Sunday, May 28, 2017

மாட்டுக்கறி


மாற்று அரசியல் என்று சொல்லி வந்த மோடியின் பிஜேபி அரசு மாட்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறது. மாட்டை வைத்து நாட்டையே கலவரபூமியாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மணலை கயிறாக திரிப்பேன், வானத்தை பூமியாக சுருட்டுவேன் என வாய்கிழிய பேசிய மோடி நாட்டை வளர்ப்பதைவிட, தன்னுடைய பிஜேபியையும், ஆர்எஸ்எஸ்ஸையும் நான்றாக வளர்த்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவிற்கு இதுவரை இருந்த  பிரதமர்களிலேயே மோடியைப்போல மோசமான பிரதமராக யாராவது இருந்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. இருந்திருந்தால் யாராவது கூறுங்கள்.

இந்திய சமூகத்தில் ஜாதி முக்கிய பங்காற்றுகிறது. அரசியலிலிருந்து, அரசாங்க உத்தியோகம் வரை ஜாதிதான்.  சைவம் சாப்பிடுவர்கள் உயர்ந்த ஜாதி, ஆட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிடுபவர்கள் அதைவிட கீழே, மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் அதைவிட கீழே என மூன்றுவகையான மக்கள் இருக்கிறார்கள். சாப்பிடும் உணவை வைத்து ஒருவரை மதிப்பிடும் கொடுமை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடையாது. சைவம் சாப்பிட்டால் மூளை வளரும் அறிவு வளரும் என புளுகிக்கொண்டேயிருக்கிறாரகள். மாட்டுக்கறி திங்கும் வெளிநாட்டுக்காரன்தான் விஞ்ஞானத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறான். அத்தனை கண்டுபிடிப்புகளையும் கண்டு பிடித்தான். இன்னும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறான். சைவம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் நாம் மாட்டுச்சாணியை கடவுளாக கண்டுபிடித்ததைத் தவிர வேறு என்ன செய்தோம்? ஒரு குண்டூசியைக் கண்டுபிடித்தோமா?

நான் அசைவப் பிரியன். காரணம் என் தாத்தா. சாகும் முதல் நாள் இரவு வரை அசைவம் சாப்பிட்டவர் அவர். தஞ்சாவூரில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது விடுதியில் தங்கியிருந்த இரண்டாண்டு காலம் சைவம் மட்டுமே சாப்பிட்டுவந்தேன். அதற்கு பெரிதான காரணமெல்லாம் ஒன்றுமில்லை. என் தாத்தாதான் என்னை வளர்த்தார். அசைவம் இல்லாவிட்டால் நானும் என் தாத்தாவும் ஒழுங்காக சாப்பிடமாட்டோம். உனக்கும் உன் தாத்தனுக்கும் ஒரு நாக்குடா. கவுச்சி இல்லாம சாப்பாடு தொண்டைக்குள்ளே இறங்காதே என்று என் ஆத்தா திட்டிக்கொண்டேயிருக்கும். குறைந்தப்பட்சம் கருவாட்டையாவது நெருப்பில் சுட்டுக்கொடுக்கும்.

அசைவத்தால் ஆத்தாவிற்கு கஷ்டத்தைக் கொடுக்கிறோம் என்ற குற்ற உணர்வு பால்யகாலத்தில் எனக்கு வந்தது. தீவிரமாக அசைவம் சாப்பிடுகிறோம் அதை நிறுத்தித்தான் பார்ப்போமே என்கிற உணர்விலே சைவம் சாப்பிட முன்னெடுத்தேன். இதை நினைத்து என் தாத்தா மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். விடுதியில் இருந்து விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போதெல்லாம் என்னை அழைத்து சைவம் உடம்பைக் கெடுத்துவிடும் அசைவம் சாப்பிட்டால்தான் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் என கூறிக்கொண்டே இருந்தார்.

பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டின் தொடக்கத்தில் பெரியாரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளைப் பற்றியும் பெரியார் பேசிவிட்டுத்தான் இறந்தார். உணவைப்பற்றியும் பெரியார் பேசியிருக்கிறார். அரிச்சோறு மனிதனைப் பலவீனப்படுத்தும், அசைவம் மனிதனைஆரோக்கிய வைத்திருக்கும் என்பது பெரியாரின் கருத்து. இன்றைக்கும் பேசப்படும் பேலியோ உணவு முறையைப் பற்றி அன்றைக்கே பேசியவர் அந்த வெண்தாடி கிழவன். நெல், கரும்பு விவசாயம் செய்வதை விட்டு விட்டு விவசாயிகள் ஆடு, கோழி வளரக்கவேண்டும். சைவத்தை விட்டுவிட்டு அசைவ உணவிற்கு மக்கள் மாறினால் ஆடு, கோழி வளர்ப்பில் விவசாயிகள் நிறைய இலாபம் அடையலாம் அறிவுரை என்று கூறினார் பெரியார். பெரும்பாலன் மக்களின் உணவாக இருக்கும் அசைவத்திற்கான வழியை விவசாயிகள் மேற்கொள்ளாமல் வெறும் 3% மக்களின் உணவான அரிசிச் சோறுக்கான வழியை விவசாயிகள் கடைபிடிக்கிறார்கள் என்று விவசாயிகளை கடுமையாக விமர்சனம் செய்தார் பெரியார். வெளிநாட்டினரைப் போல அசைவத்திற்காக மட்டும் மாடுகளை வளர்க்க வேண்டும், அனைவரும் மாட்டுக்கறி சாப்பிடவேண்டும் என பெரியார் கூறினார்.

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நாட்டில் வாழை இலையில் சாப்பிடுவது மிகப்பெரிய குற்றம் என கூறியவர் பெரியார். அதிகமாக தண்ணீர் தேவைப்படும் நாட்டில் கரும்பு, நெல் போன்றவைகளை விளைவிக்கக்கூடாது எனக்கூறியவர் பெரியார்.

இதுபோன்ற பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கியபோது நான் சைவம் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை நினைத்து வெட்கப்பட்டேன். இறுதியாண்டு படிப்பின் தொடக்கத்தில் விடுதியில் அசைவம் சாப்பிட ஆரம்பித்தேன். சிறுவயதில் இருந்ததைப் போன்று அசைவப் பிரியனாக மாறினேன். இன்றைக்கும் எனக்கு பிடித்த உணவு அசைவம்தான்.

சென்னைக்கு வருவதற்கு முன்பு நான் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை.  நான் முதன்முதலில் பணியாற்றிய நிறுவனம் ஒரு சிறிய நிறுவனம். மொத்தமாக  9-பேர் இருந்தோம். எங்கள் மூன்றுபேரைத்தவிர வேறு யாரும் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை. 2015-ஆம் ஆண்டு இறுதி என நினைக்கிறேன். அப்போதுதான் பிஜேபி அரசு மாட்டுக்கறி பிரச்சனையைக் கிளப்பிய நேரம்.

கடுமையான எதிர்ப்புகள் நாடு முழுவதும் பிஜேபி அரசுக்கு எதிராக கிளம்பியது. அதோடு சேர்த்து சமூக வலைதளங்களில் மாட்டுக்கறிக்கான ஆதரவு தீவிரமாகியது. அப்போதுதான் மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் கிளம்பியது. அலுவலகத்தில் இதுபற்றி நண்பர் பிரபாகரனிடமும், கிருஷணனிடமும் நான் கூறிய போது. இதுவரை நீங்க சாப்பிட்டதில்லையா கதிர் நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம் சாப்பிடவதற்கு அவ்வளவு சுவையாக இருக்கும் வாங்க இந்த வார இறுதியில் சாப்பிடுவோம் என கூறினார்.

நான் முதலில் பணியாற்றிய நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. சனிக்கிழமைதான் வார இறுதிநாள். சனிக்கிழமை மதியம் மாட்டுக்கறி சாப்பிட்டுவிடலாம் என திட்டமிட்டோம்.

எங்கள் அலுவலகத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் இஸ்லாமிய தோழர் ஒருவர் பிரியாணி கடை வைத்திருந்தார். அங்கு மாட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி சுக்கா, மாட்டுக்கறி குழம்பு, மாட்டுக்கறி ரசம், மாட்டு மூளை வறுவல், மாட்டு குடல் கறி என மாட்டுகறிக்கான அத்துனை வகையாறாக்களும் கிடைக்கும்.

இந்த கடைக்குச் சென்று பிரபாகரன், கிருஷ்ணன், எனக்கு என்று மூன்று பேருக்கும் மூன்று மாட்டுக்கறி பிரியாணி, மூன்று மாட்டுக்கறி சுக்கா(மாட்டுக்கறி வருவல்) வாங்கினோம். அலுவலகத்தில் வைத்து சாப்பிடுவோம் என முடிவு செய்து அலுவலகத்தில் கொண்டு வந்து சாப்பிட்டோம்.

மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு எப்படி இருக்கும் என எனக்கு ஆர்வம் கிளம்பியது. முதல் முதலில் மாட்டுக்கறியை சுவைத்தபோது அதிசயத்துப்போனேன். அவ்வளவு சுவையாக இருந்தது மாட்டுக்கறி. அதைவிட சுவையாக இருந்தது மாட்டுக்கறி வருவல். 

உண்மையிலேயே மாட்டுக்கறியின் சுவைக்கு முன்னால் ஆட்டுக்கறியெல்லாம் நிற்கவே முடியாது. கோமாதாவோட கறி அவ்வளவு சுவையாக இருக்கும். இன்றைக்கு ஆட்டுகறியின் விலையோடு ஒப்பிட்டால் மாட்டுக்கறியின் விலை மிகவும் குறைவு. விலையோ குறைவு, சுவையோ அதிகம் அதுதான் மாட்டுக்கறி. ஆனாலும் நம்மவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை காரணம் ஜாதி.

மாட்டுக்கறியில் அதிகமாக சத்துக்கள் இருக்கின்றன, உடலுக்கு நல்லது, உடலுக்கு ஊக்கமளிக்கும் என பல காரணங்கள் இருந்தாலும், அதற்காகவெல்லாம் சாப்பிடாமல் பிஜேபிக்கு எதிரான மனோபாவத்தில் அன்றைக்கு மாட்டுக்கறி சாப்பிட ஆரம்பித்தேன். பிறகு அதைப்பற்றிய செய்திகளையும், மாட்டுக்கறியில் இருக்கும் அரசியல் பற்றியும் படிக்க ஆரம்பித்த பின்பு, இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடுவது ஒரு புரட்சியாகவே தெரிந்தது. அன்றிலிருந்து இன்றுவரை வாரம் ஒருமுறை தவறாமல் மாட்டுக்கறி சாப்பிட்டுவிடுவேன்.  சென்னையில் மாட்டுக்கறி எளிமையாக கிடைக்கும். காரணம் பெரியார் மண்.

ஒருவருடைய உணவுப்பழக்கத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அரசாங்கம், பிரதமர் உட்பட. அவனவன் விருப்பப்பட்டதை அவனவன் சாப்பிட்டுக்கொள்வான். நீ இதைச் சாப்பிடக்கூடாது, இதைத்தான் சாப்பிடவேண்டும் என்பது சர்வாதிகாரம்.



மற்ற நாடுகளிலெல்லாம் Meat, Non-Meat என்றுதான் கூறுவார்கள். இந்த பாழாய்ப்போன இந்தியாவில்தான் Veg, Non-Veg என்கிற வார்த்தைகள் உண்டு. இதில் pure veg வேற.

பெரும்பான்மையை வைத்து சிறுபான்மையை வரையறுப்பார்கள் ஆனால் இங்குதான் எல்லாமே தலைகீழ். இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்கள் 97% பேர், சாப்பிடாதவர்கள் 3% பேர். அப்படியென்றால் அசைவம், அசைவம் அல்லாத என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆனாலும் சைவம், சைவம் அல்லாத என்றுதான் கூறுவார்கள்.

மாட்டுக்கறி தொடர்பாக மத்திய அரசு அறிவித்திருப்பது விவசாயிகளுக்கும், கிராமத்தில் ஆடு, மாடு வளர்ப்பவர்களுக்கும்தான் மிகப்பெரிய பாதிப்பை உண்டு பண்ணும். நான் கிராமத்துக்காரன் என்பதால் மாட்டு வளர்ப்பைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்.

கிராமங்களில் கன்று ஈன்ற முடியாத தொத்தை மாடுகளை வியாபாரிகளிடம் விற்றுவிட்டு அந்த காசைக்கொண்டு புதிதாக பசுங்கன்று ஒன்றை வாங்கி வளர்ப்பார்கள். அது கன்று ஈன்றவுடன் அதிலிருந்து பால் கறந்து வருமானம் பார்ப்பார்கள். காளை கன்றுக்குட்டி போட்டால் ஓரளவிற்கு பெரிதாக வளர்ந்த பின்பு வியாபாரியிடம் விற்று விடுவார்கள். பசுங்கன்று போட்டால் அதை வளர்த்து பால் கறந்து விற்பார்கள். இது ஒரு சுழற்சி. உணவு சங்கில போல. அரைடவுசர்களின் மோடி அரசாங்கம் இந்த சங்கிலியை இப்போது வெட்டிவிட்டது. விளைவு விபரீதமாகத்தான் இருக்கும்.

எங்கள் வீட்டில் இப்போது இரண்டு மாடுகள் இருக்கிறது. என் அம்மாவும், சித்தியும் அதைக்கவனித்துக்கொள்கிறார்கள். அதை மேய்ப்பது, அதற்கு புல் கொண்டுவந்து போடுவது, காலை மாலை பால் கறந்து விற்பது என்பது எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு முக்கியமான வேலை. கிராமத்தில் இருப்பவர்களிடம் கேளுங்கள் மாட்டை பராமரிப்பது எவ்வளவு கஷ்டம் என்று கூறுவார்கள். எங்கள் ஊரில் மாட்டுக்கு புல் அறுக்கச்சென்று விரியன் பாம்பு கடித்தவர்களே 10-க்கு அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அதில் என் அம்மாவும் ஒரு ஆள். விரியன் பாம்பு கடித்ததால் செத்துப் பிழைத்தவர். தஞ்சை மருத்துவக்கல்லூரிக்குச் சென்று காப்பாற்றினோம். மாட்டிற்காக மரணத்தையே எட்டிப்பார்த்தவர்.

நான் பாலிடெக்னிக் படித்த போது(2004-2007) எங்கள் வீட்டில் 20 மாடுகள் இருந்தது. விடுமுறை நாட்களில் காலை 9-மணிக்கு சாப்பிட்டுவிட்டு 20 மாடுகளையும் மேய்க்க ஓட்டிச்செல்வேன். மாலை 3.30 மணி வரைக்கும் மேய்த்து விட்டு திரும்பி வீட்டிற்கு ஓட்டி வருவேன். ஆனால் இப்போது 2-மாடுகள்தான் இருக்கிறது. காரணம் என் ஆத்தாவுக்கு வயதாகிவிட்டது. நான் சென்னைக்கு வேலக்கு வந்துவிட்டேன். மாடுமேய்க்க ஆள் கிடையாது. மாடு வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று சிறுவயதிலிருந்தே மாடு மேய்த எனக்கு நன்றாக தெரியும். ஜல்லிக்கட்டு நடந்தால் நாட்டு மாடு காப்பற்றப்படும் என உருப்படாத ஒரு வாதத்தை வைத்தார்கள். நாட்டு மாடு மட்டுமல்ல, எந்த மாட்டை பாதுகாக்க வேண்டுமானாலும் அந்த மாட்டால் பலன் ஏற்படும் அளவிற்கு ஏற்பாட்டை செய்தால்தான் பாதுகாக்க முடியும்.

எங்கள் ஊரில் உழவுக்கான காளை மாடுகள் யார்வீட்டிலும் இப்போது இல்லை. காரணம் டிராக்டர்களை வைத்து நடவு நட்டுக்கொள்ளலாம். கடலை விதைப்பதற்குத்தான் ஏர் கிடைக்கவில்லை. பக்கத்து ஊரிலிருந்துதான் ஏர் பிடித்துவருகிறோம். பசுமாட்டைவிட காளை மாட்டை வளர்ப்பது மிகவும் கடினம். வைக்கோல் போர் வேண்டும், ஒரு நாளைக்கு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு என்று 400ரூபாய் வேண்டும். ஒரு நாளைக்கு 400ரூபாய் வருமானம் வரும் அளவிற்கு விவசாயிக்கு என்ன வழி இருக்கிறது கிராமத்தில். மாதம் பண்ணிரெண்டாயிரம் ரூபாய் வேண்டும் மாட்டுக்கு. டிராக்டர்கள் வந்தது விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது. உழுகும் போதும், மாட்டுவண்டியில் பூட்டும்போது சில மாடுகள் விழுந்து படுத்துக்கொள்ளும். அந்த காளை மாட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது? பசு மாடென்றால் பால் கறக்கலாம், காளை மாட்டில் பால் கறக்க முடியுமா? பாலும் கறக்க முடியாது, ஏறும் உழுவு முடியாது, மாட்டு வண்டியிலும் பூட்ட முடியாது. அந்த மாட்டை வைத்துக்கொண்டு மாதம் 12000 ரூபாய் நட்டபட்டுக்கொண்டிருந்தால் விவசாயி எப்படி பிழைக்க முடியும். தற்கொலைதான் பண்ணிக்கொள்ள வேண்டும்.

விவசாயி மாடு வைத்திருப்பது இலாபத்திற்குத்தான். பால்கறந்து விற்றால் பணம் கிடைக்கும் என்பதால்தான். கோமாதாவை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கமெல்லாம் அவர்களுக்கு கிடையாது. வேண்டுமென்றால் பசுபாதுகாவலர்கள் அதைச் செய்யட்டும். தன்னைக் காப்பாற்றும் மாட்டை தன்னுடைய குடும்பத்தில் ஒருவரைப்போல கவனித்துக்கொள்வான் விவசாயி. மாட்டைக் கவனித்துக்கொள்வதில் விவசாயியைவிட அக்கறையானவர்களா அரைடவுசர்கள்? பால்கறந்த மாடு நோய் வாய்ப்பாட்டு இறக்கும் போது குடும்பத்தில் ஒருவர் இறந்ததைப்போல நினைத்து கதறி அழுத விவசாயிகளைப், பெண்களைப் பார்த்ததுண்டா? என் கிராமத்தில் அந்த கொடுமையை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அரைடவுசர்களுக்கு தெரியுமா இதெல்லாம். அவர்களுக்கு மாட்டு மூத்திரத்தில் தங்கம் கிடைக்குமா என ஆராய்ச்சி பண்ணத்தெரியும். பாம்பு கடியெல்லாம் பட்டு பால் கறந்து தயிர், மோர், நெய்,  வெண்ணை கடைந்து கொடுத்தால் விரல் சொட்டச்சொட்ட சாப்பிடுவார்கள்.

தான் வளர்க்கும் மாட்டால் பலனில்லை என்றால் அது விவசாயிக்கு மேலும் சுமையைக்கொடுக்கும். மாட்டிற்கு வைக்கோல் வாங்க வேண்டும், அதை மேய்க்க வேண்டும், மருத்துவம் பார்க்க வேண்டும். இவ்வளவும் செய்து பலனொன்றுமில்லையென்றால் ஏற்கனவே வறுமையில் வாடும் விவசாயிக்கு சுமையாக அமையும். ஏற்கனவே தொல்லையில் இருக்கும் விவசாயிக்கு இன்னொரு தொல்லையாக எதற்கு தொத்தை மாடு? கன்று ஈன்ற முடியாத மாட்டை கறிக்குத்தான் விற்க வேண்டும். வேறு என்ன வழி இருக்கிறது? அரசாங்கம் விளக்க வேண்டும். வயதான மாடுகளை இறைச்சிக்காக விற்காமல் மெரினாவில் சமாதியா அமைக்க முடியும்? மாட்டை என்ன செய்ய வேண்டுமென்று முடிவெடுக்க வேண்டியது அதை வளப்பவன்தான். அரசாங்கம் அல்ல.



மூன்று வருடங்களில் மோடி என்ன செய்து கிழித்தார்? என்ற கோள்வியை திசைதிருப்ப மாட்டுக்கறி பிரச்சனையை கிளப்பிவிட்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஒவ்வோரு ஆண்டின் முடிவிலும் மாடு தொடர்பான பிரச்சனையைக் அரைடவுசர்கள் கிளப்புகிறார்கள். காரணம் ஒவ்வொரு ஆண்டு முடியும் போது மோடி என்ன செய்தார்? என்று கேள்வி எழும். அதற்கு பதில் கூற முடியாது.

உழவுத்தொழில் செய்வது பாவம் என்று கூறுபவர்கள் வேறு யாருமல்ல பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்தான். அப்படி கூறுபவர்கள் விவசாயிகளின் மீது அக்கறை கொள்வார்களா? அவர்களிடம் எதிர்ப்பார்ப்பது போன்ற பைத்தியக்காரத்தனம் வேறு ஏது?

மாட்டுக்கறி தின்பது இனிமேல் புரட்சிக்கான குறியீடாக இருக்க வேண்டும்.



பசுமாட்டை மட்டும் ஏன் புனிதமாக கருத வேண்டும்? பசுமாட்டை விட எருமை மாடுதான் அதிகம் பால் கறக்கிறது அப்படிப்பார்த்தால் எருமை மாடுதான்  பசுமாட்டைவிட போற்றி பாதுகாக்க வேண்டியது. மாட்டை மேய்த்துக்கொண்டு இந்தியாவிற்குள் வந்தவர்கள் இன்றைக்கு அனைத்து பதவி சுகத்தையும் அனுபவிக்கிறார்கள். அந்த நன்றிக்கடனுக்காக மாட்டின் மீது பாசம் இருக்கத்தான் செய்யும். என்னதான் இருந்தாலும் மாடுமேய்ப்பது அவர்களது குலத்தொழில் அல்லவா? மாட்டின் தலையை வெட்டி யாகம் செய்தவர்கள் யார்? மாட்டின் ஊனை ரசித்து சுவைத்தவர்கள் யார்? என்பதெல்லாம் மக்கள் அறிவார்கள். விடை தெரியவில்லையா? இந்த புத்தகத்தைப் படித்துப்பாருங்கள்.



மாட்டுக்கறி விஷயத்தில் கேரளா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. சரியான முதல்வரைத்தான் கேரள மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். சிறுதெய்வ வழிபாட்டில் ஆடு, மாடு, பன்றி, எருமை, கோழி பலியிடுவது இயல்பான ஒன்று. அதற்கு தடை விதித்த ஜெயலலிதாவின் வழித்தோன்றல்கள் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இப்போது அதிமுக எனும் குதிரையை ஓட்டிக்கொண்டிருப்பதே அரைடவுசர்கள்தானே. தமிழ்நாட்டை ஆளும் அதிமுக இதை எதிர்க்காது.



எதிர்கட்சி தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் இந்த அறிவிப்பு வந்த உடனையே கடுமையாக கண்டித்திருக்கிறார். அதிமுக, தமிழ்த்தேசியவாதிகளைத் தவிர அனைவரும் இந்த அறிவிப்பை எதிர்த்திருக்கிறார்கள். ஒரு வேளை தமிழ்த்தேசியவாதிகளுக்கு தன்னுடைய எஜமானர்களிடமிருந்து உத்தரவு வந்தால் எதிர்த்து அறிக்கை விடுவார்கள்.




முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெரியாரும், அம்பேத்கரும் இந்த நாட்டிற்கு தேவைப்படுகிறார்கள். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல பெரியாரும், அம்பேத்கரும். இந்தியாவின் அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வு பெரியாரிடமும், அம்பேதகரிடமும்தான் இருக்கிறது. அதை மோடி போன்றவர்கிடமும் தேடியது, தேடுவது பைத்தியக்காரத்தனம்.

என்னப்பா கதிர்வேலு தெழில்நுட்பம் பேச வேண்டிய இடத்துல, அரசியல் பேசுறேனு யாராவது கேட்பீங்க. இங்கு எல்லாமே அரசியல்தான். லினக்ஸ் பயன்படுத்துவதும், அதைப் பரப்புவதுமே அரசியல்தான். யார் மனதும் புண்படாமல் பேச வேண்டுமென்றால், ஆமை வடை சுடுவது எப்படி என்றுதான் பேச முடியும். அப்போது கூட ஆமை வடை எனக்கு பிடிக்காது என்று ஒருத்தர் இருப்பார் அவர் மனது புண்படும். அப்புறம் கதிர்வேல் நடுநிலைவாதியா? இல்லை ஏதாவது அரசியல் கட்சி சார்ந்தவரானு யோசிக்காதீங்க. நானே சொல்லிவிடுகிறேன்.

நான் பெரியார் கொள்கைக்காரன்! அவரின் தொண்டன்!
நான் திராவிடன் என்பதில் பெருமைகொள்பவன்!
நான் திராவிடர் இயக்க ஆதாரவாளன்!
நான் அம்பேத்கரின் தொண்டன்!
நான் இந்து மதத்தைப் எதிர்ப்பவன்!
நான் மாட்டுக்கறி சாப்பிடுபவன்!

சரி ரொம்ப யோசித்து, யோசித்து கட்டுரை எழுதியதால கொஞ்சம் களைப்பா இருக்கு. அதோடு தேசத்துரோகினு திட்டி பின்னூட்டம் வேற வரும் அதையெல்லாம் தாங்கும் அளவிற்கு தெம்பு வேணும்ல அதனால ஒரு மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுவிட்டு வார்றேன். அப்பத்தான் full energy யோட இருக்கலாம்.

அட அரைடவுசர்களா பால்கறக்க முடியாத, உழவுக்கு பயன்படாத, மாட்டு வண்டி ஓட்ட முடியாத மாட்டை கறிக்கு விற்கக் கூடாதுன்னா வேற என்னாங்கடா பண்ணுறது? ஒன்னு பண்ணலாம்ங்கோ. வேளா வேளைக்கு மாட்டு மூத்திரைத்தைப் பிடித்து குடிக்கலாம் இல்லைனா உங்கள மாதிரி மாட்டு மூத்திரத்தில் தங்கம், வைரம் கிடைக்குதானு ஆராய்ச்சி பண்ணலாம். போங்கடா வெங்காயங்களா!

6 comments:

  said...

தேசதுரோகி

Anonymous said...

தேசதுரோகி

Anonymous said...

அட விடுங்க இந்த காலகட்டத்தில தேசதியாகியைதான் தேசதுரோகினதேசதுரோகினு சொல்லிக்கிறாங்க . . . . . முட்டாபாசங்க. . . .

பதிவு

மிகவும் சிறப்பு. . .

இரா.கதிர்வேல் said...

Thanks Anonymous!

ஜெகன் said...

நான் இது நாள் வரை மாட்டு இறைச்சி உண்டதில்லை..
இனிமேலும் எனக்கு மாட்டு இறைச்சியை உண்ண விருப்பம் இல்லை.. இதற்கு நான் வாழ்த.. வளர்ந்த சுற்று சூழ்நிலையே கரணம்.

ஆனாலும், தாங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மையே, நானும் என் சிறு வயதில் மாடு மேய்த்துள்ளேன்.. அதன் நன்மைகளும் அதனால் ஏற்படும் வலிகளும் என்னால் உள்-உணர முடிகின்றது. நன்றி..!!!

மற்றும் ..

பெயர் குறிப்பிட மன வலிமையின்றி "Anonymous" User என்ற பெயரில் திருவாளர் இரா. கதிர்வேல் அவர்களுக்கு "தேசதுரோகி" பட்டம் வழங்கி சிறப்பித்த தேசத்தியாகிகளே..!! நீர் வாழ்க..!! நின் குலம் வாழ்க...!!! நின் அறிவு மேலும் வாழ்க...!!!

இரா.கதிர்வேல் said...

நன்றி ஜெகன்!