Mar 3, 2019

நிம்மதி தரும் நிதித் திட்டம்


என்னுடைய அப்பாவும், அம்மாவும் 5-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள். கூலி வேலைப் பார்த்துதான் என்னை Diploma, Engineering, MBA என படிக்க வைத்தார்கள். என் தம்பியை M.Com., M.Phil என படிக்க வைத்தார்கள். அதுபோக குடும்பத்தையும் நடத்தினார்கள்.

இன்றைக்கு நான் வாங்கும் மாதச் சம்பளத்தை விட குறைவாகவே என் பெற்றோர்கள் இருவருடைய சம்பளமும் இருந்தது. இருந்தும் எப்படி குடும்பத்தை திறமையாக நடத்தினார்கள்? என்னையும் என் தம்பியையும் இவ்வளவு படிக்க வைத்தார்கள்?

சேமிப்பு, சிக்கனம்,  தாங்கள் சம்பாதித்த குறைவான தொகையைக்கூட  வருங்காலத் தேவைக்காக திட்டமிட்டு சிறுகச்சிறுக சேமித்து வைத்தது இவைகள்தான் காரணம். இந்தப் பழக்கம் இன்றைய தலைமுறையினராகிய நமக்கு இருக்கிறதா? என்றால், இல்லை என்பதுதான் பெரும்பான்மையாக இருக்கிறது.

எனக்கு திருமணம் ஆகுவதற்கு முன்பு சேமிப்பு, ஆயுள் காப்பீடு, வரி தொடர்பானவற்றில் பெரிதாக ஆர்வம் இல்லை.

திருமணம் ஆன பின்பு என் மனைவியுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று, இதுவரை தாங்கள் சம்பாதித்ததில் எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறீர்கள்? மாதம் மாதம் எவ்வளவு சேமித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். ரஜினிகாந்திடம் "உங்க கொள்கை என்ன?" என்று கேட்டதற்கு "எனக்கு தலையே சுத்திவிட்டது" என்று கூறினார் அல்லவா அதுபோல ஆகிவிட்டது என்னுடைய நிலைமையும்.

அப்படியெல்லாம் எதுவும் சேமிக்கிற பழக்கம் கிடையாது ரம்யா என்று கூறினேன். அப்படியெல்லாம் இருக்கக்கூடாதுங்க நம்முடைய செலவுகளை குறைத்து, மாதம் ஆயிரம் ரூபாயாவது சேமிக்கனும்ங்க என்று கூறினார். எனக்கும் அந்த அக்கறையுடன் கூடிய அறிவுரை சரியென்று பட்டது.

அன்றைய தேதியிலிருந்து சேமிப்பு, முதலீடு, காப்பீடு, நிதித் திட்டமிடல் போன்றவை தொடர்பான புத்தகங்கள், இதழ்கள், இணையதளங்கள் ஆகியவைகளை ஒரு மாத காலம் தொடர்ந்து படித்து வந்தேன், வருகிறேன்.

நிதி திட்டமிடல் தொடர்பாக நான் படித்த புத்தகங்களின் பட்டியல் கீழே உள்ளது. என்னிடம் கிண்டில் கருவி இருக்கிறது. கீழே உள்ள புத்தகங்களில் பெரும்பான்மையானவை கிண்டிலில் படித்ததுதான்.
  1. அறம் பொருள் இன்பம் - வ.நாகப்பன்
  2. பணம் செய்ய விரும்பு - நாகப்பன் புகழேந்தி
  3. வீட்டுக் கணக்கு - சோம.வள்ளியப்பன்
  4. பணமே ஓடி வா - சோம.வள்ளியப்பன்
  5. பணவளக்கலை - டாக்டர் எஸ்.கார்த்திகேயன்
  6. சேமிப்பு - முதலீடு தகவல் களஞ்சியம் - சி.சரவணன்
  7. முதலீட்டு மந்திரம் 108 - சி.சரவணன்
  8. மணி மணி மணி! - அனிதா பட்
  9. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.: ஒரு சிறு அறிமுகம் - சுரேஷ் பரதன்
  10. பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - ராபர்ட் கியோஸாகி
  11. ஷேர் மார்க்கெட்  A-Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
  12. நாணயம் விகடன் - வார இதழ்.(ஆன்லைன் சந்தா வசதி உள்ளது. ஓராண்டுச் சந்தா ரூ.1,500 மட்டுமே. 2006-ஆம் ஆண்டிலிருந்து உள்ள பழைய இதழ்களையும் படித்துக்கொள்ளலாம். விகடன் குழுமத்தில் இருந்து வரும் 11-இதழ்களுக்கும் சேர்த்து ஆன்லைனில் படிப்பதற்கு ஆண்டுச்சந்தா ரூ.1,500 மட்டுமே)
  13. Mutual Funds: The Money Multiplier - Lalitha Thamaraipandy
  14. Let's Talk Money: You've Worked Hard for It, Now Make It Work for You - Monika Halan
  15. 108 Questions & Answers on Mutual Funds & SIP - Yadnya Investments
  16. 16 Personal Finance Principles Every Investor Should Know (Master Your Financial Life Book 1) - Manish Chauhan
  17. 3 Pillars of Financial Security - Manish Chauhan

மேற்கண்ட புத்தகங்களை படித்ததில் இருந்த நான் தெரிந்து கொண்டது இவைகள்தான்

  • காப்பீடு என்பது முதலீடு கிடையாது.
  • டேர்ம் இன்ஷூரன்ஸைத் தவிர வேறு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியும்  எடுக்கக் கூடாது.
  • சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய வருமானத்தை உங்கள் மனைவியோ, பெற்றோரோ, அல்லது உறவினர்களோ யாராவது நம்பியிருந்தால் உங்களுடைய ஆண்டு வருமானத்தைப் போல் 10 அல்லது 15 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.
  • நீங்கள் வாங்கும் சம்பளத்தில் உங்களுடைய வயதின் சதவீதத்திற்கு மேல் சேமிக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் வயது 30 என்றால் உங்கள் சம்பளத்தில் 30% தொகையை சேமிக்க வேண்டும். அதற்கு மேலும் சேமித்தால். அது அற்புதம்.
  • தங்கம், ரியல் எஸ்டேட் என்பது முதலீட்டிற்கு ஏற்றதல்ல. அது ஒரு நல்ல முதலீடும் கிடையாது.
  • உங்களுடைய முதலீடு, சேமிப்பு, காப்பீடு, கடன் விபரங்களை உங்கள் மனைவியுடன் அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும்
  • கிரெடிட் கார்டு தேவையில்லை.
  • ஒவ்வொரு நாளும் ஆகும் செலவை தனியாக ஒரு நோட்டுப்போட்டு குறித்து வைக்க வேண்டும். மாத இறுதியில் அன்றைய மாதத்திற்கான மொத்த செலவை கணவன், மனைவி இருவரும் அமர்ந்து கணக்கீட்டுப் பார்க்க வேண்டும்.
  • பிள்ளைகளின் படிப்பு, உயர்கல்வி, திருமணம் போன்றவைகளுக்கு இப்போதிலிருந்தே சேமிக்க வேண்டும்.
  • ஓய்வு காலத்திற்கான சேமிப்பை முதல்மாத சம்பளம் வாங்கிய தேதியிலிருந்தே தொடங்க வேண்டும்.
  • பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யாமல், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மாதச் சம்பளதாரர்கள் SIP முறையில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாம்
  • வரிச்சேமிப்பிற்கு ஏப்ரல் முதல் தேதியிலிருந்தே திட்டமிட வேண்டும்.
  • வரிச்சேமிப்பிற்காக தேவையில்லாத இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கக்கூடாது.
  • இது போன்ற இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? மேற்கண்ட புத்தகங்களை படித்துப்பாருங்கள். எல்லா புத்தகங்களும் சேர்த்து ரூ.3,000 க்குள்தான் வரும். மூவாயிரம் ரூபாயா??? ஆமாம். நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனின் விலையில் கால்பங்கு.

4 comments:

bandhu said...

மிக நல்ல அறிவுரை. சில வருடங்களாகத் தான் நானும் முறையாக முதலீடுகள் செய்து வருகிறேன். கஷ்டப்பட்டு உழைப்பது பணத்திருக்காகவும் தானே. அந்த பணத்தை சரியாக முதலீடு செய்ய மட்டும் யாரும் ஏன் முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்று புரியவில்லை!

இரா.கதிர்வேல் said...

Thanks, Bandhu.

Anonymous said...

சேமிப்பு மிகவும் நல்லது, ஆனால் என்னை மாதிரி வயது கூடியவர்கள் எப்படி சேமிக்க முடியும். உங்களைப் போன்ற இளையவர்கள் இதை கடைபிடிக்கலாம். வாழ்த்துகள்.நாமதேவன்.

இரா.கதிர்வேல் said...

நன்றி நாமதேவன் சார். உண்மைதான். இளைஞர்களிடன் இருக்கும் காலம்தான் அவர்களுடைய மிகப்பெரிய சொத்து. அதை தவறவிட்டால் அவ்வளவுதான். இன்றைக்குச் சேமித்தால் நாளைக்கு நிம்மதியாக இருக்கலாம்.