரி தரவிறக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.  தோழர் நீலகண்டன் அவர்கள் அகலகற்றை இணைய இணைப்பு வைத்துள்ளார்.  அதை என் மடிக்கணினியில் இணைத்து நான் வைத்திருக்கும் உபுண்டு இயங்குதளம் மூலம் தரவிறக்கினேன்.

தரவிறக்கம் செய்த விதம்:

பொதுவான தரவிறக்கமாக செய்யவில்லை நேரம்தான் வீணாகும் மின்வெட்டு பிரச்சனை, Vuze Torrent Client னைப் பயன்படுத்தி Torrent மூலம் தரவிறக்கினேன்.காரணம் கடுமையான மின்வெட்டு எங்கள் கிராமப் பகுதிகளில் உள்ளது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை  என மூன்று மணி நேரம் கழித்துதான் மின்சாரம் வரும். இடையிடையே என்னுடைய அன்றாட வேலைகளையும் பார்த்துக் கொண்டு இரண்டு நாட்களில் தரவிறக்கம் செய்து முடித்தேன்.

Xubuntu தயார்:

தரவிறக்கம் செய்த xubuntu கோப்பினை ஒரு CD -யில் Bootable இயங்குதளமாக மாற்றினேன்.

Xubuntu நிறுவுதல்:

கணினியினை வட்டிலிருந்து பூட் செய்தேன் சரியாக 8-நிமிடங்களில் Desktop கிடைத்தது Live என்பதால் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. முதலில் Live ஆக பயன்படுத்தி வன்வட்டினுடைய கடைசி விண்டோஸ் கோலனை Gparted மூலம் லினக்ஸிற்காக தயார் செய்தேன்.

மறுபடியும் கணினியினை மறுதொடக்கம் செய்து எப்பொழுதும் போலவே xubuntu வை கணினியில் நிறுவி முடித்தேன்.

அற்புதமான வேகம், அருமையான அமைப்பு:

மறு தொடக்கம் செய்த 1நிமிடம் 5 வினாடிகளில் xubuntu வினுடைய Desktop கிடைத்தது. நல்ல வேகம்.  வெறும் 138 MB RAM த்தான் முழுமையான Desktop கிடைக்க பயன்படுத்துகிறது.

பிறகு ஒரு சில மாற்றங்கள் செய்தேன் காரணம் தோழர் அவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தையே பயன்படுத்தி பழக்கப் பட்டவர். ஆகையால் அவர்க்கு ஏற்றது போல எளிமையாக மாற்றினேன்.

Chromium Browser, Libre Office Writter, ibus (தமிழில் எழுத), Totem Media Player , Adobe Flash plugin, VLC, Aducity, gEdit, Eye of Gnome Imager viewer ஆகியவைகளை நிறுவினேன்.

உண்மையிலேயே குறைவான RAM னைக் கொண்ட பழைய கணினிகளுக்கு அற்புதமானதொரு  இயங்குதளம்.

உங்கள் தோழர்கள், தோழியர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்த நண்பர்கள் யாரிடமாவது பழைய கணினியிருந்தால் Xubuntu னை நிறுவி, உயிர்கொடுத்து அற்புதமாக இயங்க செய்யுங்கள். குறைவான நினைவகத்தில் மிகவும் அற்புதமாக இயங்குகிறது.



138 MB RAM னை எடுத்துக்கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கும் Xubuntu





No comments: