தமிழ்வழி கல்வியில் படித்தவர்கள் ஒரு தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படும் போது அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் தொழில்நுட்பம் தமிழிலேயே இருக்கும் பட்சத்தில் அவர்களால் அதை நன்கு புரிந்துகொண்டு எளிமையாக கற்றுக்கொள்ள முடியும். தமிழ் மொழி தெரிந்தவர்கள் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கும் போது, ஆங்கிலம் அதற்கு தடையாக இருக்கக்கூடாது. தற்போது ஆங்கிலம் அதற்கு தடையாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்நிலையில் அந்த தடையை உடைக்க என்னால் முடிந்த பங்களிப்பை இந்த புத்தகத்தின் மூலமாக அளித்திருக்கிறேன். இன்றைக்கு எதற்கெடுத்தாலும் இணையத்தை நாடிச்செல்லும் நிலைமை வந்து விட்டது. அப்படிப்பட்ட இணையத்தில் எது தொடர்பாக தமிழில் தேடினாலும் தகவல்கள் கிடைக்க வேண்டும். அந்த நிலைமையை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்.
நான் சென்னைக்கு வேலைதேடி வந்தபோது PHP Developer ஆக வேலைக்குச் செல்லவேண்டும் எனும் முடிவில் HTML, CSS, JavaScript, Bootstrap, jQuery ஆகியவைகளைப் பற்றி படித்துக்கொண்டிருந்தேன். இவைகளை படித்து முடித்துவிட்டு அதன்பிறகு PHP பற்றி படிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். கணியம் இதழின் ஆசிரியர், சென்னை லினக்ஸ் பயனர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் நான் வேலைக்குச் செல்வது தொடர்பான ஆலோசனைகளை கேட்பதற்காக. சென்னைக்கு வந்துள்ளது தொடர்பாகவும், PHP தொடர்பாக படித்துக்கொண்டிருப்பதையும் தெரிவித்தேன். அப்படியா மகிழ்ச்சி, அப்படியே PHP யைப் பற்றி கணியத்திற்கு கட்டுரைகள் எழுதிக்கொடுங்கள் என கூறி 'PHP Essentials' என்ற PDF கோப்பை அனுப்பிவைத்தார். தினமும் காலை 11-மணியிலிருந்து இரவு 7-மணி வரை ஒருவாரத்திற்கு தீவிரமாக கட்டுரைகளை எழுதி கணியத்திற்கு அனுப்பி வைத்தேன். அடுத்த ஒரு சில வாரங்களில் எதிர்பாராத விதமாக நான் Python Developer ஆக பணியில் சேர்ந்துவிட்டதால் அதன்பிறகு மீதமிருந்த ஒருசில பகுதிகளை எழுதிமுடிக்கமுடியவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து பகுதிகளையும் மொழிபெயர்த்து முடித்து கணியம் இதழிற்கு அனுப்பி வைத்தேன். அந்த அனைத்து பகுதிகளும் கணியத்தில் வெளியிடப்பட்டு, அவைகள் தொகுக்கப்பட்டு இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. PHP பற்றி கணியம் இதழில் எழுத வாய்ப்பளித்து, ஊக்கமளித்த ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், கணியம் இதழுக்கும், கணியம் குழுவினருக்கும் என மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு நல்ல நோக்கத்திற்காக பலர் இணைந்து ஒரு செயலைச் செய்யும் போது அந்த குழுவில் நாமும் இருந்தோம் என்பது எவ்வளவு பெருமையான விஷயம். அந்தவகையிலே கணியம் குழுவில் நானும் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது. கணியம் மிகப்பெரிய நோக்கத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த நோக்கத்தின் சிறிய பங்களிப்பாக PHP பற்றிய தொடர்களை கணியத்தில் எழுதினேன்.
ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். காரணம் அவர்கள்தான் இதை எழுதச்சொல்லி எனக்கு தொடர்ந்து ஆர்வமூட்டினார்கள். இல்லையென்றால் இந்த PHP தொடரை எனக்கு எழுதவே தோன்றியிருக்காது. இந்த தொடரை எழுதுவதற்கு பல வழிகளிலும் எனக்கு உதவி செய்த என்னுடைய வழிகாட்டிகள் அன்பு(எ)மணிகன்டண், அண்ணன் வை.சிதம்பரம், சோம.நீலகண்டன் ஆகியோருக்கும், சென்னையில் நான் தங்கியிருக்கும் என் அறை நண்பர்கள் கார்த்திக், வினோத், மணிமாறன், மதன், வெங்கட் ஆகியோருக்கும், அலுவலக நண்பர்கள் கிருஷ்ணன், ராஜாசிங், பிரபாகரன், வினோத், முத்துராஜ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தகத்தை தரவிறக்கம் செய்ய:
No comments:
Post a Comment