Sep 6, 2015

கணினி மற்றும் லினக்ஸ் மீது எனது காதல் - 1

குறிப்பு: இது முழுக்க முழுக்க என்னோட சொந்த கதை. என்னோட வாழ்க்கையின் பயணத்தை பதிவு செய்து விட வேண்டும் எனும் ஆவலில் எழுதப்பட்டது.

நான் லினக்ஸை நோக்கி வந்தது எப்படி? என்பதைப் பற்றி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்துவந்தது. அதற்கான தருணம் இப்பொழுதுதான் வாய்த்திருக்கிறது. நான் பின்னவாசல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த பின் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கவில்லை. ஐ.டி.ஐ யில் எலக்ட்ரீசியன் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எங்க தாத்தாதான் என்னை ஐ.டி.ஐ படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். நான் பொறியியல் வரையிலும் படிப்பதற்கும், இப்பொழுது எம்.பி.ஏ படித்து முடித்து இருப்பதற்கும் அவர்தான் காரணம்.

எங்கள் குடும்பத்திற்கு எல்லா காலங்களிலும் மிகவும் உறுதுணையாக இருந்துவரும் கிருஷ்ணன் அவர்களின் கடைசி பையன் ரமேஷ் அவர்கள் அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில்(பாலிடெக்னிக்) E.C.E டிப்ளமோ படித்துமுடித்து விட்டு அறந்தாங்கியில் இருக்கும் பாரி சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார். என் அப்பாவிடம் அவர்தான் கதிரை ஐ.டி.ஐ படிக்க வைப்பதைவிட டிப்ளமோ படிக்கவைக்கலாம் என ஆலோசனை கூறினார். அவரே பாலிடெக்னிக் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தையும், ஐ.டி.ஐ (அரசினர் தொழிற்பயிற்சி மையம், புதுக்கோட்டை) யில் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தையும் வாங்கி வந்து அவர்கைப்படவே பூர்த்தி செய்து கொடுத்தார். பாலிடெக்னிக், ஐ.டி.ஐ இரண்டிலும் சேர்வதற்கான அழைப்புக்கடிதம் வந்தது. ஐ.டி.ஐ படிக்க வேண்டாம் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிக்கலாம் என முடிவு செய்து, என் அப்பா அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் சேர்த்து விட்டார்.

எலக்ட்ரீசியன் வேலையின் மீது இருந்த ஆர்வத்தால் பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் பத்தாம் வகுப்பில் பெற்றிருந்த மதிப்பெண் காரணமாக E.C.E கிடைக்கவில்லை. கணினி அறிவியல் துறையைத் தவிர மற்ற துறையில் உள்ள இடங்கள் அனைத்தும் காலியாகிவிட்டது. அதனால் கணினி அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். டிப்ளமோவில் முதல்வருடத்தில் 11-தாள்கள் இருந்ததால் படிக்க மிகவும் சிரமமாக இருந்தது. முதல்வருட படிப்பில் துறைரீதியான தாள்கள் எதுவும் இல்லை. ஆகையால் ஏதோ வெறுமையாக இருந்தது. இரண்டாம் ஆண்டிலிருந்துதான் எனக்கு கணினி அறிவியில் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. முதல்வருடத்தில் பதினொறு தாள்களிலும் நான் தேர்ச்சி பெற்றிருந்தேன். இந்த வெற்றி எனக்கு அதிகமான தன்னம்பிக்கையை கொடுத்தது. இரண்டாம் ஆண்டின் முதல்நாள் கணினி அறிவியல் துறையின் துறைத்தலைவர் ரவிக்குமார் அவர்கள் எங்களிடம் அறிமுக உரையாற்றினார். அந்த உரை எனக்கு மேலும் கணினி அறிவியல் துறையின் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.

என்னோட சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள சித்தாதிக்காடு கிராமம், எங்க ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் மணக்காடு ஊர் உள்ளது. சுரேஷ் அண்ணன் மணக்காட்டிலிருந்து சொரண்க்காடு வந்து அறந்தாங்கியில் இருக்கும் எங்கள் கல்லூரிக்கு வருவார். நான் இரண்டாமாண்டு படித்தபோது அவர் மூண்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். நானும் அவரும் ஒரே பேருந்தில்தான் கல்லூரிக்கு வருவோம், கல்லூரி விட்டுச் செல்வோம். பேருந்தில்தான் அவர் எனக்கு அறிமுகமானார்.

கம்யூட்டரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வது எப்படி அண்ணே? என்று நான் அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர் 'தமிழ் கம்ப்யூட்டர்' என்று ஒரு இதழ் மாதமிருமுறை வருகிறது. அதை தவறாமல் வாங்கிப்படி. அதுபோதும் உனக்கு. அந்த இதழ் மூலமாக நீ நிறைய தெரிந்துகொள்ளலாம், என்று கூறினார்.

எனது கல்லூரி வாழ்க்கையில் திருப்புமுனையை 'தமிழ் கம்ப்யூட்டர்' இதழ்தான் எற்படுத்தியது. அதன்பிறகு அந்த இதழை தவறாமல் வாங்கிப்படித்தேன். ஐந்து ஆண்டுகள் சந்தாதார்ராகவும் இருந்து வந்தேன். அறந்தாங்கி பேருந்து நிலையத்திலேயே அந்த இதழ் கிடைத்ததால், தவறாமல் வாங்கி படித்தேன். இரண்டாமாண்டு முடிந்து மூன்றாமாண்டு வந்தது, மூன்றாமாண்டின் இறுதிப்பருவத்தில் Elective தாள் படிக்க வேண்டும். மூன்றுதாள்கள் கொடுப்பார்கள் அதில் ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அந்த மூன்று தாள்களில் 'Linux Installation and Administration' என்ற ஒருதாள் இருந்தது. எங்கள் துறைத்தலைவர் ரவிக்குமார் சார் அவர்கள் லினக்ஸை Elective ஆக தேர்வு செய்தார்.

இங்குதான் என்னோட லினக்ஸ் வாழ்க்கை ஆரம்பமானது. லினக்ஸைப் பற்றி எங்கள் துறைத்தலைவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதால், அவரே லினக்ஸ் பற்றி நடத்தினார். எங்கள் துறைத்தலைவர் ரவிக்குமார் சார் எதைப்பற்றி நடத்தினாலும் மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும்தான் நடத்துவார். எனக்கு கணினியில் நல்ல அடித்தளத்தை அமைத்துதந்தது துறைத்தலைவர் ரவிக்குமார் சார்தான். லினக்ஸைப் பற்றி மிகவும் விரிவாகவே நடத்தினார். லினக்ஸிற்கு ஆய்வகத்தாள்(Lab) ஒருபாடமாக இருந்தது. அது லினக்ஸைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளவதற்கு ஏதுவாக அமைந்தது.

ஒவ்வொரு மாணவரும் ஆய்வகத்தில் லினக்ஸை நிறுவிதெரிந்துக்கொள்ள முழு சுதந்திரம் கொடுத்தார் எங்கள் துறைத்தலைவர். நான் முதன்முதலாக நிறுவிப்பார்த்த லினக்ஸ் Redhat, விண்டோஸ் எக்ஸ்பி உச்சத்தில் இருந்தகாலம். விண்டோஸ் எக்ஸ்பியிலேயே இரண்டு ஆண்டுகள் பழிகிய எங்களுக்கு Redhat இன் தோற்றம் பிரமிப்பாக இருந்தது.

அந்த நேரத்தில் தமிழ்கம்யூட்டர் இதழில் லினக்ஸைப் பற்றிய ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. லினக்ஸில் விண்டோஸின் பார்ட்டிசியன்களை அணுகுவது கொஞ்சம் சிரமமானது என எங்கள் துறைத்தலைவர் கூறியிருந்தார். தமிழ்கம்ப்யூட்டர் இதழில் 'விண்டோஸ் பார்ட்டிசியன்களை லினக்ஸில் திறப்பது எப்படி?' என்ற ஒரு கட்டுரை வந்தது. அதில் சொல்லப்பட்டிருந்ததை ஆய்வகத்திற்குச் சென்று நானும் என்னுடையை நண்பர் ஆலங்குடி தினேஷும் செய்துபாரத்தோம்.

விண்டோஸ் பார்ட்டிசியின் லினக்ஸில் தெரிந்தது. எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதை நானும் எனது நண்பனும துறைத்தலைவர் ரவிக்குமாரிடம் சென்று கூறினோம். எங்களை பாராட்டினார் துறைத்தலைவர். இது மேலும் லினக்ஸ் மீது ஆர்வத்தை தூண்டியது.

==தொடரும்==

No comments: