பொறியியல் படிப்பை முடித்து விட்டு இரண்டு வருடங்கள் கழித்துதான் சென்னைக்கு வந்து வேலை தேட ஆரம்பித்தேன். எனது கல்லூரி நண்பர் காரைக்குடி கார்த்திதான் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு, கதிர் சென்னைக்கு எப்ப வருவ? என்று கேட்டுக்கொண்டே இருப்பான். இதோ விரைவில் வருகிறேன் என்று நானும் ஒவ்வொரு முறையும் கூறிக்கொண்டே இருப்பேன். பிறகு ஒருவழியாக 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னைக்கு வந்து சேர்தேன். முதலில் PHP Developer வேலைக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்தேன் HTML, CSS, JS, jQuery, Bootstrap, MySQL, PHP என ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தேன்.
ஒருநாள் சென்னை லினக்ஸ் பயனர் குழுவிலிருந்து வந்த மின்மடலில் Python Developer தேவை என்ற விபரம் இருந்தது. அது ஒரு சிறிய நிறுவனம். 5 பேர் வேலைசெய்யக்கூடிய நிறுவனம். என்னுடைய Resume ஐ அந்த நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தேன். நேர்காணலுக்கு வரச்சொல்லி அதற்கான அழைப்புக்கடிதத்தை அனுப்பி வைத்தார்கள். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஐஐடி நடித்தும் Spoken Tutorial வகுப்பில் சேர்ந்து Python கற்றிருந்தேன், அதோடு நம்ம கணியம் ஸ்ரீனிவாசன் அவர்கள் Learn Python Hardway புத்தகத்தை படிக்கச்சொல்லியிருந்தார். அதனால் ஊரில் இருக்கும் போது அந்த புத்தகத்தை படித்து வைத்திருந்தேன். இந்த இரண்டின் மூலமும் பைத்தான் மொழியைப் பற்றி அடிப்படையான விஷயங்களை கற்று வைத்திருந்தேன். அதோடு ஊரிலிருந்து வரும்போது Think Python என்ற புத்தகத்தை அச்சிட்டு எடுத்து வந்திருந்தேன்.
அந்நிறுவனதிலிருந்து முதல்நாள் அழைத்து நாளை உங்களுக்கு நேர்காணல் இருக்கிறது வந்துவிடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். விடிந்தால் காலை பதினொறு மணிக்கு நேர்காணல். முதல்நாள் இரவு உட்கார்ந்து இந்த புத்தகத்தை முழுவதுமாக படித்தேன். என்னிடம் மடிக்கணினி இருந்தாலும் படித்தவைகளைச் செய்துப்பார்க்கும் அளவிற்கு நேரமில்லை. அதனால் மேம்போக்காக படித்து வைத்தேன்.
வேலைதேடி சென்னைக்கு வந்து சந்தித்த முதல் நேர்காணலும், என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட முதல் நேர்காணலும் இதுதான். காலையிலேயே சீக்கிரமாக எழுந்திருத்து குளித்துவிட்டு பேருந்தைப் பிடித்து ஒருமணிநேரத்திற்கு முன்பாகவே நிறுவனம் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டேன். அடிக்கடி தேநீர் சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு. நிறுவனம் இருக்கும் இடத்தை தெரிந்து வைத்துக்கொண்டு அதன்பின் ஒரு தேநீர் கடையைக் கண்டுபிடித்து தேநீர் அருந்தினேன்.
அதன்பின் நிறுவனத்திற்குள் சென்றேன். முதல்நாள் இரவிலிருந்தே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்துகொண்டிருந்தது. சரியாக 10.30 மணிக்கு நிறுவனத்திற்குள் சென்றுவிட்டேன். வரவேற்பறையில் இருந்தவரிடம் என்னுடைய அழைப்புக்கடிதத்தையும், Resume ஐயும் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு என்னுடைய பெயர், தொடர்புஎண், சந்திக்கவேண்டிய நபரின் பெயர், அதற்கான காரணம் ஆகிய விபரங்களை அங்கிருந்த பதிவேட்டில் பதிவுசெய்யச் சொன்னார். அனைத்தையும் பதிவு செய்தேன். MD பதினொறு மணிக்குத்தான் வருவார். அதுவரையிலும் காத்திருங்கள் அல்லது சாப்பிடவில்லையென்றால் சாப்பிட்டு வாருங்கள் என்று சொன்னார். நான் சாப்பிட்டு வந்துவிட்டதாக பொய் சொன்னேன். நேர்காணலுக்குச் செல்லும்போதெல்லாம எனக்கு பசி உணர்வே இருப்பதில்லை.
பதினொறு மணிக்கு MD வந்தார். அதன்பின் நேர்காணல் செய்பவர்கள் என்னை அழைத்தனர். இரண்டு தேர்வாளர்கள் என்னை நேர்காணல் செய்தனர். ஒருவர் Embedded Engineer அவர் லினக்ஸ் தொடர்பான கேள்விகளைக் கேட்டார். மற்றொருவர் Python Developer அவர் பைத்தான் தொடர்பான கேள்விகளைக்கேட்டார்.
Resume இல் வலைப்பூவின் முகவரியைக் குறிப்பிட்டிருந்தேன். Embedded Engineer அதை தன்னுடைய திறன்பேசியில் பார்த்துவிட்டு. அதைப்பற்றிய விபரங்களைக் கேட்டார். பதில்கூறினேன். அடுத்து,
லினக்ஸில் கீழ்காணும் கேள்விகளைக் கேட்டார்.
What is linux?
What is kernel?
What is shell?
What is filesystem?
What are the folders available in root?
Why bin directory?
How can you do the kernel compilation?
What is ssh?
How can you share the folder with other linux OS?
What is fdisk?
What is the difference between partion and filesystem?
Can you tell some popular linux distributions?
How can you install new packages or softwares in linux?
Python Developer Python தொடர்பாக கீழ்காணும் கேள்விகளைக் கேட்டார்.
Interchange the two values without using third variable?
Please write the program for get following output?
*
**
***
****
*****
Print the odd numbers between 1 to 100?
Write any program using function.
Write any program using class and object concepts?
Convert a intger value into string.
லினக்ஸ் தொடர்பான கேள்விகள் அனைத்திற்கும் ஓரளவு பதில் கூறிவிட்டேன். பைத்தான் தொடர்பான கேள்விகளில் ஒருசில கேள்விகளுக்கான பதில் எனக்கு தெரியவில்லை. அதனால் அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாது என கூறிவிட்டேன்.
நேர்காணல் முடிந்தது. வரவேற்பறையில் காத்திருங்கள், முடிவு சொல்வார்கள். என கூறிவிட்டு இருவரும் சென்றுவிட்டனர். நேர்காணல் முடிய மதியம் 1 மணி ஆகிவிட்டது. இதற்கிடையில் மதிய உணவுவேளை என்பதால் MD சாப்பிட போய்விட்டார். என்னையும் சாப்பிட்டுவிட்டு வருமாறு வரவேற்பறையில் இருந்த அந்த பெண்மணி கூறினார். வழக்கம்போல காலையில் தேநீர் அருந்திய அந்த கடைக்குச் சென்று மறுபடியும் ஒரு தேநீர் அருந்தினேன்.
மதிய உணவை முடித்துவிட்டு MD வந்தபின்பு என்னை உள்ளே அழைத்தார்கள். MD சில கேள்விகளைக் கேட்டார். உங்களைப் பற்றிச்சொல்லுங்கள், எங்கு படித்தீர்கள்? உங்கள் சொந்த ஊர் எது? பதில் கூறினேன். சம்பள விபரங்கள், நிறுவனத்தின் நடைமுறைகள், கலாச்சாரம் ஆகியவைகளைப் பற்றி எடுத்துக்கூறினார். இதற்கு முன் Technical interview செய்த இரண்டு பேரும் உங்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் நாளைக்கே வந்து வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று MD கூறினார்.
நான் PHP in Tamil புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்ததால் அதை எழுதி முடிக்க எனக்கு ஒருவார காலம் அவகாசம் தேவைப்பட்டது. அதனால் அடுத்த வாரம் திங்கள் கிழமை வந்து சேர்ந்து கொள்ளலாமா? எனக் கேட்டேன். ம். சரி என்று MD கூறினார். நேர்காணல் முழுவதும் தமிழிலேயேதான் நடந்தது. அதனால் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவாக என்னால் பதிலளிக்க முடிந்தது. பணி கிடைத்த மகிழச்சியோடு என அறைக்கு திரும்பினேன்.
பணி கிடைத்த விபரத்தை என் அம்மாவிடம் தெரிவிக்கவில்லை. பணியில் சேர்ந்த அன்று மாலை தான் என் அம்மாவிடம் கூறினேன்.
அடுத்ததாக என்னை உருவாக்கிய அண்ணன் அன்பு அவர்களிடம் கூறினேன். என் வாழ்க்கையில் எது நடந்தாலும் நான் அலோசனை கேட்பதும், பகிர்ந்து கொள்வதும் அன்பு அண்ணனிடம்தான். எனக்கு பணி கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அவர் இன்றைக்கும் இருந்துவருகிறார். என்னை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்த்துவிட்டது. படிப்பதற்கு கல்விக்கடன் பெற்றுத்தந்தது. இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்தது. மற்றுவர்களிடம் எப்படி பழக வேண்டும் எனச்சொல்லிக்கொடுத்தது. அரசியல் கற்றுக்கொடுத்தது. என என் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது அன்பு அண்ணன்தான். அவரால்தான் நான் ஒரு தெளிவான மனிதாக உருவானேன். அவர் அமைந்துதந்த அடித்தளத்தில்தான் இன்றும் நான் நின்று கொண்டிருக்கிறேன். நான் என் வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கு நன்றிகடன் பற்றிருக்கிறேன் என்றால் அது அன்பு அண்ணனுக்குத்தான். நான் பாசமாக அவரை தலைவரே என்றுதான் கூப்பிடுவேன்.
திங்கள் கிழமை காலையில் மிக்க மகிழச்சியோடு புறப்பட்டு பணியில் சேர்ந்தேன். என்னை தேர்வு செய்த பிரபாகரனும், ஸ்ரீதரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களானார்கள். நான் பணியில் சேர்ந்த ஒருசில மாதங்களிலேயே மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீதர் நிறுவனத்தை விட்டுச் சென்றுவிட்டார். பிரபாகரன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரானார். Android Team, Embedded Team, Python Team என மூன்று குழுவினர் நிறுவனத்தில் இருந்தனர். Android Team இல் இருந்த கிருஷ்ணன், ராஜாசிங், Python Team இல் இருந்த பிரபாகரன், முத்துராஜ், வினோத் அனைவரும் சேர்ந்து நாங்கள் ஒரு குழுவாகவே இருந்தோம்.
இப்போது அனைவரும் பிரிந்து வேறுவேறு நிறுவனத்திற்குச் சென்றுவிட்டோம். இதில் நானும் பிரபாகரனும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கிறோம். ராஜாசிங் வேறு நிறுவனம். கிருஷ்ணன், தம்பி வினோத் ஆகியோர் வேறுவேறு நிறுவனத்திலும். முத்துராஜ் அண்ணாநகரில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பணி செய்கின்றனர்.
இந்த பதிவை நான் பணிக்குச் சேர்ந்த உடனையே அல்லவா எழுதியிருக்க வேண்டுமே என நீங்கள் நினைக்கலாம். நான் எதிர்கொண்ட முதல் நேர்காணல்லேயே தேர்வு செய்யப்பட்டு பணிக்கு சேர்ந்துவிட்டதால், நேர்காணல்களை அதிகம் எதிர்கொள்ளாமல் அதைப் பற்றி எழுதுவது நன்றாக இருக்காது என்பதால் எழுதவில்லை. தாமதத்திற்கான காரணம் அதுதான். இந்த பதிவைக்கூட வேறுநிறுவனத்தில் சேர்ந்து 10 மாதங்கள் கழிந்த பின்பு இப்போதுதான் எழுதுகிறேன்.
நான் பணியில் சேர்ந்து ஒருவருடம் இரண்டு மாதங்கள் கழித்து வேறு நிறுவனத்திற்கு பணிக்குச் செல்ல நணபர்கள் தயாரானார்கள் நானும் தயாரானேன். வேறு நிறுவனத்தில் பணிபுரியும்போது அறிவு விரிவடையும், நிறுவனங்களின் கலாச்சாரத்தை கற்றுக்கொள்ளலாம், புது அனுபவம் கிடைக்கும், நம்முடைய துறையில் நடைபெறும் வித்தியாசமான பணிகளை தெரிந்துகொள்ளலாம், முதலில் பணியாற்றி நிறுவனம் சிறிய நிறுவனம் என்பதால் அதைவிட அடுத்த நிலையில் உள்ள நிறுவனத்திற்குச் சென்றால் புதுமையான அனுபவங்கள் கிடைக்கும், சம்பளம் கூடுதலாக கிடைக்கும். இவையெல்லாம் வேறு நிறுவனத்திற்குச் செல்ல காரணங்களாக இருந்தது.
சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள பாதிப்பிறக்குப் பிறகு சென்னைக்குத் திரும்பிய உடன் 'சார், மார்ச் முதல்வாரத்திலிருந்து பணியிலிருந்து விலகிக்கொள்ளலாம் என இருக்கிறேன்' என்று MD யிடம் கூறினேன். காரணம் கேட்டார். சொன்னேன். சரி. அப்படியென்றால். அதிகாரப்பூர்வமாக எனக்கு விலகல் கடிதத்தை மின்னஞ்சல் செய்யுங்கள் என்றார். அனுப்பி வைத்தேன். இது பேப்பர் போடுவது என அழைக்கப்படுகிறது. விலகுவதற்கு எத்தனை மாதங்களுக்கு முன்பே பேப்பர் போட வேண்டும் என ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு அளவுகோல் இருக்கும். இது Notice Period என அழைக்கப்படுகிறது.
பொதுவாக வேறு ஒரு நிறுவனத்தில் பணி கிடைத்தப்பின்புதான், தற்போது வேலைப்பார்க்கும் நிறுவனத்தில் பேப்பர் போட வேண்டும் எனச்சொல்வார்கள். நான் வேறு ஒரு நிறுவனத்தில் பணிகிடைக்காமலையே பேப்பர் போட்டேன். ஒருநாள் கணியம் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் பேசும்போது 'வேறு வேலை கிடைப்பதற்கு முன்பே பேப்பர் போடக்கூடாது என்று அறிவுறுத்தினார்' இனிமேல் அப்படி பண்ணமாட்டேன் சார் எனக்கூறினேன்.
விலகல் கடிதம் அனுப்பிய பின்பு, வேறு நிறுவனத்திற்குச் செல்ல ஆயத்தமானேன். அப்படி செல்வதற்கு ஆயத்தமாகியபோதுதான் உண்மையிலேயே எனக்கு நேர்காணல்களைப் பற்றிய அனுபவம் கிடைத்தது. கிட்டதட்ட ஆறு நிறுவனங்களுக்கு மேல் நேர்காணல்களைச் சந்தித்தேன். இறுதியாக நண்பர் பிரபாகரன் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். இப்போது நானும் பிரபாகரனும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம்.
நான் Python/Django Developer என்பதால் அதுதொடர்பான நேர்காணல்களை எதிர்கொண்டேன்.
மாணவர்களுக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால் கல்லூரி முடித்துவிட்டு தகவல்தொழில்நுட்பத்துறையில் வேலை தேடும் மாணவர்கள் சம்பளத்தை விட வாய்ப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள். ஒருவருடமோ அல்லது இரண்டு வருடமோ பணி அனுபவம் பெற்றுவிட்டீர்களேயானால் நீங்கள் எதிர்பார்ததைவிட அதிகமானச் சம்பளம் உங்களுக்கு கிடைக்கும். அல்லது உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்பதை அடுத்துச் சேரப்போகும் நிறுவனத்திடம் கேட்டு வாங்கலாம்.
TCS, Wipro, CTS, HCL, Infosys இவைகள் மட்டுமே தகவல்தொழில்நுட்பத்துறையில் வேலைகள் வழங்கிக்கொண்டிருக்கின்றன என பலர் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். இந்த நிறுவனங்களையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் தகவல்தொழில்நுட்பத்துறையில் இலட்சக்கணக்கான பணிவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன.
படித்த உடனே வேலைக்குச் செல்ல வேண்டுமானால் கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்? என்ற கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தாலே போதுமானது உங்களுக்கு வேலை நிச்சயம்.
Aptitude, Group Discussion என்பவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். நான்கு, ஐந்து நேர்காணல்களை சந்தித்துவிட்டீர்களேயானால் அதன்பிறகு உங்களுக்கு நேர்காணல் கலாச்சாரம் என்னவென்பது தெரிந்துவிடும். அதன்பிற்கு மிகவும் தைரியமாக நேர்காணல்களை சந்திக்கலாம். உங்களுக்கு எதில் ஆர்வமோ அது தொடர்பான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். உதாரணமாக Web Developer(PHP) என்றால் PHP, HTML, CSS, JS, Bootstrap, MySQL. Python Developer என்றால் Python, Django, Flask, HTML, CSS, JS, Bootstrap போன்றவைகள்.
வேலை தேடுவதற்கு முதலில் செய்யவேண்டியது Resume தயாரித்தல். இதற்காக நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டுத்தான் ஆக வேண்டும். புதியவர்கள் தயாரிக்கும் Resume க்கும், பணி அனுபவமுள்ளவர்கள் தயாரிக்கும் Resume க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பணிஅனுபவமுள்ளவர்கள் தாங்கள் பணியாற்றிய காலங்களில் கற்றுக்கொண்ட விஷயங்கள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றை தெளிவாக குறிப்பிடுங்கள். Father name, sex, date of birth, marital status, religion, nationality, declaration, permanent address, communication address, passport number போன்றவைகளை தவிர்க்கலாம். பத்து நாட்களோ, இருபது நாட்களோ உங்கள் மனதிற்கு திருப்தியளிக்கும் வரையில் Resume ஐ தயார் செய்யுங்கள். Resume தயாரிப்பது என்பது ஒரு கலைதான். Naukri, monster போன்ற தளங்களில் பதிவுசெய்யும் போது Resume மிகவும் முக்கியமானது. வேலைக்காக யாரை தொடர்பு கொண்டாலும் அவர்கள் முதலில் கூறுவது உங்க resume ஐ அனுப்பிவைங்க தம்பி என்பதுதான். ஆகையால் Resume -ஐ நன்கு தயாரிக்க வேண்டும்.
HR peoples உங்கள் resume ஐத் தரவிறக்கம் செய்து அதைப்படித்துப் பார்த்துவிட்டுத்தான் உங்களை அழைப்பர். ஆகையால் ஒரு பணி காலியிட்டத்திற்கு உங்களைத் தேர்வுசெய்து நேர்காணல் அறையில் உட்கார வைக்க ஒரு நல்ல resume தேவை. நேர்காணல் அறையில் உட்காரும் வரை resume தனது வேலையைச் செய்யும் அதன்பின் மற்றவையெல்லாம் உங்கள் கையில்தான் உள்ளது.
Resume இல் மிகத்தெளிவாக இருக்க வேண்டியது உங்கள் தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, இணையதளம், வலைப்பூ வைத்திருந்தால் அவைகளை குறிப்பிடலாம். இல்லையென்றால் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
Resume ஐத் தயாரித்த பின்பு அதை naukri, monster, indeed போன்ற தளங்களில் பதிந்து வையுங்கள். நேரடியாக நிறுவனமோ, consultancy யிலிருந்தோ உங்களை தொடர்பு கொள்வார்கள். பெரும்பாலும் நம்மிடம் அவர்கள் கேட்கும் கேள்விகள்.
Are you looking for job?
How many years of experience you have?
What is your current CTC?
What is your expected CTC?
Reason for change the current job?
What is your role and responsibilities in current organisation?
When you available to attend the interview?
இவைகளுக்கு பதிலளித்தப்பின்பு, நேர்காணலுக்கான அழைப்புக்கடிதத்தை அனுப்பிவைப்பார்கள். அதன்பிறகு நீங்கள் நேர்காணலுக்குச் செல்ல தயாராக வேண்டியதுதான். நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பாருங்கள். அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய செய்திகள் கிடைக்கும்.
நேர்காணலுக்குச் செல்வதைப் பற்றி வேறுயாரிடமும் கூறிக்கொண்டிருக்காதீர்கள். நேர்காணல் முடிவைத் தெரிந்துகொள்ள உங்களைவிட அவர்கள் ஆர்வமாகிவிடுவார்கள். இது தேவையில்லாத பதட்டத்தை உங்களுக்கு கொடுக்கும். அதனால் பணி கிடைத்தபின்பு கூறிக்கொள்ளலாம். அதன்பிறகு நிறுவனத்தைப் பற்றி நண்பர்களிடம் விசாரிக்கலாம்.
நான் ஆறு நிறுவனங்களில் நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். பெரும்பாலும் அவர்கள் கடைபிடித்த முறைகள் இவைகள்தான். முதலில் உங்களைத் தொடர்பு கொண்டு மேற்கண்ட கேள்விகளைக் கேட்பார்கள். அடுத்து நேர்காணலுக்கான அழைப்புக்கடிதத்தை அனுப்பி வைப்பார்கள். முதல்சுற்று தொழில்நுட்பச் சுற்று, அது தாளில் நிரல் எழுதுவதாகவோ, கணினியில் நிரல் எழுதுவதாகவோ, நேரடியாக உங்களிடமே கேள்விகளை கேட்பதாகவோ இருக்கலாம். இரண்டு சுற்றுகளிலும் தேர்வாகிவிட்டீர்களென்றால், உங்களைத் தொடர்பு கொண்டு சம்பளம் தொடர்பாக பேசுவார்கள். உங்களுடைய பணிக்கு அனுபவத்தின் அடிப்படையில் ஆண்டிற்கு எத்தனை லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது என்பதை முன்பே தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு சரியான பதிலை சொல்ல முடியும்.
சம்பளம் தொடர்பாக பேசியபிறகு உங்களுக்கு offer letter அனுப்பி வைப்பார்கள். அதில் நிறுவனத்தின் விதிமுறைகள், சம்பள விபரங்கள், போன்றவைகள் இருக்கும். அந்த offer letter இல் date of joining என்று குற்றிப்பிட்டுள்ள தேதியில் நிறுவனத்தில் சேர்ந்துகொள்ள வேண்டியதுதான்.
நேர்காணலில் வெற்றி என்பது உங்களை நேர்காணல் செய்யும் நபரையும் பொறுத்துதான் உள்ளது. நீங்கள் என்னதான் கண்விழித்து படித்து ஆர்வமாகச் சென்றிருந்தாலும் கேள்வி கேட்பவர் அவருடைய புலமையை வெளிப்படுத்தும் விதமாக கேள்விகேட்க ஆரம்பித்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. இதுபோன்ற நேர்காணல்களையும் நான் சந்தித்தேன். இந்த மாதிரி நேர்காணல்களை நினைத்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நிசப்தம் மணிகண்டன் அவர்கள் கூறுவது போல 'நம்மைப் போன்று அவர்களுக்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள், அதுபோல அவர்களைப் போல நமக்கு ஆயிரம் நிறுவனங்கள் கிடைக்கும்'
என்னதான் நாம் பணி அனுபவம் உள்ளவராக இருந்தாலும் நாம் கூறும் பதிலை நேர்காணல் செய்பவர் எப்படி புரிந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்துதான் நேர்காணல் வெற்றி உள்ளது.
முதல் நேர்காணலிலேயே வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் செல்லாதீர்கள். குறைந்தது பத்து நேர்காணலிற்காவது செல்லவேண்டும் என்று மனதை தயார்படுத்திக்கொள்ளுங்கள். நேர்காணலில் தோல்வி ஏற்பட்டால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த நிறுவனம் இல்லையென்றால் வேறொரு நிறுவனம் அவ்வளவுதான்.
வேறொரு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என முடிவெடுத்துவிட்டீர்களேயானால், தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் நிறுவனத்திலிருந்து சுமூகமாக விலகுங்கள். இது உங்களுக்கு பலவகைகளில் நன்மை பயக்கும். முன்பு பணிபுரிந்த நிறுவனத்தைப் பற்றிய தரக்குறைவான விமர்சனங்களை கட்டாயம் நாம் தவிர்க்க வேண்டும்.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தமிழ் கம்ப்யூட்டர், Open Soruce For You மாத இழ்களை வாங்கிப் படியுங்கள். நமது துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு புரியும்.
பொறியியல் மாணவர்களின் தற்போதையை நிலைமை என்ன? வேலைக்கு செல்வதற்கு ஏற்ப எப்படித் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று Cognizant இல் Senior Architect ஆக பணிபுரியும் எழுத்தாளர் விநாயக முருகன் அவர்களின் இரண்டு கட்டுரையை கீழே கொடுத்திருக்கிறேன் அவசியம் படித்து மனதில் உள்வாங்கிக்கொள்ளுங்கள். இந்த இரண்டு கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களே மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கும் போதுமானது.