Feb 19, 2012

உபுண்டு 11.10 நிறுவுதல் கையேடு தமிழில் PDF கோப்பாக - பகுதி(1)

கோப்பினைத் தரவிறக்க இங்கு சொடுக்கவும்

உபுண்டு லினக்ஸ் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிய பதிப்பாக வெளியிடப்படுகிறது. புதிதாக வெளியிடப்படும் ஒவ்வொரு பதிப்பும் பல சிறப்பான மாற்றங்களுடனும், அம்சங்களுடனும் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.

உபுண்டு லினக்ஸினுடைய 10.04 பதிப்பிலிருந்து நிறுவுதலுக்குண்டான இடைமுகப்பில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறு சிறு மாற்றங்கள் நிறுவுதலை மென்மேலும் எளிமைப் படுத்தும் விதத்தில் அமைந்து உள்ளது.

இருந்தாலும் ஏற்கனவே உள்ள கையேடுகள், வழிகாட்டிகள், காணொளிகள் (உபுண்டு 9.10 பதிப்பு வரையில் உள்ளது), உபுண்டு 11.10 பதிப்பை நிறுவ முற்படும் ஆரம்ப நிலை பயனாளர்களுக்கு சிறு சிறு தடுமாற்றங்களை உண்டு பண்ணும். இந்த தடுமாற்றங்களை நிவர்த்தி செய்யும் விதமாக புதிய பயனாளர்களுக்கு, இந்த நிறுவுதல் கையேடு உதவியாக அமையும்.

நான் ஏற்கனவே உபுண்டு லினக்ஸ் நிறுவுதல் தொடர்பாக இரண்டு கையேடுகளை வெளியிட்டிருக்கிறேன். நிறைய பயனாளர்கள் பயனடைந்து இருப்பார்கள் என நம்புகிறேன்.

உபுண்டு லினக்ஸ் நிறுவுதல் தொடர்பாக ஆங்கிலத்தில் நிறைய கையேடுகளும், வழிகாட்டிகளும், காணொளிகளும் உள்ளது. ஆனால் நம்முடைய தமிழ் மொழியில் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த பெரிய குறைபாட்டினை சரி செய்யும் ஒரு சிறிய புள்ளியாக இது அமையும்.

அத்துடன் நம்முடைய நண்பர்கள் உபுண்டு லினக்ஸினை நிறுவுவது எப்படி எனக் கேட்கும் பொழுது, அவர்களுக்கு பரிந்துரைக்க இது ஒரு முழுமையான கையேடாகவும் அமையும்.



இந்த கையேட்டினை இரண்டு பகுதிகளாக வெளியிடுகிறேன். இந்தப் பதிவில் இணைத்திருப்பது முதல் பகுதி. இந்த பகுதியில் Gpartition Editor -னைக் கொண்டு வன்வட்டினை எவ்வாறு தயார் செய்வது எனக் கொடுத்துள்ளேன்.

இதனைத் தொடர்ந்து உபுண்டுவினை நிறுவுவது எப்படி எனக் கொடுத்துள்ளேன். அதை அடுத்த பதிவில் இந்த பகுதியினையும் சேர்த்து ஒரு முழுமையான கையேடாக வெளியிடுகிறேன்.

[வேலைப் பழு காரணம் என்று சொல்வதோடு , தனிபட்ட காரணங்களுக்காக கோப்பினை முழுமையாக தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும். விரைவில் வெளியிடுகிறேன். ]

இந்த கோப்பினைப் பற்றிய தங்கள் கருத்துக்களை ஆவலாக எதிர்பார்க்கிறேன். இதைப் பற்றி தாங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே நீங்கள் தெரிவிக்கலாம்.

Feb 13, 2012

Opera Mini Browser (கைப்பேசி பதிப்பு) -ல் தமிழ் எழுத்துருக்களை தெரியவைப்பது எப்படி?


Opera Mini Browser கைப்பேசியில் (Cell Phone,Mobile) இணைய உலாவியாக அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப் படுகிறது. Nokia Xpress Music 5310 கைப்பேசியில் Opera Mini Browser உள்ளிணைப்பாகவே கொடுக்கப்படுகிறது. Nokia Xpress Music 5310 Model னை பொறுத்தவரையில் தமிழ் எழுத்துருக்கள் மிகவும் அற்புதமாகவும், தெளிவாகவும் தெரிகிறது, தமிழ் எழுத்துருக்களுக்காக Opera Mini Browser -னினுடைய அமைப்பில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதில்லை.

ஆனால் Nokia வினுடைய மற்ற Model கள் , Samsung வை கைப்பேசிகளில் தரவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தும் பொழுது Opera Mini உலாவியில் தமிழ் எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத்தான் தெரிகிறது.

[அது என்னவோ தெரியவில்லை ஏதாவது ஒன்றில் தமிழ் மொழி வரவில்லை அல்லது தெரியவில்லை என்றால் எப்படியாவது அதை கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் கலந்த வெறி வந்துவிடுகிறது. முடிந்த அளவு முயற்சி செய்து பார்த்துவிடுவோமே என்ற எண்ணமும் உதித்து விடுகிறது]

இந்த பிரச்சனைக்கான தீர்வு மிகவும் எளிதானது.

தீர்வு:

1.கைப்பேசியில் இருக்கும் Opera Mini உலாவியினை திறந்துக்கொள்ளுங்கள்.

2.உலாவியினுடைய முகவரிப் பட்டையில் (Address Bar) opera:config என தட்டச்சு செய்து OK Button ஐ அழுத்துங்கள். அழுத்தியவுடன் Power-User Settings எனும் தலைப்பின் கீழ் Opera Mini உலாவியினுடைய அமைப்புகள் கிடைக்கும்.


3.கிடைக்கும் அமைப்பில் இறுதியாக Use bitmap fonts for complex scripts என்று ஒரு தேர்வு இருக்கும் அதில் Yes என்று மாற்றம் செய்து, அடியில் இருக்கும் Save Button ஐ அழுத்த வேண்டும்.

4. Opera Mini உலாவியினை மூடிவிட்டு மறுபடியும் திறந்து அதில் தமிழ் யுனிகோடு தளங்களைப் பார்த்தீர்களேயானால் மிகவும் தெளிவாகவும், அருமையாகவும் தெரியும்.

--------------------------------------

Feb 8, 2012

உபுண்டு லினக்ஸ் நிறுவிய தேதியினை தெரிந்துகொள்வோம்

நாம் எல்லோரும் மற்றவர்களிடம் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று, நான் இந்த பொருளை இத்தனை வருடங்களாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்பது. அட இதுநாள் வரையிலும் எந்த பிரச்சனையுமே வந்ததுயில்லீங்க!!!. என கூறக் கேட்டிருப்போம்.(இது நாம் பல்துலக்க பயன்படுத்தும் பிரஷிலிருந்து , செல்போன் வரை)

அதுபோல, நாம் பயன்படுத்தும் உபுண்டு லினக்ஸினையும் நிறுவி எத்தனை நாட்கள் ஆகிவிட்டது என தெரிந்துகொள்ளவும் நமக்கெல்லாம் ஆசையாக இருக்கும். தெரிந்துக்கொண்டு என்ன தம்பி பண்ணுறதுனு கேட்கிறீங்களா, மற்றவர்களிடம் கூறி பெருமைப் பட்டுக்கொள்ளளாமில்லையா !!!.

நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டு லினக்ஸ் நிறுவிய தேதியினை தெரிந்துக்கொள்ள நிறைய வழிகள் இருக்கிறது. அதில் இரண்டு வழிகளினை மட்டும் இங்கு பார்ப்போம்.

வழி ஒன்று:

sudo ls -al /var/log/installer/syslog என்ற கட்டளையின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். படம் - 1 னைப் பார்க்கவும்.


படம் -1

வழி இரண்டு:

sudo cat /var/log/installer/syslog | less

கட்டளையின் மூலம் தெரிந்துக்கொள்வது. இந்த கட்டளையினை கொடுத்தவுடன் உங்களுக்கு நிறைய செய்திகள் கிடைக்கும் அதில் முனையத்தினுடைய இடதுபுறமாக தேதி காண்பிக்கப்படும். அதுதான் நாம் உபுண்டு நிறுவிய தேதி. பார்க்க படம் -2 மற்றும் படம் -3

படம் -2

படம் -3
படம் -3 -ல் உள்ளதுப் போன்ற செய்திகள் கிடைக்கும் திரையினை விட்டு வெளியேற Q - Key -னை அழுத்தவும்.

நான் உபுண்டு 10.10 பதிப்பு பயன்படுத்துகிறேன். நிறுவிய தேதி 21/05/2011 . அட என்னோட உபுண்டு நிறுவி முழுமையாக 8-மாதம் ஆகியிருச்சுங்க. அட இதுவரையிலும் எந்த பிரச்சினையும் இல்லீங்க!!!!!!!.

சரி விண்டோஸ் இயங்குதளம்? அட இந்த 8-மாதத்திற்குள் 3-முறை மறு நிறுவல் செய்து விட்டேங்க. விண்டோஸ் இயங்குதளம் 3-மாதத்திற்கு மேல் தாங்குவதெல்லாம் ஒரு பெரிய சாதனைங்க!!