பிப்ரவரி 7-ஆம் தேதி ஊரில் திருமண நாளை கொண்டாடிவிட்டு சென்னைக்கு திரும்பினேன். மார்ச் இரண்டாவது வாரத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர கூடாது. கொரோனா தொற்று ஏற்பட அதுவே வழிவகுத்துவிடும் என மருத்துவர்களும், அரசாங்கமும் அறிவுறுத்திக்கொண்டிருந்தார்கள். அலுவலக வேலை, இணைய இணைப்பு ஆகிய காரணங்களினால் ஊருக்குச் செல்வதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. இ-பாஸ் நெருக்கடி வேறு.
வீட்டிலிருந்து பணிபுரிய எங்கள் நிறுவனம் அனுமதியளித்தது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாப்பாட்டிற்கு வழியில்லை. நானே சமைத்து சாப்பிட்டுக்கொண்டு, ACT Internet இணைப்பு இருந்ததால் வீட்டிலிருந்தே பணிபுரிந்தேன்.
இந்த மாதம் அன்புச்செல்வனுக்கு முதல் பிறந்த நாள். ஏழு மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் ஊருக்குச் செல்லகிறேன். வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு திட்டமிட்டிருக்கிறேன். என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லை. நான் வைத்திருப்பது சாதரண மொபைல் போன்(Samsung Guru E1200 - Basic model mobile). விலை ரூ.1,150. நண்பன் ஜெகன்மோகன்தான் மேடவாக்கத்தில் வாங்கி கொடுத்தான். வீட்டிலிருந்து பணிபுரிய இணைய இணைப்பு தேவை. அதற்கு ஸ்மார்ட்போன் தேவை. அது என்னிடம் இல்லை. இதற்காக புதிய ஸ்மார்ட் போன் வாங்கும் திட்டமும் என்னிடம் இல்லை. என்ன செய்யலாம்?
ரம்யா பயன்படுத்திய பழைய மொபைல்(Samsung G3815) மாடல் வீட்டில் சென்னையில் சும்மாதான் கிடந்தது பயன்படுத்தாமல். 3G, 4G வசதியுள்ள மொபைல். அதை பயன்படுத்தினால் என்ன என்று திட்டமிட்டேன். ஆனால் அதில் பேட்டரி வேலை செய்யவில்லை. இணையத்தில் தேடியதில் பேட்டரி கிடைக்கவில்லை. ரிச்சிஸ்ட்ரீட் சென்றால் வாங்கிவிடலாம் என்றால் கொரோனா கண்ணுக்கு முன்னே வந்து சென்றது. அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி மூலமாக ஏற்பாடு செய்ப்பட்டிருந்த பரிசோதனை முகாமில் எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்திருந்தது. ஊருக்கு கிளம்பும் நேரத்தில் பேட்டரி வாங்கப்போயி கொரனோ தொற்றை வாங்கி வந்துவிட்டால் என்ன செய்வது? அதனால் ரிச்சிஸ்ட்ரீட் செல்லும் திட்டத்தை கைவிட்டேன்.
என்னுடைய அலுவலகத்தை ஒட்டிய கடைகளில் விசாரிக்கலாம் என முடிவு செய்து ஒரு கடையில் மொபைலை காண்பித்து இதற்கு பேட்டரி கிடைக்குமா? என்று கேட்டேன். அந்த அண்ணனும் 10-க்கு மேற்பட்ட பேட்டரிகளை போட்டு பார்த்துவிட்டு. "இல்ல தம்பி இந்த போனுக்கான பேட்டரி என்னிடம் இல்லை" என்று கூறிவிட்டார். இன்னொரு கடையில் விசாரித்தேன். அந்த கடையில் இருந்த அக்கா, "கொடுத்துட்டு போங்க சார். அரைமணி நேரம் கழித்து வந்து வாங்கிக்கங்க." என்று சொன்னார். நானும் கிடைத்துவிடும் போல என நினைத்துக்கொண்டு வீட்டிற்கு போயி சாப்பிட்டுவிட்டு வந்து கேட்டேன். "பேட்டரி கிடைக்கல சார். நாளைக்கு ஈவ்னிங் வாங்க. வேறு இடத்திலிந்து ஆர்டர் செய்து கொண்டுவந்துவிடுகிறேன்." என கூறினார்.
மறுநாள் ஈவ்னிங் சென்றேன். "சார், பேட்டரி கிடைக்கல. அதனால பூஸ்டப் பண்ணி போட்டிருக்கேன். இப்ப நல்லா வேலை செய்யுது." என்று கூறினார். 100 ரூபாய் கட்டணம் வாங்கிக்கொண்டார். "பேட்டரி இன்னும் ஒரு வருஷத்துக்கு வரும் சார். பயப்படாதீங்க." என்று சொல்லி அனுப்பினார். ஒருவருஷத்துக்கெல்லாம் வர வேண்டாம் ஊரில் இருந்து வேலை செய்யப்போகும் அந்த இரண்டு மாதத்திற்கு வந்தால் போதும் என நினைத்துக்கொண்டேன். மொபைல் போன் பிரச்சனை தீர்ந்தது.
அடுத்தது ஜியோ சிம்கார்டு பிரச்சனை. ஊருக்குச் சென்றால் ரம்யா வீட்டில் அல்லது எங்க வீட்டில் இருந்துதான் பணிபுரிய வேண்டும். இந்த இரண்டு இடங்களிலும் எந்த சிம்கார்டில் இணையம் நன்றாக வேலை செய்கிறது என ரம்யாவிடம் கேட்டேன். "ஜியோ நல்லா வேலை செய்யுதுங்க." என்று ரம்யா கூறினார். சரி, ஜியோ சிம்மே வாங்கிடலாம் என, பேட்டரியை சரிசெய்து கொடுத்த அந்த அக்காவிடம், "ஜியோ சிம் இருக்காக்கா உங்களிடம்" என கேட்டேன். அதற்கு அவர், "எங்களுக்கு இரண்டு கடைகள் இருக்கு சார். இந்த கடையில இல்ல, நீங்க இன்னோரு கடைக்கு போனா வாங்கிக்கலாம்" என்று கூறினார். மெனக்கெட்டு பேட்டரி பிரச்சனையை சரி செய்து கொடுத்திருக்கிறார் அதற்காகவே ஜியோ சிம்மை அவருடைய கடையில்தான் வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
அவர்களுடைய இரண்டாவது கடைக்குச் சென்றேன். "அண்ணே, ஜியோ சிம் வேணும்." என்று கூறினேன். அதற்கு அவர் "ஒரிஜினல் ஆதார் கார்டு கொடுங்க சார்." என்று கூறினார். கொடுத்தேன். அதை வாங்கிப் பார்த்து விட்டு, "இது இல்ல சார் ஒரிஜினல் வேணும்." என்று சொன்னார். ஆதார் கார்டுல என்னயா ஒரிஜினல், டூப்ளிகேட். பன்னிரண்டு நம்பர்தானையா மேட்டர் என உள்ளுக்குள் நினைத்துகொண்டேன். "ஏன், இந்த ஆதார் கார்டுக்கு தர மாட்டீங்களா?" என கேட்டேன். "இல்ல சார், நீ்ங்க வெச்சிருக்கிறது கலர் ஜெராக்ஸ் போட்ட கார்டு சார். இந்த கார்டுல இருக்குற பார் கோடு ரீட் ஆகாது. பார் கோடு ரீ்ட் ஆனாதான் உங்க டீடெய்லெல்லாம் JIO sim application-ல fill ஆகும். அப்பதான் சிம் கார்டு ஆக்டிவேட் ஆகும்" என்று கூறினார். "ஒரிஜினல்னா எத சொல்றீங்க?"னு கேட்டேன். "கவர்ன்மென்ட் உங்க கிட்ட கொடுத்தது சார்." அப்படினார் அவர். ஒருவேளை, ஆதார் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொண்டு வந்து கொடுத்தா ஏற்றுக்கொள்வார் போலனு நினைத்துக்கொண்டு. அலுவலகத்திற்கு திரும்பி இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பென்டிரைவில் எடுத்துச் சென்று கொடுத்தேன். பென்டிரைவில் இருந்த ஆதார் கார்டையும் திறந்து பார்த்துவிட்டு. "இல்ல சார் இதுல இருக்குற பார்கோடும் ரீட் ஆகாது." அப்படினு சொல்லிட்டார். "அண்ணே, அப்ப எதுதானே ஒரிஜினல் ஆதார் கார்டு" என்று அவரிடம் கேட்டேன்.
"போஸ்ட்மேன் உங்க வீட்டுல வந்து கொடுத்தார்ல, அந்த கார்டு சார்." என்று கூறினார் அவர். அடாப்பாவிங்களா, அதுக்கு நான் எங்கையா போவேன். பென்டிரைவை வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டேன். என் அலுவலகத்தை ஒட்டிய ஒரு கடையில் பேட்டரிக்கு விசாரித்தேன் என்று சொன்னேனில்லையா அந்த கடை திரும்பி வரும் வழியில்தான் இருக்கிறது. அந்த கடையில் நான் வைத்திருந்த கலர் ஜெராக்ஸ் போடப்பட்ட ஆதார் கார்டை காண்பித்து, "அண்ணே, இந்த ஆதார் கார்டுக்கு ஜியோ சிம் தருவீங்களா?" என கேட்டேன். "ம்... வாங்கிக்கலாம் சார்." என்று கூறினார். "அண்ணே, நல்லா பார்த்துட்டு சொல்லுங்க இது கலர் ஜெராக்ஸ், பார் கோடெல்லாம் ரீட் ஆகாது." என்று நான் கூறினேன். "பார் கோடு எதுக்கு சார்?, அதான் ஆதார் நம்பர் இருக்குல, அது போதும்." என்றார் அவர். ஆதர் கார்டை படம் பிடித்தார், அப்படியே என்னையும் படம் பிடித்தார். ஆப்பில் முகவரியை தட்டச்சு செய்ய சொன்னார். ஜியோ சிம்மையும் கையில் கொடுத்துவிட்டார். "ஒரு மணி நேரம் கழித்து மொபைல்ல போடுங்க சார். டவர் கிடைத்த உடன் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க. OTP கொடுங்க. Activate ஆகிரும்" என்று சொன்னார். மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.
ஒருமணிநேரம் கழித்து சிம் கார்டை மொபைலில் போட்டேன். டவரும் கிடைத்தது. ஆனால், Online Verification-னிற்கான எண்ணிற்கு கால் செய்தால் போகவில்லை. Online Verification நடக்காமல் SIM card Activate ஆகாது. சிம் கார்டை வாங்கிய கடைக்கே சென்றேன். அந்த கடை முதலாளியோட பையன் வாங்கி பார்த்தான். SIM card ஐ கழட்டி அவனுடைய மொபைலில் போட்டான். அந்த எண்ணிற்கு அழைத்து OTPஐ போட்டு Online Verification-ஐ முடித்தான். பிறகு சிம் கார்டை என்னுடைய மொபைலில் போட்டான். Youtube ஐ திறந்து வீடியோவை ஓட விட்டான். பக்காவா வேலை செய்தது. ஆனால் போன் செய்தால் Switch Off என்று வந்தது. மறுபடியும் பையனிடம் கொடுத்தேன். அவன் பார்த்துவிட்டு, "அண்ணே, JIOCallனு ஒரு ஆப் இருக்கு. அதை இன்ஸ்டால் பண்ணிட்ட Call பண்ணுறது வேலை செய்யும்." என்று கூறினான். நிறுவினான் வேலை செய்தது. அந்த பையனுக்கு வயது 15. எவ்வளவு அறிவானவர்களாக இருக்கிறார்கள். ஒரு வழியாக எல்லா பிரச்சனையும் முடிந்தது. ஜெகன்மோகன் இரயில் பயணத்திற்கான முன்பதிவை முடித்து கொடுத்திருக்கிறான். தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டியதுதான் ஊருக்கு. பயணத்தில் படிப்பதற்கான புத்தகங்களும் தயார்.
"ஏன் தம்பி பழைய போனை வெச்சிக்கிட்டு இந்த பாடு படுத்துறே?" உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது. நம்ம பழைய வரலாறு உங்களுக்கு தெரியாதே. இங்கே போயி பாருங்க. தெரிச்சு ஓடிருவீங்க.