Dec 26, 2013

Startup Applications களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தெரிவுகளை காண்பிக்க வைப்பது எப்படி?

உபுண்டுவின் அண்மைய பதிப்புகளில் Startup Applications களில் இருக்கும் தெரிவுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. Update Manager ஐ Disable செய்யவே பெரும்பாலும் நான் அதைப் பயன்படுத்துவேன். உபுண்டு 12.04 LTS பதிப்பில் Update Manager ஐ Disable செய்வதற்காக Startup Applications ஐ திறந்து பார்த்த போது அதில் ஒன்றுமே இல்லாமல் வெற்றாக இருந்தது. அதன்பின் இணையத்தில் தேடியபொழுது அதிலுள்ளவைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என தெரிந்தது.



மறைந்துள்ளவைகளை தெரிய வைப்பது எப்படி?

முனையத்தை திறந்து கீழ்காணும் கட்டளை வரியினை இயக்கவும்.

sudo sed -i "s/NoDisplay=true/NoDisplay=false/g" /etc/xdg/autostart/*.desktop


இந்த கட்டளை வரியை இயக்கிய பின் மறைத்து வைக்கப்பட்டுள்ள தெரிவுகள் காண்பிக்கப்படும்.


Dec 23, 2013

உபுண்டுவில் ஜாவா நிறுவுதல்


உபுண்டுவில் Jedit, Eclipse போன்ற பல மென்பொருள்கள் இயங்குவதற்கு ஜாவா அவசியமாகிறது. ஆகையால் உபுண்டுவில் ஜாவாவை நிறுவிவைத்துக் கொள்வது நமக்கு பல வழிகளில் பயன்படும். நிரலாளர்களுக்கு ஜாவா பொதி மிகவும் இன்றியமையாத ஒன்று. 

உபுண்டுவில் ஜாவா நிறுவுதல் தொடர்பான அதிகமான செய்திகளை தெரிந்து கொள்ள இந்த இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள்.

முதலில் நாம் உபுண்டுவில் ஜாவா நிறுவப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு முதையத்தை திறந்து java -version என தட்டச்சு செய்து Enter Key யினை அழுத்தி கட்டளையை இயக்குங்கள். கீழ்காணுமாறு முனையத்தில் செய்தி கிடைத்தால் உங்களது உபுண்டு இயங்குதளத்தில் இன்னும் ஜாவா நிறுவப்படவில்லை என உறுதி செய்து கொள்ளலாம்.


Oracle Java 7 ஐ நிறுவுவது பற்றி இங்கு பார்ப்போம்

ஜாவாவை நிறுவ பல வழிகள் இருந்தாலும் கீழ்காணும் வழிமுறையே எளிதாக இருக்கிறது. முனையத்தில் கீழ்காணும் கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக இயக்கவும்.

sudo apt-get update
sudo add-apt-repository ppa:webupd8team/java
sudo apt-get update
sudo apt-get install oracle-java7-installer








கிட்டதட்ட 133MB அளவு கொண்டதாக இருக்கும். 133MB அளவு கொண்ட Oracel Java 7 பொதி இணையத்தில் தரவிறக்கம் ஆகும் வரையில் காத்திருக்க வேண்டும். அதன்பின் நிறுவுதல் தொடங்கும். நிறுவுதல் முடிந்தபின், ஜாவா வெற்றிகரமாக கணினியில் நிறுவப்பட்டுவிட்டதா என உறுதிப்படுத்திக் கொள்வதற்கு java -version கட்டளையை மீண்டும் இயக்குங்கள். கீழ்காணும் செய்தி முனையத்தில் கிடைத்தால், ஜாவா வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது என அர்த்தம்.


Oracle Java ஐ நீக்குவதற்கு

முனையத்தில் sudo apt-get remove oracle-java7-installer எனும் கட்டளையை இயக்கவும்.

மேலும் பார்க்க:

Dec 14, 2013

CD/DVD க்களை வீணாக்க வேண்டாம் ! நேரத்தையும் வீணாக்க வேண்டாம் ! ISO கோப்புக்களை நேரடியாகவே பூட் செய்தல்

இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்படும் அனைத்து லினக்ஸ் இயங்குதளங்களும் ISO கோப்புக்களாகவே தரவிறக்கம் செய்யப்படுகிறது.  லினக்ஸைப் பொறுத்த மட்டிலே ஒரு குறிப்பிட்ட கால அளவில் புதிய பதிப்பாக வெளியிடப்பட்டு வருகிறது.  உபுண்டு லினக்ஸை பொறுத்த வரையில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட கால அளவாக   6 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய பதிப்பு என வெளியிடப்படுகிறது.  ஏப்ரல் மாதம் ஒரு பதிப்பு, அக்டோபர் மாதம் ஒரு பதிப்பு என வருடத்திற்கு இரண்டு புதிய பதிப்புகள்.  

லினக்ஸை லைவ் வாக பயன்படுத்திப் பார்ப்பது என்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.  எனக்கு பிடித்தமான லினக்ஸ் இயங்குதளமாக உபுண்டு லினக்ஸ் இருந்தாலும் மற்ற லினக்ஸ் வழங்கல்களின் (Fedora, Linux Mint, Knoppix, Xubuntu, Lubuntu, Cent_OS) மீது எனக்கு எப்போதும் ஒரு தீராத காதல் உண்டு.

எந்தவொரு உபுண்டு குடும்ப(Ubuntu, Xubuntu, Lubuntu, Kubuntu) வழங்கல்களாக இருந்தாலும் Startup Disk Creator எனும் Tool மூலமாக  பென்டிரைவில் பூட்டபிளாக ஏற்றி நிகழ்வாகவோ(லைவ்) அல்லது நிறுவலுக்காகவோ (Installation) பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு பதிப்பு வெளியிடும் போதும் பென்டிரைவை எடுத்து பூட்டபிளாக மாற்றி அதன் பிறகு பூட் செய்து இயங்குதளத்தைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் அல்லது நிறுவ வேண்டும். இது கொஞ்சம் நேரத்தை வீணடிப்பதோடு, மெதுவாகவும் இயங்குகிறது.  வன்வட்டிலிருந்து நேராக இயக்கும் போது மிகவும் விரைவாக லைவ் மோடு நமக்கு கிடைத்து விடுகிறது.

நிறுவுதலுக்கென்று(Installation) வரும்போது பென்டிரைவ் மூலமாகவோ அல்லது  CD/DVD மூலமாகவோ நிறுவுதலை மேற்கொள்வதுதானே சரியான முறை? இப்படி நேரடியாக வன்வட்டிலிருந்தே இயக்குவது பாதுகாப்பான முறையா? என நீங்கள் கேட்கலாம் நீங்கள் கேட்பதும் ஒரு வகையில் நியாயம்தான்.  ஆரம்ப நிலை பயனாளர்கள் நான் கீழே சொல்லக்கூடிய இந்த முறையினை  நிகழ் வட்டாக(Live OS) பயன்படுத்திப் பார்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தவும். நிறுவுதலுக்கு தவிர்த்து விடவும்.  கொஞ்சம் அனுபவமிக்க பயனாளர்களென்றால் நிறுவுதலுக்கும் பயன்படுத்திக்கலாம்.

இந்த முறையினைப் பயன்படுத்தி ISO கோப்பினை நேரடியாகவே வன்வட்டிலிருந்து இயக்கலாம்.  CD/DVD/PENDRIVE ஆகியவைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

சரி வழிமுறைகளைப் பார்ப்போம் :
உபுண்டு குடும்பத்தைச் சேர்ந்த Xubuntu 12.04.1 LTS பதிப்பை இங்கு நான் பயன்படுத்தியுள்ளேன்.  உபுண்டு குடும்பத்தின் எந்த வழங்கலாக (Ubuntu, Xubuntu, Lubuntu, Kubuntu) இருந்தாலும் இந்த முறை பொருந்தும்.


1.தரவிறக்கம் செய்த ISO கோப்பின் இடத்தை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும். நான் விண்டோஸ் இயங்குதளத்தின் படி  D: (D Colon) -ல் வைத்திருக்கிறேன்.

2.Disk Utility யினை திறந்து அதன் மூலமாக இயங்குதளத்தின் ISO கோப்பு  இருக்கும் Drive வினுடைய எண்ணை கண்டுபிடித்தல் (உதாரணம்: C: = /dev/sda1 D:=/dev/sda2 E:=/dev/sda5).



3.இறுதியாக /boot/grub/grub.cfg கோப்பினை திறக்கவும்.  அதற்கு முனையத்தில் sudo nautilus எனக்கொடுத்து இயக்கவும் .  இப்பொழுது  Nautilus File Manager திறக்கப்படும் அதில் File System -> boot -> grub அடைவிற்கு சென்று grub.cfg கோப்பினைத் திறக்கவும்.



கீழ்காணும் வரிகளை grub.cfg கோப்பில் ### BEGIN /etc/grub.d/40_custom ### எனும் வரிக்கு அடுத்து சேர்க்கவும்.



menuentry "Xubuntu 12.04.1 LTS Live - (http://gnutamil.blogspot.com)" {
         set isofile="/xubuntu-12.04.1-desktop-i386.iso"
         loopback loop (hd0,2)$isofile
         linux (loop)/casper/vmlinuz boot=casper iso-scan/filename=$isofile noprompt noeject
         initrd (loop)/casper/initrd.lz
 }

கோப்பினைச் சேமிக்கவும் , அனைத்து Window க்களையும் Close செய்யவும்.


கணினியினை மறுதொடக்கம்(Restart) செய்யவும்.  இப்பொழுது உங்களுடைய GRUB Boot Loader -ல் Xubuntu 12.04.1 LTS Live எனும் Menu  காண்பிக்கப்படும். அதை தேர்வு செய்து இயக்கினால் அதிவிரைவாக Xubuntu Live Desktop கிடைக்கும்.  என்னுடைய மடிக்கணினியில் 42 விநாடிகளில்(42 Seconds) கிடைத்தது.




References:

Dec 9, 2013

உபுண்டுவில் VCD (Video CD) யில் படம் பார்ப்பது எப்படி?


தோழர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி VCD யில் பதியப்பட்டு இருந்தது. அந்த VCD யில் உள்ள காணொளிகளை மடிக்கணினியில் பார்க்கும் வகையில் மாற்றித் தரச் செல்லிக் என்னிடம் கேட்டார். அவருடைய மடிக்கணினியில் விண்டோஸ் இயங்குதளம் உள்ளது. ஆனால் நான் பயன்படுத்துவதோ உபுண்டு லினக்ஸ் இயங்குதளம். இதென்ன பெரிய வேலையா கொடுங்க நான் மாற்றித் தருகிறேன் என்றுச் சொல்லி அவரிடமிருந்து இரண்டு VCD களையும் பெற்றுக்கொண்டேன்.

நான் பயன்படுத்திக் கொண்டிருப்பது உபுண்டு 12.04.2 LTS பதிப்பு. VCD ஐ Drive னுள் நுழைத்த உடனேயே 'Could not open location; you might not have permission to open the file.' எனும் பிழைச்செய்தியினைக் Totem Player காட்டியது(பார்க்க படம் 1). சரி அடுத்து என்ன செய்வது VLC Player தான். அதில் இயக்கிப் பார்த்தால் அதிலும் Input/Output Error எனும் பிழைச் செய்திக் காட்டியது.

இணையத்தில் இது தொடர்பாக தேடிய போது விண்டோஸ் இயங்குதளத்தில் மட்டும்தான் VCD எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்கும் என்ற விபரம் தெரிய வந்தது. உரிமம் பிரச்சனையால் உபுண்டுவில் VCD யை இயக்க முடியாது என நினைக்கிறேன்.


vcdimager எனும் பொதியை நிறுவினால் VCD யினை நம்மால் உபுண்டுவில் VLC Media Player மூலமாவும் K3b மூலமாகவும் இயக்க முடியும். ஆகையால் முனையத்தில் sudo apt-get install vcdimager எனக் கொடுத்து அந்த பொதியினை நிறுவிக்கொண்டேன்.

அதன்பின் VLC Media Player VCD யில் உள்ள Video வினை எந்த பிரச்சனையும் இல்லாமல் காண முடிந்தது.


K3b யில் VCD Ripping:







Ripping செய்யப்பட்ட Video கோப்புகள் mpg வடிவில் /tmp/kde-username அடைவிற்குள் இயல்பிருப்பாக சேமிக்கப்படும்.

Dec 7, 2013

Grub Error ஐ சரிசெய்தது எப்படி? ஒரு அனுபவம்


இந்த பதிவை ஒரு முறை படித்து விடுங்கள் அப்பொழுதுதான்  இனிமேல் சொல்லப்போகும் விஷயங்கள் உங்களுக்கு புரியும்.

பிரச்சனை என்ன?
ஒரு கணினியில் இரண்டு வன்வட்டுக்கள் இருக்கிறது. அவைகள் முறையே 80 GB  மற்றும் 40 GB. 80GB Hard Disk ல் எந்த இயங்குதளமும் இல்லை. 40 GB Hard Disk ல் உபுண்டு இயங்குதளம் இருக்கிறது. அதுபோல 80GB Hard Disk ல் ஏற்கனவே இருந்த உபுண்டு இயங்குதளமும் அதன் பார்ட்டிசியன்களும்(root, boot, home and swap) நீக்கப்பட்டுவிட்டு வெறும் MBR(Master Boot Record) மட்டும்தான் இருக்கிறது.



இயங்குதளத்தை(Operating System) கணினி எந்த கருவியிலிருந்து இயக்க வேண்டும் என்பதை BIOS தான் முடிவு செய்கிறது. BIOS Settings ல் நாம் எந்த முறையில் அமைத்திருக்கிறோமோ அதுபடிதான் ஆரம்பிக்கும். அதனால் நான் என்ன செய்தேன் என்றால் Boot Device Priority யில் 1.Hard Disk 2.Hard Disk 3.CD Drive என அமைத்து விட்டு, கணினியில் இரண்டு Hard Disk கள் இருப்பதால் எந்த Hard Disk லிருந்து Boot ஆக வேண்டும் என்பதை BIOS க்குச் சென்று Advanced BIOS Feature -ல் Hard Disk Boot Priority யில் 40GB Hard Disk (உபுண்டு இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள) ஐ முதலாவதாக அமைத்தேன். மாற்றங்களை F10 Key ஐ அழுத்தி சேமித்தேன். கணினியை மறு தொடக்கம் செய்துவிட்டு ஆரம்பித்தால் எந்த பிரச்சனையுமில்லாமல் GRUB Menu கிடைத்தது அதோடு உபுண்டு இயங்குதளமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்தது. அந்த இயங்குதளம் இல்லாத 80GB Hard Disk ல் உள்ள அனைத்து பார்ட்டிசியன்களின் தகவல்களையும் அணுக முடிந்தது.





எல்லாம் நல்லாதானே போயிக்கிட்டு இருக்குனு நீங்க நினைக்கலாம். ஆனால் பிரச்சனையின் உச்சக்கட்டமே கணினியினை Shutdown செய்து விட்டு ஆரம்பித்த உடன்தான் ஆரம்பித்தது. கணினியினை Shutdown செய்து விட்டு ஆரம்பித்த பொழுது  Hard Disk Boot Priority யில் 40GB Hard Disk ஐ முதலாவதாக அமைத்தோமல்லவா அது படி  இல்லாமல் , 80GB Hard Disk ஐ முதலாவதாக BIOS இயல்பிருப்பாக அமைத்துக்கொண்டது அதனால்  கணினி  80GB Hard Disk ல் இயங்குதளத்தை தேடிப்பார்த்துவிட்டு grub rescue> எனும் பிழைச் செய்தியை காண்பித்துக் கொண்டு இருந்தது. ஆனால் BIOS ல் 40GB Hard Disk ஐ முதலாவதாக அமைத்தால் எப்பொழுது போல உபுண்டு இயங்குதளம் நன்றாக வேலை செய்தது.

தம்பி கதிர்வேலு, அதான் வேலை செய்யுதேப்பா அப்பறம் என்னய்யா உனக்குனு பிரச்சனைனு கேட்கிறீங்களா!

இந்த பிரச்சனை வந்தது ஒரு பழைய கணினியில் அந்த பழைய கணினியை பயன்படுத்திக்கொண்டிருக்கும் அண்ணன் சோம.நீலகண்டன் அவர்கள் கணினியைப் பற்றிய தொழில்நுட்ப அறிவை அவ்வளவாக  கொண்டிருப்பவர் அல்ல. கணினியில் திரைப்படம் பார்ப்பார், பாடல்கள் கேட்பார், முகநூல் பார்ப்பார் மற்றும் இணையத்தை பயன்படுத்துவார் அவ்வளவுதான்.

அதனால் இந்த பிரச்சனையை நான் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு கடந்த பத்து  நாட்களாக இணையத்தில் தகவல்களை தேடித் திரட்டினேன். நிறைய அனுபவம் கிடைத்தது. GRUB தொடர்பாக நிறைய செய்திகளைத் தெரிந்துக் கொண்டேன்.

தீர்வு கிடைத்தது:
என்ன தீர்வு கேட்குறீங்களா? சொல்கிறேன் கணியம் இதழுக்கு  ஒரு  கட்டுரை அனுப்பியிருந்தேன் அதன்மூலமாகத்தான் இந்த ஐடியா கிடைத்தது.

80GB Hard Disk -ல் வெறும் 5GB அளவில் உபுண்டு லினக்ஸை நிறுவினேன். இப்பொழுது நமக்கு ஏற்கனவே கிடைத்து வந்த grub rescue> பிழைச்செய்தி ஒழிந்தது. இதைப் பயன்படுத்தி அந்த 40GB Hard Disk -ல் உள்ள உபுண்டு இயங்குதளத்தை Load செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய நோக்கம். காரணம்? எப்படியிருந்தாலும் கணினியை நிறுத்திவிட்டு(Shutdown) ஆரம்பித்தால் 80GB யிலிருந்தே ஆரம்பிக்கப்போகிறது. அதனால் அதிலிருந்தே அந்த 40GB யில் இருக்கும் உபுண்டு லினக்ஸிற்கு இணைப்புக் கொடுத்து விட்டால்  பிரச்சனை முடிந்தது. அதைத்தான் நான் செய்தேன். 80GB Hard Disk ல் இருக்கும் உபுண்டு இயங்குதளம் வெறும் இணைப்புக்காக மட்டுமே பயன்படப்போகிறது அவ்வளவுதான்.

என்ன செய்தேன் என்றால் 80GB Hard Disk ல் ஏற்கனவே இருந்த /boot/grub/grub.cfgஐ நீக்கிவிட்டு 40GB Hard Disk -ல் /boot/grub/grub.cfg கோப்பினை  Copy செய்து  80GB Hard Disk னுள் இருக்கும் /boot/grub/  அடைவிற்குள்  copy செய்த grub.cfg கோப்பினை Pasteசெய்தேன். வேலைகளை முடித்துவிட்டு கணினியினை மறுதொடக்கம் செய்த பொழுது எப்பொழுதும் போல  80GB Hard Disk ன் GRUB Menu கிடைத்தது. அதிலிருந்து உபுண்டுவை ஆரம்பித்த போது வெற்றிகரமாக , நான் நினைத்தது போல  அந்த 40GB Hard Disk லிருந்து ஆரம்பித்தது.

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!



Dec 6, 2013

GRUB Error இதற்கு என்னதான் தீர்வு

ஒரு பழைய கணினியில் 80GB (/dev/sdb) வன்வட்டு இருந்தது. அந்த 80 GB வட்டில் உபுண்டு லினக்ஸை நிறுவியிருந்தேன். அதே வன்வட்டில்தான் GRUB பூட் லோடரும் நிறுவப்பட்டிருந்தது. ஒரு சிறிய பிரச்சினையின் காரணமாக லினக்ஸை நீக்கும் பொருட்டு அந்த வன்வட்டிலிருந்த root, boot, home, swap பார்ட்டிசியன்களை நீக்கிவிட்டேன்.

நீக்கிய பின் அருமை தோழர் வே.ஆதவன் அவர்கள் 40GB அளவுள்ள ஒரு வன்வட்டினை பயன்படுத்திக்கச் சொல்லிக் கொடுத்தார். அந்த வன்வட்டில் உபுண்டு லினக்ஸ் 12.04.2 LTS ஐ நிறுவினேன். நிறுவல் முடிந்தபின் கணினியை மறுதொடக்கம் செய்து உபுண்டு லினக்ஸிற்குள் நுழைந்து பயன்படுத்தினேன் நன்றாகவே வேலை செய்தது. ஏற்கனவே இருந்த 80GB அளவுள்ள வன்வட்டிலிருந்த அனைத்து பார்ட்டிசியன்களையும் அணுக முடிந்தது.

கணியை நிறுத்திவிட்டு(Shutdown) மீண்டு தொடங்கினால் கீழ்காணும் படத்தில் உள்ளது போன்ற பிழைச் செய்தி கிடைத்தது.


Boot Loader பிரச்சனையாக இருக்கும் என நினைத்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றி GRUB Boot Loader ஐ நிறுவினேன்.  அதன் பின்னும் வேலை செய்யவில்லை கீழ்காணும் படத்திலுள்ளது போன்ற பிழைச்செய்தி கிடைத்தது.


BIOS -ல் Boot Device Priority ஐ Hard Disk க்கு மாற்றி Advanced BIOS Features க்குச் சென்று Hard Disk Boot Priority யில் உபுண்டு லினக்ஸ் நிறுவியிருக்கும் 40GB Hard Disk ஐ First Priority யில் அமைத்து F10 கீயை அழுத்தி சேமித்து அதன்பின் கணினியினை Shutdown செய்துவிட்டு மீண்டும் தொடங்கினால் BIOS Settings -ல் மாற்றியபடி உபுண்டு நிறுவியிருக்கும் 40 GB வன்வட்டிலிருந்து தொடங்காமல் உபுண்டுவை நீக்கிய 80GB வன்வட்டிலிருந்தே ஆரம்பித்து, மேற்காணும் இரண்டு பிழைச் செய்திகளையும் காட்டிக் கொண்டு இருந்தது.






பிரச்சனைக்கான காரணம்:
BIOS ஒத்துழைக்காததுதான் முதன்மையான காரணம் என நினைக்கிறேன். உபுண்டு லினக்ஸ் நிறுவியுள்ள 40GB வட்டினை Hard Disk Boot Priority யில் முதலாவதாக அமைத்தாலும் shutdown செய்துவிட்டால், Hard disk boot priority யில் 80GB வட்டே முதலாவது நிலைக்கு சென்றுவிடுகிறது. அப்படியிருக்கையில் 80GB வட்டில் லினக்ஸ் இயங்குதளம் இல்லாததால் MBR மட்டும் வேலை செய்து grub rescue> பிழைச்செய்தி கிடைக்கிறது.

இந்த கணினியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் அண்ணன் சோம.நீலகண்டன் அவர்கள் கணினியைப் பற்றிய தீவிர தொழில்நுட்ப அனுபவம் இல்லாதவர். ஆகையால் கணினியை எப்படி ஆரம்பித்தாலும் எந்த பிழைச்செய்தியையும் காட்டாமல் இயங்குதளத்திற்குள் செல்ல வேண்டும்.

அதற்கான தீர்வினைத் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த பிரச்சனையை சரி செய்து விட்டால் இங்கு பிறகு பகிர்ந்து கொள்கிறேன். தோழர்கள் யாரேனும் இதற்கு தீர்வு வைத்திருந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.