Sep 21, 2012

மென்பொருள் விடுதலை நாள்-2012 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் -22, 2012 அன்று நடைபெறுகிறது


இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி, டி.ஜி வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற மென்பொருள் விடுதலை நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி, ஒரு மென்பொருள் விடுதலை நாள் கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் நிறுவனத்தைச் (Free Software Foundation Tamil Nadu (FSFTN)) சேர்ந்த தன்னார்வலர்கள், கிண்டி பொறியியல் கல்லூரி குனு/லினக்ஸ் குழுவினருடன் இணைந்து இந்த மென்பொருள் விடுதலை நாளைக் கொண்டாடுகின்றனர். இது மாநில அளவில் வரும் சனிக்கிழமை, செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கிண்டி பொறியியல் கல்லூரி விவேகானந்தா கலையரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

அன்று நாள் முழுவதும் கட்டற்ற மென்பொருள் பற்றிய உரைகளும், செயல் முறை விளக்கங்களும் நடைபெறும். அத்துடன் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் அவற்றின் இயக்கம்/பயன்களை விளக்கும் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருக்கும்.

உலகம் முழுவதும் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் குனு/லினக்ஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த மென்பொருள் விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் குறிக்கோளைப் பற்றி அதன் இணைய தளத்தில் (http://softwarefreedomday.org/) கூறப்பட்டுள்ளதாவது:-

- கட்டற்ற மென்பொருள் ஆக்கத்தையும், அதை உருவாக்கியவர்களையும் கொண்டாடுதல்
- கட்டற்ற மென்பொருள் பற்றி விளக்கிக் கூறி, அதன் பயன்பாடுகளை உற்சாகப்படுத்ததுதல்
- பயனீட்டாளர்கள் தொழில் நுட்பங்கள் வழியாக வாய்ப்புகளை சரி சமமாக அணுக வழி செய்தல்
- இந்த தகவல் தொழில் நுட்ப  சமூகத்தில் ஒவ்வொருரின் கடமைகள், உரிமைகள்
பற்றிய ஆக்கபூர்வமான விவாதத்திற்கு வழி வகுத்தல்
- இதே தொலைநோக்கு கொண்ட தனிநபர்களையும், நிறுவனங்களையும் இணைத்துக் கொள்ளுதல்
- நடைமுறைக்கேற்ற தெளிவான அமைப்பாகச் செயல்படுதல்

இந்த நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களை அணுக நாங்கள் விரும்புகிறோம். “சுதந்திரமான அறிவு” என்ற தத்துவத்தையும்,”இணைய சுதந்திரம்” என்ற பிரச்சினையையும், கணினித்துறை பாகுபாட்டை இணைக்கும் பாலமாக இருக்கும்கட்டற்ற மென்பொருளின் பங்கைப் பற்றியும் விவாதிக்க இருக்கின்றோம். இந்நிகழ்ச்சியில் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அன்று, பொதுமக்கள் தவிர மாணவர்கள், பல்துறை வல்லுனர்கள் என்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பலர் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் நிறுவனத்தின் இடைக்கால பொது அவையில் (Interim General Council) சேர  வருகின்றனர்.மதுரை மற்றும் பாண்டிச்சேரி குனு/லினக்ஸ் குழுவினர் தங்களது காட்சியரங்குகளில் அவர்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி விளக்கம் தருவர்.

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் நிறுவனம், பலரை கட்டற்ற மென்பொருள் இயக்கத்தில் சேர்த்து வருங்கால முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய ஒரு கட்டற்ற கணினி கட்டமைப்பை உருவாக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியைக் கருதுகிறது. இந்த நிகச்சியில் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் தனி நிறுவனங்கள் கட்டற்ற மென்பொருள் பற்றிய செயல் முறை விளக்கங்களை செய்து காட்டுவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் Office, Image Editing Tools, Audio/Video Editing Tools, Games, Programming Languages like Python, PHP, Content Management Systems like Drupal and Joomla, Virtualization Tools  ஆகியவற்றின் விளக்கவுரைப் பாடங்கள் நடத்தப்படும். குனு/லினக்ஸை எப்படி கணினியில் நிறுவுவது என்பதும் ஒரு பகுதியில் செய்து காட்டப்படும்.

மாணவர்களும் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்டற்ற மென்பொருள்கள் பற்றித் தெரிந்து கொள்ள வருவார்கள் என்று நம்புகிறோம்.மாணவர்களுக்குத் தெரிந்திராத பல கட்டற்ற மென்பொருட்களைப் பற்றிச் சொல்லி, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி விட்டால் இன்னும் பலர் கட்டற்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்குக் கட்டற்ற
மென்பொருட்களைப் பற்றி போதுமான அளவு தெரிந்திருந்து, ஒரு பதினைந்து நிமிடம் பேச முடியுமானால் நீங்களும் முன் வந்து, உதவி செய்யுங்கள். நாள்  : செப்டம்பர் 22-ம் தேதி, 2012 – சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் : விவேகானந்தா கலையரங்கம், கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், சென்னை 

அனுமதி இலவசம்
அனைவரையும் வருக! வருக! என்று அழைக்கின்றோம்.

Sep 18, 2012

கணியம் மாத இதழுக்கு மேலும் எழுத்தாளர்கள் தேவை


நண்பர்களே,

கணியம் மாதம் இதழ் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது.  முழுவதும் ஓப்பன் சோர்ஸ் கருத்தாக்கத்தை கொண்டு தமிழில் வெளிவந்துக் கொண்டிருக்கும் ஒரே மாத இதழ்.

எங்கள் குழுவில் 20 பேர் இருக்கின்றனர். 

ஒவ்வொரு மாதமும் இதழை சிறப்பாக வெளியிட முயற்சிக்கிறோம்.

இன்னும் கொஞ்சம் எழுத்தாளர்கள் இருந்தால் நன்றாக இருக்கும். நாம் சுமையினை பகிர்ந்துக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாதமும் கணியம் இதழினை வெளியிட நமக்கு 15- கட்டுரைகள்  தேவைப்படுகிறது.

நம்மிடம் நிறைய பேர் கட்டுரைகள் எழுதுவதற்காக இருந்தால், நாம் இன்னும் நிறைய கட்டுரைகள் பெறுவோம்.

தயவு செய்து உங்கள் நண்பர்களை எழுதுவதற்கு பரிந்துரைக்கவும், மற்றும் அவர்களின் விவரங்களைக் கொடுக்கவும்.

நான் கணியம் குழுவில் அவர்களை சேர்த்துக்கொள்ள முடியும்.

நன்றி.

T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free/Open Source Jobs : http://fossjobs.in

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge


Deccon Chronicle - மென்பொருள் விடுதலை நாள் - 2012 பற்றிய செய்தியினை வெளியிட்டது



செப்டம்பர் - 15, 2012 அன்று சென்னையில் நடைபெற்ற 'மென்பொருள் விடுதலை நாள் - 2012'  பற்றிய செய்தியினை 'டெக்கான் குரோனிக்கல்' நாளேடு வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

Sep 4, 2012

FOSS-செய்திகள் - தன்னார்வலர்களுக்கான அழைப்பு


நாம் ஒரு செய்தி சேவை தொடங்கலாமா?

https://wiki.ubuntu.com/UbuntuWeeklyNewsletter/Issue281  இந்தசெய்திச் சேவையினைப் போல !!

FOSS உலகில் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து முக்கியமான செய்திகளை உள்ளடங்கியிருக்க வேண்டும்?

மூன்று அல்லது அதற்கும் அதிகமான தன்னார்வலர்கள் நமக்குத் தேவை.

நீங்கள் ஆர்வமாக இருந்தால் தயவு செய்து tshrinivasan@gmail.com மின்னஞ்சல் முகவரிக்குத்  தெரிவிக்கவும்.

பணி என்னவென்றால், பல்வேறு மூலங்களிலிருந்தும் ( இணையதளம், புத்தங்கள், நிகழ்வுகள், காணொளிகள், ஒலிகள் எவை வேண்டுமானாலும் இருக்கலா ) FOSS தொடர்பான தகவலினைப் பெற்று அவைகளை  எழுத்துக்களாக மட்டும் அல்லது HTML பக்கங்களாக திரட்ட வேண்டும்.

திரட்டப்பட்ட தகவல்கள் பல்வேறு குழுக்கள் மற்றும் நமது தளத்தின் வழியாகவும் பரப்பப்படும். தயவு செய்து உங்களுடைய சிந்தனைகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

நன்றி.

பாஸ்போர்ட் அலுவலகமும் - விண்டோஸ் இயங்குதளமும்


நான் கடந்த வாரம் தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.  ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தேன்.  பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள் 6-மணி நேரம் இருந்தேன்  அவ்வளவு நேரம் அலுவலர்கள் எடுத்துக்கொண்டணர்.  சிறப்பான சேவையினை, மிகவும் கனிவாக விண்ணப்பத்தாரர்களோடு பழகி செய்கின்றனர்.  பாராட்ட வேண்டிய விஷயம். பொதுவாகவே பெரும்பாலான அரசு அலுவலகங்களில் விண்ணப்பதாரர்களிடம் கனிவு, பணிவெல்லாம் அலுவலர்கள் காட்டுவதில்லை.

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பாஸ்போர்ட்  அலுவலகத்தில் உள்ள கணினியில் நிறுவியிருக்கும் இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம், பதிப்பு XP Professional.  அனைத்துக் கணினிகளுமே  நெட்வொர்க்கில் இணைத்திருப்பதால்  பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் உலாவி... Internet Explorer அதைவிட இன்னொரு கொடுமை Internet Explorer மேம்படுத்தப்பட்ட பதிப்புக் கூட கிடையாது.  விண்டோஸ்  எக்ஸ்.பி இயங்குதளம் கூடவே வரும் அந்த Internet Explorer.

இந்தவிஷயங்களையெல்லாம் நான் விண்டோஸ் இயங்குதளத்தைக் சிறுமைப் படுத்துவதற்காக கூறவில்லை, விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள குறைகளை ஒரு பாதுகாப்பு விஷயங்கள் அதிகம் இருக்க வேண்டிய ஒரு அலுவலகத்தில் நேரில் கண்டேன் அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்காக கூறுகிறேன் அவ்வளவுதான்.

விண்டோஸ் இயங்குதளத்தில் நான் கண்ட அந்த பிழைச் செய்தி..  விண்டோஸ் இயங்குதளம் ஏதாவது ஒரு பயன்பாட்டினை விரைவாக இயக்கும் பொழுது ஸ்தம்பித்து நிற்குமல்லவா அதுதான்.  அதன் பின்பு Ctrl+Alt+Delete கீகளை ஒரு சேர அழுத்தி TaskManager சென்று பயன்பாட்டினைத் தேர்வு செய்து  EndNow பொத்தானை அழுத்துவோம், அதன் பின்பு புதிதாக நமக்குத் தேவையான Application-களை இயக்குவோம்.  இதை அங்கு வேலைப் பார்த்த அலுவலரும் செய்தார்.

என்னுடைய விண்ணப்பத்துடன் இணைத்திருந்த சான்றிதழ்களின் நகல்களையெல்லாம் வருடுவதற்காக(Scan) Internet Explorer உலாவியில் Scan Button அழுத்திய  பொழுது விண்டோஸ் இயங்குதளம் ஸ்தம்பித்தது,  உடனே Ctrl+Alt+Del கீயினை அழுத்தி TaskManager மூலம் பயன்பாட்டினை கொன்று விட்டு, மறுபடியும் தொடங்கினார்.

என்னைப் புகைப்படம் எடுக்கும் பொழுது  இது போல மறுபடியும் ஸ்தம்பித்தது, மறுபடியும் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து என்னுடைய விண்ணப்பத்திற்குண்டான பணிகளை செய்து முடித்து அனுப்பினார்.

இங்கு இன்னொரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்தாக வேண்டும் என்னுடைய கையெழுத்தினை கணினியில் வருடுவதற்காக போட்ட பொழுது ... 'என்னங்க நீங்க தமிழ்லதான் கையெழுத்து போடுவீங்களா என வியப்போடு கேட்டார்' நான் ஆமாம் என்று கூறி விட்டு நகர்ந்தேன்.

Pre-Processing Counter, Processing Area(A), Verification Counter(B), Granting Officers Counter(C) என நான்கு உள்ளது. அதில் முதல் இரண்டு Counter -களில் பணியாற்றுவது TCS(Tata Consultancy Services) நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள்.

என்னுடைய கருத்து என்னவென்றால்:

1. பாஸ்போர்ட் அலுவலகங்கள் அனைத்தும் ஒன்றாக நெட்வொர்க் மூலம் இணைத்திருக்கும் தருவாயில் பாதுகாப்பு அம்சங்களை சிரத்தையோடு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  அப்படி இருக்கும் பொழுது நெட்வொர்க் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு நல்ல ஒத்திசைவு கொடுக்கும் லினக்ஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்தி  பணிகளை ஏன் அரசு மேற்கொள்ளக்கூடாது?  லினக்ஸ்  தொழில்நுட்பம் தெரிந்த இந்தியர்களே நாட்டில் இல்லையா? அல்லது லினக்ஸ் தொடர்பான Application களை உருவாக்கும் நிறுவனங்களே இந்திய  நாட்டில் இல்லையா?

2. லினக்ஸ் இயங்குதளங்கள் விண்டோஸ் இயங்குதளத்தைவிட நெட்வொர்க் தொடர்பான வேலைகளுக்கு நன்றாய செயலாற்றும்.  அப்படி இருக்கும் பொழுது நெட்வொர்க் தொடர்பான பணிகளுக்கு விண்டோஸ் இயங்குதளங்களை காட்டிலும் நன்றாக, நிலைத்தன்மையுடன் விரைவாக பயன்படுத்த உதவும் லினக்ஸ் இயங்குதளங்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

3.  இது போன்று அடிக்கடி ஓவ்வொரு விண்ணப்பத்தாரருக்கும் 1-நிமிடங்கள் வீதம் இயங்குதளம் ஸ்தம்பிப்பதால் வீணானால்,(தோராயமாக 500 விண்ணப்பத்தாரர்கள் என்றால் 500X1=500 நிமிடம் . 500/60=8.3 மணிநேரம்)  பாதிக்கப்படுவது மக்களே.  நேரம் போதாமையால் மறுநாளும் வரச்சொல்லுவார்கள். (நேரமின்மையால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பத்தாரர்களை மறுநாளும் வரச்சொல்லி அனுப்பினார்கள் மாலை 3.30 மணிக்கு மேல்)

4.  Internet Explorer உலாவி அவ்வளவு பாதுக்காப்பு மிகுந்த ஒன்று கூறிவிட முடியாது. அது பயன்படுத்தும் அனைவருக்குமேத் தெரியும்,  நெருப்பு நரி உலாவியினையாவது பயன்படுத்தியிருக்கலாம்.

5.  இந்தியாவின் வெளியிறவுத் துறை இணையதளம், உளவுத்துறை இணையதளங்களே சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கணினி உளவாளிகளால் சிதைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி நாளிதழ்களிலும்  கூட வெளிவந்தது.  ஆகையால் அரசு இவற்றெயெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

6.  இவ்வளவு பாதுகாப்பும் செய்துமே போலி பாஸ்போர்ட் தயார் செய்து நாள்தோறும் வெளிநாடுகளுக்குச் சென்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை,  அரசின் கவனக்குறைவா இல்லை இது போன்ற கணினி தொடர்பான விஷயங்களில் உள்ள பாதுக்காபு ஓட்டைதான் காரணமோ?

அண்டை மாநிலமான கேரளம் கணினி தொடர்பான விஷயங்களில் இந்தியா நாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.  கேரளாவில் பால் சேகரிக்கும் மையங்கள் கூட லினக்ஸ் மற்றும் FOSS தொடர்பான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயல்படுகிறது.  ஆனால் தமிழக அரசு வரக்கூடிய ஐந்து ஆண்டுகளுக்கும் தகவல் தொழிநுட்ப பணிகளை மேற்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  கொஞ்சம் நமது அரசின் கொள்கைகளை கொஞ்சம்  யோசித்துப் பாருங்கள்.

அரசு மடிக்கணினியினைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள ஒரு கட்டுரை.

எவ்வளவோ எடுத்துக்கூறியும் இலவச மடிக்கணினியில் விண்டோஸ்-7 இயங்குதளத்தை நிறுவிக்கொடுத்து தமிழக மக்களின் பலகோடி ரூபாய் பணத்தை தமிழக அரசு மைக்ரோசாப்ட் என்ற பராகாசுர நிறுவனத்திற்கு  அள்ளிக்கொடுத்துள்ளது.

எல்காட் நிறுவனம் உமாசங்கள் ஐ.ஏ.எஸ் இருந்த பொழுது முழுவதும் லினக்ஸைப் பயன்படுத்திதான் அரசு தொடர்பான தகவல் தொழில்நுட்ப வேலைகளை மேற்கொண்டது.

இப்பொழுது இருக்கும் ரஷ்ய அரசு போன வருட பட்ஜெட் அறிவிப்பின் போதே நாடு முழுமையும் GNU/Linux, FOSS, OpenSource ஆக மாறுவதற்கு பல கோடி ரூபாய்களை ஒதுக்கியிருப்பாதாக  அறிவித்து  அத்துடன் இரண்டு வருடங்களில்  இந்த திட்டம் நாடு முழுமைக்கு செயல்படுத்தப் படும் என வும் கூறியது.  இதை ஒரு கூடுதல் செய்திக்காக கூறுகிறேன்.

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் பாதுகாப்புடன் இயங்க வேண்டியது அவசியம்.   இந்தியாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் லினக்ஸைப் பயன்படுத்தும் காலம் என்று வரும்? காத்திருப்போம் அந்த தருணத்திற்காக.

***********************
கட்டற்ற இயங்குதளங்கள், மென்பொருட்கள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவோம் சுதந்திரம் பெறுவோம்.
***********************

Sep 2, 2012

NetworkManager is Not running... பிரச்சனைக்குத் தீர்வு

இந்த காலத்தில் ஒரு முழுமையான கணினி என்றால் அது இணையம் இருக்கும் கணினிதான்.   என்னிடம் இருப்பது மடிக்கணினி.  மடிக்கணினியில் அமர்ந்தாலே இணையத்தைப் பயன்படுத்தாமல் விடுவதில்லை.    வாரத்திற்கு ஒரு முறையாவது இணையத்தைப் பயன்படுத்திவிட வேண்டும்.  இல்லையென்றால் ஏதோ உலகமே நம்மை விட்டு விலகிச் சென்றது போன்று ஆழ்மனதினுள்  ஒரு உணர்வு. காரணம் தெரியவில்லை.

ஒருவேளை நான் பல்கலைக்கழகத்திலிருந்து தொடர்ந்து 3-வருடங்களாக இணையத்தை நாள்தோறும் பயன்படுத்திப் பழக்கப் (அடிமை)பட்டு விட்டதால் அப்படித் தோன்றுகின்றதோ என்று தெரியவில்லை.

எனது பொறியியல் படிப்பை முடித்து கடந்த மூன்று மாதங்களாக இணையத்தை வேறு வழியில்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.  காரணம் நான் இருப்பது கிராமம் என்பதால் இணையத்தைப் பயன்படுத்த 5-கி.மீ தொலைவில் இருக்கும் நகரப் பகுதித்தான் செல்ல வேண்டும்.

ஆகையால் மடிக்கணினியிலேயே இணைய இணைப்பை கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கு இருக்கு ஒரே வழி, கைப்பேசிதான்.  கைப்பேசியில் இணைய இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு அந்த இணைய இணைப்பினை மடிக்கணினியுடன் இணைத்து இணையத்தைப் பயன்படுத்த வேண்டியதுதான்.

கைப்பேசியினை இரண்டு வழிகளில் மடிக்கணினியுடன் இணைக்கலாம் ஒன்று Data Cable, மற்றொன்று Bluetooth.  நான் இணைத்திருப்பது Bluetooth வழியாக. கைப்பேசி : Nokia 6300i.

ஒரு நாள் இரவு நண்பர் கு.நீலகண்டன் அவர்களின் Samsung கைப்பேசியில் உள்ள Bluetooth யும் என்னுடைய கைப்பேசியில் உள்ள Bluetooth னையும் ON செய்துவிட்டு, ஏதாவது ஒன்றின் மூலம் இணையத்தை ஏற்படுத்தலாம்  என்று  முயன்ற பொழுது திடீரென்று ..  இதுவரையிலும் பார்க்காத ஒரு பிழைச்செய்தி கிடைத்தது.  அதுதான் NetworkManager is Not Running....

கீழே உள்ள படத்தைப் பாருங்கள் பிழைச் செய்தி தெரியும்....

 படம் - 1

இயங்குதளத்தை மறுதொடக்கம் (Restart) செய்து விட்டால் சரியாகிவிடும் என நினைத்து மறுதொடக்கம் செய்தேன்.  அப்பொழுதும் இந்த பிரச்சனை தீர்ந்தப்பாடில்லை மறு படியும் NetworkManger is Not Running.... எனக் காட்டியது.

இது என்ன விண்டோஸ் இயங்குதளமா  மறுதொடக்கம் செய்தவுடன் எப்படியாவது சரி செய்துக்கொண்டு, எதையாவது நமக்குப் புரியாத செய்திகளை செல்லிக்கொண்டு நிற்பதற்கு... லினக்ஸுங்க... லினக்ஸ்... சும்மா பிழைச்செய்தி காட்டினாலும் தெளிவா, நச்சுனு காட்டும்.

அனைத்துப் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பவர் அவர்தான் கூகுளார். அவரிடம் பிரச்சனையினை சொன்னேன்.  அவர் இந்த பிரச்சனைக்கானத் தீர்வு உபுண்டு கருத்துகளம் சமூகத்தின் வலைத்தளத்தில் இருப்பதாகக் கூறினார்.  அங்கு சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகள் படி செய்தேன் பிரச்சனை தீர்ந்தது.

வழிமுறை:

===> முதலில் root account ற்குள் login செய்தேன்.
===> முனையத்தை திறந்து service network-manager start  எனும் கட்டளையினை கொடுத்து Enter Button ஐ அழுத்தினேன் பிரச்சனை முடிந்தது.
===> root account -லிருந்து கணினியினை மறுதொடக்கம் செய்து, நான் எப்பொழுதும் பயன்படுத்தும் பயன்படுத்தும் account -ற்குள் சென்றேன்.  எப்பொழுதும் போல இணையம் வேலை செய்தது.

படம் - 2

குறிப்பு: NetworkManger is Not Running... என பிழைச் செய்தி வந்தால் WiFi, Network Card, Mobile Broadband என எந்த வழியிலும் இணையத்தை மட்டுமல்ல, Local Network -னையும் பயன்படுத்த முடியாது.

****************************