May 3, 2014

தமிழ் 99 விசைப்பலகை முறை - எனது அனுபவம்


நான் தமிழ் கம்ப்யூட்டர் இதழ் மூலமாகத்தான் கணினியில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது குறித்து தெரிந்து கொண்டேன். 2009 ஆம் ஆண்டு வல்லத்தில்(தஞ்சாவூர்) இருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி படித்த போதுதான் எனக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. மடிக்கணினி வந்த பின்புதான் நான் வலைப்பதிவை எழுதத் தொடங்கினேன். இதுநாள் வரையிலும் கணினி மற்றும் வலைப்பதிவு ஆகிய இரண்டிலும் தமிழை ஒலியியல்(Phonetic) முறையில்தான் தட்டச்சு செய்து வந்தேன். கணினியில் தமிழைப் பார்த்து பிரமித்துப் போன அந்த நேரத்தில் ஒலியியல் முறையில் தமிழை தட்டச்சு செய்வதென்பது மிகவும் எளிமையான காரியமாக தெரிந்தது. ஒலியியல் முறையில் தமிழை தட்டச்சு செய்வதைப் பார்த்த எனது வகுப்புத் தோழர்கள்,  உங்களுக்கு தமிழ் தட்டச்செல்லாம் தெரியுமா கதிர்வேல்? என ஆச்சர்யத்துடன் கேட்டனர். காரணம், 'கணினியில் தமிழை தட்டச்சு செய்ய வேண்டுமானால் அதற்கென தனியாக, தட்டச்சு பயிற்சி மையத்திற்குச் சென்று தமிழ் தட்டச்சு முறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.' என்கின்ற நினைப்புத்தான். ஆனால் உண்மை வேறு.

ரவி அவர்களின் வலைப்பதிவின் மூலமாகத்தான் தமிழ் 99 விசைப்பலகை முறையினைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றேன். தமிழ் 99 விசைப்பலகை முறை பற்றி 2011 ஆண்டே எனக்கு தெரிந்திருந்தாலும், பொறியியல் கல்வியில் இருந்த நேர அழுத்தத்தின் காரணமாக தமிழ் 99 விசைப்பலகை முறையில் பயிற்சி பெற முடியவில்லை. ஆனால் எப்படியாவது இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், இன்னும் தமிழை ஒலியியல் முறையிலேயே தட்டச்சு செய்து கொண்டிருக்கின்றோமே என்ற குற்ற உணர்வும் என்னிடம் இருந்து கொண்டிருந்தது. இந்த பதிவு முழுவதையும் தமிழ் 99 முறையிலேயே தட்டச்சு செய்ததினால் அந்த குற்ற உணர்விலிருந்து இன்று நான் விடுபடுகிறேன். நான் செய்த தவறு என்னவென்றால், ஒலியியல் முறையில் தமிழை தட்டச்சு செய்து பழகியதுதான். தமிழை தட்டச்சு செய்து பழகிய போதே தமிழ் 99 முறையில் பழகியிருக்க வேண்டும். அதனால் எனக்கு தமிழ் 99 முறையில் 4-வருட அனுபவம் கிடைத்திருக்கும்.

உபுண்டு லினக்ஸில் Ibus ஐயும், விண்டோஸில் NHM Writer ஐயும் தமிழ் 99 முறையில் தட்டச்சு செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே ஒலியியல் முறையில் தமிழை தட்டச்சு செய்து பழகியவர்களுக்கு, தமிழ் 99 முறையில் தமிழை தட்டச்சு செய்ய தயக்கம் இருக்கத்தான் செய்யும். அந்த தயக்கத்தை விட்டு வெளியே வாருங்கள். தமிழை ஒலியியல் முறையில் தட்டச்சு செய்வதை விட, தமிழ் 99 முறையில் தட்டச்சு செய்வது மிக மிக எளிமையானது.

ஏன் ஒலியியல் முறையில் இருந்து, தமிழ் 99 விசைப்பலகை முறைக்கு மாற வேண்டும்?

"தமிழ் 99 முறையில் Shift Key ஐ பயன்படுத்தாமலேயே உயிர், மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துக்களை தட்டச்சு செய்ய முடிகிறது. ஆகையால் விரைவாக தட்டச்சு செய்ய முடிவதுடன், 50% நேரமும் மிச்சமாகிறது." உதாரணமாக இந்த இரட்டை மேற்கோள் குறிக்குள் இருக்கும் வாக்கியத்தை தமிழ் 99 முறையில் தட்டச்சு செய்ய 157 விசையழுத்தங்களும், ஒலியியல் முறையில் தட்டச்சு செய்ய 191 விசையழுத்தங்களும் தேவைப்படுகிறது. தமிழ் 99 முறையில் 34 விசையழுத்தங்கள் மிச்சமாகிறது. உதாரணத்திற்கு, 20 வார்த்தைகளுக்கு 34 விசையழுத்தங்கள் மிச்சப்பட்டால், 200 வார்த்தைகளுக்கு 340 விசையழுத்தங்கள், 2000 வார்த்தைகளுக்கு 3400 விசையழுத்தங்கள், 20000 வார்த்தைகளுக்கு 34000 விசையழுத்தங்கள் மிச்சப்படுகிறது. இதனால் நேரம் மிச்சம், உழைப்பு மிச்சம் குறிப்பாக விரல்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது. ஒலியியல் முறையிலிருந்து, தமிழ் 99 முறைக்கு மாறும் போது இதை நீங்கள் நன்றாக உணர்வீர்கள்.

தமிழ் 99 முறையில் 'வணக்கம்' என்பது  'வணக்கம்' என்றே மனதில் பதியப்படுகிறது. ஆனால், ஒலியியல் முறையில் 'வணக்கம்' என்பதை தட்டச்சு செய்யும் போது 'vanakkam' என மனதில் பதிகிறது. இது நம் தாய் மொழித் தமிழை முற்றிலுமாக அழிக்கும் முயற்சியேயாகும்.

ச்ச, ட்ட, த்த, ப்ப, ன்ன, ம்ம, ய்ய, க்க, ஞ்ஞ போன்ற எழுத்துக்களுக்கு அந்தந்த விசைகளை இருமுறை அழுத்தினாலே போதும்.

தமிழ் 99 முறை, தமிழக மற்றும் சிங்கப்பூர் அரசுகளால் அங்கிகரிக்கப்பட்ட முறையாகும்.

மேலும் தெரிந்துகொள்ள :





எளிமையாக எப்படி கற்றுக்கொள்வது?

உயிரும்(அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - 12 எழுத்துக்கள்), மெய்யும்(க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் - 18 எழுத்துக்கள்) சேர்ந்தால் உயிர்மெய்(க்+அ=க, வ்+அ=வ, த்+ஐ=தை, க்+ஓ=கோ). இதை மனதில் வைத்துக்கொள்ளவும். பழகும் போது முதலில் இந்த 30 விசைகளையும் பழகுங்கள். நான் இரண்டே நாட்களில் தமிழ் 99 முறையை கற்றுக்கொண்டேன். உதவிக்கு இந்த கோப்பை தரவிறக்கம் செய்யவும்.

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும் நாம் அனைவரும் இங்கு நினைவு கூற வேண்டும். செம்மொழியான தமிழை தமிழில் சிந்தித்து தட்டச்சு செய்ய இன்றே அனைவரும் தமிழ் 99 தட்டச்சு முறைக்கு மாறுவோம்!

நடைமுறைச் செய்தி: இந்த கட்டுரையில் உள்ள மொத்த வார்த்தைகள் 535. மேலே உள்ள கணக்குப்படிப் பார்த்தால் தமிழ் 99 முறையினால் 884 விசையழுத்தங்கள் மிச்சமாகிறது.



References:

2 comments:

seetha said...

உங்களின் அறிவுறத்தலுக்கு பிறகு நானும் தமிழ்99 விசைப்பலகை முறைக்கு மாறிவிட்டேன். நன்றி.

இரா.கதிர்வேல் said...

நன்றி Seetha சார்.