Mar 11, 2013

கணினி அறிவியல் தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு தட்டச்சுப் பயிற்சி அவசியம்



அறிமுகம்:

கணினி என்பது இன்று அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒரு கருவியாகிவிட்டது.  ஓரளவு வசதியான கிராமங்களில் கூட இன்றைக்கு இணையத்தை பயன்படுத்தி மக்களுக்கான இணையம் தொடர்பான சேவைகளை செய்து கொடுத்து வருகின்றனர்.  இணையம் என்பது அனைவரையும் அருகருகில் வைத்திருக்கிறது.  கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்தலாம் என்ற வசதி தகவல் தொழிநுட்பத்தில் அடுத்த மைல்கல் ஏன் புரட்சி என்று கூட சொல்லலாம்.

தமிழ அரசு தமிழக மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் மடிக்கணினி கொடுத்த பிறகு இன்று கணினியினை பயன்படுத்தும் மாணவர்களின் விகிதம் நேர்க்கோட்டு வித்தியாசத்தில் உயர்ந்திருக்கிறது.

கணினி அறிவியல் துறையினை பொறியியல் படிப்பிலும், கல்லூரிகளிலும் விரும்பி ஏற்று பல இலட்சம் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கணினி என்பது நாம் கொடுக்கும் உள்ளீடுகளைப் பெற்று அதற்குத் தகுந்த வெளியீட்டினை நமக்கு கொடுக்கிறது. கணினியினுடைய வேகம் உண்மையிலேயே அதிகம். நாம் எந்த அளவிற்கு உள்ளீட்டினைக் கொடுக்கிறோமோ அந்தளவிற்கு கணினி நமக்கு வெளியீட்டினைக் கொடுத்து நமது வேலைகளை விரைவாக முடித்து தரும்.

கணினி ஒரு நல்ல வேலைக்காரன், வேலை ஏவும் நம் கையில்தான் உள்ளது அதை நல்ல விதமாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்திக் கொள்வது. கணினிக்கு வேலையினை அதிகமாக ஏவ வேண்டுமென்றால் தட்டச்சு பயிற்சி அவசியம்.

மாணவர்களும் கணினியும்:


கணினி அறிவியல் தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணினி ஆய்வகம் என்பது பாடத்திட்டத்தில் அவசியமாக இருக்கக் கூடிய ஒன்று.

தோராயமாக ஆய்வகத்தில் மாணவர்கள் கணினியில் பயிற்சி எடுக்க 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் வரை கால அவகாசம் தினமும் கொடுக்கப்படும்.

ஏதாவது ஒரு பயிற்சியினைக் கொடுத்து அதை ஆசிரியர் இந்த 3-மணி நேரத்தில் செய்து முடிக்கச் சொல்வார்.  ஆனால் உண்மையில் நடப்பது என்ன?  அந்த நிரலையோ அல்லது அந்த பயிற்சிக்குண்டான  உள்ளீடை கணினியில் தட்டச்சு செய்து முடிக்கவே அதிக நேரம் எடுத்துக்கொள்வர். பிறகு அதில் வரும் பிழைகளைச் சரி செய்யவும்,  கொடுக்கப்பட்ட பயிற்சியினை மாதிரியாக வைத்து தாமாகவே ஒரு நிரலை எழுதவும் நேரம் போதாமல் ஆகி விடும்.   ஆகையால் தட்டச்சு தெரியாத காரணத்தினால் எந்த பயிற்சியினையும் முழுமையாக கற்க முடியாமல் போய் விடுகிறது.

தட்டச்சு செய்தல் என்பது கணினியினைப் பொறுத்தமட்டில் தவிர்க்க முடியாதது, அவசியமானது.

பெரும்பாலான மாணவர்கள் கணினியில் தட்டச்சு செய்யும் பொழுது இரண்டு கைகளிலும் இருக்கும் மொத்தமுள்ள பத்து விரல்களில் இரண்டு விரல்களை மட்டுமே பயன்படுத்தி தட்டச்சு செய்து  கொண்டிருக்கின்றனர்.  இது தவறான முறை.

தட்டச்சு செய்யும் போது ஒரு கட்டவிரலைத் தவிர மற்ற 9-விரல்களும் பயன்படுத்தியாக வேண்டும்.

இரண்டு வார்த்தைகளைக் கூட தட்டச்சு செய்யாமல் மறுமுறை தேவைப்படும் இடத்தில் அந்த இரண்டு வார்த்தைகளை cut செய்து paste செய்கின்றனர் மிகவும் சோம்பேறி தனத்துடன். இதற்காக நாம் Mouse ஐ இயக்கும் நேரத்தில் பாதிக்கு குறைவான நேரத்தில் அந்த வார்த்தைகளை தட்ட்ச்சு செய்து முடித்து விடலாம்.  ஆனால் பெரும்பாலவர்கள் அதை செய்வதில்லை காரணம் தட்டச்சு பலகையினை முறையாக இயக்கத்தெரியாமைதான் காரணம்.

கணினியினை Mouse ஐ பயன்படுத்தி இயக்குவதைவிட, தட்டச்சு பலகையினைப் பயன்படுத்திதான் அதிவேகமாக இயக்கமுடியும்.

தட்டச்சு பயிற்சி மாணவர்களுக்கு அவசியம்:


தட்டச்சு தெரிந்தால் கணினியினை இயக்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

நாம் தட்டச்சு செய்வதைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு நாமும் இதைப் போல தட்டச்சு செய்தால் நன்றாகயிருக்கும் என ஆசைப்படுவர்.  அதை அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது அது நமக்கு ஊக்கமாக அமையும்.

வலைப்பூ, இணையத்தில் கட்டுரை எழுதுவது, மின்-புத்தகம் வெளியிடுவது மற்றும் இறுதியாண்டு Project க்கு Document தயார் செய்வது, ஆய்வகத்தில் நிரல்களை விரைவாக தட்டச்சு செய்து முடித்து விட்டு பிழைகளை சரிசெய்ய நேரம் அதிகமாக கிடைக்கும், புதிது புதிதாக நிரல்களை எழுதி பார்க்கலாம் இது போன்று இன்னும் பல வேலைகளை மிகவும் எளிதாக செய்யலாம் அதற்கு தட்டச்சு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

ஆக மொத்தம் தட்டச்சு தெரிந்தால் கணினி என்பது மிகவும் எளிமையாகி விடும்.  இயக்குவதில் ஓர் ஆர்வம் ஏற்படும். உங்கள் துறைமீதே உங்களுக்கு ஓர் ஆர்வம் ஏற்பட தட்டச்சு பயிற்சியும் ஒரு காரணியாக அமையும்.

தட்டச்சு பயிற்சியில் சேர்தல்:



இப்பொழுது தியேட்டரில் வெளியாகும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு 150-200-300 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையினைக் கொடுத்துதான் நாம் திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கிறோம். ஆனால் இது வீண் செலவு எதற்கும் பயன்பட போவதில்லை. அதுவும் நமக்கு தெரியும்.

ஆனால், தட்டச்சு பயிற்சிக்கு ஒரு மாத கட்டணம் வெறும் 200ரூபாய் மட்டும்தான்.  நமது வாழ்நாள் முழுவதும் பயன்படும்படியான ஒரு செலவு. இடத்திற்கு தகுந்தாற்போல இந்த தொகை மாறலாம்.

குறைந்தது 3-மாதங்கள் பயிற்சி எடுத்தாலே போதும் தட்டச்சில் உங்களுக்கு நல்ல பரிச்சயம் ஏற்பட்டு விடும். நீங்கள் தட்டச்சு பயிலும்போதே கணினியிலும் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.  ஒரு சில கீகளைத் தவிர மற்றவையனைத்தும் கணினியின் தட்டச்சு பலகையின் அமைப்பை ஒத்தே இருக்கும்.

தட்டச்சு பயிற்சியில் இரண்டு நிலைகள் உள்ளன:

1.கீழ்நிலை (Lower)
2.மேல்நிலை (Higher)

இந்த இரண்டு நிலைகளில் கீழ்நிலையே கணினியினை இயக்கப் போதுமானது.

நீங்கள் விரும்பினால் அரசு நடத்தும் தட்டச்சு தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம்.  வெற்றி பெற்றவர்களுக்கு DEPARTMENT OF TECHNICAL EDUCATION - லிருந்து அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள தகுதியான சான்றிதழ்.  நான் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழை பதிவு செய்துள்ளேன்.

தேர்வு கட்டணம் : 600ரூபாய் என நினைக்கிறேன்.

முடிவாக:



கணினி அறிவியல் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் முதலமாண்டு படிப்பில் சேரும் பொழுதே தட்டச்சு பயிற்சியிலும் சேர்ந்து விட வேண்டும்.

தட்டச்சு பயிற்சியினைக் கற்றுக்கொண்டால் தான் கணினி எளிமையாகும்.

கணினியிலேயேதான் Type Writing Tutor Software இருக்கே அதைப் பயன்படுத்திக் கற்றுக்கொள்ளலாமே என கேட்கலாம். அந்த மென்பொருள்களின் மூலம் ஒருகாலும் நீங்கள் தட்டச்சு பயிற்சி பெற முடியாது. வேண்டுமானால் புதிப்பித்துக்கொள்ள உதவும் அவ்வளவுதான்.

இன்றே அருகில் இருக்கும் தட்டச்சு பயிற்சி மையத்திற்கு செல்லுங்கள். தட்டச்சு கற்றுக்கொள்ளுங்கள்.  கணினியில் வல்லூனராகுங்கள்.


***வாழ்த்துக்கள்***

தட்டச்சு தொடர்பான எந்த கருத்தானாலும் அதை வாசகர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய அனுபவத்தையும், ஆலோசனையையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.  நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம்.


2 comments:

அணில் said...

என் முதல் நாள் தட்டச்சு வகுப்பில் சுண்டு விரல் விசைகளுக்கிடையே மாட்டிக் கொண்டது. ஆரம்பத்தில் அருகாமையில் மிக வேகமாக தட்டச்சிடுபவர்களைக் கண்டு மிரட்சி கொண்டாலும் நாளடைவில் சரியாகி விட்டது.

இரா.கதிர்வேல் said...

நன்றி ராஜ்குமார்.

எனக்கு வேகமாக தட்டச்சு செய்பவர்களைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. நாமெல்லாம் இதுபோல தட்டச்சு செய்ய முடியுமா? என அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ஆனால் காலப்போக்கில்தான் நான் பயிற்சிப் பெற்ற பிறகு தெரிந்தது அவர்களின் தட்டச்சு வேகத்திற்கு காரணம், பயிற்சிதான் என்று.