Nov 5, 2020

KDE Plasma 5.20 - Manjaro Linux


KDE Plasma 5.20 Manjaro Linux-இல் கிடைக்கிறது. sudo pacman -Syu கட்டளையின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

Oct 3, 2020

Samsung G3815 மொபைலும் ஜியோ சிம் கார்டும்


பிப்ரவரி 7-ஆம் தேதி ஊரில் திருமண நாளை கொண்டாடிவிட்டு சென்னைக்கு திரும்பினேன். மார்ச் இரண்டாவது வாரத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர கூடாது. கொரோனா தொற்று ஏற்பட அதுவே வழிவகுத்துவிடும் என மருத்துவர்களும், அரசாங்கமும் அறிவுறுத்திக்கொண்டிருந்தார்கள். அலுவலக வேலை, இணைய இணைப்பு ஆகிய காரணங்களினால் ஊருக்குச் செல்வதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. இ-பாஸ் நெருக்கடி வேறு.

வீட்டிலிருந்து பணிபுரிய எங்கள் நிறுவனம் அனுமதியளித்தது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாப்பாட்டிற்கு வழியில்லை. நானே சமைத்து சாப்பிட்டுக்கொண்டு, ACT Internet இணைப்பு இருந்ததால் வீட்டிலிருந்தே பணிபுரிந்தேன்.

இந்த மாதம் அன்புச்செல்வனுக்கு முதல் பிறந்த நாள். ஏழு மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் ஊருக்குச் செல்லகிறேன். வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு திட்டமிட்டிருக்கிறேன். என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லை. நான் வைத்திருப்பது சாதரண மொபைல் போன்(Samsung Guru E1200 - Basic model mobile). விலை ரூ.1,150. நண்பன் ஜெகன்மோகன்தான் மேடவாக்கத்தில் வாங்கி கொடுத்தான். வீட்டிலிருந்து பணிபுரிய இணைய இணைப்பு தேவை. அதற்கு ஸ்மார்ட்போன் தேவை. அது என்னிடம் இல்லை. இதற்காக புதிய ஸ்மார்ட் போன் வாங்கும் திட்டமும் என்னிடம் இல்லை. என்ன செய்யலாம்?

ரம்யா பயன்படுத்திய பழைய மொபைல்(Samsung G3815) மாடல் வீட்டில் சென்னையில் சும்மாதான் கிடந்தது பயன்படுத்தாமல். 3G, 4G வசதியுள்ள மொபைல். அதை பயன்படுத்தினால் என்ன என்று திட்டமிட்டேன். ஆனால் அதில் பேட்டரி வேலை செய்யவில்லை. இணையத்தில் தேடியதில் பேட்டரி கிடைக்கவில்லை. ரிச்சிஸ்ட்ரீட் சென்றால் வாங்கிவிடலாம் என்றால் கொரோனா கண்ணுக்கு முன்னே வந்து சென்றது. அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி மூலமாக ஏற்பாடு செய்ப்பட்டிருந்த பரிசோதனை முகாமில் எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்திருந்தது. ஊருக்கு கிளம்பும் நேரத்தில் பேட்டரி வாங்கப்போயி கொரனோ தொற்றை வாங்கி  வந்துவிட்டால் என்ன செய்வது? அதனால் ரிச்சிஸ்ட்ரீட் செல்லும் திட்டத்தை கைவிட்டேன்.

என்னுடைய அலுவலகத்தை ஒட்டிய கடைகளில் விசாரிக்கலாம் என முடிவு செய்து ஒரு கடையில் மொபைலை காண்பித்து இதற்கு பேட்டரி கிடைக்குமா? என்று கேட்டேன். அந்த அண்ணனும் 10-க்கு மேற்பட்ட பேட்டரிகளை போட்டு பார்த்துவிட்டு. "இல்ல தம்பி இந்த போனுக்கான பேட்டரி என்னிடம் இல்லை" என்று கூறிவிட்டார். இன்னொரு கடையில் விசாரித்தேன். அந்த கடையில் இருந்த அக்கா, "கொடுத்துட்டு போங்க சார். அரைமணி நேரம் கழித்து வந்து வாங்கிக்கங்க." என்று சொன்னார். நானும் கிடைத்துவிடும் போல என நினைத்துக்கொண்டு வீட்டிற்கு போயி சாப்பிட்டுவிட்டு வந்து கேட்டேன். "பேட்டரி கிடைக்கல சார். நாளைக்கு ஈவ்னிங் வாங்க. வேறு இடத்திலிந்து ஆர்டர் செய்து கொண்டுவந்துவிடுகிறேன்." என கூறினார்.

மறுநாள் ஈவ்னிங் சென்றேன். "சார், பேட்டரி கிடைக்கல. அதனால பூஸ்டப் பண்ணி போட்டிருக்கேன். இப்ப நல்லா வேலை செய்யுது." என்று கூறினார். 100 ரூபாய் கட்டணம் வாங்கிக்கொண்டார். "பேட்டரி இன்னும் ஒரு வருஷத்துக்கு வரும் சார். பயப்படாதீங்க." என்று சொல்லி அனுப்பினார். ஒருவருஷத்துக்கெல்லாம் வர வேண்டாம் ஊரில் இருந்து வேலை செய்யப்போகும் அந்த இரண்டு மாதத்திற்கு வந்தால் போதும் என நினைத்துக்கொண்டேன். மொபைல் போன் பிரச்சனை தீர்ந்தது.

அடுத்தது ஜியோ சிம்கார்டு பிரச்சனை. ஊருக்குச் சென்றால் ரம்யா வீட்டில் அல்லது எங்க வீட்டில் இருந்துதான் பணிபுரிய வேண்டும். இந்த இரண்டு இடங்களிலும் எந்த சிம்கார்டில் இணையம் நன்றாக வேலை செய்கிறது என ரம்யாவிடம் கேட்டேன். "ஜியோ நல்லா வேலை செய்யுதுங்க." என்று ரம்யா கூறினார். சரி, ஜியோ சிம்மே வாங்கிடலாம் என, பேட்டரியை சரிசெய்து கொடுத்த அந்த அக்காவிடம், "ஜியோ சிம் இருக்காக்கா உங்களிடம்" என கேட்டேன். அதற்கு அவர், "எங்களுக்கு இரண்டு கடைகள் இருக்கு சார். இந்த கடையில இல்ல, நீங்க இன்னோரு கடைக்கு போனா வாங்கிக்கலாம்" என்று கூறினார். மெனக்கெட்டு பேட்டரி பிரச்சனையை சரி செய்து கொடுத்திருக்கிறார் அதற்காகவே ஜியோ சிம்மை அவருடைய கடையில்தான் வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

அவர்களுடைய இரண்டாவது கடைக்குச் சென்றேன். "அண்ணே, ஜியோ சிம் வேணும்." என்று கூறினேன். அதற்கு அவர் "ஒரிஜினல் ஆதார் கார்டு கொடுங்க சார்." என்று கூறினார். கொடுத்தேன். அதை வாங்கிப் பார்த்து விட்டு, "இது இல்ல சார் ஒரிஜினல் வேணும்." என்று சொன்னார். ஆதார் கார்டுல என்னயா ஒரிஜினல், டூப்ளிகேட். பன்னிரண்டு நம்பர்தானையா மேட்டர் என உள்ளுக்குள்  நினைத்துகொண்டேன். "ஏன், இந்த ஆதார் கார்டுக்கு தர மாட்டீங்களா?" என கேட்டேன். "இல்ல சார், நீ்ங்க வெச்சிருக்கிறது கலர் ஜெராக்ஸ் போட்ட கார்டு சார். இந்த கார்டுல இருக்குற பார் கோடு ரீட் ஆகாது. பார் கோடு ரீ்ட் ஆனாதான் உங்க டீடெய்லெல்லாம் JIO sim application-ல fill ஆகும். அப்பதான் சிம் கார்டு ஆக்டிவேட் ஆகும்" என்று கூறினார். "ஒரிஜினல்னா எத சொல்றீங்க?"னு கேட்டேன். "கவர்ன்மென்ட் உங்க கிட்ட கொடுத்தது சார்." அப்படினார் அவர். ஒருவேளை, ஆதார் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொண்டு வந்து கொடுத்தா ஏற்றுக்கொள்வார் போலனு நினைத்துக்கொண்டு. அலுவலகத்திற்கு திரும்பி இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பென்டிரைவில் எடுத்துச் சென்று கொடுத்தேன். பென்டிரைவில் இருந்த ஆதார் கார்டையும் திறந்து பார்த்துவிட்டு. "இல்ல சார் இதுல இருக்குற பார்கோடும் ரீட் ஆகாது." அப்படினு சொல்லிட்டார். "அண்ணே, அப்ப எதுதானே ஒரிஜினல் ஆதார் கார்டு" என்று அவரிடம் கேட்டேன்.

"போஸ்ட்மேன் உங்க வீட்டுல வந்து கொடுத்தார்ல, அந்த கார்டு சார்." என்று கூறினார் அவர். அடாப்பாவிங்களா, அதுக்கு நான் எங்கையா போவேன். பென்டிரைவை வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டேன். என் அலுவலகத்தை ஒட்டிய ஒரு கடையில் பேட்டரிக்கு விசாரித்தேன் என்று சொன்னேனில்லையா அந்த கடை திரும்பி வரும் வழியில்தான் இருக்கிறது. அந்த கடையில் நான் வைத்திருந்த கலர் ஜெராக்ஸ் போடப்பட்ட ஆதார் கார்டை காண்பித்து, "அண்ணே, இந்த ஆதார் கார்டுக்கு ஜியோ சிம் தருவீங்களா?" என கேட்டேன். "ம்... வாங்கிக்கலாம் சார்." என்று கூறினார். "அண்ணே, நல்லா பார்த்துட்டு சொல்லுங்க இது கலர் ஜெராக்ஸ், பார் கோடெல்லாம் ரீட் ஆகாது." என்று நான் கூறினேன். "பார் கோடு எதுக்கு சார்?, அதான் ஆதார் நம்பர் இருக்குல, அது போதும்." என்றார் அவர். ஆதர் கார்டை படம் பிடித்தார், அப்படியே என்னையும் படம் பிடித்தார். ஆப்பில் முகவரியை தட்டச்சு செய்ய சொன்னார். ஜியோ சிம்மையும் கையில் கொடுத்துவிட்டார். "ஒரு மணி நேரம் கழித்து மொபைல்ல போடுங்க சார். டவர் கிடைத்த உடன் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க. OTP கொடுங்க. Activate ஆகிரும்" என்று சொன்னார். மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.

ஒருமணிநேரம் கழித்து சிம் கார்டை மொபைலில் போட்டேன். டவரும் கிடைத்தது. ஆனால், Online Verification-னிற்கான எண்ணிற்கு கால் செய்தால் போகவில்லை. Online Verification நடக்காமல் SIM card Activate ஆகாது. சிம் கார்டை வாங்கிய கடைக்கே சென்றேன். அந்த கடை முதலாளியோட பையன் வாங்கி பார்த்தான். SIM card ஐ கழட்டி அவனுடைய மொபைலில் போட்டான். அந்த எண்ணிற்கு அழைத்து OTPஐ போட்டு Online Verification-ஐ முடித்தான். பிறகு சிம் கார்டை என்னுடைய மொபைலில் போட்டான். Youtube ஐ திறந்து வீடியோவை ஓட விட்டான். பக்காவா வேலை செய்தது. ஆனால் போன் செய்தால் Switch Off என்று வந்தது. மறுபடியும் பையனிடம் கொடுத்தேன். அவன் பார்த்துவிட்டு, "அண்ணே, JIOCallனு ஒரு ஆப் இருக்கு. அதை இன்ஸ்டால் பண்ணிட்ட Call பண்ணுறது வேலை செய்யும்." என்று கூறினான். நிறுவினான் வேலை செய்தது. அந்த பையனுக்கு வயது 15. எவ்வளவு அறிவானவர்களாக இருக்கிறார்கள். ஒரு வழியாக எல்லா பிரச்சனையும் முடிந்தது. ஜெகன்மோகன் இரயில் பயணத்திற்கான முன்பதிவை முடித்து கொடுத்திருக்கிறான். தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டியதுதான் ஊருக்கு. பயணத்தில் படிப்பதற்கான புத்தகங்களும் தயார்.

"ஏன் தம்பி பழைய போனை வெச்சிக்கிட்டு இந்த பாடு படுத்துறே?" உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது. நம்ம பழைய வரலாறு உங்களுக்கு தெரியாதே. இங்கே போயி பாருங்க. தெரிச்சு ஓடிருவீங்க.

Aug 24, 2020

முழு விடுதலைக்கான வழி - டாக்டர் அம்பேத்கர்


பம்பாய் தாதரில் 1936ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய நாட்களில் நடந்த மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரையை 'தலித் முரசு' பதிப்பகம் 'முழு விடுதலைக்கான வழி' எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இன்றுதான் அதை படித்து முடித்தேன். அதிலிருந்து நான் எடுத்த குறிப்புகளை இங்கு தொகுத்திருக்கிறேன். இந்து மதத்தைப் பற்றியும் சாதியைப் பற்றியும் எனக்கிருந்த பல சந்தேகங்களுக்கு இந்த புத்தகம் மிகத்தெளிவான பதில்களையும், விளக்கத்தையும் கொடுத்தது.

-------------------------------------------------------

ஒரு சராசரி மனிதனுக்கு மதமாற்றம் என்பது எவ்வளவு அவசியமானதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அதைப் புரிந்து கொள்வதும் கடினமானதாக இருக்கிறது. ஒரு சராசரி மனிதனை மதமாற்றத்தின் நியாயங்களை ஏற்றுக் கொள்ள வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எனவே மதமாற்றம் என்று கருத்து நடைமுறைச் சாத்தியமாக வேண்டுமானால், முதலில் உங்களை அதை முழுமனதோடு ஏற்று கொள்ள வைக்க வேண்டும். ஆகவே, என்னால் முடிந்த வரை மதமாற்றம் பற்றி எளிமையாக விளங்க வைக்க முயல்கிறேன்.

தீண்டாமை என்பது இரு வேறுபட்ட வகுப்பினருக்கு இடையிலான போராட்டடம். அது, சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்கும் இடையிலான போராட்டம். அது, தனி ஒரு மனிதனின் மீது இழைக்கப்படும் அநீதி அல்லது ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பின் மீது நிகழ்த்தும் அநீதி. அப்போராட்டம், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரோடு எப்படிப்பட்ட உறவைப் பேண வேண்டும் என்று வரையறுக்கிறது. எங்களையும் மற்றவர்களைப் போல சமமாக நடத்துங்கள் என்று நீங்கள் குரலெழுப்பும் அடுத்த நொடியே இந்தப் போராட்டம் தொடங்கிவிடுகிறது.

போயும் போயும் ரொட்டிக்கு, நல்ல துணி மணிக்கு, உலோக பாத்திரத்தில் தண்ணீர் எடுப்பதற்கு, மாப்பிள்ளையை குதிரையில் அமர வைப்பதற்கு என அற்பக் காரணங்களுக்கெல்லாம் இங்கே போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் இவை அனைத்தையும் உங்கள் சொந்த பணத்தைக் கொண்டு நடத்துகிறீர்கள். பின் எதற்காக உயர் சாதி இந்துக்கள் எரிச்சல் அடைய வேண்டும்? அவர்கள் கோபத்திற்கான காரணம் மிக எளிமையானது. நீங்கள் அவர்களுக்கு சமமாக நடந்து கொள்வது அவர்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அவர்களுடைய பார்வையில் உங்களுடைய நிலை என்பது கீழானது. நீங்கள் அசுத்தமானவர்கள். அடித்தட்டிலேயே இருக்க வேண்டியவர்கள். அப்படியே இருந்தீர்களானால் அவர்கள் உங்களை நிம்மதியாக வாழ விடுவார்கள்; முடியாது என்று அந்தக் கோட்டைத் தாண்டினால் போராட்டம் தொடங்கி விடும்.

தீண்டாமை என்பது குறுகிய காலம் கொண்டதோ, தற்காலிகமானதோ அல்ல; அது நிரந்தரமானது. நேரடியாக சொல்வது என்றால் சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்குமான இந்தப் போராட்டம் என்பது ஒரு நிரந்தர நிகழ்வு. அது அழிவற்றது. எக்காலத்திலும் நிலைக்கக் கூடியது. காரணம், உங்களை இப்படி சமூகத்தின் கீழ் நிலைக்கு தள்ளிய மதம், உயர்சாதி இந்துக்களைப் பொருத்தவரை அழிவற்றது, எக்காலத்திலும் நிலைத்து நீடிக்கக் கூடியது. எந்தவொரு காலமோ சூழலோ இந்த நிலையை மாற்றிவிட முடியாது. நீங்கள் இன்றைக்கு படிநிலையின் கீழே நிறுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எப்போதும் அப்படித்தான் நிறுத்தப்பட்டிருப்பீர்கள். இதன் பொருள், இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்குமான போராட்டம் எக்காலத்திலும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் என்பதுதான்.

இந்துக்களின் கட்டளைக்கேற்ப அவர்களுக்கு அடிபணிந்து நடக்க விரும்புகிறவர்களும் அவர்களுடைய அடிமைகளாகவே இருந்து விடுவது என்று முடிவெடுத்து விட்டவர்களும் இந்த தீண்டாமைப் பிரச்சனை பற்றியல்லாம் ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், சுயமரியாதையும் சமத்துவமுமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இதைப் பற்றி கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்.

முஸ்லீம்களும் எண்ணிக்கையில் சிறுபான்மையினர்தான். 'மகர்'களைப் போல, 'மாங்கு'களைப் போல அவர்களுக்கும் கிராமங்களில் வெகு சில வீடுகளே இருக்கின்றன. ஆனாலும் உங்களை அடக்கியாளுவதைப் போல அவர்களை அடக்கி ஆள எவருக்கும் இங்கே துணிவு இல்லை. ஏன் இப்படி? ஒரு கிராமத்தில் இரண்டே இரண்டு வீடு இருந்தாலும் அவர்களை துன்புறுத்திப் பார்க்கும் தைரியம் யாருக்கும் இல்லை. என்னைப் பொருத்தவரையில் இந்தக் கேள்விக்கு ஒரேயொரு விடைதான் இருக்கிறது. இந்தியா முழுவதிலும் இருக்கக் கூடிய அனைத்து முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பலமும் அந்த இரண்டு வீடுகளில் இருக்கும் முஸ்லிம்களின் பின்னால் அரணாய் நிற்கிறது என்பதை உணர்ந்ததால்தான் அவர்களை தொட்டுப்பார்க்க இந்துக்களுக்கு துணிச்சல் எழவில்லை. இந்துக்கள் தங்கள் மீது ஏதாவது அடக்குமுறைக்கு முயன்றால், பஞ்சாபிலிருந்து சென்னை வரை அனைத்து முஸ்லீம்களும் ஒன்று திரண்டு தங்களைப் பாதுகாக்க வருவார்கள் என்பதை உணர்ந்திருப்பதால்தான் அவர்களால் அச்சமின்றி சுதந்திரமானதொரு வாழ்க்கையை வாழ முடிகிறது. அதே நேரத்தில் உங்களைக் காப்பாற்ற இங்கே யாரும் ஒன்று திரண்டு விட மாட்டார்கள். எந்தவொரு பொருளாதார உதவியும் உங்களை வந்தடைந்து விட முடியாது; எந்தவொரு அரசு நிறுவனமும் எந்தச் சூழலிலும் உதவிக்கு ஓடி வந்து விடாது என்பது இந்துக்களுக்கு நன்றாகத் தெரியும். இங்கே சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்கும் ஒரு பிரச்சனை என்றால் சாதி இந்துக்களாக இருக்கும் தாசில்தாரும் போலிசும் கடமையைக் காட்டிலும் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உண்மையாக இருப்பார்கள்.

"மனிதனின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிற எதுவோ அதுவே மதம். அதுவே மதத்தின் உண்மையான பொருள்." சனாதன இந்துக்களின் முன்னனித் தலைவரான திரு. திலகர் வழங்கிய விளக்கம் இது.

தனித்து இருந்த ஒரு நீர்த் துளி கடலிலே கலந்து, கரைந்து தன் இருத்தலைத் தொலைப்பது போல் ஒரு தனி மனிதன் சமூகத்தில் கரைந்து தன் முழுமையைத் தொலைத்து விடுவதில்லை. மனிதன் சுதந்திரமானவன். அவன் இந்த சமூகத்திற்குத் தொண்டு செய்வதற்காகப் பிறக்கவில்லை. தான் மேம்பாடு அடைவதற்காகவே பிறந்தான். இந்தக் கருத்து புரிந்து கொள்ளப்பட்டதாலேயே வளர்ந்த நாடுகளிலெல்லாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அடிமைப்படுத்தி விட முடிவதில்லை.

ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கல்வி பெற முடியும், இரண்டாம் வகுப்பினர் ஆயுதம் ஏந்தவும், மூன்றாவது வகுப்பினர் வாணிபம் செய்யவும், நான்காவது வகுப்பினர் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று சொல்லும் மதத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லோருக்கும் கல்வி அவசியம், எல்லோருக்கும் ஆயுதம் அவசியம், எல்லோருக்கும் வாணிபம் செய்வது அவசியம். இந்த அடிப்படையை மறந்த மதம் ஒரு வகுப்பாருக்கு மட்டும் கல்வி கொடுத்து பிறரை அறியாமை இருட்டில் தள்ளி விடுவது - மதமே அல்ல. அது, மக்களின் சிந்தனையை அடிமைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட கள்ளச்சதி. ஒரு வகுப்பாரை மட்டும் ஆயுதமேந்த அனுமதித்து விட்டு மற்றவரை கூடாது என்று தடுப்பது மதமே அல்ல. அது அவர்களை எப்போதும் அடிமைகளாக வைத்திருப்பதற்கான வஞ்சக ஏற்பாடு.

ஒரு வகுப்பார் மட்டும் சொத்துக்கள் வைத்துக் கொள்ளலாம் என்று அதற்கான பாதையை திறந்து விட்டு விட்டு மற்றவரை அவர்களை அண்டிப் பிழைக்குமாறு நிர்பந்திப்பது மதமே அல்ல; அது தன்னை மட்டுமே உயர்த்திக்கொள்ளும் பேராசை.

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவசியமானவை மூன்று. அவை பரிவு, சமத்துவம், மற்றும் சுதந்திரம். இவற்றில் ஏதாவது ஒன்று இந்து மதத்திலிருந்து உங்களுக்கு கிட்டும் என்று உங்கள் அனுபவத்தை வைத்துச் சொல்ல முடியுமா?

தீண்டாமையைப் போன்றதொரு கொடுமையான சமத்துவமின்மையை வரலாற்றில் எந்த காலத்திலும் பார்க்க முடியாது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற மனநிலையின் காரணமாக தன் பெண்ணை மற்றவர்களுக்கு மணமுடித்து கொடுக்கமாட்டேன்; அருகருகே அமர்ந்து உணவருந்த மாட்டேன் என்பது போன்ற செயல்கள் பொதுவாக சில இடங்களில் நடக்கலாம். ஆனால் உலகத்திலேயே ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்கிற அளவுக்கு மனிதரை கீழ்த்தரமாக நடத்தும் நிலைமை இந்து மதத்திலும் இந்து சமூகத்திலும் போல் வேறு எங்காவது இருக்கிறதா?

சட்டம் உங்களுக்கு எத்தனையோ உரிமைகளை வழங்குவதாகக் கூறிக்கொள்ளலாம். ஆனால் எந்த உரிமைகளையெல்லாம் செயல்படுத்துவதற்கு இந்தச் சமூகம் அனுமதிக்கிறதோ அவற்றை மட்டும்தான் உண்மையிலேயே உரிமைகள் என்று அழைக்க முடியும்.

சுதந்திரமானவன் என்று நான் யாரை வரையறுப்பேனென்றால் - எவனொருவன் தன்னுடைய உரிமை, பொறுப்பு, கடமை ஆகியவை பற்றிய விழிப்போடு இருக்கிறானோ, எவனொருவன் தன்னை அடக்கி ஆளும் சூழலுக்கு அடங்க மறுத்து, அந்தச் சூழலை தனக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்கிறானோ, எவனொருவன் 'இது பழகிப்போய்விட்டது', 'வழிவழியாய் இதுதான் நடைமுறை', 'இதுதான் மரபு', 'இப்படித்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டது' என்று சொல்லி அதற்கு முன்னோர்களை சாட்சிக்கு இழுக்காமல் இருக்கிறானோ அவனிடமே பகுத்தறியும் சிந்தனையின் சுடர் அணையாமல் எரிகிறது. அவனையே நான் சுதந்திரமான மனிதன் என்பேன்.

எதற்காகவும் தன்னை ஒப்புக் கொடுத்து விடாத, மற்றவருடைய அறிவுரைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றாத, எதையும் காரண - காரிய பின்புலத்தில் கேள்விக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதில்லை என்ற முடிவு கொண்டவன் எவனோ அவனே சுதந்திர மனிதன்.

எவன் ஒருவன் தன் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னிற்கிறானோ, இந்த சமூகம் என்ன சொல்லுமோ என்பதைப் பற்றிய அச்சம் இல்லாதவன் எவனோ, அடுத்தவரின் கைப்பாவையாக மறுக்கும் மானமும் அறிவும் எவனுக்கு இருக்கிறதோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

அடுத்தவர் வழியில் தன் பார்வையை செலுத்தாது, தன் இருத்தலின் நோக்கத்தை, தன் சுய சிந்தனைப்படி தானே அமைத்துக்கொண்டு அதன்படி தன் வாழ்வு எப்படி - எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அவனே முடிவு செய்து கொள்கிறானோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன். சுருங்கச் சொன்னால் எவனொருவன் தன்னை, தான் மட்டுமே வழிநடத்துகிறானோ அவனை மட்டுமே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

ஒருவருடைய சாதி எது என்று தெரியாத போது ஒரு சாதி இந்துவால் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து தீண்டத்தகுவோருக்கும், தீண்டத்தகாதோருக்குமான வேறுபாட்டை தெரிந்து கொள்ள முடியாது.

முன்னோர்கள் ஒரு மதத்திற்குள் இருந்தார்கள் என்பதற்காக எல்லோரும் அந்த மதத்துடனையே ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்று முட்டாள் மட்டுமே சொல்லுவான். அறிவுள்ள யாரும் அந்தக் கூற்றை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

நால்வர்ண அமைப்பு என்பது இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக நிலவிய ஓர் அமைப்பு. அதில் பார்ப்பனர்கள் கல்வி கற்பதற்கும் சத்திரியர்கள் போர் புரிவதற்கும் வைசியர்கள் பொருள் சேர்ப்பதற்கும் சூத்திரர்கள் ஏவல் செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதுதான் அந்நாளைய நடைமுறைச் சட்டம். அப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் சூத்திரர்களிடம் கல்வி இல்லை, பொருள் இல்லை, ஆயுதங்களும் இல்லை. உங்களுடைய முன்னோர்கள் இதுபோன்றதொரு வறிய, கையறு நிலையில் வாழ்வதற்குத்தான் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு மதத்தை அவர்கள் தாங்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டார்கள் என்று எந்த அறிவுள்ள மனிதனும் சொல்ல மாட்டான்.

இன்றைய தலைமுறையினர் மீது இது போன்ற எந்த வகையான அடிமைத்தனத்தையும் எவரொருவரும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது. அவர்களுக்கு அனைத்து வகையான சுதந்திரமும் இருக்கிறது. இந்த சுதந்திர வழிகளைக் கொண்டு அவர்கள் தங்களை விடுதலை செய்து கொள்ளத் தவறுவார்களேயானால் அவர்களை இந்த பூமியில் வாழ்வதிலேயே மிகக் கேவலமான, அடிமைப்புத்தி கொண்ட, அண்டிப்பிழைக்கும் பிறவிகள் என்று மிகுந்த வருத்தத்தோடு அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

முன்னோர்களுடைய மதத்தில் அப்படியே ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அறிவுரையை முட்டாள்கள் மட்டுமே சொல்வார்கள். புத்தியுள்ள எந்த மனிதனும் அப்படிக் கூற மாட்டான். இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அதே சூழலிலேயே தொடர்ந்து வாழச் சொல்லும் அறிவுரையானது, விலங்குகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். மனிதனுக்கு அல்ல.

நம்மை சமத்துவத்திற்கு இட்டுச் செல்லும் விடுதலையின் பாதை மதமாற்றம் மட்டுமே என்பது புரியும். அது ஒன்றும் 'தப்பி ஓடும் பாதையல்ல'; 'கோழைகளின் பாதையுமல்ல'. அது தெளிந்த அறிவின் பாதை.

மதமாற்றத்தை எதிர்த்து மற்றொரு வாதமும் வைக்கப்படுகிறது. சாதி அமைப்பின் மீதான விரக்தியில் மதத்தை மாற்றிக்கொள்வதென்பது எதற்கும் பயன்படாது என சில இந்துக்கள் வாதிடுகின்றனர். நீ்ங்கள் எங்கே போனாலும் அங்கேயும் சாதிப் பாகுபாடு இருக்கத்தானே செய்கிறது என்று கேட்கிறார்கள். நீங்கள் முஸ்லீமாக மாறினாலும் அங்கேயும் சாதி இருக்கிறது. கிறித்துவராக மாறினால் அங்கே சாதி இருக்கிறது என்பது கசப்பான உண்மையாக இருந்தாலும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சாதி அமைப்பு என்பது இந்த நாட்டில் இருக்கும் மற்ற மதங்களுக்கும் ஊடுறுவி விட்டது. ஆனால் இந்த கொடுங்குற்றம் துளிர்த்துச் செழிக்கக் காரணம் இந்துக்கள் மட்டுமே. இந்த நோய் முதலில் இந்துக்களிடமிருந்தே தோன்றியது. அதன் பிறகு பரவி மற்றவர்களையும் அது நோயில் தள்ளியது. என்னதான் முஸ்லீம்கள்  மத்தியிலும் கிறுத்துவர்கள் சாதிப் பிரிவுகள் இருந்தாலும் அவற்றை இந்துக்களின் சாதிப் பிரிவுகளோடு ஒப்பிடுவது அற்பத்தனமான சிந்தனையாகும்.

இந்துக்களின் சாதி அமைப்புக்கும், முஸ்லீம்களின் சாதி அமைப்பிற்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. முதலாவதாக, என்னதான் முஸ்லீமகளிடையிலும் கிறித்துவர்களிடையிலும் சாதி நிலவினாலும் அதுதான் அவர்களுடைய சமூக அமைப்பின் முக்கியக் கூறு என்று யாரும் சொல்ல முடியாது. யாராவது நீ யார் என்று கேட்கப்படும் கேள்விக்கு, நான் ஒரு முஸ்லீம் அல்லது நான் ஒரு கிறுத்துவன் என்பதே அதற்குப் போதுமான பதிலாக இருக்கும். அடுத்த கேள்வியாக, நீ என்ன சாதி என்ற கேள்வியைக் கேட்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றாது.

ஆனால், அதே ஓர் இந்துவைப் பார்த்து யாராவது நீ யார் என்று கேட்க, அவன் நான் ஓர் இந்து என்று சொன்னாலும் அந்த விடையோடு அவர்கள் திருப்தி அடைந்து விடுவதில்லை. அடுத்து அவர் கேட்பார். நீ என்ன சாதி? அந்தக் கேள்விக்கு விடை சொல்லும் வரை சமூகத்தில் அவனுக்கான இடம் என்பது நிர்ணயிக்கப்படாது. இதிலிருந்தே சாதி என்பது இந்து மதத்தில் எவ்வளவு அதி முக்கியத்துவம் வாய்ந்த கூறாகவும்; இஸ்லாத்திலும் கிறுத்துவத்திலும் பொருட்படுத்தத் தேவை இல்லாத அளவுக்கு அற்பமானதாகவும் இருக்கிறது என்பது விளங்கும்.

இந்துக்கள் தங்கள் மதத்தை ஒழிக்காமல்  தங்கள் சாதியை ஒழிக்க முடியாது. ஆனால், முஸ்லீம்களும், கிறுத்துவர்களும் - சாதியைக் களைவதற்காக - தங்கள் மதத்தை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை. தவிர, அவர்களின் மதமே அந்தப் பணிக்கு உறுதுணையாக இருக்கும்.

ஒரு வாதத்திற்காக, எல்லா மதங்களிலும் சாதி இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும் அந்தக் காரணத்திற்காக ஒருவன் இந்து மதத்திற்குள்ளேயே இருந்து விட்டுப் போகட்டும் என்று நியாயப்படுத்தி விட முடியாது. சாதி அமைப்பு என்பது எதற்கும் பயனற்றது என்று முடிவு செய்துவிட்டால் பிறகு எந்தச் சமூகத்தில் சாதி அமைப்பு தீவிரத் தன்மையற்று விரைவாகவும் எளிமையாகவும் அழித்துவிடக் கூடியதாக இருக்கிறதோ அந்தச் சமூகத்தை ஏற்றுக் கொள்வதே தர்க்கரீதியான முடிவாகும்.

வாழும்போது அனைத்துவிதமான  உல்லாசங்களிலும் ஊறித்திளைத்தவர்களுக்கு செத்த பிறகும் அதே உல்லாசத்தோடு வாழ மேலே ஒரு லோகம் காத்துக்கிடக்கிறது என்று ஆசை காட்டும் மதம் தானே உண்மையான மதமாகத் தெரியும். அதுதானே இயற்கை. ஆனால் ஒரு மதத்தில் இருப்பதனாலேயே மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டவர்களும் உணவு உடை மறுக்கப்பட்டவர்களும் மனிதர்களாகக் கூட நடத்தப்படாதவர்களும் உலகியல் நோக்கில் மதத்தை அணுகாமல் கண்கள் மூடி வானம் பார்த்து வணங்குவார்கள் என்றா எதிர்பார்க்க முடியும்? இந்தப் பணக்காரச் சோம்பேறிகளின் வேதாந்தங்களினால் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது?

மதத்திற்காக மனிதன் இல்லை; மனிதனுக்காகவே மதம். நீங்கள் மனிதராக மதிக்கப்பட மதம் மாறுங்கள். ஒன்று சேர மதம் மாறுங்கள். வலிமையை எட்ட மதம் மாறுங்கள். சமத்துவம் அடைய மதம் மாறுங்கள். சுதந்திரம் பெற மதம் மாறுங்கள். உங்களுடைய அன்றாட வாழ்வை மகிழ்ச்சியானதாக மாற்ற மதம் மாறுங்கள்.

மக்களிடம் அவர்களுக்கு தகுந்தாற்போல பேசி, அவர்கள் மத்தியில் பிரபலமாவது சாதரண மனிதனுக்கு வேண்டுமானால் நன்மை பயப்பதாக இருக்கலாம். அது தலைவனுக்கு ஏற்ற பண்பு அல்ல என்பது என்னுடைய எண்ணம். என்னைப் பொருத்தவரை, எந்தவித அச்சமோ சாய்வோ இன்றி மற்றவர்களுடைய பழிச் சொல்லுக்கு கவலைப்படாமல் மக்களுக்கு எது நன்மை எது தீமை என்பதை வெளிப்படையாய் எடுத்துரைப்பவன் எவனோ அவனே தலைவன்.

நான் சொல்கிறேன் என்பதற்காக உணர்ச்சி வேகத்தில் உந்தப்பட்டு என்னைப் பின் தொடர்ந்துவிடக் கூடாது. ஆழமாகச் சிந்தித்து ஒரு முடிவிற்கு வருவீர்களேயானால் என்னுடைய கடமையை நான் சரிவர செய்ததாகக் கருதிக் கொள்வேன். ஆகவே உங்கள் மனதில் நன்றாக இருத்திக் கொள்ளுங்கள் இது ஒரு முக்கியமான காலகட்டம். நீங்கள் இன்று எடுக்கப்போகும் முடிவுதான் நாளைய உங்கள் தலைமுறைகளின் ஒளிமயமான வாழ்க்கைக்கான பாதையை அமைத்துத் தரப் போகிறது. இன்று நீ்ங்கள் விடுதலை பெற வேண்டும் என்ற முடிவை எடுத்தால், நாளை உங்கள் தலைமுறை விடுதலை பெற்றதாய் இருக்கும். இல்லை, அடிமைகளாகவே இருப்போம் என்று முடிவெடுத்தீர்களேயானால் நாளைய தலைமுறை அடிமையாகவே இருக்கும். முடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கடினமான பொறுப்பு உங்களையே சார்ந்தது.
-------------------------------------------------------

Aug 22, 2020

DELL மடிக்கணினியும் உபுண்டு லினக்ஸ் நிறுவுதலும்

என்னுடைய நண்பன் சிலம்பரசன் Aeronautical Engineering படித்துவிட்டு விமானம் தொடர்பான பணியில் பெங்களூருவில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான். கொரோனா என்பதால் கிராமத்திற்கு வந்து வீட்டிலிருந்து வேலை செய்துகொண்டிருக்கிறான்(Work From Home). அவனுடைய பணிக்கு தேவையான ஒரு மென்பொருள் லினக்ஸ் இயங்குதளத்தில் உள்ளதால் அதை எப்படி நிறுவலாம் என என்னை தொடர்புகொண்டான். அந்த மென்பொருளுக்கு 8GB RAM உள்ள மடிக்கணினி வேண்டும் என்பதால் அதை இணையத்தில் வாங்கி 4GBயை 8GBயாக மாற்றி விட்டான். அவனுடைய மடிக்கணினியில் விண்டோஸ் 10 இயங்குதளம் மட்டுமே இருந்தது.

இப்போது இரண்டு வழிகள் உள்ளன. முதல்வழி VMwareஐ விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவி அதனுள் லினக்ஸை நிறுவி பயன்படுத்தலாம். ஆனால் 30 நாட்களுக்கு மேல் VMWare ஐ பயன்படுத்த முடியாது. இரண்டாவது வழி Dual Booting முறையில் லினக்ஸை நிறுவுவது. இந்த இரண்டு வழிகளையும் விளக்கி கூறினேன். அவன் இரண்டாவது வழியை தேர்வு செய்தான். VMwareஐப் பற்றி அவனே கூறியதால் நான் VirtualBoxஐ பரிந்துரைக்கவில்லை. VMware, VirtualBox மூலமாக லினக்ஸை நிறுவுவதை விட நேரடியாக நிறுவிவிடுவதுதான் நல்லது.

அந்த மென்பொருளுக்கு Xubuntu 18.04 பதிப்புத்தான் தேவை என்பதால் அதை நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டான். நிறுவுவதற்கு என்னென்ன தேவை என்று கேட்டான். 4GB அல்லது அதற்கு மேல் கொள்ளவு கொண்ட ஒரு பென்டிரைவ். Xubuntu 18.04 ISO file. இந்த ISO கோப்பை bootable ஆக பென்டிரைவில் மாற்ற விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் Rufus மென்பொருள். 100GB Disk space ஆகியவைகள் தேவையென கூறினேன். தயார் செய்தான். அவனுக்கு தேவையான மென்பொருளுக்கு 70GB disk space தேவைப்படும் என கூறியிருந்தான். அதனால் நான் லினக்ஸை நிறுவ 100GB பரிந்துரைத்தேன்.

512GB Hard Disk கொண்ட மடிக்கணினி அவனுடையது. Legacy Booting முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. MS-DOS Partition Tableஐ கொண்டு பார்ட்டிசியன் செய்யப்பட்டிந்தது. MS-DOS Partition Tableலில் நான்கு primary paritition களுக்கு மேல் பிரிக்க முடியாது. ஐந்தாவதாக ஒரு பார்ட்டிசியன் வேண்டுமென்றால் Extendend Partition பிரிந்து அதனுள் Logical Partition உருவாக்கித்தான் பயன்படுத்த முடியும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த Extendend Partitionனே ஒரு primary Partitionனாகத்தான் உருவாகும்.

நண்பனுடைய கணினியில் லினக்ஸ் நிறுவுவதற்கான வேலையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது இதுதான். ஏற்கனவே அவனுடைய கணினியில் நான்கு பார்ட்டிசியன்கள் இருந்தது. அனைத்தும் primary partitionகள் லினக்ஸிற்கு தேவையான ஒரு தனி பார்ட்டிசியனை உருவாக்க வேண்டுமென்றால் Extendend Partition உருவாக்கிவிட்டுத்தான் அதை உருவாக்க முடியும். அப்படியென்றால் ஏற்கனவே நன்பணுடைய கணினியில் இருக்கு நான்கு primary partitionகளில் ஏதாவது ஒரு பார்ட்டிசியனை நீக்க வேண்டும். எதை நீக்குவது? இங்குதான் மிகவும் குழம்பி போனோம். ஏனென்றால் ஏற்கனவே இருக்கும் விண்டோஸ் இயங்குதளத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் லினக்ஸை நிறுவிவிட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

விண்டோஸை நிறுவி அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது ராக்கெட்டில் செயற்கைகோளை வைத்து சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்துவதைப்போல கஷ்டமான வேலை. எப்படினு கேட்கிறீங்களா. முதலில் விண்டோஸை நிறுவ வேண்டும். அடுத்ததாக அனைத்து டிரைவர்களையும் நிறுவ வேண்டும். அடுத்து ஆன்டிவைரஸ், ஆன்டிமால்வேர், ஆன்டிரூட்கிட் நிறுவ வேண்டும். அடுத்து MS-OFFICE நிறுவ வேண்டும். அடுத்து இணையத்தில் உலாவ Firefox அல்லது Google Chrome நிறுவ வேண்டும். ஒரு நல்ல உரைதிருத்தி(Text Editor) நிறுவ வேண்டும். அதுபோக உங்களது தேவைக்களுக்கு ஏற்ப மற்ற மற்ற மென்பொருள்களையெல்லாம் நிறுவ வேண்டும். இதையெல்லாம் நீங்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டி வரும் அதுதான் கொடுமையாக இருக்கும்.

கீழ்காணும் முறையில் பார்ட்டிசியன் செய்யப்பட்டிருந்தது.

/dev/sda1-System Reserved-992KB

/dev/sda2-DIAG-300MB-diag flag set

/dev/sda3-BOOT-500MB-boot flag set

/dev/sda4-NewVolume-198GB

இதிலிருந்து ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும். System Reserved(/dev/sda1) பார்ட்டிசியன் விண்டோஸ் இயங்குதளம் நிறுவும் போது தானாகவே உருவாக்கப்படுவது. DIAG(/dev/sda2) பார்ட்டிசியன் DELL Diagnostics பயன்பாடுகள், Recovery கோப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். BOOT(/dev/sda3) விண்டோஸ் இயங்குதளத்தினுடைய பூட்டிங் கோப்புகள் இருக்கும். /dev/sda4 பார்ட்டிசியனில் C: and D: இரண்டும் இருந்தது. Dynamic Partitionனாக இருந்தது. 260GB unallocated ஆக இருந்தது.

இதில் எந்த பார்ட்டிசினை தூக்கினாலும் விண்டோஸ் இயங்காமல் போய்விட வாய்ப்புண்டு. அதனால் DIAG Partitionனை நீக்கிவிடலாம் என முடிவு செய்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதைப்பற்றி கூகுளில் தேடி படித்து அதை நீக்கினால் எந்த பிரச்சனையும் வராது என முடிவு செய்தேன். Xubuntuஐ Live mode இல் boot செய்து GParted மூலமாக அதை நீக்கிவிட்டு Extendend Partition பிரித்து Logical Partition உருவாக்கி Xubuntuஐ வெற்றிகரமாக நிறுவி முடித்தோம்.

Aug 2, 2020

Youtube வீடியோவில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கான பகுதியை மட்டும் தரவிறக்கம் செய்வது எடுப்பது எப்படி?


உங்கள் லினக்ஸ் கணினியில் 'youtube-dl' பொதி நிறுவப்பட்டிருக்க வேண்டும். கீழ்காணும் கட்டளைவரி மூலமாக ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் யூடியூப்பில் இருந்து தரவிறக்கம் செய்யலாம்.

youtube-dl --postprocessor-args "-ss 0:2:25 -to 0:10:25" https://www.youtube.com/watch?v=PNPgTb323lE
2:25 நிமிடத்தில் தொடங்கி 10:25 வரையுள்ள பகுதியை இந்த கட்டளை வரி தரவிறக்கம் செய்யும். 

Jun 10, 2020

Arch Linux-ல் IBus தமிழ் தட்டச்சு பிரச்சனையும் - தீர்வும்



நான் Arch Linux பயன்படுத்திக்கொண்டிருப்பதைப் பற்றி ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். நேற்று KDE Plasma 5.19 வெளியிடப்பட்டது. அதை Arch Linux-ல் Upgrade செய்தேன். Autostart-ல் போட்டிருந்த தமிழ் தட்டச்சு செய்வதற்கான IBus வேலை செய்யவில்லை. Arch Linux-னுடைய பலமே ArchWiKi-தான். அதில் கூறியிருந்த படி ~/.bashrc கோப்பில் 'ibus-daemon -drx' எனும் வரியை சேர்த்தேன். Logout செய்துவிட்டு மறுபடியும் Login செய்த பிறகு IBus நன்றாக வேலை செய்தது.


May 3, 2020

பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறை

பயிலகமும் நியூஸ் 18 தமிழ்நாடும் இணைந்து தமிழில் பைத்தான் - இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறையை நடத்தவிருக்கின்றன.  வகுப்புகள் வரும் மே 6ஆம் நாளில் வகுப்புகள் தொடங்குகின்றன.  தினமும் ஒரு மணிநேரமாக (காலை 7.30 இல் இருந்து 8.30) , ஒரு மாதம் இந்த வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.  வகுப்புகளின் பதிவுகள் - யூடியூப் தளத்தில் பயிலகம் பக்கத்தில் பதிவேற்றப்படும்.
யார் யார் படிக்கலாம்?
பைத்தான் படிக்க விரும்பும் யாரும் படிக்கலாம்
நான் ஐடி துறை இல்லை. படிக்கலாமா?
தாராளமாகப் படிக்கலாம். உங்கள் கல்விப் பின்னணி இதற்குத் தடையில்லை.
என்னிடம் என்ன இருக்க வேண்டும்?
கணினியும் நல்ல இணைய வசதியும் மட்டுமே போதும். வேறெதுவும் தேவையில்லை.
யார் பாடம் நடத்துவார்கள்?
ஐடி துறையில் அனுபவம் வாய்ந்த மென்பொறியாளர்கள் பயிற்றுவிப்பார்கள்.
பயிற்சிக் கட்டணம் எவ்வளவு?
கொரோனா காலத்தில் ஒடிந்து போய் இருக்கும் சமூகத்திற்குக் கைகொடுக்கும் முயற்சியே இது. எனவே முற்றிலும் இலவசம்.
பயிற்சிக் காலம்
ஒரு மாதம் - தினமும் ஒரு மணி நேரம்
பயிலகம் பக்கம்: https://www.youtube.com/channel/UCdw_PocG9G8-y4f6wYkz8og

Apr 30, 2020

KDE Desktop Zoom பிரச்சினை

இரண்டு தினங்களுக்கு முன்பு Fedora 32 பதிப்பு வெளியிடப்பட்டதால். Fedora KDE பதிப்பை மடிக்கணினியில் நிறுவினேன். நிறுவுதல் முடிந்த பின்பு தேவையான Packages, Softwares-களை நிறுவிக்கொண்டிருந்தேன். தூக்க கலக்கத்தில் ஏதோ குறுக்குவிசைகளை அழுத்திவிட்டேன் என நினைக்கிறேன். Desktop Zoom ஆகி Mouse Cursor -க்கு ஏற்ப நகர்ந்துகொண்டே இருந்தது.

இணையத்தில் தேடி ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டேன். 'Super + -' Key களை அழுத்தி Zooming -ஐ பழயபடி கொண்டுவந்துவிட்டேன். Super Key என்பது Windows Key-ஐ குறிக்கும்.

நிரந்தரமாக நீக்க



Apr 10, 2020

பிறந்த நாள்

சென்னையிலிருந்து ஊரில் போய் இறங்கி வீட்டிற்குள் நுழைந்தவுடன். "தம்பி உனக்கு பொண்ணு பார்த்திருக்கிறோம். போயி பொண்ண பார்த்துட்டு உன் விருப்பத்தைச் சொல்லு." என்று அம்மா கூறினார்கள்.  அம்மாவும், தம்பியும் தீவிரமாக எனக்கு பொண்ணு பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது அதுவரைக்கும் எனக்குத் தெரியாது.

நானும் என் தம்பியும் பைக்கில் கிளம்பினோம். நாங்கள் கூறியிருந்த நேரத்தைவிட இரண்டு மணிநேரம் தாமதமாகச் சென்றோம். அனைவரும் வரவேற்றார்கள். ரம்யா தேநீர் கொடுத்தார். பார்த்தேன். பிடித்துவிட்டது. இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள். சிதம்பரம் அண்ணன் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தேதி கேட்டார். தலைவர் அவர்கள் கொடுத்தார்கள். தை மாதம் பிப்ரவரி 7, 2018 அன்று தலைவர் தலைமையில்  எங்கள் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் வரப்போகும் மனைவி கடுமையான ஆன்மீகவாதியாகத்தான் அமைவார் என்று எல்லோரும் கூறிக்கொண்டேயிருந்தார்கள். அங்கேதான் ஒரு டிவிஸ்ட். ரம்யாவுக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் அவ்வளவாக கிடையாது. கோவிலுக்கெல்லாம் அவ்வளவாக விரும்பிச்  செல்லமாட்டார். கடவுளைப் பற்றிய பயமும் கிடையாது. திருமணத்திற்கு முன்பு இருந்த கொஞ்சநஞ்ச கடவுள் நம்பிக்கையும் இப்போது ரம்யாவுக்கு சுத்தமாக கிடையாது. யோசிக்காமல், யாருக்கும் பயப்படாமல்  கடவுளைப் பற்றி கிண்டலடிப்பார், கடவுளைப் பற்றி கேள்வி கேட்பார். எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. இயக்க செயல்பாட்டிற்கும், பொதுகாரியங்களில் ஈடுபடுவதற்கும் எப்போதும் ரம்யாவின் ஒத்துழைப்பு முழு அளவில் இருக்கும்.

திருமணம் முடிந்து ரம்யா என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டார். ரம்யாவிற்கு தேவையில்லாமல், ஆடம்பரமாக செலவு செய்வது பிடிக்காது. செலவு செய்தால் அதற்கு ஒரு  வலுவான காரணம் இருக்க வேண்டும். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி ஒரு லட்சமாக இருந்தாலும் சரி.

கர்ப்ப காலத்தில் கூட மருத்துவரைப் பார்க்கச் சென்ற ஒவ்வொரு முறையும் மாநகரப் பேருந்துகளிலும், ஷேர் ஆட்டோக்களிலுமே சென்று வந்தோம். அதற்காக என்னிடம் கோபப்பட்டதோ, சங்கடப்பட்டுக்கொண்டதோ கிடையாது. எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என நினைப்பார். பெண்கள் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று உடைகளுக்காக அதிகம் செலவு செய்கிறார்கள் என்பது. ஆனால் ரம்யாவிடம் அது கிடையாது. குறைவான விலையிலேயே நல்ல அழகான, நேர்த்தியான, அவருக்கு பிடித்தமான உடைகளை வாங்கிக்கொள்வார். அவருக்கென்று பெரிதாக எதையும் என்னிடன் விரும்பிக்கேட்டதில்லை. ஒரு நல்ல ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டும் என்பதற்காக Redmi Y2 வாங்கினோம் அவ்வளவுதான்.

நான் சில விஷயங்களில் பயம்கொள்ளும் போது, "அட வாங்க என்ன ஆகிவிடப்போகிறது?" என்று தைரியமூட்டுவார். ரம்யாவுக்கு பயம் என்பது அறவே கிடையாது. கர்ப்ப காலத்தை கூட எந்தவிதமான பயமும் இல்லாமல்தான் எதிர்கொண்டார். சிசேரியன் முறையில்தான் பிரசவம் நடந்தது. அன்புச்செல்வன் பிறந்தான்.

என்னுடைய தினசரி வாழ்க்கையில் ஒரு ஒழுங்கை ஏற்படுத்தினார். அதில் இரண்டு முக்கியமானவைகள். ஒன்று முதல்நாள் அணிந்த ஆடைகளை மறுநாள் காலையிலேயே துவைத்து விட வேண்டும். அழுக்குத்துணிகள் சேரக்கூடாது. நான் மறந்துவிட்டு சென்றாலும் ரம்யா எடுத்துக்கொண்டு வந்து தந்துவிடுவார். இரண்டு என்ன வேலை இருந்தாலும் இரவு 9:30 மணிக்கு மேல் கண்விழிக்கக் கூடாது. 9:00 - 9:30 -க்குள் தூங்கச் சென்றுவிட வேண்டும். இதனால் காலை 5:30 - 6:00 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். தினசரி நடைப்பயிற்சி செல்வேன். இப்போது இதையெல்லாம் கடைபிடித்துக்கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்காதீர்கள். ரம்யா இப்போது சென்னையில் இல்லை. அன்புச்செல்வனுடன் ஊரில் இருக்கிறார். அதனால் மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் இப்போது நான் கடைபிடிக்கவில்லை. ரம்யா வந்தவுடன் கண்டிப்பாக எல்லாம் ஒழுங்காக நடக்கும்.

என்றைக்காவது இரவு நேரத்தில் அலுவலக வேலைகள் இருந்தால் என்னுடன் சேர்ந்து அவரும் கண்விழித்துக்கொண்டிருப்பார்.

சேமிக்கும் பழக்கத்தை எனக்கு ஏற்படுத்தியதே ரம்யாதான். ரம்யா என் வாழ்விணையராக வரும் வரையிலும் சேமிப்பு என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அதைப்பற்றி யோசித்தது கூட கிடையாது. இன்றைக்கு காப்பீடு-முதலீடு-சேமிப்பு என்று என் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியுள்ளார். ஒரு ரூபாய் செலவு செய்தாலும் - வரவு வந்தாலும் அதை நோட்டில் எழுதி வைக்க வேண்டும் என்பது ரம்யாவின் அன்புக்கட்டளை. ஒவ்வொரு மாத இறுதியிலும் அதை கணக்குப் பார்ப்பார். அற்புதமான திட்டம் இது. இரண்டு வருடங்களாக தவறாமல் இதை செய்து வருகிறோம். இதன் மூலமாக பணத்தேவை எவ்வளவு என்று எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது.

உறவுகளை பேணிக்காப்பதிலும், அதற்கான முக்கியத்துவத்தை கொடுப்பதிலும் ரம்யா எப்பொழுதும் கவனமாக இருப்பார்.

ரம்யா துணைவராக அமைந்தது எனக்கு கிடைத்த பெரும் பேறு.

இன்று  ரம்யாவிற்கு பிறந்த நாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்யா!!!

Mar 22, 2020

Arch Linux - a simple lightweight distribution


உங்களுக்கு மிகவும் பிடித்த லினக்ஸ் வழங்கல் எது? என்ற கேள்வியை கேட்டால் அதற்கு ஒற்றை வார்த்தையில் என்னால் பதில் சொல்ல முடியாது. காரணம் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் எல்லா வழங்கல்களையும் முயற்சித்து பார்த்திருக்கிறேன். உபுண்டு, பெடோரா, ஓப்பன் சுசி, டெபியான் போன்ற வழங்கல்கள். அதுபோல டெஸ்க்டாப் சூழல்கள் என்று பார்த்தால் GNOME, KDE, LXDE, LxQT, XFCE என அனைத்தும்.

இவைகளில் உபுண்டுவைத்தான் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறேன். உபுண்டு பயன்படுத்தி போரடித்து விட்ட காரணத்தினால் கொஞ்ச காலத்திற்கு ஓப்பன் சுசியை பயன்படுத்தினேன். பிறகு அதுவும் போரடித்து விட்டதால் பெடோராவைப் பயன்படுத்தி வந்தேன். பெடோராவும் போரடித்து விட்டதால் இப்போது Arch Linux ஐ பயன்படுத்தி வருகிறேன்.

Arch Linux ஐப் பற்றி என்னுடைய நண்பர் பிரபாகரன் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. Arch Linux ஐ நிறுவுவது கடினம் ஆனால் பயன்படுத்த அற்புதமாக இருக்கும் என்று படித்திருக்கிறேன். சோதனை முயற்சியாக Virtual Machine Manager(qemu+KVM) மூலமாக நிறுவி பார்த்தேன். நிறுவ முடிந்தது. நான் அடிக்கடி பயன்படுத்தும் Application களையும் நிறுவினேன், தமிழ் எழுத்துரு, தமிழ் தட்டச்சு முறை என அனைத்தும் வேலை செய்தது. உடனடியாக மடிக்கணினியில் ஏற்கனவே நிறுவி வைத்திருந்த Fedora 31 Workstation ஐ நீக்கிவிட்டு Arch Linux ஐ நிறுவினேன்.


பயன்படுத்த நன்றாக இருக்கிறது. வேகமாகவும் இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எளிமையான, மெலிதான லினக்ஸ். தேவையில்லாத பொதிகளோ, சேவைகளோ நிறுவப்பட மாட்டாது. அடிப்படையான பொதிகள் மட்டும் நிறுவப்படும்.. உங்களுக்கு தேவையானவைகளை நீங்களே முடிவு செய்து நிறுவி கொள்ளலாம்.

Arch Linux ஒரு rolling release வகையைச் சேர்ந்த வழங்கல். உபுண்டு, பொடோராவிற்கு இருப்பதைப் போன்ற ஒரு குறிப்பிட்ட வெளியீட்டு தேதி கிடையாது. பொதிகளினுடைய அண்மைய பதிப்புகள் நிறுவப்படும்.

Arch Linux ஐ நிறுவுவதற்கு உங்களுக்கு லினக்ஸ் கட்டளை வரிகளும், partitions, file systems, booting methods களையும் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தால் எளிமையாக நிறுவிவிடலாம்.