என்னைப் பற்றி

சென்னையில் Python Developer ஆக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். சுதந்திர மென்பொருள்(Freedom Software) தத்துவத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும், தீராத காதலும் கொண்டுள்ளேன்.

அனைத்து தொழில்நுட்பங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஆங்கிலம் என்ற ஒன்றைக் காட்டி மாணவர்களை ஆசிரியர்கள் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றனர். காரணம் பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம், அறிவியல் என அனைத்தையும் ஆங்கிலத்திலேயே நாம் அனைவரும் படித்துக்கொண்டிருக்கிறோம். தமிழ்வழிக் கல்வியில் பயின்று, கிராமப் புறத்திலிருந்து வரும் மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆங்கிலம் என்பது எல்லா வகையிலும் பிரச்சனையாக இருக்கிறது. ஆங்கிலத்தை விட்டு விட்டு அப்படியே தமிழில் படிக்க விரும்பினாலும் அதற்கான வழிகள் இன்னும் அமைக்கப்படவில்லை. சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆராய்ச்சி படிப்பு முதற்கொண்டு அனைத்தையும் தங்கள் தாய்மொழியிலேயே மேற்கொள்கின்றனர். அவ்வாறு இந்தியாவில் படிக்கமுடியுமா?  என்பதற்கான பதில் கேள்விக்குறியே.

ஏங்க தமிழ்ல படிச்சு என்னத்துக்குங்க ஆகப்போகுது? எல்லாமே ஆங்கிலத்திலேயேத்தானே இருக்கு. ஆங்கிலம் தெரிந்தால் எதையும் நான் எளிமையாக கற்றுக்கொள்ளமுடியுமே? என்ற கேள்வியை படித்தவர்கள் முதல் பாமரர் வரைக்கும் கேட்க ஆரம்பித்து விட்டனர். இதே கேள்வியை சீனர்களோ, ஜப்பானியர்களோ கேட்க மாட்டார்கள். காரணம் அவர்கள் தங்கள் மொழியை காக்க வேண்டும், அனைத்தும் நம் தாய்மொழியிலேயே கிடைக்க வேண்டும் என்ற அக்கறையுடன் உள்ளனர். ஆனால் நாம்? உலகில் எந்த மொழியும் தமிழ் மொழியுடன் போட்டி போட முடியாது. அந்தளவிற்கு சுயமாக தனித்து இயங்கக்கூடிய மொழி நம் தாய்மொழித் தமிழ் மொழி. தமிழ்வழியில் படிப்பதற்கான பிரச்சனை தமிழ் அல்ல. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்று எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் எல்லாமே ஆங்கிலத்தில் கிடைக்கிறது. ஆனால் இந்த துறையிலுள்ளவைகள் தமிழில் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை, அக்கறையும் இன்னும் காட்டப்படவில்லை. கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி என எந்தவொரு தொழில்நுட்பத்தைக்  கற்றவராயினும் ஒவ்வொருவரும் தாம் கற்ற விஷயங்களை அவசியம் தமிழில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும் பட்சத்தில் எந்த தகவலையும் நாம் தமிழில் பெற முடியும் என்ற நம்பிக்கை தமிழ்ச் சமூகத்தில் ஏற்படும்.

அந்த வகையில் நான் படித்தது கணினி அறிவியல். என்னுடைய ஆர்வம் FOSS, GNU/Linux. இந்த துறைகளில் நான் கற்றவைகளை இந்த தளத்தில் தமிழில் பகிர்ந்து கொண்டு வருகிறேன். நாம் கற்றவைகளை அவசியம் தமிழில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

மின்னஞ்சல் : linuxkathirvel.info@gmail.com
கல்வி தகுதி : B.E (CSE)., M.B.A., D.C.S.E.,