Mar 22, 2020

Arch Linux - a simple lightweight distribution


உங்களுக்கு மிகவும் பிடித்த லினக்ஸ் வழங்கல் எது? என்ற கேள்வியை கேட்டால் அதற்கு ஒற்றை வார்த்தையில் என்னால் பதில் சொல்ல முடியாது. காரணம் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் எல்லா வழங்கல்களையும் முயற்சித்து பார்த்திருக்கிறேன். உபுண்டு, பெடோரா, ஓப்பன் சுசி, டெபியான் போன்ற வழங்கல்கள். அதுபோல டெஸ்க்டாப் சூழல்கள் என்று பார்த்தால் GNOME, KDE, LXDE, LxQT, XFCE என அனைத்தும்.

இவைகளில் உபுண்டுவைத்தான் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறேன். உபுண்டு பயன்படுத்தி போரடித்து விட்ட காரணத்தினால் கொஞ்ச காலத்திற்கு ஓப்பன் சுசியை பயன்படுத்தினேன். பிறகு அதுவும் போரடித்து விட்டதால் பெடோராவைப் பயன்படுத்தி வந்தேன். பெடோராவும் போரடித்து விட்டதால் இப்போது Arch Linux ஐ பயன்படுத்தி வருகிறேன்.

Arch Linux ஐப் பற்றி என்னுடைய நண்பர் பிரபாகரன் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. Arch Linux ஐ நிறுவுவது கடினம் ஆனால் பயன்படுத்த அற்புதமாக இருக்கும் என்று படித்திருக்கிறேன். சோதனை முயற்சியாக Virtual Machine Manager(qemu+KVM) மூலமாக நிறுவி பார்த்தேன். நிறுவ முடிந்தது. நான் அடிக்கடி பயன்படுத்தும் Application களையும் நிறுவினேன், தமிழ் எழுத்துரு, தமிழ் தட்டச்சு முறை என அனைத்தும் வேலை செய்தது. உடனடியாக மடிக்கணினியில் ஏற்கனவே நிறுவி வைத்திருந்த Fedora 31 Workstation ஐ நீக்கிவிட்டு Arch Linux ஐ நிறுவினேன்.


பயன்படுத்த நன்றாக இருக்கிறது. வேகமாகவும் இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எளிமையான, மெலிதான லினக்ஸ். தேவையில்லாத பொதிகளோ, சேவைகளோ நிறுவப்பட மாட்டாது. அடிப்படையான பொதிகள் மட்டும் நிறுவப்படும்.. உங்களுக்கு தேவையானவைகளை நீங்களே முடிவு செய்து நிறுவி கொள்ளலாம்.

Arch Linux ஒரு rolling release வகையைச் சேர்ந்த வழங்கல். உபுண்டு, பொடோராவிற்கு இருப்பதைப் போன்ற ஒரு குறிப்பிட்ட வெளியீட்டு தேதி கிடையாது. பொதிகளினுடைய அண்மைய பதிப்புகள் நிறுவப்படும்.

Arch Linux ஐ நிறுவுவதற்கு உங்களுக்கு லினக்ஸ் கட்டளை வரிகளும், partitions, file systems, booting methods களையும் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தால் எளிமையாக நிறுவிவிடலாம்.