Feb 15, 2016

உபுண்டு LTS பதிப்பையே தரவிறக்கம் செய்யுங்கள்

லினக்ஸைப் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெரும்பாலும் பரிந்துரை செய்யப்படுவது உபுண்டு லினக்ஸ்தான். நானும் உபுண்டுவைத்தான் அனைவருக்கும் பரிந்துரை செய்து வருகின்றேன். நான் நீண்ட காலமாக உபுண்டு லினக்ஸைத்தான் பயன்படுத்தி வருகிறேன். சரி விஷயத்திற்கு வருவோம். முதலில் உபுண்டு LTS பதிப்பு என்றால் என்ன? என்பதை ஒரு முறை படித்துவிடுங்கள். அப்போதுதான் பின்வரும் செய்திகள் உங்களுக்குப் புரியும்.

உபுண்டுவை பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் Ubuntu LTS பதிப்பை மட்டும் தரவிறக்கம் செய்யுங்கள். Non-LTS பதிப்புகளை தரவிறக்கம் செய்ய வேண்டாம். இது என்னுடைய அன்பான வேண்டுகோள். எதற்காக Ubuntu LTS பதிப்பை மட்டும் தரவிறக்கம் செய்ய வேண்டும்? என நீங்கள் கேட்கலாம். இதற்கான பதிலை நான் பெற்ற அனுபவத்தில் இருந்து கூறினால்தான் பொருத்தமாக இருக்கும்.

என்னுடைய பல்கலைக்கழக வகுப்புத் தோழர் சக்திகுமார் கணினி பிரிவில் பணிபுரிகிறார். அவருடைய அலுவலகத்தில் இருந்த விண்டோஸ் சர்வர் கணினியில் ஒரு சிறிய பிரச்சினை. அது என்னவென்றால் ஒரு Desktop Lock Application சர்வரினுடைய Desktop ஐ அணுக விடாமல் தொந்தரவு செய்துகொண்டிருந்திருக்கிறது. அதை நீக்க வேண்டும். என்ன செய்வது? உள்ளே சென்றால்தானே நீக்க முடியும். அவர் உடனே அவருடைய உயரதிகாரியை தொடர்பு கொண்டு இந்த பிரச்சனையைத் எப்படி தீர்ப்பது? என கேட்டிருக்கின்றார். அவர் உடனே Ubuntu Live மோடில் வைத்து இதை சரிசெய்யுங்கள் என சொல்லியிருக்கின்றார். கூடவே ஒரு உபுண்டு வட்டையும் கொடுத்திருக்கிறார்.

உடனே சக்திகுமார் என்னைத் தொடர்பு கொண்டு அதை எப்படிச் செய்யலாம்? எனக் கேட்டார் நான் உடனே அந்த Desktop Lock application ஒரு .exe கோப்பாகத்தான் இருக்கும் அது கணினுக்குள் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து நீக்கி விட்டால் சரி செய்துவிடலாம் எனக் கூறினேன். அவர் உடனே தன்னிடமிருந்த உபுண்டுவை பூட் செய்திருக்கிறார். Text Mode தான் கிடைத்திருக்கின்றது. Graphical Mode கிடைக்கவில்லை. நான் உடனே நீ பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டுவின் பதிப்பு என்ன? என்ற கேட்டேன் அதற்கு அவன் Ubuntu 8.10 எனக்கூறினான். பிரச்சனை என்னவென்றால் அந்த கணினிக்கான Graphics Driver, Ubuntu 8.10 இல் இல்லை அதனால் Text Mode இல் வந்து நின்றிருக்கின்றது. அதன்பிறகு நான் நீ பயன்படுத்திக்கொண்டிருப்பது மிகப்பழைய பதிப்பு இன்னும் சொல்ல வேண்டுமானால் 2008 இல் வெளிவந்த பதிப்பு அது. அதனால் உபுண்டுவின் அண்மைய பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பார் எனக் கூறினேன். உடனே Ubuntu 14.04 LTS பதிப்பை தரவிறக்கம் செய்து, அந்த பிரச்சனையைச் சரி செய்துவிட்டான். ஏன் சாதரண பதிப்பை பயன்படுத்தி அதைச் சரிசெய்ய முடியாதா? என நீங்கள் கேட்கலாம். சாதாரண பதிப்பை நீங்கள் தரவிறக்கம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், பிழையைச் சரிசெய்த பிறகு ஒரு 7-மாதம் கழித்து உபுண்டுவை நிரந்தரமாக நிறுவ வேண்டிய சூழல் வருகின்றது. அப்போது இந்த சாதாரண பதிப்பை பயன்படுத்தினீர்கள் என்றால் உங்களுக்கு ஆதரவு கிடைக்காது. மீண்டும் LTS-பதிப்புக்குத்தான் வர வேண்டும். ஆகையால் நீங்கள் ஒருமுறை LTS பதிப்பை தரவிறக்கம் செய்துவிட்டால் போதும் அதை அந்த பதிப்பு வெளியான ஆண்டிலிருந்து அடுத்த 5-வருடங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

அடுத்து என்னுடைய அலுவலக நண்பர் கிருஷ்ணன் தற்போதுதான் புதிய அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். அவர் ஒரு Android Developer. புதிய அலுவலகத்தில் அவருக்கு விண்டோஸ் இயங்குதளத்தைக் கொடுத்து பணிபுரியச் சொல்லியிருக்கிறார்கள். அவர் விண்டோஸில் என்னால் பணிபுரிய முடியாது எனச் சொல்லி மறுத்தவிட்டார். எனக்கு உபுண்டு நிறுவிக்கொடுங்கள், லினக்ஸ்தான் எனக்கு பயன்படுத்த தெரியும் எனச் சொல்லியபிறகு, அவருக்கு உபுண்டுவை நிறுவிக்கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு Android Development-க்குத் தேவையான பொதிகளை நிறுவுவதற்காக முதலில் sudo apt-get update கட்டளைவரியை இயக்கியிருக்கிறார், Faile to fetch error * என வந்திருக்கிறது. என்னைத் தொடர்பு கொண்டு ஏன் இப்படி வருகிறது? என்ன காரணம்? எப்படிச் சரிசெய்யலாம்? என கேட்டார். நான் உடனே உபுண்டுவில் எந்த பதிப்பு கணினியில் நிறுவப்பட்டிருக்கிறது? என கேட்டேன். அவர் 13.10 எனச் சொன்னார். அது End of Life Version. ஜூலை 2014 உடன் அதற்கான ஆதரவு முடிந்து விட்டது. ஆகையால் நீங்கள் உபுண்டு 14.04 LTS பதிப்பை நிறுவிக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டேன்.

மூன்றாவதாக நண்பர் மேட்டூர் நா.செல்வக்குமாருக்கும் அதே பிரச்சனை அதைப் பற்றி நான் முந்தைய பதிவில் கூறியிருக்கின்றேன்.

இறுதியாக என்னுடையை அலுவலகத்தில் மூன்று கணினிகளில் உபுண்டு 12.10 போடப்பட்டிருந்தது. அதிலும் அதே Failed to fetch error பிரச்சனைதான்.

ஆகையால் உபுண்டுவை தரவிறக்கம் செய்பவர்கள், LTS பதிப்பையே தரவிறக்கம் செய்ய வேண்டுமாய் பரிந்துரைக்கிறேன். ஒருமுறை தரவிறக்கம் செய்தால் அந்த பதிப்பு வெளியான ஆண்டிலிருந்து அடுத்த 5-வருடங்களுக்கு நீங்கள் அதையேப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதோ ஒரு உபுண்டு பதிப்பை நிறுவிவிட்டால் போதும் என நினைக்காமல் அதனுடைய பதிப்பு, ஆதரவு முடியும் காலம் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளவும். இப்போதைக்கு ஆதரவுடன் இருக்கும் இரண்டு LTS பதிப்புகள் ஒன்று 14.04, மற்றொன்று 12.04. இந்த இரண்டையும் தரவிறக்கம் செய்வதறக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உபுண்டுவை நேரடியாக தரவிறக்கம் செய்ய:

Ubuntu 14.04.3 LTS - 32-bit
Ubuntu 12.04.5 LTS - 32-bit

Torrent மூலமாக தரவிறக்கம் செய்ய

Ubuntu 14.04.3 LTS - 32-bit
Ubuntu 12.04.5 LTS - 32-bit

மேலும் பார்க்கவும்
http://releases.ubuntu.com/

உபுண்டு LTS பதிப்பு என்றால் என்ன?

Long Term Support என்பதன் சுருக்கமே LTS. உபுண்டுவின் புதிய Desktop மற்றும் Server பதிப்புகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகின்றது. வருடத்தின் ஏப்ரல்(04) மற்றும் அக்டோபர்(10) மாதங்களில் வெளியிடப்படும். உதாரணமாக 14.04 என்பது 2014 ஆம் ஆண்டு 04-வது மாதம் வெளியிடப்பட்டது. 14.10 என்பது 2014 ஆம் ஆண்டு 10-வது மாதம் வெளியிடப்பட்டது.

சாதாரண பதிப்புகள்(Normal Releases) ஆறு மாதத்திற்கு ஒரு முறையும், LTS பதிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் வெளியிடப்பட்டு வருகின்றது. உதாரணமாக. 10.04, 12.04, 14.04, இன்னும் இரண்டு மாதங்களில் வெளிவர இருக்கும் 16.04 ஆகியவைகள் LTS பதிப்புகள். இவைகளின் கால இடைவெளி இரண்டு ஆண்டுகள்.

உபுண்டு 13.04-க்கு முன்பு வெளிவந்த சாதாரண பதிப்புகளுக்கு 18-மாதங்கள்(1.5 வருடங்கள்) வரை ஆதரவு(Support) கொடுக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு வெளிவந்த பதிப்புகளுக்கு 9-மதங்கள் வரை மட்டுமே ஆதரவு கொடுக்கப்பட்டு வருகிறது.

உபுண்டு 12.04-க்கு முன்பு உள்ள LTS பதிப்புகளுக்கு Desktop என்றால் 3-வருடங்களும், Server என்றால் 5-வடங்களும் ஆதரவு கொடுக்கப்பட்டு வந்தது.

உபுண்டு 12.04-க்கு பின்பு வந்த LTS பதிப்புகளுக்கு Desktop and Server இரண்டுக்குமே 5-வருடங்கள் ஆதரவு கொடுக்கப்பட்டு வருகின்றது.


ஆதரவு(Support) என்பது எதைக் குறிக்கின்றது?
  • அவசியமான பாதுகாப்பு மற்றும் பிழைகள் சரிசெய்யப்படும்
  • கனோனிகல் நிறுவனத்திடமிருந்து வணிகரீதியான ஆதரவு கிடைக்கும்
  • கனோனிகலின் Landscape ஆதரவு கிடைக்கும்
புதிதாக வரக்கூடிய மாற்றங்களை நான் அனுபவிக்க வேண்டும் என்பவர்கள் சாதரண பதிப்பையும், stable ஆக இருந்தால் போதும நான் அடிக்கடி இயக்குதளத்தை மாற்றிக்கொண்டிருக்க மாட்டேன் என்பவர்கள் LTS பதிப்பையும் பயன்படுத்தலாம். LTS பதிப்பை ஒரு முறை நிறுவிவிட்டால் அடுத்த 5-வருடங்களுக்கு பிரச்சையில்லாமல் இருக்கலாம்.

Feb 12, 2016

Ubuntu 14.04 LTS live USB boot error (gfxboot.c32)

மேட்டூரிலிருந்து நண்பர் நா.செல்வகுமார் உபுண்டுவில் VLC media player ஐ நிறுவுவது எப்படி? என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார். நான் உடனே sudo apt-get update அதன் பிறகு sudo apt-get install vlc ஆகிய கட்டளை வரிகளை முனையத்தில் கொடுங்க, அதுவே இணையத்திலிருந்து நிறுவிக்கொள்ளும் எனச் சொல்லி இந்த இரண்டு கட்டளைவரிகளையும் குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தேன்.

செல்வகுமார் உடனே முனையத்தைத் திறந்து sudo apt-get update கட்டளையை இயக்கியிருக்கிறார் அவருக்கு W: Failed to fetch * என்ற செய்தி காண்பிக்கப்பட்டிருக்கிறது. உடனே என்னை மறுபடியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரத்தைச் சொன்னார். நான் உடனே, சார் நீங்க உபுண்டு என்ன பதிப்பு நிறுவியிருக்கீங்க? என்று கேட்டேன். Ubuntu 14.10 என்று கூறினார். சார் Ubuntu 14.10 என்பது End of life version(support நிறுத்தப்பட்டுவிட்டது). ஆகையால் நீங்கள் Ubuntu 14.04 LTS பதிப்பை தரவிறக்கம் செய்து நிறுவுங்கள் பிரச்சனை சரியாகிவிடும் என கூறினேன். அவருடைய மின்னஞ்சல் முகவரிக்கு torrent கோப்பினை அனுப்பி வைத்தேன்.

தரவிறக்கம் செய்து விட்டு ஒரு நாள் கழித்து இன்றைக்கு மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். சார் தரவிறக்கம் பண்ணிட்டேன் பென்டிரைவ் மூலமாக நிறுவுவது எப்படி? என்று கேட்டார். ஏற்கனவே தாங்கள் வைத்திருக்கும் உபுண்டு 14.10 இல் Startup Disk Creator எனும் மென்பொருள் மூலமாக பென்டிரைவை bootable ஆக மாற்றிவிட்டு உபுண்டு 14.04 LTS நிறுவிக்கொள்ளலாம் எனச் சொன்னேன். உடனே பென்டிரைவை bootable மாற்றிவிட்டு BIOS இல் boot device selection option மூலமாக பென்டிரைவை தேர்வு செய்து கொடுத்த போது பிழைச்செய்தி வருவதாகக் கூறினார். அதைப் படம் பிடித்து மின்னஞ்சல் செய்து வைக்கச் சொன்னேன். உடனே அனுப்பி வைத்தார் பிழைச் செய்தி கீழே உள்ள படத்தில் இருக்கிறது.


இதற்கு தீர்வு என்னவென்றால் boot: என்று வந்து நிற்குமிடத்தில் live என தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்த வேண்டியதுதான். முடிந்தது வேலை இப்போது உபுண்டுவின் live desktop வந்து விடும் அதன்பின்பு Install Ubuntu 14.04 LTS என்று Desktop இல் இருப்பதைச் சொடுக்கி நிறுவுதலை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

நன்றி செல்வகுமார்

References:

Feb 3, 2016

எளிய தமிழில் PHP – மின்னூல்

எளிய தமிழில் PHP

தமிழ்வழி கல்வியில் படித்தவர்கள் ஒரு தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படும் போது அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் தொழில்நுட்பம் தமிழிலேயே இருக்கும் பட்சத்தில் அவர்களால் அதை நன்கு புரிந்துகொண்டு எளிமையாக கற்றுக்கொள்ள முடியும். தமிழ் மொழி தெரிந்தவர்கள் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கும் போது, ஆங்கிலம் அதற்கு தடையாக இருக்கக்கூடாது. தற்போது ஆங்கிலம் அதற்கு தடையாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்நிலையில் அந்த தடையை உடைக்க என்னால் முடிந்த பங்களிப்பை இந்த புத்தகத்தின் மூலமாக அளித்திருக்கிறேன். இன்றைக்கு எதற்கெடுத்தாலும் இணையத்தை நாடிச்செல்லும் நிலைமை வந்து விட்டது. அப்படிப்பட்ட இணையத்தில் எது தொடர்பாக தமிழில் தேடினாலும் தகவல்கள் கிடைக்க வேண்டும். அந்த நிலைமையை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்.

நான் சென்னைக்கு வேலைதேடி வந்தபோது PHP Developer ஆக  வேலைக்குச் செல்லவேண்டும் எனும் முடிவில் HTML, CSS, JavaScript, Bootstrap, jQuery ஆகியவைகளைப் பற்றி  படித்துக்கொண்டிருந்தேன். இவைகளை படித்து முடித்துவிட்டு அதன்பிறகு PHP பற்றி படிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். கணியம் இதழின் ஆசிரியர், சென்னை லினக்ஸ் பயனர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் நான் வேலைக்குச் செல்வது தொடர்பான ஆலோசனைகளை கேட்பதற்காக. சென்னைக்கு வந்துள்ளது தொடர்பாகவும், PHP தொடர்பாக படித்துக்கொண்டிருப்பதையும் தெரிவித்தேன். அப்படியா மகிழ்ச்சி, அப்படியே PHP யைப் பற்றி கணியத்திற்கு கட்டுரைகள் எழுதிக்கொடுங்கள் என  கூறி 'PHP Essentials' என்ற PDF கோப்பை அனுப்பிவைத்தார். தினமும் காலை 11-மணியிலிருந்து இரவு 7-மணி வரை ஒருவாரத்திற்கு தீவிரமாக கட்டுரைகளை எழுதி கணியத்திற்கு அனுப்பி வைத்தேன். அடுத்த ஒரு சில வாரங்களில் எதிர்பாராத விதமாக நான் Python Developer ஆக பணியில் சேர்ந்துவிட்டதால் அதன்பிறகு மீதமிருந்த ஒருசில பகுதிகளை எழுதிமுடிக்கமுடியவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து பகுதிகளையும் மொழிபெயர்த்து முடித்து கணியம் இதழிற்கு அனுப்பி வைத்தேன். அந்த அனைத்து பகுதிகளும் கணியத்தில் வெளியிடப்பட்டு, அவைகள் தொகுக்கப்பட்டு இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. PHP பற்றி கணியம் இதழில் எழுத வாய்ப்பளித்து, ஊக்கமளித்த ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், கணியம் இதழுக்கும், கணியம் குழுவினருக்கும் என மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு நல்ல நோக்கத்திற்காக பலர் இணைந்து ஒரு செயலைச் செய்யும் போது அந்த குழுவில் நாமும் இருந்தோம் என்பது எவ்வளவு பெருமையான விஷயம். அந்தவகையிலே கணியம் குழுவில் நானும் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது. கணியம் மிகப்பெரிய நோக்கத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த நோக்கத்தின் சிறிய பங்களிப்பாக PHP பற்றிய தொடர்களை கணியத்தில் எழுதினேன்.

ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். காரணம் அவர்கள்தான் இதை எழுதச்சொல்லி எனக்கு தொடர்ந்து ஆர்வமூட்டினார்கள். இல்லையென்றால் இந்த PHP தொடரை எனக்கு  எழுதவே  தோன்றியிருக்காது. இந்த தொடரை எழுதுவதற்கு பல வழிகளிலும் எனக்கு உதவி செய்த என்னுடைய வழிகாட்டிகள் அன்பு(எ)மணிகன்டண், அண்ணன் வை.சிதம்பரம், சோம.நீலகண்டன் ஆகியோருக்கும், சென்னையில் நான் தங்கியிருக்கும் என் அறை நண்பர்கள் கார்த்திக், வினோத், மணிமாறன், மதன், வெங்கட் ஆகியோருக்கும்,  அலுவலக நண்பர்கள் கிருஷ்ணன், ராஜாசிங், பிரபாகரன், வினோத், முத்துராஜ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புத்தகத்தை தரவிறக்கம் செய்ய: