Nov 30, 2016

புதிய தோற்றத்தில் Skype



லினக்ஸிற்கான Skype புதிய தோற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. என்னுடைய உபுண்டு 14.04 LTS இயங்குதளத்தில் நிறுவி பயன்படுத்திப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. விண்டோஸ் பயனாளர்களுக்கு இந்த தோற்றம் முன்னரே வழங்கப்பட்டுவிட்டது. இப்போது லினக்ஸிற்கு வந்துள்ளது. Alpha பதிப்பாக வெளியிட்டுள்ளனர். 32-bit ஆதரவு கிடையாது. 64-bit வகையிலான லினக்ஸ் இயங்குதளத்தில் மட்டுமே நிறுவி பயன்படுத்த முடியும்.

Skype -ஐ உபுண்டுவில் நிறுவுவது எப்படி? எனத் தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.

புதிய பதிப்பை நிறுவுவதற்கு Skype-ஐ தரவிறக்கம் செய்து விட்டு. கீழ்காணும் கட்டளைகளை இயக்கவும்.

sudo dpkg -i /home/kathirvel/Downloads/skypeforlinux-64-alpha.deb


Nov 23, 2016

500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் - பிரச்சனை தீர்ந்தபாடில்லை

பழைய 500, 1000 ரூபாய் நோட்டு பிரச்சனையைப் பற்றி ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். எனது நண்பர் பிரபாகரனிடம் 2000 ரூபாய் பணம் கேட்டிருந்தேன். அவர் என்னுடைய வங்கி கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாக அனுப்பி வைத்திருந்தார். அதை எடுப்பதற்காக இன்று மதியம் மறுபடியும் வங்கிக்குச் சென்றிருந்தேன். வங்கிக்குள் நுழைந்தவுடனையே ஆச்சரியம் காத்திருந்தது. வங்கியில் மொத்தமே 5-வாடிக்கையாளர்கள்தான் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். ஒருவேளை பணத்தட்டுப்பாடு தீர்ந்துவிட்டதோ என நினைத்தேன்.

வங்கி ஊழியரிடம் சென்று சார் பணம் எடுக்கனும் எனக்கு இங்குதான் வங்கி கணக்கு இருக்கிறது என்று கூறினேன். அவர் உடனே அதெல்லாம் இருக்கட்டும் முதலில் கவுண்டருக்குச் சென்று பணம் கொடுப்பவரிடம்  எனக்கு 2,000 ரூபாய் பணம் தேவை பணம் இருக்கிறதா என கேட்டு வாருங்கள். அவர் இருக்கிறது என்று கூறினால் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என கூறினார்.

சார் பணம் இருக்கிறதாம் என்று கூறினேன். அதன்பிறகு அவர் 'சார் 100 ரூபாய் நோட்டு கிடைக்காது. 2000 ரூபாய் நோட்டு மட்டும்தான் இருக்கிறது. சம்மதம் என்றால் செக் எழுதி எடுத்துக்கொள்ளுங்கள்' எனக்கூறினார். வேறு என்ன செய்வது அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் என் கையில் புதிய 2,000 ரூபாய் நோட்டு இருந்தது.

அப்படினா ப.சிதம்பரம் கூறியது போல பணம் அச்சடித்து முடிக்க இன்னும் 7-மாதங்கள் ஆகும்னு சொன்னது உண்மைதான். கடல்லையே இல்லையாம்ங்கிற மாதிரி பேங்குலேயே பணம் இல்லையாம்.

நான் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னாடி நின்றுக்கொண்டிருந்தவர் பழைய 500 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து வங்கி கணக்கில் செலுத்தச்சொன்னார். உடனே கவுண்டரில் இருக்கும் ஊழியர் இது யாரோட கணக்கு உங்களுடையதா? அல்லது வேறு யாரோ ஒருவருடையதா எனக்கேட்டார். அவர் அதற்கு என் மருமகனுடையது என்று பதில் கூறினார். உடனே வங்கி ஊழியர் நீங்கள் பணம் செலுத்த முடியாது. ஏன் என்பதற்கான விளக்கத்தை அதோ அங்கு நிற்பவரிடம் சென்று கேளுங்கள் என்று வங்கி மேலாளரிடம் அனுப்பி வைத்தார். வங்கி மேலாளர் அவரிடம் 'ஐயா பழைய 500, 1000 ரூபாய் நோட்டை மற்றவர்கள் கணக்கில் செலுத்துவதற்கு வங்கி கணக்கு வைத்திருப்பவரிடம் அனுமதி கடிதம் வாங்கி வர வேண்டும் இல்லையென்றால் செலுத்த முடியாது. புதிய 2000 ரூபாய் நோட்டு, பழைய 100 ரூபாய் நோட்டுக்கு அனுமதி கடிதம் தேவையில்லை' என்று கூறினார்.

நான் மாத இறுதியில் பணம் பற்றாக்குறை ஏற்பட்டால் அம்மாவிடம் சொல்லி 1000 ரூபாய் பணம் அனுப்பி வைக்கச் சொல்லுவேன். தம்பிதான் அனுப்பி வைப்பான். ஆனால் இப்போது இருக்கும் நிலைமையில் என்னுடைய அனுமதி கடிதம் தம்பிக்குச் சென்று, அதன்பிறகு அவன் என்னுடைய கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்க வேண்டும். அப்பாவும், சித்தப்பாவும் வட மாநிலங்களில் இருக்கிறார்கள் அவர்கள் எப்படி எங்களுக்கு பணம் அனுப்புவார்கள்? இங்கு இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் எப்படி அவர்களுடைய குடும்பத்திற்கு பணம் அனுப்பி வைப்பார்கள்? அரசாங்கம் இதைப்பற்றியெல்லாம் யோசித்ததா?

நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமாகிக்கொண்டே செல்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு 56-இஞ்ச் அகலம் நெஞ்சை கொண்ட பிரதமர் பதில் சொல்ல மறுக்கிறார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி கேட்டு பிரதமர் பதில் கூறியதாக இது நாள் வரை நான் அறியவில்லை. ஆனால் வானொலியில் வாய்கிழிய பேசுகிறார். அவருக்கு ஒன்வே கம்யூனிகேசன்தான் பிடிக்கும் போல.

புதிய இந்தியா பிறக்கும், பெட்ரோல் விலை குறையும், பொருளாதாரம் உயரும், மைக்ரோசாப்ட் லினக்ஸ் இயங்குதளம் வெளியிடும்னு பி.ஜே.பி  காரர்களும், ஆர்.எஸ்.எஸ் காரர்களும் உளறிக்கொண்டே இருக்கின்றனர். அதற்கு இந்த இருவரின் சிலீப்பர் செல்லுகளும் ஆமா போடுகிறார்கள். இல்லையென்றால் 'எல்லையில் இராணுவ வீரர்கள்.... JIO SIM-ற்காக வரிசையில்.... கபாலி டிக்கெட்டிற்காக வரிசையில்.....' என பீலா விடுகிறார்கள். என்னதான் ஆகிறதுனு பொறுத்திருந்து பார்க்கலாம் ?

இதுக்குத்தான் மோடி வரணும்னு சொன்னவனுங்களையெல்லாம் நல்லா வச்சு செய்யுறாப்புல பிரதமரு! சாவுங்கடா! மீதம் இருக்கும் 30-மாதங்களிலும் இதைப்போன்ற அடாவடிகள் பி.ஜே.பி ஆட்சியில் தொடரும் என்பது மட்டும் உறுதி!

சரி வாங்க தேசத்துரோகி பட்டத்தையும் அப்படியே பின்னூட்டத்தில் வந்து கொடுத்துவிட்டு போங்க!

Nov 14, 2016

500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்


நிறுவனத்தில் சம்பளம் போட்டவுடன் எனது செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மீதி பணத்தை அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். ஏதாவது பணம் தேவையென்றால் ஊரிலிருந்து அனுப்பிவிடச்செல்லுவேன். காலையில் ஒரு தேநீர், தி இந்து(தமிழ்) நாளிதழ், நக்கீரன், ஆனந்த விகடன், ஒரு நாள் பயணச்சீட்டு, மாலையில் ஒரு தேநீர், எப்போதாவது காலையில் சிற்றுண்டி இவைதான் என்னுடைய செலவுகள். ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்குள் எனது செலவு அடங்கிவிடும்.

இணைய பரிமாற்றத்திற்காக 500 ரூபாயை வைத்துக்கொண்டு மீத பணத்தையெல்லாம் ATM -லிருந்து மொத்தமாக எடுத்து வைத்துக்கொள்வேன். அதிலிருந்து தினமும் 100 ரூபாயை செலவுக்கு எடுத்துக்கொள்வேன் அவ்வளவுதான்.

ஒருநாள் மாலை எனது நண்பர் பிரசன்னா அவர்கள் 'கதிர் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களெல்லாம் செல்லாதாம் மோடி அறிவித்திருக்கிறார்' என்று கூறினார். முதலில் நான் நம்பவில்லை அதன்பிறகு இணையத்தில் நாளிதழ்களை பார்த்த போது மோடி அறிவித்த செய்தி பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போது என்னிடம் நான்கு 100ரூபாய் நோட்டுக்கள் இருந்தது. அடுத்தடுத்த நாட்கள்தான் பிரச்சனை சூடுபிடித்தது. வெள்ளிக்கிழமை காலையில் என்னிடம் ஒரே ஒரு 100 ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. அலுவலகத்திற்குள் நுழையும் போது என் சட்டைப்பையில் 40 ரூபாய் இருந்தது.

எனது அலுவலகத்தின் அருகிலேயே HDFC வங்கி உள்ளது. எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அந்த வங்கியில்தான் கணக்கு தொடங்கி தரப்படும். ஆகையால் என்னுடைய வங்கி கணக்கும் அந்த வங்கியிலேயே இருந்தது. வெள்ளிக்கிழமை காலையிலேயே வங்கி கணக்குப் புத்தகம், செக் புத்தகம், PAN அட்டை போன்றவைகளை எடுத்து வைத்துக்கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டேன்.

மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டு முடித்தப் பிறகு அருகிலிருக்கும் HDFC வங்கிக்குச் சென்றேன். உள்ளே நுழைந்ததும் வங்கி ஊழியர் ஒருவர் அழைத்து 'சொல்லுங்க சார் உங்களுக்கு என்ன வேணும்?' என்று கேட்டார். எனது கணக்கில் பணம் இருக்கிறது அதை எடுக்க வேண்டும் செக் புத்தகமும் வைத்திருக்கிறேன் என்று கூறினேன். ஏதாவது ஒரு அடையாள அட்டை இருக்கிறதா சார் என்று கேட்டார் நான் கொண்டுச் சென்ற PAN அட்டையைக் காண்பித்தேன். ஓகே சார் இதில் ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு வாங்க, அதன்பிறகு உங்களது செக்கில் Self என குறிப்பிட்டு பக்கத்தில் இருக்கும் கவுண்டரில் கொடுங்க சார் என்று கூறினார்.

இரண்டையும் பக்கத்தில் இருக்கும் கவுண்டரில் கொண்டுபோய் கொடுத்தேன் அங்கிருக்கும் பெண்மணி ஒரிஜனல் கொடுங்க சார் என்று கேட்டார். காண்பித்தேன். சீல் வைத்து கையெப்பமிட்டு இரண்டாவது வரிசையில் நில்லுங்க சார் என்று சொல்லி அனுப்பி வைத்தார். செல்லாத 500, 1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்கு ஒரு வரிசையும், வங்கி கணக்கில் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் என இரண்டு வரிசையாக நிற்க வைத்திருந்தார்கள். நான் பணம் எடுப்பதற்காண வரிசையில் நின்றுகொண்டேன்.

அலுவலகத்திற்கு காலையில் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும் போதே வங்கி வாசல்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்ததை பார்த்தேன். சென்னை முகப்பேர் கிழக்கிலிருந்து - கோயேம்பேடு வழியாக - வேளச்சேரி - பள்ளிக்கரனை வரையிலும் அத்தனை வங்கிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில்தான் நின்றுகொண்டிருந்தனர். நாமும் இன்றைக்கு இது போன்ற நீண்ட வரிசையில்தான் நின்று பணம் பெற முடியும் என நினைத்துக்கொண்டே வந்தேன்.

நான் சென்ற HDFC வங்கி முதல் தளத்தில் இருக்கிறது. வங்கிக்கு வெளியிலெல்லாம் மக்கள் வரிசையில் நிற்கவில்லை. நான் காலையில் மற்ற இடங்களில் பார்த்த அளவிற்கெல்லாம் இங்கு கூட்டம் இல்லை. வங்கி அறை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. வரிசையில் நின்றாலும் குளு குளு வசதியோடு வரிசையில் நிற்க முடிந்தது. உண்மையிலேயே வங்கி ஊழியர்களை எவ்வளவ பாராட்டினாலும் தகும். அந்தளவிற்கு மக்களுக்கு உதவிக்கொண்டிருந்தார்கள். வருகை தந்த அனைவருக்கும் அவர்கள் கேட்ட சந்தேகங்களை பொறுமையாக விளக்கினார்கள். விண்ணப்பத்தை நிரப்பிக்கொடுத்தார்கள். மூத்த குடிமக்களை அழைத்துச்சென்று வேலையை முடித்து உடனே அனுப்பி வைத்தார்கள். வங்கியிலேயே ஜெராக்ஸ் எடுத்து கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். நான் சென்ற போது சார் ஜெராக்ஸ் மெசின் வேலை செய்யல அதனால வெளியி போயி ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு வாங்க சார் என்று கூறினார்கள். வங்கி மேலாளர் வரிசைகளை ஒழுங்குப்படுத்தி மக்களுக்கு நிலைமையை விளக்கி கூறிக்கொண்டிருந்தார். தோராயமாக 10-ஊழியர்கள் இருந்திருப்பார்கள் அனைவருமே பணம் வழங்கும் பணியில் முழு உற்சாகத்துடன், அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. மற்ற வங்கிகளில் நடந்த சம்பவங்களை நாளிதழ்களில் படிக்கிற போது உண்மையிலேயே எங்கள் அலுவலகத்தின் அருகில் இருக்கும் HDFC வங்கிக்கு மிகப்பெரிய பாரட்டு விழாவே நடத்த வேண்டும். நாளிதழ்களில் குறிப்பிட்டிருந்தது போன்ற கசப்பான அனுபவங்களை நான் பெறவில்லை.

நான் வரிசையில் நின்றுகொண்டிருந்த போது ஒரு பெண் என்னிடம் பேனாவை வாங்கி மற்ற பெண்களுக்கு விண்ணப்பங்களை  நிரப்பிக்கொடுத்தார். இளைஞர்கள், வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் என அனைத்து தரப்பினரையும் வரிசையில் காண முடிந்தது. ஒரு தம்பதியினர் விடுமுறை போட்டுவிட்டு வங்கிக்கு வந்திருப்பதாக பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறிக்கொண்டிருந்தனர். அவர்களில் கணவர் ஒரு வரிசையிலும், மனைவி ஒரு வரிசையிலும் நின்று கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தை வங்கிக்குள் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தது. எனக்கு முன்பு நின்று கொண்டிருந்தவர் காக்கி காலர் சட்டை பேண்டு அணிந்திருந்தார். நிச்சயமாக அடித்தட்டு தொழிலாளியாகத்தான் இருப்பார். கொஞ்ச நேரம் கழித்து தரையில் உட்கார்ந்து விட்டார். அப்போதுதான் தெரிந்தது அவரது கையில் குளுக்கோஸ் ஏற்றியிருப்பார்கள் போலிருக்கு அதற்கான பேண்டேஜ் ஒட்டியிருந்தார். அனைத்து தரப்பு மக்களையும் தவிக்கவிட்ட பெருமை இந்திய பிரதமர் மோடியையே சாரும். அரசியலுக்கு பிறுகு வருகிறேன்.

அம்மாவிடம் கொடுத்தது போக மீதம் 3000 ரூபாயை கணக்கில் வைத்திருந்தேன். அதில் 500 ரூபாயை வைத்துக்கொண்டு 2500 ரூபாய்க்கு செக் எழுதியிருந்தேன். 2000 ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கிறார்கள் ஆகையால் நமக்கு 2500 ரூபாய்க்கும் 100 ரூபாய் நோட்டுக்கள் தந்துவிடுவார்கள் என நினைத்துச் சென்றேன். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. புதிய 500 ரூபாய் நோட்டு வங்கிக்கே வரவில்லையாம். நான் கவுண்டரில் செக்கை நீட்டியபோது மதியம் 2.30 மணி கவுண்டரில் இருந்த பெண் சாப்பிடவில்லை என நினைக்கிறேன். Frooti juice packet வைத்திருந்தார். சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதை குடிச்சிக்கிறேன். எனக்கூறிவிட்டு என்னுடைய செக்கிற்கு 2000 ரூபாய் நோட் ஒன்றும் மீதமுள்ள 500 ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டுக்களையும் கொடுத்தார். மேடம் எல்லாமே நூறு ரூபாய் நோட்டாக தாங்க மேடம் எனக் கேட்டேன் மறுத்துவிட்டார். பாவம் அவர் என்ன செய்வார்?

ஒருவழியாக 2000 ரூபாய் நோட்டு ஒன்றும், ஐந்து 100 நோட்டையும் பெற்றுக்கொண்டு அலுவலகம் திரும்பினேன். வங்கிக்குள் நுழையும் போது மதியம் 1.30மணி, திரும்பிய போது  2.45 மணி. கிட்டதட்ட ஒன்னேகால் மணிநேரத்திற்குப் பிறகு புதிய நோட்டுக்கள் கிடைத்தது.

இதோடு முடிந்துவிடவில்லை என்னுடைய பிரச்சனை. அந்த 2000 ரூபாய் நோட்டுக்கு எப்படி சில்லரை மாற்றுவது என எனது மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. வங்கியிலேயே திருப்பி மாற்றிவிடுவோமா என நினைத்தேன். மாலையில் அலுவலகத்திலிருந்து அறைக்குத் திரும்பியபோது, சாலையோரத்தில் இருக்கும் ஒரு கடையில் இரவு உணவு சாப்பிட்டேன். சாப்பிடுவதற்கு முன் அவரிடம் அண்ணே பழைய 500 ரூபாய் நோட்டு இருக்கிறது வாங்கிக்குவீங்களானு கேட்டேன். வாங்குவதில்லை என சொல்லிவிட்டார். சாப்பிட்டு முடித்தபின் புதிய 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். வாங்கி பார்த்து சிரித்துவிட்டு. சில்லரை வேணுமேனு கேட்டார். பாருங்கண்ணே சில்லரை இருந்தா கொடுங்கன்னுச் சொன்னேன். அந்த மகான் புன்னகைத்துவிட்டு 2000 ரூபாய்க்கும் 100 ரூபாய் தாள்களாகவே கொடுத்துவிட்டார். அவருக்கு பெரிய மனசுங்க.

100 ரூபாய் தாள்களை சில்லரை மாற்றிய மகிழச்சியில் அறைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இரவு 11.15 மணிக்கு என்னுடைய நண்பன் ஆலங்குடி தினேஷ் அழைத்தான். நாங்கள் இருவரும் அறந்தாங்கியில் பட்டயப்படிப்பை ஒன்றாக படித்தோம். கதிர் எனக்கிட்ட பணம் இல்லே 100 ரூபாய் தர்றேனு சொன்னவர் என்னிடம் சொல்லாமல் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டார். இப்போது என்னிடம் சுத்தமாக பணம் இல்லை. அதனால் எனக்கு 100 ரூபாய் கொடு நான் உன்னைச் சந்திக்க நடந்து வந்துக்கொண்டிருக்கிறேனு சொன்னான். அவனுடைய அலுவலகம் என்னுடைய அறையிலிருந்து 3-கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது.

அவனை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு நான் உடனே பேருந்தைப் பிடித்து அவனிடம் 200-ரூபாயை கொடுத்துவிட்டு திரும்பினேன். அறைக்கு வந்து சேர இரவு 1 மணி ஆகிவிட்டது.

மிகவும் கொடூரமான அனுபவமாகவே இருந்தது. ஏதோ கொஞ்ச நஞ்சம் விபரம் தெரிந்த நமக்கே இவ்வளவு திண்டாட்டமா இருக்கே நம்ம கிராமத்துல இருக்குறவங்க நிலைமை என்னவாக இருக்கும்னு நினைத்து வருந்தினேன். என் அம்மாவிடம் கேட்டபோது ஆமாடா தம்பி என்ன பண்ணுறதுனு தெரியலைடானு சொன்னாங்க.

மறுநாள் சனிக்கிழமை புதிய சட்டமன்ற அலுவலகம் அருகில் இருக்கும் ரிச்சி தெருவிற்கு ஒரு வேலையாகச் சென்றேன். அப்போது முகப்பேர் கிழக்கிலிருந்து - அண்ணா நகர் - புரசைவாக்கம் - வேப்பேரி - எழும்பூர் - சென்ட்ரல் வழியாக இருக்கும் பகுதிகளில் உள்ள வங்கிகள், ATM வாசல்களில் வரிசையில் நின்ற மக்களை நினைத்தபோது மிகவும் மனம் வேதனையடைந்தது.

அரசியல்:
மோடி செய்திருப்பது அப்பட்டமான அரசியல். இதில் அரசியல் ஆதாயம் இல்லை நல்ல நோக்கத்தோடுதான் செய்திருக்கிறார் என்று சொல்பவர்கள் ஒன்று பி.ஜே.பி, RSS ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் அல்லது விபரம் தெரியாதவர்களாக இருக்க வேண்டும். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த நாட்டில் ஏற்படுத்திய பிரச்சனைகள் அனைத்துமே பாரக்க சகித்துக்கொள்ள முடியாததாகவே இருந்து வருகிறது. மோடியின் இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியும் என்று இதுவரை எந்த பொருளாதார வல்லுனர்களும் கூறவில்லை. ஓரளவு கள்ள நோட்டை குறைக்கலாம் என்று கூறுகிறார்கள். நேற்று வந்த செய்தியைப் பார்த்தால் அதுவும் சாத்தியப்படாது போலிருக்கிறது. 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்துக்கொடுத்து டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி சென்றிருக்கிறார்கள். நாம்மாளுங்களுக்கே இவ்வளவு மூளை வேலை செய்யுதுனா, உண்மையிலேயே கள்ள நோட்டு அடிப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது.

மக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்று அரசியல் தலைவர்கள் பி.ஜே.பி அரசை கண்டித்தால் அவர்கள் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் என்று முத்திரை குத்துவதெல்லாம் அரசியல் சாக்கடை. தேசத்துரோகிகள் என்ற வார்த்தையை பி.ஜே.பியினர் அதிகம் பயன்படுத்துவார்கள். இதை எழுதியதால் என்னைக்கூட தேசத்துரோகி, கறுப்புபணம் வைத்திருப்பவன் என்று கூறுவார்கள். எனக்கு RSS நண்பர்களும் உண்டு அவர்களின் பேச்சுத்தொனியை நான் நன்கு அறிந்திருக்கிறேன். ஆனால் நான் RSS அல்ல.

எங்கள் ஊரில் இருக்கும் வங்கிகளுக்கு இன்னும் புதிய நோட்டுக்கள் சென்று சேரவில்லை போலிருக்கிறது. வெறும் 100 ரூபாய் நோட்டுக்களை மட்டும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்களாம். புதிய நோட்டுக்களை ATM இயந்திரம் ஏற்றுக்கொள்ளாதாம். அதற்கு இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமாம். 80 லட்சம் கோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக புழக்கத்தில் இருக்கிறதாக கூறுகிறார்கள். அந்தளவிற்கு பணம் அச்சடிக்கப்பட்டுவிட்டதா? என்பதே பெரிய கேள்விக்குறி.

நேற்று Reserve வங்கி வெளியிட்ட அறிக்கையை பார்க்கும் போது இன்னும் அச்சடிக்கபடவில்லை என்றே தோன்றுகிறது. பிரதமர் ஆவதற்கு முன் வார்த்தைகளை அள்ளி வீசி விட்டு இரண்டு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் உருப்படையாக எதையும் மோடி இந்த நாட்டிற்கு செய்யமுடியவில்லை. மோடியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பது நன்கு தெரிகிறது. இதுவரையிலும் பாராளுமன்ற விவாதங்களில் பங்கேற்று உரையாடியதில்லை, பத்திரிக்கையாளர்களை சந்தித்தது இல்லை. எப்போதுமே மோடி பேசுவதற்கும் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பே இருக்காது. அல்லது அந்த சம்பவத்திற்கு பிரதமரிடமிருந்து எந்த கருத்தும் வெளிப்படாது. இப்படி ஒரு பிரதமரை இந்தியா சந்திப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். கடைசியாகவும் இருக்கட்டும். கல்லுளி மங்கன் ஞாபகம் வேறு இந்த நேரத்தில் வந்து தொலைக்கிறது.

இன்னும் இரண்டரை வருடங்களில் நாடு என்னாகுமோ என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் - கறுப்பு பணம் மீட்பதில் கையாளாகாத தனம் - ஆட்சியின் மீதான அதிருப்தி - நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சனைகளின் மீதான கவனத்தை திசை திருப்புதல் என மோடியின் அரசியல் வேலைகளுக்கு பலிகடாவாக அடித்தட்டு மக்கள் மாட்டியிருக்கிறார்கள். நல்ல வச்சு செய்யுறாப்புல தல!


எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல் மக்களை தவிக்கவிட்டுவிட்டு, இரகசியம் காப்பதற்காக இப்படிச் செய்தோம் என மோடியும், அவரின் சகாக்களும் கூறிவதைப் பார்த்தால், மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதைப் போல 'மோடியின் பொருளாதார அறிவை ஒரு அஞ்சல் தலையின் பின்னால் எழுதிவிடலாம்' போலிருக்கிறது. அந்தளவிற்காவது எழுத முடியுமா எனக்கு தோன்றுகிறது.

சரி நமக்கு எதுக்குப்பா இந்த அரசியலெல்லாம், நாளைக்கு அலுவலகம் போகணும் சிக்கீரமாக பதிவு செய்துவிட்டு தூங்குவோம்.

தேசத்துரோகி பட்டத்தை பின்னூட்டங்களில் கொடுக்கலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.