Sep 25, 2016

Totem Media Player -இல் வழு


உபுண்டு பயன்படுத்தும் அனைவரும் Totem Player -ஐத்தான் பாடல், திரைப்படங்கள் பார்ப்பதற்கு பயன்படுத்தி வருகின்றோம். அண்மையில் வெளியிடப்பட்ட உபுண்டு 16.04 LTS உடன் வந்துள்ள Totem Player -இல் ஒரு சிறிய வழு உள்ளது. அது என்னவென்றால் ஒன்றிற்கு மேற்பட்ட பாடல்களையோ, திரைப்படங்களையோ தேர்வு செய்து இயக்கினால், நமக்கு தேவையான பாடல்களையோ, திரைப்படத்தையோ தேர்வு செய்து இயக்க முடியவில்லை. காரணம் Sidebar(F9 பொத்தானை அழுத்தினால் கிடைப்பது) நீக்கப்பட்டுள்ளது. ஆகையால் நான் இப்போது Totem Player பயன்படுத்தாமல் Rhythmbox -ஐ பாடல்கள் கேட்பதற்கு பயன்படுத்திவருகிறேன்.





பாடல்களை இயல்பிருப்பாகவே Rhythmbox -இல் திறப்பதற்கு ஏதாவது ஒரு .mp3 கோப்பினை தேர்வு செய்து வலது சொடுக்கி, Properties தேர்வு செய்து, Open With என்பதில் Rhythmbox என்பதை தேர்வு செய்து Set as default பொத்தான அழுத்தவும். இதன்பிறகு mp3 பாடல்கள் Rhythmbox -இல் மூலமாக ஒலிக்கும்.

Sep 24, 2016

உபுண்டு 16.04 LTS உண்மையிலேயே அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்கிறதா? - ஓர் அலசல்

நான் ஏற்கனவே பயன்படுத்தி வந்த உபுண்டு 14.04 LTS -ஐ நீக்கிவிட்டு 16.04 LTS நிறுவியதையும், 16.04 LTS அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்வதால் Xubuntu 16.04 -க்கு மாறலாமா? என யோசித்துக்கொண்டிருப்பதாக முன்பே இங்கு பதிவு செய்திருந்தேன். உபுண்டு அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்கிறது என்கிற கோபத்தில், Xubuntu -வை நிறுவி பயன்படுத்த ஆரம்பித்தேன். தனிப்பட்ட முறையில் உபுண்டு மீது எனக்கு ஒரு காதல் உண்டு. ஆகையால் ஏன் உபுண்டு அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்கிறது? அவ்வாறு நினைவகத்தை எடுத்துக்கொள்வதை தடுக்க முடியுமா? என்கிற தகவல்களை இணையத்தில் தேட ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் உபுண்டு அதிக நினைவகம் எடுத்துக்கொள்வதாக நான் நினைத்தது தவறு என்கின்ற உண்மை விளங்கிற்று. அந்த உண்மை என்னவென்றால்,


System Monitor மூலமாகத்தான் நாம் உபுண்டு இயங்குதளம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் Processor, RAM, Swap மற்றும் Internet -இன் வேகம் போன்ற விபரங்களைப் பெறுகிறோம்.


System Monitor -இல் காட்டப்படும் Memory அளவானது உண்மையிலேயே இயங்குதளம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நினைவகைத்தின் அளவு அல்ல. இதைப் பார்த்துதான் நான் உபுண்டு அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்வதாக நினைத்துக்கொண்டேன்.

System Monitor -இல் காட்டப்படும் Memory அளவானது Used Memory + Cache Memory இரண்டினுடைய கூட்டுத்தொகை. Used Memory என்பது இயங்குதளம் எடுத்துக்கொண்ட Memory. Cache Memory என்பது பயனர் அடிக்கடி பயன்படுத்தும் Application -களை வைத்திருக்கும் Memory. உதாரணமாக நாம் Firefox, Chrome, Tamil Typing, LibreOffice Writer போன்ற பயன்பாடுகளை அடிக்கடி பயன்படுத்தினோம் என்றால் அந்த பயன்பாடுகளை Cache Memory -யில் உபுண்டு வைத்துக்கொள்ளும். அடுத்தமுறை நாம் அந்த பயன்பாட்டினை இயக்கும் போது அந்த வன்வட்டிலிருந்து எடுக்காமல் Cache Memory -யிலேயிருந்தே எடுத்துக்கொள்ளும். கணினியில் Hard Disk -இன் நினைவகத்தை விட, RAM நினைவகமானது பன்மடங்கு வேகமானது. அதைவிட வேகமானது Processor -க்குள் இருக்கும் நினைவகம். Cache -யிலிருந்து பயன்பாட்டினை இயக்குவதால், ஒரு பயன்பாட்டினை நாம் மிகவும் வேகமாக இயக்க முடிவதோடு, பயன்பாட்டினைத் திறப்பதற்கான நேரமும், ஆரம்பிப்பதற்காக காத்திருக்கும் நேரம் குறையும். இது ஒரு மிகவும் அற்புதமான திட்டம். இதை நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

கீழே இருக்கும் கணக்கு உங்களுக்கு தெளிவாக விளக்கும்.



free -m கட்டளை நினைவக விபரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் அதிகமான நினைவகத்தை உபுண்டு 16.04 LTS எடுத்துக்கொள்கிறது என்கிற குற்றச்சாட்டு உண்மையல்ல. அப்படி நான் கூறியதை திரும்ப பெறுகிறேன். அதோடு மட்டுமில்லாமல் இது தொடர்பான விபரங்களை சேகரித்து உண்மையை விளங்கிக்கொண்டதால், ஏற்கனவே நிறுவியிருந்த Xubuntu 16.04 LTS -ஐ நீக்கிவிட்டு, உபுண்டு 16.04 LTS 64-bit இயங்குதளத்தையே நிறுவிவிட்டேன்.

உபுண்டுடா!

References:

Unity Desktop's Launcher -ஐ கீழே நகர்த்துதல்

உபுண்டு 16.04 LTS -இல் Unity Desktop's Launcher -ஐ இடது புறத்திலிருந்து கீழே நகர்த்திக்கொள்ளலாம். 16.04-க்கு முந்தைய பதிப்புகளில் இந்த வசதியை ஏற்படுத்திக்கொள்ள முடியாது. விண்டோஸ் பயனர்கள் உபுண்டுவை பயன்படுத்த ஆரம்பிக்கும் போது எதிர்கொள்ளும் சிறு சிறு அசௌகரியங்களில் இடதுபுறமாக இருக்கும் Unity Desktop's Launcher -ம் ஒன்று.

இவ்வாறு கீழ்பக்கமாக நகர்த்திவிட்டால் உபுண்டு, ஆப்பிள் இயங்குத்தளத்தினைப் போன்று தோற்றமளிக்கிறது. சரி எப்படி கீழ் பக்கமாக நகர்த்துவது என்று பார்ப்போமா? முனையத்தை(Terminal) திறந்து கொள்ளுங்கள். அதில் கீழ்காணும் வரியை உள்ளிட்டு Enter Key-ஐ அழுத்துங்கள். இப்போது நீங்கள் Unity Dektop's Launcher -ஐ கீழ் பக்கமாக காணலாம்.

gsettings set com.canonical.Unity.Launcher launcher-position Bottom


மறுபடியும் இடதுபுறமாக மாற்றிக்கொள்ள விரும்பினால் கீழ்காணும் கட்டளைவரியை முனையத்தில் உள்ளிட்டு Enter Key -ஐ அழுத்தவும்.

gsettings set com.canonical.Unity.Launcher launcher-position Left

Sep 15, 2016

32-bit இயங்குதளம், 64-bit இயங்குதளம் என்ன வித்தியாசம்?


32-bit இயங்குதளத்தால் அதிகபட்சமாக 4GB RAM -ஐத்தான் பயன்படுத்த முடியும். 64-bit இயங்குதளத்தால் 4GB-க்கு அதிகமான RAM -ஐயும் பயன்படுத்த முடியும். உங்களது இயங்குதளம் 32-bit ஆக இருந்து, உங்களது கணினியில் 4GB -க்கு அதிகமான RAM இருந்தால் அது வீண்தான் காரணம் 32-bit இயங்குதளத்தால் 4GB -க்கு அதிகமான நினைவகத்தை பயன்படுத்த முடியாது. நீங்கள் 4GB க்கு அதிகமான நினைவகத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் 64-bit இயங்குதளம் தேவை. ஆகையால் உங்களது கணினியில் 4GB-க்கு அதிகமான நினைவகம் இருந்தால், உங்களது இயங்குதளம் 64-bit இயங்குதளம்தானா என்பதை சோதித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் உடனே 64-bit இயங்குதளத்தை நிறுவுங்கள். அது லினக்ஸாக இருந்தாலும் சரி, விண்டோஸாக இருந்தாலும் சரி இரண்டிற்கும் இது பொருந்தும்.

64-bit இயங்குதளம் வேகமாக இயங்கும், 32-bit இயங்குதளம் மெதுவாக இயங்கும் என்று சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பி விடாதீர்கள். கணினி வேகமாக இயங்குவதற்கு நல்ல Processor-உம், போதுமான அளவிற்கு RAM-மும் தேவையே தவிர 64-bit இயங்குதளம் அல்ல.

உபுண்டு பயன்படுத்துபவர்கள் Details செயலியை இயக்கி Processor, RAM மற்றும் OS Type ஆகிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். விண்டோஸ் பயனர்கள் எப்போதும் போல My Computer => Properties செல்லவும்.

குறிப்பு: இந்த கட்டுரை 32-bit processor, 64-bit processor இரண்டிற்குமான வித்தியாசம் கிடையாது.

Sep 12, 2016

Ubuntu - Xubuntu - Lubuntu - குறைந்தபட்ச நினைவகம்

நான் தற்போது பயன்படுத்திக்கொண்டிருப்பது உபுண்டு 14.04 LTS பதிப்பு. நேற்று இரவு உபுண்டுவின் அண்மைய பதிப்பான 16.04 LTS -ஐ நிறுவினேன். அதிர்ச்சி என்னவென்றால் எந்த பயன்பாட்டையும் தொடங்காமலேயே உபுண்டு 950MB RAM ஐ எடுத்துக்கொண்டது.

என்னுடைய மடிக்கணினியின் RAM -இன் அளவு 2GB. இதில் 1GB அளவிற்கு இயங்குதளமே எடுத்துக்கொண்டால் மற்ற பயன்பாடுகளுக்கு மீதமிருக்கும் 1GB அளவு போதாது. RAM -ஐ Upgrade செய்யும் திட்டமெல்லாம் என்னிடம் இல்லை. என்னுடைய கேள்வி என்னவென்றால் இயங்குதளத்திற்காக இவ்வளவு RAM செலவு செய்ய வேண்டுமா? என்பதுதான்.

மடிக்கணினியில் என்னுடைய பயன்பாடு என்னவென்றால்?

இணையத்தில் உலாவுதல், பாடல் கேட்பது, திரைப்படம் பார்ப்பது, வலைப்பூவிற்கு கட்டுரை எழுதுவது, PDF, Libre Office, Text Editor, Python Programming இவ்வளவுதான். இந்த பயன்பாட்டிற்காக இயங்குதளத்திற்கே 1GB ஐ கொடுத்துவிட்டு மீதமிருக்கும் 1GB வைத்துக்கொண்டு என்னால் குடும்பம் நடத்த இயலாது. ஆகையால் Xubuntu அல்லது Lubuntu ஆகியவற்றினை முயற்சித்துப் பார்க்கலாமே என திட்டமிட்டு அதற்கான குறைந்தபட்ச நினைவகம் எவ்வளவு என ஆராய்ந்தேன். இரண்டு இயங்குதளத்திற்கும் குறைந்தபட்ச நினைவகம் 512 MB தான் என்ற விபரம் கிடைத்தது. கீழே உள்ள படங்களைப் பார்க்கவும்.



Ubuntu 16.04.1 LTS


Lubuntu 16.04.1 LTS


Xubuntu 16.04.1 LTS

Lubuntu பழைய கணினிகளுக்கானது அதோடு தோற்றம் கொஞ்சம் வறட்சியாக இருக்கும். ஆகையால் Xubuntu பயன்படுத்தலாம் என முடிவெடுத்துள்ளேன். இதன் தோற்றமும் அழகாகவும், நேர்த்தியாகவும், எளிமையாகவும் இருக்கும். நான் எற்கனவே கொஞ்ச காலம் இதை பயன்படுத்தியும் உள்ளேன். ஆகையால் அதிகமான நினைவக ஆக்கிரமிப்பு காரணமாக Ubuntu வை விட்டுவிட்டு Xubuntu -விற்கு மாறலாம் என இருக்கிறேன்.

என்னங்க கதிர் Ubuntu, Lubuntu, Xubuntu னு என்னென்னமோ சொல்லுறீங்க ஒன்னுமே புரியலையே அப்படினு கேட்கிறீங்களா. சொல்கிறேன் இந்த மூன்றுக்கும் வித்தியாசம் என்னவென்றால் இடைமுகப்புதான்.

Unity + Ubuntu = Ubuntu
XFCE + Ubuntu = Xubuntu
LXDE + Ubuntu = Lubuntu

உபுண்டு 14.04 LTS பயன்பாட்டிற்கு அருமையாக உள்ளது எந்த பிரச்சனையும் இல்லை. 2019 -வரை பயன்படுத்தலாம். இருந்தாலும் புதிய பதிப்பை பயன்படுத்தி பார்ப்போமே என நினைத்துதான் 16.04 LTS - நிறுவினேன். ஆனால் 1GB நினைவக ஆகிரமிப்பு எனக்கு பிடிக்கவில்லை ஒத்துவரவில்லை. மற்றபடி 16.04 LTS பதிப்பு பயன்படுத்த மிகவும் அருமையாக உள்ளது. நினைவகம் எனக்கு ஒரு பிரச்சனை இல்லை என்பவர்களுக்கு மிகவும் அற்புதமான அனுபவத்தை உபுண்டு 16.04 LTS கொடுக்கும்.