Apr 10, 2020

பிறந்த நாள்

சென்னையிலிருந்து ஊரில் போய் இறங்கி வீட்டிற்குள் நுழைந்தவுடன். "தம்பி உனக்கு பொண்ணு பார்த்திருக்கிறோம். போயி பொண்ண பார்த்துட்டு உன் விருப்பத்தைச் சொல்லு." என்று அம்மா கூறினார்கள்.  அம்மாவும், தம்பியும் தீவிரமாக எனக்கு பொண்ணு பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது அதுவரைக்கும் எனக்குத் தெரியாது.

நானும் என் தம்பியும் பைக்கில் கிளம்பினோம். நாங்கள் கூறியிருந்த நேரத்தைவிட இரண்டு மணிநேரம் தாமதமாகச் சென்றோம். அனைவரும் வரவேற்றார்கள். ரம்யா தேநீர் கொடுத்தார். பார்த்தேன். பிடித்துவிட்டது. இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள். சிதம்பரம் அண்ணன் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தேதி கேட்டார். தலைவர் அவர்கள் கொடுத்தார்கள். தை மாதம் பிப்ரவரி 7, 2018 அன்று தலைவர் தலைமையில்  எங்கள் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் வரப்போகும் மனைவி கடுமையான ஆன்மீகவாதியாகத்தான் அமைவார் என்று எல்லோரும் கூறிக்கொண்டேயிருந்தார்கள். அங்கேதான் ஒரு டிவிஸ்ட். ரம்யாவுக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் அவ்வளவாக கிடையாது. கோவிலுக்கெல்லாம் அவ்வளவாக விரும்பிச்  செல்லமாட்டார். கடவுளைப் பற்றிய பயமும் கிடையாது. திருமணத்திற்கு முன்பு இருந்த கொஞ்சநஞ்ச கடவுள் நம்பிக்கையும் இப்போது ரம்யாவுக்கு சுத்தமாக கிடையாது. யோசிக்காமல், யாருக்கும் பயப்படாமல்  கடவுளைப் பற்றி கிண்டலடிப்பார், கடவுளைப் பற்றி கேள்வி கேட்பார். எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. இயக்க செயல்பாட்டிற்கும், பொதுகாரியங்களில் ஈடுபடுவதற்கும் எப்போதும் ரம்யாவின் ஒத்துழைப்பு முழு அளவில் இருக்கும்.

திருமணம் முடிந்து ரம்யா என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டார். ரம்யாவிற்கு தேவையில்லாமல், ஆடம்பரமாக செலவு செய்வது பிடிக்காது. செலவு செய்தால் அதற்கு ஒரு  வலுவான காரணம் இருக்க வேண்டும். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி ஒரு லட்சமாக இருந்தாலும் சரி.

கர்ப்ப காலத்தில் கூட மருத்துவரைப் பார்க்கச் சென்ற ஒவ்வொரு முறையும் மாநகரப் பேருந்துகளிலும், ஷேர் ஆட்டோக்களிலுமே சென்று வந்தோம். அதற்காக என்னிடம் கோபப்பட்டதோ, சங்கடப்பட்டுக்கொண்டதோ கிடையாது. எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என நினைப்பார். பெண்கள் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று உடைகளுக்காக அதிகம் செலவு செய்கிறார்கள் என்பது. ஆனால் ரம்யாவிடம் அது கிடையாது. குறைவான விலையிலேயே நல்ல அழகான, நேர்த்தியான, அவருக்கு பிடித்தமான உடைகளை வாங்கிக்கொள்வார். அவருக்கென்று பெரிதாக எதையும் என்னிடன் விரும்பிக்கேட்டதில்லை. ஒரு நல்ல ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டும் என்பதற்காக Redmi Y2 வாங்கினோம் அவ்வளவுதான்.

நான் சில விஷயங்களில் பயம்கொள்ளும் போது, "அட வாங்க என்ன ஆகிவிடப்போகிறது?" என்று தைரியமூட்டுவார். ரம்யாவுக்கு பயம் என்பது அறவே கிடையாது. கர்ப்ப காலத்தை கூட எந்தவிதமான பயமும் இல்லாமல்தான் எதிர்கொண்டார். சிசேரியன் முறையில்தான் பிரசவம் நடந்தது. அன்புச்செல்வன் பிறந்தான்.

என்னுடைய தினசரி வாழ்க்கையில் ஒரு ஒழுங்கை ஏற்படுத்தினார். அதில் இரண்டு முக்கியமானவைகள். ஒன்று முதல்நாள் அணிந்த ஆடைகளை மறுநாள் காலையிலேயே துவைத்து விட வேண்டும். அழுக்குத்துணிகள் சேரக்கூடாது. நான் மறந்துவிட்டு சென்றாலும் ரம்யா எடுத்துக்கொண்டு வந்து தந்துவிடுவார். இரண்டு என்ன வேலை இருந்தாலும் இரவு 9:30 மணிக்கு மேல் கண்விழிக்கக் கூடாது. 9:00 - 9:30 -க்குள் தூங்கச் சென்றுவிட வேண்டும். இதனால் காலை 5:30 - 6:00 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். தினசரி நடைப்பயிற்சி செல்வேன். இப்போது இதையெல்லாம் கடைபிடித்துக்கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்காதீர்கள். ரம்யா இப்போது சென்னையில் இல்லை. அன்புச்செல்வனுடன் ஊரில் இருக்கிறார். அதனால் மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் இப்போது நான் கடைபிடிக்கவில்லை. ரம்யா வந்தவுடன் கண்டிப்பாக எல்லாம் ஒழுங்காக நடக்கும்.

என்றைக்காவது இரவு நேரத்தில் அலுவலக வேலைகள் இருந்தால் என்னுடன் சேர்ந்து அவரும் கண்விழித்துக்கொண்டிருப்பார்.

சேமிக்கும் பழக்கத்தை எனக்கு ஏற்படுத்தியதே ரம்யாதான். ரம்யா என் வாழ்விணையராக வரும் வரையிலும் சேமிப்பு என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அதைப்பற்றி யோசித்தது கூட கிடையாது. இன்றைக்கு காப்பீடு-முதலீடு-சேமிப்பு என்று என் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியுள்ளார். ஒரு ரூபாய் செலவு செய்தாலும் - வரவு வந்தாலும் அதை நோட்டில் எழுதி வைக்க வேண்டும் என்பது ரம்யாவின் அன்புக்கட்டளை. ஒவ்வொரு மாத இறுதியிலும் அதை கணக்குப் பார்ப்பார். அற்புதமான திட்டம் இது. இரண்டு வருடங்களாக தவறாமல் இதை செய்து வருகிறோம். இதன் மூலமாக பணத்தேவை எவ்வளவு என்று எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது.

உறவுகளை பேணிக்காப்பதிலும், அதற்கான முக்கியத்துவத்தை கொடுப்பதிலும் ரம்யா எப்பொழுதும் கவனமாக இருப்பார்.

ரம்யா துணைவராக அமைந்தது எனக்கு கிடைத்த பெரும் பேறு.

இன்று  ரம்யாவிற்கு பிறந்த நாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்யா!!!

4 comments:

த. சீனிவாசன் said...

பல்லாயிரம் வாழ்த்துகள்.

நாமெல்லாம் வாழத் தொடங்குவதே துணைவியார் வந்த பின்பு தான்.
அவருடனான எல்லாக் கணங்களையும் கொண்டாடுக.

இரா.கதிர்வேல் said...

நன்றி சார். உண்மை. ரம்யா வந்தபின்புதான் என் வாழ்கை ஒழுங்கமைவுடன் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருக்கிறது.

Siva said...

Best wishes sir.

இரா.கதிர்வேல் said...

Thanks, Siva.