Jul 27, 2012

தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல்

தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினியில் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் (BOSS Linux) இயங்குதளங்கள் இரட்டை நிறுவலாக நிறுவப்பட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

BOSS Linux - ல் இருப்பியல்பாக Iceweasel இணைய உலாவி கொடுப்பட்டுள்ளது. இது Mozilla Firefox இணைய உலாவியிலிருந்து வார்க்கப்பட்டது எனினும், பயன்படுத்துவதற்கு அவ்வளவு நன்றாக இல்லை.

ஆகையால் Mozilla Firefox -னை நிறுவினால் நன்றாக இருக்குமே என்று Synaptic - ல் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.  ஆகையால் தரவிறக்கம் செய்து நிறுவுவதுதான் ஒரே வழி அதை எப்படி தரவிறக்கம் செய்து நிறுவுவது என்று பார்போம்.

முதலில் லினக்ஸிற்கான Mozilla Firefox -னை இந்த முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்யவும். தரவிறக்க சுட்டி இங்கே.

கொடுக்கப்பட்டுள்ள படங்களின் மீது சொடுக்கி பெரிதுப் படுத்தி பார்த்தீர்களேயானால் தெளிவாக புரியும்.

தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பு சுருக்கப்பட்ட கோப்பாக இருக்கும் அதாவது .tar  Archive ஆக இருக்கும். ஆகையால் சுருக்கப்பட்ட கோப்பினை Extract செய்ய வேண்டும்.

அதற்கு தரவிறக்கம் ஆகியிருக்கும் அந்த சுருக்கப்பட்ட கோப்பின் மீது வைத்து Right Click செய்ய வேண்டும் அதில் Extract Here எனும் தேர்வினை Click செய்யவும். இப்பொழுது கோப்பு firefox எனும் பெயருடன் Extract ஆகியிருக்கும்.

முக்கியமான குறிப்பு : Extract ஆகியிருக்கும்  இந்த firefox அடைவினுள் இருக்கும் firefox அல்லது  firefox-bin  எனும் கோப்பினை இயக்கியும் Mozilla Firefox உலாவியினைப் பயன்படுத்தலாம்.

படம் - 1


 படம் - 2

Extract ஆன firefox Folder னை Copy செய்து Home Folder க்குள் Paste   செய்யவும்.

 படம் - 3

அடுத்து Mozilla Firefox -னை Applications->Internet Menu வில் சேர்க்க வேண்டுமல்லவா அதற்கு Menu Panel - ல் System->Preferences->Main Menu வைக் Click செய்யவும்.

 படம் - 4

Click செய்தவுடன் கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள தெரிவுகளில் Internet என்பதை தேர்வு செய்து New Item Button -னை Click செய்யவும், New Item விண்டோவில் 

Name       = Mozilla Firefox

Commant = Mozilla Firefox Internet Browser என்றும் கொடுக்கவும் இதெல்லாம் Optional தான்.

முக்கியமானது Command என்பதற்கான உள்ளீடு.  Command  என்பதற்கு நேரெதிராக உள்ள Browse பட்டனை Click செய்யவும்.

கிடைக்கும் சாளத்தில் Home -> firefox அடைவுகளை Click செய்து அதனுள் இருக்கும் firefox எனும் கோப்பினை Click செய்து Open Button -னை அழுத்தி, Ok Button  ஐயும் அழுத்தவும். (நீங்கள் Extract ஆன firefox அடைவினை எங்கு வைத்திருக்கிறீர்களோ அங்கு செல்லவும்).


படம் - 5


 படம் - 6

Main Menu சாரளத்தை மூடிவிட்டு Applications->Internet->Mozilla Firefox னை Click செய்து Mozilla Firefox இணைய உலாவியினை பயன்படுத்தி மகிழலாம்.

குறிப்பு:
Mozilla Firefox உலாவியினை திறப்பதற்கு முன்பு Iceweasel உலாவியினை  Close செய்துவிடவும்.  ஒன்றுக்கு மேற்ப்பட்ட சாளரங்கள் திறக்கப்பட்டு இருந்தால் அவை அனைத்தையும் மூடி விடவும்.

இல்லையென்றால் Firefox is already running என்ற செய்தி காண்பிக்கப்படும்.

படம் - 7


படம் - 8 - மொசில்லா நெருப்புநரி உலாவியில் என்னுடைய வலைப்பூ

*****************************************************

தமிழக அரசின் இலவச மடிக்கணினி ஒரு பார்வை


தமிழகமும்,  தமிழக மக்களும் இந்திய நாட்டிற்கே  முன்னோடிகள் என்பதை தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கியிருக்கும் இலவச மடிக்கணினித் திட்டம் மூலமே தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த இலவச மடிக்கணினித் திட்டம் ஒரு புரட்சிக்கரமான திட்டமும் கூட.  இந்த திட்டத்தின் மூலம் தமிழக மாணவர்களின் திறமை மற்ற மாநிலத்தவர்களுடனும், நாட்டினருடனும் போட்டிப் போடும் அளவிற்கு உயரும்.

கணினியினை இதற்கு முன் தன் கரங்களால் தீண்டிப்பார்க்காத மாணவர்கள் கூட இன்றைக்கு தன்னுடைய மடியில் மடிக்கணினி எனும் அற்புதமான அறிவுக் குழந்தையினை தவழவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.  இந்த சாதனை நம்முடைய தமிழக  அரசினையே சாரும்.

இன்று தொலைக்காட்சிப் பெட்டி நம்மை எந்தளவிற்கு பண்பாட்டு படையெடுப்பின் மூலம் அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை கண்கூடக் காண்கிறோம்.  அவ்வாறு இருக்கையில் இந்த  இலவச மடிக்கணினி திட்டம் உண்மையிலேயே  தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.

ரிச்சர்.எம்.ஸ்டால்மன் அவர்கள் சென்னைக்கு வருகைத் தந்த பொழுது கேரளா மாநிலத்தைக் குறிப்பிட்டு சொன்னார் (நேர்காணல் இங்கு தமிழில் உள்ளது).  கணினிதொழில்நுட்பத்தில் அவர்கள் லினக்ஸ் இயங்குதளத்தையும், அகம் திறந்த மென்பொருள்களையுமே பயன்படுத்தி வருகின்றனர்.  அதுபோல...

தமிழக அரசு அளித்துள்ள இந்த இலவச மடிக்கணினியில் விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளம் இரண்டையும் இரட்டை நிறுவலாக அளித்தற்கு பதிலாக, லினக்ஸ் இயங்குதளத்தை மட்டும் நிறுவிக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 அரசுக்கும் பலகோடி ரூபாய்கள் மிச்சப்பட்டிருக்கும், அவ்வாறு மிச்சப்பட்ட தொகையினை தமிழக அரசு மக்கள் நலனுக்குக்காக பயன்படுத்தியிருக்கலாம்.

இத்தனை லட்சம் தமிழக மாணவர்களும் லினக்ஸ் பயன்படுத்த கற்றுக்கொண்டால் அது எவ்வளவு பெரிய புரட்சியாகவும், செய்தியாகவும், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகவும் இருந்திருக்கும்.

இந்த செய்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் கூட அரசு இதை செயல்படுத்த விரும்பவில்லை. 'ஹிலாரி க்ளிண்டன்' அவர்களின் வருகைக்கூட இதற்கு ஒரு காரணம் என்று வினவு  இணையதளத்தில் செய்தி வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:

மைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி!

இதைப் பற்றி தெஹெல்கா இதழ் வெளியிட்ட கட்டுரை

Arising knowledge for tamilnadu students

இலவச லேப்டாப்

இடதுசாரி இணையதளமான மாற்று தளம் கூட லினக்ஸா? விண்டோசா? மாணவர்களுக்கு எது தேவை? என்று ஒரு மிக அருமையான கட்டுரையினை வெளியிட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்த கடினமாக இருக்கும், ஏதாவது பிரச்சனை என்றால் ஆலோசனைகள், உதவிகள் கிடைக்காது என்று கூறினால் அது ஒரு தவறான வாதமே.  ஏனென்றால் கணினியை முதன்முதலாக பயன்படுத்துபவருக்கு விண்டோஸ் இயங்குதளமாக இருந்தாலென்னா, லினக்ஸ் இயங்குதளமாக இருந்தாலென்னா அவர்களின் தேவை கணினியின் மூலம் நிறைவேறினால் சரி.

அத்துடன் இன்று தமிழிலேயே லினக்ஸைப் பற்றி நிறைய வலைதளங்கள் வந்தாச்சு.  ஏன் லினக்ஸைப் பற்றி தமிழிலேயே கணியம் என்ற அற்புதமான மாத இதழ் கூட வந்தாச்சு  இதற்கு மேல் என்ன வேணும்.  லினக்ஸை பயன்படுத்த ஆரம்பித்தால் அதனைப் பற்றிய விவாதம் மாணவர்களிடம் நடக்கும், இதைப் பற்றிய செய்திகளை தேடுவார்கள், போகப் போக லினக்ஸைப் பற்றி நிறைய தெரிந்துக்கொள்வார்கள்.

TAMILNADU GOVT. FREE LAPTOP என்ற வலைதளமும் ஆரம்பிக்கப்பட்டு நான்கைந்து கட்டுரைகள் கூட எழுதி வெளியிடப்பட்டு விட்டது.

'லினக்ஸ் பயன்படுத்துவது கடினம்'  இப்படியொரு எண்ணம் கணினி பயன்படுத்துபவர்களிடமும், கணினி அறிவியல் படிக்கும் மாணவர்களிடமும் ஏன் பல்கலைகழகங்களிலும், கல்லூரிகளிலும் கணினி அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களிடமும் கூட இருந்து வருகிறது,

'லினக்ஸ் பயன்படுத்துவது கடினம்' என்ற செய்தியும் பரப்பப்பட்டும் வருகிறது.  இந்த தவறினை ஆசிரியர்கள் எந்த தருணத்திலும் செய்யக்கூடாது.

இப்படியே பயன்படுத்துவது கடினம் என்றுக் கூறிக்கொண்டே போனால் எப்பொழுதுதான் லினக்ஸைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது. 

எந்தவொரு அறிவியல் தொழில்நுட்பமும்,  கண்டுபிடிப்பும்  சமுதாயத்திற்கும்  மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்பட  வேண்டும்.   அவ்வாறு அறிவியலையும்,  தொழில்நுட்பத்தையும் நல்ல முறையில்  பயன்படுத்திய நாடுகள் இன்று  பொருளாதார ரீதியாகவும்,  வாழ்கைத்தரத்திலும்  உயர்ந்திருக்கின்றன.

'என்னங்க மாணவர்களுக்கு போயி மடிக்கணினியினைக்  கொடுக்கலாமா?'  அதை  அவர்கள் தவறாக  பயன்படுத்தத்தானே வாய்ப்பிருக்கிறது என்று குறைக்கூறுபவர்களும் உண்டு.

இதில் குறைக்கூற என்ன இருக்கிறது.  மிகவும்  அற்புதமான ஒரு கருவியினை  அரசு  மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறது,  இந்தக் கருவியினைப் பயன்படுத்தி தங்களுடைய கல்வியறிவையும், பொதுஅறிவையும்,  கணினியினை இயக்கும் அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம்.   இதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டியது மாணர்வர்கள் ஒவ்வொருவரினுடைய கடமை.

நான் ஒரு Diploma and B.E., Computer Science படித்த மாணவன் என்ற முறையில் கூறுகிறேன் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள இலவச மடிக்கணி நல்ல அமைப்புடனும், போதுமான வன்பொருள்களையும் கொண்டுள்ளது.


CD/DVD Drive, Bluetooth, WiFi, வசதிகள் இல்லை என்று கவலைப்பட தேவையில்லை.  இந்த வன்பொருள்கள் பயன்பாட்டிற்கு அவசியம் வேண்டும் என நினைத்தால் தனியாக வாங்கி இணைத்துக்கொள்ளலாம்.


  • Bluetooth Stick Rs.100 க்கே கிடைக்கிறது,
  • WiFi அந்தளவிற்கு தேவைப்படாது WiFi வசதி உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தேவைப்பட்டால் வாங்கி இணைத்துக்கொள்ளலாம்
  • CD/DVD Drive கொஞ்சம் விலை கூடுதலான வன்பொருள், என்னைப் பொறுத்த மட்டில் CD/DVD Drive ஆனது இயங்குதளங்களை நிறுவமட்டும்தான் பயன்படுகிறது
  • இப்பொழுது இயங்குதளங்களைக் (விண்டோஸ்-7, உபுண்டு ) கூட USB மூலம் நிறுவிக்கொள்ளலாம்.


இதைவிட இன்னொரு கொடுமை என்னை சந்திக்கும் சில தோழர்கள் யாம்பா கதிர்வேலு இந்த அரசு கொடுத்த மடிக்கணினி என்ன விலை அடக்கமாகும் எனக் கேட்கிறார்கள்?  ஏன் இந்த கேள்வியினைக் கேட்கிறார்கள் என்று எனக்கொன்றும்  புரியவில்லை, விலையினை வைத்து மடிக்கணினியின் செயல்திறனை அளவிடக்கூடாது.

கணினி அறிவியலை  முதன்மைப்  பாடமாக எடுத்துப்  படிக்கும் மாணவர்கள் (12-ம் வகுப்பு மாணவர்களிலிருந்து - பொறியியல் படிக்கும் மாணவர்கள் வரை)  இந்த இலவச மடிக்கணினியினை  மேலும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்த இலவச மடிக்கணினி மிகப்பெரிய  பயன்மிக்க  மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவிசெய்யக்கூடிய ஒன்று.

நல்ல முறையில் பயன்படுத்துவது,  தவறான முறையில் பயன்படுத்துவதும் மாணவர்களின் கையில்தான் இருக்கிறது.

இணைய வசதியினை  கைப்பேசி மூலம் இணைத்து இணையத்தைப்  பயன்படுத்திக்கொள்ளலாம்.  என்னைப் போன்ற கிராமப் புற மாணவர்கள் இணைய வசதியினைப் பயன்படுத்த நகரங்களை நோக்கி செல்ல வேண்டிய அவசியமில்லை.  சுருக்கமாக சொல்லப்  போனால் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய பயன்மிக்க உதவி.

இன்றைய தேதியில் ஒரு குக்கிராமமாக இருந்தால் கூட அங்கு 2-பொறியியல் படிக்கும் மாணவர்கள், 10-கல்லூரிப் படிப்பு படிக்கும் மாணவர்கள், 5-பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள்.  இவர்களெல்லாம் கண்டிப்பாக கணினியினைப் பற்றி தெரிந்தவர்களாகவும், கணினியைப் பற்றி முன் அனுபவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்,  கணியினை இயக்குவதுப் பற்றி சந்தேகம் உள்ள மாணவர்கள் இவர்களிடம் கேட்டு தெளிவடைந்துக் கொள்ளலாம்.

கணினி பயிற்சி மையத்திற்குச் சென்று பயிலும் மாணவர்கள் அங்கு சொல்லிக்கொடுத்ததை வீட்டிற்கு வந்து சுதந்திரமாகவும், கூடுதலாகவும் செய்துப்பார்க்கலாம்.

சொந்தமாக நிரல்கள் எழுதிப் பார்க்கலாம்,  இன்னும் நிறைய சொல்லிக்கொண்டேப் போகலாம்.  5-மணி நேரத்திற்கு குறையாமல் மின்சக்தி இந்த இலவச மடிக்கணியில் இருக்கிறது. ஆகையால புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஏ.சி யை விட அற்புதமான குளிர்ச்சியினைக் கொண்ட நல்ல சுத்தமான கற்றோட்டத்துடன் உள்ள மரத்தடி நிழல்கள் கிராமங்களிலே உண்டு அங்கு எடுத்துச்சென்று கணினி பயிலலாம்.

உங்களுக்கு தெரியாமலையே நீங்க கணினியில் வல்லுனராகிக் கொண்டிருப்பீர்கள்.  ஆக மொத்தம் இந்த ' இலவச மடிக்கணினி மாணவர்களிடையே மாற்றத்தைக் கொண்டும் வரும் கணினி'.

*********************************

இந்தப் பதிவு கொஞ்சம் முன்னாடியே பதிவு செய்திருக்க வேண்டும் வேலைப்பளு, காரணமாகவும், இணைய வசதியின்மையினாலும் பதிவு செய்ய முடியவில்லை. இலவச மடிக்கணினித் திட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை அதை  பதிவு செய்தேன் அவ்வளவுதான்.

 *********************************