Aug 24, 2020

முழு விடுதலைக்கான வழி - டாக்டர் அம்பேத்கர்


பம்பாய் தாதரில் 1936ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய நாட்களில் நடந்த மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரையை 'தலித் முரசு' பதிப்பகம் 'முழு விடுதலைக்கான வழி' எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இன்றுதான் அதை படித்து முடித்தேன். அதிலிருந்து நான் எடுத்த குறிப்புகளை இங்கு தொகுத்திருக்கிறேன். இந்து மதத்தைப் பற்றியும் சாதியைப் பற்றியும் எனக்கிருந்த பல சந்தேகங்களுக்கு இந்த புத்தகம் மிகத்தெளிவான பதில்களையும், விளக்கத்தையும் கொடுத்தது.

-------------------------------------------------------

ஒரு சராசரி மனிதனுக்கு மதமாற்றம் என்பது எவ்வளவு அவசியமானதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அதைப் புரிந்து கொள்வதும் கடினமானதாக இருக்கிறது. ஒரு சராசரி மனிதனை மதமாற்றத்தின் நியாயங்களை ஏற்றுக் கொள்ள வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எனவே மதமாற்றம் என்று கருத்து நடைமுறைச் சாத்தியமாக வேண்டுமானால், முதலில் உங்களை அதை முழுமனதோடு ஏற்று கொள்ள வைக்க வேண்டும். ஆகவே, என்னால் முடிந்த வரை மதமாற்றம் பற்றி எளிமையாக விளங்க வைக்க முயல்கிறேன்.

தீண்டாமை என்பது இரு வேறுபட்ட வகுப்பினருக்கு இடையிலான போராட்டடம். அது, சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்கும் இடையிலான போராட்டம். அது, தனி ஒரு மனிதனின் மீது இழைக்கப்படும் அநீதி அல்லது ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பின் மீது நிகழ்த்தும் அநீதி. அப்போராட்டம், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரோடு எப்படிப்பட்ட உறவைப் பேண வேண்டும் என்று வரையறுக்கிறது. எங்களையும் மற்றவர்களைப் போல சமமாக நடத்துங்கள் என்று நீங்கள் குரலெழுப்பும் அடுத்த நொடியே இந்தப் போராட்டம் தொடங்கிவிடுகிறது.

போயும் போயும் ரொட்டிக்கு, நல்ல துணி மணிக்கு, உலோக பாத்திரத்தில் தண்ணீர் எடுப்பதற்கு, மாப்பிள்ளையை குதிரையில் அமர வைப்பதற்கு என அற்பக் காரணங்களுக்கெல்லாம் இங்கே போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் இவை அனைத்தையும் உங்கள் சொந்த பணத்தைக் கொண்டு நடத்துகிறீர்கள். பின் எதற்காக உயர் சாதி இந்துக்கள் எரிச்சல் அடைய வேண்டும்? அவர்கள் கோபத்திற்கான காரணம் மிக எளிமையானது. நீங்கள் அவர்களுக்கு சமமாக நடந்து கொள்வது அவர்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அவர்களுடைய பார்வையில் உங்களுடைய நிலை என்பது கீழானது. நீங்கள் அசுத்தமானவர்கள். அடித்தட்டிலேயே இருக்க வேண்டியவர்கள். அப்படியே இருந்தீர்களானால் அவர்கள் உங்களை நிம்மதியாக வாழ விடுவார்கள்; முடியாது என்று அந்தக் கோட்டைத் தாண்டினால் போராட்டம் தொடங்கி விடும்.

தீண்டாமை என்பது குறுகிய காலம் கொண்டதோ, தற்காலிகமானதோ அல்ல; அது நிரந்தரமானது. நேரடியாக சொல்வது என்றால் சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்குமான இந்தப் போராட்டம் என்பது ஒரு நிரந்தர நிகழ்வு. அது அழிவற்றது. எக்காலத்திலும் நிலைக்கக் கூடியது. காரணம், உங்களை இப்படி சமூகத்தின் கீழ் நிலைக்கு தள்ளிய மதம், உயர்சாதி இந்துக்களைப் பொருத்தவரை அழிவற்றது, எக்காலத்திலும் நிலைத்து நீடிக்கக் கூடியது. எந்தவொரு காலமோ சூழலோ இந்த நிலையை மாற்றிவிட முடியாது. நீங்கள் இன்றைக்கு படிநிலையின் கீழே நிறுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எப்போதும் அப்படித்தான் நிறுத்தப்பட்டிருப்பீர்கள். இதன் பொருள், இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்குமான போராட்டம் எக்காலத்திலும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் என்பதுதான்.

இந்துக்களின் கட்டளைக்கேற்ப அவர்களுக்கு அடிபணிந்து நடக்க விரும்புகிறவர்களும் அவர்களுடைய அடிமைகளாகவே இருந்து விடுவது என்று முடிவெடுத்து விட்டவர்களும் இந்த தீண்டாமைப் பிரச்சனை பற்றியல்லாம் ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், சுயமரியாதையும் சமத்துவமுமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இதைப் பற்றி கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்.

முஸ்லீம்களும் எண்ணிக்கையில் சிறுபான்மையினர்தான். 'மகர்'களைப் போல, 'மாங்கு'களைப் போல அவர்களுக்கும் கிராமங்களில் வெகு சில வீடுகளே இருக்கின்றன. ஆனாலும் உங்களை அடக்கியாளுவதைப் போல அவர்களை அடக்கி ஆள எவருக்கும் இங்கே துணிவு இல்லை. ஏன் இப்படி? ஒரு கிராமத்தில் இரண்டே இரண்டு வீடு இருந்தாலும் அவர்களை துன்புறுத்திப் பார்க்கும் தைரியம் யாருக்கும் இல்லை. என்னைப் பொருத்தவரையில் இந்தக் கேள்விக்கு ஒரேயொரு விடைதான் இருக்கிறது. இந்தியா முழுவதிலும் இருக்கக் கூடிய அனைத்து முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பலமும் அந்த இரண்டு வீடுகளில் இருக்கும் முஸ்லிம்களின் பின்னால் அரணாய் நிற்கிறது என்பதை உணர்ந்ததால்தான் அவர்களை தொட்டுப்பார்க்க இந்துக்களுக்கு துணிச்சல் எழவில்லை. இந்துக்கள் தங்கள் மீது ஏதாவது அடக்குமுறைக்கு முயன்றால், பஞ்சாபிலிருந்து சென்னை வரை அனைத்து முஸ்லீம்களும் ஒன்று திரண்டு தங்களைப் பாதுகாக்க வருவார்கள் என்பதை உணர்ந்திருப்பதால்தான் அவர்களால் அச்சமின்றி சுதந்திரமானதொரு வாழ்க்கையை வாழ முடிகிறது. அதே நேரத்தில் உங்களைக் காப்பாற்ற இங்கே யாரும் ஒன்று திரண்டு விட மாட்டார்கள். எந்தவொரு பொருளாதார உதவியும் உங்களை வந்தடைந்து விட முடியாது; எந்தவொரு அரசு நிறுவனமும் எந்தச் சூழலிலும் உதவிக்கு ஓடி வந்து விடாது என்பது இந்துக்களுக்கு நன்றாகத் தெரியும். இங்கே சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்கும் ஒரு பிரச்சனை என்றால் சாதி இந்துக்களாக இருக்கும் தாசில்தாரும் போலிசும் கடமையைக் காட்டிலும் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உண்மையாக இருப்பார்கள்.

"மனிதனின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிற எதுவோ அதுவே மதம். அதுவே மதத்தின் உண்மையான பொருள்." சனாதன இந்துக்களின் முன்னனித் தலைவரான திரு. திலகர் வழங்கிய விளக்கம் இது.

தனித்து இருந்த ஒரு நீர்த் துளி கடலிலே கலந்து, கரைந்து தன் இருத்தலைத் தொலைப்பது போல் ஒரு தனி மனிதன் சமூகத்தில் கரைந்து தன் முழுமையைத் தொலைத்து விடுவதில்லை. மனிதன் சுதந்திரமானவன். அவன் இந்த சமூகத்திற்குத் தொண்டு செய்வதற்காகப் பிறக்கவில்லை. தான் மேம்பாடு அடைவதற்காகவே பிறந்தான். இந்தக் கருத்து புரிந்து கொள்ளப்பட்டதாலேயே வளர்ந்த நாடுகளிலெல்லாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அடிமைப்படுத்தி விட முடிவதில்லை.

ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கல்வி பெற முடியும், இரண்டாம் வகுப்பினர் ஆயுதம் ஏந்தவும், மூன்றாவது வகுப்பினர் வாணிபம் செய்யவும், நான்காவது வகுப்பினர் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று சொல்லும் மதத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லோருக்கும் கல்வி அவசியம், எல்லோருக்கும் ஆயுதம் அவசியம், எல்லோருக்கும் வாணிபம் செய்வது அவசியம். இந்த அடிப்படையை மறந்த மதம் ஒரு வகுப்பாருக்கு மட்டும் கல்வி கொடுத்து பிறரை அறியாமை இருட்டில் தள்ளி விடுவது - மதமே அல்ல. அது, மக்களின் சிந்தனையை அடிமைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட கள்ளச்சதி. ஒரு வகுப்பாரை மட்டும் ஆயுதமேந்த அனுமதித்து விட்டு மற்றவரை கூடாது என்று தடுப்பது மதமே அல்ல. அது அவர்களை எப்போதும் அடிமைகளாக வைத்திருப்பதற்கான வஞ்சக ஏற்பாடு.

ஒரு வகுப்பார் மட்டும் சொத்துக்கள் வைத்துக் கொள்ளலாம் என்று அதற்கான பாதையை திறந்து விட்டு விட்டு மற்றவரை அவர்களை அண்டிப் பிழைக்குமாறு நிர்பந்திப்பது மதமே அல்ல; அது தன்னை மட்டுமே உயர்த்திக்கொள்ளும் பேராசை.

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவசியமானவை மூன்று. அவை பரிவு, சமத்துவம், மற்றும் சுதந்திரம். இவற்றில் ஏதாவது ஒன்று இந்து மதத்திலிருந்து உங்களுக்கு கிட்டும் என்று உங்கள் அனுபவத்தை வைத்துச் சொல்ல முடியுமா?

தீண்டாமையைப் போன்றதொரு கொடுமையான சமத்துவமின்மையை வரலாற்றில் எந்த காலத்திலும் பார்க்க முடியாது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற மனநிலையின் காரணமாக தன் பெண்ணை மற்றவர்களுக்கு மணமுடித்து கொடுக்கமாட்டேன்; அருகருகே அமர்ந்து உணவருந்த மாட்டேன் என்பது போன்ற செயல்கள் பொதுவாக சில இடங்களில் நடக்கலாம். ஆனால் உலகத்திலேயே ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்கிற அளவுக்கு மனிதரை கீழ்த்தரமாக நடத்தும் நிலைமை இந்து மதத்திலும் இந்து சமூகத்திலும் போல் வேறு எங்காவது இருக்கிறதா?

சட்டம் உங்களுக்கு எத்தனையோ உரிமைகளை வழங்குவதாகக் கூறிக்கொள்ளலாம். ஆனால் எந்த உரிமைகளையெல்லாம் செயல்படுத்துவதற்கு இந்தச் சமூகம் அனுமதிக்கிறதோ அவற்றை மட்டும்தான் உண்மையிலேயே உரிமைகள் என்று அழைக்க முடியும்.

சுதந்திரமானவன் என்று நான் யாரை வரையறுப்பேனென்றால் - எவனொருவன் தன்னுடைய உரிமை, பொறுப்பு, கடமை ஆகியவை பற்றிய விழிப்போடு இருக்கிறானோ, எவனொருவன் தன்னை அடக்கி ஆளும் சூழலுக்கு அடங்க மறுத்து, அந்தச் சூழலை தனக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்கிறானோ, எவனொருவன் 'இது பழகிப்போய்விட்டது', 'வழிவழியாய் இதுதான் நடைமுறை', 'இதுதான் மரபு', 'இப்படித்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டது' என்று சொல்லி அதற்கு முன்னோர்களை சாட்சிக்கு இழுக்காமல் இருக்கிறானோ அவனிடமே பகுத்தறியும் சிந்தனையின் சுடர் அணையாமல் எரிகிறது. அவனையே நான் சுதந்திரமான மனிதன் என்பேன்.

எதற்காகவும் தன்னை ஒப்புக் கொடுத்து விடாத, மற்றவருடைய அறிவுரைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றாத, எதையும் காரண - காரிய பின்புலத்தில் கேள்விக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதில்லை என்ற முடிவு கொண்டவன் எவனோ அவனே சுதந்திர மனிதன்.

எவன் ஒருவன் தன் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னிற்கிறானோ, இந்த சமூகம் என்ன சொல்லுமோ என்பதைப் பற்றிய அச்சம் இல்லாதவன் எவனோ, அடுத்தவரின் கைப்பாவையாக மறுக்கும் மானமும் அறிவும் எவனுக்கு இருக்கிறதோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

அடுத்தவர் வழியில் தன் பார்வையை செலுத்தாது, தன் இருத்தலின் நோக்கத்தை, தன் சுய சிந்தனைப்படி தானே அமைத்துக்கொண்டு அதன்படி தன் வாழ்வு எப்படி - எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அவனே முடிவு செய்து கொள்கிறானோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன். சுருங்கச் சொன்னால் எவனொருவன் தன்னை, தான் மட்டுமே வழிநடத்துகிறானோ அவனை மட்டுமே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

ஒருவருடைய சாதி எது என்று தெரியாத போது ஒரு சாதி இந்துவால் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து தீண்டத்தகுவோருக்கும், தீண்டத்தகாதோருக்குமான வேறுபாட்டை தெரிந்து கொள்ள முடியாது.

முன்னோர்கள் ஒரு மதத்திற்குள் இருந்தார்கள் என்பதற்காக எல்லோரும் அந்த மதத்துடனையே ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்று முட்டாள் மட்டுமே சொல்லுவான். அறிவுள்ள யாரும் அந்தக் கூற்றை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

நால்வர்ண அமைப்பு என்பது இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக நிலவிய ஓர் அமைப்பு. அதில் பார்ப்பனர்கள் கல்வி கற்பதற்கும் சத்திரியர்கள் போர் புரிவதற்கும் வைசியர்கள் பொருள் சேர்ப்பதற்கும் சூத்திரர்கள் ஏவல் செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதுதான் அந்நாளைய நடைமுறைச் சட்டம். அப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் சூத்திரர்களிடம் கல்வி இல்லை, பொருள் இல்லை, ஆயுதங்களும் இல்லை. உங்களுடைய முன்னோர்கள் இதுபோன்றதொரு வறிய, கையறு நிலையில் வாழ்வதற்குத்தான் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு மதத்தை அவர்கள் தாங்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டார்கள் என்று எந்த அறிவுள்ள மனிதனும் சொல்ல மாட்டான்.

இன்றைய தலைமுறையினர் மீது இது போன்ற எந்த வகையான அடிமைத்தனத்தையும் எவரொருவரும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது. அவர்களுக்கு அனைத்து வகையான சுதந்திரமும் இருக்கிறது. இந்த சுதந்திர வழிகளைக் கொண்டு அவர்கள் தங்களை விடுதலை செய்து கொள்ளத் தவறுவார்களேயானால் அவர்களை இந்த பூமியில் வாழ்வதிலேயே மிகக் கேவலமான, அடிமைப்புத்தி கொண்ட, அண்டிப்பிழைக்கும் பிறவிகள் என்று மிகுந்த வருத்தத்தோடு அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

முன்னோர்களுடைய மதத்தில் அப்படியே ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அறிவுரையை முட்டாள்கள் மட்டுமே சொல்வார்கள். புத்தியுள்ள எந்த மனிதனும் அப்படிக் கூற மாட்டான். இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அதே சூழலிலேயே தொடர்ந்து வாழச் சொல்லும் அறிவுரையானது, விலங்குகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். மனிதனுக்கு அல்ல.

நம்மை சமத்துவத்திற்கு இட்டுச் செல்லும் விடுதலையின் பாதை மதமாற்றம் மட்டுமே என்பது புரியும். அது ஒன்றும் 'தப்பி ஓடும் பாதையல்ல'; 'கோழைகளின் பாதையுமல்ல'. அது தெளிந்த அறிவின் பாதை.

மதமாற்றத்தை எதிர்த்து மற்றொரு வாதமும் வைக்கப்படுகிறது. சாதி அமைப்பின் மீதான விரக்தியில் மதத்தை மாற்றிக்கொள்வதென்பது எதற்கும் பயன்படாது என சில இந்துக்கள் வாதிடுகின்றனர். நீ்ங்கள் எங்கே போனாலும் அங்கேயும் சாதிப் பாகுபாடு இருக்கத்தானே செய்கிறது என்று கேட்கிறார்கள். நீங்கள் முஸ்லீமாக மாறினாலும் அங்கேயும் சாதி இருக்கிறது. கிறித்துவராக மாறினால் அங்கே சாதி இருக்கிறது என்பது கசப்பான உண்மையாக இருந்தாலும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சாதி அமைப்பு என்பது இந்த நாட்டில் இருக்கும் மற்ற மதங்களுக்கும் ஊடுறுவி விட்டது. ஆனால் இந்த கொடுங்குற்றம் துளிர்த்துச் செழிக்கக் காரணம் இந்துக்கள் மட்டுமே. இந்த நோய் முதலில் இந்துக்களிடமிருந்தே தோன்றியது. அதன் பிறகு பரவி மற்றவர்களையும் அது நோயில் தள்ளியது. என்னதான் முஸ்லீம்கள்  மத்தியிலும் கிறுத்துவர்கள் சாதிப் பிரிவுகள் இருந்தாலும் அவற்றை இந்துக்களின் சாதிப் பிரிவுகளோடு ஒப்பிடுவது அற்பத்தனமான சிந்தனையாகும்.

இந்துக்களின் சாதி அமைப்புக்கும், முஸ்லீம்களின் சாதி அமைப்பிற்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. முதலாவதாக, என்னதான் முஸ்லீமகளிடையிலும் கிறித்துவர்களிடையிலும் சாதி நிலவினாலும் அதுதான் அவர்களுடைய சமூக அமைப்பின் முக்கியக் கூறு என்று யாரும் சொல்ல முடியாது. யாராவது நீ யார் என்று கேட்கப்படும் கேள்விக்கு, நான் ஒரு முஸ்லீம் அல்லது நான் ஒரு கிறுத்துவன் என்பதே அதற்குப் போதுமான பதிலாக இருக்கும். அடுத்த கேள்வியாக, நீ என்ன சாதி என்ற கேள்வியைக் கேட்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றாது.

ஆனால், அதே ஓர் இந்துவைப் பார்த்து யாராவது நீ யார் என்று கேட்க, அவன் நான் ஓர் இந்து என்று சொன்னாலும் அந்த விடையோடு அவர்கள் திருப்தி அடைந்து விடுவதில்லை. அடுத்து அவர் கேட்பார். நீ என்ன சாதி? அந்தக் கேள்விக்கு விடை சொல்லும் வரை சமூகத்தில் அவனுக்கான இடம் என்பது நிர்ணயிக்கப்படாது. இதிலிருந்தே சாதி என்பது இந்து மதத்தில் எவ்வளவு அதி முக்கியத்துவம் வாய்ந்த கூறாகவும்; இஸ்லாத்திலும் கிறுத்துவத்திலும் பொருட்படுத்தத் தேவை இல்லாத அளவுக்கு அற்பமானதாகவும் இருக்கிறது என்பது விளங்கும்.

இந்துக்கள் தங்கள் மதத்தை ஒழிக்காமல்  தங்கள் சாதியை ஒழிக்க முடியாது. ஆனால், முஸ்லீம்களும், கிறுத்துவர்களும் - சாதியைக் களைவதற்காக - தங்கள் மதத்தை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை. தவிர, அவர்களின் மதமே அந்தப் பணிக்கு உறுதுணையாக இருக்கும்.

ஒரு வாதத்திற்காக, எல்லா மதங்களிலும் சாதி இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும் அந்தக் காரணத்திற்காக ஒருவன் இந்து மதத்திற்குள்ளேயே இருந்து விட்டுப் போகட்டும் என்று நியாயப்படுத்தி விட முடியாது. சாதி அமைப்பு என்பது எதற்கும் பயனற்றது என்று முடிவு செய்துவிட்டால் பிறகு எந்தச் சமூகத்தில் சாதி அமைப்பு தீவிரத் தன்மையற்று விரைவாகவும் எளிமையாகவும் அழித்துவிடக் கூடியதாக இருக்கிறதோ அந்தச் சமூகத்தை ஏற்றுக் கொள்வதே தர்க்கரீதியான முடிவாகும்.

வாழும்போது அனைத்துவிதமான  உல்லாசங்களிலும் ஊறித்திளைத்தவர்களுக்கு செத்த பிறகும் அதே உல்லாசத்தோடு வாழ மேலே ஒரு லோகம் காத்துக்கிடக்கிறது என்று ஆசை காட்டும் மதம் தானே உண்மையான மதமாகத் தெரியும். அதுதானே இயற்கை. ஆனால் ஒரு மதத்தில் இருப்பதனாலேயே மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டவர்களும் உணவு உடை மறுக்கப்பட்டவர்களும் மனிதர்களாகக் கூட நடத்தப்படாதவர்களும் உலகியல் நோக்கில் மதத்தை அணுகாமல் கண்கள் மூடி வானம் பார்த்து வணங்குவார்கள் என்றா எதிர்பார்க்க முடியும்? இந்தப் பணக்காரச் சோம்பேறிகளின் வேதாந்தங்களினால் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது?

மதத்திற்காக மனிதன் இல்லை; மனிதனுக்காகவே மதம். நீங்கள் மனிதராக மதிக்கப்பட மதம் மாறுங்கள். ஒன்று சேர மதம் மாறுங்கள். வலிமையை எட்ட மதம் மாறுங்கள். சமத்துவம் அடைய மதம் மாறுங்கள். சுதந்திரம் பெற மதம் மாறுங்கள். உங்களுடைய அன்றாட வாழ்வை மகிழ்ச்சியானதாக மாற்ற மதம் மாறுங்கள்.

மக்களிடம் அவர்களுக்கு தகுந்தாற்போல பேசி, அவர்கள் மத்தியில் பிரபலமாவது சாதரண மனிதனுக்கு வேண்டுமானால் நன்மை பயப்பதாக இருக்கலாம். அது தலைவனுக்கு ஏற்ற பண்பு அல்ல என்பது என்னுடைய எண்ணம். என்னைப் பொருத்தவரை, எந்தவித அச்சமோ சாய்வோ இன்றி மற்றவர்களுடைய பழிச் சொல்லுக்கு கவலைப்படாமல் மக்களுக்கு எது நன்மை எது தீமை என்பதை வெளிப்படையாய் எடுத்துரைப்பவன் எவனோ அவனே தலைவன்.

நான் சொல்கிறேன் என்பதற்காக உணர்ச்சி வேகத்தில் உந்தப்பட்டு என்னைப் பின் தொடர்ந்துவிடக் கூடாது. ஆழமாகச் சிந்தித்து ஒரு முடிவிற்கு வருவீர்களேயானால் என்னுடைய கடமையை நான் சரிவர செய்ததாகக் கருதிக் கொள்வேன். ஆகவே உங்கள் மனதில் நன்றாக இருத்திக் கொள்ளுங்கள் இது ஒரு முக்கியமான காலகட்டம். நீங்கள் இன்று எடுக்கப்போகும் முடிவுதான் நாளைய உங்கள் தலைமுறைகளின் ஒளிமயமான வாழ்க்கைக்கான பாதையை அமைத்துத் தரப் போகிறது. இன்று நீ்ங்கள் விடுதலை பெற வேண்டும் என்ற முடிவை எடுத்தால், நாளை உங்கள் தலைமுறை விடுதலை பெற்றதாய் இருக்கும். இல்லை, அடிமைகளாகவே இருப்போம் என்று முடிவெடுத்தீர்களேயானால் நாளைய தலைமுறை அடிமையாகவே இருக்கும். முடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கடினமான பொறுப்பு உங்களையே சார்ந்தது.
-------------------------------------------------------

No comments: