Oct 23, 2015

Karbonn A12+ திறன்பேசியும் அதன் மின்கலமும்

என்னிடம் திறன்பேசி(Smartphone) இல்லை. சாதரண Samsung Guru E1200 மாடல் கைப்பேசியைத்தான் பயன்படுத்தி வருகிறேன். என் அம்மா, தம்பி, சித்தியெல்லாம் திறன்பேசி வாங்கிகொள்ளச் சொல்லி வற்புறுத்தினாலும் நான் வாங்கிக்கொள்ளவில்லை (என் சித்தி கொடுத்த பணத்தில்தான் இந்த சாம்சங் கைப்பேசியை வாங்கினேன்). அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, ரிச்சர்ட் ஸ்டால்மனின் உரைகளையும், எழுத்துக்களையும் கேட்டதன், படித்ததன் விளைவு. இன்னொன்று, நிசப்தம் வா.மணிகண்டன் அவர்களின் கட்டுரை மற்றும் செல்லாயுதம் பதிவு. நாமும் திறன்பேசி வாங்கினால் என்ன? என்ற ஆசை எனக்குள் தோன்றிய சமயத்தில்தான், வா.மணிகண்டன் அவர்களின் கட்டுரையும் வெளிவந்தது. அந்த கட்டுரை திறன்பேசி தேவையில்லை என்று நெத்திப்பொட்டில் அடித்தது போலச் சென்னது.

தற்போது நான் பயன்படுத்தும் அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட samsung கைப்பேசி
முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்றவைகளில் எனக்கு கணக்கு இல்லை. சமூகவலைதளங்கள் நம்முடைய நேரத்தை வீணடிப்பதோடு, நம்முடைய எழுத்துக்களையும், கருத்துக்களையும் சாக்கடைக்குள் எறிந்த கல்லாக மாற்றி விடுகிறது என்பது என்னுடைய கருத்து. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் அளவிற்கு என்னுடைய தேவைகள் இல்லை. நான் கேமும் விளையாட மாட்டேன். எப்போதாவது சுடோகு விளையாடுவேன். அது நான் வைத்திருக்கும் சாம்சங் குரு போனிலேயே இருக்கிறது. மேற்கண்ட விஷயங்களுக்காகத்தான் திறன்பேசி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இணையம் இல்லையென்றால் ஸ்மார்ட் வைத்திருப்பவர்கள் அதில் என்ன செய்வார்கள்? கேம்தான் விளையாடுவார்களா? என்றுகூட நான் நினைத்துப்பார்த்ததுண்டு. மேற்கண்ட எதையுமே நாம் செய்யவேண்டிய அவசியம் இல்லையெனும் போது, நமக்கு எதற்கு திறன்பேசியெல்லாம் என நினைத்து இன்று வரையிலும் திறன்பேசி வாங்கவேயில்லை.


என் அலுவலக நண்பர் ச.பிரபாகரன் அவர்கள் புதிதாக ஒரு திறன்பேசி வாங்கினார். அதனால் அவர் தான் ஏற்கனவே வைத்திருந்த பழைய Karbonn A12+ திறன்பேசியை, நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் கதிர் என்றுச் சொல்லி என்னிடம் கொடுத்துவிட்டார். 3G இணைய இணைப்பிற்காக ஏதாவது Dongle வாங்கலாமா? என்ற யோசனையில் நான் இருந்த போது பிரபாகரன் அவர்கள் தன்னுடைய ஸ்மார்ட் போனை என்னிடம் கொடுத்தது Dongle வாங்கும் செலவையும் குறைத்தது. நண்பருக்கு நன்றி.

இணையத்திற்கென தனியாக ஒரு சிம் அட்டையை Nokia 6300 மாடல் கைப்பேசியில் போட்டு 2G இணைப்பாக பயன்படுத்தி வந்தேன். இணையத்தை இனிமேல் இந்த திறன்பேசி மூலமாகவே அணுக்கிக்கொள்வோமே, 3G வசதியுடனும் இருக்கிறது என நினைத்து, Nokia 6300 கைப்பேசியில் இருந்த சிம் அட்டையை பிடுங்கி பிரபாகரன் அவர்கள் கொடுத்த திறன்பேசியில் சொருகினேன்.

அலுவலக நண்பர்களெல்லாம் வாட்ஸ் அப்பில் ஒரு குழு உருவாக்கி அதில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வந்தார்கள். கதிர் நீங்களும் வாட்ஸ் அப்புக்கு வாங்க, எனச் சொல்லி பிரபாகரன் அவர்கள்தான் வாட்ஸ் அப் செயலியை நிறுவிக்கொடுத்தார். நண்பர்கள் பகிரும் செய்தியை நான் படிப்பேனேயொழிய, இன்றுவரை அதில் ஒரு செய்தியைக்கூட நான் பகிர்ந்து கொண்டதே இல்லை. நண்பர்கள் வாட்ஸ் அப்பில் என்ன பகிரந்து கொண்டுள்ளார்கள்? எனப் பார்ப்போமே என்று எனக்கு எப்போதாவது தோன்றினால் அப்போது மட்டும் திறன்பேசியை ON செய்து வாட்ஸ் அப் செய்திகளைப் படிப்பேன். படித்துவிட்டு திறன்பேசியை OFF செய்து வைத்துவிடுவேன். இதுபோக விடுமுறை நாட்களில் அறையில் இருக்கும்போது 3G இணைய இணைப்பை பயன்படுத்துவேன் அவ்வளவுதான்.

இதுஒருபக்கம் இருக்க நண்பர் ச.பிரபாகரன் அவர்கள் கொடுத்த Korbonn A12+ திறன்பேசியின் மின்கலம்(Battery) கொஞ்சம் கொஞ்சமாக உப்ப ஆரம்பித்தது. கொஞ்ச நாட்களிலேயே மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் தன்மையை மின்கலம் முற்றிலுமாகவே இழந்தது. 5 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது எனும் அளவிற்கு நிலையை எட்டியது. திறன்பேசியில் மாட்டவே முடியாதபடியும் உப்பிவிட்டது. ஆகையால் திறன்பேசியை தனியாகவும், மின்கலமை தனியாகவும் பிரித்தே வைத்திருந்தேன். கதிர் புதுசா ஒரு மின்கலம் வாங்கி மாட்டுங்க இல்லையென்றால் உப்பியிருக்கிற மின்கலம் வெடித்தாலும், வெடித்துவிடும் என நண்பர்கள் எச்சரித்து அறிவுறுத்தினார்கள். இது எனக்கு மேலும் பயத்தை உண்டுபண்ணியது. சரி புது மின்கலம் வாங்கிக்கொள்வோம் என நினைத்து, பழைய மின்கலத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் விசினேன்.



வீசும்போது எனக்குத் தெரியாது Karbonn A12+ திறன்பேசிக்கு மின்கலம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று. அதன்பிறகு மின்கலம் வாங்கும் படலம் தொடங்கியது. சென்னையில் முகப்பேர்  கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருக்கும் கடைகளில் நானும் எனது  கல்லூரிகால நண்பர் கார்த்தியும் ஒவ்வொரு கடையாகச் சென்று விசாரித்தோம் எந்த கடையிலும் கிடைக்கவில்லை. ஒருகடைக்காரர், சார் நானும் நீங்கதேடிக்கிட்டு இருக்கிற மின்கலத்தைத்தான் சார் தேடிக்கிட்டு இருக்கேன் இன்னும் கிடைக்கல சார், இந்த திறன்பேசிக்கு மின்கலம் தேடி அலையுறதுக்குப் பதிலா நீங்க புதிசா ஒரு திறன்பேசியையே வாங்கியிரலாம் சார் என கூறினார். முகப்பேர் கிழக்கில் ஒருக்கடைக்காரர் 350 ரூபாய் கொடுங்கசார் ஆர்டர் பண்ணி வாங்கிதர்றேன். ஆனால் ஒரிஜினல் மின்கலம் கிடைக்காது, டூப்ளிகேட்தான் சார் வரும் எனச்சொன்னார். கதிர் விலை அதிகமாக தெரிகிறது, வேறு எங்காவது தேடி வாங்கிக்கொள்வோம் வா எனச் சொல்லி கார்த்தி அழைத்து வந்துவிட்டான். அலைந்து திரிஞ்சப்பிறகு இவரிடமே ஆர்டர் கொடுத்துவிடுவுமோ என யோசித்தோம் அது வேறு கதை.

அலுவலக நண்பர்களிடம் நடந்ததைக் கூறினேன். நீங்க ரிச்சி ஸ் ரீட் போயிட்டு வாங்க கதிர் அங்கு நிச்சயம் மின்கலம் கிடைக்கும் என்று கூறினார்கள். எனக்கு ஞாயிறு மட்டும்தான் விடுமுறை ஆகையால் அங்கு செல்வதற்கெல்லாம் நேரம் கிடைக்காது. இதற்கு என்னதான் வழி என யோசித்துக்கொண்டேயிருந்தேன்.

இதற்கிடையில் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் தம்பி வினோத்குமார், அவருடைய நண்பர் செல்போன் கடை வைத்திருப்பதாக கூறினார். அவரிடமும் விசாரித்தோம். அவரும் மின்கலம் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டார். கடல்லேயே இல்லையாம் எனும் வடிவேல் நகைச்சுவைத்தான் என் ஞாபகத்திற்கு வந்துபோனது.

இறுதியாக, இணையத்தில் தேடிப்பாரப்போமே என முடிவு செய்து இணையத்தில் தேடினோம். ebay, amazon, flipkart தளங்களில் Out of stock என வந்தது. ERD நிறுவனத்தின் தளத்தில் தேடினோம் அதிலும் Out of stock என வந்தது. Shopclues தளத்தில் மின்கலம் இருப்பதாகச் சொல்லி காண்பித்தார்கள், ஆர்டர் செய்தோம். எங்களிடம் நீங்கள் ஆர்டர் செய்த மின்கலம் இல்லை, 20 நாட்கள் டைம் கொடுங்கள், வேறு இடத்திலிருந்து வாங்கி அனுப்பி வைக்கிறோம் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். மின்கலம் வேண்டாம் எனக்கூறி அவர்களுக்கு பதில் அனுப்பி வைத்தேன். Phabletkart தளத்தில் ஆர்டர் செய்தோம் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. இந்நிலையில்தான், ERD தளத்தில் micromax Q50/Q34 மாடல் மின்கலம்கள் Karbonn A12+ க்கு பொருத்தமாக இருக்கும் என போட்டிருந்தார்கள். அதனால் micromax Q50/Q34 திறன்பேசிகளுக்கான மின்கலங்களைத் தேடினோம். அதையாவது வாங்கி மாட்டிவிடுவுமே எனும் ஆசைதான். ebay தளத்தில் சில micromax Q50/Q34 திறன்பேசிகளுக்கான மின்கலன்கள் கிடைத்தது. நேர், எதிர் மின்முனைகளில் மாற்றம் இருப்பதுபோலத் தோன்றுகிறது எனச் சொல்லி கடைசியில் அதையும் வாங்கவில்லை.

ஒரு போனுக்கு மின்கலம் வாங்குறது இவ்வளவு கஷ்டமான காரியமா? என நினைத்துக்கொண்டே, மின்கலம் இல்லாமல் செல்போனை பயன்படுத்த முடியாதா? என இணையத்தில் தேடிப்பார்த்தேன். instructable தளத்தில் ஒரு கட்டுரை இருந்தது. அதைப் படித்து நன்கு உள்வாங்கிக்கொண்டேன், தேடிபார்ப்போம் எதுவும் கிடைக்கவில்லையென்றால் இதுல சொல்லியிருக்கிறது மாதிரி செய்துவிட வேண்டியதுதான் என முடிவு செய்து விட்டு மின்கலம் தேடுவதை சில வாரங்களுக்கு ஒத்திவைத்தேன்.

அதன்பிறகு மறுபடியும் மின்கலத்தை தேடும் படலத்தைத் தொடங்கினேன். அப்பொழுது mAh என்றால் என்ன? என்பது பற்றி இணையத்தில் சில கட்டுரைகளைப் படித்தேன். அவ்வாறு படித்துக்கொண்டிருக்கும்போது, அந்த தளத்தில் சமமான voltage உடைய, அதிகமான mAh அளவுகொண்ட மின்கலத்தை திறன்பேசிக்கு பயன்படுத்தலாமா? என ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். பயன்படுத்தலாம் என பதில் கூறியிருந்தார்கள். இந்த பதில் எனக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது.

நண்பர் பிரபாகரன் கொடுத்த Karbonn A12+ திறன்பேசிக்கான மின்கலம் 3.7 voltage, 1400mAh அளவுள்ளது. ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. என்னிடம் உதிரியாக Nokia 6300 மற்றும் Samsung போன்கள் இருந்தது. அந்த இரண்டு போன்களின் மின்கலம்களும் 3.7 voltage 800mAh அளவுள்ள மின்கலன்கள். அதாவது சம அளவுடைய voltage, குறைவான அளவு கொண்ட mAh. நாம ஏன் இந்த இரண்டு போன்களின் மின்கலன்களில் எதையாவது ஒன்றை இதற்கு பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று தோன்றியது? Karbonn A12+ மின்கலமும், என்னிடம் இருந்த இரண்டு மின்கலன்களும் 3.7 voltage கொண்டது. mAh தான் வேறுவேறு. மறுபடியும் ஒரு சந்தேகம் வந்தது 1400mAh மின்கலத்திற்கு பதிலாக 800mAh அளவுள்ள மின்கலத்தைப் பயன்படுத்தலாமா? என்று. இது தொடர்பாக இணையத்தில் தேடிப்பார்த்தேன். தாரளமாக பயன்படுத்தலாம் என பதில் கிடைத்தது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வெவ்வேறு அளவு voltage கள் கொண்ட மின்கலங்களை பயன்படுத்தக்கூடாது. 3.7 மின்கலத்திற்குப் பதிலாக அதைவிட அதிகமான voltage உடைய மின்கலங்களை பயன்படுத்தக்கூடாது. அப்படி மீறி பயன்படுத்தினால் திறன்பேசியின் mother board எரிந்துவிட வாய்ப்பிருக்கிறது.

இங்கு நான் ஒரு செய்தியை சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். செல்போனின் மின்கலமில் இருக்கும் mAh என்பது, எவ்வளவு நேரத்திற்கு போனுக்கு மின்சாரத்தைக் கொடுக்கமுடியும் என்பதைக்குறிக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 100mAh. உதாரணமாக 800mAh மின்கலம் என்றால் 8-மணி நேரமும், 1400mAh என்றால் 14 மணிநேரமும் தாக்கு பிடிக்கும். இதற்கு, தண்ணீர் தொட்டியை உதாரணமாக எடுத்துக்கொண்டீர்களேயானால் voltage, mAh இரண்டின் வித்தியாசம் புரியும். அதாவது, தண்ணீர் எவ்வளவு அழுத்தத்துடன் வெளியேறும் என்பது voltage, எத்தனை லிட்டர் தண்ணீரை தொட்டியால் சேமித்து வைக்க முடியும் என்பது mAh. அடுத்து பொதுவாக மின்கலம்யென்றாலே +(நேர்), -(எதிர்) என்று இரண்டு முனைகள்தான் இருக்கும். ஆனால் கைப்பேசி மற்றும் திறன்பேசிகளின் மின்கலன்களில் மூன்று முனைகள் இருக்கிறது. அது என்னவென்றால் ஒன்று நேர்மின்முனை, இரண்டாவது எதிர்மின்முனை, மூன்றாவதாக இருப்பது மின்கலத்தின் வெப்பத்தை தெரிந்துகொள்ள. அதாவது நடுவில் இருக்கும் முனை. வலது மற்றும் இடது புறமாக இருப்பது நேர், எதிர் முனைகள்.

சரி, Korbonn A12+ திறன்பேசிக்கு மாற்று வழியில் மின்கலம்யை எப்படி பொருத்துவது என கண்டுபிடிச்சாச்சு, அதற்கு போதுமான தகவல்களையும் திரட்டியாச்சு. அப்புறம் என்ன Operation ஐ ஆரம்பித்து விட வேண்டியதுதானே. எல்லா தகவல்களையும் திரட்டி வைத்துக்கொண்டு ஒருநாள் Operation ஐ ஆரம்பித்தேன்.

நான் வேலை பார்க்கும் நிறுவனம் Embedded அடிப்படையிலான நிறுவனம், ஆகையால் soldering iron, glue gun, wire cutter, multimeter, insulation tape, wire என அனைத்தும் அலுவலகத்தில் இருக்கும். எனக்கு சின்னவயசுலேயிருந்தே electrician வேலைகள் தெரியும்(விளம்பரம்: எங்க வீட்டிற்கான wiring வேலைகளை நான்தான் செய்தேனா பார்த்துக்கொள்ளுங்களேன்.), என்பதால் soldering செய்வது, multimeter ஐ வைத்து சோதித்துப் பார்ப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் ஓரளவிற்கு ஞானம் உண்டு. மின்கலம் Operation செய்ய இந்த திறமைகள் உதவி புரிந்தன.

முதலில் சாம்சங் மின்கலத்தைத் தான் பயன்படுத்திப் பார்த்தேன் வேலை செய்யவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. விட்டுவிட்டேன். மனம் தளர்ந்துவிடாமல் Nokia வில் இருந்த ERD மின்கலம்யை பயன்படுத்திப் பார்த்தேன். கிடைத்தது வெற்றி!




இதுபோன்ற நிலைமை உங்களுக்கும் வந்தால், மேலே சொன்ன மாற்று வழிகளில் முயற்சிக்கலாம். தயவுசெய்து Electronics ஐ பற்றிய அடிப்படை தெரியாதவர்கள் இதை செய்து பார்க்க வேண்டாம். Electronics தெரிந்த உங்கள் நண்பர்களிடம் கொடுத்து செய்யச்சொல்லுங்கள். +, - இரண்டும் short ஆகும் பட்சத்தில் மின்கலம் வெடித்துவிடும். உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம். கவனம் தேவை.

நீங்கள் ஏன் கைப்பேசியை பயன்படுத்துவதில்லை? எனும் கேள்விக்கு Richard Stallman அவர்கள் கூறிய பதில்
Because cell phones can track my location or my conversation with anyone. Most cellular phones, even if they are not smart phones, do have a processor running software and that (proprietary) software is malware, because it will send information about its users’ locations on remote command — and it has a back-door, so it can be remotely converted into a listening device. Almost all software has bugs — but this software is itself a bug. 

மேற்கோள்கள்:
http://opensourceforu.efytimes.com/2012/03/rms-interview-richard-stallman-freedom-android-amazon-facebook-steve-jobs/

Oct 17, 2015

லினக்ஸ் இல்லையென்றால் உலகமே இயங்காது


லினக்ஸ் கருனியினுடைய(kernel) 24-ஆவது பிறந்தநாளையொட்டி World Without Linux எனும் Animation தொடரை Linux foundation வெளியிட்டுள்ளது. இணையத்தை பயன்படுத்தாத ஆட்களே இல்லை எனச் சொல்லலாம், இணையம் இல்லையென்றால் உலகமே ஸ்தம்பித்து போய்விடும் என்கின்ற அளவிற்கு இணையம் என்பது நமது அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது. உலகின் 96% இணைய வழங்கிகளில்(web servers) லினக்ஸ் இயங்குதளம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் எண்ணிலடங்கா கருவிகள் லினக்ஸை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. லினக்ஸ் இல்லையென்றால் இணையமே இல்லை. ஏன் உலகமே இல்லை என்றுகூடச் சொல்லலாம. இந்த தொடரின் முதல் பகுதி இணையத்தில் லினக்ஸின் பங்கு என்ன? என்பதைப் பற்றி கூறுவதாக உள்ளது. முதல் தொடரை  Amelia Lorenz அவர்கள் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். அடுத்தடுத்த தொடர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து வெளியிடப்படும். தொடரை கண்டுகளிக்க World Without Linux செல்லவும்.

இணைப்புகள்:

Oct 10, 2015

எளிய தமிழில் PHP

PHP பற்றி  நான் கணியம் இதழில் எழுதிய அனைத்து தொடர்களையும் இங்கு தொகுத்து கொடுத்துள்ளேன்.

அறிமுகம் - பகுதி - 0
பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4
பகுதி - 5
பகுதி - 6
பகுதி - 7
பகுதி - 8
பகுதி - 9
பகுதி - 10
பகுதி - 11
பகுதி - 12
பகுதி - 13
பகுதி - 14
பகுதி - 15
பகுதி - 16
பகுதி - 17
பகுதி - 18
பகுதி - 19
பகுதி - 20
பகுதி - 21
பகுதி - 22

நான் சென்னைக்கு வேலைதேடி வந்தபோது PHP Developer ஆக  வேலைக்குச் செல்லவேண்டும் எனும் முடிவில் HTML, CSS, JavaScript, Bootstrap, jQuery ஆகியவைகளைப் பற்றி  படித்துக்கொண்டிருந்தேன். இவைகளை படித்து முடித்துவிட்டு அதன்பிறகு PHP பற்றி படிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். கணியம் இதழின் ஆசிரியர், சென்னை லினக்ஸ் பயனர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் நான் வேலைக்குச் செல்வது தொடர்பான ஆலோசனைகளை கேட்பதற்காக. சென்னைக்கு வந்துள்ளது தொடர்பாகவும், PHP தொடர்பாக படித்துக்கொண்டிருப்பதையும் தெரிவித்தேன். அப்படியா மகிழ்ச்சி, அப்படியே PHP யைப் பற்றி கணியத்திற்கு கட்டுரைகள் எழுதிக்கொடுங்கள் என  கூறி 'PHP Essentials' என்ற PDF கோப்பை அனுப்பிவைத்தார். தினமும் காலை 11-மணியிலிருந்து இரவு 7-மணி வரை ஒருவாரத்திற்கு தீவிரமாக கட்டுரைகளை எழுதி கணியத்திற்கு அனுப்பி வைத்தேன். அடுத்த ஒரு சில வாரங்களில் எதிர்பாராத விதமாக நான் Python Developer ஆக பணியில் சேர்ந்துவிட்டதால் அதன்பிறகு மீதமிருந்த ஒருசில பகுதிகளை எழுதிமுடிக்கமுடியவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து பகுதிகளையும் மொழிபெயர்த்து முடித்து கணியம் இதழிற்கு அனுப்பி வைத்துவிட்டேன். இப்பொழுது கணியம் இதழில் அனைத்து பகுதிகளும் வெளியிடப்பட்டுவிட்டது. PHP பற்றி கணியம் இதழில் எழுத வாய்ப்பளித்து, ஊக்கமளித்த ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், கணியம் இதழுக்கும் என மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Oct 3, 2015

இணையதளங்களில் இருக்கும் ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்வது எப்படி?

கூகுள் மொழிபெயர்ப்பு வசதியை அனைவரும் அறிந்திருப்பீர்கள். எனக்கு ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதபோதெல்லாம் கூகுளின் இந்த வசதியைத்தான் பயன்படுத்துவேன். அலுவலகத்தில் பணி நேரத்தில் நிறைய படிக்க வேண்டி இருக்கும். இணையத்திலேயே அவற்றையெல்லாம் படித்து விடுவேன். இன்றைக்கு இணையம்தான் எல்லாமே என்று ஆகிவிட்டது. கருவாடு வாங்குவதிலிருந்து, காயலாங்கடை பொருள் வரையிலும் அனைத்தும் இணையத்திலேயே கிடைத்து விடுகிறது.

இணையத்தில் படிக்கும் படிக்கும் போது ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாத போது அந்த வார்த்தையை பிரதியெடுத்து, https://translate.google.com/ தளத்தினுள் ஒட்டி அர்த்தம் தெரிந்து கொள்வதுதான் என்னுடைய பழக்கமாக இருந்து வந்தது. இது எனக்கு கொஞ்சம் அசௌகரியமாகப்பட்டது. அதனால் நான் அதிகமாக விரும்பி பயன்படுத்தும் நெருப்புநரி உலாவியில்(Mozilla Firefox Browser) இதற்கென ஏதாவது addons இருக்கிறதா எனத்தேடிப் பார்த்தேன். addons இருந்தது.

இந்த addons ஐ நிறுவிக்கொள்வதினால் என்ன நன்மையென்றால், நாம் உலாவியில் இணையதளங்களை படித்துக்கொண்டிருக்கும் போது, ஏதாவது ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லையெனில் அந்த வார்த்தையையோ அல்லது வரியையோ தேர்வு செய்து வலது சொடுக்கி(Right Click) 'Translate selection with Google Translate' என்பதைச்சொடுக்கினால் நேரடியாகவே அந்த வாரத்தைக்கான தமிழ் அர்த்தத்தை கொடுத்து விடுகிறது. பார்க்க படங்கள் 1 மற்றும் 2.

படம் - 1
படம் - 2

நிறுவும் முறை:

https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-translator-for-firefox/?src=ss முகவரிக்குச் செல்லுங்கள் Add to firefox எனும் பொத்தானை சொடுக்குங்கள். Restart Firefox கேட்டால் அதை அனுமதியுங்கள்.

படம் - 3
கூகுள் நிறைய மொழிகளுக்கு இந்த வசதியை அளித்திருப்பதால், எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யவேண்டும் என்பதை சொல்ல வேண்டும். அதற்கு Firefox உலாவியின் வலது மேல் மூலையில் 'T' எனும் குறியீட்டுடன் இருக்கும் 'Google Translate addon' உடன் இருக்கும் கீழ்நோக்கியிருக்கும் முக்கோணகுறியீட்டை செடுக்கி 'Options' என்பதை சொடுக்குங்கள்.

அதில் 'Language of translation' என்பதில் Tamil(தமிழ்) என்பதையும், 'Always the selected text' என்பதையும் தேர்வு செய்யுங்கள். படம் - 3 ஐ பார்க்கவும்.

அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் இணையத்தில் ஏதாவது ஆங்கில தளங்களை பார்த்து அல்லது படித்துக்கொண்டிருக்கும்போது அதிலிருக்கும் ஏதாவது ஒரு வாரத்தைக்கு அர்த்தம் தெரியவில்லையெனில் வார்த்தையை தேர்வு செய்து, வலது சொடுக்கி(Right Click) 'Translate selection with Google Translate' என்பதை கொடுங்கள். உங்களுக்கு அந்த வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் கிடைக்கும்.