May 28, 2016

பொறியியல் பட்டதாரிகள் கவனத்திற்கு

நன்றி: https://www.facebook.com/vinayaga.murugan.7/about
மிகுந்த மனவருத்தத்துடன் இதை பதிவு செய்கிறேன்.

இன்று ஒரு மெகா நேர்முகத்தேர்வு நடந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வந்திருந்தார்கள். எல்லாரும் கடந்த ஆண்டு பொறியியல் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள். பிஈ மின்னணுத்துறை, ,கணிப்பொறி, பிடெக் ஐடி என்று படித்தவர்கள். இருநூறு பேரில் பத்துபேர் கூட தேறவில்லை. பொது அறிவு சுத்தமாக இல்லை. துறைசார்ந்த அறிவும் இல்லை. கம்யூனிகேஷன் எனப்படும் தகவல் பரிமாற்றத்திலும் தேறவில்லை. ஆனால் இவர்கள் எல்லாரும் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளில் எண்பது சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள். இளங்கலை படிப்பில் எழுபது அல்லது எண்பது சதவீதம் மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள். எப்படி இவர்கள் இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. நாங்கள் படிக்கும் போதெல்லாம் நூற்றுக்கு பத்து சதவீத மாணவர்களே இதுபோன்ற உயர் மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆனால் மதிப்பெண்கள் குறைந்தாலும் துறை சார்ந்த அறிவை அதிகம் வளர்த்துக்கொள்வார்கள். இன்று வந்திருந்தவர்களில் ஒருவர் கூட கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

ரெஸியூமில் பொழுதுபோக்கு என்று சினிமா பார்ப்பது, பாட்டுக்கேட்பது , சமையல் செய்வது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஒரேயொரு பெண் மட்டும் புத்தகங்கள் படிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். என்னமாதிரி புத்தகங்கள் படிப்பீங்க என்று கேட்டேன். ஆன்மிக புத்தகங்கள் என்று சொன்னார். சரி அது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று விட்டுவிட்டேன். துறைசார்ந்த கேள்வி என்பதால் கல்லூரி இறுதியாண்டிலேயே அவர் செய்த பிராஜக்ட் பற்றி கேள்வி கேட்டோம். தொடர்பே இல்லாமல் பதில் வந்தது. இன்னொருத்தர் கேள்வி கேட்ட என்னை பார்த்தே குட் கொஸ்டீன் என்று பதில் சொன்னார். அவர் என்னை கலாய்க்கிறாரா என்று கூட சந்தேகமாக இருந்தது. ஒரு பெண் எனக்கு பிஇ படிக்க விருப்பமில்லை. எங்க பெற்றோர் சொன்னதால் சேர்ந்தேன் என்று சொன்னார். அவர் மீது மிகுந்த கோபம் வந்தது. இன்னொரு பெண் எனக்கு வீணை வாசிக்க வரும் என்றார். சரி அவர்கள் கல்லூரியில் படித்த பாடங்களில் கேள்வி கேட்போம் என்று மிக மிக எளிமையாக ஸ்டாக்குக்கும், கியூவுக்கும் என்ன வித்தியாசம் என்று அடிப்படை கேட்டால் மாற்றி மாற்றி குழப்பமான பதிலை சொன்னார்கள்.

கல்லூரி முடித்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நாட்களில் என்ன செஞ்சீங்க? ஏதாவது கோர்ஸ் படிச்சீங்களா? துறைசார்ந்த அறிவை வளர்த்து கொண்டீர்களா? தனியார் பயிற்சி மையங்களில் சான்றிதழ்கள் வாங்குனீங்களா என்று கேட்டால் எல்லாரும் சொல்லி வைத்தது போல இந்த பத்து மாதங்களில் எதுவும் செய்யவில்லை என்று சொன்னார்கள். ஒரு பெண் அவரது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் மேற்கொண்டு எதுவும் படிக்கவில்லை என்று சொன்னார். இளைஞர்களிடம் கேட்டால் பத்து மாதங்களாக வேலை தேடுகிறேன். எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். இவர்களின் பொறுப்பற்றத்தனம் மிகுந்த எரிச்சலையும். ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

உண்மையில் வேலை இல்லா திண்டாட்டம் இப்போது இல்லை. திறமை இல்லாத் திண்டாட்டத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். முன்பு போல இந்தக்காலம் இல்லை. ஒருவருடம் நீங்கள் நின்றுவிட்டால் கூட உங்கள் பின்னால் பெருங்கூட்டம் வந்துவிடும். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடவேண்டும். ஒவ்வொருவரும் லட்சணக்கணக்கில் பணம் கட்டி பொறியியல் படிப்பை படித்தவர்கள். பணம் இல்லாத காரணத்தால் என்னால் பொறியியல் கல்லூரியில், மருத்துவத்துறையில் சேர முடியவில்லை. சென்னை வந்து வேலை பார்த்துக்கொண்டே படித்தேன். எனது நண்பர்கள் பலர் அப்படித்தான். வெறும் ஐநூறு ரூபாய்க்காக ஒரு தனியார் பயிற்சி மையத்துக்கு சென்று வகுப்பெடுத்துள்ளோம். எடுத்தவுடன் பெரிய பதவிகள் வராது. பெரிய சம்பளமும் கிடைக்காது. எந்தத்துறை எடுத்துக்கொண்டாலும் சில ஆண்டுகள் அந்தத்துறையை பற்றி நாம் கற்பதில் அறிவதில் காலத்தை செலவழிக்க வேண்டும். முதலில் நாம் வாங்கும் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும். பிறகு சில ஆண்டுகள் கழித்து நமது அறிவும், சம்பளமும்,உழைப்பும் சமமாக இருக்கும். இறுதியில் நமது திறமைக்கு, அறிவுக்கு, உழைப்புக்கு அதிகமான சம்பளம் கிடைக்கும்.

லட்சக்கணக்கில் செலவழிப்பவர்கள் சில ஆயிரம் செலவழித்து ஏதாவது தனியார் நிறுவனங்களில் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்தை கற்றிருக்கலாம். அதைக்கூட நாங்கள் எதிர்பார்க்கவில்லை. குறைந்தது நீங்கள் படித்த பாடத்திலேயே தெளிவு இருக்கிறதா என்று பார்க்கிறோம். அதுவும் இல்லை. எல்லாரும் சென்னையை சுற்றியுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள். நான்கு வார்த்தை சேர்ந்தாற்போல ஆங்கிலத்தில் கோர்வையாக பேசவரவில்லை. ஷேக்ஸ்பியர்போல கவிதை எழுத வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சொல்ல வந்ததை தெளிவாக சொன்னால் போதும்.

கல்விக்கும், அறிவுக்கும் தொடர்பு இல்லை என்று இன்று மீண்டும் தெரிந்துக்கொண்டேன். அறிவு என்பது பாடத்திட்டத்துக்கு வெளியே இருக்கிறது. நேர்முகத்தேர்வில் ஒருவரது கல்வியை விட அவரது அவரது Attitude – ஐத்தான் நாங்கள் பார்ப்போம். அவர் எந்தளவு அக்கறை கொண்டவராக (அந்தக்கால ஆசாமிகள் வார்த்தையில் சொன்னால் தொழில்பக்தி) இருக்கிறார் என்று பார்ப்போம். இப்போது எல்லார் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. பதினாறு ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்துவிட்டு இறுதியில் எல்லைக்கோட்டை தொடும்நேரத்தில் ஏன் இப்படி அலட்சியம்? பொறுப்பற்றத்தனம்? சில இளைஞர்கள் தலைமுடியை ஸ்பைக் எல்லாம் வைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். ஒரு நேர்முகத்தேர்வுக்கு எப்படி வரவேண்டுமென்று கூடவா இங்கிதம் தெரியாது? காலமெல்லாம் சினிமா பார்த்துக்கொண்டும், பேஸ்புக்கில் கும்மியடித்துக் கொண்டும், பல்சரில் சுற்றுவதும், இருபது வயதுக்கு பிறகும் பெற்றோர் பணத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதும் எல்லாம் ஒரு பிழைப்பா?

4 comments:

அணில் said...

காட்டமான பதிவா இருக்கே. ஆனால் இதுதான் உண்மை நிலவரம். எடுத்த உடனேயே பல ஆயிரங்களில் ஊதியம் எல்லோருக்கும் சார்தியமில்லை. குறைந்த ஊதியமானாலும் நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைக்க வேண்டும். ஒரு வருடம் சும்மா சுற்றித திரிவதற்கு ஊதியமில்லாமல் சேந்ர்ந்தாவது பணி அனுபவம் பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர்களை மட்டும் குறை சொல்லிப் புண்ணியமில்லை, தரமற்ற கல்லுரிகளுக்கும் பெரும் பங்குண்டு.

இரா.கதிர்வேல் said...

நன்றி ராஜ்குமார். இந்த பதிவை நான் விநாயக முருகன் அவர்களின் முகநூல் பக்கத்தில் படித்தேன். படித்த உடனையே அதை எடுத்து வலைப்பூவின் இட்டேன். ஆகையால் இந்த பதிவு விநாயக முருகன் அவர்களுடையது. நான் வாசகர்களுக்கு சென்றடைய வேண்டும் எனபதால் இங்கு பதிவிட்டேன். விநாயக முருகன் அவர்கள் தமிழ் கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் உலகம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக பலகாலம் பணியாற்றிவிட்டு இப்போது CTS இல் பணிபுரிந்து வருகிறார். ஆகையால் விநாயக முருகன் சொல்வதை நாம் மறுக்க முடியாது.

நீங்கள் சொல்வது போல எடுத்த உடனையே பல ஆயிரங்களில் ஊதியம் என்பது சாத்தியமில்லை. எனவே புதியவர்கள் சம்பளத்தைவிட வாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒருவருடமோ அல்லது இரண்டு வருடமோ கழித்து நல்ல ஊதியத்தை எதிர்பார்க்கலாம் அதில் தப்பில்லை.

அதுபோல தரமற்ற கல்லூரிகளுக்கு பெரும் பங்குண்டு என தாங்கள் கூறுவதும் 100% உண்மை. பொறியியல் படிப்பை பொறுத்தமட்டிலே மோசமான கல்லூரியில் விரும்பிய பிரிவில் சேருவதை விட, நல்ல தரமான கல்லூரியில் வேறு பிரிவில் சேரலாம். பொறியியல் கல்வியின் வெற்றி கல்லூரியின் கையிலேயே உள்ளது. ஓணான் கூட முட்டையிடாதா பொட்டல் காட்டில் ஒரு கட்டிடம் தெரிகிறது என்ன என்று கேட்டால் பொறியியல் கல்லூரி என்கிறார்கள்.

மற்றொரு முக்கியமான பிரச்சனை ECE, EEE, E&I மாணவர்களும் தங்கள் துறையில் வேலையில் சேருவதைவிடவும் தகவல் தொழில்நுட்பத்துறையில்தான் நுழைகின்றனர். IC, Chip, Register, Capacitor, Micro controller, Micro Processor என படித்துவிட்டு Object, Class, Framework, DB என பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் IT க்குத்தான் வேலைக்கு சேருவதாக இருந்தால் அதற்கு CSE பிரிவையே எடுத்து படித்திருக்கலாமே?

அடுத்ததாக பெரும்பாலும் M.C.A and B.E/B.Tech பட்டங்கள் தகவல் தொழிநுட்பத்துறையில் ஒரேமாதிரியான் கல்வித்தகுதியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் 6-7 லட்சம் வரையில் ஏன் பொறியியல் படிப்பில் செலவழிக்க வேண்டும்.

உதாரணமாக பொறியில் படிப்புக்கு கல்விக்கட்டணம் பிரபலமான கல்லூரியில்(சிவகாசியில் உள்ளது) ஆண்டுக்கு 74,000 ரூபாய் மொத்தம்= 4X74000 = 296000, விடுதிக்கட்டணம் ஆண்டுக்கு 81,000 மொத்தம் = 4x81000 = 324000. ஆகமொத்தம் 620000 ஆறு லட்சத்து இருபதாயிரம். இவ்வளவு பணம் M.C.A படிக்க தேவைப்படாதே.

அரசுக்கல்லூரியில் B.C.A படித்தால் ஆண்டுக்கு கல்விக்கட்டணம் 2000 ரூபாய் மொத்தம் 6000 ரூபாய் மூன்று ஆண்டுகளுக்கு. M.C.A தனியாரில் படித்தால் கூட ஒரு லட்சம்தான் செலவாகும். அரசுக்கல்லூரியில் என்றால் ஐம்பதாயிரம் கூட ஆகாது. ஆக இரண்டு லட்ச ரூபாயில் M.C.A படிப்பையே முடித்து விடலாம். அப்படியென்றால் பெற்றோர்களுக்கு 5லட்சம் மிச்சம்தானே. நடுத்தர குடும்பத்துக்கு இது மிகப்பெரிய தொகை.

பொறியியல் படிப்பின் மீதான் மோகம் ஓரளவு குறைந்து வருவதாகவே நினைக்கின்றேன். மொத்தமுள்ள மூன்று லட்சம் இடங்களுக்கு 1,33,000 விண்ணப்பங்கள்தான் வந்துள்ளது இது கண்டிப்பாக 90000 மாணவர்கள் சேர்க்கையைக்கூட எட்டுவது சிரமம்தான் எப்படிப்பார்த்தாலும் இரண்டு லட்சம் இடங்கள் காலியாகும். இதை நான் நல்ல மாற்றமாகவே பார்க்கின்றேன்.

என்னுடைய மேற்கண்ட கருத்து தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் ஆட்சோபனை இருந்தால் இங்கு பதிவு செய்யுங்கள் இராஜ்குமார் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் தேவைப்பட்டால் தொகுத்து ஒரு பதிவாக வெளியிடலாம்.

நெல்லி. மூர்த்தி said...

தொலைநோக்கு பார்வை இன்றி வணிகநோக்குடனேயே கல்லூரிகளும், பெற்றோர்களும் அணுகுவதால் ஏற்படுகின்ற விளைவு. தெளிவான சிந்தனை பெற்றோர்க்கும் மாணவர்களுக்கும் தேவை என்பதே உண்மை! மிக அருமையாக MCA & BE குறித்து தாங்கள் விளக்கியது அருமை.

இரா.கதிர்வேல் said...

நன்றி நெல்லி.மூர்த்தி.