Apr 30, 2010

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் full circle magazine - 36 வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது


உபுண்டு community யால் வெளியிடப்படும் full circle magazine 36-வது இதழ் வெளியிடப்பட்டு விட்டது.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படிக்க வேண்டிய ஒரு அருமையான இதழ்.தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

Apr 27, 2010

லினக்ஸ்-கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம்


புத்தகத்தின் பெயர் கட்டற்ற மென்பொருள் கட்டற்ற மென்பொருள் பற்றி ரிச்சர்டு எம்.ஸ்டாலமன் அவர்களுடைய கருத்துக்களை ம.ஸ்ரீ.ராமதாஸ் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்.

முதலில் ம.ஸ்ரீ.ராமதாஸ் அவர்களைப் பற்றி புத்தகத்தில் இருந்த தகவலைக் கொடுத்துவிடுகிறேன்.

ம.ஸ்ரீ.ராமதாஸ் - ஆமாச்சு என்று கட்டற்ற மென்பொருள் குழுமங்களில் அறியப்படுபவர்.இன்று பிரபலமாகப் பலரும் பயன்படுத்த துவங்கியிருக்கும் குனு/லினக்ஸ் இயங்குதளமான உபுண்டுவின் (Ubuntu) தமிழ்க் குழு பொறுப்பாளராக இருந்தவர்.அதன் திட்டங்கள் சிலவற்றுக்கும்,கே பணிச்சூழல்(KDE-K Environment) போன்ற கட்டற்ற மென்பொருள்கள் சிலவற்றின் தமிழாக்கத்திற்கும் பங்களித்து வருகிறார்.சென்னை குனு/லினக்ஸ் பயனர் குழுவைச் (http://chennailug.org) சேர்ந்த இவர், மத்திய அரசித் திட்டமான கட்டற்ற திறந்த மூல மென்வளத்துக்கான தேசிய மையத்தின் (http://nrcfoss.org.in) மூலம் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களின் பரவலுக்கும் பங்களித்து வருகிறார்.

இந்த புத்தகத்தினை நான் 2010 ஆங்கில வருடப்பிறப்பு அன்று பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற புத்தக கண்காட்சியில் நானும் என் நண்பன் ம.பாண்டியராஜனும் சென்று வாங்கினோம்.நான் இந்த வலைப்பூவை எழுதுவதற்கு இந்த புத்தகமும் ஒரு காரணியாக அமைந்தது.
கட்டற்ற மென்பொருள்களில் உள்ள நிறைய சந்தேகங்கள் எனக்கு இந்த புத்தகத்தை படித்த பிறகுதான்,தெளிவாகியது.மிகவும் அருமையான புத்தகம்.வாங்கிப் படித்து சுவையுங்கள்.

இந்த புத்தகத்தினைப் பற்றி மயூரன் அவர்களின் பதிவு


புத்தகத்தின் பெயர்:கட்டற்ற மென்பொருள்
ஆசிரியர்:ம.ஸ்ரீ.ராமதஸ்.,
விலை:60 ரூ
முகவரி:
Aazhi Publishers,
12,First Main Road,
United India Colony,
Kodambakkam,
சென்னை-600024

தொலைபேசி எண்:044-43587585
மின்னஞ்சல்:aazhieditor@gmail.com
இணையதள முகவரி:http://www.aazhipublishers.com

லினக்ஸ் ஆர்வலர்களுக்கு,லினக்ஸைக் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு,லினக்ஸ் பயனாளர்களுக்கு- லினக்ஸிற்காக தமிழில் கிடைக்கக் கூடிய புத்தகங்கள்


லினக்ஸை பயன்படுத்த,கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு லினக்ஸை கற்றுக்கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு லினக்ஸைப் பற்றி தமிழில் ஏதேனும் புத்தகங்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கும்.உங்களுக்காகவே இந்த பதிவை இடுகிறென்.லினக்ஸை பற்றி தெரிந்து கொள்ள எனக்கு தெரிந்து தமிழில் மூன்று புத்தகங்கள் இருக்கிறது.இந்த மூன்று புத்தகங்களும் வெவ்வேறு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.கண்ணதாசன் பதிப்பகம்,மணிமேகலைப் பிரசுரம்,வளர்தமிழ் பதிப்பகம் இந்த மூன்று பதிப்பகங்களும் லினக்ஸைப் பற்றி தலா ஒரு புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.இந்த புத்தகங்களின் விலை மற்றும் பதிப்பகத்தின் முகவரியினையும் கீழே கொடுக்கிறேன்.தேவைப்படுவோர் வாங்கி பயனடையுங்கள்.
-------------------------------------------------------------------------------
புத்தகத்தின் பெயர் : லினக்ஸ் (இலவசமாக Mandrake 9.0 CD உடன்)
ஆசிரியர் பெயர் : கே.சுந்தரராஜன் M.sc.,A.M.I.E.T.E
விலை : 177 ரூ
முகவரி :
கண்ணதாசன் பதிப்பகம் ,
23,கண்ணதாசன் சாலை,
தியாகராய நகர்,
சென்னை - 600 017
தொலைபேசி எண்:044-24332682 / 8712
மின்னஞ்சல் முகவரி:kannadhasan@vsnl.net
இணையதள முகவரி:www.kannadhasan.com

இந்த புத்தகம் முழுவதும் mandrake 9.0 லினக்ஸினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.இதை நான் பதிவு தபாலில் வரவழைத்து பெற்றேன்.மிகவும் அருமையான புத்தகம்.மிகவும் தெளிவாக தமிழில் அனைவரும் புரிந்துக்கொள்ளும் படியாக எழுதியிருக்கிறார்.Mandrake 9.0 (Mandriva) லினக்ஸினை நிறுவுவது எப்படி என்பதை மிகமிக தெளிவாக விளக்கியிருக்கிறார்.அடிப்படை லினக்ஸ் பயனாளர்கள் ஒவ்வொருவருனிடைய கையிலும் இருக்க வேண்டிய புத்தகம்.புத்தகத்தை பெறுவது தொடர்பான சந்தேகங்களுக்கு பதிப்பகத்தினை தொடர்புகொண்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
----------------------------------------------------------
புத்தகத்தின் பெயர்:லினக்ஸ் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்
ஆசிரியர்:ராஜமலர் M.C.A.,
விலை:75 ரூ
முகவரி:
மணிமேகலைப் பிரசுரம்.
தபால் பெட்டி எண்:1447,
7(பழைய எண்:4),
தணிகாசலம் சாலை ,

தியாகராய நகர்,சென்னை-600017
தொலைபேசி எண்:044-24342926
தொலைநகல்:0091-44-24346082
மின்னஞ்சல்:manimekalai@eth.net

இந்த புத்தகத்தில் லினக்ஸைப் பற்றிய அடிப்படையான செய்திகள் அனைத்தையும் அனைவருக்கும் புரியும்படியாக மிகத்தெளிவாக ஆசிரியர் கொடுத்துள்ளர்.புத்தகத்தை பெறுவது தொடர்பான சந்தேகங்களுக்கு பதிப்பகத்தினை தொடர்புகொண்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
-------------------------------------------------------------------------------

புத்தகத்தின் பெயர் : லினக்ஸ்
ஆசிரியர் பெயர் : வில்பட்ராஜ்
முகவரி :
வளர்தமிழ் பதிப்பகம்,
37,அசீஸ்முல்க் இரண்டாம் தெரு,
அண்ணாசாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்:2829 2390,2829 3230
மின்னஞ்சல் முகவரி:tamilcomputer@hotmail.com

லினக்ஸினுடைய அடிப்படையான விஷயங்கள் இந்த புத்தகத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.இறுதி பக்கத்தில் உள்ள கேள்வி-பதில் நன்றாக உள்ளது.இந்த புத்தகத்தின் விலை மற்றும் புத்தகத்தை பெறுவது தொடர்பான சந்தேகங்களுக்கு பதிப்பகத்தினை தொடர்புகொண்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------

லினக்ஸில் அடிப்படை கட்டளைகள் தொடர்-11

படம்-1
இந்த தொடரில் நாம் பயனாளருக்கு அனுமதிகள் வழங்குவது தொடர்பான கட்டளையினை பற்றிப் பார்க்கப் போகிறோம்.அதாவது chmod கட்டளையினைப் பற்றி

அனுமதிகள்:
  • லினக்ஸில் அனைத்துமே ஒரு கோப்பாகத்தான் கையாளப்படுகிறது.லினக்ஸ் பிரச்சனையில்லாமல் இயங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
  • லினக்ஸில் ஒவ்வொரு கோப்பு மற்றும் அடைவுகளும் பயனாளர் அனுமதிகளை கொண்டிருக்கும்.
  • இந்த அனுமதிகள் லினக்ஸினுடைய பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டது.
  • மூன்று அனுமதிகள் உள்ளன அவை read,write and execute.
  • read அனுமதி -> ஒரு கோப்பினை பார்பதற்கும் மற்றும் படிப்பதற்கும் கொடுக்கப்படும்.இதை r என்று குறிப்பிட்டு பயன்படுத்துவோம்.
  • write அனுமதி -> ஒரு கோப்பில் மாற்றம் செய்வதற்கும் மற்றும் அந்த கோப்பினை நீக்குவதற்கும் கொடுக்கப்படும்.இதை w என்று குறிப்பிட்டு பயன்படுத்துவோம்.
  • execute அனுமதி -> ஒரு கோப்பினை இயக்குவதற்கு கொடுக்கப்படும்.இதை x என்று குறிப்பிட்டு பயன்படுத்துவோம்.
ஒரு கோப்பினை பற்றிய அவசியமான தகவல்கள் அனைத்தையும் ls -l இந்த கட்டளை கொடுத்துவிடும்(படம்-1 ஐ பார்க்கவும்).இந்த தொடரில் ls கட்டளை பற்றிய தகவல்களையும் பார்ப்போம்.
  • உதாரணமாக periyar என்ற கோப்பினை பற்றிய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் முனையத்தில் ls -l periyar என்று கட்டளை அமைக்க வேண்டும்(படம்-1 ஐப் பார்க்கவும்).
  • நான் periyar என்று கோப்பினுடைய பெயரினை கொடுத்துள்ளேன் நீங்கள் உங்கள் கணினியில் உள்ள கோப்பின் பெயரை கொடுத்துக்கொள்ளலாம்.நீங்கள் முனையத்தில் ls -l filename (இங்கு நான் filename என குறிப்பிட்டு உள்ளதில் உங்கள் கணினியினுடைய ஏதாவதொரு கோப்பின் பெயர் இருக்கும்) என கொடுத்து Enter key யினை அழுத்தியவுடன்
-rw-rw-r--. 1 kathirvel kathirvel 30 2010-04-27 12:21 periyar

என கிடைக்கும் தகவலில் உள்ள
  • முதல் பகுதியினுடைய முதல் எழுத்து எந்த வகையான கோப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
இதில்
  • - என்பது சாதாரண கோப்பினையும்
  • d என்பது Directory அதாவது அடைவினையும்
  • c என்பது character device (serial port,parallel port) னையும்
  • b என்பது block device (hard disk,pen drive,CD/DVD drive) னையும் குறிக்கிறது
  • அடுத்துள்ள ஒன்பது எழுத்துக்களும் owner,group and other களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதிகளைக்(read,write,execute) குறிக்கிறது.
  • அடுத்தப் பகுதி எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
  • அடுத்தப் பகுதி owner (கோப்பினை உருவாக்கியவர்) ஐக் குற்றிக்கிறது.
  • அடுத்தப் பகுதி group (group னுடைய பயனாளர்களைக் குறிக்கிறது)
  • அடுத்தப் பகுதி கோப்பினுடைய அளவினையும்,கோப்பு உருவாக்கப்பட்ட மற்றும் மாற்றம் செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தையும் குறிக்கிறது.
ரொம்பப் போரடிக்கிறதோ சரி விட்டு விடுகிறேன்.இதனுடைய தொடர்ச்சியை அடுத்த தொடரில் பார்ப்போம்.

Apr 25, 2010

பெடோரா லினக்ஸில் gnusim8085 மென்பொருளை (Microprocessor Emulator Software) நிறுவுவது எப்படி?

உபுண்டு லினக்ஸிற்கு அடுத்து நான் அதிகம் பயன்படுத்தும் லினக்ஸ் பெடோரா லினக்ஸ் ஆகும்.நான் பொறியியல் படித்துக் கொண்டு இருப்பதால் எனக்கு இரண்டாமாண்டில் மூன்றாவது பருவத்தில் Microprocessor and Microcontroller பாடம் வைக்கப்பட்டது.இந்த பாடத்திற்கு எனக்கு செய்முறை பாடமும் இருந்தது.ஆய்வகத்தில் 8085 kit இல் அனைத்து செய்முறைகளையும் செய்தோம்.நான் மடிக்கணினி வைத்திருப்பதால் 8085 virtual trainer kit எனும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்கிய மென்பொருளை வைத்து பயன்படுத்தி வந்தேன்.இப்பொழுது நாம் இந்த பதிவில் பார்த்துக் கொண்டிருக்கும் gnusim8085 மென்பொருளானது இந்தியாவினுடைய FOSS விருது வாங்கிய மென்பொருள்.விருது வழங்கிய அடுத்த மாதமே LINUX For You இதழுடன் வரும் வட்டில் இந்த மென்பொருளும் சேர்ந்து வந்தது அப்பொழுதெல்லாம் என்னிடம் கணினி இல்லை.இதை லினக்ஸில் நிறுவி பயன்படுத்தி பார்த்து விட வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது.இன்று அது நிறைவேறியது இதை நான் பொடோரா லினக்ஸில் நிறுவியுள்ளென்.உபுண்டு லினக்ஸிலும் இந்த மென்பொருளை நிறுவலாம்.
சரி எப்படி நிறுவுவது என்று பார்ப்போமா
  • பொடோரா லினக்ஸில் இணைய இணைப்பு இருக்க வேண்டியது அவசியம்.இதை நாம் இணையத்தில் இருந்துதான் நிறுவப்போகிறோம்.
  • System Tools => Terminal ஐ திறந்து கொள்ளுங்கள்.முனையத்தில் su என கட்டளையை கொடுங்கள்.root பயளாரினுடைய கடவுச்சொல்லை கேட்கும்.கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்.உள்ளிட்ட பிறகு
  • yum install gnusim8085 என்று கொடுத்து என்டர் பொத்தானை அழுத்துங்கள்.இந்த மென்பொருளினுடைய அளவு 163 KB தான் மிக விரைவில் நிறுவப்பட்டு விடும்.ஒரு மென்பொருளை நிறுவுவது எவ்வளவு எளிமையாக இருக்கிறது பார்த்தீர்களா என்ன ஒன்று இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
  • நிறுவி முடித்த பின்பு Application => Electronics => Embedded Design=>GNUSim8085 சென்று gnusim8085 ஐ திறந்து கொள்ளுங்கள்.
  • கொடுக்கப்பட்டுள்ள மூன்று படத்தையும் பெரிது படுத்தி பார்த்துக்கொள்ளுங்கள்.
  • B.E,M.E (Electronics and Communication ,Electrical and Electronics ,Computer Science and Engg ) படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள்.
  • இந்த மென்பொருளை பயன்படுத்துவது எப்படி என்று உதவி பக்கங்கள் கொடுத்துள்ளார்கள்.
இந்த மென்பொருளை உபுண்டு லினக்ஸில் நிறுவ apt-get install gnusim8085 என்று கட்டளையை முனையத்தில் கொடுங்கள்.உபுண்டு 9.10 ல் நிறுவி பார்த்து விட்டேன் மிகவும் அருமையாக இயங்குகிறது.

உபுண்டு 9.10 ல் root account ஐ Enable செய்வது எப்படி?

உபுண்டு லினக்ஸ் லினக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கிடையில் ஒரு செல்ல பிள்ளையாக வளர்ந்து வருகிறது.நானும் உபுண்டு லினக்சில் தினம் தினம் எதையாவது புதிது புதிதாக கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.இன்னும் ஒரு சில தினங்களில் உபுண்டு 10.4 வெளியிடப்பட்டு விடும்.அனைவரும் மிகவும் ஆவலாக இருக்கிறோம்.உபுண்டு லினக்ஸின் தற்போதைய பதிப்பு உபுண்டு 9.10.உபுண்டு 9.10 லினக்சை நிறுவும்பொழுது root account மற்றும் root password பற்றிய எந்த தகவலையும் நம்மிடம் கேட்க்காது.ஆகையால் நாம் நிறுவும் பொழுது கொடுத்த பயனாளர் பெயருடன் தான் இயங்குதளத்தை பயன்படுத்திக் கொண்டு இருப்போம். லினக்சை பொறுத்த வரையில் root பயனாளரால்தான் கணினியினுடைய முக்கியமான வேலைகளை செய்ய முடியும்.ஆகையால் நாம் root account enable செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் முனையத்தை திறந்துக்கொள்ளுங்கள்.முனையத்தில் கீழ்க்கண்டவாறு கட்டளை அமையுங்கள்.

sudo passwd root

நீங்கள் root பயனாளருக்கு கொடுக்க விரும்பும் கட்டளையை கொடுங்கள்.கட்டளையை கொடுத்து முடித்தவுடன் root account enable செய்யப்படும்.இப்பொழுது முனையத்தில்

su root

என கொடுத்து Enter key யினை அழுத்துங்கள்.கடவுச்சொல்லை கேட்க்கும்.கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்.கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு நீங்கள் root பயனாளராக முனையத்தில் மாறியிருப்பீர்கள்.login screen மூலமும் நீங்கள் root பயனாளராக செல்ல முடியும்.இதற்கென நீங்கள் எதையும் தனியாக மாற்றம் செய்ய வேண்டியதில்லை.படத்தை பெரிது படுத்தி பார்த்துக் கொள்ளுங்கள்.

உபுண்டு 9.10 லினக்ஸில் தமிழில் தட்டச்சு செய்யும்,தமிழில் உள்ளீடு செய்யும் வசதியை உருவாக்குவது எப்படி

படம்-1
உபுண்டு 9.04 லினக்ஸில் தமிழை தட்டச்சு செய்ய SCIM input method ஐ பயன்படுத்த வேண்டும்.இதை நிறுவ உங்களிடம் இணைய இணைப்பு இருக்க வேண்டும். இணைய இணைப்பு மூலமே இதை நிறுவ முடியும்.ஆனால் உபுண்டு 9.10 ல் iBus என்ற வசதியை இருப்பியல்பாக கொடுத்திருக்கிறார்கள்.அதை அமைத்து எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று பார்ப்போம்.
  • System => Preferences => iBus Preferences ஐ திறந்து கொள்ளுங்கள்.படம்-1 ஐ பாருங்கள்.
  • iBus ஐத் திறந்தவுடன் படம்-2 ல் உள்ளது போன்ற திரையினைக் காட்டும்.அதில் Yes என்பதை click செய்யுங்கள்.

படம்-2
  • நீங்கள் Yes என்பதை click செய்தவுடன் படம்-3 உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.அதில் ok யினை click செய்யுங்கள்
படம்-3
  • ok யினை click செய்தவுடன் iBus preferences என்பதுடன் படம்-4 ல் உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.அதில் Input Method எனும் Tab ஐ click செய்யுங்கள்.
படம்-4
  • அதில் Select an input method என்பதுடன் ஒரு combo box இருக்கும்.அதன் மீது click செய்யுங்கள்.click செய்தவுடன் drop down list இல் அனைத்து மொழிகளும் காட்டப்படும்.
  • அதில் Tamil என்பதை click செய்து கிடைக்கும் வரிசையில் Phonetic என்பதை தேர்வு click செய்யுங்கள். பார்க்க படம் -5
  • click செய்தவுடன் Add பொத்தானை அழுத்துங்கள்.பொத்தானை அழுத்தியவுடன் படம்-6 உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.
படம்-5

படம்-6
  • படம்-6 உள்ளது போன்ற திரை காண்பிக்கப்பட்ட பிறகு படம்-6 உள்ளது போன்ற திரையிலேயே General எனும் Tab ஐ click செய்யுங்கள்.General Tab ஐ click செய்தவுடன் படம்-7 உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.
  • அதில் Keyboard Shortcuts என்பதில் தமிழ் தட்டச்சு வசதியை Enable அல்லது Disable செய்ய Shortcut Key அமைக்க வேண்டும்.நான் Alt+8 key யினை அமைத்துள்ளேன்.
படம்-7
  • நீங்கள் உங்களுக்கு விருப்பமான key யினையும் அமைத்துக்கொள்ளலாம்.அவ்வாறு அமைக்க விரும்பினால் Enable or Disable என்பதற்கு நேராக ஒரு Text Box இருக்கிறதா அதை ஒட்டி ஒரு சிறிய Button (... யுடன் கூடிய) இருக்கிறதா அதை click செய்யுங்கள்.click செய்தவுடன் படம் -8 ல் உள்ளது போன்ற திரை காண்பிக்கபடும்.இதில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான் key யினை அமைத்துக் கொள்ளலாம்.
  • நான் அமைத்ததை சொல்கிறேன் நீங்கள் அதை உங்களுக்கு தேவையானவாறு அமைத்துக்கொள்ளுங்கள்.
  • Key Code எனபதற்கு நேராக ஒரு Text Box இருக்கிறதா அதை ஒட்டி ஒரு சிறிய Button உள்ளதா அதை click செய்யுங்கள்.click செய்தவுடன் படம்-9 ல் உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.அபொழுது 8 key யினை அழுத்தி பிடித்து விட்டேன் Alt என்பதை மட்டும் தேர்வு செய்து Add Button ஐ அழுத்தினேன்.keyboard Shortcuts என்பதற்குள் Alt+8 என்று இருக்கும்.OK button ஐ அழுத்தவும்.
  • இப்பொழுது Shortcut Key அமைத்து விட்டாச்சு அவ்வளவுதான் இனிமேல் தமிழில் உள்ளீடு செய்ய இதுதான் Short key.எனக்கு Alt +8, உங்களுக்கு நீங்கள் அமைத்தது.
படம்-8

படம்-9
  • சரி வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது தட்டச்சு செய்ய தொடங்குவோமா.Applications => Accessories => gedit Text Editor ஐ திறந்து கொள்ளுங்கள்.இப்பொழுது நீங்கள் தமிழ் தட்டச்சு செய்ய கொடுத்த Shortcut Key யினை கொடுங்கள்.நான் Alt+8 கொடுத்தேன்.நீங்கள் உங்களினுடைய Shortcut key யினை கொடுங்கள்.
  • அப்புறம் என்ன தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியதுதானே.
படம்-10
குறிப்பு: இந்த பதிவு முழுவதும் உபுண்டு 9.10 ல் உள்ள iBus வசதியை பயன்படுத்தி எழுதினேன்.இதில் சந்தேகம் எதேனும் இருந்தால் படத்தை பெரிதுபடுத்தி பார்த்துக்கொள்ளுங்கள்.

Apr 23, 2010

பெடோரா லினக்ஸில் அடைவுகளை(folder) ஒரே சாளரத்தில்(window) திறக்கச் செய்வது எப்படி?

நாம் பெடோரா லினக்சை நிறுவிய பின்பு கோப்புகளை திறப்பதற்காக அடைவுகளை திறந்தால் ஒவ்வொரு அடைவுகளும் தனித்தனியான சாளரத்தில் திறக்கும்.இது நமக்கு சிரமமாக இருக்கும்.இவ்வாறு திறப்பதை நாம் ஒரே சாளரத்திற்க்குள் திறக்குமாறு செய்யலாம் அது எப்படி என்று இப்பொழுது பார்ப்போம்.

படி ஒன்று:
  • பெடோரா லினக்ஸினுடைய டெஸ்க்டாப்பில் உள்ள home Directory (உங்களினுடைய பெயருடன் இருக்கும்) யினை திறந்து கொள்ளுங்கள்.
  • home Directory யினுடைய சாளரம் திறக்கப்பட்டு விடும்.அதில் உள்ள menu bar இல் Edit என்பதை click செய்யுங்கள்.இரண்டாவதாக கொடுக்கபட்டுள்ள படத்தினை பார்த்துக் கொள்ளுங்கள்.
  • Edit என்பதை click செய்தவுடன் கிடைக்கும் menu வில் அடியில் கடைசியாக இருக்கும் Preferences என்பதை click செய்யுங்கள்.
படி இரண்டு:
  • நீங்கள் Preferences என்பதை click செய்தவுடன் படம் மூன்றில் உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.
  • அதில் Behavior எனும் Tab ஐ click செய்யுங்கள்.அதில் Behavior என்பதற்கு கீழ் மூன்றாவதாக உள்ள Always open in browser windows என்பதினுடைய check box தேர்வு செய்து டிக் செய்யுங்கள்.
  • close பொத்தானை அழுத்தி Preferences திரையினை மூடி விடுங்கள்.
  • இப்பொழுது நீங்கள் எந்த Folder யினை திறந்தாலும் ஒரே சாளரத்திற்குள் (window) திறக்கும்.படம் நான்கை பாருங்கள்.


இதை நீங்கள் உபுண்டு லினக்ஸிலும் செய்து பார்க்கலாம்.

Apr 21, 2010

shell என்றால் என்ன?


  • ஷெல் என்பது ஒரு நிரல் ஆகும்
  • பயனாளர் மற்றும் லினக்ஸ் இவை இரண்டுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படும்
  • நீங்கள் முனையத்தில் ஒரு கட்டளையை கொடுத்தவுடன் அந்த கட்டளை லினக்ஸினுடைய ஷெல்லினால் செயல்படுத்தப்பட்டு ,லினக்ஸினுடைய கெர்னலுக்கு செலுத்தப்படும்.
  • கெர்னலினுடைய வெளியீடு ஷெல்லுக்கு கொடுக்கப்படும்,அதை பெற்று ஷெல் பயனாளருக்கு தெரிவிக்கும்.
  • பயனாளரால் நேரடியாக கெர்னலை தொடர்புகொள்ள இயலாது.
  • ஷெல்லானது சொந்தமாகவே கட்டளைகளை வைத்திருக்கும்.
  • நீங்கள் முனையத்தில் ஒரு கட்டளையை கொடுத்த உடனே அந்த கட்டளை தனது உள்ளிருப்பான கட்டளையா என ஷெல் முதலில் பார்க்கும், இருந்தால் அதை செயல்படுத்தும்.இல்லையென்றால் அது ஒரு பயன்பாட்டு நிரலா(Application program) என்று பார்க்கும்.இருந்தால் அதை செயல்படுத்தும்.இல்லையென்றால் நீங்கள் கொடுத்த கட்டளை தவறான கட்டளை என்ற செய்தியினை தெரிவிக்கும்.
  • நிறைய ஷெல்கள் லினக்ஸ் இயங்குதளத்தில் உள்ளன.அவற்றில் பிரபலமானவை
  1. Bourne shell (sh)
  2. c shell (csh)
  3. korn shell (ksh)
  • இவையில்லாமல் tcsh,zsh,rsh,pdsksh போன்ற ஷெல்களும் பயன்படுத்தப்படுகின்றன.
  • பெரும்பான்மையான லினக்ஸ் இயங்குதளங்களில் GNU bash(Bourne Again Shell) ஷெல் இருப்பியல்பாக பயன்படுத்தப்படுகிறது.
  • நீங்கள் உங்களினுடைய லினக்ஸ் இயங்குதளத்தில் வெவ்வேறு வகையான ஷெல்களை பயபடுத்திக்கொள்ளலாம்.ஆனால் அது உங்களினுடைய லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவியிருக்கப்பட வேண்டும்.
  • நீங்கள் கொடுக்கும் ஷெல் நிறுவப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள which என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.
உதாரணமாக உங்களினுடைய லினக்ஸ் இயங்குதளத்தில் bash shell நிறுவப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இவ்வாறு கட்டளையை அமைக்கலாம்.

which bash

உபுண்டு லினக்ஸில் sh,bash,rsh இந்த மூன்று ஷெல்களும் இருப்பியல்பாக இருக்கும்.
நீங்கள் ஒரு ஷெல்லிலிருந்து வேறொரு ஷெல்லுக்கு மாற விரும்பினால் chsh என முனையத்தில் கட்டளையை கொடுங்கள்.கடவுச்சொல்லைக் கேட்கும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.கடவுச்சொல்லை உள்ளிட்டப்பிறகு
Enter the new value or press ENTER for the default
Login shell[/bin/bash]:
என்று கேட்கும் நீங்கள் மாற விரும்பும் ஷெல்லை உள்ளிட்டு Enter key யினை அழுத்துங்கள்.
உதாரணமாக rsh ஷெல்லுக்கு மாற விரும்பினால் /usr/bin/rsh என்று கொடுத்து Enter key யினை அழுத்துங்கள்.

Apr 20, 2010

full circle magazine - 35 வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது














உபுண்டு community யால் வெளியிடப்படும் full circle magazine 35-வது இதழ் வெளியிடப்பட்டு விட்டது.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படிக்க வேண்டிய ஒரு அருமையான இதழ்.தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

லினக்ஸில் அடிப்படை கட்டளைகள் தொடர்-10











இந்த தொடரில் நாம் பார்க்க போகும் கட்டளை bc இந்த கட்டளையை முனையத்தில் கொடுத்தவுடன் முனையத்தை நீங்கள் ஒரு calculator ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.
படத்தை பெரிதுபடுத்திக் பார்த்துக்கொள்ளுங்கள்.
செய்முறை:
முனையத்தை திறந்துக்கொள்ளுங்கள்.முனையத்தில் bc என்று கொடுத்து Enter key யினை அழுத்துங்கள்.

எண்களை கூட்ட வேண்டுமானால்

500+500 என்று அமைக்கலாம்.

எண்களை கழிக்க வேண்டுமானால்

1000-230 என்று அமைக்கலாம்

Apr 14, 2010

லினக்ஸில் அடிப்படை கட்டளைகள் தொடர்-9

படம்-1
இந்த தொடரில் நாம் பார்க்க போகும் கட்டளை gzip மற்றும் gunzip .இந்த இரண்டு கட்டளைகளும் ஒரு கோப்பினை சுருக்க மற்றும் சுருக்கிய கோப்பினை விரிவாக்க பயன்படுகிறது.அதாவது Compress and Extract
கட்டளையின் அமைப்பு:
கோப்பினை சுருக்க => gzip filename(கோப்பின் பெயர்)
கோப்பினை விரிவாக்க=> gunzip filename.gz(கோப்பின் பெயருடன்.gz).சரி செய்முறைக்கு போவோமா.
முனையத்தை(Terminal) திறந்து கொள்ளுங்கள்.முதலில் ஒரு கோப்பினை எப்படி சுருக்குவது என்று பார்ப்போம்.நான் இந்த பதிவில் add.sh என்ற கோப்பினை சுருக்கியுள்ளேன்.நீங்கள் உங்களினுடைய கோப்புகளைச் சுருக்கிக் கொள்ளலாம்.உதாரணமாக add.sh என்ற கோப்பினை சுருக்க வேண்டுமானால் gzip add.sh என்று கட்டளை அமைக்க வேண்டும்.சந்தேகம் ஏதேனும் வந்தால் படம்-1 ஐ பெரிது படுத்தி பார்த்துக்கொள்ளுங்கள்.நாம் இந்த கட்டளையை செயல்படுத்திய பின்பு நாம் சுருக்குவதற்காக கொடுத்த கோப்பு கோப்பின் பெயருடன், .gz என்ற நீட்சியுடன் சேமிக்கப்பட்டு இருக்கும்.
படம்-2
சரி கோப்பினை சுருக்கியாச்சு அதை விரிவு செய்ய வேண்டுமல்லவா.உதாரணமாக add.sh என்ற கோப்பினை சுருக்கிய பின்பு add.sh.gz என்று சேமிக்கப்பட்டு இருக்கும்.இதை விரிவு செய்ய gunzip add.sh.gz என்று கட்டளை அமைக்க வேண்டும்.படம்-2 ஐ பெரிதுபடுத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.
படம்-3
குறிப்பு:
நான் இதில் எடுத்துக்காட்டிற்காக add.sh என்ற கோப்பினை சுருக்கி, விரிவு செய்து காட்டியுள்ளேன்.அதற்காக .sh என்று முடியும் கோப்பினை மட்டும் தான் சுருக்கி,விரிவு செய்ய முடியும் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.இந்த கட்டளையின் மூலம் எந்த கோப்பினையும் சுருக்கி,விரிவு செய்து கொள்ளலாம்.

Apr 9, 2010

உபுண்டு லினக்ஸில் பயனாளருக்கு புகைப்படம் அமைப்பது எப்படி?

எனக்கு உபுண்டு லினக்ஸில் ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்.நானும் லினக்ஸை பொறுத்தவரை ஒரு மாணவன் தானே.அந்த சந்தேகம் என்னவென்றால் விண்டோஸ் இயங்குதளத்தில் பயனாளரை தேர்வு செய்யும் விண்டோவில் பயனாளர் பெயருடன் ஒரு புகைப்படம் இருக்குமல்லவா.அது போல உபுண்டு லினக்ஸில் அமைக்க முடியுமா என்பதுதான்.உபுண்டால் முடியாததா அதற்கான வழியும் உபுண்டுவில் இருந்தது அதை கண்டுபிடிக்கதான் இவ்வளவு நாள்.சரி செய்முறைக்கு போவோம் வாருங்கள்.முதலில் உபுண்டு லினக்ஸின் இருப்பியல்பாக உள்ள பயனாளர் திரையை மாற்ற வேண்டும்.ஏன் மாற்ற வேண்டும் என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது.இருப்பியல்பாக உள்ள திரையில் பயனாளர் பெயரை உள்ளிடுவது போல் மட்டுமே அமைத்து இருப்பார்கள்.சரி பயனாளர் திரையினை மாற்றுவோம் அதற்கு
System=>Administration=>Login window செல்லுங்கள்.root பயனாளரினுடைய கடவுச்சொல்லை உள்ளிடச் சொல்லி கேட்கும் கடவுச்சொல்லை உள்ளிட்டு Enter key யினை அழுத்துங்கள்.பயனாளர் திரையினை மாற்றுவது எப்படி என்று ஏற்கனவே பதிவிட்டு உள்ளேன் இங்கு சென்று ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.அதில் Human list என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.தேர்வு செய்த பிறகு Login windows prefrences window வினை மூடி விடுங்கள்.முதல் படி கச்சிதம்மாக முடிந்து விட்டது.
அடுத்து System => Preferences => About me யினை சொடுக்குங்கள்.சொடுக்கியவுடன் படம் இரண்டில் உள்ளது போன்ற திரை கிடைக்கும்.அதில் ஒரு சிறிய படத்துடன் ஒரு icon இருக்கும்.அதின் மேலே வைத்து click செய்யுங்கள்.இங்கு நான் கொடுத்துள்ள படத்தில் kathirvel.R என்பதற்கு பக்கத்தில் விலங்கின் கண்ணுடன் கூடிய ஒரு படம் உள்ளது.
நீங்கள் படத்தின் மீது வைத்து click செய்தவுடன் அடுத்த window ல் நிறைய படங்களுடன் கூடிய ஒரு திரை கிடைக்கும்.அதில் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்து open கொடுங்கள்.கொடுத்தவுடன்.உங்களுக்கு தேவையான படம் தேர்வு செய்யப்படு விடும்.
படம் தேர்வு செய்யபட்ட பிறகு படம்-4 ல் உள்ள திரையினை close செய்து விடுங்கள்.இப்பொழுது உங்களினுடைய கணினியினை logout செய்யுங்கள் செய்த பிறகு பயனாளர் திரையில் நீங்கள் பயனாளருக்காக தேர்வு செய்த புகைப்படம் பயனாளர் பெயருடன் அமைக்கப்பட்டு இருக்கும்.

இரண்டு எண்களை கூட்டுவதற்கு ஷெல் நிரல் எழுதுவோமா

முனையத்தை (Terminal) திறந்துக்கொள்ளுங்கள்.ஒரு நிரலை எழுத வேண்டுமானால் ஏதாவதொரு Editor வேண்டும்.நாம் இங்கு nano எடிட்டரை பயன்படுத்தப்போகிறோம்.ஆகையால் முனையத்தில் nano add.sh என்று கொடுத்து Enter key யினை அழுத்துங்கள்.அழுத்தியவுடன் nano Editor திறக்கப்பட்டு விடும்.திறந்தவுடன் படம்-2 உள்ளது போன்ற நிரலை அமையுங்கள்.நிரலை தட்டச்சு செய்ய படம்-2 ஐ பெரிதுபடுத்தி பார்த்து அதில் இருப்பது நிரலை தட்டச்சு செய்து கொள்ளுங்கள்.
படம்-2
நிரலை தட்டச்சு செய்து முடித்தவுடன் Ctrl+O கொடுத்து Enter key யினை அழுத்தி நிரலை சேமியுங்கள்.நிரலை சேமித்தவுடன் nano Editor ஐ விட்டு வெளியேற Ctrl+X key யினை ஒரு சேர அழுத்துங்கள்.
படம்-3
நிரலை இயக்க முனையத்தில் sh add.sh என்று கொடுத்து Enter key யினை அழுத்துங்கள.
நிரல் இயங்க ஆரம்பிக்கும்.

Enter a value : என்று கேட்கும் a யினுடைய மதிப்பினை உள்ளிட்டு Enter key யினை அழுத்துங்கள்.அடுத்து
Enter b value : என்று கேட்கும் b யினுடைய மதிப்பினை உள்ளிட்டு Enter key யினை அழுத்துங்கள்.
அழுத்தியவுடன் a,b இவ்ற்றின் மதிப்பினை கூட்டி உங்களுக்கு விடையாக கொடுக்கும்.
படம்-3 னை பெரிது படுத்தி பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த நிரலில் பயன்படுத்தியிருக்கும் read a, read b என்பவைகள் நாம் கொடுக்கு a,b யினுடைய மதிப்பினை உள்ளிடாக பெறுவதற்காக உள்ளது.

$a, $b, $c என்பது a,b,c யினுடைய மதிப்புகளைப் பிரதி செய்யும்.அதாவது அங்கு assign செய்யும்.நிரலைப் பார்ப்பதற்கு படம்-2 ஐ பெரிதுபடுத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.நிரலில் இடைவெளி விட்டிருக்கும் இடங்களில் கண்டிப்பாக இடைவெளி விட்டிருக்க வேண்டும்.
குறிப்பு:
c=`expr $a + $b` என்பதில் பயன்படுத்தியிருக்கும் ` குறியீடானது " னுடன் சேர்ந்து இருக்கும் ' குறியீடு அல்ல ~ சேர்ந்து இருக்கும் ` குறியீடு.

இந்த நிரலையே சிறிய மாற்றங்கள் செய்தால் கழித்தல்,வகுத்தல்,பெருக்கல் போன்றவற்றை செய்ய பயன்படுத்தலாம்.அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

நிரலில் c=`expr $a + $b` என்ற வரியில் + என்பதற்கு பதிலா

-
என்று கொடுத்தால் கழித்தல் வேலையினை செய்யும்.
/
என்று கொடுத்தால் வகுத்தல் வேலையினை செய்யும்.
\*
என்று கொடுத்தால் பெருக்கல் வேலையினை செய்யும்.

விண்டோஸ் இயங்குதளத் திற்குள் உபுண்டு லினக்சை நிறுவுவது எப்படி?

விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி உபுண்டு லினக்சை மிகவும் எளிமையான முறையில் நிறுவிவிடலாம்.இந்த முறையில் நிறுவ உங்களுக்கு விண்டோஸ் இயங்குதளத்தில் மென்பொருள்களை நிறுவிய அனுபவம் இருந்ததாலே போதுமானது. Partition எல்லாம் செய்ய வேண்டியதில்லை.மிக மிக எளிமையான ஒரு வழிமுறை.

எப்படி நிறுவுவது என்பதை இங்கு pdf கோப்பாக கொடுத்துள்ளேன்.pdf கோப்பினை தரவிறக்கம் செய்ய மற்றும் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்.

இந்த கோப்பினை பற்றிய உங்களது கருத்துக்களை பின்னூட்டம் மூலமாகவோ ,அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவியுங்கள்.இந்த முறையில் நிறுவுதலில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவியுங்கள்.

Apr 6, 2010

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்கச் வேண்டிய செய்தி

என்னுடைய நண்பர் தமிழரசன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.

ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.

அவர் இறந்த தினத்தொடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமாதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.


"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும். ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.


மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணணி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி.

ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.

எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனிஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.


தமிழரோடு தமிழில் பேசுவோம்..
தமிழன் என்று சொல்வோம் ....
தலை நிமிர்ந்து நிற்போம் .......

"தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுகென்று ஒரு நாடில்லை..."
இவன் தமிழ்...

Apr 1, 2010

லினக்ஸில் அடிப்படை கட்டளைகள் தொடர் - 8

இந்த தொடரில் நாம் பார்க்க போகும் கட்டளை cat இந்த கட்டளை ஒரு கோப்பினை உருவாக்கவும்,ஒரு கோப்பில் உள்ள தகவல்களை பார்வையிடுவதற்கும் அதாவது உள்ளடக்கங்களை திரையிடுவதற்கும் பயன்படுகிறது.சரி செய்முறைக்கு போவோமா.

கோப்பினை உருவாக்க:

cat > கோப்பின் பெயர்

கொடுத்து Enter Key யினை அழுத்துங்கள் அழுத்தியவுடன் நாம் கோப்பிற்கு உண்டான தகவல்களை உள்ளிடலாம்.தேவையான தகவல்களை உள்ளிட்ட பிறகு கோப்பினை சேமிக்க Ctrl + D key களை ஒரு சேர அழுத்துங்கள்.அழுத்தியவுடன் கோப்பு சேமிக்கப்பட்டு விடும்.கோப்பு சேமிக்கப் பட்டு விட்டதா என்று பார்க்க வேண்டுமானால் Ctrl+D களை அழுத்திய பிறகு முனையத்தில் ls -l என்ற கட்டளையை கொடுங்கள் .

கோப்பில் உள்ள தகவல்களை பார்வையிட :

cat < கோப்பின் பெயர் (அல்லது) cat கோப்பின் பெயர்

கொடுத்து Enter key யினை அழுத்துங்கள் அழுத்தியவுடன் கோப்பில் உள்ள உள்ளடக்கங்கள் திரையிடப்படும்.

ஏற்கனவே உள்ள கோப்புகளை பார்வயிட வேண்டுமானால் cat ஏற்கனவே உள்ள கோப்பின் பெயர் கொடுத்து Enter key யினை அழுத்துங்கள்.மேலே உள்ள படத்தை சொடுக்கி பெரிது படுத்தி பார்த்திர்களேயானால் உங்களுக்கு தெளிவாக புரியும்.

cat கட்டளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள man cat என்ற கட்டளையை முனையத்தில் கொடுங்கள் cat கட்டளை பற்றிய அனைத்து தகவலும் உங்களுக்கு கிடைக்கும்.

குறிப்பு: cat filename அதாவது cat > filename என கொடுக்கும் பொழுது இவைகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் single space இருக்கவேண்டும்.