Dec 7, 2013

Grub Error ஐ சரிசெய்தது எப்படி? ஒரு அனுபவம்


இந்த பதிவை ஒரு முறை படித்து விடுங்கள் அப்பொழுதுதான்  இனிமேல் சொல்லப்போகும் விஷயங்கள் உங்களுக்கு புரியும்.

பிரச்சனை என்ன?
ஒரு கணினியில் இரண்டு வன்வட்டுக்கள் இருக்கிறது. அவைகள் முறையே 80 GB  மற்றும் 40 GB. 80GB Hard Disk ல் எந்த இயங்குதளமும் இல்லை. 40 GB Hard Disk ல் உபுண்டு இயங்குதளம் இருக்கிறது. அதுபோல 80GB Hard Disk ல் ஏற்கனவே இருந்த உபுண்டு இயங்குதளமும் அதன் பார்ட்டிசியன்களும்(root, boot, home and swap) நீக்கப்பட்டுவிட்டு வெறும் MBR(Master Boot Record) மட்டும்தான் இருக்கிறது.



இயங்குதளத்தை(Operating System) கணினி எந்த கருவியிலிருந்து இயக்க வேண்டும் என்பதை BIOS தான் முடிவு செய்கிறது. BIOS Settings ல் நாம் எந்த முறையில் அமைத்திருக்கிறோமோ அதுபடிதான் ஆரம்பிக்கும். அதனால் நான் என்ன செய்தேன் என்றால் Boot Device Priority யில் 1.Hard Disk 2.Hard Disk 3.CD Drive என அமைத்து விட்டு, கணினியில் இரண்டு Hard Disk கள் இருப்பதால் எந்த Hard Disk லிருந்து Boot ஆக வேண்டும் என்பதை BIOS க்குச் சென்று Advanced BIOS Feature -ல் Hard Disk Boot Priority யில் 40GB Hard Disk (உபுண்டு இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள) ஐ முதலாவதாக அமைத்தேன். மாற்றங்களை F10 Key ஐ அழுத்தி சேமித்தேன். கணினியை மறு தொடக்கம் செய்துவிட்டு ஆரம்பித்தால் எந்த பிரச்சனையுமில்லாமல் GRUB Menu கிடைத்தது அதோடு உபுண்டு இயங்குதளமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்தது. அந்த இயங்குதளம் இல்லாத 80GB Hard Disk ல் உள்ள அனைத்து பார்ட்டிசியன்களின் தகவல்களையும் அணுக முடிந்தது.





எல்லாம் நல்லாதானே போயிக்கிட்டு இருக்குனு நீங்க நினைக்கலாம். ஆனால் பிரச்சனையின் உச்சக்கட்டமே கணினியினை Shutdown செய்து விட்டு ஆரம்பித்த உடன்தான் ஆரம்பித்தது. கணினியினை Shutdown செய்து விட்டு ஆரம்பித்த பொழுது  Hard Disk Boot Priority யில் 40GB Hard Disk ஐ முதலாவதாக அமைத்தோமல்லவா அது படி  இல்லாமல் , 80GB Hard Disk ஐ முதலாவதாக BIOS இயல்பிருப்பாக அமைத்துக்கொண்டது அதனால்  கணினி  80GB Hard Disk ல் இயங்குதளத்தை தேடிப்பார்த்துவிட்டு grub rescue> எனும் பிழைச் செய்தியை காண்பித்துக் கொண்டு இருந்தது. ஆனால் BIOS ல் 40GB Hard Disk ஐ முதலாவதாக அமைத்தால் எப்பொழுது போல உபுண்டு இயங்குதளம் நன்றாக வேலை செய்தது.

தம்பி கதிர்வேலு, அதான் வேலை செய்யுதேப்பா அப்பறம் என்னய்யா உனக்குனு பிரச்சனைனு கேட்கிறீங்களா!

இந்த பிரச்சனை வந்தது ஒரு பழைய கணினியில் அந்த பழைய கணினியை பயன்படுத்திக்கொண்டிருக்கும் அண்ணன் சோம.நீலகண்டன் அவர்கள் கணினியைப் பற்றிய தொழில்நுட்ப அறிவை அவ்வளவாக  கொண்டிருப்பவர் அல்ல. கணினியில் திரைப்படம் பார்ப்பார், பாடல்கள் கேட்பார், முகநூல் பார்ப்பார் மற்றும் இணையத்தை பயன்படுத்துவார் அவ்வளவுதான்.

அதனால் இந்த பிரச்சனையை நான் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு கடந்த பத்து  நாட்களாக இணையத்தில் தகவல்களை தேடித் திரட்டினேன். நிறைய அனுபவம் கிடைத்தது. GRUB தொடர்பாக நிறைய செய்திகளைத் தெரிந்துக் கொண்டேன்.

தீர்வு கிடைத்தது:
என்ன தீர்வு கேட்குறீங்களா? சொல்கிறேன் கணியம் இதழுக்கு  ஒரு  கட்டுரை அனுப்பியிருந்தேன் அதன்மூலமாகத்தான் இந்த ஐடியா கிடைத்தது.

80GB Hard Disk -ல் வெறும் 5GB அளவில் உபுண்டு லினக்ஸை நிறுவினேன். இப்பொழுது நமக்கு ஏற்கனவே கிடைத்து வந்த grub rescue> பிழைச்செய்தி ஒழிந்தது. இதைப் பயன்படுத்தி அந்த 40GB Hard Disk -ல் உள்ள உபுண்டு இயங்குதளத்தை Load செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய நோக்கம். காரணம்? எப்படியிருந்தாலும் கணினியை நிறுத்திவிட்டு(Shutdown) ஆரம்பித்தால் 80GB யிலிருந்தே ஆரம்பிக்கப்போகிறது. அதனால் அதிலிருந்தே அந்த 40GB யில் இருக்கும் உபுண்டு லினக்ஸிற்கு இணைப்புக் கொடுத்து விட்டால்  பிரச்சனை முடிந்தது. அதைத்தான் நான் செய்தேன். 80GB Hard Disk ல் இருக்கும் உபுண்டு இயங்குதளம் வெறும் இணைப்புக்காக மட்டுமே பயன்படப்போகிறது அவ்வளவுதான்.

என்ன செய்தேன் என்றால் 80GB Hard Disk ல் ஏற்கனவே இருந்த /boot/grub/grub.cfgஐ நீக்கிவிட்டு 40GB Hard Disk -ல் /boot/grub/grub.cfg கோப்பினை  Copy செய்து  80GB Hard Disk னுள் இருக்கும் /boot/grub/  அடைவிற்குள்  copy செய்த grub.cfg கோப்பினை Pasteசெய்தேன். வேலைகளை முடித்துவிட்டு கணினியினை மறுதொடக்கம் செய்த பொழுது எப்பொழுதும் போல  80GB Hard Disk ன் GRUB Menu கிடைத்தது. அதிலிருந்து உபுண்டுவை ஆரம்பித்த போது வெற்றிகரமாக , நான் நினைத்தது போல  அந்த 40GB Hard Disk லிருந்து ஆரம்பித்தது.

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!