ரிச்சர்டு ஸ்டால்மன் |
தி இந்து நாளிதழில் வந்த செய்தி
ஜிஎன்யூ மென்பொருளை அறிமுகப்படுத்தியவரும், சுதந்திர மென்பொருள் இயக்க நிறுவனருமான ரிச்சர்டு மாத்யூ ஸ்டால்மன் (Richard Matthew Stallman) பிறந்த தினம் இன்று (மார்ச் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் (1953) பிறந்தவர். சிறு வயதிலேயே கம்ப்யூட் டரில் ஆர்வம் கொண்டி ருந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ந்தது இவரது கணினி ஆர்வத்தைப் பெருக் கெடுக்க வைத்தது.
16 வயதில் தனது முதல் புரோகிராமை ஐபிஎம் நியூயார்க் அறிவியல் மையத்தில் ஐபிஎம்-360 கணினியில் எழுதினார். ராக்ஃபெல்லர் பல்கலைக்கழக உயிரியல் ஆய்வுக்கூடத்தில் தன்னார்வ உதவியாளராக இருந்தார். 1970-ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
அப்போது எம்ஐடியின் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடத்தில் (ஏஐஎல்) புரோகிராமராக இருந்தார். கல்லூரியில் அனைவராலும் ‘ஆர்எம்எஸ்’ என்று அழைக்கப்பட்டார். 1974-ல் இயற்பியலில் பட்டம் பெற்றார். மென்பொருள் பயன்பாட்டை மேம்படுத்தினார்.
மென்பொருள் சுதந்திரம் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘சுதந்திரமாக கணினியைப் பயன்படுத்து வது’ என்பதை இலக்காகக் கொண்டு ‘சுதந்திர மென் பொருள் இயக்கம்’ (Free Software Movement) என்ற அமைப்பைத் தொடங்கினார்.
‘கட்டுப்பாடுகளுடன் கூடிய மென்பொருட்கள், பயனாளர்களை உளவு பார்க்கின்றன. அவர்களை வரம்புமீறிக் கட்டுப்படுத்துகின்றன’ என்பார். மென்பொருட்களை அனைவரும் சுதந்திரமாகப் பயன்படுத்துதல், ஆய்வு செய்தல், விநியோகித்தல், மாற்றங்களைக் கொண்டு வருதல் ஆகியவை பயனாளர்களின் அடிப்படை உரிமை என்பதை தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். இதைத்தான் இவர் ‘கட்டுப்பாடற்ற, சுதந்திர மென்பொருள்’ என்கிறார்.
உலகம் முழுவதும் 65 நாடுகளுக்கு மேல் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மென்பொருள் பயன்பாட்டு சுதந்திரம், மென்பொருள் காப்புரிமை மற்றும் இதுதொடர்பான அம்சங்கள் குறித்து ஏராளமான கூட்டங்களில் பேசியுள்ளார்.
‘ஃப்ரீ ஆஸ் இன் ஃபிரீடம்’ என்ற நூல் இவரது வாழ்க்கை வரலாற்றை அறிய உதவும் நூலாகத் திகழ்கிறது. இவர் மேம்படுத்திய ஜிஎன்யூ (GNU)பிராஜக்ட், கட்டுப்பாடற்ற மென்பொருள் அடிப்படையில் அமைந்த இயங்குதளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட செயல் திட்டம். அதை இவர் 1983-ல் வெளியிட்டார்.
சுதந்திர மென்பொருள் அறக்கட்டளை உட்பட பல நிறுவனங்களைத் தொடங்கினார். தத்துவம் சார்ந்த எழுத்தாக் கங்களையும் ஜிஎன்யூ அமைப்பு வெளியிட்டுவருகிறது.
‘எனது சுதந்திர மென்பொருள் இயக்கத்துக்கு ஊக்கமளிப்பவர்கள் மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாதான்’ என்கிறார். தனது பணிகளுக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
‘எனக்கு எப்போதுமே பணம் முக்கியமாக இருந்ததில்லை. நான் அதன் கட்டுப்பாட்டில், அதற்கு அடிமையாக இருக்க விரும்பியதில்லை’ என்று அடிக்கடி கூறுவார். கட்டுப்பாடு இல்லாத சுதந்திர மென்பொருள் பயன்பாட்டை வலியுறுத்தி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்.
நன்றி: தி இந்து (தமிழ் நாளிதழ்)