Jun 19, 2015

உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவுவதற்கு முன், MD5SUM ஐ சரிபார்த்துக்கொள்ளுங்கள்

உபுண்டு இயங்குதளத்தை நிறுவுவதற்கு முன், இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்த ISO கோப்பினை துல்லியமாக தரவிறக்கம் ஆகியிருக்கிறதா என ஒருமுறை சோதித்துப் பார்த்துக்கொள்வது வேண்டும்.

ஏன் ISO கோப்பினை சரிபார்க்க வேண்டும்?
ஒருவேளை ISO கோப்பு சரியாக தரவிறக்கம் ஆகாமல்  சிதிலமடைந்திருந்தால் உபுண்டு இயங்குதளத்தை நிறுவிய பின் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதில் முதல் பிரச்சினை என்னவென்றால், உபுண்டுவை நிறுவிய பின் பயனர் பெயரையும் அதற்கான கடவுச்சொல்லையும் நீங்கள் சரியாக உள்ளீடு செய்தாலும், உபுண்டு இயங்குதளத்திற்குள் செல்லாமல் பயனர் பெயரும், கடவுச்சொல்லும் தவறு என சொல்லிக்கொண்டே இருக்கும். இதுபோன்ற பிழையை நானும் ஒரு முறை  சந்தித்து இருக்கிறேன். ஆகையால் இந்த பதிவில் உபுண்டு இயங்குதளத்தின் ISO கோப்பினை தரவிறக்கம் செய்த பின், அது சரியாக தரவிறக்கம் தரவிறக்கம் ஆகியிருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது? என்று பார்க்க போகிறோம். ஏற்கவே உபுண்டுவைப் பயன்படுத்திக்கொண்டுருப்பவர்கள் இந்த பதிவை படித்துக்கொள்ளவும்.
இந்த கட்டுரையில் சொல்லப்படும் வழிமுறைகள் முதன்முறையாக உபுண்டு இயங்குதளத்தை நிறுவ இருப்பவர்களுக்கானது. அதாவது விண்டோஸின் தொல்லைகளிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்து, உபுண்டுவை பயன்படுத்த வேண்டும் எனும் தீராத ஆர்வத்தால் விண்டோஸ் இயங்குதளம் இருக்கும் கணினியில் உபுண்டுவை நிறுவ நினைப்பவர்களுக்கானது.

எப்படி ISO கோப்பினை சரிபார்ப்பது? வழிமுறைகள் என்ன?
லினக்ஸ் இயங்குதளமாக இருந்தால் md5sum எனும் கட்டளையைக் கொண்டு ISO கோப்பின் md5sum எண்ணினை எளிமையாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் விண்டோஸைப் பொறுத்தமட்டிலே நாம்தான் அதற்கான மென்பொருளை நிறுவி அதன்பிறகு md5sum ஐக் கண்டுபிடிக்க வேண்டும்.

முதன்முறையாக உபுண்டுவை நிறுவ நினைப்பவர்கள் அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளத்திலிருந்துதான் உபுண்டு லினக்ஸையே தரவிறக்கம் செய்தாக வேண்டும். ஆகையால் md5sum எண்ணினை கண்டுபிடிக்க வேண்டுமென்றாலும் விண்டோஸைப் இயங்குதளத்தைப் பயன்படுத்தித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆகையால் இந்த வழிமுறைகள் அனைத்தும் விண்டோஸிற்கானது.

சரி வழிமுறைகள் என்னவென்று பார்ப்போமா?
இந்த தளத்திற்குச் சென்று winMd5Sum செயலியை தரவிறக்கம் செய்யவும். winMd5Sum செயலியை விண்டோஸ் இருக்கும் கணினியில் நிறுவவும். winMd5Sum செயலியை திறக்கவும்.

File Name என்பதில் தரவிறக்கம் செய்த உபுண்டுவின் ISO கோப்பினை தேர்வு செய்து Open கொடுக்கவும்.சிறிது நேரம் காத்திருக்கவும். winMd5Sum செயலி MD5SUM ஐக் கணக்கிட்டு MD5 Sum எனும் பகுதிக்குள் காட்டும்.

இப்பொழுது நாம் தரவிறக்கம் செய்த கோப்பின் MD5SUM எண்ணை கண்டுபிடித்துவிட்டோம். இதை உபுண்டுவின் இயங்குதளத்தில் இருக்கும் எண்ணுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமல்லவா? அதற்காக UbuntuHashes தளத்திற்கு செல்லவும். நீங்கள் தரவிறக்கம் செய்த உபுண்டுவின் பதிப்பிற்கான md5 Hash -னைக் copy செய்து, winMd5Sum செயலியின் Compare எனும் பகுதியில் paste செய்யவும். Compare எனும் button ஐ அழுத்தவும்.கோப்பு சரியாக தரவிறக்கம் ஆகியிருந்தால் 'MD5 Check Sums are the same' எனும் செய்தி கிடைக்கும்.
அப்படியென்றால் உபுண்டு துல்லியமாக தரவிறக்கம் ஆகியிருக்கிறது என்று அர்த்தம். 'MD5 Check Sums are different' எனும் செய்தி கிடைத்தால். துல்லியமாக தரவிறக்கம் ஆகவில்லை, பிழைகளோடு கோப்பு இருக்கிறது என்று அர்த்தம். துல்லியமாக தரவிறக்கம் ஆகியிருந்தால் நீங்கள் உபுண்டுவை நிறுவும் வேலையை ஆரம்பிக்கலாம். துல்லியமாக தரவிறக்கம் ஆகவில்லையென்றால் நீங்கள் மறுபடியும் உபுண்டுவை முதலிலிருந்து தரவிறக்கம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

நன்றி:
இந்த பதிவில் போடப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் நண்பர் எம்.கிருஷ்ணன் அவர்களின் மடிக்கணினியிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி கிருஷ்ணன்.

இந்த பதிவை எழுதியதற்கு தூண்டுகோலாக இருந்த கவிஞர்.தணிகை அவர்களுக்கும், என்னையும் எனது தளத்தினையும் கவிஞர் தணிகை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்த நண்பர் செல்வகுமார் அவர்களுக்கும் நன்றி.
உதவிய தளங்கள்:

2 comments:

Unknown said...

மிகவும் உபயோகமான , அவசியமான தகவல். எளிதில் புரிய்ம்படி ஸ்க்ரீன் ஷாட்க்ளுடன் விளக்கியமை மிக்க நன்றி.
எஸ். `நாகராஜன்

இரா.கதிர்வேல் said...

நன்றி சார்.