Jul 27, 2012

தமிழக அரசின் இலவச மடிக்கணினி ஒரு பார்வை


தமிழகமும்,  தமிழக மக்களும் இந்திய நாட்டிற்கே  முன்னோடிகள் என்பதை தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கியிருக்கும் இலவச மடிக்கணினித் திட்டம் மூலமே தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த இலவச மடிக்கணினித் திட்டம் ஒரு புரட்சிக்கரமான திட்டமும் கூட.  இந்த திட்டத்தின் மூலம் தமிழக மாணவர்களின் திறமை மற்ற மாநிலத்தவர்களுடனும், நாட்டினருடனும் போட்டிப் போடும் அளவிற்கு உயரும்.

கணினியினை இதற்கு முன் தன் கரங்களால் தீண்டிப்பார்க்காத மாணவர்கள் கூட இன்றைக்கு தன்னுடைய மடியில் மடிக்கணினி எனும் அற்புதமான அறிவுக் குழந்தையினை தவழவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.  இந்த சாதனை நம்முடைய தமிழக  அரசினையே சாரும்.

இன்று தொலைக்காட்சிப் பெட்டி நம்மை எந்தளவிற்கு பண்பாட்டு படையெடுப்பின் மூலம் அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை கண்கூடக் காண்கிறோம்.  அவ்வாறு இருக்கையில் இந்த  இலவச மடிக்கணினி திட்டம் உண்மையிலேயே  தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.

ரிச்சர்.எம்.ஸ்டால்மன் அவர்கள் சென்னைக்கு வருகைத் தந்த பொழுது கேரளா மாநிலத்தைக் குறிப்பிட்டு சொன்னார் (நேர்காணல் இங்கு தமிழில் உள்ளது).  கணினிதொழில்நுட்பத்தில் அவர்கள் லினக்ஸ் இயங்குதளத்தையும், அகம் திறந்த மென்பொருள்களையுமே பயன்படுத்தி வருகின்றனர்.  அதுபோல...

தமிழக அரசு அளித்துள்ள இந்த இலவச மடிக்கணினியில் விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளம் இரண்டையும் இரட்டை நிறுவலாக அளித்தற்கு பதிலாக, லினக்ஸ் இயங்குதளத்தை மட்டும் நிறுவிக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 அரசுக்கும் பலகோடி ரூபாய்கள் மிச்சப்பட்டிருக்கும், அவ்வாறு மிச்சப்பட்ட தொகையினை தமிழக அரசு மக்கள் நலனுக்குக்காக பயன்படுத்தியிருக்கலாம்.

இத்தனை லட்சம் தமிழக மாணவர்களும் லினக்ஸ் பயன்படுத்த கற்றுக்கொண்டால் அது எவ்வளவு பெரிய புரட்சியாகவும், செய்தியாகவும், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகவும் இருந்திருக்கும்.

இந்த செய்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் கூட அரசு இதை செயல்படுத்த விரும்பவில்லை. 'ஹிலாரி க்ளிண்டன்' அவர்களின் வருகைக்கூட இதற்கு ஒரு காரணம் என்று வினவு  இணையதளத்தில் செய்தி வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:

மைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி!

இதைப் பற்றி தெஹெல்கா இதழ் வெளியிட்ட கட்டுரை

Arising knowledge for tamilnadu students

இலவச லேப்டாப்

இடதுசாரி இணையதளமான மாற்று தளம் கூட லினக்ஸா? விண்டோசா? மாணவர்களுக்கு எது தேவை? என்று ஒரு மிக அருமையான கட்டுரையினை வெளியிட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்த கடினமாக இருக்கும், ஏதாவது பிரச்சனை என்றால் ஆலோசனைகள், உதவிகள் கிடைக்காது என்று கூறினால் அது ஒரு தவறான வாதமே.  ஏனென்றால் கணினியை முதன்முதலாக பயன்படுத்துபவருக்கு விண்டோஸ் இயங்குதளமாக இருந்தாலென்னா, லினக்ஸ் இயங்குதளமாக இருந்தாலென்னா அவர்களின் தேவை கணினியின் மூலம் நிறைவேறினால் சரி.

அத்துடன் இன்று தமிழிலேயே லினக்ஸைப் பற்றி நிறைய வலைதளங்கள் வந்தாச்சு.  ஏன் லினக்ஸைப் பற்றி தமிழிலேயே கணியம் என்ற அற்புதமான மாத இதழ் கூட வந்தாச்சு  இதற்கு மேல் என்ன வேணும்.  லினக்ஸை பயன்படுத்த ஆரம்பித்தால் அதனைப் பற்றிய விவாதம் மாணவர்களிடம் நடக்கும், இதைப் பற்றிய செய்திகளை தேடுவார்கள், போகப் போக லினக்ஸைப் பற்றி நிறைய தெரிந்துக்கொள்வார்கள்.

TAMILNADU GOVT. FREE LAPTOP என்ற வலைதளமும் ஆரம்பிக்கப்பட்டு நான்கைந்து கட்டுரைகள் கூட எழுதி வெளியிடப்பட்டு விட்டது.

'லினக்ஸ் பயன்படுத்துவது கடினம்'  இப்படியொரு எண்ணம் கணினி பயன்படுத்துபவர்களிடமும், கணினி அறிவியல் படிக்கும் மாணவர்களிடமும் ஏன் பல்கலைகழகங்களிலும், கல்லூரிகளிலும் கணினி அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களிடமும் கூட இருந்து வருகிறது,

'லினக்ஸ் பயன்படுத்துவது கடினம்' என்ற செய்தியும் பரப்பப்பட்டும் வருகிறது.  இந்த தவறினை ஆசிரியர்கள் எந்த தருணத்திலும் செய்யக்கூடாது.

இப்படியே பயன்படுத்துவது கடினம் என்றுக் கூறிக்கொண்டே போனால் எப்பொழுதுதான் லினக்ஸைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது. 

எந்தவொரு அறிவியல் தொழில்நுட்பமும்,  கண்டுபிடிப்பும்  சமுதாயத்திற்கும்  மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்பட  வேண்டும்.   அவ்வாறு அறிவியலையும்,  தொழில்நுட்பத்தையும் நல்ல முறையில்  பயன்படுத்திய நாடுகள் இன்று  பொருளாதார ரீதியாகவும்,  வாழ்கைத்தரத்திலும்  உயர்ந்திருக்கின்றன.

'என்னங்க மாணவர்களுக்கு போயி மடிக்கணினியினைக்  கொடுக்கலாமா?'  அதை  அவர்கள் தவறாக  பயன்படுத்தத்தானே வாய்ப்பிருக்கிறது என்று குறைக்கூறுபவர்களும் உண்டு.

இதில் குறைக்கூற என்ன இருக்கிறது.  மிகவும்  அற்புதமான ஒரு கருவியினை  அரசு  மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறது,  இந்தக் கருவியினைப் பயன்படுத்தி தங்களுடைய கல்வியறிவையும், பொதுஅறிவையும்,  கணினியினை இயக்கும் அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம்.   இதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டியது மாணர்வர்கள் ஒவ்வொருவரினுடைய கடமை.

நான் ஒரு Diploma and B.E., Computer Science படித்த மாணவன் என்ற முறையில் கூறுகிறேன் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள இலவச மடிக்கணி நல்ல அமைப்புடனும், போதுமான வன்பொருள்களையும் கொண்டுள்ளது.


CD/DVD Drive, Bluetooth, WiFi, வசதிகள் இல்லை என்று கவலைப்பட தேவையில்லை.  இந்த வன்பொருள்கள் பயன்பாட்டிற்கு அவசியம் வேண்டும் என நினைத்தால் தனியாக வாங்கி இணைத்துக்கொள்ளலாம்.


  • Bluetooth Stick Rs.100 க்கே கிடைக்கிறது,
  • WiFi அந்தளவிற்கு தேவைப்படாது WiFi வசதி உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தேவைப்பட்டால் வாங்கி இணைத்துக்கொள்ளலாம்
  • CD/DVD Drive கொஞ்சம் விலை கூடுதலான வன்பொருள், என்னைப் பொறுத்த மட்டில் CD/DVD Drive ஆனது இயங்குதளங்களை நிறுவமட்டும்தான் பயன்படுகிறது
  • இப்பொழுது இயங்குதளங்களைக் (விண்டோஸ்-7, உபுண்டு ) கூட USB மூலம் நிறுவிக்கொள்ளலாம்.


இதைவிட இன்னொரு கொடுமை என்னை சந்திக்கும் சில தோழர்கள் யாம்பா கதிர்வேலு இந்த அரசு கொடுத்த மடிக்கணினி என்ன விலை அடக்கமாகும் எனக் கேட்கிறார்கள்?  ஏன் இந்த கேள்வியினைக் கேட்கிறார்கள் என்று எனக்கொன்றும்  புரியவில்லை, விலையினை வைத்து மடிக்கணினியின் செயல்திறனை அளவிடக்கூடாது.

கணினி அறிவியலை  முதன்மைப்  பாடமாக எடுத்துப்  படிக்கும் மாணவர்கள் (12-ம் வகுப்பு மாணவர்களிலிருந்து - பொறியியல் படிக்கும் மாணவர்கள் வரை)  இந்த இலவச மடிக்கணினியினை  மேலும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்த இலவச மடிக்கணினி மிகப்பெரிய  பயன்மிக்க  மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவிசெய்யக்கூடிய ஒன்று.

நல்ல முறையில் பயன்படுத்துவது,  தவறான முறையில் பயன்படுத்துவதும் மாணவர்களின் கையில்தான் இருக்கிறது.

இணைய வசதியினை  கைப்பேசி மூலம் இணைத்து இணையத்தைப்  பயன்படுத்திக்கொள்ளலாம்.  என்னைப் போன்ற கிராமப் புற மாணவர்கள் இணைய வசதியினைப் பயன்படுத்த நகரங்களை நோக்கி செல்ல வேண்டிய அவசியமில்லை.  சுருக்கமாக சொல்லப்  போனால் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய பயன்மிக்க உதவி.

இன்றைய தேதியில் ஒரு குக்கிராமமாக இருந்தால் கூட அங்கு 2-பொறியியல் படிக்கும் மாணவர்கள், 10-கல்லூரிப் படிப்பு படிக்கும் மாணவர்கள், 5-பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள்.  இவர்களெல்லாம் கண்டிப்பாக கணினியினைப் பற்றி தெரிந்தவர்களாகவும், கணினியைப் பற்றி முன் அனுபவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்,  கணியினை இயக்குவதுப் பற்றி சந்தேகம் உள்ள மாணவர்கள் இவர்களிடம் கேட்டு தெளிவடைந்துக் கொள்ளலாம்.

கணினி பயிற்சி மையத்திற்குச் சென்று பயிலும் மாணவர்கள் அங்கு சொல்லிக்கொடுத்ததை வீட்டிற்கு வந்து சுதந்திரமாகவும், கூடுதலாகவும் செய்துப்பார்க்கலாம்.

சொந்தமாக நிரல்கள் எழுதிப் பார்க்கலாம்,  இன்னும் நிறைய சொல்லிக்கொண்டேப் போகலாம்.  5-மணி நேரத்திற்கு குறையாமல் மின்சக்தி இந்த இலவச மடிக்கணியில் இருக்கிறது. ஆகையால புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஏ.சி யை விட அற்புதமான குளிர்ச்சியினைக் கொண்ட நல்ல சுத்தமான கற்றோட்டத்துடன் உள்ள மரத்தடி நிழல்கள் கிராமங்களிலே உண்டு அங்கு எடுத்துச்சென்று கணினி பயிலலாம்.

உங்களுக்கு தெரியாமலையே நீங்க கணினியில் வல்லுனராகிக் கொண்டிருப்பீர்கள்.  ஆக மொத்தம் இந்த ' இலவச மடிக்கணினி மாணவர்களிடையே மாற்றத்தைக் கொண்டும் வரும் கணினி'.

*********************************

இந்தப் பதிவு கொஞ்சம் முன்னாடியே பதிவு செய்திருக்க வேண்டும் வேலைப்பளு, காரணமாகவும், இணைய வசதியின்மையினாலும் பதிவு செய்ய முடியவில்லை. இலவச மடிக்கணினித் திட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை அதை  பதிவு செய்தேன் அவ்வளவுதான்.

 *********************************

17 comments:

  1. லினக்ஸ்-யை பற்றியும், தங்களின் ஆதங்கத்தையும் படித்தேன். நீங்கள் சொல்வது போல் மாணவர்கள் தவறாக பயன் படுத்தாமல் இருந்தால் நலம்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நன்றி திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  3. நீங்கள் குறிப்பிட்டது போல் இந்த மடிக்கணினி திட்டம் கிராமபுற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அதை அவர்கள் தவறாக பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது.

    ReplyDelete
  4. சரியாக வழிகாட்டினால் மாணவர்கள் தவறாக செல்லும் ஆபத்தை குறைக்கலாம். வழிகாட்டுதல் இல்லாமல் இருப்பதே அவர்கள் தவறான வழிக்கு கொண்டுசெல்கிறது. மாணவர்களை ஒபன் சோர்ஸ் போன்ற தன்னார்வ குழுமங்களில் ஈடுபட அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்

    ReplyDelete
  5. Thanks Mani.

    நீங்கள் கூறுவது உண்மைதான் மணி. அதற்கான முயற்சிகளை செய்வோம். லினக்ஸ் பயன்படுத்துவதின் நன்மையினையும், இதன் பின்புலத்தில் உள்ள அரசுகளின் அரசியல் தலையீடுகளையும், சமுதாயத்திற்கான பயனையும் மாணவர்களிடத்தில் எடுத்துக்கூறுவோம்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. மூன்று மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு இந்த மடிக்கணினி கொடுத்தார்கள். என்னுடன் படிப்பவர்கள் கொடுத்த ஒரு மணி நேரத்திலேயெ அவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர். பலபேர் லேப்டாப்பில் படம் ஒட அமைதியாக சிரித்துகொண்டிருந்தனர். என்னத்த சொல்றது...?

    ReplyDelete
  8. மரியாதைக்குரிய நண்பரே,வணக்கம். தங்களது பதிவுகள் பயனுள்ளதாக இருக்கின்றன.வாழ்த்துக்கள்.மரியாதைக்குரிய திண்டுக்கல் தனபாலன் அவர்கள் அத்தனை வலைப்பதிவுகளையும் பார்வையிடுபவர் போல தெரிகிறார்!?!?!!? அவருக்கும் வாழ்த்துக்கள் பல என paramesdriver // tamil nadu science forum// thalavady-sathy-Erode Dt.

    ReplyDelete
  9. நீங்கள் சொன்ன செய்திகள் அனைத்து மிக அருமை. தவறாமல் பயன்படுத்தாமல் இருந்தால் இன்னும் அருமை. நன்றி தோழரே

    ReplyDelete
  10. அருமையான பதிவு தோழரே! வெகு நட்களாக வலைப்பூவை பார்வையிட முடியவில்லை,
    இங்கு ஒரு பிழை தோழரே!
    //CD/DVD Drive கொஞ்சம் விலை கூடுதலான மென்பொருள், என்னைப் பொறுத்த மட்டில் CD/DVD Drive ஆனது இயங்குதளங்களை நிறுவமட்டும்தான் பயன்படுகிறது//

    ''மென்பொருள்'' இல்லை வன்பொருள்...

    ReplyDelete
  11. நன்றி அருமைத் தோழர் சரவணன் அவர்களே. பிழையினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. பிழையினை திருத்தம் செய்து விட்டேன். தாங்களும் ஓய்வு நேரங்களில் லினக்ஸ் தொடர்பான கட்டுரைகளை எழுதி தொடர்ந்து பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  12. ம் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் தோழா.....

    ReplyDelete
  13. நல்ல தகவல் அரசு மடிகணினி பற்றி விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.