அண்மையில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 'நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்', 'ஜாதியை அழித்தொழிக்கும் வழி' இரண்டு புத்தகங்களையும் படித்து முடித்தேன். 'ஜாதியை அழித்தொழிக்கும் வழி' புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளை அடிக்கோடிட்டு வைத்திருந்தேன். அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வரிகள் கீழே உள்ளன.
* தங்கள் பரம்பரை தொழில் அல்லாத வேறு எந்தத் தொழிலுக்கும் ஆட்கள் தேவைப்படும்போதுகூட - இந்துக்கள் அத்தொழிலைச் செய்வதற்கு செல்வதை சாதி அமைப்ப அனுமதிப்பது இல்லை. தன் சாதிக்கு என்று ஒதுக்கப்பட்ட தொழிலைத் தவிர வேறு புதிய தொழில்களை மேற்கொள்வதை விட, பட்டினி கிடப்பதே மேல் என்று ஓர் இந்து சும்மா இருக்க காரணம் என்ன? சாதி அமைப்புதான் காரணம்.
* தொழில்களை மாற்றிக்கொள்ள சாதி அனுமதிப்பதில்லை. ஆகையால், நம் நாட்டில் நிலவுகிற வேலை இல்லா திண்டாட்டத்துக்கு ஒரு நேரடிக் காரணமாக சாதி இருக்கிறது.
* உண்மையில், இந்து சமூகம் என்ற ஒன்று இல்லைந இருப்பதெல்லால் சாதிகளின் தொகுப்பே.
* இந்து சமூகம் என்பதே ஒரு கட்டுக்கதை என்பதைத்தான். 'இந்து' என்கிற பெயரே ஒரு அந்நிய பெயர்தான். உள்ளூர் மக்களிடம் இருந்து தம்மை இனம் பிரித்துக் காட்ட முகமதியரால் அளிக்கப்பட்ட பெயரே இந்துக்கள் என்பது. முகமதியரின் படையெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் 'இந்து' என்ற சொல்லே காணப்படவில்லை. இந்துக்களுக்கு தாங்கள் பொதுவானதொரு சமூகம் என்ற சிந்தனையே இல்லாத இருந்த காரணத்தால், தங்களுக்குப் பொதுவானதொரு பெயர் தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
* முகமதியர்கள் குரூரமானவர்கள் என்றால், இந்துக்கள் அற்பர்கள். அற்பத்தனம் குரூரத்தைவிட கேவலமானது என்று கூறுவதில் எனக்கு தயக்கமே இல்லை.
* இந்துக்களிடையே சாதி அமைப்பு வளர்ந்ததால்தான், இந்து மதம் ஒரு பரப்புரை மதமாக நீடிக்க முடியவில்லை என்பதே என் கருத்து. சாதி, மதமாற்றத்துக்குப் பொருந்தி வராத ஒன்று. நம்பிக்கைகளையும், மதக்கோட்பாடுகளையும் புகுத்துவது மட்டும் மதமாற்றத்துக்குப் போதுமானது அல்ல. மதம் மாறியவர்களுக்கு சமூக வாழ்வில் ஓர் இடத்தை உறுதி செய்வது என்பது, அதைவிட முக்கியமான பிரச்சனை. மற்ற மதத்தவர்களை தம் மதத்துக்கு மாற்ற விரும்புகிற எந்த ஒரு இந்துவையும் குழப்புகிற பிரச்சனை இதுதான்.
* மன்றங்களில் எவர் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆவது போல, சாதிகளில் யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது. சாதி சட்டப்படி, எந்த ஒரு சாதியிலும் உறுப்பினர் ஆகும் உரிமை, அந்த சாதியில் பிறந்தவருக்கு மட்டுமே உரியது. சாதிகள் சுயேச்சையானவை. புதியவர்களை சமூக வாழ்க்கையில் குறிப்பிட்ட சாதியில் சேர்த்துக்கொள்ளுமாறு - எந்த சாதியையும் நிர்பந்திக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. இந்து சமூகம் சாதிகளின் சேர்க்கையாக இருப்பதாலும், ஒவ்வொரு சாதியும் மூடப்பட்ட அமைப்பாக இருப்பதாலும் - மதம் மாறியவர்களுக்கு இந்து சமூகத்தில் இடம் இல்லை. ஆக, இந்து மதம் விரிவடையவும் மற்ற மதத்தினரை இந்து மதத்துக்குள் இழுத்துக்கொள்ளவும் தடையாக இருப்பது சாதியே. சாதிகள் இருக்கும் வரை இந்து மதத்தை பரப்புரை மதமாக்க முடியாது.
* இந்துக்கள் தங்களை மிகவும் சகிப்புத் தன்மை உடையவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இது பொய் என்றே நான் கருதுகிறேன். பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் சகிப்புத்தன்மை இல்லாமல்தான் இருக்கிறார்கள். சிற்சில சமயங்களில் அவர்கள் சகிப்புத் தன்மையோடு இருக்கக் காரணம், எதிர்ப்பதற்கான பலம் அல்லது அக்கறை இல்லாதுதான். தமக்கு இழைக்கப்படும் அவமரியாதையையும் அநீதியையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் தன்மை, இந்துக்களின் ரத்தத்திலேயே ஊறிவிட்டது.
* சூத்திரன் சொத்தைத் தேடி அலைய அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால், அதற்கு அனுமதித்தால் அவன் மற்ற மூன்று வர்ணத்தாரையும் சார்ந்து இல்லாமல் போவான். சூத்திரன் கல்வி அறிவு பெறாமல் தடுக்கப்பட்டான். ஏனென்றால், கல்வி, அறிவு பெற்று விட்டால் தன் நலன்களைப் பற்றி அவன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவான். சூத்திரன் ஆயுதந்தரித்துவிட்டால், தன்னை ஆளுகின்ற மூன்று வர்ணத்தாரின் அதிகாரத்துக்கும் எதிராக அவன் கிளர்ந்தெழுவான்.
* 'நான் ஓர் இந்து' என்று எவராவது சொன்னால், நீங்கள் அந்தப் பதிலால் திருப்தியடையந்து விடுவதில்லை. அவருடைய சாதி என்னவென்று விளக்கமாகத் தெரிந்து கொள்வது அவசியம் என்று உணர்கிறீர்கள் ஏன்? ஓர் இ்ந்துவைப் பொருத்தமட்டில், அவருடைய சாதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் - அவர் எத்தகைய ஒரு மனிதன் என்பதை உங்களால் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியாது என்கிற அளவுக்கு, சாதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
* தாக்குதலுக்கோ, தற்காப்புக்கோ சமூகத்தை ஒன்றுதிரட்ட உங்களால் முடியாது. சாதி என்கிற அஸ்திவாரத்தின் மீது எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும். முழுமை அடையாது.
* அரசாங்கத்தை எதிர்க்கிற அரசியல்வாதியைவிட, சமூகத்தை எதிர்க்கிற சீர்திருத்தவாதியே மிகவும் துணிச்சல் உள்ளவன்.
* கலப்புத் திருமணமே சாதியை ஒழிப்பதற்கான உண்மையான வழி என நான் நம்புகிறேன். ரத்தக் கலப்பு மட்டுமே 'எல்லாரும் நம்மவரே' என்கிற உணர்வை உருவாக்கும். இந்த உணர்வு ஒவ்வொருவரையும் ஆட்கொள்ளாத வரை, தன்னுடைய சாதிக்காரனைத் தவிர்த்த மற்ற எல்லோருமே அயலர்தான், அந்நியர்தான் என்கிற பிரிவினை உணர்வு - அந்நிய உணர்வு மறையாது. சாதியை தகர்த்தெறிவதற்கான வழி கலப்புத் திருமணமே. வேறு எந்த சக்தியாலும் சாதியை அழிக்க முடியாது.
* பார்ப்பனராகப் பிறந்தவன் புரட்சிக்காரன் ஆக நினைக்க மாட்டான். சமூக சீர்திருத்த விஷயங்களில் பார்ப்பனர்கள் புரட்சிகரமானவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றதே ஆகும்.
* ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கமாக இல்லை என்றாலும் கூட, அந்த நாட்டை ஆட்டிப் படைக்கும் அளவுக்கு செல்வாக்குடன் இருப்பது அறிவாளிகள்வர்க்கமே என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்கின்ற ஆற்றல், அந்த வர்க்கத்துக்கு உண்டு. அந்த வர்க்கமே மக்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழி நடத்திச் செல்லும் ஆற்றல் உள்ள வர்க்கம். எந்த நாட்டிலும் பரந்துபட்ட மக்கள் அறிவாளிகளைப் போன்ற சிந்தனையோடும் செயல்களோடும் வாழ்க்கை நடத்துவதில்லை.
* சாதிக்கோட்டையில் பிளவு ஏற்படுத்த வேண்டுமென்றால், பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் ஒரு சிறிதும் இடம் கொடுக்காத வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் வெடி வைத்தே தீர வேண்டும். ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளாலான மதத்தை அழித்தொழிக்க வேண்டும். வேறு எந்த செயலும் பயன் தராது. இதுவே என முடிவான கருத்தாகும்.
* இந்தியாவில் எல்லா தொழில்களுமே ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டவையாகத்தான் உள்ளன. பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய எல்லாருமே தத்தம் தொழிலில் திறமை உடையவர்கள் என்று நிரூபித்துக் காட்டிய பிறகே - தங்களுடைய தொழிலைச் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். தங்கள் தொழிலை நடத்தி வருகிற காலம் முழுவதும் இந்த நாட்டின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கு மட்டுமல்லாமல், தத்தம் தொழிலில் அமைந்துள்ள சிறப்புச் சட்டங்களுக்கும் கீழ்படிந்து நடக்கிறார்கள்.
* திறமை எள்ளளவும் தேவை இல்லாத ஒரே தொழில் அர்ச்சகர் தொழில் ஒன்றுதான். இந்து அர்ச்சகனி தொழிலே சட்டத்துக்கு உட்படாத ஒரே தொழிலாக இருந்து வருகிறது. அறிவு நிலையில் அர்ச்சகர் மூடனாக இருக்கலாம். உடல்நிலையில் பால்வினை நோய்களாகிய மேக நோய், வெட்ட நோய் உடையவனாக இருக்கலாம். ஒழுக்கத்தில் சீரழிந்தவனாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் அர்ச்சகன், தூய்மையான சடங்குகளை நடத்தும் இந்துக் கோயிலில் உள்ள மிகப் புனிதமான மூலஸ்தனங்களில் நுழையவும், இந்துக் கடவுள்களை வணங்கவும் தகுதி படைத்தவனாக இருக்கிறான். இந்துக்களுக்கு இடைய இது சாத்தியமாக இருப்பது எப்படி?
* அனைவருக்கும் பொதுவான ஒரு தொழிலாக அர்ச்சகர் தொழிலை ஆக்கும் நடவடிக்கை பார்ப்பனியத்தை ஒழிக்கவும், பார்ப்பனியத்தின் மறுவடிவமான சாதியை ஒழிக்கவும் துணை புரியும். இந்து மதத்தை நாசப்படுத்திய கொடிய நஞ்சு பார்ப்பனியமே. நீங்கள் பார்ப்பனியத்தை ஒழித்து விட்டால், இந்து மதத்தைக் காப்பாற்றுகிற முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
* ஒழுக்கக் குறைவானது என்று கருதப்படுகிற ஒரு தொழிலை, பரம்பரைத் தொழில் என்பதற்காக மேற்கொள்ள வேண்டுமா? பரம்பரைத் தொழிலைத்தான் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்றால், ஒருவனுடைய தாத்தா விபச்சாரத் தரகராக இருந்தால், பேரனும் அப்படியே இருக்க வேண்டும் என்றாகிறது. ஒரு பெண்ணின் பாட்டி விபச்சாரத் தொழில் ஈடுபட்டார் என்பதற்காக, அந்தப் பெண்ணும் அதையே மேற்கொள்ள வேண்டும் என்றாகிறது. என்னைப் பொறுத்த மட்டிலும், பரம்பரைத் தொழிலையே ஒருவர் மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது லட்சியம், நடைமுறைப்படுத்த முடியாத லட்சியமாகும். தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள லட்சியமும் ஆகும்.
* அப்படியே மகாத்மா சிந்தித்தாலும் உளுத்துப்போன இந்து சமூக அமைப்புக்கு முட்டுக் கொடுக்கும் வேலையில் தன் மூளையை ஈடுபடுத்துவதன் மூலம் - அவர் அறிவு விபச்சாரம் செய்பவரே ஆகிறார். ஏறக்குறைய எல்லா பார்ப்பனருமே சாதிக்கட்டுப்பாடுகளை மீறுபவர்களாக இருக்கிறார்கள். புரோகிதம் செய்யும் பார்ப்பனரை விட, செருப்பு விற்கும் பார்ப்பனர் அதிகமாகி வருகிறார்கள்.